Home

Sunday 21 February 2021

வாகனம் - சிறுகதை


இரண்டு வருஷங்களாகக் காலையிலும் மாலையிலும் என்னோடு வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டிருந்த டெலிபோன் தொழிற்சாலைக்காரர் காலிசெய்துவிட்டுப் போய் மொத்தமாய் ஆறுமணி நேரம்கூட கடந்திருக்கவில்லை. அதற்குள் பக்கத்து வீட்டுக்குப் புதுக்குடித்தனம் வந்துவிட்டது. முதலில் ஒரு ஆட்டோ வந்தது. இரண்டு பெண்களும் ஓர் இளைஞனும் இறங்கினார்கள். இளைஞன் மட்டும் ஓனரின் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டிச் சாவியை வாங்கி வந்து கதவைத் திறந்தான். பெண்கள் உள்ளே சென்றார்கள். 

சற்று நேரத்தில் இன்னொரு ஆட்டோ வந்தது. ஏறத்தாழ ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் அதில் இருந்தார்கள். முதலில் இறங்கிய பெண் ஆட்டோவிலேயே இருந்த ஊன்றுகோலை அவரிடம் எடுத்துக் கொடுத்தாள். அவர் தன் ஒற்றைக்காலால் முதலில் இறங்கி அதற்கப்புறம் செயற்கைக் காலை ஊன்றுகோலின் உதவியோடு வெளியே வந்தார். இதற்குள் வீட்டுக்குள் இருந்த இரண்டு பெண்களும் வந்து அவர் தோள்களைப் பற்றி ஆதரவோடு உள்ளே அழைத்துப் போனார்கள். அடுத்த பத்து நிமிஷத்தில் ஒரு பெரிய வேன் வந்து நின்றது. கட்டில், இரண்டு அலமாரிகள், மேசைகள் நாற்காலிகள், படுக்கைச் சுருணைகள், சிலிண்டர், பாத்திர மூட்டைகள். வேனோடு வந்த ஓர் ஆளும் அந்த இளைஞனும் எல்லாவற்றையும் இறக்கி உள்ளே எடுத்துச் சென்றார்கள். அதற்கப்புறம் அங்கிருந்து கட்டிலோ அலமாரியோ இழுபடுகிற சத்தம். ஆணி அடிக்கிற சத்தம். பாத்திரங்களை உருட்டும் சத்தம். சாயங்காலம் வரைக்கும் அந்த அமளி தொடர்ந்தது.

சின்மயா ஆஸ்பத்திரி வரைக்கும் போய்வரவேண்டிய வேலை இருந்தது எனக்கு. ஒரு பத்து வருஷப் பழக்கமுள்ள நண்பர் ஒருவர் இதயத்தாக்குதலுக்குள்ளாகிச் சேர்க்கப்பட்டிருந்தார். சேர்ந்த கையோடு இரண்டு நாள் தொடர்ந்து பார்த்ததோடு சரி, அதற்கப்புறம் போகமுடியவில்லை. அன்று ஓய்வு நாளாக இருந்ததால் அமுதாவும் நானும் கிளம்பிவிட்டோம். இருள் கவிந்து கொண்டிருந்தது. இந்திரா நகரின் வீதிகள் சுத்தத்துக்குப் பேர் போனவை. நல்ல அகலமானவையும்கூட. இரு புறமும் இதமான காற்றை வீசும் மரங்கள், நட நட என்று சொல்பவை. ஆஸ்பத்திரியில் எதிர் பார்த்ததைவிட ரொம்ப நேரம் கடந்துவிட்டது. அதற்கப்புறம் கிருஷ்ணன் கோயிலுக்கும் கடைத் தெருவுக்கும் சென்று திரும்பி விட்டோம். துணி மாற்றிக் கொள்ளும் பொருட்டு அமுதா அறைக்குள் சென்றுவிட கூடத்திலேயே நான் செய்தி கேட்பதற்காகத் தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தேன். கதவருகில் எங்கள் வீட்டு ஓனர் வந்து சிரித்தபடி ‘‘என்ன சார் வாக்கிங்கா?’’ என்றார். நான் சிரித்து வைத்தேன். அதற்குள் அவர், ‘‘பக்கத்து ஊட்டுக்கு குடித்தனம் வந்திருக்குதே பாத்தீங்களா ‘‘என்று கேட்டார்’’. காலையில் வந்து எறங்கும் போதே பாத்தனே’’ என்றேன்.

