Home

Friday, 24 February 2017

மௌனம் என்னும் புகலிடம்



     ஒரு குடும்பத்தில் தலைவன் பொருள்வயின் பிரிவது தவிர்க்கமுடியாத ஒரு செயல்.  குடும்பம் நடத்தும் ஊரில் ஒரு தலைவனால் தொழில்செய்து சம்பாதிக்கமுடியாத சூழல் சங்க காலத்திலிருந்து இன்றுவரை ஒரு வரலாற்றுச் சங்கிலியாக நீண்டபடியே இருக்கிறது.  தன் உழைப்பையும் அறிவையும் திறமையையும் தாராளமாக வழங்கித்தான் ஒருவனால் பொருளைச் சம்பாதிக்கமுடியும். இப்படி எழுதிச் செல்லும் அளவுக்கு பொருளும் உழைப்பும் எல்லா இடங்களிலும் ஓர் எளிய சமன்பாடாக இருப்பதில்லை.  சில இடங்களில் சொல்லடி பட நேரலாம். சில இடங்களில் கல்லடியும் பட நேரலாம்.  அத்தகு அவமானங்களை உயிருக்குயிரான இல்லறத்துணை நேருக்குநேர் பார்ப்பதை எந்த ஆண்மனமும் ஏற்றுக்கொள்வதில்லை.  எங்கோ கண்காணாத இடங்களில் படும் துன்பங்களையும் அவமானங்களையும் பெரிதாக நினக்காத மனம் தன் உற்ற துணைவி அல்லது பெற்றறெடுத்த தாய் அல்லது பிள்ளைகள் முன்னிலையில் அவற்றை எதிர்கொள்வதை மனம்கூசும் செயலாக நினைக்கிறது.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவே ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.  எப்பாடு பட்டாவது பொருளிட்ட ஏதோ ஓர் ஊரும் துணைவியும் பிள்ளைகளும் நிம்மதியாக வாழ இன்னொரு ஊருமாக தன்னுடைய வாழ்வை வடிவமைத்துக்கொள்வது பல ஆண்களுக்கு தவிர்க்க இயலாத முடிவாகவே இருக்கக்கூடும்.  பிரிந்திருக்கும் காலத்தில் ஆண்கள் சம்பாதிக்கும் பொருள் குறைந்த கால அளவுக்கே கஞ்சி குடித்து பசியாறும்படி இருக்கக்கூடும். மனைவி அல்லது பிள்ளைகளின் பசியைக் காணப் பொறுக்காத தலைவன் மறுபடியும் பொருள்வயின் ஊரைவிட்டுச் செல்லக்கூடும்.  முடிவற்ற இத்தொடர்கதையின் அவலம் இலக்கிய வெளிமுழுக்க அடர்ந்திருக்கிறது.


     ஊர் திரும்பி கொண்டுவந்த பொருளைக் கொடுத்துவிட்டு, மீண்டும் பிரிந்துசெல்லும் ஒரு தலைவனின் புறப்பாடைக் காட்சிப்படுத்துகிறது விக்கிரமாதித்யனின்  ஒரு கவிதை. இருள் பிரியாத காலை.  உறைந்திருப்பதைப்போல ஆழ்ந்த அமைதி.  மழைபெய்து முடிந்திருப்பதால்  எங்கெங்கும் பரவி இருக்கிறது குளிர்.  வீட்டைவிட்டு வெளியேறி ஊரைவிட்டு புறப்படும் முதல் பேருந்தில்  உட்கார்ந்துகொண்டு காட்சிகளை அசைபோடுகிறான். அயர்ந்து உறங்கிய பெரியவனும் அரவம் கேட்டு எழுந்து சிரித்து விளையாடும் சின்னவனும் வெந்நீர்வைத்துக் கொடுத்து, துணிமணிகள் எடுத்துவைத்து வழியனுப்பிய மனைவியும் சித்திரங்களாக வந்துபோகிறார்கள்.

