சி.மணியின்
கவிதைகளை நான் விரும்பியதற்கு முதல் காரணம் அவர் பின்பற்றிய வடிவம். யாப்பின் கட்டுப்பாட்டையும்
வடிவத்தின் சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் அவருடைய கவிதைகள் முன்வைப்பவை. யாப்பின்
காலத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமான கவிதைகள் வெளிவரத் தொடங்கிய கட்டத்தில் இரண்டிலுமுள்ள
வலிமையான அம்சங்களை சமவிகிதத்தில் இணைத்த அவருடைய முயற்சி பலவகைகளில் முக்கியமானது.
தன்னெழுச்சியாக அரும்பும் கவிதைக்கான புதிய வடிவத்தைத் தேடியடைகிற ஆவலுக்கான காரணம்
யாப்பு தெரியாததால் அல்ல, மொழியின் செழுமையை வளப்படுத்துகிற உத்வேகம் என்பதைப் புலப்படுத்த
இந்த வடிவத்தை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும்.
பல வகைகளில் பிற்காலத்தில் ஞானக்கூத்தன் கையாண்ட கவிதைகளின் வடிவத்துக்கு சி.மணியின்
கவிதைவடிவத்தை முன்னோடித்தன்மை உடையதாகக் கருத இடமுண்டு.
உடலை ஒரு கூடாகவும்
உயிரை ஒரு பறவையாகவும் முன்வைக்கிற படிம வரிகள் நம்மிடம் ஏராளமாக உண்டு. எப்போது படித்தாலும் மனத்தில் அழுத்தமாக பதிந்துவிடும்
தன்மை உடையவை அவை. படித்த மறுகணமே நமது அல்லது நம்மைச் சார்ந்தவர்களின் உயிர் பிரிந்துபோகிறமாதிரியான
ஒரு கற்பனைச் சித்திரம் மனத்திரையில் எழுந்து அலைந்து ஒருவிதமான தத்தளிப்புக்கு ஆளாக்கிவிடும்.
கூட்டையும் பறவையையும் இணைத்து முன்வைக்கிற பல வரிகளில் ஒளவையாரின் வெண்பா வரிகளுக்கு
சிறப்பான இடமண்டு. "பாடுபட்டுத் தேடி
பணத்தைச் சேர்த்துவைத்து கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்- கூடுவிட்டிங்கு ஆவிதான் போனபின்பு
ஆரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?" பள்ளி நாட்களில் படித்த பாடலென்றாலும்
இதை அடிக்கடி நினைத்துக்கொள்ளும் தருணங்கள் வாழ்வில் நேர்ந்ததுண்டு. நவீன கவிதைகளை
வாசிக்கும்போது, இப்படிமம் பயன்படுத்தப்பட்டிருப்பதைப்
பார்க்க நேர்கிற ஒவ்வொருமுறையும் ஒளவையாரின் வரிகள் வெகுவேகமாக ஒருமுறை மனத்திரையில்
நகர்ந்துமறைவது வழக்கம். கூடு படிமத்தை சிறப்பான
வகையில் பயன்படுத்திக்கொண்ட ஒரு கவிதை சி.மணியின் பிரிவு.
அன்புக்குரிய
ஒருவரின் மரணத்தையொட்டி நிகழ்கிற பிரிவாற்றாமைதான் இக்கவிதை. வேதனையை ஒவ்வொரு வரியாக
அடுக்கிச் செல்கிறது கவிதை. முதலில் உடல்உணரும் வேதனைகள். பிறகு உயிர் உணரும் வேதனைகள்.
தாங்க முடியாத அவ்வேதனைகளின் உச்சம் மனம் உணரும் வெறுமை. அதை உணர்த்தும்வகையில் கூடு-பறவை படிமம் பயன்படுத்தப்படுகிறது.
விழியோரமாக
நீங்காமல் தளும்பியபடி இருக்கிற கண்ணீர்த்துளிகளைக் காட்சிப்படுத்துவதில் முதல்வரி
தொடங்குகிறது. பிரக்ஞையைக் கடந்த துக்கம்தான் கட்டுப்படுத்த முடியாதபடி கண்ணீர்த்துளிகள்
பெருகிவரக் காரணம். ஆற்றாமையால் வெடித்துப்
பிளந்துபோன நெஞ்சம் நீர்காணா ஏரியாக வறண்டு கிடக்கிறது. தன்னைச்சுற்றி பறந்து செல்கிற குளவியின் சத்தம்
ஏதோ ஒரு ஒலியாகமட்டுமே செவியில் பதிவதைக் கவனிக்கவேண்டும். குளவி ஆபத்தானது, தன் நச்சுக்கொடுக்குகளால்
அது கொட்டிவிடக்கூடும் என்கிற எந்தப் பிரக்ஞையும் இல்லை. அந்த அளவுக்கு அறிவுணர்வை
வேதனையுணர்வு அழுத்துகிறது. மரணம் நிகழ்ந்த
கணம் எப்போது என்கிற குறிப்பு கவிதையில் இல்லை. ஒரு நாளுக்கு முன்பாக நிகழ்ந்ததாக இருக்கலாம்
அல்லது ஒரு மாதத்துக்கு முன்பாக நிகழ்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது ஒரு ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாக இருக்கக்கூடும்.
