Home

Wednesday 28 August 2019

பறவைகளின் பயணம் - கட்டுரை



எங்கள் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு இருந்தது. பெங்களூர் ஐயர் என்பவருக்குச் சொந்தமான தோட்டம். அதன் மதிலை ஒட்டி ஏராளமான மரங்கள் இருந்தன. கொய்யா மரங்கள், கொடுக்காப்புளி மரங்கள், மாமரங்கள். அவை பழுத்துத் தொங்கும் காலங்களில் தரையில் விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதற்காகக் காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் மதிலைச் சுற்றி வருவோம். சில துடுக்குப் பிள்ளைகள். மதிலோரமாகக் கற்களை அடுக்கி, அதன்மீது கவனமாக ஏறி, மதிலில் கால்பதித்து. பிறகு மரங்களுக்குத் தாவிவிடுவார்கள். ஐயரின் பார்வையில் பட்டுவிட்டால் சரியாக வாங்கிக் கட்டிக்கொள்வார்கள். அவருடைய மகன் எங்கள் வகுப்புத்தோழன். அது அவருக்கும் தெரியும். அதனால் வசைகள் கடுமையாக இருக்காது. ஆனால் புத்தி சொல்கிற போக்கில் இருக்கும். மரத்தில் தொங்கும் காய்களை யாரும் அடித்துப் பறித்துத் தின்னக் கூடாது. அதற்கு யாருக்குமே உரிமை இல்லை. மரங்களில் உள்ள பழங்கள் மரங்களை உறைவிடமாகக் கொண்ட உயிரினங்களுக்கு - குறிப்பாக, பறவைகளுக்குச் சொந்தமானவை. அவற்றால் கொத்தப்பட்டோ அல்லது தானாகவோ கீழே உதிர்கிற பழங்களைத் தாராளமாக யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.

சொல்வதோடு மட்டுமல்ல. அதை அவரும் கடைப் பிடித்தார். அந்த வாசகம் இன்னும் என் நெஞ்சில் சுடர்விட்டபடி உள்ளது. கண்ணுக்குத் தெரியாத பறவைகளிடம் பழங்களைக் கொத்திக் கீழே போடுமாறு இரவெல்லாம் வேண்டியபடி புரண்டிருந்துவிட்டு, விடிந்ததும் கிளிகளாலும் அணில்களாலும் கடிபட்டுக் கீழே உதிர்ந்துகிடந்த பழங்களை ஓடிஓடி எடுத்த நாட்களும் பசுமையாக நினைவில் உள்ளன. பறவைகள் அப்படித்தான் என் நெஞ்சில் இடம் பிடித்தன.
ஓர் ஆண்டில் ஆறேழு மாதங்களுக்கும் மேலாக எங்கள் ஊர் ஏரியில் தண்ணீர் நிறைந்திருக்கும். மிச்ச மாதங்களில் கரையோரப் பகுதிகளில் மட்டும் பெரிய குட்டை போலத் தேங்கியிருக்கும். ஏரியைச் சுற்றிக் கருப்பந்தோப்புகளும் நெல்வயல்களும் அடர்ந்திருக்கும். மீன்கொத்தி, கொக்குகள், நாரைகள், மைனாக்கள், குயில்கள், தாராக்கள், காக்கைகள், குருவிகள், மரங் கொத்திகள் அதிக அளவில் தென்பட்டபடி இருக்கும். வாத்துகளைத் தினமும் எங்கள் தெருவழியாகத்தான் மேய்வதற்கு ஓட்டிச் செல்வார்கள். உள்ளான், கழுகுகளை எப்போதாவது பார்ப்பதுண்டு. பறவைகளைப் பார்க் காமலும் நினைக்காமலும் ஒரு நாளும் இருந்ததில்லை. பறவைகள் மீதான நாட்டத்துக்கு இப்படிப்பட்ட இளமை நினைவுகளும் ஒரு வகையில் காரணம்.
