Home

Monday, 14 August 2017

கதவு திறந்தே இருக்கிறது - ஐந்நூறு வண்டிகளின் சத்தம்


எண்பதுகளின் இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வீக் எண்ட் என்னும் தலைப்பில் வார இணைப்பொன்றை வெளியிட்டு வந்தது. தினமணியின் சார்பில் வெளிவந்துகொண்டிருந்த ’தமிழ்மணி’ போல, தமிழலக்கியத்தைப்பற்றிய தகவல்களையும் ஒரு தமிழ்ச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டதாக அந்த வாராந்திர இணைப்பு கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பொறுப்பாசிரியராக இருந்த விஸ்வநாதன் என்பவர் ’வீக் எண்ட் விஸ்வநாதன்’ என்று அடைமொழியோடு அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாக இருந்தார். 


பல முக்கியமான தமிழ்ச்சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட அந்த இதழ் ஒரு தூண்டுகோலாக இருந்தது. எம்.எஸ்.ராமசாமி, லதா ராமகிருஷ்ணன், ப.சுப்பிரமணியன் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஊக்கமுடன் செயல்பட அந்த இணைப்பு ஒரு களமாக இருந்தது. லதா ராமகிருஷ்ணன், ப.சுப்பிரமணியன் ஆகிய இருவருடைய மொழிபெயர்ப்பிலும் என்னுடைய சில கதைகள் அந்த இணைப்பில் வெளிவந்தன. எனக்கும் அவருக்குமிடையேயான நட்பு அப்படித்தான் தொடங்கியது. மொழிபெயர்ப்பின் ஆர்வத்தைக் கடந்து இலக்கிய வாசிப்பில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார் ப.சுப்பிரமணியன். அவருடைய ஒவ்வொரு கடிதத்திலும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். சுந்தர நிலையம் என்னும் பெயரில் அவர் ஒரு பதிப்பகத்தையும் நடத்தி வந்தார்.

. சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் ஒருமுறை அவருடைய வீட்டைத் தேடிச் சென்று சந்தித்தேன். என் தந்தையின் வயதுள்ளவராக இருந்தார் அவர். அன்றைய உரையாடல் எப்படியோ தொடங்கி, எங்கோ சென்று இறுதியில் அசோகமித்திரனில் வந்து முடிந்தது. அசோகமித்திரனுடைய சிறுகதைகளை மொழிபெயர்த்த அனுபவத்தை அவர் உற்சாகமாகச் சொல்லத் தொடங்கினார். மிக எளிமையாகத் தோன்றும் ஒரு தமிழ் வாக்கியத்தை அதே எளிமையுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எப்படிப்பட்ட சவால் என்பதை அவர் அனுபவங்களின் அடிப்படையில் சொன்னார். மாலை வரை பேசிக்கொண்டிருந்தோம். புறப்படும்போது அவர் ’தீக நிகாயம்’ என்னும் புத்தகத்தை கையெழுத்திட்டு எனக்கு அன்பளிப்பாக அளித்தார். நேரிடையாக பாலி மொழியிலிருந்து அப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அதை மொழிபெயர்த்தவர் பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா.

ஊருக்குத் திரும்பிய ஒரு சில நாட்களிலேயே அந்தப் புத்தகத்தைப் படித்துமுடித்தேன். புத்தர் அருளிய பொன்மொழிகளின் தொகுப்பு என்றே அதைச் சொல்லலாம். ஆனால் ஒரு சிக்கலான கணக்கின் புதிரை, சூத்திரங்களின் அடிப்படையில் விடுவித்தபடி சென்று விடையைத் தொடுவதுபோல ஒரு நீண்ட உரையாடலின் முடிவாக அல்லது ஒரு நீண்ட விவாதத்தின் பகுதியாக அந்த இறுதி வாக்கியம் அடையப்படுகிறது. அந்த வழிமுறையும் வாக்கியங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.

