Home

Sunday, 19 February 2017

ஒற்றைமரம் - சிறுகதை


ஆழ்கவனச் சிகிச்சைப் பிரிவு வளாகத்தைத் தேடி உள்ளே சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே திரும்பி படிக்கட்டுகளில்
இறங்கி வருவதை நம்பமுடியாமல் ஆச்சரியத்தோடு பார்த்தான் சிவா. அவன் கைப்பேசியில் பொழுதுபோக்குக்காக ஒலிக்கவிட்ட இசை அதிர்ந்தபடியே இருந்தது.  அதை அணைக்காமலேயே நிமிர்ந்து “என்னடா, போன வேகத்துலயே திரும்பிட்ட? சந்திரிகா இல்லயா?என்று சிரித்துக்கொண்டே கேட்டான். ஒருகணம் அவனை முறைத்துவிட்டு முதுகில் தட்டினேன். 


பதில் சொல்வதற்குள் “ஏன்டா உள்ள உடலியா?என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான். நான் அவசரமாக தலையை அசைத்தபடியே “மத்தியானமே டிஸ்சார்ஜ் வாங்கிட்டும் போயிட்டாங்களாம்டாஎன்று சொன்னேன். அதைக் கேட்டு அவனும் ஏமாற்றத்துக்கு ஆளானான். உடனே வேகமாக, “அப்பாவ ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்கன்னு காலையில சொன்ன பொண்ணுக்கு வேற எடத்துக்கு போறம்ன்னு சொல்லத் தெரியாம போயிட்டுதா?  நீ கூப்பிடு மொதல்ல அவள, நானே பேசறேன் “ என்று சத்தம் போட்டான்.  அதற்குள் நான் அவள் எண்களை அழுத்திவிட்டிருந்தேன். ஆனால் மறுகணமே இணைப்பு அறுந்தது. அவள் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. அறிவிப்பு வாசகத்தை அவனும் கேட்கும்பொருட்டு அவன் காதருகே கைப்பேசியைப் பிடித்தேன்.
“இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்டா...முணுமுணுத்தபடியே தன் கைப்பேசியிலிருந்து ஒருமுறை தொடர்புகொண்டான் சிவா.  அதுவும் அதே வாசகத்தையே சொன்னது. சலிப்போடு இணைப்பைத் துண்டித்துவிட்டு “சரி, வண்டில ஏறு, கடற்கரைக்காவது நேரத்தோட போய் சேரலாம். இந்திப்படத்து ஷூட்டிங் ஒன்னு நடக்குதாம். கரினா கபூர் டான்ஸ்னு சொன்னாங்க. அதயாவது பாக்கலாம். வாஎன்றான். நான் பதில் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தபடி நின்றிருந்தேன். ஒருகணம் சந்திரிகாவே கூப்பிடமாட்டாளா என்று தோன்றியது. அந்தத் தாமதத்தையும் தயக்கத்தையும் கண்டு அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.           “உனக்காகத்தான் ஜி.எச்.க்கு வந்தது. இப்ப நான் சொல்றத நீ ஒழுங்கா கேளுஎன்று சொன்னபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான். அதே கணத்தில் அழுதுஅழுது சிவந்த கண்களுடன் ஒரு அம்மா கும்பிட்ட கைகளோடு பக்கத்தில் வந்து “ மூணு பாட்டில் ரத்தம் ஓணும்ன்னு சொல்றாங்க ஐயா. இங்க ரத்தம் எங்க கெடைக்கும்ய்யா?என்று அப்பாவியாய்க் கேட்டார்.
பார்த்ததுமே அவர் தோற்றம் என்னை நிலைகுலையவைத்தது.  கந்தலான புடவை. அழுக்குத்தலை. தோல் சுருங்கிய முகம். சிவாவின் தோளை அழுத்தியபடி “பொறுமையா சொல்லுங்கம்மா, என்ன ஓணும் ஒங்களுக்கு?என்று கேட்டேன். அந்த வார்த்தையை அந்த அம்மாவின் மனம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. சொன்னதையே அழுதபடி மீண்டும் மீண்டும் சொன்னபடியே இருந்தார். இங்க பாருங்கம்மா, இங்க பாருங்கம்மாஎன்று நானும் பல முறை பேசத் தொடங்கி அவருடன் உரையாட இயலாமல் நிறுத்த வேண்டியதாயிற்று. வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கிய சிவா, சட்டென அவரைத் தாக்கும் விதத்தில் கைகளை நீட்டி “ரத்தம் என்ன இட்லியா தோசையாமா? ஓணும்ன்னு கேட்டதும் கடையில குடுத்துருவாங்களா?என்று உரக்கச் சத்தமிட்டான். அந்த வளாகமே ஒருகணம் உறைந்து எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு விலகியது.  எனக்கும் அவன் ஏன் அப்படி கத்தினான் என்று புரியவில்லை.  மற்றவர்கள் பார்வை கூசவைத்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் சட்டென அந்த அம்மா நிதான நிலைக்குத் திரும்பி அழுகையை நிறுத்தினார். அந்த இடைவெளியில் அவரைப் பார்த்து “சொல்லுங்கம்மா, யாரு நீங்க? எதுக்கு ரத்தம் ஓணும்?என்று கேட்டான் சிவா.
