”பறந்துபோன கிளி திரும்பிவரும்ன்னு இன்னுமாடா நம்பற நீ?” என்று ஏளனமாகக் கேட்டார் செல்லமுத்து சித்தப்பா. நெருப்பில் வைத்த இரும்புவலைக்கரண்டியின் உள்குழியிலேயே என் கவனம் பதிந்திருந்தது. முதலில் ஒவ்வொரு கம்பியாக சிவக்கத் தொடங்கி, பிறகு அந்தக் கரண்டியே நெருப்பில் பூத்த மலர்போல மாறியது. பக்கத்தில் வைத்திருந்த கூடையிலிருந்து உலர்ந்த எருக்கம்பூவொன்றை எடுத்து கரண்டியில் போட்டேன். மறுகணமே, அது புகைவிட்டு எரிந்து, சிவந்து, பிறகு சுற்றியும் அடர்த்தியான நெடி பரவ கருகி சுருண்டு அடங்கியது. உடனே சாம்பலை முறத்தில் கவிழ்த்துவிட்டு அடுத்த பூவை எடுத்துப் போட்டேன்.
“வந்துடுவாரு சித்தப்பா. எங்கனா வண்டி கெடைக்காம தடுமாறிங் கெடக்கறாரோ என்னமோ” கரண்டியின்மீது வைத்த கண்களை விலக்காமல் பதில் சொன்னேன். அடுத்தடுத்து பூக்களைப் போட்டுக்கொண்டே இருந்தேன்.
“நம்பறதுக்கு ஒங்களாட்டம் நாலுபேரு இருக்கறதனாலதான், அவனாட்டம் நாலு துரோகிங்களும் இருக்கானுங்கடா. மொதல்ல ஒங்கள அடக்கணும்….” அக்கம்பக்கம் பார்த்துவிட்டு இடுப்பில் வைத்திருந்த பீடிக்கட்டியிலிருந்து ஒரு பீடியை உருவி நெருப்பில் பற்றவைத்து வேகமாக இழுத்து வேறுபக்கமாகத் திரும்பி புகையை விட்டார். அவர் திரும்பிய திசையில் பப்பாளிமரத்தடியில் நாய் படுத்திருந்தது. இரு புள்ளிகள்போல அதன் கண்கள் மின்னின.
“நீ ஒரு பைத்தியம். ஒங்க தாத்தா ஒரு பைத்தியம். மணி என்ன தெரியுமா இப்ப? ஒம்போது மணி சங்கு ஊதிட்டான்.”
பதில்
சொல்லாமல் அவரை ஓரக்கண்ணால் பார்த்தபடி என் வேலையில் மூழ்கினேன்.
நோயாளிகளின்
கொட்டகையிலிருந்து
வெளியே வந்த முருகேசன் மாமா நேராக எங்களிடம் வந்தார். “மாணிக்கம் வந்துட்டானா?” என்று கேட்டபடியே ஒரு கீற்றை இழுத்துபோட்டு உட்கார்ந்தார்.
“அவன் கதையைத்தான் பேசிட்டிருக்கேன்” என்றபடி புகையை
இழுத்தார் சித்தப்பா. “இங்க இருக்கிற குறிஞ்சிப்பாடிக்கு போய் வர ஒரு ஆளுக்கு
எவ்வளோ நேரமாவும்? போவ மூணுமணிநேரம், வர மூணுமணிநேரம். பணத்த குடுத்து சரக்கு
வாங்க ஒரு ரெண்டுமணிநேரம். காலையில எட்டுமணிக்கு கெளம்பன ஆளு நாலுமணிக்கு
திரும்பியிருக்கணும். ஒம்போது தாண்டியும் போன ஆளு வரலைன்னா என்ன அர்த்தம்? கம்பி
நீட்டிட்டான்னுதான?”
முருகேசன் மாமா சிறிதுநேரம் எதுவும் பேசாமல் நெருப்பையே
பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, “காலையில கெளம்பும்போதே பெரியவரு சொன்னது
ஞாபகமிருக்குதில்ல? திரும்பி வந்தா அவனுக்கு கடசி வரைக்கும் இங்க இடம் உண்டு. வரலைன்னா அவன் வழிச்செலவுக்கு குடுத்த பணம்னு
நெனச்சிக்குவோம்ன்னாரு. அதுக்கு மேல பேச என்ன இருக்குது?” என்றார்.
“கண்டவன்லாம் ஐந்நூறு ஆயிரம்னு இந்த ஊட்டு பணத்த
சாப்படறான். நமக்கு ஒரு ஐந்நூறு ரூபா குடுங்கன்னு கேட்டா ஏன் எதுக்குன்னு ஆயிரத்தெட்டு
கேள்வி வருது”
சித்தப்பா பீடியை தரையில் குத்தி அணைத்தார்.
“நீ எப்ப கேட்ட?”
“போன மாசம் பையன் காலேஜ் டூருக்கு ஐந்நூறு ரூபா வேணும்ன்னு கேட்டான். படிக்கற
பையன், கூட்டத்தோடு கூட்டமா நாலு
எடத்துக்கு போய் வந்தாதான அவனுக்கும் ஒரு உலக அனுபவம் கெடைக்கும்ன்னு நெனச்சி
பெரியவர பார்த்து பணம் வேணும்ன்னு சொன்னன்.
வாயே தெறக்கலை தெரியுமா?”
சித்தப்பாவின் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டது.
