சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால்
நம்ப மாட்டீர்கள்’
கடந்த வாரம் கன்னடத்திலிருந்து
தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல்
அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது,
அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே
ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன்
கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் தகவலும் தெரியாமலேயே அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி
அவர் சாலையோரமாக நின்றிருக்கிறார்.
எதிர்பாராமல் இளைஞர்களைக் கைது
செய்ய வந்த காவலர்கள் அவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
ஊருக்கு வெளியே ஒரு கல்யாணமண்டபத்தில் அவர்கள் அடைத்துவைக்கப்படுகிறார்கள். மூன்று
நாட்கள் விசாரணைக்குப் பிறகு அவர்களைக் கடுமையாக எச்சரித்துவிட்டு விடுதலை செய்கிறது
காவல்துறை. அந்த இளைஞர்களுடைய பெற்றோர்கள் வந்து பிள்ளைகள் சார்பில் வாக்குறுதி அளித்துவிட்டு
தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள். எல்லோரும் சென்றுவிட சேஷநாராயண மட்டும் தனித்து
விடப்படுகிறார். யாரும் வரவில்லை. தனக்கும்
அந்தக் கூட்டத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தொடக்கம் முதலாக அவர் சொல்லிக்கொண்டே
இருந்ததை அந்தக் காவலர் அப்போதுதான் உணர்ந்துகொள்கிறார். சிறுவன் மீது இரக்கப்பட்டு
கொஞ்சம் சில்லறைக்காசுகளை கையில் கொடுத்து போய்விட அனுமதிக்கிறார். ஆனால் அவர் வீட்டுக்குத்
திரும்பிச் செல்லாமல் தமிழகத்தை நோக்கிச் செல்கிறார். அதுவரை அவரிடம் உதிக்காத விடுதலைப்போர்
நாட்டம் அக்கணத்தில் உதிக்கிறது. காந்தியத்தின்மீது ஈர்ப்பு உருவாகிறது. பல இடங்களில்
வயிற்றுப்பாட்டுக்காக சின்னச்சின்ன வேலைகளைச் செய்தபடி சுதந்திரப்போராட்டத்தில் தம்மால்
இயன்ற அளவிலான பங்களிப்பைச் செலுத்துகிறார். அந்த அனுபவம் அவரை எழுத்தாளராக்கியது.
அப்போது கற்ற தமிழறிவு அவரை நல்ல மொழிபெயர்ப்பாளராக்கியது.
கடந்த நூற்றாண்டை இந்தியாவில்
லட்சியவாதம் ஒரு மாபெரும் ஆலமரம்போல தழைத்தோங்கி நின்ற காலமெனக் குறிப்பிடலாம். சேஷநாராயணாவைப்போல
எளிய மனிதர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருடைய வாழ்க்கையோடும் இந்திய வரலாறு பின்னிப்பிணைந்திருந்தது.
ஒரு வரலாற்றைச் சொல்லவும் எழுதவும் முடிகிற அளவுக்கு ஒவ்வொருவரிடமும் தனிமனித அனுபவம்,
பொதுவாழ்க்கை அனுபவம் என்னும் வேறுபாடு இல்லாமல் ஏராளமான அனுபவங்கள் இருந்தன.
’சொன்னால் நம்பமாட்டீர்கள்’
தொகுப்பில் சின்ன அண்ணாமலை பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு அனுபவமும் வியப்பூட்டுபவையாக
இருக்கிறது. அவருடைய அனுபவங்களில் காந்தி, ராஜாஜி, காமராஜர், கல்கி, பெரியார், அண்ணாதுரை,
ம.பொ.சி. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, டி.கே.சி.
என ஏராளமான ஆளுமைகள் பங்கெடுத்திருக்கிறார்கள். வரலாறு உருவாகும் தருணத்தில் இயங்கிய
தலைவர்கள் அவர்கள். அவர்களோடு இணைந்து இயங்கியவர் சின்ன அண்ணாமலை.