காலநகர்வை உணராத அளவுக்கு பிரக்ஞையை அழுத்திக்கொண்டிருக்கிறது துயரம். பிணத்தின் மணம்
இன்னும் நாசியைவிட்டு நீங்காதபடி நிறைந்திருக்கிற குறிப்பு கால நகர்வை சிறிதுகூட உணராத
மனநிலையைச் சித்தரிக்கிறது. கசக்கும் நாக்கு, அனலையும் பனியையும் வேறுபாடில்லாமல் உணர்கிற
உடல் என படிப்படியாக புலன்கள் பிரக்ஞையிழந்தபடி செல்கின்றன. சாக்காட்டு உலகு என்பதுகூட
முக்கியமான குறிப்பு. "உறங்குவதுபோலும்
சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு" என்னும் திருக்குறளை நினைவூட்டுகிறது
இக்குறிப்பு. யாக்கை நிலையாமையைப்பற்றிய தௌiவு இருந்தாலும்கூட, அத்தௌiவு பிரக்ஞையில்
பதியாத அளவுக்கு பிரிவாற்றாமையின் தாக்கம் இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வருவதற்கு
இக்குறிப்பு உதவியாக உள்ளது. எல்லாற்றுக்கும் இறுதியாக கூட்டைவிட்டு பறந்துபோன பறவையாக
பிரிந்துபோன உயிரை நினைத்து அரற்றும் வரி இடம்பெறுகிறது.
பிரிவாற்றாமையின்
துயரை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறது மணியின் கவிதை என்பதுதான் முக்கியமாகக்
கவனிக்கவேண்டிய அம்சம். பொதுவாக பிரிவாற்றாமையால்
புலம்பித் தவிக்கிற வரிகளையே பல கவிதைகளில் நாம் கண்டிருப்போம். இக்கவிதையில் நாம்
காண்பதோ ஒரு தன்னழிவு. பிரிவாற்றாமையால் தன்னையே அழித்துக்கொள்கிற தன்மை. பிரிவாற்றாமையை ஒரு புற்றுநோய்க்கிருமியாக
நினைத்துக்கொண்டால், அக்கிருமி ஒவ்வொரு புலனையும் படிப்படியாகத் தாக்கி அழித்து உணர்விழக்கவைக்கிறது.
கண், செவி, மூக்கு, நாக்கு, மேனி என புற உறுப்புகள்மீது படர்ந்தழித்த கிருமி இறுதியாக
மனத்துக்குள்ளும் படர்ந்தழிக்கிறது. கிட்டத்தட்ட
வடக்கிருந்து உயிர்துறக்கிற முயற்சியைப்போல, பிரிந்துபோன உயிரையே இடைவிடாமல் எண்ணியெண்ணி
தன்னைத்தானே சிதைத்துக்கொள்கிறது ஒரு மனம்.
*
பிரிவு
சி.மணி
வேதனை வழிக்கு
விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல்
நெஞ்சு பிளக்க
தூறலிடைக்
காடாக மாநிலம் மங்க
குளவியின்
துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம்
நாசியில் ஏற
கசக்கும் நாக்கு
மண்ணைச் சுவைக்க
அனலும் பனியும்
மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு
உலகில் என்னைவிட்டு
கூடுவிட்டு
பறவையென
ஓடி மறைந்தாய்
*
தமிழில் நவீன
கவிதைகள் வேரூன்றத் தொடங்கிய முதற்காலகட்டத்தில் முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்
சி.மணி. மரபுக்கவிதை, புதுக்கவிதை என கவிதைக்களம் இரண்டாகப் பிரிந்து முரண்பட்ட உரையாடல்கள்
எழுந்த சூழலில் புதுக்கவிதைசார்ந்து அழுத்தமான கருத்துகளை முன்வைத்து விவாதத்தை முன்னெடுத்துச் சென்றவர். யாப்பின் வலிமையான
அம்சங்களை தன் புதுக்கவிதை வார்ப்பில் இணைத்துக்கொண்டவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
"இதுவரை" என்னும் தலைப்பில் க்ரியா வெளியீடாக வெளிவந்த தொகுப்பில் இவருடைய
தொடக்கக்காலக் கவிதைகள் முதல் சமீபத்திய கவிதைகள்வரை எல்லாக் கவிதைகளும் அடங்கியுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இயற்கையெய்தினார்.