’ஆசையே துன்பத்துக்குக் காரணம். ஆசையை ஒழித்தால்தான் மன அமைதியை அடைய முடியும். தீமைகளைத் தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்’ என பள்ளியில் படித்த புத்தரின் உபதேச வாக்கியங்கள்தான் புத்தர் மீதான என் ஆர்வத்துக்கு முதல் காரணம். அதைத் தாண்டி எதுவும் தெரியாத சூழலில் இந்த வாக்கியங்கள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. கடந்த கால்நூற்றாண்டில் இந்தப் புத்தகத்தை நினைக்கும்போதெல்லாம் எடுத்துப் படித்தபடி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புத்தரின் வாக்கியங்கள் புதுப்புது வெளிச்சத்தைப் பொழிவதை உணர்கிறேன்.

புத்தரின் மறைவுக்குப் பிறகு அவருடைய பொன்மொழிகளும் அவர் தம் சீடர்களுக்கு உரைத்த உபதேசங்களும் தொகுக்கப்பட்டன. அதற்கு திரிபிடகங்கள் என்று பெயர். அவை தொகுக்கப்பட்டதன் பின்னணியைப்பற்றி சுவையான ஒரு கதையுண்டு. புத்தரின் மறைவையொட்டி எல்லாச் சீடர்களும் துயரத்தில் மூழ்கியிருந்தார்கள். அப்போது சுபத்தன் என்னும் இளைய சீடன் மற்றவர்களைப் பார்த்து, “எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? அவர் மறைந்தது நல்லதுதான். இனி இதைச் செய், அதைச் செய்யாதே என நமக்குக் கட்டளையிட எவருமில்லை. விருப்பம் போல இருக்கலாம்” என்று சொன்னான். அதைக் கேட்ட மூத்த சீடர்கள்  புத்தர் மறைந்ததுமே அவர் உபதேசங்களை மறக்கத் தயாராக இருக்கும் உலகத்தில் புத்தரின் உபதேசங்களை எழுத்து வடிவில் தொகுத்துப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படத் தொடங்கினர். மகாகாசியபன் என்னும் சீடரின் தலைமையில் ஐந்நூறு பிட்சுகள் அமர்ந்து சங்கம் ஏற்படுத்தி புத்தரின் உபதேசங்களைத் தொகுத்து முறைப்படுத்தினார்கள். முதற்சங்கம் நாளந்தாவில் பிம்பிசாரரின் தலைமையில் கூடி தொகுப்பு முயற்சியைத் தொடங்கிவைத்தார்கள். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வைசாலி நகரத்தில் இரண்டாவது சங்கம் கூடி, அத்தொகுப்பை மேலும் முறைமைப்படுத்தியது. பின்பு அசோகரின் காலகட்டத்தில் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது சங்கம் ஏற்படுத்தப்பட்டு தொகுப்பின் வகைமுறை சரிபார்க்கப்பட்டது. அனைத்துக் கருத்துகளும் வினயபிடகம், சுத்தபிடகம், அபிதம்மபிடகம் என்று தொகுக்கப்பட்டு திரிபிடகம் என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு பிடகத்திலும் பல பிரிவுகளும் ஒவ்வொரு பிரிவிலும் பல உட்பிரிவுகளும் அடங்கியுள்ளன. பிடகம் என்னும் சொல்லுக்கு கூடை என்று பெயர். ஒரு பொருளை ஓரிடத்தில் வைக்கவும் கொண்டு செல்லவும் கூடைகள் உதவுவதுபோல ஞானச்செல்வங்களான மெய்ப்பொருளை ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறையினருக்குச் சேர்ப்பவை என்பதால்  இத்தொகுப்பும் பிடகம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. இவை அனைத்தும் பாலி மொழியில் எழுதப்பட்டவை. கி.பி.முதல் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமஸ்கிருதத்தில் புத்த நூல்கள் உருவாகத் தொடங்கின.