‘‘ஒரு ஹாலும் ரெண்டு ரூமும் தான் சார். இருபத்தஞ்சாயிரம் ரூபா அட்வான்ஸாம்’’ என்று மேல் விவரம் சொன்னார். சுருக்கென்றது எனக்கு. பதில் சொல்லாமல் அசட்டுத்தனமாய் சிரித்து வைத்தேன். ‘‘எச்.ஏ.எல். ல வேலை பாத்தாராம் சார் அவுரு. ஏதோ ஆக்ஸிடென்ட் காம்பன்ஸேஷன் வேற ஒரு லட்சம் கெடச்சிருக்கு. இந்த ஊருல காசி வந்ததுன்னா எத்தனை பேரு குடிச்சியே அழிக்கறான் தெரியுமா சார். இவுரு நாலு ஆட்டோ வாங்கி வச்சிட்டு லட்சணமா வாடகைக்கு உடறாராம். ஒரு பொண்ண கட்டி குடுத்தாச்சாம். இன்னம் ரெண்டு பொண்ணுங்க இருக்குது. பையன்கூட ஏதோ ஒரு கம்பெனில வேல செய்யறானாம்.’’

சேகரித்து வைத்த தகவல்களையெல்லாம் என்னிடம் சொல்லிவிட்டு திருப்தியோடு எழுந்தவர், ‘‘இன்னிய தினமணி இருந்தா கொஞ்சம் குடு சார்’’ என்று கேட்டு வாங்கிக் கொண்டு போனார். ஓர் அடைமழை பெய்து ஓய்ந்தமாதிரி இருந்தது. செய்திகளில் கவனத்தைத் திருப்ப முற்பட்டபோது அது முடிந்துவிட்டது.

மறுநாள் அதிகாலையில் நாலரை மணிக்கு அலாரம் அடித்து எழுந்தபோது மனம் தெளிவாக இருந்தது. சுகமான காற்றின் தழுவலில் உற்சாகம் பொங்கியது. பல்துலக்கி விட்டு வாக்கிங் ஆடைகளை அணிந்து கொண்டு ஷுக்களை மாட்டினேன். அப்போதுதான் அந்தக் கொடூரமான சத்தத்தைக் கேட்டு அதிர்ந்தேன். ஜன்னலின் மறுபுறத்தில் இருந்து அந்தச் சத்தம் வந்து தாக்கியது. அத்தோடு பெட்ரோல் புகையின் துர்நாற்றம். அவசரமாய் வந்து ஜன்னலை ஒட்டி எட்டிப் பார்த்தேன். ஒருவன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து எஞ்சினை சூடாக்கிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஐந்து நிமிஷங்கள் விட்டுவிட்டு மறுபடியும் ஸ்டார்ட் செய்து சூடேற்றிக் கொண்டிருந்தான். ஒரு ஆட்டோவின் சத்தம் இந்த அளவு எரிச்சலூட்டக் கூடும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. ஒரு நூறு கைகள் ஒரு பெரிய தகர டப்பாவை ஓங்கிஓங்கித் தட்டுகிற சத்தம் போலெழுந்த அதன் ஓசையில் நான் தவித்துப் போனேன். அமுதாவும் எழுந்து உட்கார்ந்து விட்டாள். ஒரு வழியாக அந்த ஆட்டோ கிளம்பிப்போய் ஒழிந்தது. வழக்கமாய் என் மனசில் வழியும் ரசனையும் சுவாரஸ்யமும் உற்சாகமும் அன்றைய வாக்கிங்கில் சுத்தமாக இல்லாமல் போனது. ஏதோ பிண ஊர்வலத்தில் நடந்து போகிறமாதிரி நடந்தேன்.

என் மூளை தடதடவென்று அதிர்ந்தபடி இருந்தது. என் நரம்புகளைக் கிழித்துக்கொண்டு அந்த ஆட்டோவின் சக்கரங்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. ரத்தம் சூடேறிக் கொண்டிருந்தது. வீடு திரும்பிய நேரத்தில் விடியத் தொடங்கி இருந்தது.

