எப்போதோ படித்த
ஒரு நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு குகைப்பகுதியில் வசிக்கிற துறவியை இளைஞரொருவர் சந்திக்க வருகிறார். ஞானத்தைப்பற்றியும்
அமைதியைப்பற்றியும் அவருக்கு ஏராளமான ஐயங்கள். அடுத்தடுத்து பல கேள்விகளை மணிக்கணக்கில்
துறவியிடம் கேட்டு, அவர் சொல்லும் பதில்களைக் கவனமுடன் உள்வாங்கிக்கொள்கிறார். ஆனாலும்
அமைதியை எப்படி அடைவது என்னும் கேள்வி அவரை இடைவிடாமல் குழப்புகிறது. நாட்டிலேயே மிகச்சிறந்த
நான்கு கல்விநிலையங்களின் பெயர்களைச் சொல்லி அங்கே சிற்சில ஆண்டுகள் பயின்றுவிட்டு
வரும்படி சொல்கிறார் துறவி.
அந்தப் பதில்
மனத்துக்கு ஏற்புடையதாக இருந்ததால் துறவியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகிறார் இளைஞர்.
துறவி குறிப்பிட்ட கல்விநிலையங்களில் இணைந்து, ஆர்வமுடன் பல துறைகளில் ஆழ்ந்து பயின்று
தெளிவைப் பெறுகிறார். அக்கணத்தில் அமைதியைப்பற்றிய ஐயம் இன்னும் விரிவடைகிறதே தவிர
குறையவில்லை என்பதையும் அவர் உணர்கிறார். தன் பயிற்சிக்கால அனுபவங்களைத் துறவியடம்
பகிர்ந்துகொள்ள வரும் இளைஞர் தன் ஆதங்கத்தையும் மறக்காமல் சொல்கிறார். துறவி சிரித்துக்கொண்டே
நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களுக்கும் மடங்களுக்கும் சென்றுவரும்படி சொல்கிறார்.
உடனே பயணப்படும் இளைஞர் வெவ்வேறு விதமான தத்துவங்களில் பயிற்சி பெற்று திரும்புகிறார்.
அமைதியைப்பற்றிய ஐயம் இன்னும் கூர்மை பெற்றதேதவிர
தீர்வு கிடைக்கவில்லை என்பதையும் அவர் உணர்கிறார். துறவியைச் சந்தித்து தாம் பெற்ற
தத்துவ அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வரும் இளைஞர் தம் ஐயத்தை மீண்டும் முன்வைக்கிறார்.
வயதில் தளர்ந்துபோன துறவி பொக்கைவாய் திறந்து புன்னகைத்து நாட்டில் பாய்கிற முக்கிய
நதிகளையும் மலைகளையும் காடுகளையும் பார்த்துவிட்டுவரும்படி சொல்கிறார்.
அவ்வகையில்
மேலும் சில ஆண்டுகள் கழிகின்றன. இளைஞர் முதுமைப்பருவம் அடைகிறார். அப்போதும் அவர் ஐயத்துக்கு
விடைகிடைக்கவில்லை. துறவி வாழ்வின் எல்லைப்புள்ளியில்
இருக்கிறார். நிராசையோடு திரும்பிவந்தவரிடம் நாள்முழுதும் நடமாட்டம் உள்ள மக்கட்பகுதியின்
நடுவே வசித்து எல்லா நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கும்படி சொல்கிறார். எல்லாவிதமான
அனுபவங்களின் பின்னணியோடும் மக்கட்பகுதியின் நடுவே வசிப்பவருக்குத் தன் அக உலகில் எதிர்பாராத
ஒரு மாற்றம் உருவாகத் தொடங்fகுகிறது. சுற்றிலும் ஒலித்தபடி இருக்கிற பேரிரைச்சல்நடுவே
அமைதியையும் ஒருவித லயம்கூடிய இசையையும் உணர்கிறது அவர் மனம். அக்கணமே அவர் வாழ்நாளெல்லாம்
தேடிய அமைதி அதுதான் என்பதை உணர்கிறார். தான்
உணர்ந்த அமைதியின் ஆனந்தத்தை துறவியிடம் தெரிவிப்பதற்காக உடனே ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.
எதிர்பாராதவிதமாக,
வழியில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், துறவியைச் சந்திக்காமலேயே மறைந்துபோகிறார். ஆயுள்
உள்ளபோது அமைதி எதுவெனத் தெரியவில்லை. அமைதி
எதுவெனத் தெரிந்த கணத்தில் ஆயுள் இல்லை. இதை வாழ்வின் முரண் என்பதா அல்லது அபத்தம்
என்பதா? கேள்விகள் என்னும் வியூகத்துக்குள்ளே
நம்மையறியாமலேயே ஏதோ ஒரு கணத்தில் நுழைந்துவிடுகிறோம். அபிமன்யுபோல. உள்ளே நுழைந்தபிறகு,
அதிலிருந்து விடுபடும் வழி தெரிவதில்லை. விடுபடுகிற வழி என்று எண்ணிக்கொண்டு முன்னேறும்
பாதை இன்னும் ஆழமான சிக்கல்களைநோக்கித் தள்ளிவிடுகிறது.
