Home

Tuesday 21 February 2017

தாய்மையின் அழகு



                மானுட வாழ்க்கையைக் குறிக்கும் படிமங்களை தமிழ்க்கவிதைப் பரப்பில் ஏராளமாகக் காணலாம். சிலருடைய கவிதைகளில் அது மகாநதி. சிலருடைய கவிதைகளில் அது மாபெரும் கடல். இன்னும் சிலருடைய கவிதைகளில் அது இனிய தென்றல். வெவ்வேறு தருணங்களில் சுவைத்த வாழ்வின் குணங்களை அவை அடையாளப்படுத்துகின்றன. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ஒரு சிற்பத்தின் நிழற்படங்களைப்போல.


                எதார்த்த வாழ்வின்மீது குறை காணாத நெஞ்சமே இல்லை. குறைகள் சலிப்பை ஏற்படுத்தும்போது உச்சக்கட்ட மனநிலையில் வசையாகவோ அல்லது வெறுப்பாகவோ மனம் உமிழும் சொற்கள் ஒருவகையில் நாம் முன்வைக்கும் விமர்சனங்கள். "புதைசேறு போல இழுத்துகிட்டே போவுது", "பாழுங்கிணத்தில விழுந்து தவியாதவிக்கறேன்", "யாரோ குனிய வச்சி குத்திட்டே இருக்கற மாதிரி இருக்குது", "நடுத்தெருவுல நிக்கவச்சி தொடப்பத்தால அடிபடற மாதிரி தோணுது" என்று சொல்லும் விமர்சனங்கள் எளிய எடுத்துக்காட்டுகள்மட்டுமே. வேதனையும் சலிப்பும் கலந்த இத்தகு விமர்சனங்களை ஓர் அகராதி அளவுக்குத் தொகுக்கமுடியும். அந்த அகராதியை நாம் நம் அகத்தின் கண்ணாடி என்று தாராளமாக அழைக்கலாம்.

                இந்தப் பார்வைக்கு நேர்மாறான ஒரு பார்வையை வழங்குகிறது தேவதேவனின் "நித்தியகல்யாணி" என்னும் கவிதை. அக்கவிதையில் அவர்  வாழ்க்கையை ஒரு நித்திய கல்யாணியாக உணர்கிறார்முதல் வாசிப்பில் அக்கவிதை ஒரு மரத்தை விவரிக்கும் ஒரு கவிதை என்றுதான் உணர்வோம். அது பூத்துக்குலுங்கும் அழகு, மண்ணில் காலு\ன்றி நின்றிருக்கும் அழகு. அதன் இலைகளின் அழகு என விவரங்களின் தொகுப்பாகவே நம் மனம் உள்வாங்கிக்கொள்கிறது. அதன் பச்சையத்தில் படர்ந்திருக்கும் விஷம் அதைக் கடித்துச் சிதைக்க முனையும் கால்நடைகளிடமிருந்து தப்பிப் பிழைத்து உயிர்த்திருக்க உதவுவதையும் அதே சமயத்தில் அந்த இலைகளை அண்டி வருகிறவர்களுக்கு அது நோய்தீர்க்கும் மருந்தாகவும் அமைவதையும் உணர்ந்துகொள்கிறோம். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரே கணத்தில் அமுதமாகவும் நஞ்சாகவும் இருப்பதை நினைத்து வியப்பில் ஆழ்கின்றோம். இரண்டாவது வாசிப்பில் நாம் கண்டடையும் இந்த உண்மைதான் நித்தியகல்யாணியின் படிமத்தன்மையை உணர்த்துகிறது. அமுதமாகவும் நஞ்சாகவும் இருப்பது எது என்னும் கேள்வியை நாம் உடனடியாக எழுப்பிக்கொள்கிறோம்வாழ்க்கையைத் தவிர வேறு எது அப்படி இருக்கமுடியும்?

                இச்சிறிய வெளிச்சத்தின்வழியாக கவிதையின் ரகசிய அறைகளில் நுழைந்துவிடுகிறோம். ஓய்வின்றி ஒழிவின்றி எப்போதும் தன்னை மலர்களால் அலங்கரித்துக்கொள்வதே நித்தியகல்யாணியின் இலட்சியமாக இருக்கிறது. அந்த இலட்சியத்தில் உறுதியாக வாழ்ந்து காற்றில் நடனமிட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்வின் இலட்சியம் சுவையாக வாழ்ந்து நிறைவில் திளைப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்திக் கருக்கலிலும் அதிகாலைப் பொழுதிலும் இரவுகளிலும் பகல்களிலும் அமுதமென பேரொளி வீசும் வெண்மலர்களைப்போல எல்லாத் தருணங்களிலும் சுவையோடு வாழ்வனுபவத்தில் திளைத்தலே ஆனந்தமான அனுபவம். மலரின் மென்மையைப்போல வாழ்க்கையும் மென்மையானது. மலரின் இதழ்களைப்போல இயல்பாக விரிவடைந்த வாழ்க்கையில் மணம் பலமடங்காகக் கமழ்கிறது.

                ஒரே கணத்தில் அமுதமாகவும் நஞ்சாகவும் விளங்கும் வாழ்வின் புதிரான அம்சம் பல கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. அமுதம் அதன் ஆதார ஊற்றிலிருந்து பொங்கிப் பீறிடும் பண்பு. நஞ்சு அதன் அருகிலேயே இருந்து ஊற்றைக் கண்காணிக்கும் தற்காப்புப் பண்பு. ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பரிமாணங்களும் அடங்கிய தாய்மையின் பேராற்றல் இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்று. அமுதமாகவும் நஞ்சாகவும் வெளிப்படுவதுகூட தாய்மைதான். நித்திய கல்யாணியின் இலைகளும் பூக்களும் நமக்கு உணர்த்துவது தாய்மையின் அழகைதாய்மையின் பொலிவை. தாய்மையின் நிரந்தரத்துவத்தை.
****



நித்திய கல்யாணி

தேவதேவன்

அது ஓய்வின்றி ஒழிவின்றி
எப்போதும் தன்னைத்
தன் மலர்களாலேயே அலங்கரித்துக்கொண்டு
தன் ஒரே லட்சியத்தில்
உறுதியாய் வாழ்ந்துகொண்டு
காற்றில் நடமிட்டுக்கொண்டிருக்கும்
ஓர் அழகு.
தான் கண்டுகொண்ட அந்த இடத்தைவிட்டு
ஒருக்காலும் நகராதிருக்க
தன் வேர்கொண்டு அது பற்றியிருக்கும் மண்.
எவர் கண்ணுக்கும் புலனாகாத பொன்.
தன் நெடுங்காலத் தவித்தின்மூலம்
தன் பச்சையத்தில் அது பற்றியிருக்கும் விஷம்
மிருகங்கள் அது தன்னை அண்டாதிருக்கமட்டுமின்றி
அனைத்து நோய்களுக்குமான மருந்தும்.
அந்திக் கருக்கல்களிலும் அதிகாலைப் பொழுதுகளிலும்
இரவுகளிலும் பகல்களிலும்
அதன் வெண்மலர்கள் வீசும்
அம்ருதப் பேரொளி