பத்துக்கு எட்டு அல்லது ஏழுதான் அந்த அறையின் நீள அகலமாக இருக்கும். சீனிவாசராவ் மாற்றலாகி ஐதராபாத்திற்குப் போகும்போது அந்த அறை எனக்குக் கிடைக்கும்படிச் செய்துவிட்டுப் போனார். நான் என் செலவிலேயே சுவர்களுக்கு வர்ணமடித்து நாலைந்து ஜாடிகளில் ரோஜாப் பதியனும் குரோட்டன்களும் வாங்கி நட்டு அழகாக்கி இருந்தேன். மினுக் மினுக்கென்று எரிந்த இரண்டு பல்புகளை மாற்றி டியூப்லைட்டைக் கூடப் பொருத்தினேன். நல்ல காற்று. நல்ல வெளிச்சம். பத்து நிமிஷத்தில் நடந்து போகிற அளவுக்குப் பக்கத்திலேயே ஆபீஸ் இருந்தது. ஒரு நாலைந்து வாரங்களுக்குள் வீட்டுக்காரர்கள் நெருக்கமாகிவிட்டார். அவர்களுடைய ஆறு வயசுக் குழந்தை ‘‘அங்கிள் அங்கிள் கதை சொல்லுங்க அங்கிள்’’ என்று கேட்டபடி மாடிப்படி ஏறி வந்து என் மடியில் உட்கார்ந்து கொள்கிற அளவுக்கு நெருங்கிவிட்டோம். அந்த அண்ணி இட்லி தோசை சுடும் நாள்களில் எனக்காக ஒரு தட்டு மேலே வந்தது.