Home

Saturday 23 February 2019

அன்பு நடமாடும் கலைக்கூடம் - கட்டுரை



கண்ணப்பன் அங்காடிக்குள் கத்தரிக்காயிலிருந்து காப்பித்தூள் பொட்டலம் வரைக்கும் எதைவேண்டுமானாலும் தொட்டுப் பார்த்தோ, கலைத்துப்போட்டோ தேர்ந்தெடுத்து கூடையை நிரப்பிக்கொள்ளலாம். அது ஒரு சுதந்திரம். ஆனால் கூடையோடு கல்லாவுக்கு முன்னால் வரிசையில் நின்று பணம் செலுத்திவிட்டு வெளியே வருவதுமட்டும் எளிய விஷயமில்லை. குறைந்தபட்சமாக இருபது நிமிடங்களிலிருந்து முப்பது நிமிடம்வரைக்கும் நின்றுதான் தீரவேண்டும். ஆனால் அந்த அலுப்பை ஒரு கணம்கூட வாடிக்கையாளர்கள் உணராதபடி கல்லாவுக்கு எதிர்ப்புறமாக உள்ள சுவரில் அகன்ற திரையுள்ள ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துவிட்டார் கடைக்காரர்.

நான் வரிசையில் நின்றிருந்த வேளை ஒரு பாட்டு மாறும் நேரம். தென்னங்கீற்றின் பின்னணியில் விஜய்காந்த் உருவம் மறைய பிரசாந்த் மவுத் ஆர்கனை இசைத்தபடி திரையில் தோன்றினார். மவுத் ஆர்கன் எங்கள் இளம்பருவத்தை இனிய கனவுகளால் நிரப்பிய அழகிய இசைக்கருவி. அந்த இசைக்கோவையில் அக்கணமே நான் உடல்சிலிர்க்க மூழ்கிவிட்டேன். அரைநிமிட அளவுக்கே நீண்ட அந்த இசையைத் தொடர்ந்துநடந்தால் இரண்டடி, இருந்தால் மூன்றடிஎன்று பாட்டும் பிறந்துவிட்டது.
என் மனமும் உடலும் சட்டென ஒரு பெரிய மலராக விரிந்து மலர்ந்ததுபோல ஆனந்தம் பொங்கியது. என் இளமையில் நான் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல். ஒரே கணத்தில் உடலில் ஓடும் ரத்தத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு பறவையென மாறி சிறகசைத்தபடி திசைக்கொன்றென பறந்தலையத் தொடங்கின. கரையில் பரவியோடும் கடலலையென பரவசத்தில் திளைத்த மனம், இறந்த காலத்தின் ஒவ்வொரு புள்ளியாகத் தொட்டுச்சென்று இறுதியாக மனோகரனைத் தொட்டு நின்றது. எத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அவனை நான் எப்படி மறந்தேன்?
ஏதோ வெளியூரிலிருந்து மாற்றலாகி எட்டாவது பிரிவில் எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தவன் மனோகரன். ராதாகிருஷ்ணன் ஐயா அவனை எனக்குப் பக்கத்தில் அமரவைத்தார். எங்களுக்கிடையில் அக்கணமே நட்பு மலர்ந்துவிட்டது. அன்று மதிய உணவை நாங்கள் இருவரும் சேர்ந்து உண்டோம். பிறகு மைதானத்தில் பலவேறு குழுக்கள் ஆடும் சடுகுடு ஆட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நடந்தோம்.
தோப்புக் கிணற்றிலிருந்து கருப்பந்தோப்புக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் அந்தத் திசையில்தான் இருந்தது. கால்களை வாய்க்காலில் நனையவிட்டபடி நாங்கள் கரையில் அமர்ந்தோம். அவன் தன் கால்சட்டைப் பையிலிருந்து மவுத் ஆர்கனை எடுத்து உதட்டருகில் கொண்டுசென்றான். என்னைப் பார்த்தபடி  எந்த இலக்குமில்லாமல் ஓர் இசைத்துணுக்கைத் தொடங்கி, அப்படியே அதை இறுதிவரைக்கும் இழுத்தபடி சென்றான். திடீரென ஓர் அருவி அங்கே உற்பத்தியாகிப் பாய்ந்தோடுவதுபோல இருந்தது.
உதட்டிலிருந்து ஒரு கணம் மவுத் ஆர்கனை எடுத்த மனோகரன்நான் ஒரு பாட்டு வாசிக்கறேன், என்ன பாட்டுன்னு கண்டுபிடிக்கிறயா?” என்று கேட்டான். நான் உற்சாகத்தில் தலையசைத்தேன். அவன் ஒருகண யோசனைக்குப் பிறகு புதுசாக ஒரு இசைத்துணுக்கைத் தொடங்கினான். ’நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்பாடல். சிரமமான பல்லவியின் வரிகளை மிக எளிதாகத் தொட்டுத்தொட்டு கடந்துவந்த லாவகத்தை  சில கணங்கள் ரசித்துவிட்டு அந்த வரிகளைச் சொன்னேன். அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. சரி என்பது போலத் தலையசைத்தான்.