சின்ன அண்ணாமலை பகிர்ந்துகொள்ளும்
வாழ்க்கைச்சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரு புனைகதைக்குரிய திருப்பத்தோடும் உணர்ச்சிகள்
நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஆற்று வெள்ளம் தனக்குரிய பாதையை தானே வழியமைத்துக்கொண்டு
செல்வதுபோல சின்ன அண்ணாமலையின் வாழ்க்கையும் தன் போக்கில் செல்கிறது. எதிர்பாராத உதவிகள்
எதிர்பாராத திசையிலிருந்து கிடைக்கின்றன. தவித்து நிற்றல் அல்லது தேங்குதல் என்னும்
பேச்சுக்கே எங்கும் இடமில்லை.
1942ஆம் ஆண்டில் ஆகஸ்டு போராட்டச்
சமயத்தில் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு காவல் நிலையச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
சின்ன அண்ணாமலையை ஏறத்தாழ இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாகத் திரண்டு
வந்து சிறையை உடைத்து தீக்கிரையாக்கிவிட்டு, அவரை விடுதலை செய்து அழைத்துச் சென்றிருக்கிறது.
இது காந்திய வழி அல்ல என்று அவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் தனக்கு ஆதரவாக திரண்டு
வந்திருக்கும் கூட்டத்தினரை வாட்டமடையும்படி பேச அவருக்கு விருப்பமில்லை. இந்தியா முழுவதிலும்
இப்படி ஒரு சிறையுடைப்புச் சம்பவம் நடைபெற்றதில்லை. ஆனால் இந்தியச் சுதந்திரப்போராட்ட
வரலாற்றில் எங்குமே இந்தச் சம்பவம் பதிவாகவில்லை.
சிறையை விட்டு வெளியேறி கூட்டமாகச்
செல்லும் தருணத்தில் ஆங்கிலேயச் சிப்பாய்களின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி ஏராளமான
தொண்டர்கள் இறந்துபோய்விடுகிறார்கள். குண்டடி பட்ட காயத்துடன் சின்ன அண்ணாமலை ஊரைவிட்டு
சென்னைக்குத் தப்பித்துச் சென்றுவிடுகிறார்.
ஒரு மருத்துவரின் உதவியோடு குண்டு அகற்றப்பட்டு பிழைத்தெழுகிறார். காவல்துறை
தேடுவதை அறிந்து காசிக்குச் சென்று தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார். ஆயினும் சொந்த
ஊரில் தொடர்ச்சியாக தன் பெற்றோருக்கும் கைக்குழந்தையோடு இருக்கும் மனைவிக்கும் காவல்துறை துன்பமளிப்பதை அறிந்து வேதனையுடன் மீண்டும் ஊருக்கே
வந்து சரணடைகிறார். நாலரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆயினும் மேல்முறையீட்டில் ஆறுமாதத் தண்டனையாக குறைக்கப்படுகிறது.
காரைக்குடிக்கு காந்தி வந்திருந்த
போது சின்ன அண்ணாமலை பத்து வயதுச் சிறுவன். காந்தியை அழைத்துச் செல்ல வந்த காரின் பின்புறமுள்ள
கம்பியில் தொற்றி ஏறி காந்தியைத் தொட்டுவிடுகிறார். கூடியிருந்த அனைவரும் அவர் ஏதோ
பிழை செய்துவிட்டதாக நினைத்து பதறி நிற்க, காந்தி தனக்கேயுரிய புன்னகையோடு அச்சிறுவனை
அழைத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு தன்னிடம் இருந்த ஓர் ஆப்பிளைக் கொடுக்கிறார்.
