Home

Thursday 27 December 2018

ஆதரவு - கட்டுரை




பார்வையாளர் நேரம் தொடங்குவதற்கு இன்னும் நேரமிருந்ததால் கண்போன போக்கில் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு கட்டடமாக வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கி பிணக்கிடங்கு வரைக்கும் சென்றுவிட்டேன். அதுவரைக்கும் பார்க்காத இடமென்பதால் எல்லாமே புதுமையாக இருந்தன. மதிலையொட்டிய முட்புதருக்குப் பின்னால் தாழம்பூவின் மணம் கமழ்ந்தது. ஆறேழு வேப்பமரங்களும் ஒரு ஆலமரமும் இரண்டு வாதுமை மரங்களும் அந்த இடத்துக்கு ஒரு கிராமத்துச் சூழலைக் கொடுத்தன.  அவற்றின் நிழலில் இரண்டு அமரர் ஊர்திகளும் ஏழெட்டு இருசக்கர வாகனங்களும் நின்றிருந்தன.

தற்செயலாக சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு தகவல்தாளைப் பார்த்தேன். ஏராளமான விளம்பரங்களுக்கு நடுவில் அந்தத் தாள் எடுப்பாகத் தெரிவதற்கு அதன் நிறமே முக்கியமான காரணம். ’ஆதரவில்லாதவர்களின் இறுதிச்சடங்குக்கு அணுகவும் - கிருஷ்ணாஎன்று எழுதி கைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வாசகத்தின் விசித்திரத்தன்மையைக் கண்டு அங்கேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டேன்.  .
அதற்கு அருகிலேயே இன்னும் ஏராளமான விளம்பரத் தாள்கள் காணப்பட்டன. ‘உள்ளூர், வெளியூர் செல்ல வாகன வசதிகளுக்கு அணுகவேண்டிய முகவரி’ ‘எங்களிடம் சாதாரண மாலைகள் முதல் ஆளுயர மாலைகள் வரைக்கும் குறைந்த விலையில் கிடைக்கும்’ ‘மலிவு விலையில் எருமுட்டைகள் வாங்கலாம்’ ‘பூ அலங்காரங்களுக்கும் எல்லா விதமான பாடைகளுக்கும் எங்களைத் தொடர்புகொள்ளவும்பெரும்பாலானவை கையால் எழுதப்பட்டவை. ஒருசில மட்டுமே அச்சிடப்பட்டவை. அதுவரை நான் பார்த்திராத விளம்பரமுறையாக அவை இருந்ததால் அனைத்தையும் நின்று நிதானமாகப் படித்தேன்.
அறுவைசிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த உறவினரைச் சந்தித்து சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு வெளியேறும்போது விளம்பரச் சுவரை நோக்கி மறுபடியும் சென்றேன். புதியபுதிய வாசகங்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். கிருஷ்ணாவின் தகவல் தாள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததைத்.தாமதமாகத்தான் கவனித்தேன். அதன் மஞ்சள் நிறமும் நீல எழுத்துகளும் எடுப்பாகத் தெரிந்தன. ஒரு வேகத்தில் எனது குறிப்பேட்டில் கிருஷ்ணாவின் தொடர்பு எண்ணைக் குறித்துக்கொண்டேன்.