“காலங்காத்தால கோர்க்காட்டுல மொத பஸ்ஸ புடிச்சி என் பொண்ண இட்டாந்து சேத்தனுங்கய்யா. ரெண்டு மூணு நாளா வவுத்துவலியால துடியா துடிச்சா. சரியா ஒன்னுக்கு பிரியலை. முள்ளு குத்தறாப்புல இருக்குதும்மான்னு ஒரே ஒப்பாரி. அதுக்காகத்தான் வந்தம். வந்த கையோட ஊசிலாம் போட்டாங்க. அப்பறம்தான் ஒன்னுக்கு பிரிஞ்சிது. ரெண்டுமூணு படி அளவுக்கு போயிட்டே இருந்திச்சி. அதுக்கப்பறம்தான் புள்ள அசந்து தூங்கனா. சாயங்காலமா இட்டுகினு போயிடலாம்ன்னு மொதல்ல சொன்னாங்க. திடீர்னு இப்ப ஒன்னுக்கு போவும்போது ரத்தம்ரத்தமா போவுது. எனக்கு கையும் ஓடல. காலும் ஓடல. பட்டிக்காட்டு முண்டம் நானு. எனக்கு என்ன தெரியும்யா? ரத்தம் ஓணும் ஏற்பாடு செய்யுன்னு அந்த கவுனுபோட்ட பொண்ணு வெரட்டுவெரட்டுனு வெரட்டுது. அவ வேற பேச்சு மூச்சி இல்லாம கெடக்கறா...
தொடர்ந்து எதுவும் பேசமுடியாமல் பொங்கிப்பொங்கி அழத் தொடங்கினார்.  குறுக்குக் கேள்வி கேட்டதும் சொன்னதையே மறுபடியும் சொல்லத் தொடங்கினார். கிட்டத்தட்ட பிரக்ஞை தப்பிய நிலையிலேயே காணப்பட்டார் அவர். எலும்பும் தோலுமான அவர் கோலமும் இடுங்கிப்போன கண்களும் சங்கடப்படுத்தின. “ரத்தம் வேணும்ன்னு கேட்டவங்க யாரு? வந்து காட்டுங்க மொதல்ல... என்றபடி அவரை வளாகத்துக்குள் அழைத்துச் சென்றோம். அவர் குழந்தைபோல தலையசைத்தபடி முன்னால் நடந்தார். வளாகத்துக்குள்ளேயே பல திருப்பங்களில் திரும்பி ஒரு பெரிய கூடத்துக்குள் அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்த்துமே “என்னம்மா, ரத்தம் ஏற்பாடு செஞ்சிட்டியா? என்று சத்தம் போட்டாள் ஒரு செவிலி. கடூரமான அவள் குரல் கேட்கவே வெறுப்பாக இருந்தது. நான் இடையில் புகுந்து, அந்தச் செவிலியிடம், “வெறும் ரத்தம் ஓணும்ன்னு சொல்லி அனுப்பனா பட்டிக்காட்டு ஜனங்க என்னம்மா செய்யும்? அது என்ன மளிகைக்கட சரக்கா? என்ன குருப்பு, எங்கெங்க கெடைக்கும்ன்னு விவரம் சொல்லி அனுப்ப கூடாதா?என்று கேட்டேன். அந்தச் செவிலி என்னை ஒரு துரும்புக்குக்கூட மதிக்கவில்லை. நான் சொன்ன எதையுமே காதில் வாங்காதவளாக “சேரும்போது அனாத கினாதன்னு பொய்சொல்லி சேத்துட்டு, இப்ப மெரட்டறதுக்கு ஆளுங்கள கூட்டாறியா? அவ்ளோ பெரிய செல்வாக்கு உள்ள ஆளா நீ? இது என்ன உங்க அப்பன் ஊட்டு ஆஸ்பத்திரியா?என்று அந்த அம்மாவைப் பார்த்துச் சரமாரியாக வசைபொழிந்தாள். “இங்க பாருங்க நர்ஸ், அவுங்க யாரோ, நாங்க யாரோ, பாவம், வயசானவங்க வாசல்ல தடுமாறிட்டு நின்னாங்களேன்னுதான் ஒத்தாசைக்கு வந்தம். அதுக்கு ஏன் அவங்கள போட்டு திட்டறிங்க? என்ன குருப்பு ரத்தம்ன்னு ஒரு குறிப்பு கூட குடுக்காம அனுப்பறது எந்த விதத்துல  நாயம்? யாரு உங்க டூட்டி டாக்டர்? நான் பேசறேன் அவுர்கிட்ட. அவரு வந்து சொல்லட்டும் எது ஞாயம் எது தப்புனு?.. கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று நினைத்தாலும் கடைசிச் சொற்களில் அழுத்தம் விழுந்துவிட்டது.  ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் அவள் வேகமாக நடந்து ஒரு பதிவேட்டைப் புரட்டிப் பிரித்து ரத்தத்தின்  பிரிவை எழுதிக்கொண்டு வந்த குறிப்புத்தாளை நீட்டிவிட்டு முறைத்துக்கொண்டே போனாள்.
பி பாசிட்டிவ்டா சிவா
அவன் தலையசைத்தபடி “யாருமா ஒங்க பொண்ணு?என்று அவரிடம் கேட்டான். அந்த அம்மா படுக்கைகளுக்கு நடுவில் புகுந்து சென்று சுவரோரமாக பாயில் கிடத்தப்பட்டிருந்த ஒரு பெண்ணைக் காட்டினார். முறுக்கிப் போட்ட துணிபோலத் துவண்டு கிடந்தாள் அந்தப் பெண். வயிறு உப்பியிருந்தது. அந்த அம்மா குனிந்து அவள் காதருகே “பூரணி பூரணிஎன்று மூன்று நான்கு தரம் அழைத்தாள். அவளால் கண்களைத் திறக்க இயலவில்லை. சிவா அந்த அம்மாவை எழுப்பி வெளியே அழைத்துவந்தான்.
