Home

Sunday 21 February 2021

விலை - சிறுகதை

 

சிறைக்கு வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. மனசின் கொந்தளிப்பு அடங்கவில்லை. ஒவ்வொரு நரம்பிலும் வெறி பீறிட்டோடுகிறது. போன மாதம் வரை இப்படி ஒரு சந்தர்ப்பம் என் வாழ்வில் நேரும் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை. ஆற்றில் ஒரு படகுப்பயணம்போல அமைதியாகவும், ஆனந்தமாகவும் கழிந்து கொண்டிருந்தது என் வாழ்வு. அன்பே உருவான பத்மினி. குறும்பின் உறைவிடமான மஞ்சுக் குட்டி. உலகத்தில் என்னைப்போல சந்தோஷசாலி எவன் இருப்பான் என்ற நினைப்பில் மிதந்தபடி இருந்தேன்.

வாழ்வு, வசதி, பங்களா, பதவி, சம்பளம், மனைவி, குழந்தை எல்லாம் எனக்கும்கூட வாய்க்குமா என்று உலகைப் பார்த்து ஏங்கியிருந்த காலம் போய் எல்லாம் எனக்கும் அமைந்த ஒரு வாழ்வு கிடைத்தது. ஆனந்தத்தின் ரகசியக் கதவை எனக்காகத் திறந்து விட்டார் கடவுள். ஆனால் திடீரெனச் சரிந்துவிட்டேன். காரணம் கோயம்புத்தூர் செமினார். அங்கு போய் இறங்குகிற வரை அந்த ஆபத்தின் சுவட்டை நான் அறியவில்லை. துரதிருஷ்டம் சங்கர் வடிவில் காத்துக் கொண்டிருந்து குப்புறத் தள்ளி விட்டது.

சங்கரை நினைத்ததுமே என் உடல் சூடேறுகிறது. நரம்புகள் முறுக்கிக் கொள்கின்றன. அவன் கழுத்தை என் கைகளால் இறுக்கி எலும்புகள் நொறுங்கும் கடகட சத்தத்தைக் காதாரக் கேட்க வேண்டும் என்கிற வெறி மூள்கிறது. முதல் வாரச் சந்திப்பு நேரத்தில் அவன் வந்திருந்தான். அப்பாவியைப் போலத் தோற்றம் தந்தது அவன் முகம். பத்மினியை எதிர் பார்த்து வந்த என் முன் அந்தக் கழுதை. ஒரு கணத்தில் என் ஆவேசம் உச்சத்தை அடைந்தது. சட்டென்று எச்சிலைக் கூட்டி அவன் முகத்தில் காறித் துப்பினேன். நான் மட்டும் பாம்பாக இருந்திருந்தால், என் எச்சிலின் விஷம் அவன் கண்களைப் பொசுக்கி உயிரைக் குடித்திருக்கும். ஒரு கணம் அக்கூடமே அமைதியாகிவிட்டது. கைதிகள், காவலர்கள், பார்வையாளர்கள் அனைவரும் அவனையும், என்னையும் மாறி மாறிப் பார்ப்பது புரிந்தது. அவன் ஏதாவது பேசக்கூடும் என்று எதிர்பார்த்தேன். மறுபடியும் துப்பத் தயாராக இருந்தேன். அவன் அவமானத்தில் குனிந்திருந்தான். கைக்குட்டையை முகத்தின் அருகில் கொண்டு சென்றான். அதற்குள் காவலர்கள் வந்து என்னை இழுத்துக் கொண்டார்கள்.