ஆடை மாற்றிக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தபடி அப்போதுதான் வந்து விழுந்திருந்த செய்தித் தாளைப் புரட்டத் தொடங்கினேன். ஒரு கோப்பையில் தேனீரைக் கொண்டு வந்த அமுதா தானும் இன்னொரு கோப்பையில் பாலை உற்றிக் கொண்டு வந்து எதிரில் உட்கார்ந்தபடி செய்தித்தாள் இணைப்புக்குக் கையை நீட்டினாள். இதயத்தைத் துளைக்கும் அச்சத்தம் மீண்டும் எழுந்தது. அவசரமாய் ஜன்னலைச் சாத்தினாள். ஜன்னல் கண்ணாடிகளை ஊடுருவிக்கொண்டு வந்து தாக்கியது சத்தம். என் மூளை நரம்புகளில் ஒருவித முறுக்கம் படர்ந்து உஷ்ணத்தில் தகித்தது. என் கண்கள் சிவந்து விட்டதாக அமுதா சொன்னாள். ஐந்து நிமிஷம் என் உயிர் என் வசம் இல்லை. மெல்ல மெல்ல அச்சத்தம் தேய்ந்த பின்புதான் நான் நிதானமானேன். முழுக்க விடிந்து விட்டது. வழக்கமான அவசரக் குளியல். அவசரச் சமையல். அவசரச் சிற்றுண்டி, நான் வெளியே எட்டிப் பார்த்தேன். மேலும் இரண்டு ஆட்டோக்கள் நின்றிருந்தன. இரண்டு பெரிய கரடிகள் போல இருந்தன அவை. நான் அலுவலுக்குக் கிளம்பும் முன்பேயே அரை மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து அவை கிளம்பிச் சென்றன. அன்று பகல் முழுக்க அந்த வாகனத்தின் சத்தத்திலேயே மனம் குவிந்திருந்தது. ஒரு தடி தொடர்ந்து என் தலையில் தட்டிக் கொண்டிருப்பது போல இருந்தது. முற்றிலும் அமைதி பறிபோனது.

மறுநாள் காலை வழக்கம் போல நான் வாக்கிங் ஷுக்களை மாட்டிக்கொண்டிருக்கும் போதே அந்த முதல் ஆட்டோவின் சத்தம் தொடங்கி விட்டது. கைகால் ஓடவில்லை. ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டேன். அமுதாவும் எழுந்துவிட்டாள். நான் தலையப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து ‘‘தைலம் தரட்டா’’ என்றாள். ‘‘என்ன கிண்டலா?’’ என்றேன். சற்றே சிரித்தபடி நகைச்சுவையுணர்வோடுதான் இதைக்கேட்க நினைத்திருந்தேன். கணநேரத்துக்குள் சிடுசிடுப்போடு வார்த்தைகள் சீறிவிழுந்துவிட்டன. அவள் முகம் போன போக்கு சரியில்லை. அவசரமாய் நான் வெளியேறிவிட்டேன்.

ஒரு வாரம் கடந்து விட்டது. ஒவ்வொரு நொடியும் என் செவியில் ஆட்டோ ஓடுகிற சத்தம் ஒலிக்கத் தொடங்கியது. அந்த இம்சையில் இருந்து விடுதலையாகிற உத்தி பற்றிப் பல விதங்களிலும் யோசித்துப் பார்த்துக் களைத்துவிட்டேன். பொழுதுகளைத் தள்ளுவது கசப்பான மருந்துகளைச் சாப்பிடுவதுபோல ஆனது. மெதுவாக இந்தப் பிரச்சனையை என் வீட்டு ஓனரிடம் முறையிட்டேன்.

‘‘இதுக்காக நீ எதுக்கு சார் தலையக் கெடுத்துக்கற?. அது பாட்டுக்கு அது இருக்கட்டும். நீ பாட்டுக்கு ஒன் வேலைய பாத்துக்னு இரு. எல்லாமே நமக்குப் புடிச்சமாதிரி நடக்கணும்ன்னா முடியுமா?’’

அவர் இன்னொரு கோணத்தில் இருந்து எனக்குப் புத்திமதிகளைச் சொல்லப் தொடங்கினார். எல்லாவற்றையும் நான் பொறுமையாய் கேட்கவேண்டி இருநத்து.