திரிபிடகத்தின் முக்கிய பகுதியாகிய சுத்தபிடகத்தின் ஒரு பிரிவே தீகநிகாயம். இது சீலக்கவந்த, மகாவக்கம், பாதிகவக்கம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டதாகும். ஒவ்வொன்றிலும் ஏராளமான சூத்திரங்கள் உள்ளன. இந்தச் சூத்திரங்களின் கருத்துகளால் கவரப்பட்ட ஜகந்நாதராஜா, இதற்காகவே பாலி மொழியைக் கற்று இவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். சீலக்கவந்த என்னும் முதல்பகுதியை மட்டுமே ப.சுப்பிரமணியம் வெளியிட்டிருந்தார். இரண்டாவது, மூன்றாவது பகுதிகளையும் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதாக எனக்கு எழுதிய கடிதத்தில் ஜகந்நாதராஜா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவை புத்தக வடிவம் பெற்றதா என்பது தெரியவில்லை.

தீகநிகாயத்தில் பதினைந்து சூத்திரங்கள் உள்ளன. அவை பிரம்மஜால சூத்திரம், சாமஞ்ஞ பல சூத்திரம், அம்பட்ட சூத்திரம், சோணதண்ட சூத்திரம், கூடதந்த சூத்திரம், மகாலி சூத்திரம், மகாசீகநாத சூத்திரம், பொட்டபாத சூத்திரம், சுப சூத்திரம், கேவட்ட சூத்திரம், லோகிச்ச சூத்திரம், தேவிஜ்ஜ சூத்திரம், மகாபதான சூத்திரம், மகாநிதான சூத்திரம், மகாபரிநிர்வாண சூத்திரம். ஒவ்வொரு சூத்திரமும் ஒரு நீண்ட உரையாடல். ஒரு நீண்ட சிறுகதை.

சாமஞ்ஞபல சூத்திரம் ஒரு சிறுகதையைப்போலவே தொடங்குகிறது. மகத அரசனான அஜாதசத்ரு தன் அமைச்சர் குழுவுடன் ஒருநாள் தன் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருக்கிறான். அது ஒரு முழுநிலவு நாள். எங்கும் நிலவொளியின் வெளிச்சம். அஜாதசத்ரு தன் அமைச்சர்களை நோக்கி “யாரைச் சந்தித்தால் குழப்பமடைந்த மனம் தெளிவையும் அமைதியையும் பிறக்கும்?” என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப்பற்றி விரிவாகச் சொல்கிறார்கள். ஒரு அமைச்சர் மட்டும் நகருக்கு வெளியே ஒரு மாந்தோப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுடன் தங்கியிருக்கும் புத்தரைச் சென்று சந்திக்கும்படி ஆலோசனை வழங்குகிறார். ஒரு துறவியால் மட்டுமே அத்தகு கேள்விக்கு விடையளிக்க முடியும் என்றும் சொல்கிறார். அதை ஏற்றுக்கொள்ளும் அஜாதசத்ரு தன் பரிவாரங்களோடு தோப்பை நோக்கிச் செல்கிறான். துறவியாக வாழ்வதன் பலன்களைப்பற்றிய கேள்விகள் அவன் மனத்தில் அலைபாய்கின்றன. தோப்பில் நிலவும் பேரமைதியைப் பார்த்து அவன் ஒருகணம் அச்சம் கொள்கிறான். தன்னைக் கொல்ல நிகழும் சதிகளில் இதுவும் ஒன்றோ என கலங்குகிறான். அமைச்சர் அவனுடன் பேசி, அவன் அச்சத்தை அகற்றுகிறான். தோப்புக்குள் சென்று புத்தரைக் காணும் அஜாதசத்ரு ”துறவியாக வாழ்வதன் பயன் என்ன?” என்று கேட்கிறான். அக்கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்வதற்கு முன்பு இதே கேள்வியை வேறு யாரிடமாவது அவன் கேட்டதுண்டா என்று கேட்கிறார் புத்தர். கேட்டதுண்டு என்று பதில் சொல்கிறான் அஜாதசத்ரு. அவர்கள் சொன்ன பதில்களைச் சொல்லுமாறு தூண்டுகிறார் புத்தர். மன்னன் தான் சந்திக்கச் சென்ற துறவிகளைப்பற்றியும் அவர்கள் சொன்ன பதில்களைப்பற்றியும் சொல்லி முடிக்கிறான். இறுதியில் புத்தர் அவனுக்கு நீண்டதொரு பதிலைச் சொல்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் ஓர் உவமையை முன்வைக்கிறார். அதுவே அதன் சிறப்பு.