கடற்கரைப் படப்பிடிப்பைப் பார்க்கும் ஆவல் முற்றிலும் மனத்திலிருந்து கலைந்துவிட்டது. மனம்முழுதும் அந்த அம்மாவின் தோற்றமே நிறைந்திருந்தது. வெளியே வரிசையாக பல தேநீர்க்கடைகள் இருந்தன. ஒரு பூவரச மரத்தடியில் இருந்த கடையின் முன்னால் வந்து நின்றோம். ஏதாச்சிம் சாப்படறிங்களாம்மா? என்று அந்த அம்மாவிடம் கேட்டான் சிவா. அவர் தலையை அசைத்து வேகமாக மறுத்தார். வற்புறுத்தி ஒரு தேநீர் மட்டும் வாங்கித் தந்தோம். “பயப்படாதிங்கம்மா. ஒங்க பொண்ணுக்கு சீக்கிரமாவே கொணமாயிடும். ரத்தத்துக்கு தேவையான ஏற்பாட்ட நாங்க பாத்துக்கறம்என்று நான் சொன்னபோது அவர் ஒரு பொம்மைபோல தலையை மட்டும் அசைத்துக்கொண்டார். அப்போது கடையின் பின்பக்கத்திலிருந்து லுங்கியும் கட்டம் போட்ட சட்டையும் அணிந்த ஒருவன் பக்கத்தில் இருந்த பெஞ்சில் கிடந்த தாளைப் பிரித்துப் படிப்பதுபோல தலைகுனிந்த வாக்கில் “என்ன சார்? ரத்தம் கித்தம்னு காதுல உழுது. என்ன குருப்பு சார்? எத்தன யூனிட்டு வேணும், எல்லாம் நான் பாத்துக்கறேன், சொல்லு சார்என்று கேட்டான்.
அந்தச் சூழல் முற்றிலுமாக எனக்குப் புதுசாக இருந்தது. நான் திகைத்துப்போய் சிவாவைப் பார்த்தான். அவன்தான் “ பி பாசிட்டிவ். மூணு யூனிட்என்றான். பற்களுக்கிடையே குச்சியால் துழாவியபடியே “ஐய, இதுக்கா இவ்வளோ வெசனம்? பாட்டிய அழவேணாம்னு சொல்லு சார். எனக்குலாம் இது சப்ப மேட்டரு சார்.  எல்லாத்தயும் நான் பாத்துக்கறேன்என்றான் அவன். அவன் பார்வை மட்டும் எங்கள் பக்கம் திரும்பவில்லை. நாங்கள்தான் அவனைப் பார்த்துப் பேசினோம். அதற்குள் அவன் எச்சரிக்கையாகி, “ என்ன பாத்துப் பேசாத சார். அந்த அம்மாகிட்ட பேசறமாதிரி பேசு சார்என்று திசைதிருப்பிவிட்டான். எப்படிப்பா முடியும்? என்று திகைப்பு நீங்காதவனாகக் கேட்டேன் நான்.
“டெலிவரி எப்ப வேணும் சார்? அத சொல்லு சார் மொதல்ல. இப்பவா இல்ல காலையிலயா?
“உள்ள இப்பவே வேணுமின்னுதான் சொல்றாங்க. தொக என்னன்னு சொல்லவே இல்லயே
“விக்கற வெலவாசி என்னன்னு ஒங்களுக்கே தெரியும் சார். ஒரு பவுன் நகை இருபதாயிரம் போவுது. எல்லாம் ராக்கெட் வேகம்தான். ஒரு யூனிட்டுக்கு மூவாயிரம் போட்டுக்குங்க. அதுக்கு மேல ஒங்க பிரியம்
“மூவாயிரமா?
“அவசரம்னா ஐயாயிரம் கூட சொல்லுவம். உங்கள பாத்தா பாவமா தெரியுது. அதான் மூவாயிரம் சொல்றேன். “
சுத்தமா இருக்குமா?
எரநூறு பெர்செண்ட் கேரண்டி சார். எல்லாமே ஆஸ்பத்திரி சரக்குதான சார். உள்ள இருக்கற சரக்கு வெளிய வரும்., வெளிய இருக்கற சரக்கு உள்ள போவும்..
“அந்த அம்மாவுக்குதான் வேணும். அவுங்ககிட்ட ஒன்னும் இல்ல. நாங்கதான் பொரட்டி குடுக்கணும். பொருத்தமான ஒரு வெலய சொல்லுங்க
ஐய, பேரம் பேச இது என்ன காய்கறி வியாபாரமா சார்? இந்த கையில் சரக்கு, அந்த கையில பணம். வார்ட்பாய்லேருந்து டாக்டர்ங்கவரைக்கும் இதுல பங்கு வச்சி குடுக்கணும் நானு. அதுக்கு மேல எங்களுக்கு என்ன கோடிகோடியாவா நிக்க போவுது?
முதல்முறையாக அவன் என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு பெட்டிக்கடைக்குள் சென்று பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். இரண்டுமூன்று தரம் இழுத்து புகையைவிட்ட பிறகு “ராத்திரி எட்டரை வரைக்கும் அதோ அந்த பாதாமி மரத்துங்கிட்டதான் உக்காந்துகினு பெராக்கு பாத்துனிருப்பேன். வேணுமின்னா சொல்லு சார்”   சொல்லிக்கொண்டே  லுங்கியை அவிழ்த்து ஒரு உதறு உதறிவிட்டு மீண்டும் கட்டியபடி நடந்து போனான்.
அந்த அம்மா அழுத கண்களோடு எங்களைப் பார்த்து “தர்மாஸ்பத்திரினு சொல்றாங்க. அப்பறம் ஏன்யா தலைக்கு தலை இப்படி பேசறாங்க?என்றாள். “அது அப்படித்தாம்மாஎன்றபடி சிவா “ பேசாம ஏடிஎம்ல பணம் எடுத்துக் குடுத்துட்டு ப்ளட்ட வாங்கிரலாம்டாஎன்றான். நான்தான் அவனைத் தடுத்து நிறுத்தினேன். “இருடா இரு. அவசரப்படாத. வேற ஏதாச்சிம் முயற்சி செஞ்சி பாக்கலாம்என்று அவன் தோளை அழுத்தினேன்.