சிறைவாசத்துக்குப் பிறகு அவர் மீண்டும் காந்தியைச் சந்திக்க நேர்கிறது. காந்தியிடம்
திருவாடானைச் சிறையுடைப்புச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அவரை அறிமுகப்படுத்தி வைத்தவர்
ராஜாஜி. அந்தத் தருணத்தில் ஹரிஜன் பத்திரிகையை தமிழில் கொண்டுவரும் திட்டத்தை முன்வைத்து
காந்தியின் ஒப்புதலும் பெறப்படுகிறது. அன்று தொடங்கப்பட்ட ’தமிழ் ஹரிஜன்’ பத்திரிகை
காந்தியின் மறைவுவரைக்கும் சின்ன அண்ணாமலையின் ஆசிரியத்துவத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தது.
விடுதலை இயக்க ஈடுபாடு மட்டுமன்றி,
சின்ன அண்ணாமலைக்கு தமிழிசை மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்திருக்கிறது.
சிதம்பரத்தில் தமிழிசை மாநாடு சிறப்பாக நடைபெற்றதை அறிந்த வேகத்தில் தேவகோட்டையில்
ஒரு மாநாட்டை நடத்துகிறார். அதற்குத் தேவையான நன்கொடையை மனமுவந்து அளித்தவர் ராஜா சர்
அண்ணாமலை செட்டியார். வழக்கமாக காங்கிரஸ்காரர்கள் அணுகத் தயங்குகிற அவரை, ’நமக்காகவா
கேட்கிறோம், தமிழுக்காக அல்லவா கேட்கிறோம்’ என்னும் எண்ணத்தில் செட்டியாரைச் சந்திக்கிறார்
அண்ணாமலை. தமிழுக்காகத்தானே என்னும் ஆர்வத்தில் அவரும் நிதியுதவி செய்கிறார்.
சென்னைக்கு வந்தவர் வாழ்க்கையை
நடத்துவதற்கு தக்க உதவியைச் செய்யவேண்டும் என்னும் நோக்கத்தில் அவருடைய நண்பர்களாக
குமரிமலர் ஏ.கே.செட்டியார், சக்தி வை.கோவிந்தன் இருவரும் இணைந்து வாடகைக்கு ஓர் இடம்
பிடித்து அவருக்காக தமிழ்ப்பண்ணை என்னும் புத்தகக்கடையை வைத்துக் கொடுக்கிறார்கள்.
அது நல்லதொரு பதிப்பகமாகவும் வளர்ந்து தமிழுக்குக் கொடையாக சில நல்ல புத்தகங்களைக்
கொண்டுவந்தது. புத்தகங்களை அழகுற வெளியிடுவதிலும் எழுத்தாளர்களுக்கு உதவுவதிலும் புத்தக
வெளியீட்டு விழா நடத்துவதிலும் காட்டிய ஆர்வத்தினால் தமிழ்ப்பண்ணையை அவரால் இழப்புடன்தான்
நடத்த முடிந்தது. அதிக பணமுடை வரும் நேரத்தில் மனைவியின் நகைகளை அடகுவைத்து அல்லது
விற்று சமாளிப்பதை வழக்கமாக மேற்கொண்டிருக்கிறார். ஒருநாள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட
ராஜாஜி மனம் வருந்தி சின்ன அண்ணாமலையின் வீட்டுக்கே சென்று அவர் மனைவியிடம் இனிமேல்
நகைகளை விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு செல்கிறார். தன் மரணம் வரையில்
அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றுகிறார்.
ஹரிஜன ரெங்கண்ணா என்பவரைப்பற்றி
ஒரு அத்தியாயத்தில் சின்ன அண்ணாமலை குறிப்பிடுகிறார். காந்தியக் கொள்கைகள் மீது கொண்ட
ஈடுபாட்டினால் ஹரிஜன சேவையை தன் தலையாய கடமையாகக் கொண்டு இயங்கியதாலேயே மக்கள் அவருக்கு
அப்படி ஒரு பட்டப்பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். மாணவப்பருவத்தில் அவருடைய வீட்டுக்குச்
சென்று அவரைச் சந்தித்துப் பேசுவது சின்ன அண்ணாமலையின் வழக்கமாக இருந்திருக்கிறது.