முதலாவதாக அவர் ஒரு சுனையின் உவமையைக் கையாள்கிறார். சுனையின் கீழ் அடியோட்டமாக ஓர் ஊற்று உள்ளது. அந்தச் சுனைக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையின் வழியாகவும் நீர் வருவதில்லை. மழையின் வழியாகவும் அது நீரைப் பெறுவதில்லை. ஊற்றால் மட்டுமே நீரைப் பெற்று நிறைந்துள்ளது. நிலத்தடி ஊற்றைப் போலவே தியானத்தின் வழியாக ஒரு துறவியின் மனம் எல்லாத் தருணங்களிலும் நிறைந்திருக்கிறது.

அடுத்ததாக புத்தர் மலர்களின் உவமையை முன்வைக்கிறார். நீரிலேயே தோன்றி, நீரிலேயே திளைத்திருக்கும் குவளை, தாமரை மலர்கள் எவ்விதம் எல்லாக் காலங்களிலும் எழில் பெற்றுத் துலங்குகிறதோ, அதுபோலவே துறவியின் நெஞ்சமும் அன்பில் பொங்கும் இன்பத்தால் சூழப்பட்டு நிறைந்து காணப்படுகிறது.

அதைத் தொடர்ந்து புத்தர் கைவினைக்கலைஞர்களை உள்ளடக்கிய ஓர் உவமையை முன்வைக்கிறார். திறமை மிக்க ஒரு குயவன் நன்கு குழைத்த பசுமண்ணிலிருந்து பல்வேறு விதமான உருவங்களுடைய கலங்களைப் படைப்பதுபோலவும் தந்த வேலைப்பாட்டில் திறமையுடைய தச்சன் தந்தத்தால் பல்வேறு பொம்மைகளைச் செய்வதுபோலவும் திறமைமிக்க பொற்கொல்லன் பொன்னால் பல்வேறு அணிகளை எழிலுடன் உருவாக்குவதைப் போலவும் சாந்தமும் பரிசுத்தமும் உள்ள ஒரு துறவி தன் மனத்தைப் பக்குவப்படுத்தி எல்லாவிதமான சித்திகளையும் அடைகிறான்.

இப்படி அடுத்தடுத்து பல உவமைகளைச் சொல்லும் புத்தர் இறுதியில் சுனையின் உவமையை மீண்டும் தொடுகிறார். மலைப்பாதையில் தூய தெளிய நீருடைய பளிங்குபோன்ற சுனையின் கரையில் நிற்கும் ஒருவன் அச்சுனையிலுள்ள சிப்பி, சங்கு, பருக்கைக்கற்கள், மணல், அசைந்தாடும் மீன் கூட்டம் என எல்லாவற்றையும் தெளிவாகக் காண்பதுபோல, தூய, அமைதியான, சஞ்சலமற்ற மனமுடைய துறவி அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். எது துக்கம்  என்பதை அவன் அறிவான். எது துக்கத்தைக் கடந்து செல்லும் வழி என்பதையும் அவன் அறிவான். தெளிந்த ஞானத்தால் அவன் உள்ளம் ஆசை, பிறவி, அறியாமை அனைத்திலிருந்தும் விடுபடுகிறது.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்கும் அஜாதசத்ரு ’தலைகீழாகக் கிடந்ததை நேராக நிமிர்த்திவிட்டதுபோல’ தன் ஐயம் விலகிவிட்டதாக மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான்.

இந்த உவமைகளின் மகத்தான அடுக்கின் காரணமாகவே  இந்த அத்தியாயத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். மனம் சோர்வுறும் தருணத்திலெல்லாம் இந்த அத்தியாயத்தைத் தேடுயெடுத்து மீண்டும் மீண்டும் படிக்கிறேன். ”துறவியாக வாழ்வதன் பயன் என்ன?” என்னும் கேள்விக்கான பதிலாக மட்டும் அதைப் பார்க்காமல் இலக்கியத்தை வாசிப்பதன் பயன் என்ன, ஒரு விமர்சகனாக வாழ்வதன் பயன் என்ன போன்ற கேள்வித்தொகைக்கான பதிலாகவும் விரிவடையச் செய்து பார்க்கமுடியும் என்று தோன்றுகிறது. இறுதியில் மானுட வாழ்வின் பெறுமதி என்ன என்னும் மகத்தான கேள்விக்கு முன்வைக்கப்பட்ட விடையாகவும் பார்க்கலாம்.