கைக்கு அடக்கமான ஒரு சின்ன சிட்டுக்குருவி தரையிலிருந்து விர்ரென எழுந்து கண்ணைமூடிக் கண்ணைத் திறப்பதற்குள் வானத்தை நோக்கிப் பறந்து வட்டமடித்துவிட்டு, லாவகமாக ஒரு மரக்கிளையிலோ அல்லது ஒரு மதிலின் மீதோ இறங்கி அமர்வதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போகாத மனமே இருக்க முடியாது. அதன் பறத்தல், அதன் சுதந்திரம் நம்மை ஒவ்வொரு கணமும் ஈர்த்தபடி இருக்கிறது. பறவை பற்றிய வரிகள் - அவை எப்படிப்பட்டதாக இருந்தாலும் - நம் நெஞ்சில் சட்டென இடம்பிடித்து விடுகின்றன. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்கிற திரைப்படப்பாட்டாக இருந்தாலும் சரி, நாராய் நாராய் செங்கால் நாராய் என்கிற சத்திமுத்தப் புலவரின் வரியாக இருந்தாலும் சரி, ‘என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கென்று ஒரு வாய்ச் சொல் என் பிழைக்கும் இளங்கிளியே, யான் வளர்த்த நீயிலையே?’ என்று கிளியைத் திருமாலிடம் தூது அனுப்பும் திருவாய்மொழிப்பாட்டானாலும் சரி. எதையும் ஒரு போதும் மறக்க முடியாது.
பறவைகள் பற்றிய சின்னசின்ன செய்தியைக்கூட ஆர்வத்துடன் படிக்கும் பழக்கமுள்ள நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பறவைகளைப் பற்றித் தமிழிலேயே வந்திருந்த ஒரு புத்தகத்தைப் படிக்கத் தவறிவிட்டதை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது. உண்மையில் நூல் நிலையத்தில் நான் தேடிக் கொண்டிருந்தது, வேறொரு புத்தகம். அந்த வரிசையில் மயில் தோகை விரித்தபடி நிற்பதுபோலத் தீட்டப்பட்ட ஓவியத்தை அட்டைப்படமாகக் கொண்ட பறவைகளேஎன்ற புத்தகத்தைத் தற்செயலாகப் பார்த்தேன். ஆசிரியர் கணபதிப் பிள்ளை சச்சிதானந்தன். யாழ்ப்பாணத்துக் காந்தளகம் 1980 ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகம். பறவைகளைப் பற்றிய 23 கட்டுரைகள் அழகிய தமிழில் ஏராளமான அறிவியல், இலக்கிய எடுத்துக்காட்டுகளோடு எழுதப்பட்டுள்ளன.
வரப்பெல்லாம் நாரைகள்என்னும் முதல் கட்டுரையைப் படித்ததுமே எனக்கு எங்கள் ஊர் நினைவும் இளமை நாட்களும் பொங்கிப் புரளத் தொடங்கிவிட்டன. மறவன்புலம் என்னும் சிற்றூரைப் பற்றியும் அவ்வூர்க்குளங்கள் பற்றியும் சச்சிதானந்தன் தந்துள்ள சித்திரங்கள். அவற்றைப் படிக்கிற ஒவ்வொரு வரையும் தம் சொந்த ஊரை ஒருகணமேனும் நினைத்துப் பார்க்கத் தூண்டும்படி உள்ளன. அந்த ஊர்க் குளக் கரையிலும் கழனி வரப்புகளிலும் கூட்டம்கூட்டமாக நாரைகள் வந்து அமர்கின்றன. கார்த்திகையிலும் மார்கழியிலும் வாடைக்காற்றின் வேகத்துடன் நாரைகள் வானத்தில் தென்படுகின்றன. பனிப்புகை படர்ந்த காலை நேரங்களிலும் வெண்முகில் கூட்டமே தரையில் இறங்கி வந்ததுபோல நாரைகள் பெருங்கூட்டமாக வரப்புகளில் நின்றிருக்கின்றன. நாரைகளைப் பற்றிய ஏராளமான சித்திரங்களைத் தீட்டிக்காட்டும் சச்சி தானந்தன் அவற்றுடன் சத்திமுத்தப்புலவரின் பாடலையும் இணைத்துக் கொள்கிறார். கையது கொண்டு மெய்யது பொத்திகுளிர்காலத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் போது, வலசை வந்து போகும் நாரைகள் மீண்டும் மீண்டும் தென்பட்டபடியே இருந்திருக்க வேண்டும். இந்த நாரைகள் தெற்கிலிருந்து வந்தன. வடக்கே போய்க்கொண்டிருக்கின்றன. தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீராயின்என்பது புலவர் கூற்று. வாடையுடன் தெற்கே சென்ற நாரைகள் கோடை வரும் முன்பு வடக்கே மீண்டும் பறக்கின்றன. பறவைகளின் இடப்பெயர்ச்சி முறைகளை அவர் இலக்கியக் கண்கொண்டு பார்க்கிறார்.