"நெரித்த
திரைக்கடலில் நின்முகம் கண்டேன், நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்" என்னும்
பாரதியாரின் வரிகளை நினைத்துக்கொள்வோம். மாலைப்பொழுதில் வானையும் கடலையும் நோக்கியபடி
அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு கண்ணில் படும் அனைத்தும் காதலியின் முகமாகவே தெரிகிறது.
கடல் வேறு. விசும்பு வேறு. நுரை வேறு. குமிழி வேறு. மேகம் வேறு. ஆனால் எல்லாவற்றிலும்
காதலியின் முகச்சாயல் தெரிகிறது. காதலால் மனத்தை நிரப்பிக்கொண்டவருக்கு, பார்த்த இடங்களிலெல்லாம்
காதலியின் மனச்சாயல் தெரிவது இயற்கை. மனத்தில் காதல் இல்லாத நிலையில் இப்படி நிகழ்வது
சாத்தியமில்லை. கிட்டத்தட்ட அமைதிகூட காதலைப்போன்றது. மனத்தை அமைதியால் நிரப்பிக்கொண்டவர்களுக்கு, எல்லா இடங்களிலும் அமைதியின்
இருப்பை அடையாளம் கண்டுகொள்ளலாம். மனத்தில் அமைதி இல்லாதவர்களுக்கு எங்கும் அமைதியின்
சுவடு தென்படுவதில்லை.
மலைச்சாமியின்
கவிதையில் அமைதியைத் தேடி நடக்கும் ஓர் உயிரின் பயணம் காட்சியாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மரங்களடர்ந்த தோப்பையும் முட்செடிகளையும் கடந்து நடக்கிறது. இரவு பகல் பாராமல் அலைகிறது. காற்று, மழை, குளிர் அனைத்தையும் எதிர்கொண்டு செல்கிறது. எங்கு அலைந்தாலும் அமைதியின் இடத்தைக் கண்டறியமுடியவில்லை.
கண்டறிய முடியாத இறுதிக்கணத்தில் "எல்லாவற்றிலும் நீயிருந்தும் எங்கிருக்கிறாய்
அமைதிச்சுடரே" என்று மன்றாடி இறைஞ்சுகிறது. கௌரவர் சபையில் கண்ணன் வருகைக்காக
காத்திருந்து காத்திருந்து கண்ணீர் மல்கி, கையறு நிலையில் கையயுர்த்தி தொழுது அரற்றுகிற
பாஞ்சாலியைப்போல.
காலத்தின்
ஒளி அல்லது இருள்சுவரில் பறவைகள் காலமெல்லாம் தம் அலகுகளால் எழுதுகிற கவிதை இதைப்பற்றத்தானோ
என்று தோன்றுகிறது. காலம் எழுதும் கவிதையைப் படித்துப் பொருளுணரத் தெரியாததால்தான்
மீண்டும்மீண்டும் மனிதர்கள் காலமெல்லாம் அமைதியைத் தேடும் பயணத்தில் ஈடுபடுகிறார்கள்
போலும்.
விரிவான வியூகங்களுக்கிடையே
உள்ள ஒரு புள்ளியாக இருக்கிறது அமைதி. நம் மனத்தில் அமைதி இருக்கும்போது நம்மால் அப்புள்ளியை
எளிதில் நெருங்கித் தொட்டுவிட முடிகிறது. ஒரு காந்தக்கல் இரும்புத்துகளை எத்திசையில்
இருந்தாலும் தன் சக்தியால் இழுத்துக் கவர்ந்துகொள்வதுபோல. காந்த ஆற்றலை தொலைத்துவிட்டு
வெறும் கல்லாக மனம் மாறுகிறபோது, அமைதிப்புள்ளியை அடையமுடியாமல் வியூகங்களிடையே சிக்கிச்
சீரழிகிறது.
*
வியூகம்
மலைச்சாமி
நெருஞ்சிச்
செடிகளையும் கற்றாழைகளையும்
வேம்பின் நிழல்களையும்
அரிபுழுக்கள்
மட்டுமே அப்பின பூவரசுகளையும்
தாண்டி நடந்தேன்
நிலவின் வெள்ளொளியும்
ஊதல் காற்றின்
பேயிரைச்சலையும்
இயைந்து பண்ணிசைத்தன.
வதங்கிய பூமாலையின்
அமைதியில்
வாழ்க்கை கிடந்து
இயங்கியது
சூரியனை முதல்விழிப்புக்கு
அழைத்து
ஆந்தைகள் அரற்றின
தொலைதூரத்து
மலைமுகட்டுக் கானகத்திலும்
பேரிரைச்சலின்
சுழல் பரிதவிக்கிறது
காலத்தின்
ஒளி அல்லது இருள்சுவரில்
பட்சிகள் பலகாலக்
கவிதையொன்றைத்
தங்கள் அலகுகளால்
இழுத்துக் கிறுக்குகின்றன
இந்தப் பிரபஞ்சத்தின்
அமைதியோ
தினவு நிரம்பியது
அமைதிச் சுடரே
எல்லாவற்றிலும் நீயிருந்தும்
எங்கிருக்கிறாய்
*
காட்சித்தன்மை
மிகுந்த கவிதைகள் எழுதும் மலைச்சாமி தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய முக்கியமான கவிஞர்களில்
ஒருவர். ஒதுங்கிய தெருவிலும் சோடியவிளக்கு என்னும் தலைப்பில் ஒரு கவிதைத்தொகுதி வெளிவந்துள்ளது.