சுற்றுச்சுவரில் பெரிய எழுத்துகளில் எழுதி ஒட்டப்பட்டிருந்த முதல்வருக்கான வாழ்த்துச் சுவரொட்டிக்கு அருகில் சில ரத்த வங்கிகளின் தொடர்பு எண்களைக்கொண்ட பட்டியல் சின்னதாக ஒட்டப்பட்டிருந்த்தைக் கவனித்தேன். சிவாவைத் தொட்டு அதைப் படிக்கும்படி சொன்னேன். புதுச்சேரியைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட ரத்த வங்கிகள் இருப்பதை அப்போதுதான் முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன். மிகவும் நம்பிக்கையோடு முதல் வங்கியின் எண்களை கைப்பேசியில் தொட்டு அழுத்தினேன். மணியடிக்கும் ஓசை கேட்டது. ஆனால் பதில் இல்லை.  அடுத்த எண்ணைச் சுழற்றினேன். அந்த இணைப்பு ஏதோ உரையாடலில் இணைந்திருந்தது. அதற்கடுத்த எண்ணில் வெகுநேரத்துக்குப் பிறகு யாரோ ஒரு பெண்மணி பேசினார். எங்களுக்குத் தேவையான ரத்த வகை இருப்பில் இல்லை என்று சொன்னார். பத்து எண்களிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். எங்களுக்குச் சாதகமான தகவல் எங்கும் கிடைக்கவில்லை. ஏறத்தாழ அரைமணிநேர முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. என்ன செய்யலாம் என்று குழப்பத்தோடு திரும்பியபோதுதான் பாதுமை மரத்தடியிலிருந்த லுங்கி போட்ட இளைஞன் எங்களையே பார்த்துக்கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கவனித்தேன். நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதையே எங்களால் தாங்கிக்கொள்ள இலயலவில்லை.
நம்ம பசங்ககிட்ட ராத்திரி ஒரு ரவுண்டு பேசிட்டு முடிவெடுக்கலாம் சிவா என்று பொறுமையாகச் சொன்னேன் நான். அவன் மனத்தளவில் லுங்கிக்காரனிடமிருந்து வாங்கிவிடலாம் என்கிற மனநினிலையில் இருந்தான். நான்தான் மெதுவாக “ப்ளாக் மார்க்கெட்ல வேணாம் சிவாஎன்றேன். அவன் என்னை முறைத்தான்.
எங்கும் இருள் கவிந்துவிட்டது. மணி என்ன ஆச்சி தம்பி?என்று கேட்டார் அந்த அம்மா. அவள் விரல்கள் முந்தானைத் துணியில் முடிச்சு போடுவதும் பிரிப்பதுமாக இருந்தார். நான் திரும்பி “ ஏழே முக்கால்மா” என்று சொல்வதற்குள் அந்த லுங்கிக்காரன் எங்களுக்கு அருகில் வந்துவிட்டான். “எத்தினி யூனிட் வேணும் சார். சொன்னாதான சார் நாங்களும் ரேட் சொல்ல முடியும்?என்றான். “ரெண்டே முக்காலுக்கு முடிச்சிக்கலாம் சார். உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம். சரக்கோட நீங்க போயிட்டே இருக்கலாம். சீக்கிரமா யோசிசிச்சி சொல்லுங்க...”  என்று சொல்லிக்கொண்டே திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டான். சிவா என்னை நெருங்கி, “சேது, இப்பவாவது நான் சொல்றத கேளுஎன்றான். “இதுக்கெல்லாம் எந்த ஷ்யுரிட்டியும் இல்லடா. எச்.ஐ.வி, ஹெபிட்டைடஸ்னு உலகத்துல ஆயிரக்கணக்கான பிரச்சன, இந்த நிலைமையில நாமளே இதுல போயி மாட்டணுமா?என்று நான் முணுமுணுத்ததை அவன் பதிலே சொல்லாமல் கேட்டுக்கொண்டான். “நீயும் ஒன் தத்துவமும்” என்று முணுமுணுத்தபடியே தலையில் அடித்துக்கொண்டான். அவனுக்குப் பதில் சொல்லத் திரும்புவதற்குள் என் பொண்ணுக்கு ரத்தம் கெடைச்சிடுமாய்யா?”  என்று பரிதாபமான முகத்தோடு அந்த அம்மா கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.
“இவுங்க அநியாய வெல கேக்கறாங்கம்மா. என் கூட்டாளிங்க சில பேருங்க இருக்காங்க. எல்லாருக்கும் தகவல் சொல்லி நாளைக்கு இங்க வரவழச்சிடலாம். அவுங்க எல்லாருமே ரத்தம் குடுப்பாங்க. நீங்க எதுக்கும் கவலப்படவேணாம்மா. உங்க பொண்ணுக்கு ஒரு ஆபத்தும் வராது
சிவா என் கையைப் பிடித்து அழுத்தினான். “ இந்த மாதிரி விஷயத்துல நேரத்த வளத்தக்கூடாது சேது. அந்த நர்ஸ்கிட்ட போயி ரத்தம் இப்பவே வேணுமா, காலையில குடுத்தா பரவாயில்லயானு ஒரு வார்த்த கேட்டுனு வா. போ. அப்பதான் மனசுக்கு நிம்மதிஎன்று தீர்மானமான குரலில் என்னைச் செலுத்தினான். என்னால் அதைத் தட்டமுடியவில்லை. அந்தக் கூடத்தை நோக்கிச் சென்றேன். அவள் அங்கே இல்லை. அடுத்த அறை, அடுத்த அறை என எங்கெங்கோ தேடும்படி ஆனது. கடைசியில் அவளை ஒரு இடத்தில் பார்த்து விவரம் கேட்டேன். “இப்ப குடுத்தாலும் டாக்டரு காலையிலதான் பாப்பாரு. காலையிலயே குடுத்தா போதும்என்றாள். போன வேகத்தில் திரும்பி சிவாவிடம் தகவலைச் சொன்னேன்.