ஒருநாள் அவருடைய வீட்டில் ஆனந்த விகடன் இதழ் கிடைத்திருக்கிறது. அதில் கல்கி எழுதிய
தலையங்கக் கட்டுரை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படித்த வேகத்தில் அக்கட்டுரையின்
ஒவ்வொரு வரியும் அவருக்கு மனப்பாடமாகிவிடுகிறது. அன்று மாலை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில்
அந்தக் கட்டுரையின் வரிகளையே தன் சொற்பொழிவாக
மாற்றி நிகழ்த்திவிடுகிறார். அவருடைய முதல் மேடைப் பேச்சு அது. கல்கியின் வரிகளை
மனப்பாடம் செய்வதும் மேடையில் உரைநிகழ்த்துவதும் அன்றுமுதல் அவருக்குப் பழக்கமாகிவிடுகிறது.
ஒருநாள் கல்கி இருக்கும் மேடையிலேயே, அவர் கல்கி என அறியாமல் அந்த வாரத்து விகடன் இதழில்
அவர் எழுதியிருந்த கட்டுரையை ஒப்பித்து பாராட்டுதல்களைப் பெறுகிறார். அதை ஓரமாக நின்று
ரசித்து கேட்டுக்கொண்டிருந்த கல்கி நிகழ்ச்சி முடிந்த பின்னர் “அந்த வாசகங்களை எங்கே
படித்தாய்?” என்று கேட்டபோது உண்மையையே சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. அந்தக் கட்டுரையை
எழுதிய கல்கி தானே என்று உண்மையை அவருக்கு உணர்த்திய கணத்திலிருந்து தொடங்கிய நட்பு
இருவருமிடையில் இறுதிவரையில் தொடர்ந்திருக்கிறது. வெகுகாலம் பழகிய ராஜாஜியை விட்டு விலகவேண்டிய தருணம் வருகிறது. காமராஜரிடமிருந்தும்
விலகவேண்டிய தருணம் வருகிறது. ஆயினும் கல்கியுடனான தொடர்பு இறுதிக்கணம் வரையில் நீடித்திருக்கிறது.
தன்னைச் சந்திப்பதற்காக தினமும் பேருந்தில் வீட்டுக்கு வந்து திரும்பிச் செல்லும் அண்ணாமலையின்
சிரமத்தை உணர்ந்து அவருக்காக ஒரு காரை வாங்கி அன்பளிப்பாக வழங்கும் அளவுக்கு கல்கியும்
அவரிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார்.
அண்ணாமலையின் வாழ்க்கையில் அபூர்வமான
தருணங்களுக்கு பஞ்சமில்லாததுபோலவே, அவர் சந்தித்த அபூர்வ மனிதர்களுக்கும் பஞ்சமே இல்லை.
ஒரு சந்தர்ப்பத்தில், மலேயாவின் ஜப்பானை எதிர்த்து சீன மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றார்கள்.
காவல்துறை அவர்களை வளைத்துப் பிடித்துவிடுகிறது. அந்தக் கூட்டத்தில் ஒரு சீக்கியப்
போலீஸ்காரர் நிற்கிறார். மாணவர்களை வரிசையில் நிற்கவைத்து ஒவ்வொருவராக போலீஸ் வேனில்
ஏற்றியபோது, வேன் அருகில் அண்ணாமலை வந்தபோது மேலதிகாரிக்குத் தெரியாமல் சடக்கென்று
அண்ணாமலையை வெளியே இழுத்து வேறுபக்கம் தள்ளி தப்பித்துச் செல்ல உதவுகிறார். அன்று மாலையே
அவரைத் தேடி வந்து மறுபடியும் சந்தித்த அந்தப் போலீஸ்காரர் அவருக்கு பகத்சிங் படம்
போட்ட பேட்ஜ் ஒன்றை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் தன்
பால்யகாலத்தில் கமலா நேருவின் மறைவையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்க மறுத்த தலைமை
ஆசிரியரோடு வாதாடிவிட்டு, மாணவர்களையெல்லாம் திரட்டி அழைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றிருக்கிறார்
சின்ன அண்ணாமலை. அவருடைய பள்ளிப்படிப்பு அத்துடன்
முடிவடைந்துபோகிறது. துரதிருஷ்டவசமாக அந்தப் பள்ளியாசிரியருக்கும் வேலை போய்விடுகிறது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளும் தருணமொன்று வாய்க்கிறது. தன்
வீட்டுக்கே அண்ணாமலையை அழைத்துச் சென்று விருந்தளிக்கிறார் அவர். அப்போது பிறந்திருந்த
தன் பேத்திக்கு அவர் கமலா என்னும் பெயரை சூட்டியிருப்பதைத் தெரிவிக்கிறார். தொடர்ந்து ‘தேசபக்தி உனக்குமட்டும்தான் சொந்தமா?’