‘‘ரெண்டு பொட்டபுள்ள வச்சிருக்காங்க. காலில்லாத நொண்டி வேற. அவுங்க வவுத்தல எதுக்கு சார் மண்ண அள்ளிப் போடணும்?. அட்ஜஸ்ட் செஞ்சிக்கணும் சார்...’’

‘‘நா அதுக்கு சொல்லலங்க. அவர் நாலு ஆட்டோ வச்சி ஓட்டட்டும், நானூறு ஆட்டோ வச்சி ஓட்டட்டும். ஆனா அந்த சத்தம்’’

‘‘சத்தம்னு நெனச்சா எல்லாமே சத்தம்தானே சார். டி.வி. ஓடனாலும் சத்தம்தான். மிக்ஸி ஓடனாலும் சத்தம்தான். தெருவுல புள்ளைங்க ஆடனா கூட சத்தம்தான். அவ்ளோ எதுக்கு? நீ காலைல வாக்கிங் போக அலாரம் வச்சி அடிக்கறியே, அதுகூட சத்தம் தான் சார். ஆட்டோ போடறத மட்டும் சத்தமின்னு எதுக்கு நெனைக்கற’’

என் பிரச்சனையை அவர் ரொம்பவும் சாதாரண வகையில் எடுத்துக்கொண்டு உதாசினப்படுத்திப் பேசியது வருத்தத்தைக் கொடுத்தது. நாலு ஆட்டோக்கள். ஒவ்வொன்றும் ஐந்து நிமிஷம். காலை நேரத்தில் மொத்தமாக இருபது நிமிஷங்களை ஆட்டோக்களின் உறுமலை மட்டுமே கேட்பதில் செலவழிப்பவனின் அவஸ்தைகளை மூன்றாவது மாடியில் சௌகரியத்தோடு இருப்பவர் புரிந்துகொள்வார் என்று எதிர்பார்ப்பது என் பிழைதான். எனக்கும் ஆட்டோக்களுக்கும் இடையே ஒரு ஜன்னல் சுவர் மட்டுமே நிற்கிறது. அவருக்கு மூன்றுமாடிகள் தூரம். ஏறத்தாழ முப்பது அடிகள்.

முதலில் என்னோடு உடன்பட்டிருந்த அமுதா கூட போகப்போக எனக்கே புத்தி சொல்லத் தொடங்கிவிட்டாள். ‘‘வீட்டை மாத்திடலாமா?’’ என்ற யோசனையை அவள் நிராகரித்து விட்டாள். ‘‘எல்லா இடங்களிலும் இந்த மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்ங்க. வேணுமின்னா ஒங்க காதுல பஞ்ச வச்சிக்குங்க’’ என்றாள். அவளுக்கு அந்தப் படபடப்புச்சத்தம் மிகக் குறுகிய நாள்களில் பழக்கமாகி விட்ட ஒன்றாக மாறிப்போனது. அவள் நடவடிக்கை எனக்குச் சற்றே ஏமாற்றமளித்தது.