அடுத்து துள்ளலான வேகத்தோடு ஒரு பாட்டைத் தொடங்கினான். ஏழெட்டு வரிகள் ஓடும்வரை அதைப் பின்தொடர்ந்து சென்றேன். குதிரையின் லகானை கையிலேந்தியவனைப்போன்ற நடிப்போடுராஜாவின் பார்வை ராணியின் பக்கம்என்றேன்.
மீண்டும் அவன் வேறொரு பாடலைத் தொடங்கினான். அதன் தொடக்கத்தை என்னால் சரியாக உள்வாங்கமுடியவில்லை. அந்தப் பாடல் என் விருப்பப்பாடல்களின் ஒன்றாக இல்லாமல் போனது முக்கியமான காரணம். தொடக்கத்தில் பிடிகிட்டாமல் தடுமாறினேன். ஆனால் போகிறபோக்கில் அதை எட்டிப் பிடித்துவிட்டேன். ‘பனி இல்லாத மார்கழியா, படை இல்லாத மன்னவராஎன்றேன்.
எனக்கு கடுமையான சோதனையை வைப்பதுபோல வெகுநேரம் யோசித்துவிட்டு புதிதாக ஒரு பாடலைத் தொடங்கினான் மனோகரன். உண்மையிலேயே எனக்கு அது ஒரு பெரிய சவாலாகத் தோன்றியது. பல்லவியின் வரிகளை முடித்துவிட்டு அடுத்தடுத்த வரிகளைக் கடந்து இசை மிதந்துமிதந்து போனது. இடையில் அவன்என்ன என்ன?’ என்று கேட்பதுபோல புருவங்களை உயர்த்தினான். என் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் இறுதியாக நான் உதடுகளைப் பிதுக்கினேன். அவன் மெதுவாக மவுத் ஆர்கனை உதடுகளிலிருந்து எடுத்து கைக்குட்டையால் விளிம்புகளைத் துடைத்தபடியேஆயிரம் கண் போதாது, வண்ணக்கிளியேஎன அடங்கிய குரலில் பாடிக் காட்டினான்.
ஆரம்பத்தில் எங்கள் இருவரிடையே மட்டும் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த ஆட்டத்தில் மெல்ல மெல்ல வகுப்பிலுள்ள நண்பர்கள் அனைவருமே உற்சாகமுடன் பங்குகொள்ளத் தொடங்கினார்கள். பள்ளியில் எங்கள் ஒவ்வொரு நிமிட ஓய்வு நேரத்தையும் மகிழ்ச்சிமயமானதாக மாற்றினான் மனோகரன்.
பழைய பாடல், புதிய பாடல் என எதைக் கேட்டாலும் அந்த இசையை அடுத்த கணமே மவுத் ஆர்கன் வழியாக இசைக்கும் அளவுக்கு மனோகரனுடைய ஞானம் இருந்தது. ஒரு சின்ன பிசிறோ, தடுமாற்றமோ ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.
எங்களுக்காக இத்தனை பாட்டு பாடறியே, உனக்கு எந்தெந்தப் பாட்டுங்க ரொம்ப பிடிக்கும்?” என்று ஒருநாள் கேட்டேன். “எல்லாமே புடிக்குமே. புடிக்காமயா வாசிக்கிறேன்?” என்று சிரித்தான் அவன். “நான் கேக்கறதுக்கு அர்த்தம் அது இல்லை. உன் மனசுக்குள்ள ஒரு விருப்பப்பட்டியல் இருக்குமில்லயா, அதுலேர்ந்து ஒரு நாலஞ்சி பாட்டுங்க சொல்லுஎன்றேன்.  
அவன் தன் கன்னத்தை விரல்களால் தேய்த்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். பிறகு எங்கோ வானத்தைப் பார்த்தபடி சொன்னான். “நாளை இந்த நேரம் பார்த்து ஓடிவா நிலா” “ஞாயிறு என்பது கண்ணாக” “அன்பு நடமாடும் கலைக்கூடமே” ”விண்ணோடும் மண்ணோடும் விளையாடும் வெண்ணிலவே” “அமுதைப் பொழியும் நிலவேஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு விரலாகப் பிரிக்க, ஐந்து விரல்களும் பிரிந்தன.