என்றும் கேட்கிறார்.
ஒருமுறை சின்ன அண்ணாமலையையும்
மற்றும் சில விடுதலை வீரர்களையும் கைது செய்து சிறைக்கு அனுப்பும் காவல்துறை அதிகாரி,
துணைக்குச் செல்லும் காவலர்களிடம் தன் சொந்தப்பணத்தைக் கொடுத்து வயிறாரச் சாப்பாடு
வாங்கிக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறார். வேறொரு தருணத்தில்
ஆங்கிலேய அரசால் தேடப்படும் நபர் என்று தெரிந்திருந்தும்கூட இடார்சி நிலையத்தில் சந்திக்க
நேர்ந்த காவலர் அவருக்கு விருந்துணவே படைத்து செலவுக்கு பணமும் கொடுத்து பாதுகாப்பாகச்
செல்ல உதவி செய்கிறார்.
காங்கிரஸ் இயக்கம் பலவீனமாகி,
திராவிடர் கழகம் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் சார்பாக மேடையில்
பேசக்கூடியவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். சின்ன அண்ணாமலை போன்ற ஒருசிலர் மட்டுமே
காங்கிரஸை ஆதரித்தும் பெரியாரை விமர்சித்தும் கூட்டங்களில் பேசி வந்தார்கள். அப்படி
பேசியதை ஒரு குற்றமாக நினைத்த லோகநாதன் என்னும்
இளைஞர் ஒருநாள் அண்ணாமலையை வழிமறித்து மிரட்டுகிறார். அந்த லோகநாதனை காவல்துறை கைது
செய்தபோது, அவரை அதே அண்ணாமலைதான் மீட்டு வருகிறார். வெகுவிரைவில் அந்த லோகநாதன் மனம்
மாறி திராவிடர் கழகத்திலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இறுதிவரைக்கும்
சின்ன அண்ணாமலைக்கு நெருங்கிய நண்பராகவே இருந்தார்.
சின்ன அண்ணாமலையின் வரிகள் வழியாக
திரண்டு வரக்கூடிய ராஜாஜியின் வரலாற்றுச்சித்திரம் மிகமுக்கியமானது. தொடக்கத்தில் காந்தியுடன் நெருக்கமான
தொடர்புடைய தலைவராகவும் காந்தியக்கொள்கையில் ஈடுபாடு கொண்டவராகவும் காணப்படுகிறார்.
முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது மக்களுக்கு நலம்பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தும்
ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சென்னை சட்டசபைக்கு சபாநாயகர் தேர்தல் நடப்பதற்கு முன்னால்
சிவசண்முகம் என்பவர் தேர்தலில் போட்டியிட தனக்கொரு வாய்ப்பு தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.
விஸ்வநாதன் என்பவரும் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதாக செய்தி அடிபடுகிறது. ”அவரைவிட
எனக்கு அனுபவம் அதிகம். ஏற்கனவே சென்னை மேயராக இருந்து சபை நடத்திய அனுபவம் எனக்கு
இருக்கிறது. அதனால் அந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டால் நல்லது” என்று சொல்கிறார்
சிவசண்முகம். தான் ஒரு ஹரிஜன் என்பதால் தனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று
சொல்லாமல் தனக்கிருக்கும் தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேட்ட கம்பீரம் ராஜாஜிக்குப் பிடித்திருக்கிறது.