அடுத்த நாள் காலைநேரத்தில் அவரை அழைத்தேன். சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். அவர் குறுக்கிட்டுஎந்த ஆஸ்பத்திரி சார் நீங்க? டிஸ்சார்ஜ் சம்மரி, டெத் சர்டிபிகேட்லாம் வாங்கிட்டீங்களா?” என்று கேட்டார். நான் மெதுவாகஆஸ்பத்திரி ஆள் இல்ல சார் நான். பொது ஆள்தான்என்றேன். அவர் குரல் சட்டெனத் தாழ்ந்தது. “என்ன உதவி சார் வேணும்?” என்று மெதுவாகக் கேட்டார். “சார், உதவிலாம் எதுவும் வேணாம். உங்கள பார்த்துப் பேசணும். எப்ப வந்தால் உங்களுக்கு வசதியாக  இருக்கும்?” என்று கேட்டேன். ஒருகணம் அவர் முனையிலிருந்து பேச்சே இல்லை. ஆழ்ந்த மெளனம். ”என்ன எதுக்கு சார் பார்க்கணும்?” என்று இழுத்தார். பிறகுஎன்ன சார், ஏதாச்சிம் பிரச்சினையா?” என்றார். தொடர்ந்துநீங்க பத்திரிகைக்காரரா?” என்று ஐயத்தோடு கேட்டார். இறுதியில் நீண்ட தயக்கத்துக்குப் பிறகு மாலை ஏழுமணிக்கு மேல் சந்திக்க ஒப்புக்கொண்டு வீட்டு முகவரியைக் கொடுத்தார்.
பிரதான சாலையை ஒட்டியே அவர் வீடு இருந்தது. அழைப்புமணியை அழுத்தியதுமே அவரே கதவைத் திறந்து வரவேற்றார். ”வாங்க. நான்தான் கிருஷ்ணாஎன்றார். நாற்பதை ஒட்டிய வயது. கட்டுக்கோப்பான உடல்தோற்றம். ”வீட்ட கண்டுபிடிக்க ஏதாவது சிரமமா இருந்ததா?” என்று புன்னகைத்தபடி கேட்டார். “அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்கதான் அழகா படம்போட்டமாரி போன்லியே எல்லாத்தயும் சொல்லிட்டிங்களேஎன்றேன். அந்த அறைக்குள் செளராஸ்யாவின் புல்லாங்குழல் ஒலித்தது. தேநீர் நிரம்பிய ஒரு கோப்பையை என்னிடம் கொடுத்துவிட்டு இன்னொரு கோப்பையோடு எனக்கு எதிர்ப்புற நாற்காலியில் உட்கார்ந்தார்
செளராஸ்யாவின் குழலிசை இயற்கையாகவே ஓர் உரையாடலுக்கான தொடக்கமாக அமைந்துவிட்டது. அது வழங்கும் அமைதி, நிறைவு என பல திசைகளில் பாய்ந்து களைகட்டத் தொடங்கிவிட்டது. ஏதோ ஓர் இடைவெளியில்தான் மிகவும் தயக்கத்தோடு மருத்துவமனையில் பார்த்த தகவல்தாளைப் பற்றிய என்னுடைய கேள்வியை முன்வைத்தேன்.
நான்தான் செய்றேன். நாப்பது ஐம்பது பேருக்கும் மேல இதுவரைக்கும் இறுதிச்சடங்கு செஞ்சிருக்கேன். உடலை ஆஸ்பத்திரிலேருந்து கையெழுத்து போட்டு வாங்கறதில தொடங்கி சுடுகாட்டுல எரிக்கிறவரைக்கும் எல்லாத்துக்கும் நானே பொறுப்பு. மறுநாள் சாம்பல வாங்கி எடுத்தும் போயி ஆத்துல கரைக்கிறதும் என் வேலைதான்.”
அவர் தொடர்ந்துஎல்லா ஆஸ்பத்திரிங்களோடயும் தொடர்பு உண்டு சார். ஆதரவில்லாம செத்து, கெடங்குலயே ரொம்ப நாளா கிடக்கறவங்கள பத்தி அவுங்கதான் எனக்கு தகவல் கொடுப்பாங்க. அதுக்கப்பறம் ஆகவேண்டிய வேலையை நான் பார்த்துக்குவேன். சடங்கு செஞ்ச ஒவ்வொருத்தவங்கள பத்தியும் எல்லா டாக்குமெண்ட்ஸும் எங்கிட்ட இருக்குது.”
புத்தக அடுக்கிலிருந்து நாலைந்து கோப்புகளை எடுத்து என்னிடம் கொடுத்தார் கிருஷ்ணா. ஒவ்வொரு மருத்துவமனையின் பெயரிலும் ஒரு கோப்பு இருந்த்து.