அந்த அம்மா எங்களோடு நடந்து வந்தார். ராத்திரி எப்படிம்மா தங்குவிங்க? என்று கேட்டேன். “எனக்கென்னய்யா? காஞ்ச ஓலதான நானு. ஆஸ்பத்திரில உள்ள உட்டாங்கன்னா பொண்ணு கூட தங்கிக்குவேன். இல்லன்னா இப்படியே ஒரு பெஞ்சில படுத்து ஏந்துருவேன்”  என்றார் அவர். நூற்றுக்கணக்கான மக்கள் அப்படித்தான் அங்கே தயாராகிக்கொண்டிருந்தார்கள்
“இங்கலாம் வேணாம்மா. பேசாம எங்க ஊட்டுக்கு வந்துடுங்க.  காலையில ரெண்டு பேருமா சேந்து வந்துரலாம்”   சிவாவின் வார்த்தைகளைக் கேட்டு அந்த அம்மா மனம் உருகிவிட்டார். “ என் பொண்ணு பொழைக்கறதுக்காக இவ்வளவோ பாடு படறதே பெரிய விஷயம்யா. இது போதும் சாமி. எத்தன ஜென்மம் எடுத்தாலும் இந்த நன்றிய என்னைக்கும் என் நெஞ்சி மறக்காதுயா.அம்மா மறுபடியும் அழத் தொடங்கிவிட்டார். 
சட்டென பேச்சைத் திசை திருப்பும் விதமாக “அது சரி, என்ன காயலா  உங்க பொண்ணுக்கு? ஏன் இப்பிடி ஆச்சி? முன்ன பின்ன ஆஸ்பத்திரில காட்டலியா?என்று கேட்டேன்.
“அவளுக்கு   எந்த காயலாவும் இல்லய்யா. பச்சைக்கிளியாட்டமா இருப்பாய்யா என் பொண்ணு. பறந்து பறந்து வேல செய்வா. சுறுசுறுப்புல அவள யாராலயும் அடிச்சிக்கமுடியாது.“ வெளிச்சத்தை உமிழ்ந்தபடி செல்லும் நான்கு சக்கர வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி சொன்னார்.
அப்பறம் ஏன் இப்படி ஆச்சி?
ஒருகணம் ஆழ்ந்து மூச்சு வாங்கினாள். “என் ஊட்டுக்காரன் ஒரு பொறம்போக்கு சூதாடிய்யா. வில்லினூருல வெட்டுக்கிளி சுந்தரம்னு ஒரு ரவுடி இருந்தான் தெரிமா? அவனுக்கு இவன் கூட்டுக்காரன். ரெண்டு வருஷத்துக்கு மின்னால அவன் ஊட்டுல யாரோ வெடிகுண்டு வச்சி அவன தீத்துக்கட்டிட்டாங்க. அந்த நாய் கூட இதுவும் போய் சேந்துபோச்சி. எல்லாம் சகவாச தோஷம். ஒரு பொட்ட புள்ளய வச்சிகினு ஆதுபாது இல்லாம ஒத்தமரமா நின்னுட்டன். அங்க இங்க களயெடுத்துதாம் கஞ்சி குடிச்சம். எட்டாம் கிளாஸ் வரிக்கும் படிச்ச பொண்ணு அது. அதுக்கு மேல படிக்கவைக்க எனக்கு சமுத்து இல்ல. ஊட்டோடயேதான் வச்சிருந்தன்.  இல்லாத கொடுமைய நினைச்சி, வில்லினூருல ஒரு ரெடிமேடு கடையில பசங்க கூட வேலைக்கு போனா. ஒரு நாளைக்கி அம்பது ரூபா கூலி. வயசுப் பொண்ண வெளிய அனுப்பறமேன்னு நெஞ்சி அடிச்சிக்காத நாளே இல்ல. என்ன செய்யறது சொல்லுய்யா. என் தலையில அந்த ஆத்தா எழுத எழுத்து அப்பிடி. புதுசாவா மாத்தி எழுத முடியும்?அந்த அம்மாவுக்கு தொண்டை அடைத்தது. அவர் கட்டுப்பாட்டை மீறி கண்களில் நீர் வழிந்தது. சிறிது நேரம் நிறுத்தி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். நீர் கோர்த்துக்கொண்ட மூக்கைச் சிந்தி வீசினாள்.
”திடீர்னு ஒருநாளு ராத்திரில பேயறஞ்சாப்புல வந்து நின்னா. துணிங்க ஒரு நெலையில இல்ல. கிழிஞ்சி கந்தலா தொங்குது.  ஒடம்புல ஒரே புழுதி. ரத்தம். கேவி கேவி அழுவறாளே தவுத்து பேச்சே வரல.  என்னாடி பூரணி என்னாடி பூரணின்னு உலுக்கறன். ஒரு வார்த்த அவளால பேச முடியலை. நாம கேக்கறதே அவ நெஞ்சுக்குள்ள போவலை. பூவாட்டம் என் பொண்ண வச்சிருந்தேன். எந்த முண்டச்சி பெத்த தறுதலைங்களோ நான் பெத்த அல்லித்தண்ட ஆழும் பாழும் அவ்வாறும் சிவ்வாறுமா ஆக்கிட்டானுங்க. ஆதரவு இல்லாத சிறுக்கி நானு. யாருகிட்ட போய் நாயம் கேக்கறது சொல்லு. அந்த ஐனாரப்பந்தான் எல்லாத்துக்கும் கூலி குடுக்கணும்.” எச்சிலைக் கூட்டி விழுங்கும்போது அந்த அம்மாவின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.  
