தோட்டத்தில் நின்றிருக்கும் தென்னைமரத்தடியிலிருந்து பின்வாசல் வழியாக கூடத்தைக் கடந்து முன்வாசலை ஒட்டியிருந்த அம்மாவின் ஆப்பக்கடைக்கு வந்து சேர்ந்தாள் ஆயா. புதிதாக
தைத்து கழுவி எடுத்துவந்த மந்தாரை இலைக்கட்டையும் தேக்கு இலைக்கட்டையும் அம்மாவிடம் கொடுத்தாள். அடுப்பைவிட்டு விலகி சிறிது தூரத்தில் உட்கார்ந்தபடி நான்கு பேர் தோசை தின்றுகொண்டிருந்தார்கள்.
“என்ன சொல்லிட்டு போறான் ஒன் ஊட்டுக்காரன்? காலயிலயே இவ்ளோ சத்தம்? என்ன கவலயாம் அவனுக்கு?” ஆயா அம்மாவைப் பார்த்துக் கேட்டாள். “எல்லாம் புள்ளய பத்திய கவலைதான்” என்றபடி ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்தாள் அம்மா. “மத்த புள்ளைங்களாட்டம் ஒழுங்கா படிச்சமா பாஸ் பண்ணமானு இல்லாம ஒரே க்ளாஸ்ல நாலு வருஷமா தேச்சிகினு ஒக்காந்திருந்தா யாருக்குத்தான் கோவம் வராது?”