சோணதண்ட சூத்திரத்தில் சோணதண்டனுக்கும் புத்தருக்கும்   இடையில் நிகழும் உரையாடல் ஒரு முக்கியமான பகுதி. ஒருமுறை சம்பா என்னும் இடத்தில் புத்தர் தன் சீடர்களுடன் வனத்தில் தங்கியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட சம்பாநகர பிராமணர்கள் சோணதண்டனின் தலைமையில் புத்தரைச் சந்திப்பதற்காகச் செல்கிறார்கள். ஆரம்ப உரையாடலுக்குப் பிறகு புத்தர் சோணதண்டனிடம் “பிராமணர்கள் முக்கியமாக எதைப் பெற்றிருக்கவேண்டும் என பிராமணர்கள் கருதுகிறார்கள்?” என்று கேட்கிறார். அதற்குச் சோணதண்டன் “நற்குடிப்பிறப்பு, மந்திர வேதங்களின் அறிவு, காணற்கினிய தேஜஸ், ஞானம், ஒழுக்கம்  ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களைப் பெற்றிருக்கவேண்டும்” என்று பதில் சொல்கிறான்.

புத்தர் அவனிடம் “இந்த ஐந்து அம்சங்களில் ஒன்று குறைந்து நான்கு அம்சங்கள் மட்டுமே இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாமா? எந்த ஒரு அம்சம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார். சோணதண்டன் “தேஜஸை விட்டுவிடலாம். அதைத் தவிர மற்ற நான்கு அம்சங்கள் இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாம்” என்று பதில் சொல்கிறான். புத்தர் மீண்டும் புன்னகையோடு அவனிடம் “இந்த நான்கு அம்சங்களில் ஒன்று குறைந்து மூன்று அம்சங்கள் மட்டுமே இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாமா? எந்த ஒரு அம்சம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார். சோணதண்டன் “மந்திரத்தை விட்டுவிடலாம். அதைத் தவிர மற்ற மூன்று அம்சங்கள் இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாம்” என்று தன் வாதத்தை முன்வைக்கிறான். புத்தர் தொடர்ந்து அவனிடம் “இந்த மூன்று அம்சங்களில் ஒன்று குறைந்து இரண்டு அம்சங்கள் மட்டுமே இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாமா? எந்த ஒரு அம்சம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார். சோணதண்டன் “குடிப்பிறப்பை விட்டுவிடலாம். அதைத் தவிர மற்ற இரு அம்சங்கள் இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாம்” என்று சொல்கிறான். அதைக் கேட்டு அவனோடு வந்திருந்த பிராமணர்கள் கூட்டம் அவனை வசைபாடுகிறது. அவர்கள் அனைவரையும் அவன் அமைதிப்படுத்துகிறான். புத்தர் மீண்டும் சோணதண்டனைப் பார்த்து ”இந்த இரு அம்சங்களில் ஒன்று குறைந்து ஒரே ஒரு அம்சம் மட்டுமே இருப்பவனைப் பிராமணன் என்று சொல்லலாமா? எந்த ஒரு அம்சம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லலாம்?” என்று கேள்வியைத் தொடர்கிறார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சோணதண்டன் “முடியாது புத்தரே, இந்த ஒழுக்கம், ஞானம் ஆகிய இரு அம்சங்களும் ஒருவருக்கு இரு கண்கள் போன்றவை. ஒழுக்கம் ஞானத்தைத் தூயதாக்குகிறது. ஞானம் ஒழுக்கத்தைத் தூயதாக்குகிறது. ஒழுக்கம், ஞானம் ஆகிய இரண்டுக்குமே இந்த உலகில் முதலிடம். கைகளால் கையைக் கழுவுவதுபோல கால்களால் காலைக் கழுவுவதுபோல ஒழுக்கமும் ஞானமும் ஒன்றையொன்று தூய்மைப்படுத்துகிறது. இரண்டுமே முக்கியம்” என்று சொல்கிறான். புத்தர் அதை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து “ஒழுக்கம் என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன” என அவர் கேள்விகள் தொடர்கின்றன. அந்தப் பகுதி முழுவதுமே படிக்கச் சுவாரசியாமனது. ஒழுக்கம், ஞானம் இரண்டையும் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்தும் அம்சங்களாகக் குறிப்பிடுவதை நாம் கவனிக்கவேண்டும். புத்தரின் கேள்வி பிராமணனிடம் கேட்கப்பட்ட கேள்வி என்பதால், அந்த அம்சங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரியதாக நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒழுக்கமும் ஞானமும் இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமானவை.

