Home

Friday 15 March 2019

தேனருவியிலிருந்து தேனருவிவரை - கட்டுரை




அர்ச்சனாவின் திருமணம் சிறப்பாக நடந்தது. ரோஜாப்பூ மாலையுடன் திருமண ஒப்பனையில் அர்ச்சனா மிகவும் அழகாக இருந்தாள். மணமேடையில் அமர்ந்திருந்த போதும் அலுவலக ஆட்களை அவள் புன்னகையோடு கைகுவித்து வணங்கி வரவேற்ற விதம் அழகாக இருந்தது.

குற்றாலத்தில் திருமணம். எங்கள் கிளையில் முப்பது பேர் இருந்தோம். அர்ச்சனாவுக்கு மிகவும் நெருக்கம் என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் பத்து பேர் இருந்தோம். கண்டிப்பாக திருமணத்துக்குச் செல்லவேண்டும் என அனைவருமே விரும்பினோம். ஆனால்பஸ்ஸில் போனால் சரியாக இருக்குமா, ரயிலில் போனால் சரியாக இருக்குமாஎன்று ஒவ்வொருவரும் குழம்பிக்கொண்டிருந்தோம். எல்லாக் குழப்பங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வாடகை வாகனத் திட்டத்தை வெற்றிகரமாக வகுத்து, அதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தவன் எங்கள் முத்தப்பன்.
ஏழெட்டு மணி நேரம் புடிக்கும். குற்றாலம் போய் சேர சாய்ங்காலமாய்டும். போனதுமே அருவியில ஒரு இன்பக்குளியல். அப்புறம் வரவேற்புல சாப்பாடு. மண்டபத்துலயே தூக்கம். மறுநாள் காலை இன்னொரு குளியல். தாலி கட்டி முடிஞ்சதுமே சிற்றுண்டி. உடனே கிளம்பினா மதுரைக்கு வந்து மீனாட்சியை பார்த்துட்டு பொழுது சாயறதுக்குள்ள ஊருக்கு வந்து சேர்ந்துடலாம்
அவன் பொறுப்பெடுத்துக்கொண்டதும் ஒவ்வொன்றும் தானாக நடந்தது. அலைந்து திரிந்து, நாலு இடங்களில் விலை விசாரித்து, வாகனத்துக்குப் பதிவு செய்து, அனைவரையும் அழைத்துக்கொண்டு நேரத்துக்குக் கிளம்பி இறுதியில் குற்றாலத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டான்.
உல்லாச இரைச்சலோடு கொட்டிய அருவியைப் பார்த்ததுமே ஒவ்வொருவரும் ஓடி குளிக்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லோருமே ஒரே கணத்தில் சின்னப்பிள்ளைகளாக மாறி ஓவென்று சத்தம் போட்டதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அருவித்தண்ணீர் மார்பில் பட்டுத் தெறிக்கும்படி இரு கைகளையும் விரித்தவாக்கில் அருவிக்கு முகம் காட்டி மூச்சை அடக்கி நிற்காதவர்கள் யாருமே இல்லை. தன்னை ஒரு மரமாக மாற்றிக்கொண்டு அருவியின் கீழே அமைதி காத்து நின்றார்கள் சிலர்.
அருவியின் சாரல் துளிகள் மேலே படும் எல்லைக்குள் தனிமையில் நின்றபடி நான் மட்டும் அருவியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருகணம் அருவி என் நெஞ்சை ஊடுருவிக்கொண்டு பாய்வதுபோல இருந்தது. அருவியின் அழகும் கவர்ச்சியும் பார்க்கப்பார்க்க பெருகுவதுபோல இருந்தது. அந்த வெண்மையும் நுரையும் பித்தேற வைத்தன.
மலைப்பாறையின் விளிம்பில் அருவிக்கு வெகு அருகில் ஒரு குரங்கு நின்று வேடிக்கை பார்ப்பதை தாமதமாகத்தான் கவனித்தேன். கீழே நின்றிருந்த பலரும் சத்தமிட்டபடி கைகளை உயர்த்தி அசைத்தார்கள். குரங்கு எதையும் பொருட்படுத்தவில்லை. என்னமோ அந்த அருவியைக் காவல் புரியும் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல ஒருகணம் கொட்டும் அருவியைப் பார்ப்பதும் மறுகணம் தரையைக் குனிந்து பார்ப்பதுமாக இருந்தது.