அந்தக் கிழவரோடு நேரிடையாகவே மோதிவிடலாமா என்று என் மனம் திட்டமிடத் தொடங்கி, அதன் சாதக பாதங்களை அலசி ஆராய ஆரம்பித்தது. எடுத்த எடுப்பில் அக்கிழவரின் பரிதாபகரமாண தோற்றத்தின் முன் என் புகார் அர்த்தமிழந்து போகும் என்றுதான் தோன்றியது. என் வாதங்கள் எல்லாமே செல்லாக் காசாகிவிடும். அவற்றைக் காது கொடுத்துக் கேட்கக்கூட யாருமற்றுப் போய்விடுவார்கள். சுற்றுமுற்றுமுள்ள இருபது இருபத்தைந்து போர்ஷன்காரர்களும் வம்புக்காரன் என்கிற முத்திரையை மிகச் சுலபமாக என் முதுகில் குத்திவிட்டுப் புத்தி சொல்லத் தொடங்கிவிடக்கூடும். கல்யாணத்துக்குக் காத்திருக்கிற அக்கிழவரின் இரண்டு பெண்களும் என்னை விரோதியாய் பாவிப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அவர்களின் குமுறலும் சாபமும் என்னைத் துரத்தத் தொடங்கிவிடும். நான் இத்தனை காலமும் பாடுபட்டுக் காப்பாற்றி வந்திருக்கிற நல்ல பெயரின் மீது அக்கணம் தார் பூசி அழித்துவிடும். நான் நிராதரவாக நிற்க நேரும் என்று நிச்சயமாய் தோன்றியது. கடைசியில், ‘‘நான் அப்பவே சொன்னனே கேட்டீங்களா’’ என்று அமுதாவும் கூடத் தன் பங்குக்கு உபதேசிக்க வந்து நிற்கக்கூடும். ஆன போதிலும் அதை அற்ப விஷயம் என்று என்னால் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நான் முடிவெடுத்த சில நாள்களுக்குள் அந்தக் கிழவரை நண்பராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. ‘‘ஒரு தந்தி எழுதித் தரீங்களா சார்’’ என்று அக்குள் கட்டையோடு நின்றபடி ஜன்னல் பக்கமாய் அவர் தலை நீட்டிப் பேசிய போது பாவமாக இருந்தது. அவரை உள்ளே அழைத்து உட்காரவைத்து எழுதித் தரவேண்டியது என் தார்மீகக் கடமையானது. ‘‘ரொம்ப தேங்க்ஸ் சார்... ரொம்ப தேங்கஸ் சார்’’ என்று இரண்டு தரம் சொல்லிவிட்டு எழுந்தார். ‘‘ரெண்டு பொண்ணுங்களும் எட்டாங்க்ளாஸ் வரிக்கும் படிச்சதுதான். படிச்சி என்ன சார் பிரயோஜனம். இங்கிலீஷ்ல ஒரு தந்தி எழுதத் தெரியல’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்று சாயங்காலம் வீடு திரும்பும்போது ‘‘குட் ஈவின்ங் சார்’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். அந்த வீட்டில் அவருக்கு முன்பு இருந்த டெலிபோன் தொழிற்சாலை நண்பரின் ஞாபகம் வந்து சென்றது. என் பிரச்சினைகளை எப்படியாவது அவர் முன் பிரஸ்தாபித்து விடவேண்டும் என்ற யோசனை மனசுக்குள் ஓடியது. சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்திருந்தேன். அவராகவே ஒருநாள் பேச்சினூடே, ‘‘ஜன்னலுக்கு அந்தப்பக்கம் இருக்கிறவங்க நீங்க, ஆட்டோவால ஒங்களுக்குத்தான் தொந்தரவு ஜாஸ்தி. பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடணும். வண்டிக்கு கொஞ்சம் பார்ட்ஸ் மாத்திப் போடணும், போட்டுட்டா கும்னு ஆயிடும் வண்டி. கைய வச்ச ஒடனே ஹீட்டாய்டும். அஞ்சி பத்து நிமிஷம் நிறுத்தி ஹீட் செய்யத் தேவையே இல்ல. ஆனா செலவு ரெண்டாயிரம் ஆவுமா, நாலாயிரம் ஆவுமா சொல்லமுடியாது. கூடிய சீக்கிரம் சரியாக்கிடலாம் சார். நீங்க எதையும் மனசுல வச்சிக்காதீங்க’’ என்றார். என் பிரச்சனையை அவர் வரைக்கும் கொண்டு சென்றது யார் என்று குழப்பமாக இருந்தது. எனக்கு மறுகணமே அதுவும் நல்லதிற்குத்தான் என்று அமைதியானேன். அவர் சொன்னதைச் சரியாய்க் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கொட்டுவதற்காகக் குவித்து வைத்திருந்த எரிச்சலும் கோபமும் எப்படிச் சிதைந்தன என்று புரியவில்லை. திடுமென ஒரு வெறுமை சூழ்ந்தது.