“கொடைக்கானல் ஏரியில படகு கவுந்து எழுபது எண்பது
பள்ளிக்கூட்த்துப் பசங்க செத்துட்டுதுன்னு நியூஸ் வந்த நேரம் அது சித்தப்பா,
அதனாலதான் தாத்தா வேணாம்னாரு......”
சாம்பல் தூளை கிளறியபடி சொன்னேன்.
“எல்லாத்துக்கும் ஒரு பதில தயாரா வச்சிருப்பியே நீ.
தாத்தாவுக்கு பொருத்தமான பேரன். விக்கல் வந்து உயிர் விட்டவன் நூறு பேரு
இருப்பான். அதுக்காக உலகத்துல யாருமே தண்ணிய குடிக்காமலா இருக்காங்க?”
சித்தப்பாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. பூ கருகுவதையே
பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
“வெறும் எல தழ வேர் மரம் மட்டைக்கு இருக்கிற மரியாதைகூட இங்க ஒரு மனுசனுக்கு
கெடயாது. இன்னும் ரெண்டே ரெண்டு வருஷம்தான். பாத்துகிட்டே இரு. தொண்ணூத்தி ஏழுல இந்த வில்லியனூரவிட்டே
கெளம்பிடுவேன்.....”
“எங்க போவ?”
“எங்கயோ போவேன். ஏன் போறவன்லாம் சொல்லிட்டுதான் போறானா?”
உள்வீட்டின் கதவைத் திறந்துகொண்டு பெரிய தாத்தா வந்தார். “”என்னடா சத்தம்?”” என்றார். சித்தப்பா சட்டென அமைதியானார். முற்றத்தைக்
கடந்து மெதுவாக அடுப்பின்பக்கமாக வந்தார் தாத்தா. குனிந்து முறத்திலிருந்த சாம்பலை
குச்சியால் கிளறிப் பார்த்துவிட்டு திருப்தியோடு தலையசைத்தார். பிறகு, “பூ மட்டும்தானா? எல?” என்று மெதுவாகக்
கேட்டார்.
“இருக்குது தாத்தா. இன்னொரு கூடையில வச்சிருக்கேன். இந்த வேல
முடிஞ்சதும் அத ஆரம்பிச்சிடுவேன்”
காதில் வாங்கியபடி வாசல்வரைக்கும் சென்ற தாத்தா படலை ஒட்டி
நின்று தெருவைப் பார்த்தார். சில
நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து “ஏன்டா அவன இன்னம் காணம்?” என்று முனகியபடி
விலகிச் சென்றார். சட்டென திரும்பி முருகேசன் மாமாவிடம் “அந்த கள்ளக்குரிச்சி
ஆளுக்கு மருந்து குடுத்துட்டியா?”
என்று கேட்டார்.
“தசமூலஹரீதகீ லேகியத்துல ஒரு கரண்டி குடுத்தேன். தைலம்தான்
தேச்சிவிடணும். படுக்க போவறதுக்கு முன்னால
தேச்சிடுவேன்.”
”காளாப்பட்டுக்காரருக்கு?”
“தான்வந்திரகிருதம் குடுத்துட்டேன்.”
வீட்டுக்குள் செல்வதற்காக கதவுவரை சென்ற தாத்தா, திரும்பி வந்து
சுவரோரமாக போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து
வெற்றிலை போடத் தொடங்கினார்.
ஓரக்கண்ணால் பார்த்தபடி உலர்ந்த எருக்கம் இலைகள் வைக்கப்பட்டிருந்த கூடையை
அடுப்புக்கருகில் இழுத்தேன்.
முருகேசன் மாமா பக்கத்தில் வந்து ஒவ்வொரு இலையாக எடுத்து தாள்போல மடித்து
இரண்டாகவும் நாலாகவும் சின்னச்சின்ன துண்டுகளாக கிழித்து ஒரு தட்டில் வைத்தார். எடுத்து
கரண்டியில் போட்டதும் மறுகணமே சுருண்டு கருகியது. செல்லமுத்து
சித்தப்பா ஒரு கிடுக்கியை எடுத்துவந்து, எரிவதற்கு எளிதாக இலைச்சுருளை விலக்கிப் பிடித்தார்.
”வருவான்னு
நெனைக்கறியா நீ?”
முருகேசன் மாமா கேள்வியோடு ரகசியக்குரலில் பேச்சைத் தொடங்கினார். “நெனப்புதான் பொழப்ப கெடுக்குது” என்று குத்தலாக
பதில் சொன்னார் சித்தப்பா.
”நாய குளுப்பாட்டி நடு ஊட்டுல வச்சாலும் அது வால கொழச்சிகினு போற
எடத்துக்குத்தான் போவுமாம்.
பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்கு பழய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு
எங்கனாச்சிம் ரோட்டுல உழுந்து கெடப்பான்....”
அந்தக் குத்தலும் கிண்டலும் ஆறு மாதங்களாக நடந்ததையெல்லாம்
நினைக்க வைத்தன.
வைத்தியசாலைக்கு வழக்கமாக வரக்கூடிய ஒரு ரிக்ஷாக்காரர் ஒருநாள் இரவு
நேரத்தில் அடிபட்டு சுய உணர்வில்லாத நிலையில் மாணிக்கம் மாமாவை ஏற்றிவந்து
இறக்கியதெல்லாம் நினைவில் படம்படமாக விரிந்தது.
“யாருடா
அது?”
உள்ளே இருந்துவந்த பெரிய தாத்தா அன்று ரிக்ஷாக்காரரிடம் கேட்டார்.
