Home

Sunday, 6 November 2022

காலத்தின் விளிம்பில் - சிறுகதை

 பூந்தோட்டம்என்னும் இணைய வார இதழில் நான் எழுதத்தொடங்கிய கட்டுரைகளுக்கு முதலில் எந்த வரவேற்பும் இல்லை. அத்தொடரை நிறுத்தியிருந்தாலும் எந்தவிதமான பாதகமும் இல்லை என்கிற மாதிரியான மௌனத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சிறிய அளவில் உருவான சலிப்பு மெல்லமெல்ல வளர்ந்து பெரிதாகி செயல்பட முடியாத அளவுக்கு நெஞ்சை அடைத்தது-. எழுதுவதற்கு எனக்கும் ஓர் இடம் தேவையாக இருந்தது என்பதையும் அந்த இணைய தளத்தை நடத்திவந்தவர் என் நண்பர் என்பதையும் தவிர அக்கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுத வேறு எவ்விதமான காரணமும் இல்லை. ஏறத்தாழ பத்து வாரங்களாக அத்தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. வாராவாரம் பூந்தோட்டத்தில் வெளியிடப்படுகிற வாசகர் கடிதக் குவியலில் இக்கட்டுரைத் தொடரைப்பற்றி ஒரு வரிகூட ஒருவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இக்கட்டுரைகள் ஏன் வாசகர்களை ஈர்க்கவில்லை என ஒவ்வொரு முறையும் யோசிப்பேன். விடையெதுவும் தெரியாத புள்ளி வரைக்கும் அந்த யோசனை நீண்டு மறைந்துபோகும்.

ஜெயமோகனின் சிறுகதைகள் : அகச்சித்திரமும் புறச்சித்திரமும்

  

மூடியிருக்கும் பெட்டியென மனத்தை உருவகித்துக்கொண்டால், அப்பெட்டிக்குள் என்ன இருக்குமென ஒருவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஆபரணங்கள் நிறைந்திருக்கலாம். அல்லது ஆடைகளாகவும் இருக்கலாம். கூழாங்கற்கள்  மணல்கட்டிகள், கரித்துண்டுகள், கொலைக்கருவிகள் என ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். பாம்புக்கூடைகள், பூந்தொட்டிகள், அமுதம், நஞ்சு என எதுவும் இருக்கலாம். எல்லாச் சாத்தியங்களும் உண்டு. எதையும் முழுக்க ஏற்கவும் இயலாது. நிராகரிக்கவும் இயலாது. மனித இயல்பே ஏற்கவும் இயலாத, நிராகரிக்கவும் இயலாத கலவையாக இருக்கும் சூழலில் மனமும் அப்படித்தானே இருக்கமுடியும். மனம் என்பது எது என்னும் புதிரான ஒற்றைக் கேள்விக்கு எதார்த்த வாழ்வில் ஏதேனும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் கலைஞனால் அப்படி எளிதாக நகர்ந்துவிட முடிவதில்லை. அவன் தன் கலையின் வழியாக வெவ்வேறு வாழ்க்கைத்தருணங்களை அலசி ஆராய்ந்து ஆயிரம் பதில்களைக் கண்டறிகிறான்.

Sunday, 30 October 2022

பாரதிவாணர் சிவாவின் கதையுலகம்

  

முன்னொரு காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சமாக ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருந்தார்கள். வீடு நிறைய குழந்தைகள் இருந்த காலத்தில் அந்த வீட்டில் இருந்த தாத்தாக்களும் பாட்டிகளும் அவர்களுடைய வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார்கள். குறிப்பாக முன்னிரவுப்பொழுதுகளில் குழந்தைகள் மடிமீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நல்ல நல்ல கதைகளை சொன்னார்கள். குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் இடையில் மகத்தானதொரு உறவு நிலவியது. எல்லாத் தலைவர்களும் தம் வாழ்க்கை வரலாறுகளில் இதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

பொம்மைகள் - புதிய சிறார் சிறுகதைத்தொகுதி - முன்னுரை

 

அன்புள்ள சிறுவர் சிறுமிகளுக்கு, 

வணக்கம்.

