Home

Sunday 13 January 2019

சிட்டுக்குருவியின் வானம் - கட்டுரைத்தொகுதி






முன்னுரை

இது ஒரு நினைவுத் தொகுப்பு. எந்த நோக்கமும் இல்லாமல் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு மின்னல்போல மின்னி மறைந்தவை. ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இதற்குக் கிடையாது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு விர்ரென்று தாவிப் பறந்துபோன குருவியைப்போல அவை கடந்துபோய்விட்டன.

ஒருமுறை நண்பர் மானா பாஸ்கரன் தொலைபேசியில் அழைத்தார். காமதேனு இதழில் .ஒரு கட்டுரைத் தொடரை எழுதுவது தொடர்பாக அவர் சொன்னார். நினைவுத்தொகையிலிருந்து ஒரு கணத்தை தனியே பிரித்தெடுத்து எழுதக் கிடைத்த வாய்ப்பாக அதை எடுத்துக்கொண்டேன்.  இத்தொகுதி வெளிவரும் இக்கணத்தில் அவரை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். என் எல்லா முயற்சிகளுக்கும் துணையாக நிற்கும் என் துணைவி அமுதாவுக்கு என் அன்பு. இந்த நூலை. அழகுற வெளியிடும் சந்தியா நடராஜனுக்கு என் நன்றி.
எழுத்தாளர் விட்டல்ராவ் பெங்களூருக்கு வந்ததுமே எங்கள் நட்புவட்டத்துக்குள் அவரையும் இணைத்துக்கொண்டோம். அவருடன் உரையாடுவது எப்போதும் மகிழ்ச்சிக்குரிய அனுபவம். அவருடைய நினைவாற்றலைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்காத நாளே இல்லை. தன் நான்கு வயதிலும் ஆறு வயதிலும் நடந்ததையெல்லாம் நேற்று நடந்ததுபோல தங்குதடையில்லாமல் விவரிப்பதை வாய்பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்போம். அவரிடம் ஒரு மணி நேரம் உரையாடக் கிடைக்கிற வாய்ப்பு என்பது நாலைந்து புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதற்கு இணையான அனுபவம். நினைவுத்தொகையான இக்கட்டுரைத் தொகுதியை அவருக்குச் சமர்ப்பிப்பதில் மிகுந்த நிறைவடைகிறேன். கையெழுத்துப் பிரதியாகவே இத்தொகுதியைப் படித்துவிட்டு அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை ஒருபோதும் மறக்கமுடியாது.
அன்புடன்
பாவண்ணன்