“வெளியூரு
ஆளு தாத்தா.
யாருன்னு தெரியலை.
பிராந்திக்கடைக்குப் பக்கத்துல உழுந்து
கெடந்தான். காசில்லாம கடயில பூந்து பிராந்தி வேணும்ன்னு கேட்டான்போல. அவனுங்க
வெரட்டனதும் அங்க குடிச்சிகினிருக்கவனுங்க கிட்ட போய் கை நீட்டியிருக்கான். அவனுங்களும் திட்டி தள்ளி உட்டானுங்க. என்னமோ வேகத்துல யாரோ
ஒருத்தன் கையிலிருந்த எச்சில் பிராந்திய புடுங்கி குடிச்சிட்டானாம். உடனே வந்தவன்
போனவன்லாம் சேந்து ஆடுமாட்ட அடிக்கறாப்புல அடிச்சி பாலத்துக்குப் பக்கத்துல
உருட்டி உட்டுட்டானுங்க.
அப்பதான் ரயில்வே கேட் வரைக்கும் ஒரு சவாரிய கொண்டும்போயி உட்டுட்டு
பாலம்பக்கமா வந்து வண்டிய நிறுத்தனன். பொணமோ என்னமோன்னு
பயத்துல நெஞ்சு திக்குதிக்குனு அடிச்சிகிச்சி. பக்கத்துல
முட்டபரோட்டாகாரன்தான் விஷயத்த சொன்னான். கிட்டபோயி மூக்குல கையவச்சி பார்த்தேன். மூச்சு இருந்திச்சி. சரி, என்ன ஆனாலும்
ஆவட்டும்னு நான்தான் இங்க ஏத்திகினு வந்தன்..”
அவரை இறக்கி மரக்கட்டிலில் கிடத்தும்படி சொன்னார் தாத்தா. மாமாவும்
சித்தப்பாவும் மற்றுமிருந்த வைத்தியசாலை ஆட்களும் ரிக்ஷாக்காரரோடு சேர்ந்து அவரை
இறக்கினார்கள்.
எலும்புக்கூடுபோல இருந்தார்.
முறுக்கிய துணிபோல குச்சியான கைகள். ஒட்டிவிட்ட வயிறு. முழங்காலுக்குக் கீழே ஓர் ஆல இலை அளவுக்கு கொதகொதவென புண் இருந்தது. கருப்பும் நரையும் கலந்த தலைமுடி காதுகளை மூடியபடி
வளர்ந்திருந்தது.
சித்தப்பாவும் மாமாவும் அவர்மீது
தண்ணீர் ஊற்றிக் கழுவி,
கிழிந்த துணிகளை அகற்றிவிட்டு வேறொரு வேட்டியைச் சுற்றினார்கள். மூச்சின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப அவருடைய
எலும்புமார்பு உயர்ந்து தாழ்ந்தது. தலை மட்டும் தொங்கி, தனியாக ஆடியது. திடீரென கால்களை முறுக்கினார். இடுப்பு வளைந்து
அடங்கியது.
தாத்தா அவர் கையைத் தொட்டு நாடி பார்த்தார். பிறகு
வீட்டுக்குள் சென்று ஒரு சின்ன சீசாவைக் கொண்டுவந்தார். சித்தப்பா அவர்
முகவாயைத் தூக்கிப் பிடிக்க மூக்கின் வழியாக
ஒரு சொட்டு மருந்தைப் புகட்டினார் தாத்தா. அவர் முகத்தில் தெரியும் மாற்றங்களையெல்லாம்
கொஞ்சநேரம் அசையாமல் பார்த்தார்.
பிறகு,
”அறைக்குள்ளாற குடத்துல கருங்காலிகட்ட தண்ணி இருக்கும். அதுல கொஞ்சம்
எடுத்து அந்த கால்புண்ண கழுவி உடுடா. அது போதும். மத்ததயெல்லாம்
வெடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்”
என்று என்னிடம் சொல்லிவிட்டு உள்ளே
போய்விட்டார் .
“நா வரேங்க
ஐயா”
என்றபடி ரிக்ஷாக்காரர் போய்விட்டார். சித்தப்பாவும் மாமாவும் என்னை காவலுக்கு வைத்துவிட்டு
சாப்பிடச் சென்றுவிட்டார்கள்.
விடிந்து வெகுநேரத்துக்குப் பிறகுதான் அவர் கண்விழித்தார். அப்போது அவர் போட்ட சத்தத்தில் வைத்தியசாலையில்
இருந்தவர்கள் எல்லோரும் ஒருகணம் அவர்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். நாலைந்து
அலறலுக்குப் பிறகு அவர் கூச்சல் தானாகவே அடங்கியது. நாங்கள் அவரை
நெருங்குவதற்குள் அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார். மிரட்சியோடு
நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்தார்.
“போய் பல்
விளக்கிட்டு வா.
சுக்குக்காப்பி தயாரா இருக்குது” என்றார் சித்தப்பா.
அவர் வாய் எதையோ முனகியது. தெளிவாக எதுவும்
கேட்கவில்லை.
அதனால் சித்தப்பா சொன்னதையே மீண்டும் சொன்னார்.
அவர் தன் சக்தியையெல்லாம் திரட்டி மறுபடியும் எதையோ
யாசிப்பதுபோலக் கேட்டார்.
