Home

Showing posts with label வெங்கடாசலக்கவுண்டர். Show all posts
Showing posts with label வெங்கடாசலக்கவுண்டர். Show all posts

Sunday, 8 May 2022

வெங்கடாசலக்கவுண்டர்: மனத்திட்பமும் வினைத்திட்பமும்

 

26.12.1926 முதல் 28.12.1926 வரை கெளஹாத்தியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் நாற்பத்தொன்றாம் மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டார்.  சீனிவாச ஐயங்கார் தலைமை தாங்கிய அந்த மாநாட்டில் காங்கிரஸில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாக கதர் அணிபவராக இருத்தல் வேண்டும் என்னும் சிறப்புத்தீர்மானம் நிறைவேறியது. இந்து சீர்திருத்த இயக்கத்தில் பங்காற்றியவரும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டாற்றியவருமான சுவாமி சிரத்பவானந்தர் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத சிலரால் கொலைசெய்யப்பட்டதை ஒட்டி இன்னொரு தீர்மானமும் நிறைவேறியது. 09.01.1927 அன்று காசியில் நடைபெற்ற சிரத்பவானந்தருடைய மறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் நிகழ்ச்சியில் காந்தியடிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். பிறகு நூல் நூற்பதைப்பற்றியும் கதராடைகள் அணியவேண்டியதன் அவசியத்தைப்பற்றியும் பிரச்சாரம் செய்தபடி அங்கிருந்தே பீகாரை நோக்கி தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு முழுதும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையில் கதர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என அவர் மனம் விரும்பியது.