அதனால் அந்த வாய்ப்பை அவருக்கே வழங்குகிறார். வேறொரு சந்தர்ப்பத்தில் காவல்துறைக்கு
ஆய்வாளர் பதவிக்கு ஹரிஜன் பிரிவில் தகுதியான ஆள் யாரும் இல்லை என்று தொடர்ச்சியாக எழுதப்படும்
குறிப்பைப் படித்து வருந்திய ராஜாஜி, காவல்துறையின் உயரதிகாரியை வரவழைத்து அதற்கான
காரணத்தைக் கேட்கிறார். சிவசண்முகம் மூலமாக வரவழைக்கப்பட்ட ஓர் இளைஞன் தகுதியானவன்தானா
என்று சோதிக்குமாறு உயரதிகாரியிடம் கேட்டுக்கொள்கிறார். அவரும் அந்த இளைஞனைப் பரிசோதித்துவிட்டு
உடல்மெலிவைத் தவிர அவனுக்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன என்று சொல்கிறார். வேலையில் சேர்ந்து
ஐந்தாறு மாதங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டால் மெலிவு தானாக மறைந்துவிடும் என்று சொல்லும்
ராஜாஜி அந்த இளைஞனுக்கே அந்த வேலையைக் கொடுக்கும்படி செய்கிறார். இவற்றையெல்லாம் அருகில்
இருந்து பார்த்த சாட்சி சின்ன அண்ணாமலை. அதே ராஜாஜி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக்
கிளர்ந்தெழுந்து புதிய கட்சியைத் தொடக்கி, நேருவையும் காமராஜரையும் எதிர்த்து அரசியல்
செய்தபோது நட்பை விட காங்கிரஸ் இயக்கமே பெரிதென எண்ணி அவருடைய அரசியல் தொடர்பைத் துண்டித்துக்கொள்கிறார்.
பல ஆண்டு காலம் தன்னோடு இணைந்து கட்சிப்பணியாற்றிய ம.பொ.சி. தி.மு.க.வில் இணைந்துவிட்ட
பிறகும்கூட மன உறுதி குலையாமல் காங்கிரஸ் பணிகளில் தன்னைக் கரைத்துக்கொள்கிறார் சின்ன
அண்ணமலை.
ஏறத்தாழ அறுபது சம்பவங்களை இந்த
நூலில் நினைவுகூர்கிறார் சின்ன அண்ணாமலை. எல்லாச் சம்பவங்களும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம்
வாய்ந்தவையாகவே உள்ளன. ஒரு தருணத்தில் ஏதோ ஒரு வேலையாக மும்பைக்குச் சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கே வகுப்புக்கலவரம் நடந்துகொண்டிருந்தது. ஒருநாள் இரவு திரைப்படத்துக்குச்
சென்றார். படம் பார்த்த பிறகு வீட்டுக்குத் திரும்பவேண்டிய நேரம். அவர் தங்கியிருந்த
மாதுங்கா வரைக்கும் செல்வதற்கு வண்டி எதுவும் கிடைக்கவில்லை. கலவரத்தை முன்னிட்டு எல்லோரும்
அந்த இடத்துக்கு வர மறுக்கிறார்கள். எங்கிருந்தோ ஒரு டாக்ஸி வருகிறது. அவர் அதை நிறுத்தி
மாதுங்கா போகவேண்டும் என்று சொல்கிறார். டாக்ஸிக்காரர் மறுத்துவிடுகிறார். உடனே அண்ணாமலை
அவரிடம் கெஞ்சுதலாக “நஆனும் ஓர் இந்து, நீயும் ஓர் இந்து. எனக்கு நீ உதவ வேண்டாமா?”
என்று கேட்கிறார். டாக்ஸிக்காரர் ஒரு நொடி அவரைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் வண்டியில்
ஏறி உட்காரும்படி கேட்டுக்கொள்கிறார். அமைதியாக வண்டியை ஓட்டிச் சென்று அவருடைய இடத்தில்
இறக்கிவிட்டு, அமைதியான குரலில் “சாப், நான் இந்துவல்ல ஒரு முஸ்லிம். உண்மையான முஸ்லிம்
யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்பது குரான் வாக்கு” என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.
சின்ன அண்ணாமலைக்கு மக்கள் மீது
இருக்கும் பரிவுக்கு எடுத்துக்காட்டாக இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் ஒரு சம்பவம்
மிகமுக்கியமானது. தமிழ்ப்பண்ணை கடை இடம்பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் பாதையோரத்தில்
சிலர் காய்கறி விற்றுப் பிழைக்கிறார்கள். ஒருநாள் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து
அப்புறப்படுத்துகிறார்கள். தற்செயலாக பேச்சுச்சத்தம்
கேட்டு அந்தப் பக்கம் செல்லும் அண்ணாமலை அதைப் பார்த்து மனவருத்தம் கொள்கிறார். அப்போதைய
முதல்வர் காமராஜர். உடனே அவரை நேரில் சென்று சந்தித்து நடந்ததைக் கூறி, ஏழை வியாபாரிகள்
வாழ ஒரு வழி செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். சம்பந்தப்பட்ட துறையதிகாரிகளோடு உடனடியாக அண்ணாமலையே
பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கிறார் காமராஜர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சாலைக்கு
மறுபுறத்தில் வியாபாரிகளுக்காக அரசாங்கமே கடைகளைக் கட்டி குறைந்த வாடகைக்குக் கொடுக்கும்
திட்டம் உடனடியாக உருவாகிறது. மிகவும் குறுகிய காலத்தில் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டு
வியாபாரிகளுக்கு கடைகளும் கிடைக்கின்றன. மக்கள் தேவையை முன்னிட்டு ஒரு தொண்டன் ஒரு
முதலமைச்சரையே சந்தித்து
ஓமந்தூர் ரெட்டியார் தன் அமைச்சரவையில்
கல்கிக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தயாராக இருந்தும்கூட அதை ஏற்க கல்கி மறுத்தார் எனக்
குறிப்பிடும் அண்ணாமாலையின் பதிவு முக்கியமானது.
சிவாஜி ரசிகர் மன்றம் உதயமான
விதத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதத்தை ஒருவித மனக்குமுறலோடு
குறிப்பிடுகிறார் அண்ணாமலை. திராவிட இயக்கத்தினர் செய்த ஆர்ப்பாட்டம், எதிர்ப்புப்
பிரசாரம் ஆகியவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.
காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் திராவிட இயக்கத்தாரால் பெரிதும் கேவலப்படுத்தப்பட்டார்கள்.
பொதுக்கூட்டங்களிலும் தெருமுனைக்கூட்டங்களிலும் வசைபாடினார்கள். பதிலுக்கு காங்கிரஸ்
தொண்டர்கள் கூட்டம் போட்டால் மக்கள் சேர்வதில்லை. அமைச்சர்களாக இருந்தவர்கள் காலத்துக்கேற்றபடி
பேசத் தெரியாமல் செல்வாக்கு இழந்தார்கள். தன்னலம் கருதாது பாடுபட்ட அண்ணாமலை, ம.பொ.சி.
போன்றோரை அரசு சிறிதும் மதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு தலையில் அடித்தமாதிரி பதில்
சொல்லத் தெரியாத மந்திரிகளும் செய்த சேவைகளை மக்களுக்குத் தோரணம் கட்டி விளம்பரப்படுத்திப்
பேசத் தெரியாத கட்சித் தலைவர்களும் நாளுக்குநாள் காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்கிக்கொண்டே
வந்தார்கள். 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் தொண்டர்களிடையே சோர்வு
ஏற்பட்டது. தமிழ்நாடு முழுதும் சிவாஜி கணேசனுக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ள இளைஞர்களை
ஒன்று திரட்டி, அவர்கள் வழியாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய வலிமையை ஏற்படுத்துவதற்காக
அத்தருணத்தில்தான் ‘அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்’ அமைப்பை சின்ன அண்ணாமலை
உருவாக்கினார். ஒரே ஆண்டில் நாடு முழுதும் பயணம் செய்து பதினைந்தாயிரம் மன்றங்களை உருவாக
வழிவகுத்தார். ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தவும்
செய்தார்.