அறைக்குப் போன பிறகும்கூட என் கொதிப்பு அடங்கவில்லை. என் மனசில் தேங்கி இருக்கும் கோபத்தில் நூற்றில் ஒரு பங்குதான் இந்தத் தண்டனை. இன்னும் கொடுக்கவேண்டும். ஆனால் சிறை அதற்கு இடமில்லை. அக்காவலன் மீண்டும்மீண்டும் நான் அப்படிச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டுத் துளைத்தான். நான் வாய் திறக்கவில்லை. எப்படிச் சொன்னால் இந்தச் காக்கிச் சட்டைக்குப் புரியும். புரிந்துதான் என்ன ஆகப்போகிறது. அதிகபட்சம் ச்சச்சச்சோஎன்று பரிதாபப்படுவான். யாருக்கு வேண்டும் அவன் பரிதாபம். நான் நினைப்பது பழிக்குப்பழி. அவமானத்துக்கு அவமானம்.

பத்மினியும் மஞ்சுக் குட்டியும் ஏன் வரவில்லை என்று நினைக்க நினைக்க மனம் உடைந்து விட்டது. நேர்ந்துவிட்ட அவமானத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியாது என்பது உண்மைதான். உறவையே அறுத்துவிடுகிற அளவுக்கு அது போகக்கூடுமோ என்று எண்ணிக் குழம்பினேன். சீரான என் வாழ்க்கைப் பயணத்தைத் திசை திருப்பிய அவன்மீது மீண்டும் ஆத்திரம் குமுறியது.

குமுறலும் குழப்பமாகப் பொழுதுகள் கழியக்கழிய அடுத்த வாரச் சந்திப்பு நேரம் வந்துவிட்டது. நான் மீண்டும் என் பத்மினிக்காகக் காத்திருந்தேன். பத்மினி... பத்மினி... பத்மினி... என் இதயம் துடித்தது. அந்த முகம். அந்தக் கண்கள். அந்த உதடுகள். அவள் வரவுக்காகப் பரபரத்துக்கொண்டிருந்தேன். கடவுளே, என்ன ஆயிற்று அவளுக்கு, என் பிரியத்துக்குரிய பட்டு ஏன் வரவில்லை. மனம் பதறியது. அவளுக்காகக் கூடத்தைத் துழாவித்துழாவிக் கண்கள் சலித்தன.

குழப்பத்தில் என் தலை வெடித்துவிடும் போல இருந்தது. அப்போதுதான் அந்தத் தட்டையான முகம் கண்ணில்பட்டது. நிதானமாய் என்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. சங்கர். வாடா, சண்டாளா, குடிகேடா, உனக்கு என்ன துரோகம் செய்தேன்? ஏன் இப்படிச் செய்தாய்? என் மூளைக்குள் ஒரு இயந்திரம் ஓயாமல் கூவிக் கொண்டிருந்தது. அவன் அருகில் வரப் பார்த்திருந்து வந்ததும் முகத்தைக் குறிபார்த்துக் காறித் துப்பினேன். நடு நெற்றியில் பட்டு நாலு பக்கமும் வழிந்து கொண்டிருந்தது என் எச்சில்.

சுற்றிலும் இருந்தவர்கள் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றுதான் எண்ணியிருக்கக்கூடும். நான் அதைப்பற்றிக் கவலைப்படவே இல்லை. துடைத்தபடி சிறிதும் சலனமில்லாமல் என்னையே பார்த்தான் அவன். என் மனசில் வன்மம் ஏறியது. பெரிய காந்தி என்று நினைப்பா, போடா நாயே...அசிங்கமான ஒரு கெட்ட வார்த்தையை அவன் மீது வீசினேன். மீண்டும் அவன் மீது துப்பவேண்-டும் போல இருந்தது. அதற்குள் காவலாளி என்னை முட்டித் தள்ளிக்கொண்டு போய்விட்டான்.

இன்றும் சந்திப்பு நாள். அவன் வருவானா மாட்டானா தெரியவில்லை. அவன் வரத் தேவையுமில்லை. வந்துவந்து வயிறெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத் தேவையில்லை. பத்மினியைத் தான் ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கிடக்கிறது மனம். வாழ்வில் எனக்குக் கிடைத்த மாபெரும் புதையல் அவள். கடவுளே அவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே. இரவு முழுக்க இதே எண்ணம்தான். மாறி மாறி யோசனைகள் வதைத்தன.

ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவிலும் இப்படித்தான் யோசனைகள் வதைத்தன. அன்று தான் என் வாழ்வில் முதல் திருப்பம். அதுவரை டிகிரியை ஒழுங்காய் முடிக்க முடியாமல் சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்த அரைகுறைப் பட்டதாரிகளில் நானும் ஒருவன். எந்த வேலைக்குப் போனாலும் நானூறு ரூபாய், ஐந்நூறு ரூபாய்தான். சம்பளத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அந்த அதிகாரத்தின் திமிரைத்தான் சகித்துக் கொள்ள இயலவில்லை. எவ்வளவு அருவருப்பானவர்கள் இந்த ஜனங்கள் என்று தோன்றியது.

அளவு மீறிக் குடித்துவிட்டு வாந்தியெடுத்த டைரக்டர் என்னைக் கூப்பிட்டுக் கழுவித் துடைக்குமாறு சொன்னான். எனக்கு அவமானமாக இருந்தது. செய்யலாமா? கூடாதா? என்று ஒரு கணம் மனப்போராட்டத்தில் தயங்கிக்கொண்டிருந்தபோது கேவலமான ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னான் டைரக்டர். நான் எரிச்சலோடு வெளியேறி விட்டேன். இப்படி நான் வெளியேறிய படலங்கள் ஏராளம். ஒரு பெரிய சினிமாவே எடுக்கலாம்.

பெங்களூர் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்றான் ஒருவன். கடைகளில் வேலைகளைத் தோரணம் கட்டித் தொங்கவிட்டு விற்பது போலவும், போகிற வருகிறவர்களெல்லாம் ஆளாளுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்கிற மாதிரியும் அவன் உற்சாகமூட்டினான். கேட்டதில் இருந்து ஊரில் இருப்புக் கொள்ளவில்லை. முகப்பழக்கம் உருவாக்கிய பரிச்சயத்தில் சீட்டுக் கடைக்காரனிடம் இருநூறு ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கிக்கொண்டு வண்டியேறினேன்.

கட்டணக் குளியல் அறையில் குளித்து உடை மாற்றிக்கொண்டு அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்கினேன். நான் எதிர்பார்த்த எந்த விசித்திரமும் அங்கு ஏற்படவில்லை. பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது. மதியம் சாப்பிட்டுவிட்டு கப்பன் பார்க் பெஞ்ச்சில் படுத்துத் தூங்கியெழுந்து பொழுதைக் கழித்தேன். இரவுக்குள் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்று தோன்றியது. பெட்டியில் என் பழைய சிநேகிதன் சந்திரசேகரின் முகவரி இருப்பது ஞாபகம் வந்தது. மெல்ல மெல்ல விசாரித்துக் கொண்டு போனேன்.

சந்திரசேகரை நேருக்கு நேர் பார்த்தபோது, ஆச்சரியமாக இருந்தது. ஏழெட்டு வருஷங்கள் அவன் உடலில் பல விசித்திரமான மாற்றங்களை உருவாக்கி இருந்தன. தலை வழுக்கை. காதோரம் மட்டுமே தீவு மாதிரி கொஞ்சம் முடி. கழுத்தில் தடிமனான டாலர் செய்ன். முன் சரிந்த தொந்தி. தொப்புள் வரை ஒரு பெரிய ருத்ராட்ச மாலை.

அவன் என்னை உடனே, ‘‘வா வா’’ என்று அடையாளம் கண்டு கூப்பிட்டான். அவன் கேட்ட முதல் கேள்வி, ‘‘சாப்ட்டியா?’’ என்பதுதான். நான் கூச்சத்தைத் துறந்து ‘‘இல்லை’’ என்றேன். என்னை உள்ளே சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றான். பரிமாற இரண்டு பெண்கள் இருந்தார்கள். எனக்கு உடனே பரிமாறக் கட்டளையிட்டான். நான் சாப்பிட்டுமுடியும்வரை அவன் சாப்பாட்டு மேசையிலேயே செய்தித்தாளைப் பரப்பி வைத்துக்கொண்டு படித்தான்.