”சுடுதண்ணிய வச்சி அவ உடம்புல ஊத்தி துணிமாத்தி உட்டு, கஞ்சிய வச்சி குடிடின்னு குடுத்தன். புள்ள எறவாணத்தயே  பாத்துகினே மொணங்கினா. என் பெத்த வயிறு பத்திகினு எரிஞ்சிதுய்யா. பச்ச புள்ளயா நெனச்சி ஒவ்வொரு வாயா ஊட்டிஉட்டேன். வெடிஞ்ச பிறகு ஊரு வைத்தியச்சிய கூட்டாந்து பாரும்மான்னு காட்டனேன். நாத்து உட்ட பாத்தில நாலஞ்சி எருமாடுங்க ஏறி மேஞ்சிட்டு போயிடுச்சிடின்னு தலயிலயே அடிச்சிக்கினா அவ. உள்ளுக்கும் வெளிக்கும் மருந்து குடுத்துட்டு போயிட்டா அவ. ஆனா புள்ள ஒரு நெலைக்கு திரும்பவே இல்ல. நானும் இன்னிக்கு சரியாய்டுவா நாளைக்கு சரியாய்டுவான்னு ஒரொரு நாளும் அந்த தெய்வத்துகிட்ட மொறயிடாதா நாளே இல்ல. புள்ளைக்கு நிதானமே புரியலை. அம்மான்னு வாய் நெறய கூட்டு மூணு மாசமாச்சி. கூட ஒரலு ஒலக்கயாட்டம் அவளும் ஒரு பொருளா ஊட்டுக்குள்ள கெடக்கறா. ஏதோ கண்ணுமுன்னால புள்ள இருக்காளேன்னு நானும் மனச தேத்திகினு கெடந்தேன். ரெண்டுமூணு நாளா புள்ளைக்கு இப்படி ஒரு ரோதண. என் புள்ளைக்கு நான் குடுத்த பாலெல்லாம் ரத்தமா போவறத கண்ணால பாக்கணும்னு அந்த ஆத்தா எழுதனத யாரு மாத்த முடியும் சொல்லு?
அவரைத் தேற்றும் வழி தெரியவில்லை. “ரத்தத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு நாளைக்கு காலையில வரோம்மா. மனச தேத்திகிட்டு அமைதியா இருங்கஎன்று எழுந்தோம்.  சிவா அவர் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தான். “பட்டினி கெடந்து ஒடம்ப கெடுத்துக்காதிங்கம்மா. ஏதாச்சிம் வாங்கி சாப்புடுங்கஎன்றான். அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். பிறகு சிவாவே ஒரு பிரட் பாக்கெட் வாங்கிவந்து அவர் கையில் வைத்தான்.
வண்டியை நெருங்கி ஸ்டார்ட் செய்யும்போது எதிர்பாராதவிதமாக அந்த லுங்கிக்காரன் வந்து நின்றான். “என்ன சார், பதிலே சொல்லாம கெளம்பிட்ட? வேணுமின்னா ரெண்டரை போட்டுக்கோ. வந்து வாங்கினு போ சார் என்று அழைத்தான். “அதெல்லாம் வேணாம்யா. ஏற்பாடு ஆயிடுச்சி. எடுத்து வரத்தான் போறம்என்று அழுத்திச் சொன்னேன். “ அப்பறம் ஒங்க இஷ்டம் சார்என்று உதட்டைப் பிதுக்கியபடி சென்றுவிட்டான்.
வீட்டுக்கு வந்த்தும் அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அந்தப் பரிதாபக்கதையைக் கேட்டு அவர் மனம் உடைந்து போனார்.  உணவை முடித்துக்கொண்டு நான் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பி பாசிட்டிவ் ரத்தப்பிரிவைக் கொண்டவர்களின் பட்டியலை மின் அஞ்சலில் பெற்றுக்கொண்டேன். மொத்தம் பதினேழு பேர்கள் இருந்தார்கள். எல்லாரிடமும் பேசினேன். பாதிக்கும் மேற்பட்டவர்கள் ரத்தம் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அவர்களிடமிருந்து நான் ஐந்து பேர் கொண்ட பட்டியலை உருவாக்கி, அவர்களை காலை ஏழு மணிக்கு தயாராக இருக்கும்படி சொன்னேன். இரண்டு பேரை அழைத்துவரும் பொறுப்பை சிவா ஏற்றுக்கொண்டான். மூவரை அழைத்துவரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதற்குப்பிறகுதான் தூங்கச் சென்றேன். இந்தப் பரபரப்பில் சந்திராகாவோடு பேச நினைத்ததை முற்றிலுமாக மறந்து போனேன்.
தூங்கவே முடியவில்லை. கெட்ட கெட்ட கனவுகள். யோசனைகள். அதிகாலை நேரத்தில்தான் எப்படியோ என்னையறியாமல் தூங்கி விட்டிருந்தேன். “என்னடா, ஆஸ்பத்திரி அது இதுன்னு சொன்ன? இப்படி தூங்கிட்டியேஎன்று அம்மாதான் எழுப்பிவிட்டார். பரபரப்போடு எழுந்து கிளம்பினேன்.