இந்த செலவுக்கெல்லாம் பணம்?” என்று நான் இழுத்தேன். அவர் என்னை ஒருகணம் ஆழ்ந்து பார்த்தபிறகு தரையை நோக்கித் தாழ்த்தியவராகஎன்ன செலவு சார், பெரிய செலவு? ஏதோ எங்கிட்ட இருக்குது. செலவு செய்யறேன். ஒரு வேளை தேவைப்பட்டு உங்களமாதிரி நாலு பேருகிட்ட கேட்டா, கொடுக்கமாட்டன்னா சொல்லுவாங்க? செலவுலாம் ஒரு பெரிய விஷயமே இல்ல சார்என்றார்.
எங்க அம்மா என்னுடைய. சின்ன வயசிலயே செத்துட்டாங்க. அப்பா ரயில்வேயில இருந்தாரு. ராத்திரியில வேகன்லிருந்து கரி திருட வந்த ஆளுங்கள ஒருநாள் போலீஸ்ல புடிச்சி குடுத்துட்டாரு. அதனால திருட்டு கூட்டத்துக்கு அவருமேல ஒரு கோபம். நேரம் பார்த்து அடிச்சி பொதருக்குள்ள போட்டுட்டாங்க.  உறவுன்னு சொல்ல யாருமே இல்ல. தொழிற்சங்கத்து ஆளுங்கதான் கூடவே இருந்து இறுதிச்சடங்கு செஞ்சாங்க. கொள்ளி வச்சிட்டு ஊமையா அவுங்க பின்னால நான் நின்னிட்டிருந்தேன். இந்த மண்ணுல வளர்ந்து நாமும் ஒரு ஆளா நிக்கும்போது, ஆதரவில்லாம செத்துப் போறவங்களுக்கு சடங்கு செஞ்சி அனுப்பிவைக்கறதுதான் நம்ம முதல் லட்சியமா இருக்கணும்னு அப்பவே ஒரு எண்ணம் அழுத்தமா பதிஞ்சிட்டுது.”
உரையாடத் தொடங்குவதற்கு முன்பு அவர் காட்டிய தயக்கமெல்லாம் பேசப்பேச கரைந்துவிட்டது. பழகத் தொடங்கிய ஒரு மாதத்திலேயே பால்யகாலம் தொட்டு பழகுவதுபோல இருவருமே உணர்ந்தோம்.
ஓர் இறுதிச்சடங்குக்கு அவர் புறப்பட்ட தருணத்தில் நானும் அவரோடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு அவர் செயலாற்றுகிறார் என்பதை அவருடைய ஒவ்வொரு செயலும் அன்று உணர்த்தியது.
உடலைப் பெற்றுக்கொண்டதும் ஊழியர்கள் துணையோடு அமரர் ஊர்தியில் தகனமையத்துக்கு எடுத்துச் சென்று இறக்கியதுமே, ஆட்கள் துணையோடு உடலைக் குளிப்பாட்டி புதிய துணிமணி மாற்றி கிடத்தப்பட்டது. புதிய மாலைகள் அணிவிக்கப்பட்டன. அவரும் குளித்து வந்து அருகில் உட்கார்ந்ததும் சாஸ்திரிகள் சொல்லச்சொல்ல சடங்குகள் குறைவில்லாமல் நிகழ்ந்தன. இறுதியாக தகனமையத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு உலைக்குள் தள்ளப்பட்டது. அனைத்துச் செலவுகளுக்கும்  அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். ஒரு குறைவுமில்லாமல் அந்தத் தகனம் முடிந்தது.
ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்ற தருணத்தில் அவர் இல்லை. கூடத்தை ஒட்டிப் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் ஒரு பெரியவர் படுத்திருந்தார். கையிலும் காலிலும் கட்டு போடப்பட்டிருந்தது. கிருஷ்ணாவைப்பற்றி விசாரித்தேன். பதில் சொல்லும் அளவுக்கு அவருக்கு பேச்சும் வரவில்லை. அவர் குரலே குழறியது. அவரை கைபேசியில் அழைத்தேன். மருந்து வாங்கிவரச் சென்றிருப்பதாகவும் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் சொன்னார். வந்ததுமே கட்டிலில் இருந்த பெரியவரைப்பற்றித்தான் விசாரித்தேன். சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பப்பட்டவர் என்றும் போக்கிடம் இல்லாமல் பாதையோரத்தில் இருந்தவரை அழைத்துவந்து வைத்திருப்பதாகவும் சொன்னார். கிட்டத்தட்ட இரு வாரகாலம் அந்தப் பெரியவர் அவருடைய பராமரிப்பில் இருந்தார். எழுந்து நடமாடும் அளவுக்கு தெம்பு வந்த பிறகே அவர் புறப்பட்டுச் சென்றார்.
நாலைந்து நாட்களுக்குள் இன்னொரு பெரியவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் போனதும் இரண்டு பாட்டிகள் வந்து தங்கியிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ஐந்தாறு பேர்கள் வரைக்கும் கூட அந்த இடத்தில் தங்கியிருந்தார்கள். கிருஷ்ணா அனைவரையும் தம் சொந்த உறவினரைப்போல பார்த்துக்கொண்டார். அவர்களைக் குளிக்கவைத்து உடைமாற்றி உணவுகொடுத்து மருந்தும் கொடுத்து காப்பாற்றுவதை தன் தலையாய கடமையாகவே நினைத்தார்.
ஆனால் அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் அவர்மீது கசப்பையும் வெறுப்பையும் கொட்டினார்கள். ”இது என்ன வீடா, ஆஸ்டலா சார். ராத்திரி பூரா இருமறாங்க. சின்ன புள்ளைங்க இருக்கிற இடம். ஏதாவது தொற்றுநோய் பரவினா யார் பொறுப்பு?” என்று புலம்பினார்கள். நேரிடையாகவே அவரைச் சந்தித்து மனத்தை மாற்றவும் முயற்சி செய்திருக்கிறார்கள். இறுதியாக காவல்துறையிடம் அரைகுறையாக தகவல்களைக் கொண்டுசென்று சேர்த்தார்கள். தன் அதிகாரத்தைக் காட்டுவதற்காகவே வந்து இறங்கிய காவலர்கள் கிருஷ்ணாவை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.  அன்றைய இரவு அடிபட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வீட்டுக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பெரியவர்களை ஒரு வாகனம் வந்து ஏற்றிச் சென்றுவிட்டது.
மறுநாள் நடுப்பகலில்தான் எனக்குச் செய்தி தெரிந்தது. பார்வையாளர் நேரத்துக்குக் காத்திருந்து கிருஷ்ணாவைச் சந்தித்தேன். தோளிலும் இடுப்பிலும் எலும்பு முரிந்ததை ஒட்டி கட்டு போட்டிருந்தார்கள். அவர் முகம் வீங்கியிருந்தது. அவர் கண்கள் கசிவதைப் பார்த்தேன்.
மனசாட்சியே இல்லாம இந்த அடி அடிச்சிருக்கானுங்களே, இவனுங்களுக்கெல்லாம் தெய்வம்தான் கூலி கொடுக்கணும்என்றேன்.
அடிகூட வலிக்கலை சார். ரொம்ப அசிங்கம் அசிங்கமான பேச்சு சார். அதான் சார் தாங்கமுடியலை
ஒருகணம் விழிகளை மூடித் திறந்தார். ”எவனாவது எங்கயாவது செத்துக் கெடந்தா ஒனக்கென்னடான்னு சொல்லிச்சொல்லி அடிச்சாங்க சார்தொண்டைக்குழி ஏறியிறங்க அவர் தன் விசும்பலைக் கட்டுப்படுத்துவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல், அவர் கைகளை ஆதரவோடு பற்றி என் கைகளுக்குள் வைத்துக்கொண்டேன். ”அசிங்கம் அசிங்கமா பேசனாங்க சார்என்று முணுமுணுத்தபடியே இருந்தார் கிருஷ்ணா.