சாப்பாட்டு மேசையைச் சுற்றி எட்டு நாற்காலிகள் இருந்தன. அவற்றின் கைப்பிடிகளிலும் முதுகிலும் கண்ணைக் கவரும் அழகான கலை வேலைப்பாடு. ஜன்னல் திரைகளிலும் கூட அழகான சித்திரங்கள். மேசை நடுவில் இருந்த தட்டில் ஏகப்பட்ட பழக்குவியல்கள். சாப்பிட்டு முடிந்ததும் அவன் என்னை மேலே அழைத்துச் சென்றான்.

அந்தச் சாப்பாடும், வீட்டின் அமைப்பும் எனக்குள் ஒருவித பிரமிப்பையூட்டியது. சந்திரசேகர் எம்.எஸ்.சி. முடித்தவன். ஆராய்ச்சிப் பட்டம் வாங்கியவன். அவை அவனுக்கு அவசியமாகவே இல்லை. லட்சங்கள் பெறும் நகைகள் விரிக்கப்பட்ட கண்ணாடி அறைகளுக்கு நடுவே ரத்தின மெத்தை விரித்த பெரிய நாற்காலி சிம்மாசனம் போல அவனுக்காகக் காத்திருந்தது.

‘‘என்ன செய்கிறாய்?’’ என்றான். சொன்னேன். ‘‘எங்கள் கடையில் இருக்கிறாயா?’’ என்று கேட்டான். நான் மௌனம் சாதித்தேன்.

‘‘ஏன் பயமாக இருக்கிறதா?’’ என்றான்.

‘‘இல்லை’’ என்றேன்.

அவன் இரண்டு நொடிகள் என்னையே உற்றுப்பார்த்தான். ‘‘சரி, நாலு நாள் எங்கூடயே இரு. வேற எங்கயாச்சும் பார்க்கலாம்’’ என்றான். சம்மதத்திற்கு அடையாளமாய்த் தலையசைத்தேன். பழசையெல்லாம் ஞாபகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தான். கட்டிலுக்கடியில் இருந்த சூட்கேஸை இழுத்து தன் சான்றிதழ்களையெல்லாம் காட்டினான்.

‘‘எதுக்கும் பிரயோஜனப்படல’’ என்றான். பிறகு, ‘‘டிகிரி முடிச்சிட்டயா?’’ என்று பேச்சைத் திருப்பினான். எனக்குக் கூச்சமாக இருந்தது. குப்பென்று வியர்த்தது. முகத்தைப் பார்த்தேன். நட்பு தவழும் முகம்தான். ஏன் இந்தக் கேள்வி என்று தோன்றியது.

‘‘முடியலை’’ என்றேன்.

‘‘ஒன் அறிவுக்கு நீ எங்கயோ போய் இருக்க வேண்டியது. நாலு பி.எச்.டி. வாங்கலாம்.’’

தலை குனிந்தேன். தடுமாற்றத்தோடு அவனைப் பார்த்தேன்.

‘‘உன் மனப்பாட சக்திய இப்ப நெனச்சாலும் ஒடம்பு சிலிர்க்குது. விதி உன் வாழ்க்கைல ரொம்ப தான் வெளையாடிட்டுது.’’

அவன் பரிவோடு சொல்லிக்கொண்டு போனான். எனக்கு அவன் வார்த்தைகள் இதமாகவும் இருந்தன. இன்னொரு வகையில் அச்சூழலுக்குப் பொருத்தமில்லாமலும் இருந்தன. சட்டென என் மனம் விழித்துக்கொண்டது. வருஷங்கள் எல்லாம் படம்படமாக மனசில் நகர்ந்தன. அவமானங்கள், தோல்விகள், இயலாமைகள், கிண்டல்கள், கேலிகள், வார்த்தைகள் கூடி வராமல் தவித்தேன். கண்களில் ஈரம் கட்டியது. ‘‘எல்லாம் நேரம்’’ என்றேன்.