பொதுக்கூட்டங்களில் தன்னைத்
தாக்கிப் பேசும் சின்ன அண்ணாமலையை தனது மேடையிலேயே
பேசவைத்து கேட்கும் பெரியாரின் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. அவர் அருகில் இருக்கிறாரே
என்றெல்லாம் எண்ணாமல் தனக்குரிய வழியிலேயே அவரைப்பற்றிப் பேசிய அண்ணாமலையின் நடவடிக்கையும்
விசித்திரமாக இருக்கிறது. கூட்டம் முடிந்ததும் வழிச்செலவுக்கு வைத்துக்கொள்ளும்படி
பத்து ரூபாய் கொடுத்தனுப்புகிறார் பெரியார். பிறகு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பெரியோருடன்
இணைந்து படம். எடுத்துக்கொள்கிறவர்கள் பத்து ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்ளலாம்
என்று அறிவிக்கிறார்கள். அருகில் இருந்த அண்ணாமலை பெரியாருடன் ஒரு படத்தை எடுத்துக்கொண்டு
முன்பு பெரியார் வழங்கிய பத்து ரூபாயை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுகிறார்.
முதல்வராக இருந்த அண்ணாதுரையுடன்
மதுரையிலிருந்து சென்னை வரைக்கும் அண்ணாமலையும் ஒரே ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்கிறார்.
தி.மு.க. ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும், தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம்
என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்று பல கேள்விகளை ஒட்டி இருவருக்கும் நீண்ட நேரம்
உரையாடல் நிகழ்கிறது. அண்ணாமலையும் தன் மனத்தில் உள்ளதை ஒளிக்காமல் சொல்கிறார். அண்ணாதுரையும்
அவர் சொல்வதை பொறுமையாக காதுகொடுத்துக் கேட்டுக்கொள்கிறார்.
பெரியார், அண்ணாதுரை சந்திப்புகளும்
உரையாடல்களும் சின்ன அண்ணாமலையின் வெளிப்படையான பேச்சுக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக
உள்ளன. ஆளுக்கொரு விதமான பேச்சு, நேரத்துக்கொரு விதமான பேச்சு என்று நகரும் காலத்தில்
தன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாக அச்சமின்றிப் பகிர்ந்துகொள்ளும் சின்ன அண்ணாமலை ஒரு
முக்கியமான ஆளுமை என்றே சொல்லவேண்டும்.
காங்கிரஸ் என்னும் பேரியக்கத்தோடு
தன் இறுதிமூச்சுவரைக்கும் எவ்விதமான பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய சின்ன அண்ணாமலை
தமிழ்நிலத்தின் மாபெரும் கொடை. தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் முடங்கி இப்போது கிட்டத்தட்ட
அரைநூற்றாண்டு காலம் கடந்துவிட்டது. இன்னொரு அரைநூற்றாண்டுக்குப் பிறகு அந்த இயக்கம்
இன்னும் ஒளி மங்கிப் போகலாம். ஆனால், அப்படிப்பட்ட தருணத்தில்கூட, மீண்டும் மீண்டும்
கண்டெடுக்கப்படுகிற சின்ன அண்ணாமலை போன்ற ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகள் காங்கிரஸ்
இயக்கத்தின் அடையாளமாகவும் சுவடுகளாகவும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
(சொன்னால் நம்பமாட்டீர்கள். சின்ன அண்ணாமலை.
சந்தியா பதிப்பகம். 77, 53 வது தெரு, 9வது அவென்யு, அசோக்நகர், சென்னை -83. விலை. ரூ.160)