தமிழ்நாட்டில் மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களும் முன்பனிக் காலம். பின் பனிக்காலம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பனியையும் குளிரையும் நாடி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் உலகின் பல கண்டங்களிலிருந்தும் பறவைகள் இங்கு வந்துவிடுகின்றன. வேடந்தாங்கல் போன்ற பறவையகங்களில் கூட்டம்கூட்டமாகத் தங்கிவிட்டுச் செல்கின்றன. தமிழகத்தில் வேடந்தாங்கல் போல இலங்கையில் கூந்தன்குளம், கட்டுக்கரைக்குளம், குமணை, யாலை ஆகிய பல இடங்களில் பறவை மனைகள் உண்டு.
இமயமலைக்கு வடக்கே சைபீரியச் சமவெளி, தெற்கே இந்தியத் துணைக்கண்டம், இலங்கைத்தீவு, தேவேந்திரமுனை, கீழே இந்துமாக்கடல், இமயமலையில் தொடங்கி சைபீரிய நாரைகளும் பிற பறவையினங்களும் ஒவ்வொரு இடமாகக் கடந்துகடந்து இலங்கை வரைக்கும் வருகின்றன. இமயமலையின் உச்சியின் உயரம் ஏறத்தாழ 9500 மீட்டர். வெள்ளிப் பனிமலைக்கு மேலாகப் பறவைகள் பறந்து வருகின்றன. ஆடியில் தட்சணாயனம் தொடங்கியதுமே சைபீரியப் பறவைகள் தம் நீண்ட பயணத்துக்குத் தயாராகிவிடுகின்றன. ஏறத்தாழ ஐயாயிரம், ஆறாயிரம் மீட்டர் உயரத்தில் கடும் குளிரில் அமுக்கக்குறைவில் பறவைகள் பறக் கின்றன. ஒருமணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகம் இடைவிடாத பயணம் இருபது முதல் முப்பது நாட்கள்வரை பறக்கின்றன.
இமயமலைச் சாரலைக் கடந்தால் கங்கைப்படுகை, கோதாவரிச் சமவெளி, காவிரிப்படுகை, நான்மாடக்கூடல், தெந்திசைக்குமரி, கொட்டியாற்றுப்படுகை, தென்னிலங்கைக் காடுகள். இதுதான் அவற்றின் தோராயமான பயணப்பாதை. கூட்டம்கூட்டமாகச் செல்வதுதான் பறவைகளின் பழக்கம். அவற்றிடையே மிகுந்த கட்டப்பாடு உண்டு. கட்டுப்பாட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத பறவை களும் இருக்கலாம். சக்திக்குறைவு, களைப்பு, குளிர் தாங்க முடியாமை. அமுக்கக் குறைவு தாங்க முடியாமை, வேகமாகப் பறக்கமுடியாமை என இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம். மறவன்புலவிலும் யாழ்குடா நாட்டின் ஏனைய வயல்வெளிகளிலும் காணும் சிறுசிறு நாரைக்கூட்டங்கள், இப்படி நடுவழியில் தரையிறங்கியவை ஆகும். தம் உணர்வுப் பொறிகளின் தூண்டுதலால், தாமதமாகவாவது எல்லைப் புள்ளியை ஏற்கனவே அடைந்துவிட்ட கூட்டத்தோடு சென்று கலந்துவிடுகின்றன.
பறவைகள் ஏன் இடம்பெயர்ந்து வருகின்றன என்னும் கேள்வியை ஒட்டி சச்சிதானந்தன் ஒரு சின்ன ஆய்வையே நிகழ்த்தி முடிவுகளை வெளியிட்டிருக் கிறார். வட துருவத்தை ஒட்டிய நிலப்பகுதிகளில் கோடைக்காலத்தில் நிலத்தில் பசுமை படரும். உணவு கிடைக்கும். குளங்களில் நீர் நிறைந்திருக்கும். குளிர் இருக்காது. மரங்களில் காய்த்துக் கனிகள் தொங்கும். பறவைகளுக்கு அவை உணவாகும். மாரி பிறந்தால் இலைகள் உதிர்ந்துவிடும். குளங்களில் பனி மூடி விடும். உறைபனிக் குளிர் உடலை ஊடுருவ முயற்சி செய்யும்.