அன்று இரவு நெடு நேரம் அவன் பேசிக்கொண்டிருந்தான். என் அமைதி ஏதோ ஒரு வகையில் கலைக்கப்பட்டு விட்டதாக உணர்ந்தேன். உறக்கம் வராமல் நான் புரண்டேன். அவன் எனக்கு ஏதாவது வழி செய்யக்கூடும் என்று நினைத்தேன். அந்த நினைப்பு நிம்மதியாக இருந்தது. கூச்சமாகவும் இருந்தது. இருவகைப்பட்ட என் மனநிலையை எண்ணி எனக்கே ஏளனம் பிறந்தது.

இரண்டு நாள் கழித்து ஒரு கூரியர் கம்பெனியில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தான். தங்கும் இடத்தையும் மறுநாள் மாற்றிக் கொள்ளலாம் என்றான். என் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. நன்றியில் தலைகுனிந்தேன். அன்று இரவே என் மனம் வேறுமாதிரி திட்டமிட்டது.

யாருக்கும் பயன்படாத அச்சான்றிதழ்கள் மீது என் கண்கள் விழுந்தன. அடுத்தடுத்து பல எண்ணங்கள் என் மனசில் உருவாகி விட்டன. மனசில் கள்ளம் புகுந்துவிட்ட பின்பு தூக்கமில்லை. அந்த இரவை எப்படிக் கழித்தேன் என்று தெரியவில்லை.

காலையில் அவன் குளியலறைக்குச் சென்றிருந்த சமயத்தில் சான்றிதழ்களையும் ஆய்வேட்டையும் என் பெட்டிக்கு மாற்றிவிட்டேன். உள்ளூர நடுக்கம். எதுவும் நடவாததுபோல இயல்பாக இருக்கப் பெரிதும் முயற்சி செய்தேன். திருட்டுத்தனம் இயல்பாக என் ரத்தத்திலேயே ஊறியதுபோல என் நடவடிக்கை அமைந்துவிட்டது. காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு அவனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன். வாசல் வரை வந்தவன், என் கைச்செலவுக்குப் பணம் தந்தான். அடிக்கடி வந்து போகச் சொன்னான்.

கூரியர் ஆபீஸுக்குச் செல்ல வேண்டிய நான் மதுரைக்கு வண்டியேறினேன். கையில் இருந்த பணத்தில் நல்ல உடைகள் வாங்கினேன். தனியார் கல்லூரிகளை அμகி வேலை கேட்கத் தொடங்கினேன். இரண்டு இடங்களில் பலிக்கவில்லை. மூன்றாம் இடத்தில் பலித்துவிட்டது. என் ஆங்கில உச்சரிப்பு அவர்களை அசத்திவிட்டது. அடுத்த நாளே எனக்கு விரிவுரையாளர் வேலைக்கு ஆணை தரப்பட்டது.

புதிய வாழ்க்கை, புதிய சூழல், ஒருபுறம் பயம். மறுபுறம் தைரியம். நான் சவாலைச் சந்திக்கத் தயாராக இருந்தேன். என் மனப்பாட சக்தி எனக்குக் கை கொடுத்தது. இரவு முழுக்க நடத்த வேண்டிய பாடங்களை மனப்பாடம் செய்தேன். புரிந்து கொள்ள முயற்சிசெய்தேன்.

மறுநாள், தடையின்றி வகுப்பெடுத்தேன், எம்.எஸ்.சி. மாணவர்கள் எல்லாரையும் சரளமான என் வார்த்தைக் கூட்டு கட்டிப்போட்டு விட்டது. வாங்கிய சம்பளத்துக்கு நான் வஞ்சகமில்லாமல் உழைத்தேன். உயிரைக் கொடுத்து படித்துக் கற்றேன். கற்றதைச் சொல்லித் தந்தேன். என் தொழில் எனக்கு நிறைவாக இருந்தது. மெல்லமெல்ல மாதங்கள் தாண்டிச் சென்றன.