ஒருகணம் அந்தக் குரங்கு உட்கார்ந்திருக்கும் உயரம் வரைக்கும் ஏறிச் சென்று அதன் அருகில் உட்கார்ந்து அருவியை வேடிக்கை பார்ப்பதுபோல நினைத்துக்கொண்டேன். அந்த அடிவாரத்தில் கிடைத்த பல்வேறு பூக்களை மடிநிறைய வைத்துக்கொண்டு ஒவ்வொரு மலராக அருவிக்குள் வீசுவதுபோல கற்பனை எழுந்தது. சறுக்குமரத்தில் இறங்கிச் செல்லும் குழந்தையென ஒவ்வொரு மலரும் உருண்டோடி தரையில் மோதிச் சிதறி மறைந்து, சில கணங்களிலேயே வேறொரு புள்ளியில் எழுந்து படகுபோல தண்ணீரில் மிதந்து செல்லும் அழகு வசீகரமாக இருந்தது. அந்த மலரைப்போல நாமும் உருண்டோடினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
வா.வா. பார்த்து ரசிச்சா போதுமா, குளிச்சி ரசிக்க வேணாமா?” என்று நமசிவாயம் நெருங்கிவந்து தோளில் கைவைத்து அழைத்துச் சென்று அருவியின் கீழே நிற்கவைத்தார். அக்கணம் ஒரு பெரிய மழையில் நிற்பதுபோல நினைத்துக்கொண்டேன். அருவியின் தீண்டலில் ஓர் உப்புக்கல்போல கரைந்துபோய்விடமாட்டோமா என்றொரு எண்ணம் எழுந்தது.
பள்ளியில் பத்தாவது படித்தபோது பொழிந்த ஓர் அடைமழையில் தேர்வெழுதிவிட்டு தெப்பமாக நனைந்தபடி நடந்துவந்த அனுபவம் திடீரென கண்முன்னால் தோன்றி விரிந்தது. தார்ச்சாலையின் கருமை கொஞ்சம்கூட கண்ணுக்கே தெரியவில்லை. ஆற்றுவெள்ளமே ஊருக்குள் வந்துவிட்டதுபோல அரையடி உயரத்துக்கு தண்ணீர் ஓடியது. அருவி கண்ணை மறைப்பதுபோல அன்று மழை கண்ணை மறைத்திருந்தது. யாருமே இல்லாத சாலையில் ஒரு புங்கமரத்தடியில் இரண்டுபேர் கட்டிப் பிடித்து சண்டையிட்டார்கள். சில கணங்களுக்குப் பிறகு ஒருவன் விழுந்துவிட, அவன் அடிவயிற்றிலேயே எட்டிஎட்டி உதைத்தான் இன்னொருவன். சிறிது நேரத்திலேயே அவன் அசைவற்றுப்போக ஒரு வெற்று உருளையை உதைத்து உதைத்து உருட்டுவதுபோல உருட்டிக்கொண்டே சென்றான் அவன். உடலெல்லாம் நடுங்க நான் அதை நேருக்குநேர் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் அந்த நினைவை என்னால் அழிக்கவே முடியவில்லை.
அன்று இரவெல்லாம் கனவில் அருவி வெவ்வேறு வடிவங்களில் வந்தபடி இருந்தது. ஒரு குழந்தையாக மாறி என் மடியில் சுருண்டு உறங்கியது. ஒரு மானென மாறி துள்ளியோடியது. இளம்பெண்ணென மாறி தோளில் சாய்ந்தது. வெள்ளைப்புறாவென மாறி விண்ணில் சுழன்றது.
இருள்பிரியாத விடியலில் மீண்டும் அருவிக்குச் சென்றோம். ஒரு மேடையில் நடனமிடும் ஒரு பெண்ணின் தோற்றத்துடன் காட்சியளித்தது அருவி. கணத்துக்குக் கணம் மாறும் தாளலயங்களுக்கேற்ப அருவியின் உடலசைவுகள் மாறியபடி இருந்தன. அருவியின் பேரழகு இரவைவிட ஒருதுளி பெருகிவிட்டதுபோலத் தோன்றியது. மறையத் தொடங்கிய நிலவு நகர்ந்து நகர்ந்து அருவிக்கு அருகில் வந்திருந்தது.  அதை ஒட்டி சில மேகங்களும் வந்திருந்தன. நிலா, மேகம், அருவி என மூன்றுமிணைந்த தோற்றம் ஒரு மாபெரும் தரிசனம். ஒரு கவிதைக்கோ அல்லது ஓவியத்துக்கோ பொருத்தமான காட்சி அது. அன்று நான் குளித்த நேரத்தைவிட, இப்படி எதையெதையோ நினைத்தபடி வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த நேரமே அதிகம்.
திருமணம் இனிதே நடந்தது. மலர்தூவி வாழ்த்தினோம். ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடச் சென்றோம். எதைப்பற்றிப் பேசினாலும் எதைப்பற்றி நினைத்தாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து இறுதியில் மனம் எப்படியோ அருவியிலேயே வந்து நின்றது. அந்த மாயம் எப்படி நிகழ்ந்தது என்பதுதான் புரியவில்லை. 