சித்தப்பாவுக்கு எதுவும் புரியவில்லை. டீயா,
பாலா,
நீராகாரமா,
தண்ணியா என்று எதைஎதையோ கேட்டு அவர்
விருப்பத்தை அறிய சித்தப்பா முயற்சி செய்தார். அவர் உதடுகளின் அசைவை வைத்து ஓர் ஊகத்தில் ”பிராந்தியா?” என்று கேட்டார் மாமா. ”ம்ம்”
என்று தலையசைத்தார் அவர்.
அப்போது அவர் கண்களில் தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.
குளித்து,
வேட்டிமாற்றி,
திருநீறு துலங்க வெளியே வந்த தாத்தாவிடம் “பிராந்தி வேணுமாம்” என்று
தெரியப்படுத்தினார் மாமா.
தாத்தா சிரித்தார். “அவனா கேக்கறான்? அவன் நரம்புவலி கேக்கவைக்குது. நல்லா முத்தின
குடிகாரன்போல.
எத்தன வருஷமா குடிக்கறானோ என்னமோ. ரத்தக்குழாய்ல சூடு ஏறிஏறி
உள்பக்கத்துல கபப்பூச்சே காய்ஞ்சிபோயிடுச்சி. ஈரமே இல்லாத
பாலைவனமா கெடக்குது அவன் ஒடம்பு.
இவன மொதல்ல மனுஷனாக்கணும்.
அதுக்கப்புறம்தான் வியாதிக்கு மருந்து தரணும்” என்றபடி பரிதாபமாக அவரைப் பார்த்தார்.
“நமக்கு
எதுக்கு வம்பு?
யாரு,
எந்த ஊருன்னுகூட தெரியாது.
கையில பத்தோ இருவதோ குடுத்து அனுப்பிவச்சிரலாமே.....” பேசத் தொடங்கிய வேகத்திலேயே தாத்தாவின் பார்வையைப் பார்த்ததும்
அடங்கிவிட்டார் சித்தப்பா.
“இந்த
வேலிய தாண்டி உள்ள வந்துட்டா, அது யாரா
இருந்தாலும் அவுங்க நோயாளிங்க.
அவுங்க நோய்க்கு மருந்து குடுக்கறது நம்ம கடமை, புரிஞ்சிதா?” என்று சொன்னார் தாத்தா. பிறகு, அவரிடம் பணத்தைக்
கொடுத்து,
“யாரையாவது அனுப்பி ஒரு பாட்டில் பிராந்தி வாங்கியாரச் சொல்லு” என்றார்.
தாத்தாவின் அணுகுமுறையில் எப்போதும் ஒரு விசித்திரம்
இருக்கும்.
சில மாதங்களுக்கு முன்னால் சொறிந்தால்
நீர் வடிகிற அளவுக்கு உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பாளம்பாளமாக வெடித்த நிலையில்
வந்த ஒரு நோயாளிக்கு வெடித்த இடத்தில் தடவ ஒரு சொட்டு மருந்துகூட தடவ
அனுமதிக்கவில்லை.
ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை, வேப்பம்பட்டை, கருங்காலிப்பட்டை, புங்கப்பட்டைன்னு ஏழு பட்டைகளை ஒன்றாகச் சேர்த்து நசுக்கி
தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, ஒரு வேளைக்கு இரண்டு கரண்டி என்கிற கணக்கில்
நாற்பத்தியெட்டு நாட்கள் குடிக்கவைத்தார். இருந்த
இடத்தின் அடையாளமே தெரியாமல் வெடிப்புகள் குணமாகிவிட்டன.
பிராந்தி வந்தது. உள்ளே போய் ஒரு சின்ன கோப்பையை எடுத்துவரச் சொன்னார் தாத்தா. பிறகு, ஐம்பது மில்லி
அளவுக்கு கோப்பையில் ஊற்றச் சொன்னார். கைநடுங்க கட்டிலில் உட்கார்ந்திருந்தவரிடம் கொடுப்பதற்காகச்
சென்றபோது,
“அப்பிடியே தராதடா.
ஒரு தம்ளர் தண்ணில கலக்கிக் குடு” என்றார்.
அதை வாங்கிக் குடித்த பிறகுதான் அவர் கண்கள் அலைபாய்வது நின்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு தாத்தா அவரை நெருங்கி வந்து கையைச் சோதித்தார். இடது கை, இடது கால் இரண்டுமே முடங்கியிருந்தன. அவரைக் குனிய வைத்து தோள்பக்கம் தட்டிப் பார்த்தார்.
“எந்த ஊரு?”
“காட்டுமன்னார்கோயில்”
“இங்க எப்பிடி வந்த?”
”பெரியாஸ்பத்திரியில பக்கவாதத்துக்கு மருந்து குடுக்கறாங்கன்னு சொல்லி பெரியவன்தான் அழச்சி வந்தான். நெறயா டெஸ்ட் எடுக்கணும்ன்னு பெரிய டாக்டரு எழுதி குடுத்தாரு. ஆஸ்பத்திரி மிஷின் கெட்டுபோச்சி. வெளியில போயி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாரு. பையன்கிட்ட அந்த அளவுக்கு பணமில்ல. அது எனக்கும் தெரியும். டெஸ்ட்டும் வேணாம், கிஸ்ட்டும் வேணாம், வாடான்னு சொன்னன். ரெண்டு பேரும் வெளிய வந்து பூங்காவுல உக்காந்தோம். பையன் ரொம்ப யோசனையாவே இருந்தான். அப்பறமா இங்கயே இரு, ஒரு டீ குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு எழுந்தான். எனக்கு ஒரு குவார்ட்டர் பிராந்தி வாங்கியாரியாடான்னு வெக்கமில்லாம அவன்கிட்டயே கேட்டன். ம்ம்னு தலயாட்டிகினே போனான்….”