     மௌனமாக இடம்பெற்றிருக்கும் சில குறிப்புகள் இக்கவிதையை முக்கியமானதாக்குகின்றன.  முதல் குறிப்பு கவிதையில் இடம்பெறும் மனைவியின் மௌனம். போதாமையைப்பற்றிய புலம்பல் இல்லை. புகார் இல்லை.  இடித்துரைக்கவில்லை.  ஒரு சொல்கூட இல்லாமல் ஒரு தாய்போல வாசல்வரை வந்து வழியனுப்பிவைக்கிறாள்.  அந்த மௌனம் பல சொல்லாத சேதிகளைச் சொல்கின்றன.  குடும்பத்தின் வறுமை, பொருளற்ற அவலம், இயலாமையின் வேதனை, தொடர்சுமைகளால் ஏற்படும் விரக்தி, உலர்ந்துவிட்ட கண்ணீர் என ஏராளமான உணர்வுகளை அந்த மௌனம் உணர்த்திவிடுகிறது.  இந்தியப் பெண்ணின் மௌனத்துக்குப் பின்னால் உறைந்து நிற்கும் காயங்களையும் கண்ணீரையும் உணர இந்த ஒரு குறிப்பு போதும்.

     இரண்டாவது குறிப்பு அவன் புறப்படத் தேர்ந்தெடுக்கும் இருள் பிரியாத அதிகாலை நேரம்.  மற்றவர்கள் பார்வையை அவன் தவிர்க்க விழைவதற்கான காரணங்களை வாசகனின் ஊகத்துக்கு விட்டுவிடுகிறது இக்குறிப்பு.  பகல் நேரமெனில் கடன் பாக்கியைக் கேட்டு சிலர் வரக்கூடும். வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர் வரக்கூடும். சொந்தக்காரர்கள் பரிதாபப் பார்வை வீசி, அறிவுரைகளை அள்ளிவிடக்கூடும். தன்னைவிட வாழ்நிலையில் உயர்ந்துவிட்ட நண்பர்கள் இரக்கப்பார்வை பார்க்கக்கூடும். அல்லது கண்டும் காணாதபடியான பாராமுகத்துடன் வேறுவழியில் நடக்கக்கூடும். பார்வையில் படும் ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற்றம் காண்பது எப்படி என்று ஆயிரம் யோசனைகளை முன்வைத்து மூளையைக் குழப்பக்கூடும். எல்லாக் குரல்களையும் பொறுமையுடன் எதிர்கொள்வது இயலாத காரியம்.  ஏற்கனவே பகலில் புறப்பட்டு இத்தகு குரல்களை எதிர்கொண்டு புண்பட்ட அனுபவம்தான் புறப்பாட்டுக்கு அதிகாலையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.  சொந்த ஊரைவிட்டு, சொந்த வீட்டைவிட்டு ஒரு திருடனைப்போல புறப்படுவது ஓர் ஆணின் வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டம்.
     
மூன்றாவது குறிப்பு, தற்செயலாக அமைந்துவிட்ட ஓட்டுநர் குறிப்பு.  ஓட்டுநர் என்பவர் வாகனத்தின் அமர்ந்திருக்கும் பயணியரின் உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பவர். ஒருவகையில் காவல்தெய்வம்.  ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கவனமாக அழைத்துச் செல்பவர்.  குடும்பம் என்னும் வாகனத்தை ஓட்டிச் செல்ல பொருள்வயின் பிரியும் ஆணையும்கூட ஒருவகையில் ஓட்டுநன் என்றே சொல்லவேண்டும்.  வாழ்க்கையைச் சீராக ஓட்டிச் செல்வதற்குத் தேவையான பொருளைத் தேடித் தருவது ஆணின் முக்கியமான கடமை.  கடமைகளை முன்னிட்டு பிரிவன்போது எவ்வித மனசஞ்சலத்துக்கும் இடமில்லை.  அது தன்போக்கில் கிடந்து துடிக்கலாம்.  அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஆணின் பயணம் மௌனமாகத் தொடர்கிறது.  பொருள்வயின் பிரியும் ஆணின் மனத்திலும் மௌனம்.  வழியனுப்பிய பெண்ணின் மனத்திலும் மௌனம்.  மௌனம் தற்காலிகமான புகலிடமாக இருவருக்கும் மாறிவிடுகிறது.

*

பொருள்வயின் பிரிவு

விக்கிரமாதித்யன்

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழத்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்
வெந்நீர்வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள