தமிழ் நவீன
சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை
நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக், மாப்பசான், செகாவ் ஆகிய மேதைகளின் சிறுகதைகளை தமிழின் நவீன
சிறுகதையாசிரியர்களே தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். புதுமைப்பித்தன்
தன்னுடைய சொந்தச் சிறுகதைகளுக்கு இணையான பக்க அளவுள்ள அயல்மொழிச்சிறுகதைகளை
தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். தமிழில் ஒரு சிறுகதையை வாசிக்கும் ஒரு
வாசகன், உலகச் சிறுகதைகளில் நிகழ்ந்துள்ள உச்சங்களை அறிந்து தன் வாசிப்பு
உலகத்தையும் பார்வையையும் விரிவு செய்துகொள்ள இத்தகைய அறிமுக முயற்சிகள்
காலந்தோறும் உதவியபடி இருக்கின்றன. ரஷ்ய எழுத்தாளர்களையும் ஐரோப்பிய
எழுத்தாளர்களையும் அமெரிக்க எழுத்தாளர்களையும் தமிழ் வாசகர்களுக்கு பலரும்
அறிமுகம் செய்திருக்கிறார்கள். க.நா.சு., சந்தானம், டி.எஸ்.சொக்கலிங்கம்
போன்றோரின் அர்ப்பணிப்புணர்வும் அக்கறையும் போற்றத்தக்கவை. எண்பதுகளில் லத்தீன்
அமெரிக்கச் சிறுகதைகளுக்கு உலக அளவில் ஒருகவனம் உருவான சமயத்தில், அத்தகு கவனம்
தமிழிலும் உருவாகும் வகையில் மீட்சி பிரம்மராஜன் முயற்சியால் லத்தீன் அமெரிக்கச்
சிறுகதைத்தொகுதியொன்று வெளிவந்தது. போர்ஹெயின் சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த
கதைகளின் தொகுதியொன்றை அவரே மொழிபெயர்த்து வெளியிட்டார். தாஸ்தாவெஸ்கிக்கும்
மார்க்யூஸ்க்கும் கல்குதிரை ஒரு சிறப்புமலரையே வெளியிட்டது மறக்கமுடியாத ஓர்
அனுபவம். எழுத்தாளர்களின் பல முக்கியமான படைப்புகள் அம்மலர்களில்
அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பங்களிப்பின் தொடர்ச்சியாக சமீபத்தில்
தமிழ்ப்படைப்பாளிகளால் கவனப்படுத்தப்படும் முக்கியமான ஓர் ஆளுமை முரகாமி.