பேச்சை
நிறுத்தி மூச்சு வாங்கினார். மறுகணம் அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே ஒடுங்கியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பற்களைக் கடித்து வேதனையை விழுங்குவது தெரிந்தது.
“ரொம்ப நேரம் கழிச்சிதான் அவன் இனிமேல வரமாட்டான்னு புரிஞ்சிது. அந்த காலத்து பட்டாளத்துக்காரன் நான். பனிகொட்டற மலையில தனியா காவலுக்கு நிக்கறதுதான் என் வேலை. காட்டுல நின்னிருக்கேன். ஆத்தோரமா நின்னிருக்கேன். தனிமை எனக்கு எப்பவுமே புதுசில்ல. ஆனா அந்த நிமிஷம் புதுசா தெரிஞ்சிது. யாருக்குமே தேவையில்லாதவனா போயிட்டமேன்னு அவமானத்துல குன்னி குறுகி போயிட்டேன்.
“சம்சாரம், மத்த புள்ளைங்க…?”
“எல்லாரும் சேர்ந்துதான முடிவு எடுத்திருப்பாங்க.”
“அப்பிடி கசந்துபோற அளவுக்கு என்ன காரணம்?”
அவர்
ஒருகணம் தரையையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார். பிறகு, “பாழா போன குடிதான், வேற என்ன?” என்றார்.
“பட்டாளத்துல கத்துகிட்ட பழக்கம். இங்க வந்தும் உடமுடியலை. எனக்கு கெடச்ச பென்ஷன் பணத்த குடிச்சியே செலவு செஞ்சேன். அப்பறம் அந்த கார்டயே அடமானம் வச்சி குடிச்சேன். கொஞ்ச காலம் ஒரு கம்பெனியில செக்யூரிட்டியா வேல செஞ்சி அந்த பணத்துலயும் குடிச்சேன். குடிக்காம ஒரு வேளை கூட என்னால இருக்கமுடியலை. பணத்துக்காக பொண்டாட்டி புள்ளைங்கள கண்ணுமண்ணு தெரியாம அடிச்சிருக்கேன். போன வருஷம் ஒரு கையும் காலும் பக்கவாதத்துல
வெளங்காம போனதுக்கப்புறம்தான் ஆட்டம்லாம் நின்னுது.”
“குடிய நிறுத்திட்டியா?”
“அவ்ளோ சுளுவான வேலையா அது ஐயா? இந்த உடம்புலேருந்து உயிர் பிரியற அன்னிக்குத்தான் அந்த சனியன நிறுத்தமுடியும்போல.”
“அப்புறம் என்னாச்சி?”
“என் கை உழுந்ததும் பையன் கை ஓங்கிடுச்சி. காலையில ஒரு அவுன்சு. மதியானம் ஒரு அவுன்சு. ராத்திரிக்கு ஒரு அவுன்சு. அந்த கருமாந்திரம் புடிச்ச பிராந்தி நீ இருக்கற எடத்துகே வரும். அதோட அடங்கிக் கெடந்தா ஒனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லதுன்னான். அப்படியே கொஞ்ச காலம் ஓடிச்சி. மருமவகாரி வந்து எல்லாத்தயும் கொழப்பிட்டா.”
பேச்சை
நிறுத்திவிட்டு
முற்றத்துக்கு
வெளியே இருந்த பப்பாளிமரத்தையே சில கணங்கள் வெறித்தார். அவரைப்பற்றி தாத்தா என்ன நினைக்கிறார் என்பதை அவர் பார்வையிலிருந்து புரிந்துகொள்ளமுடியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் மறுபடியும் பேசத் தொடங்கினார்.
“ஆஸ்பத்திரி பக்கமாவே ரெண்டுமூணு நாளு சுத்திங்கெடந்தேன். இருந்த காசில பாக்கெட் சாராயம் வாங்கி குடிச்சேன். அதுவும் தீந்துபோனதும் பைத்தியம் புடிச்சாப்புல ஊரு முழுக்க கால இழுத்து இழுத்து நடந்தேன். நடுக்கம் அதிகமாய்ட்டுது. கண்ணுல தெரியற கடை முன்னால நின்னு ஒருவாய் ரெண்டு வாய்னு வாங்கி குடிச்சேன். எங்கனா போவலாம்ன்னு காலையில ரயில்ல ஏறி உக்காந்தேன். டிக்கட் செக்கர் புடிச்சி வில்லியனூருல எறக்கி உட்டுட்டான். ஊருக்குள்ள பிராந்திக்கடய பார்த்ததும் ஒரு வாய் கெடைக்காதான்னு நின்னு கைய நீட்டினேன். அதுக்குள்ள ஆளுங்க கூடி அடிச்சிட்டாங்க…..”
பேச்சை
நிறுத்திவிட்டு
தரையை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தார்
அவர். தாத்தா அவரைப் பார்த்து ”உன்ன குணமாக்கறதோ, உன் குடிய மறகக்வைக்கறதோ ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. எல்லாத்துக்கும் மருந்து இருக்குது.” என்று பொறுமையாகச் சொன்னார்.
மறுகணம்
தாத்தாவை நிமிர்ந்து பார்த்து கெஞ்சுவதுபோல “ஐயா, எனக்கு மருந்தே வேணாங்க. ஒரே
நிமிஷத்துல என் உயிர் போயிரணும். அப்பிடி ஒரு மருந்து இருந்தா குடுங்க. அது போதும்” என்றார்.