ஒருமாத விடுமுறையில் வேலை விஷயமாய் பெங்களூர் வந்திருந்த நண்பன் ஒருவன் என்னைப் பார்ப்பதற்காக வீடு வரை வந்து இரவில் என்னோடு தங்கினான். விடிந்ததும் எழுந்து ஆட்டோவின் உறுமலைக் கேட்டு அவனும் குலைந்து போனான். நான் என் அவஸ்தைகளையெல்லாம் அவன் முன் கொட்டினேன். தொடர்ந்து நாலு ஆட்டோக்களின் உறுமலில் அவனும் எரிச்சல் கொண்டான். ‘‘இப்படியே ஒரு வருஷம் போனா ஹார்ட் அட்டாக் வராதவனுக்கும் வந்ததுரும்டா’’ என்று தன் இதயத்தில் கைவைத்துக் தேய்த்துக்கொண்டான். எனக்கு அந்த நிமிடத்திலேயே இதயத்தில் வலி படர்வதைப்போல இருந்தது. மூச்சு முட்டுவதுபோல ஒரு பிரமை. சட்டென நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி கட்டிலில் உட்கார்ந்தேன்.

எதையும் சொல்லாமல் மேசையில் இருந்த தண்ணீர்க் குடுவையை எடுத்துப் பருகினேன். ‘‘ஏதாவது செய்டா... ப்ளீஸ் இல்லன்னா இந்தப் புகை, இந்தச் சத்தத்துல ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போவது’’ என்றான். வண்டி ஏறும்போதுகூட இதுபற்றி எனக்கு ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றான். பெட்ரோல் புகையை மிக அருகில் இருந்து சுவாசிப்பதால் உருவாகும் சுகாதாரத் தீமைகளையெல்லாம் மனசுக்குள் பட்டியலிட்டேன். இதனால் வர நேரும் வியாதிகளைப் பற்றியும் அவற்றுக்குத் தேவையான முதல் உதவிகளைப் பற்றியும்கூட அறிந்து என் அறிவைப் பெருக்கிக்கொண்டேன். என் அலுவலக நண்பர்கள் இதற்குப் பெரிதும் உதவினார்கள். ‘‘ஒரு பாதுகாப்பான அவுட்லெட் இல்லாமல் வாகனங்களை வைத்துக்கொள்வது எத்தகைய குற்றம் தெரியுமா’’ என்று ஏதோ ஒரு சட்டவிதியைச் சுட்டிக்காட்டிப் பேசினான் ஒருவன். புதுசாக மாலை வேளைகளில் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஊரிலிருந்து வந்த உறவுக்கார இளைஞன் ஒருவன்கூட ‘‘இதுக்கெல்லாம் கேசே போடலாம் மாமா. கோர்ட்ல நின்னாதான் இவனுகளுக்கெல்லாம் தெரியும். வெரல் விட்டு ஆட்டிருவானுங்க. நானா இருந்தா பிச்சி ஒதறி ரெண்டுல ஒன்ன பார்த்துட்டுதான் நிறுத்துவன். நீங்க என்னடான்னா மனசுக்குள்ளேயே போட்டு சொதப்பிட்டிருக்கிங்க’’ என்றான். என் மனச்சூடு அதிகரித்தபடியே இருந்தது. எல்லாவற்றுக்கும் மனசளவில் தயார்படுத்தியபடி இருந்தேன். செயல்படுத்துவதற்கு ஒரு வசதியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மெல்ல மெல்ல தெருவிலும் அலுவலகத்திலும் ஒவ்வொருவராக என்னைத் தனியாய்ப் பார்க்கும் போதெல்லாம் மிக நயமாகவும் நட்புபூர்வமாகவும் பேசுகிற மாதிரி பேச்சைத் தொடங்கித் தந்திரமாக ஆட்டோவின் உறுமலில் வந்து முடித்தார்கள்.

‘‘என்ன சார்... தொந்தரவு தரானாமே அந்தக் கிழவன். ஒரு வார்த்தை சொல்லு சார். நம்ம மச்சானுக்கு வேண்டியவங்கதான் ஸ்டேஷன்ல இருக்காங்க. புடிச்சி உள்ள தள்ளி ஒரு சாத்து சாத்திரலாம்...’’

‘‘ஒரு பெட்டிஷன் எழுதி கையெழுத்து போட்டு குடு சார். தெருவுல எல்லார்கிட்டேயும் கையெழுத்த நா வாங்கிடறேன். காலங்காத்தால மனுஷன் நிம்மதியாக தூங்க முடியுதா சார். தலமாட்டுங்கிட்ட உர் உர்னு போறான் சார். ஒரு அரை அடி தள்ள நவுந்து வந்திருந்தான்னா அன்னிக்கு பேமானி தலயயே நசுக்கி இருப்பான்.’’