முதல்வர் ஒரு முறை கூப்பிட்டனுப்பினார். எனக்குத் திக்கென்றது. பாதாளத்தில் விழுந்தது. போன்ற உணர்வு. காட்டிக் கொள்ளாமல் தயங்கித் தயங்கி அவர் முன் நின்றேன்.

‘‘ஹெர்மீட்ஸ் தியரி பற்றி உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார். தெரியும் என்பதற்கு அடையாளமாக தலையசைத்தேன். அதற்குள் குப்பென்று வியர்த்துவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி.க்கு பாடம் எடுக்கும்போது படித்திருந்தேன். அதன் சமன்பாட்டு வரிசை மங்கலாக ஞாபகம் இருந்தது. மெதுமெதுவாக அவரிடம் அந்த வரிசையையும் கோட்பாட்டையும் சொன்னேன். அவர் என் கண்களையே உற்றுப் பார்த்தார். கோபம் இல்லை. திருப்தி தெரிந்தது.

‘‘இந்தாங்க இன்விடேஷன். திருநெல்வேலில ஒரு செமினார். ஹெர்மீட்ஸ் தியரி மேல ஒரு பேப்பர் படிக்கμம். அத நீங்கதான் செய்றீங்க’’ என்றார். எனக்கு மூச்சு வந்தது. ‘‘சரி’’ என்றேன்.

செமினார் கட்டுரைக்காக உயிரைக் கொடுத்து தயார் செய்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என் ஆசை பத்மினியையும் அங்குதான் சந்தித்தேன். அவள் அங்கே எம்.எஸ்.சி. மாணவி.

அப்புறம் திருவனந்தபுரத்தில் ஒரு கருத்தரங்கம். அங்கும் என்னையே அனுப்பினார் முதல்வர். பத்மினியும் அங்கு தேடிக்கொண்டு வந்திருந்தாள். மனம் திறந்து பேசினோம். அதற்குப் பின் நான் பங்கேற்ற கருத்தரங்குகளுக்கெல்லாம் அவள் வருகை எனக்குப் புதுத்தெம்பு தந்தது. ஒரு கருத்தரங்குக்குத் தந்தையோடு வந்திருந்தாள். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். சுருக்கமாக நான் அனாதை என்றேன். சொல்லிக் கொள்ளும் வகையில் பூர்வீகம் இல்லை என்றேன். எங்கள் திருமணம் மிக எளிதாக நடந்தது.

திருமணம் என் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. வாழ்வின் உல்லாசம் என் மனதில் மெல்லிய உணர்வுகளை மீட்டத் தொடங்கியது. என் காதுகளுக்குமட்டுமே கேட்கிற வண்ணம் இனிய இசை எப்போதும் இசைத்தது. இசையின் எழுச்சியும் கிறக்கமும் என்னைத் தழுவியது. அலைகளைப் போல இசை என்னைச் சுற்றிலும் வழிந்தது. அதன் குழைவில் நானும் கரையத் தொடங்கினேன். கரைந்துகரைந்து இசையோடு இசையாவதே நோக்கம் என்பதுபோல நான் மூழ்கத் தொடங்கினேன். மூழ்சி, மூச்சடக்கி இன்பத்தில் திளைத்தேன். மஞ்சுக் குட்டி பிறந்து எங்கள் இன்பத்தைப் பலமடங்காக்கினாள்.

கோயம்புத்தூர் கருத்தரங்கம் பற்றி ஒரு நாள் என்னிடம் சொன்னார் முதல்வர். வழக்கம் போலச் சம்மதம் தெரிவித்து விட்டு இரண்டு இரவு முழுக்க உட்கார்ந்து கருத்தரங்கக் கட்டுரையைத் தயார் செய்தேன்.