பறவைகளும் மனிதர்களைப் போன்றவை. குளிரைத் தாங்கமுடியாமல்தான் தெற்கு நோக்கி வருகின்றன. உடலின் வெம்மை பறவைகட்கு மாறு வதில்லை. மனிதனுக்கும் மாறுவதில்லை. மனிதர் களுக்கும் பறவைகளுக்கும் வெப்பம் அதிகரித்தால் காய்ச்சல் வரும். குறைந்தால் குளிர் வரும்.
பறவைகளுக்கு இடையே உள்ள காதல் அழைப்பு களை அலசும் காதற்கோலங்கள் கவர்ச்சிப் பாலங்கள்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சுவாரசியமாக உள்ளன. காதல் அழைப்பை எல்லாச் சமயங்களிலும் ஆண் பறவைகளே முன்வைக்கின்றன. இனப்பெருக்கமே அதன் விழைவு. இறப்பதற்குமுன் தன்னைப் போல ஒன்றை உருவாக்க வேண்டும். காலத்தைக் கடந்து உயிர் பரவ வேண்டும், அந்தக் கடமையை முடித்து விட்டு இறக்க வேண்டும் என்னும் நோக்கங்கள் ஆண் பறவைகளின் அழைப்புக்கிடையே இரண்டறக் கலந்து உள்ளன. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள பாப்புவா நியுகினி என்னும் தீவில் உள்ள பறவையினத்தைப் பற்றி ஒரு குறிப்பைத் தருகிறார். அதன் பெயர் சொர்க்கப்பறவை. கவர்ச்சி காட்டும் ஆண்பறவை. கூட்டுக்குள்ளே பழங்கள், சிப்பி ஓடுகள், கம்பிகள், நூதனமான பொருட்கள் என நிரப்பி வைத்து அழகுபடுத்துகிறது. பிறகு தான் தன் இணைப் பறவையைப் பார்த்துக் காதல் அழைப்பை விடுக்கிறது. இரண்டும் ஆடுகிற ஆட்டமும் இறகுகளின் அழகும் பார்ப்பவர்களை ஒரே கணத்தில் வசீகரித்து விடும். அமெரிக்காவில் உள்ள ராபின் என்னும் பறவை களிமண்ணையும் புல்லையும் பயன்படுத்திக் கூடு கட்டுகிறது. முட்டையிடும் அவசரமுடைய சிட்டுக் குருவி வேகவேகமாக மூன்று மணி நேரத்துக்குள் வீடு கட்டி முடிக்கின்றது. சில பறவைகளுக்குப் பதினைந்து நாட்கள் முதல் நாற்பது நாட்கள்வரை கூடப் பிடிக் கின்றன.
ஒவ்வொரு பறவைக்கும் ஒரு அறிவியல் பெயர் உண்டு. 1758ஆம் ஆண்டில் சுவிடன் நாட்டில் வாழ்ந்த லின்னேயசு என்பவர்தான் முதன்முதல் அறிவியல் பெயரை வைக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். நாரை, காகம், மயில் என்பன பொதுப் பெயர்கள். நாட்டுக்கு நாடு. மொழிக்கு மொழி இப்பெயர்கள் வேறுபடும். ஆனால் அறிவியல் பெயர்கள் ஒருபோதும் வேறுபடுவதில்லை.