பதினைந்து சூத்திரங்களிலும் இப்படி பலவிதமான உரையாடல்களும் விரிவான பொருள்களைத் தரவல்ல பலவிதமான உவமைகளும் நிறைந்துள்ளன. நம்மை வந்தடையும் ஒவ்வொரு கருத்தும் நம் மனத்தை நிறைக்கிறது. ஒரு கோணத்தில், சாந்தம் என்பது செயலற்றிருப்பதல்ல, செயலில் மூழ்கியிருப்பது என்பதையும் சொல்லாமல் சொல்லி புரிய வைக்கிறது.

மகாபரிநிர்வாண சூத்திரத்தில் இதையொட்டிய உரையாடல் உள்ளது. விகாரத்தில் துறவிகள் சாந்தமாக இருப்பதையொட்டி அந்த உரையாடல் அமைந்திருக்கிறது. ஒரு முறை ஒரு துறவி ஒரு காட்டின் பாதையில் பிரயாணம் செய்கிறார். களைப்பின் காரணமாக வழியில் ஒரு மரத்தடியில் அமர்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு ஐந்நூறு வண்டிகள் அவ்வழியே கடந்து செல்கின்றன. பிறகு சிறிது நேரத்துக்குப் பிறகு யாரோ ஒரு வழிப்போக்கன் அந்த வழியில் எதையோ தேடியபடி வருகிறான். மரத்தடியில் துறவியைப் பார்த்து ”இந்த வழியாக வண்டிகள் சென்றதைப் பார்த்தீர்களா?” என்று கேட்கிறான். துறவி ”பார்க்கவில்லை” என்று பதில் சொல்கிறார். வழிப்போக்கன் “வண்டி சென்ற சத்தத்தையாவது கேட்டீர்களா?” என்று மீண்டும் கேட்கிறான். அவர் அதையும் கேட்கவில்லை என்று சொல்கிறார். “தூங்கிவிட்டீர்களா?” என்று கேட்கிறான் வழிப்போக்கன். துறவி இல்லை என்கிறார். ”விழித்திருந்தீர்களா?” என்னும் கேள்விக்கு “ஆமாம்” என்று பதில் சொல்கிறார். வழிப்போக்கனுக்கு துறவியின் சாந்த நிலை ஆச்சரியம் அளிக்கிறது. எதையும் பார்க்காத, எதையும் கேட்காத விழிப்புநிலையின் சாத்தியப்பாட்டை அவன் உணர்ந்துகொள்கிறான்.


வாசிக்கும் போக்கில் புத்தரின் ஒவ்வொரு உரையாடலும் நம்மிடம் நிகழ்த்தப்படும் உரையாடலைப்போலவே தோன்றுகிறது. புத்தர் நம்முடன் பேசுவதாக உணரும் பேரனுபவம் மகத்தானது.

(புத்தகம் பேசுது இதழில் ‘கதவு திறந்தே இருக்கிறது’ என்னும் தலைப்பில்  ஒரு தொடரை மே மாதம் முதல் எழுதி வருகிறேன். அத்தொடரின் முதல் அத்தியாயம் இது)