 

ஒரு நாள் எங்கள் வீட்டுக்கருகில் உள்ள ஏரிக்கரையில் நடந்துகொண்டிருந்தேன். அது பெரிய ஏரி. அதன் சுற்றளவு இரண்டு கிலோமீட்டர் இருக்கும். ஏரியில் தண்ணீர் இல்லை. இருக்கும் தண்ணீரும் தூய்மையானதல்ல. அதில் களைகளும் புதர்களும் நாணல்களும் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் : புதுமையும் புன்னகையும்

 

எங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ராஜசேகர். என்னைவிட சற்றே உயரமானவன். நன்றாக மரம் ஏறுவான். அதைவிட நன்றாக கதைசொல்வான். நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவனையே சூழ்ந்திருப்போம். அவன் சொல்லும் கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டால் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டதும் தெரியாது, வந்து சேர்ந்ததும் தெரியாது. நேரம் பறந்துவிடும். அவன் சொல்லும் கதைகள் அந்த அளவுக்கு சக்தி கொண்டவை.

Sunday, 23 October 2022

ஒரு கூரையின் கீழே - சிறுகதை

 ஊரில் இருக்கிற எல்லா இடங்களிலும் புடவைக்கு இத்தனை ரூபாய், லுங்கிக்கு இத்தனை ரூபாய் என்று கூலிக்கணக்கு இருக்கும் போது, ராமலிங்க நாடார் மாத்திரம் இன்னும் வாரக்கூலிக் கணக்கைத்தான் அமுலில் வைத்திருந்தார். வாரத்துக்கு எழுபத்தைந்து ரூபாய். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுப்பு. மற்ற நாள்களில் காலை ஏழு மணிக்கு வந்து உட்கார்ந்தால், சாயங்காலம் பொழுது சாய்கிறவரை நெய்யவேண்டுமென்பதில் தயவு தாட்சண்யமற்ற கட்டளை. ஊர் விஷயத்தைச் சொல்லியெல்லாம் அவரோடு வாதாடமுடியாது. வாதாடுகிற மனுஷன் வேலை செய்யமாட்டான் என்பது அவர் அபிப்பிராயம். அடுத்த நிமிஷமேவெளியே போடா!’ என்பார். ‘ஊர்ல அவன் இவ்ளோ தரான், இவன் அவ்ளோ தரான்னு சொல்றதெல்லாம் வீண் பேச்சு. நான் இவ்ளோதா தருவன். இஷ்டமிருந்தா தறிய தொடு. இல்லேன்னா நடய கட்டு!’ என்று கறாராய்ப் பதில் விழும். இன்னொரு தறி எங்கயாச்சும் கிடைக்கிறது என்றால், நடையைக் கட்டிவிடலாம்தான். ஆனால் ஊரில் தறி கிடைப்பதுதான் அபூர்வம். அவனவனும் வேலைக்கு நாயாய் அலைந்தான். மற்றவர்களின் நிராதரவான சந்தர்ப்பமே நாடாருக்கு ஆதாயமாகியது.

குறிஞ்சிவேலன்: ஓர் உறவுப்பாலம்

  

1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, சிற்சில மாத இடைவெளியில் என்னுடைய கதைகள் தீபம் இதழிலும் கணையாழி இதழிலும் அடுத்தடுத்து வரத் தொடங்கின. நான் அப்போது கர்நாடகத்தில் பணிபுரிந்தாலும், எங்கள் பிரிவின் தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருந்தது. சிற்சில சமயங்களில் தலைமை அலுவலகத்திற்கு சில தகவல்களைக் கொண்டுசெல்ல வேண்டிய வேலை வரும். அப்போதெல்லாம் என்னை அனுப்பிவிடுவார்கள். அந்த வகையில் 1983இல்  ஒருமுறை சென்னைக்கு வந்தேன். முதல் இரு நாட்கள் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வேலையை முடித்தேன். அடுத்தநாள் இரவு புறப்படும் ரயிலில்தான் நான் பயணச்சீட்டு எடுத்திருந்தேன். அதனால் மூன்றாவது நாள் காலையில் பத்தரை மணியளவில் தீபம் அலுவலகத்துக்கு வழி விசாரித்துக்கொண்டு சென்றேன்.