தாத்தா
சிரித்தார்.
“ஏதோ ஒரு வெறுப்புல பேசற நீ. நான் சொல்றமாதிரி கேளு. அது போதும். ஆறு மாசத்துல நீ ஆளே மாறிடுவ.”
அவர்
தாத்தாவையே நம்பமுடியாமல் பார்த்தார்.
”என்ன அப்படி பாக்கற? உன் பேரு என்ன.?”
“மாணிக்கம்”
தாத்தா
என்னை அழைத்து, “இப்ப குடுத்தமில்ல, அதே அளவுல காலையிலயும் ராத்திரியிலயும் இந்த மாணிக்கத்துக்கு மருந்தா நெனச்சி குடுக்கணும். அது உன் வேல, புரியுதா?” என்றார் தாத்தா. நான் வேகமாக தலையசைத்தேன்.
”முருகேசா” என்று மாமாவை அழைத்தார் தாத்தா. உரலில் மருந்தை இடித்துக்கொண்டிருந்த மாமா எழுந்து வந்தார். ”இங்க பாரு, மூக்குல இந்த சொட்டு மருந்துமட்டும் வேளாவேளைக்கு போடு. பட்டைத்தண்ணியால அப்பப்ப கழுவிகிட்டே இரு. ஈ மொய்க்காம பார்த்துக்கோ….”
அதற்குப்
பிறகு மூன்று நாட்களுக்கு தாத்தா வேறு வேலைகளில் மூழ்கியிருந்தார். நாலாவது நாள் காலையில் பிராந்தி தரவேண்டிய நேரத்தில் தாத்தா நோயாளிக்கொட்டகைக்குள் வந்தார். மாணிக்கம் அவரை வணங்கினார்.
“மாணிக்கம், இன்னையிலேருந்துதான் உனக்கு மருந்து. உனக்காகவே தயார் செஞ்சது” என்றபடி ஒரு சீசாவை எடுத்து என்னிடம் கொடுத்தார் தாத்தா. ”இது ஆஸவாரிஷ்டம். இவனுக்கு பிராந்தி குடுக்கும்போது, குப்பியில இருக்கற பிராந்தியிலேருந்து ஒரே ஒரு கரண்டி எடுத்து கீழ ஊத்திரு. அதுக்கு பதிலா இந்த ஆஸவாரிஷ்ட மருந்துலேருந்து ஒரு கரண்டிய
எடுத்து கலக்கிக் குடு” என்றார். அவர் சொன்னதுபோலவே செய்து மாணிக்கத்திடம் கொடுத்தேன். அவர் மெதுவாக அதை அருந்திமுடித்தார். அதுவரை பொறுமையாக எங்களைப் பார்த்துக்கொண்டே இருந்த தாத்தா, ”இன்னிக்கு ஒரு கரண்டின்னா, நாளைக்கு ரெண்டு கரண்டி, அப்புறம் மூணு கரண்டி. அஞ்சாவது நாள் பிராந்தியும் ஆஸவாரிஷ்டமும் பாதிபாதியா இருக்கும். பத்தாவது நாள் பிராந்தியே இருக்காது. ஆஸவாரிஷ்டம் மட்டும்தான் இருக்கும். புரியுதா?” என்றார். தாத்தாவின் திட்டத்தைக் கேட்டு குதிக்கவேண்டும்போல இருந்தது. பூரிப்போடு தலையை ஆட்டினேன்.
பத்து
நாட்களில் நிகழ்ந்த மாற்றத்தை ஒரு அதிசயம் என்றே சொல்லவேண்டும். மாணிக்கம் மெல்லமெல்ல தெளிவு பெற்றார். அவர் பார்வையில் பழைய பதற்றம் சுத்தமாக இல்லை. கூர்மை ஏறியிருந்தது. எல்லாவற்றைக்காட்டிலும் முக்கியமான விஷயம் பிராந்தி பாட்டிலை என்னமோ ஒரு மருந்து பாட்டில் என்ற சாதாரணப் பார்வையோடு மாணிக்கம் கடந்துபோனார். காலில் உறுதி ஏறியதும், இழுத்து இழுத்து வைத்தியசாலையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். உட்கார்ந்தவாக்கில் களைக்கொத்தியால் வேலியோரமாக இருந்த புல்லையெல்லாம் செதுக்கி சீராக்கி, படல் கட்டி ஒழுங்குபடுத்தினார். ”சுந்தரம் சுந்தரம்” என்று என்னை
வாய் ஓயாமல் கூப்பிட்டு பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு பழைய பட்டாளத்துக்கதையைச் சொன்னார்.
ஒருநாள்
தாத்தாவிடம் நேரிடையாகவே, “சுந்தரம் ரொம்ப சூட்டிகையான பையன். உங்களமாதிரியே வளர்த்துடுங்க” என்று
நெகிழ்ச்சியான
குரலில் சொல்வது கேட்டது. நான் அப்போது அம்மியில் குப்பைமேனித்தழையை அரைத்துக்கொண்டிருந்தேன்.
“பொண்ணுவயித்து பேரன். இவன பெத்த கையோட ஜன்னியில போய் சேர்ந்துட்டா மகராசி. அதுலேருந்து கூட்டத்தோட கூட்டமா இங்கதான் வளந்து வரான். பள்ளிக்கூடத்துல படிக்கறான். படிப்பு நேரம் போவ இங்க கூடமாட ஒத்தாசயா இருப்பான்.”