கோவையில் கருத்தரங்க வாசலில் வரவேற்க முதல்வர் காத்திருந்தார். துணைவேந்தரின் முன்னுரைக்குப் பின் முதல் கட்டுரையை நான் வாசித்தேன். கட்டுரையின் நகல்களைக் கீழே அரங்குக்குள் விநியோகித்துக்கொண்டிருந்த ஒருவன் என்னையே பார்ப்பதை எதேச்சையாய் அரங்கைநோக்கித் திரும்பியபோது, கவனித்தேன். முக்கியமான சூத்திரத்தைப் பலகையில் எழுதி விளக்கிக்கொண்டிருந்த தருணம் அது. அனைவரின் கவனமும் பலகையில். அவன் மட்டும் என் முகத்தையும் அசைவையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்பார்வை என்னை மிரட்டுவது போல இருந்தது. சட்டென சமாளித்தேன். மனசே, மனசே தைரியமாக இரு. சொல்லிக்கொண்டே அந்த முகத்துக்குரியவன் யார் என் ஞாபகத்தைக் குலுக்கினேன். இளமையில் கண்ட எல்லா முகங்களும் வரிசையாய் நகர்ந்தன. சட்டென நினைவு வந்து விட்டது. அந்த முகம் சங்கர். அடப்பாவி! நீயா? இங்கேயா? பரபரப்படையாதவன் போல இருக்க மிகவும் முயற்சி செய்தேன்.

கட்டுரைக்கு எல்லாரும் கை தட்டினார்கள். அந்த பிரகஸ்பதி இன்னும் என்னை முறைத்துக் கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தேன். கீழே இறங்கிவரும் போது பலரும் கை குலுக்கினார்கள். வாசலை நெருங்கும்போது, கதவோரத்திலிருந்து அந்த அயோக்கியன், ‘‘நீ செந்தில்தானே?’’ என்று இரண்டு மூன்று முறை கேட்டான். கண்டும் காணாதது போல இருந்தேன் நான். கடைசியில் யு ஆர் மிஸ்டேகன்என்று சொல்லிவிட்டு அவனைக் கடந்தேன். அவன் முகத்தில் குழப்பம் தாண்டவமாடியது.

இரண்டு வாரம் கழித்து நான் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது போலீஸ் வந்தது. மறுகணமே நான் முதல்வர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அறையில் நிர்வாக அதிகாரிகள், சங்கர், பெங்களூர் சந்திரசேகர் எல்லோருமே உட்கார்ந்திருந்தார்கள். என் முகம் வெளுத்து விட்டது. தலை குனிந்து கொண்டேன். அந்தக் கணம் நான் இறந்து விடவேண்டும் என்று மனசார ஆசைப்பட்டேன். என் மீது குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது.

முதல்வர் என்னைப் பார்த்து நிஜமா இது?’ என்றார். அவருக்குத்தான் என் மீது எவ்வளவு அழுத்தமான நம்பிக்கை. ‘‘சொல்லுங்க’’ என்று மீண்டும் அழுத்திக்கேட்டார். நான் குற்றவாளி என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த வயதானவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். என் கையில் விலங்குகள் மாட்டப்பட்டன. நான் முதன்முறையாக சங்கரை நிமிர்ந்து பார்த்தேன். வயிறு எரிந்தது. ‘‘பாவி’’ என்றேன். அவன் முகத்தில் தெரிந்த உணர்வு நிம்மதியா, குழப்பமா பகுத்தறிய முடியவில்லை.

விசாரணையில் நான் யாருக்கும் சிரமம் வைக்கவில்லை. எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டேன். நல்ல வாழ்க்கைக்கான பின்னணியை உருவாக்கிக்கொள்ளவே நான் எல்லாவற்றையும் செய்தேன். காலேஜ் உத்தியோகம், பத்மினி, சுகமான இல்லறம் எல்லாமே இந்தப் பின்னணி கொடுத்த சுகங்கள். இப்பின்னணிக்காக நான் உள்ளூர நாயாய் அலைந்திருக்கிறேன். எனக்கு அமையாத ஒன்றை நான் அமைத்துக்கொண்டேன். என் செயல்களுக்காக நான் சொன்ன சமாதானங்கள் அவர்கள் காதில் விழவில்லை. தண்டனை உறுதியாகி விட்டது. ஏழாண்டுகள்.