‘‘ஆர்.டி.ஓ.ல போய் சொல்லு சார். லைசன்ஸ புடுங்கனா தானா அடங்குவானுங்க’’

எடுப்பார் கைப்பிள்ளையாய் மாறி விடுவேனோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. அந்தக் கணங்களில் அவரவர்கள் சொல்வதிலும் நியாயமிருப்பதாகவே தோன்றியது. என் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. என்னால் அந்த ஆட்டோக்களின் உறுமலுக்கெதிராக ஓர் அடியைக் கூட எடுத்து வைக்க இயலவில்லை.

‘‘என்ன சார் கேஸ் போட்டிங்களா?’’

‘‘குள்ளநரி’’ என்று எங்கள் அலுவலகத்தாரால் அழைக்கப்படும் செல்லப்பன் என் மேசைக்கருகில் வந்து மெதுவான குரலில் ஒருநாள் கேட்டான். அவன் குரலில் தொனித்தது அக்கறையா, கிண்டலா என்று பிரித்தறிய முடியவில்லை. அவன் முகத்தில் என் சந்தேகத்துக்கு ஏதுவான ஒரு கோடு கூட இல்லை. நான் அவனிடம் வார்த்தைகளை வளர்க்க விரும்பவில்லை. நான் ஒன்று சொன்னால் அதை வெளியே ஒன்பதாகத் திரிக்கக் கூடியவன் அவன். மௌனமாக இல்லை என்கிற பாவனையில் தலையை அசைத்தேன்.

‘‘எக்காலஜி கேஸ்ல நீங்க சுலபமா ஜெயிக்கலாம். பொகை வருதுங்கறதுக்காகத்தான் வில்சன் கார்டன் க்ரிமிட்டோரியத்தயே சாத்தனாங்க. அதே மாதிரி இதுலயும் செஞ்சிடலாம். நம்ம சொந்தகாரப் பையன் வக்கீலாத்தான் இருக்கான். வெளிய குடுக்கிற பீஸ்ல பாதி குடுத்தா போதும். கேஸ் ஜெயிக்கறதுக்கு நான் கேரன்டி’’

யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வினால் சுற்றுமுற்றும் பார்த்தபடி மெதுவான குரலில் சொல்லிவிட்டுப் பதிலுக்காக என் கண்களைப் பார்த்தான்.

‘‘நான் இன்னும் முடிவெடுக்கல செல்லப்பன். அப்படி போடறதா இருந்தா, ஒங்கிட்ட கலந்து செய்யறன்.’’

நானும் மெதுவாய்ச் சொன்னேன். அவன் உடனே ‘‘அது போதும் சார்... தேங்க்ஸ்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். அவன் முதுகையே வெறித்துப் பார்த்தபடி இருந்தேன். நான் மறுபடியும் மேசையின் மீது பார்வையைத் திருப்பிய போதுதான், அவன் தன் கையோடு கொண்டு வந்த ஓர் ஆங்கிலப் புத்தகத்தை மறந்து வைத்து விட்டுச் சென்றிருப்பதை அறிந்தேன். நான் உடனடியாய் திருப்பிக் கூப்பிடுவதற்குள் அவன் மாடி ஏறிவிட்டிருந்தான். அப்புறம் தந்துவிடலாம் என்ற எண்ணத்தில் அப்புத்தகத்தை எடுத்துத் திருப்பினேன். அதன் அட்டைப்படம் என்னைக் கவர்ந்தது. அப்பக்கம் முழுக்க ஏராளமான மாதிரிகளில் வாகனங்களின் படங்கள். எவற்றுக்கும் சக்கரம் இல்லை. மாறாக மனிதனின் விதவிதமான தலைகள். அச்சித்திரம் என் மனசில் ஒரு பெரிய அலையை எழுப்பியது. மௌனத்தில் உறைந்தேன்.