அடுத்த
இருபது நாட்களும் ஆஸவாரிஷ்டம் மட்டுமே கொடுக்கச் சொன்னார் தாத்தா. அதற்குப் பிறகு அதையும் நிறுத்திவிட்டார். அதை அடுத்த இரண்டுமாத காலம் வாதத்தை நீக்கும் மருந்துகளைக் கொடுக்கச் சொன்னார். காலையிலும் மாலையில் மூலிகைக்குளியல். எண்ணெய் தடவுதல். ஒவ்வொரு விரலாகப் பிடித்து எண்ணெய் தடவும் சமயத்தில் மாணிக்கம் எனக்கு பல கதைகளைச் சொன்னார். காட்டுவிலங்குகள்பற்றி ஏராளமான கதைகளை அவர் தெரிந்துவைத்திருந்தார்.
நாலாவது
மாதத்தில் இழுத்து நடப்பது தானாகவே நின்றது. நேராகவே காலைமடித்து அடியெடுத்துவைத்தார். பிறகு, ஒரு கோலையூன்றி நடக்கப் பழகினார். தினமும் மாலையில் நான் அவரை வீட்டுக்கு அருகில் இருந்த கோவில்வரைக்கும் அழைத்துச் சென்று திரும்பினேன். ஆறாம் மாதத்தில் அவருக்கு அந்த ஊன்றுகோலும் தேவைப்படவில்லை. வழக்கமான நடையை அவரால் இயல்பாகவே நடக்கமுடிந்தது. காலையிலும் மாலையிலும் சங்கராபரணி ஆற்றுப்பாலம் வரை அவரை அழைத்துச் சென்று திரும்பினேன்.
ஒருநாள்
காலையில் மாணிக்கம் தாத்தாவின் காலில் விழுந்து அழுதார். ‘நீங்க கடவுள் அவதாரம்” என்றார்.
“அப்படிலாம் பெரிய பேச்சு பேசாத. மொதல்ல ஏந்துரு”
தாத்தா
அவர் தோளைத் தட்டி, “நீ ஊருக்குப் போறதுன்னா தாராளமா போவலாம். இனிமே உனக்கு மருந்து தேவைப்படாது” என்றார். அதைக் கேட்டு அவர் அழுதுவிட்டார். சில கணங்களுக்குப் பிறகு கண்ணீரைத் துடைத்தபடியே, புன்னகையோடு “நான் போகலைங்க ஐயா” என்றார். தாத்தா அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தார். “ஆமாங்க. உங்க நிழல்லயே என் மிச்ச காலத்த கழிச்சிடறேன்யா. நாலு பேருக்கு பிரயோஜனமா இருக்கறதுக்கு எனக்கும் ஒரு வாய்ப்பு குடுக்கணும்” என்று கெஞ்சினார் மாணிக்கம். தாத்தா அவரையே சில நிமிடங்கள் பார்த்தார். பிறகு, “அதுதான் உன் விருப்பம்னா அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஏம்பலம்
பக்கத்தில் எங்களுக்குச் சொந்தமாக ஒரு மூலிகைத் தோட்டம் இருந்தது. வைத்தியசாலைக்குத் தேவையான மூலிகைகளை அங்கிருந்துதான் கொண்டுவரவேண்டும். என்னோடு வந்து மாணிக்கம் மாமாவும் மூலிகைகளைப்பற்றித் தெரிந்துகொண்டார். திடீர் திடீரென எழும் தேவைகளையொட்டி மருந்து, வேர், பட்டைகள் வாங்கிவர வேலூர், செங்கல்பட்டு, குறிஞ்சிப்பாடி, மரக்காணம் என பல இடங்களுக்கு தாத்தா என்னை அனுப்பிவைத்தார். அப்போது அவரும் துணைக்கு வந்து இடங்களைத் தெரிந்துகொண்டார்.
காலையில்
நந்தியாவட்டைப்பால்
வாங்கிவர குறிஞ்சிப்பாடிக்குப் புறப்பட்ட சமயத்தில், “ஒரே எடத்துக்கு எதுக்குடா ரெண்டு பேரா போறிங்க? அவனுக்குத்தான் எல்லா எடங்களும் பழகிடுச்சில்ல. அவனே போவட்டும் அனுப்பு” என்றார் தாத்தா.
நான் தயக்கத்தோடு அவரைப் பார்த்தேன்.
“இந்த எடத்து ஆளா இருக்கணும்னு அவனுக்குள்ள ஒரு எண்ணம் உழுந்திரிச்சி. ஒன்னொன்னா சொந்தமா கத்துக்க நாமதான வாய்ப்பு குடுக்கணும்” . ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை மாணிக்கம் மாமாவிடம் எண்ணிக்கொடுத்தார் தாத்தா.
அதற்குள்
“டேய் சுந்தரம்” என்று அழைத்தார் சித்தப்பா. “உள்ள அறைக்குள்ள அடுக்குல நாலாவது தட்டுல ஒரு சூரணப்பொட்டி இருக்கும், எடுத்துவா” என்றார். நான் பெட்டியை எடுத்துவர வீட்டுக்குள் ஓடினேன். மாணிக்கம் மாமா என்னைத் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி தனியாகச் சென்றார்.