விசாரணை நாள்கள் தோறும் வந்த பத்மினி தீர்ப்பன்று வரவில்லை. என் கண்கள் அவளைத் தேடின. சிறைக்கு அழைத்துச் செல்லும் போது முதல்வர் குறுக்கில் வந்தார். அவர் கண்கள் கலங்கி இருந்தன. ஏதோ பேச விரும்புகிறவர்போல இருந்தார். நான் அவசரமாக ‘‘பத்மினி...’’ என்று ஏதோ கேட்க முற்பட்டேன். காவலாளி என்னை வண்டிக்குள் தள்ளி விட்டான்.

சிறையில் ஒவ்வொரு கணமும் பத்மினியின் முகம் நெஞ்சில் எழுந்தது. மஞ்சுக் குட்டியின் சிரிப்பு காதில் கேட்டது. என் காதில் சதா ஒலிக்கும் இனிய இசை சோகமாக ஒலித்தது. சுவரைப் பார்த்துப் பேசும் அளவுக்கு என் பைத்தியம் முற்றியது.

பத்மினியை நினைக்கும்போதெல்லாம் அந்தப் பாவி சங்கரின் முகம் நினைவில் எழுந்து எரிச்சலை மூட்டியது. சிறு வயதில் எங்கள் தெருவிலேயே இருந்தவன். நான் படிப்பை நிறுத்திய பிறகு எங்கள் தெருவில் முழுசாகப் படித்துப் பட்டம் வாங்கிய முதல் பட்டதாரி. அவன் அப்பா நடத்திய பால் ஸ்டோரில் நான் கொஞ்சகாலம் கணக்கெழுதி இருக்கிறேன். எங்கும் கால் தரிக்காமல் நான் அலைந்த காலத்தில் ஏதோ காலேஜ் குமாஸ்தாவாக வேலை கிடைத்து ஊரைவிட்டு வெளியேறி விட்டான் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

முதன்முறையாக அவனைப் பற்றி யோசித்தேன். இரண்டு முறை அவன் மீது காறித் துப்பிவிட்டேன். மூன்றாவது முறையும் துப்பத் தயாராக இருந்தேன். என் மூர்க்கம் எனக்கே விசித்திரமாக இருந்தது. முழுக்கமுழுக்க என் சுயநலக் கோணத்திலிருந்து அவன்மீது குற்றம் கண்டது எவ்வளவு தூரத்துக்குச் சரி என்று புரியாமல் குழம்பினேன். உலகின் முன்பு குற்றத்தை முழு மனசோடு ஒத்துக்கொண்ட என்னால் அவன் மீது மட்டும் எரிச்சல்கொள்வது எதற்காக என்று தெரியவில்லை. யோசிக்கயோசிக்கத் தலை வலித்தது. அவனுக்கு என்மீது பொறாமை என்று வைத்துக் கொண்டால்கூட, அவன் திரும்பத்திரும்ப என்னைக் காண வருவது எதற்காக என்றும் அவமானங்களைச் சகித்துக் கொள்வது எதற்காக என்றும் கேள்விகள் எழுந்தன. தலையைப் பிடித்தபடி உட்கார்ந்து விட்டேன்.

‘‘டேய்... 512... ஒனக்கு விசிட்டர்...’’

கொஞ்சம் தாமதமாய்த்தான் அந்த வார்த்தைகளை மனம் உள்வாங்கியது. யார் என்று திரும்பிக் கேட்பதற்குள் காவலாளி தொலைவாகச் சென்றுவிட்டான். மனம் முதலில் பத்மினிஎன்று அரற்றியது. அப்புறம் சங்கர்என்று கேள்வியில் தொங்கியது. குழப்பத்துடன் கூடத்தைநோக்கி நடக்கத் தொடங்கினேன்.

(புதிய பார்வை 1997)