அன்று நள்ளிரவில் எங்களுக்கு அடுத்த போர்ஷனில் இருந்த பெண் ஒருத்திக்கு திடீரென பிரசவ வலி வந்து விட்டது. ஆஸ்பத்திரிக்குப் போவது பற்றி ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள். ஒருவன் ஓடிச்சென்று பக்கத்து வீட்டுக் கதவை இடிப்பதுபோலத் தட்டி எழுப்பினார். வாசலில் ஆட்டோக்கள் நின்றிருந்தன. அந்தக் கிழவர்தான் நொண்டியபடி கதவைத் திறந்தார். பிரசவ விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு பதற்றம் உண்டானது. கட்டையை ஊன்றியபடி உள்ளே சென்று பையனை எழுப்பி வந்தார். தூக்கக் கலக்கத்தோடு வந்தவன் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு பின்பக்கம் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தான். வண்டியைத் தள்ளி நேராக்கியபடி ‘‘போய்க் கூப்ட்டாங்க’’ என்றான். கிழவர் அவனைப் பார்த்து ‘‘ஜாக்கரத... ஜாக்கரத’’ என்று சொன்னார். நானும் அவர் பக்கத்தில்தான் நின்றிருந்தேன். பிடியை இழுத்து ஆட்டோவை ஸ்டோர்ட் செய்தான் அவன். உறுமத் தொடங்கியது ஆட்டோ. வழக்கம் போல் ஐந்து நிமிஷ உறுமல், அதற்கப்புறம் தயாரானது. ஆக்ஸிலேட்டரை முறுக்கிமுறுக்கி சரிசெய்தான் அவன். பிரசவக்காரியின் குடும்பம் வண்டியில் ஏறிக் கொண்டதும் ஆட்டோ புறப்பட்டது. போர்ஷன்களில் பரபரப்பும் பேச்சும் குறைந்து அவரவர்களும் தத்தம் அறைக்குத் திரும்பினார்கள். மறுபடியும் தூக்கம் பிடிக்க அரை மணி நேரம் ஆயிற்று. அமுதா தூங்கிய பிறகும் நான் விழித்தபடி இருந்தேன். ஏதோதோ யோசனைகள். கேள்விகள். குழப்பங்கள். தீர்மானங்கள். எப்போது தூங்கினேனோ தெரியவில்லை. கண் விழித்தபோது நன்றாக விடிந்து இருந்தது. அலாரத்தின் சத்தத்தையும் மீறித் தூங்கியதை நினைத்துக் கூச்சமுண்டானது. 35 பாவண்ணன் தொகுப்பு பாகம் 3 s

வாக்கிங் தவறிப் போனதை எண்ணிக் கஷ்டமாக இருந்தது. கண்களைத் திறந்து அலாரத்தைப் பார்த்தபடியே கிடந்தேன். அமுதாவின் பக்கம் பார்த்தேன். வழக்கம்போல் அரைப்பகுதி வாய் திறந்திருக்கத் தலைக்குக் கைகளை அண்டக் கொடுத்துத் தூங்கி கொண்டிருந்தாள். தலைப்பின்னல் தனியே ஒதுங்கி தலைக்கு மேலே இருந்தது.

எழுந்து முகம் கழுவிய சமயத்தில் ஜன்னலை ஊடுருவிக் கொண்டு ஆட்டோவின் உறுமல் கேட்டது. அதற்கு இசைவாக என் மனம் ஒரு தாளத்தைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தது. ‘‘இப்போது நிற்கப் போகிறது’’ என நினைத்த கணம் அந்த உறுமல் நின்றது. இப்போது மீண்டும் தொடரும் என நினைத்த கணம் மீண்டும் உறுமியது. பக்கத்தில் கிழவர் ஊன்று கோலின் உதவியோடு நின்றிருந்தார்.

‘‘ஸாரி சார். தூக்கம் கெட்டிருச்சிங்களா. இன்னிக்குன்னு பார்த்து வண்டி ப்ராப்ளம் குடுக்குது. பார்ட்ஸ் மாத்தணுமின்னு நானும் தெனமுந்தான் நினைக்கிறேன். முடியல, கூடிய சீக்கிரம் மாத்திர்றன். வருத்தப் படாதீங்க சார்’’ என்று குற்ற உணர்வு தொனிக்கும் குரலில் சொன்னார்.

(1995)