நோயாளிகளுக்கு மருந்து
கொடுக்கும் வேலைகளையெல்லாம் முடித்தபிறகு, “எதுக்கு இந்த விஷப்பரீட்சை?” என்று தாத்தாவிடம் கேட்டார் முருகேசன் மாமா. ஒரு
கணம் அவரைப் பார்த்துவிட்டு, மடியிலிருந்த வெற்றிலையை எடுத்து காம்பைக் கிள்ளிவிட்டு மடிப்பை நீவியபடியே அடங்கிய குரலில் சொன்ன சொற்கள் என் காதிலும் விழுந்தன.
””திரும்பி வந்தா அவனுக்கு
கடசி வரைக்கும் இங்க இடம் உண்டு. வரலைன்னா
அவன் வழிச்செலவுக்கு குடுத்த பணம்னு நெனச்சிக்குவோம். சரியா?”” சொல்லிக்கொண்டே
பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். மெதுவாக வெற்றிலையின் பின்னால்
சுண்ணாம்பைத் தடவி மடித்து வாய்க்குள் வைத்தார்.
கருக்கும் வேலை முடிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடு அடங்காத கரண்டியை ஓரமாக வைத்தேன். சாம்பல் முறங்களை எடுத்துச்
சென்று நோயாளிக் கொட்டகைக்குள் வைத்துவிட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தேன்.
மரங்கள், மேகங்கள். வானம், நிலா என அங்கிருந்து பார்க்க அழகாக இருந்தது. மாமாவும்
சித்தப்பாவும் அருகருகில் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். மதிலோரமாக குதித்துவந்த
ஒரு பூனை இருள் படர்ந்திருந்த பகுதியில் ஓடி மறைந்தது. எல்லோருடைய பார்வையும் ஏதாவது
ஒரு கணத்தில் வாசல்வரை சென்று மீண்டது.
வெகுநேரம் கழித்து தாத்தா எழுந்து குழாயடிப்பக்கமாகச் சென்று வெற்றிலைச்
சக்கையைத் துப்பிவிட்டு, வாயைக் கழுவிக்கொண்டு திரும்பினார். கை ஈரத்தை தோளில்
இருந்த துண்டில் துடைத்தபடியே, “சரி, போய் நேரத்தோட படுங்க”” என்றபடி கதவை நோக்கி நடந்தார்.
வாசல்படம் திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பினோம்.
“ஐயா” என்று சத்தம் கொடுத்தபடி மாணிக்கம் மாமா வந்துகொண்டிருந்தார்.
முதுகுப்பக்கம் அவர் சட்டை கிழிந்திருந்தது. வேட்டியில் மண் அப்பிய அழுக்கு.
தாத்தா நின்று அவரைத் திரும்பிப் பார்த்தார். ”ஐயா’” என்றபடி அதற்குள் மாணிக்கம் மாமாவே தாத்தாவின் பக்கத்தில்
வந்துவிட்டார். என்னைப் பார்த்து
சிரித்தபடி பால் பாத்திரம் வைத்திருந்த பையைக் கொடுத்தார். ””என்னாச்சி மாமா?”” என்று நான்தான் பேச்சை ஆரம்பித்தேன்.
””கடலூர் நெருங்கற சமயத்துல
ஒரு கூட்டம் வண்டிய மறிச்சி நிறுத்திட்டுது ஐயா. திமிங்கலம் ரவினு யாரோ ஒரு ரவுடி
செத்துட்டான்னு ரகள. வண்டி கண்ணாடியலாம் ஒடச்சிட்டாங்க. எல்லாரயும் ஓடஓட
வெரட்டியடிச்சானுங்க. கும்பலோட கும்பலா உழுந்து பொரண்டு சமாளிச்சி ஓடும்போது என்
சட்டய புடிச்சி கிழிச்சிட்டான் ஒருத்தன்.
பக்கத்துல ஒரு ரைஸ்மில்லுல போய் பூந்துகிட்டோம். நாலஞ்சி மணிநேரம் வெளியிலயே வரமுடியலை. ஒரே
கலவரம். அடிதடி. ஒரு பஸ்கூட ஓடலை. ஏழுஎட்டு மணிக்கு மேல கும்பகோணத்து லாரி ஒன்ன
நிறுத்தி போலீஸ்காரனே ஒரு பத்துபாஞ்சி பேர ஏத்தி அனுப்பிவச்சான். நெல்லித்தோப்புல
எறங்கி பஸ் புடிச்சி ஓடியாந்தேன்.”
தாத்தா அவரை பார்த்து தலையசைத்தபடி என் பக்கமாகத் திரும்பி, “சரி, போய் அத்தைய
எழுப்பி அவனுக்கு சோறு போடச் சொல்லு, ஓடு”” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போகத் திரும்பினார். “ஐயா”” என்று அவரை மறுபடியும் நிறுத்தினார் மாமா.
“குறிஞ்சிப்பாடிக்கார ஐயா பாலுக்கு பணம் வாங்கிக்கமாட்டேன்னுட்டாரு. போன தரம்
குடுத்த பணமே போதும்ன்னு சொல்லச்சொன்னாரு”” என்றபடி பைக்குள் மடித்துவைத்திருந்த ரூபாய்த்தாள்களை எடுத்து
நீட்டினார். சில கணங்கள் யாரும்
பேசவில்லை. எல்லோருடைய பார்வையும் பணத்தின்மீது பதிந்திருந்தது. “அத வாங்கிப் போய்
ஆயாகிட்ட குடு”” என்று என்னைப் பார்த்துச்
சொன்னார் தாத்தா.
(2013- ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த சிறுகதை)