திட்டமிட்டபடி எல்லோரும் மருத்துவமனை வளாகத்துக்குள் சேர்ந்துவிட்டோம். ஆனால் நாங்கள் நேற்று சொன்ன இடத்தில் அந்த அம்மாவைக் காணவில்லை. அதுவே என்னைப் பதற்றத்தின் ச்சத்துக்குத் தள்ளியது. சுற்றுமுற்றும் தேடினோம். எந்த இடத்திலும் இல்லை. அருகில் இருந்த கோயிலுக்குள் சென்று பார்த்தோம். இல்லை. பிறகு நேற்று பார்த்த கூடத்துக்கும் சென்று தேடினோம். அங்கும் இல்லை. அவசரமாக பக்கத்தில் இருந்த நோயாளிகளிடம் விவரம் கேட்டோம். அவர்களுக்கும் தெரியவில்லை. அந்த செவிலியைத் தேடினோம். அவள் முகமே தென்படவில்லை. ஒரே ஒரு அம்மா மட்டும் எங்களை அருகில் அழைத்து தணிந்த குரலில் “ராத்திரி அந்த பொண்ணு செத்துடிச்சி தம்பி. கெடங்குக்குத்தான் கொண்டும் போயிருப்பாங்கஎன்றார். என் உடம்பின் ரத்தமெல்லாம் வற்றிவிட்டதுபோல ஒருகணம் துவண்டு போனேன். நான் சிவாவைப் பார்த்தேன். ஒருகணம் “ஒழுங்கா நான் சொன்னத நேத்து கேட்டிருக்கலாமில்ல” என்று சீறினான். பிறகு தானாக அடங்கி, என் தோளைத் தொட்டு அழுத்தினான். “சரி சரி வா, அந்தப் பக்கமா போய் பாப்போம்என்றான். பிணக்கிடங்கின் திசை விவரம் கேட்டபடி வளாகத்துக்குள் அலைந்தோம். சுற்றுச்சுவர்களின் மூலையில் கிடங்கு இருந்தது. பக்கத்தில் ஒரு எலுமிச்சை மரத்தடியில் அந்த அம்மா உட்கார்ந்திருந்தார். எங்களைக் கண்டதும்  அவர் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார். “ என் பூரணி போய்ட்டாய்யா, என் செல்லம் என்க்கிட்ட பேசாமயே போய்ட்டாய்யா.. அம்மானு ஒரு வார்த்த கூட சொல்லாம போய்ட்டாய்யா. வலி வலினு மூணு மாசமா துடிச்ச துடிப்புலாம் ஒரே நிமிஷத்துல பொட்டுனு அடங்கிடுச்சிய்யா. புள்ள அந்த உலகத்துலயாவது நிம்மதியா இருக்கட்டும்”  என்றார். நாங்கள் அந்த அம்மாவின் அருகில் சுற்றி உட்கார்ந்தோம்.
“ராத்திரி பூரா அவ கூடதாம் படுத்துங் கெடந்தன்யா. என்னன்னே தெரியலை,. ராத்திரில ஒரே ரத்தப்போக்கு. நிக்கவே இல்ல பெரிய டாக்டரு வந்து ஊசிலாம் போட்டாரு. ஆனா உயிர்த்தண்ணிலாம் ரத்தமா போயிகினே இருந்தா யாருதான் என்ன செய்ய முடியும்? நமக்கு குடுப்பன அவ்வளோதான்.”  வானத்தையே சிறிது நேரம் வெறித்தபடி பார்த்திருந்துவிட்டு அமைதியானார் அந்த அம்மா. “அம்மா.... அடுத்து....என்று நான்தான் பேச்சை மாற்றினேன்.
“ஐயா, நான் பெத்த புள்ளயா நெனச்சி ஒங்கள கேட்டுக்கறேன். திக்கில்லாத அனாத சிறுக்கி நானு. எனக்குனு யாரும் இல்ல. நீங்களா பாத்து எது செஞ்சாலும் சரிய்யா. ...கோர்க்காடு வரிக்கும் கொண்டும்போயி காரியம் செய்ற சக்தி எனக்கு கெடையாதுய்யா. இங்கயே எங்கனா சுடுகாட்டுல எரிக்கறதுக்கு ஏற்பாடு செய்ங்க. ஒங்களுக்கு கோடி புண்ணியம்
சிவாவும் இன்னொருவனும் கிடங்குக்குள் சென்றார்கள். நானும் இன்னொருவனும் அம்மாவுக்கு அருகில் நின்றோம். ஒருவன் அவசரமாக வெளியே சென்று ஒரு பெரிய மாலை வாங்கிவந்தான். நான் அமரர் ஊர்திக்கான தொகையைச் செலுத்தி வாகனத்தை அழைத்து வந்தேன். சிவா இறப்புச் சான்றிதழுக்கான நடைமுறைகளைப் பார்த்தான். எதிர்பாராத கணத்தில் லுங்கிக்காரன் முன்னால் வந்து நின்றான். “ பூடிச்சா சார்? அப்பவே சொன்னனே சார், கேட்டியா? பணத்துக்கு பால்மாறிட்டியே சார்? எதோ கூட கொறச்சலா குடுத்து ரத்தம் வாங்கி ஏத்தியிருந்தா காப்பாத்தியிருக்கலாமேஎன்றான். நான் அவனை முறைத்தேன். அவன் முனகிக்கொண்டே போனான்.
அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கருவடிக்குப்பம் மின் தகன இடத்துக்கு வந்துவிட்டோம். அந்தப் பெண்ணின் உடல் தரையில் இறக்கி வைக்கப்பட்டது.  நிலையத்தில் கட்ட வேண்டிய தொகையைக் கட்டிவிட்டு வந்தான் சிவா. அந்த அம்மா குனிந்து அந்தப் பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுத்தார். பிறகு துவண்டிருந்த உள்ளங்கையைப் பிரித்து ஒரு முத்தம் கொடுத்தார். அருகில் இருந்த முறத்திலிருந்த அரிசியை அள்ளி அவள் உதடுகளின் மீதும் உள்ளங்கையிலும் வைத்தார்.