ஒருநாள் சீருடைக்குப் பதிலாக புத்தாடை அணிந்துகொண்டு அவன் வகுப்புக்கு வந்தான். ’இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்:’ என்றபடி எல்லோருக்கும் சாக்லெட்டுகளைக் கொடுத்தான். எங்கள் பள்ளியில் அந்த மாதிரியான வழக்கமெதுவும் இல்லை. அதனால் நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டோம். கண்ணாடித்தாளால் பொதியப்பட்ட அந்த சாக்லெட் நாக்கில் வைத்த கணத்திலேயே தானாகக் கரைந்துபோன விசித்திரம் எங்களை நெகிழவைத்தது. அன்று மாலை ஆறுமணிக்கு தன் வீட்டுக்கு வரவேண்டும் என எங்கள் குழுவிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
அவனுக்கு அன்பளிப்பாக எதையாவது கொடுக்கவேண்டும் என எல்லோரும் விரும்பினோம்.  ஆனால் கடைக்குச் சென்று எதையும் வாங்கும் அளவுக்கு எங்களிடம் சக்தியில்லை. அதனால் நான் வீட்டுக்குச் சென்றதுமே ஒரு பெரிய வெள்ளைத் தாளையெடுத்து வண்ணப்பென்சில்களால் ஒரு மானின் ஓவியத்தை வரைந்தேன். நண்பர்கள் ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஓவியத்தின் கீழ்விளிம்பில் நாங்கள் ஆறு பேருமே கையெழுத்திட்டோம். பிறகு புத்தக அடுக்கில் தடுப்புக்காக பயன்படுத்தி வந்த காலண்டர் அட்டையை எடுத்து ஓவியத்தின் அளவுக்குப் பொருத்தமாக வெட்டி விளிம்புகளைத் தேய்த்து ஒழுங்கு செய்தோம். அதன் மீது ஓவியத்தை ஒட்டி, பழைய செய்தித்தாள்களால் சுற்றியெடுத்துச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்தோம். மனோகரனின் அம்மா எங்களுக்கெல்லாம் ஒரு கிண்ணத்தில் இனிப்பும் மற்றுமொரு கிண்ணத்தில் காராபூந்தியும் கொடுத்தார்.
மனோகரனின் அப்பா மெல்லிசைக்குழு வைத்து நடத்தும் கலைஞர் என்னும் தகவல் அவன் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது. ‘நீலவானம் மெல்லிசைக்குழுஎன்னும் பலகை வாசலுக்குப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. “நீயும் கச்சேரியில பாடுவியாடா மனோகர்என்று கேட்டோம். அவன் இல்லையென்பதுபோல தலையசைத்தான். “நீ மேடையில ஏறி பாடணும் மனோகரன். உன் திறமையைப்பத்தி இந்த உலகமே தெரிஞ்சிக்கணும்?” என்று பக்கத்தில் சென்று காதருகில் சொன்னேன். அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. புன்னகையோடு தலையசைத்துக்கொண்டான்.
மனம் திறந்து சொன்ன நேரமோ என்னமோ, அடுத்த நான்கு  மாதங்களிலேயே இருமுறை அவன் மேடையேறி மவுத் ஆர்கன் வாசிக்கும் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. ஒருமுறை எங்கள் ஊர்ப்பிரமுகர் தன் மகனுடைய திருமணத்தை ஒட்டி நீலவானம் மெல்லிசைக்குழு கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியின் நடுவில் பாடகர்களுக்கு ஓய்வளித்துவிட்டு  மனோகரனுக்கு மவுத் ஆர்கன் வாசிக்கும் வாய்ப்பை வழங்கினார் அவன் அப்பா.  அவன் தனக்குப் பிடித்தவையென வரிசைப்படுத்திய ஐந்து பாடல்களையும்  ஒன்றையடுத்து ஒன்றாக தன் மவுத் ஆர்கனில் வாசித்தான். நாங்கள் அனைவரும் அந்த இசைவெள்ளத்தில் மூழ்கி நின்றிருந்தோம். அடுத்தமுறை எங்கள் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அதே ஐந்து பாடல்களை மேடையேறி வாசித்தான். நாள் முழுக்க கேட்டபடி இருக்கலாமே என்று சொக்கவைக்கிற இசை அன்று அவன் நெஞ்சிலிருந்து பொங்கி வழிந்தது.
மூன்றாவது, நாலாவது என தொடங்கி அவன் மேடைப்பயணம் இன்று நூறாவது இருநூறாவது என எண்ணிக்கை கடந்து போயிருக்கலாம். ஒருவேளை தன் அப்பாவைப்போலவே சொந்தமாக ஒரு குழு கூட நடத்திக்கொண்டிருக்கலாம். இப்படி எல்லாவற்றையும் சந்தேகத்தோடு சொல்லக் காரணம் இருக்கிறது. அந்த ஆண்டுக்குப் பிறகு அவன் எங்களைப் பிரிந்து சென்றுவிட்டான். அவன் அப்பாவுக்கு சிதம்பரத்துக்கு அருகில் இடமாற்ற ஆணை வந்துவிட்டதால் ஊரைவிட்டே அவர்கள் போய்விட்டார்கள்.
காய்கறிப்பையோடு கடைக்கு வெளியே வந்து நின்றேன். ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை. தொலைவிலிருந்து ஏதேனும் வருகிறதா எனப் பார்ப்பதற்காக வெயிலில் கண்கூசாதவண்ணம் விரலால் மறைத்தபடி சாலையில் பார்த்தேன். வாகனம் எதையும் காணவில்லை. மெல்ல மெல்ல ஒரு வெண்துகிலென ஆர்கன் இசை அலைபாய்ந்து வர ஒருகணம் வானத்தையே அடைத்தபடி மனோகரனின் முகம் விரிவடைவதுபோலத் தோன்றியது.