நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கக்கூடிய படைப்பாக உள்ளது. அவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒரு படைப்பைப் பல கோணங்களிலிருந்து அணுகி ஆய்வு செய்யும் அலசல் விமர்சன மரபை அவரே தொடங்கிவைத்தார். தெளிவான கோட்பாட்டுப் புரிதலோடு எழுத்து என்னும் சிற்றிதழைத் தொடங்கி பல இன்னல்களுக்கிடையில் பல்லாண்டு காலம் தொடர்ந்து நடத்தி விமர்சனத்துக்கான ஒரு தளத்தை உருவாக்கினார். தமிழில் புதுக்கவிதை உருவாகி நிலைபெற்றதற்கு எழுத்து இதழ் நல்லதொரு தளமாக விளங்கியது.