பாத்துக்குங்கம்மா
உடல் மின் உலைக்குச் சென்றதும் அந்த அம்மாவை வெளியே அழைத்து வந்து அரசமரத்தடியில் உட்காரவைத்தோம். என்ன பேசுவது என்று யாருக்கும் புரியவில்லை.  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம். வளாகத்திலேயே சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருந்த மூன்று பசுமாடுகள் அருகில் வந்து நின்றன. அரசமரத்தில் ஏகப்பட்ட காகங்கள் கரைந்தன. வளாகத்துக்கு வெளியே  “பால் ஐஸ், கோன் ஐஸ்என்று உச்ச ஸ்தாயியில் கூவிய குரலொன்று கேட்ட்து.
ஒரு மணிநேரத்துக்குப் பிறகு பணியாளர் அழைத்தார். துணி சுற்றிய மண் குடுவையைக் கொடுத்து கையெழுத்து வாங்கினார். சிவா அவன் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தான். எல்லோருக்கும் பொதுவாக நன்றி சொல்லிவிட்டுச் சென்றான் அவன்.
அம்மா, சாம்பல கொடுத்திட்டாங்க. கோர்க்காட்டுக்கு கொண்டும்போயி கரைக்க போறிங்களா? இல்ல இங்கயே கடல்ல கரைக்கறிங்களா?
என் குரல் எனக்கே கேட்கவில்லை. அந்த அம்மா புரிந்துகொண்டார். “கடல்லயே  கரச்சிரலாம்யாஎன்றார்.
சிவா தன் வாகனத்தில் அந்த அம்மாவை ஏற்றிக்கொண்டு கடற்கரையில் கூட்டமில்லாத பக்கமாக  ஓட்டிச் சென்றான். நாங்கள் எங்களுடைய வாகனங்களில் அவனைப் பிந்தொடர்ந்தோம்.
சாம்பல் குடுவையை அந்த அம்மாவிடம் கொடுத்துவிட்டு நாங்கள் கரையில் நின்றுகொண்டோம். அம்மா முட்டிக்கால் ஆழம்வரைக்கும் சென்று குனிந்து கடலைத் தொட்டுக் கும்பிட்டார். பிறகு குடுவையில் இருந்த சாம்பலைக் கொட்டிக் கரைத்தார். மண்குடுவை கடலுக்குள் மூழ்கியது. எழுந்து நின்று அகண்ட வானத்தையும் க்டலையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். தேம்புவதையும் அவர் உடல் அதிர்வதையும் நாங்கள் பார்த்தோம். எக்கணமும் சமநிலை தவறி விழுந்துவிடக்கூடுமோ என்று நாங்கள் அஞ்சினோம். வெகுநேரம் கடலையே பார்த்தபடி நின்றிருந்தார். நான் தான் அவரைத் தொட்டு கரைக்கு அழைத்து வந்தேன். குவித்த கைகளை விடுவிக்காமல் அவர் எங்கள் அனைவரையும் பார்த்துக் கும்பிட்டார். நான் அவசரமாக அவர் கைகளை விலக்கித் தாழ்த்தினேன்.
எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து எங்களைச் சுற்றி வட்டமடித்தது.  பிறகு, ஈரத் தரையில் இறங்கி இப்படியும் அப்படியுமாக நடந்தது.  அலகு திருப்பி எங்களைப் பார்த்தது. அச்சமெதுவும் இல்லாமல் அந்த அம்மாவின் காலடிவரைக்கும் பறந்துவந்து ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பறந்தது.  அம்மா அந்தக் காகத்தையே வெகுநேரம் பார்த்தபடி இருந்தார். தன்னிச்சையாக அவர் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே எங்களைப் பார்த்தார்.
அம்மா உக்காருங்க, உங்கள் கோர்க்காட்டுக்கே கூட்டிம்போய் விடறோம்சிவா அவரிடம் சொன்னான்.
“அதெல்லாம் வேணாம்யா.  ஒரு டவுன்பஸ்ல ஏத்தி உடுங்கய்யா., அது போதும். நான் போய்க்குவேன்
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட அம்மா எங்கள் யோசனைக்கு உடன்படவே இல்லை. வேறுவழியில்லாமல் பேருந்து நிலையத்தில் கோர்க்காடு செல்லும் வண்டியில் ஏற்றி உட்காரவைத்தோம். உதவியாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் நான் கொடுத்த பணத்தை அவர் தொடவே இல்லை.  “ஒரு டிக்கட்டு வாங்கிக் குடுய்யா. அது போதும்

அவரை விட்டுப் பிரிந்து வண்டியிலிருந்து கீழே இறங்கி நின்றபோது மனம் கனப்பதை உணர்ந்தேன். வண்டி கிளம்பும்வரை ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தோம். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நண்பர்களுக்கு தொடக்கத்திலிருந்து விவரித்துக்கொண்டிருந்தான் சிவா. சில நிமிடங்களுக்குப் பிறகு புகையைக் கக்கியபடி வண்டி கிளம்பியது. நாங்கள் அந்த அம்மாவைப் பார்த்து கையசைத்து விடைகொடுத்தோம். சட்டென்று அவர் எங்களை நோக்கி இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டார். எங்கள் பார்வையிலிருந்து அந்தப் பேருந்து மறையும்வரை அவர் கும்பிட்டபடியே இருந்தார்.