விடைபெறும் சமயத்தில் அர்ச்சனாஎங்க ஊர் அருவி எப்படி சார்?” என்று கேட்டபடி சிந்திய புன்னகையில் அருவியின் சாயல் இருந்தது. “சொர்க்கம். சொர்க்கம் அர்ச்சனா. உங்களாலதான் இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததுஎன்று ஒரே குரலில் சொன்னோம். “இவ்வளவு தொலைவு வந்துட்டு தேனருவி பார்க்காம போனால் எப்படி சார்? மலையுச்சியில அத பார்க்கறதே ஒரு பேரின்பம்என்று ஆசையை விதைத்தாள். அந்த விதை என் நெஞ்சில் விழுந்து அக்கணமே மரமாகிவிட்டது.
நான் ஏக்கத்துடன் முத்தப்பனின் முகத்தைப் பார்த்தேன். “மதுரைக்கு வேற போகணும். நேரமிருக்காது சார். வேற சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம், கெளம்புங்கஎன்றான் முத்தப்பன். மற்ற நண்பர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. ஆனால் தேனருவியைப் பார்க்கவேண்டும் என்னும் விருப்பத்தை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நான் மட்டும் தேனருவிக்குப் புறப்பட்டேன்.
வழித்துணையாக என்னோடு ஒரு சிறுவனை அனுப்பியிருந்தாள் அர்ச்சனா. சுவாரசியமான சிறுவன் அவன். வழிநெடுக உள்ள திருப்பங்கள், மரங்கள், பள்ளங்கள், பாறைகள், பறவைகள் என அனைத்துக்கும் அவன் சொந்தமாக பெயர் சூட்டிய கதைகளையெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தான். ஆனந்தத்தோட்டம், படைவீரன் மரம், யானைப்பாறை, சந்தனக்குட்டை என அவன் சூட்டிய பட்டப்பெயர்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தது. அவனுடைய பேச்சுத்துணை இல்லையென்றால் ஒரு மணி நேரத்தில் அந்த மலைப்பாதையைக் கடந்திருக்கமுடியாது.
ஒரு பாறையைப் பற்றியேறி நின்ற கணத்தில் தேனருவியைக் கண்டேன். சிலையென நிற்கவைத்துவிட்டது அதன் தோற்றம். அசைந்தும் அசையாமலும் இருக்கிற ஒரு வெள்ளை ஊஞ்சலென அது முதலில் தோன்றியது. பிறகு அனலின்றி தழல்பறக்க எரியும் வெள்ளைத்தீயென காட்சியளித்தது. காற்றில் படபடக்கும் வெண்துகிலெனவும் மண்ணில் ஆழ ஊன்றி நிறுத்தப்பட்ட வெள்ளைத்தூணெனவும் மலையின் நெற்றியில் வரைந்த வெண்திலகமெனவும் கணந்தோறும் மாறியபடி இருந்த அதன் தோற்றம் ஒரு மாபெரும் மன எழுச்சியை ஊட்டியது.
தற்செயலாக ஒரு மரத்தடியில் நின்றபடி தேனருவியை நீர்வண்ண ஓவியமாகத் தீட்டிக்கொண்டிருந்த ஒரு பெரியவரைப் பார்த்தேன். உயிர்பெற்று பொங்கி வழிவதுபோல இருந்தது அவர் தீட்டியிருந்த அருவியின் ஓவியம். அதை விரலால் தொட்டு உண்மையான அருவிக்குள் இறங்கிவிடமுடியும் போலத் தோன்றியது. நான் அதன் அழகில் மயங்கி, அவருடைய விரல்பற்றிப் பாராட்டினேன். அவர் என் தோளைத் தொட்டுஅழகு அந்த அருவியிலும் இல்லை. இந்த அருவியிலும் இல்லை. மூன்றாவதாக உருவாகும் அருவியில்தான் உள்ளதுஎன்றார். ஒருகணம் அவர் சொற்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை. குழப்பமான பார்வையுடன் அவரைத் திரும்பிப் பார்த்தேன்.
அவர் முதலில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு அருவியை காகிதத்தில் வரைந்து பார்ப்பது எதற்குத் தெரியுமா? இந்தக் காகிதத்தின் வழியே எப்படியாவது அதை இங்கே ஊற்றெடுக்கவைத்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்என தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டியபடி சொன்னார். அவர் கண்கள் பிரகாசமுடன் மின்னின. மீண்டும் அமைதியான குரலில்தேனருவியிலிருந்து தேனருவிவரைஎன சொன்னபடி அருவியின் திசையிலிருந்து தன் நெஞ்சுவரைக்கும் விரலால் ஒரு கோடுபோட்டுக் காட்டினார்.
திரும்பும் வழிநெடுக அந்தச் சொற்களை முணுமுணுத்தபடியே இறங்கினேன். போகும்போது படபடவென பேசிக்கொண்டே வந்த சிறுவன் அந்த வாசகத்தையே ஓர் இசைத்துணுக்காக மாற்றி வெவ்வேறு ராகத்தில் சொல்லிப் பாடியபடி வந்தான்.