மாடு மேய்ச்சான் கொக்கு என்று வகைப்படுத்தும் பெயருக்கான காரணம் கதைத் தன்மையோடு உள்ளது. மாடுகள் கூட்டம்கூட்டமாகப் படுத்திருக்கும். வெள்ளைக் கொக்குகள் கூட்டம்கூட்டமாக அங்கே வந்து இறங்கும். கொக்கு ஒன்று மாட்டின் முதுகின் மேல் ஏறி நிற்கும். மாடு முதுகை உலுப்பும். விலகிப் பறக்கும் கொக்கு மறுகணமே மீண்டும் மாட்டின்மீது அமரும். மீண்டும் மாட்டின் உலுப்பல். அதற்கேற்றபடி மாறிமாறி கெந்திக்கெந்தி உட்காரும் கொக்கு. தொடைக்கும் உடலுக்கும் இடையில் கூச்சமுண்டாக்கும் மென்தோலில் தன் அலகால் குத்திக் கீச்சம் காட்டும் கொக்கு. அதன் தொல்லை தாங்காமல் மாடு எழுந் திருக்கும். எழுந்த மாட்டின் முதுகில் அமர்ந்த கொக்குகள் மாட்டை விரட்டும். மாடு புற்றரையில் நடக்கும். புற்களுள் உள்ள பூச்சிகள். மாடுகளின் காற்சத்தம் கேட்டுப் பூச்சிகள் அசைந்து கிளம்பும். கொக்குகள் பூச்சிகளைக் கொத்தியபடி இருக்கும். கொக்குகள் மாடுகளை மேய்ப்பது போன்ற ஒரு பிம்பத்தை இக்காட்சி வழங்குகின்றது. இதன் பொருட்டு இப்பெயரே அக்கொக்குகளுக்கு உறுதிப் பட்டுவிட்டது. இது எல்லா நாடுகளிலும் காணப் படும் உண்மை. சில நாடுகளில் மாடு, சில இடங்களில் மான். சில இடங்களில் காண்டாமிருகம். இன்னும் சில இடங்களில் எருது.
பறவைகளின் இசை ஒலிகளைப் பற்றிய கட்டுரை, தகவல் களஞ்சியமாக இருக்கிறது. அவை ஒருவகையில் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். தேவைகளின் எதிரொலிகள். அவை பறவைகளின் மூச்சில் பிறக் கின்றன. தம் தொடர்புக்காக அவை ஓசையெழுப்புகின்றன. பசி, அச்சம், ஆபத்து, அன்பு, காதல், பாது காப்பு எனப் பலவிதமான வாழ்வுப் பயன்பாடுகள் சார்ந்து அவ்வொலிகள் எழுகின்றன. இவையனைத் தையும் விவரிக்கும் சச்சிதானந்தன் இறுதிப் பகுதியில் கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்இன்னும் பல பறவைகளின் ஒலிகளையும் மதுரை நோக்கிச் செல்லும் கண்ணகியும் கோவலனும் கேட்டதாக சிலப்பதி காரத்தில் இடம்பெறும் வரிகளைப் பொருத்தமான இடத்தில் குறிப்பிடுகிறார்.
பறவைகளின் உடலமைப்பு, இயற்கை உரமாகக் கிடைக்கும் பறவைகளின் எச்சத்துக்குமான மதிப்பு பற்றிய தகவல்கள் நூலின் பிற்பகுதியில் உள்ளன. வளர்ச்சி அடைந்த பதினாறு நாடுகளில் பறவைகளைப் பற்றி வெளிவந்திருக்கும் இதழ்களின் தகவல்கள் இறுதிப் பகுதியில் அடங்கியுள்ளன. அத்துடன் சில பறவைகளின் பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. படிக்கும்போதே அப்பெயர்கள் காரணப் பெயர்கள் என்பது புரிந்துவிடுகிறது. அவரைக்கண்ணிக்குருவி, கத்தரி மூக்குக்குருவி, கள்ளிச்சிட்டு, பட்டாணிக் குருவி, பலாக்கொட்டைக்குருவி, பாற்காரிக்குருவி, குறுகுறுப்பான்குருவி, தாமரைக்கோழி, தையல் சிட்டு என்பவை அப்பட்டியலில் காணப்படும் சில பெயர்கள். எளிமையாகவும் பொருத்தமாகவும் பெயர்சூட்டி அழைத்தது அந்தக் காலத்துத் தலைமுறை. பறவைகளைப் புகைப்படங்களிலும் வாழ்த்தட்டைகளிலும் மட்டுமே பார்த்து மனநிறைவு கொள்வதாக மாறி விட்டது நம் தலைமுறை. எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாதது இந்த இழப்பு.

(உங்கள் நூலகம் - மே 2011 இதழில் பிரசுரமானது)