Home

Wednesday 30 September 2020

வல்லபாய் படேல் : வழிகாட்டும் வாழ்க்கை

 

தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட காந்தியடிகள் 09.01.1915 அன்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய் துறைமுகத்துக்குத் திரண்டு வந்த மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்றனர். அன்று அவரைச் சந்தித்த ஆங்கில நாளேடுகளின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு காந்தியடிகள் விடையளித்தார். இனி தன் வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுதும் இந்திய தேசத்துக்காக உழைக்கவிருப்பதாக அவர்களிடம் அறிவித்தார்.

அகமதாபாத்தில் கோச்ரப் என்னும் இடத்தில் அவர் தமக்கென ஓர் ஆசிரமத்தை நிறுவிக்கொண்டார். ஒரு தேசியப்பள்ளியை நிறுவும் திட்டமொன்றும் அவர் மனத்தில் இருந்தது. அதைப்பற்றி பல கூட்டங்களில் அவர் தொடர்ந்து பேசி மக்களின்  கருத்தை அறிய முனைந்தார். அப்போது அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் வல்லபாய் படேல். அவருக்கு காந்தியடிகள்மீது எவ்விதமான ஈர்ப்பும் இல்லாத காலம் அது.

ஜூன் 1916இல் வழக்கறிஞர் சங்க வளாகத்தில் உரையாற்றுவதற்காக காந்தியடிகள் சென்றிருந்தார். அச்சமயத்தில் பொழுதுபோக்கு கூடத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார் படேல். காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காக அனைவரும் புறப்பட்ட சமயத்தில் அவர்களைப் பார்த்து கேலிப்புன்னகையுடன்அங்கே சென்று என்ன செய்யப் போகிறீர்கள்? அவர் கோதுமையில் உள்ள கற்களைப் பொறுக்கச் சொல்வார். அவ்விதம் செய்தால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடுமா என்ன?” என்று கேட்டார். நாளடைவில் குஜராத்தில் பல்வேறு இடங்களில் காந்தியடிகள் ஆற்றும் உரைகளின் விவரங்களை செய்தித்தாட்கள் வழியாக அறிந்துகொள்ளத் தொடங்கியதும் அவர் தன் முன்முடிவான கருத்தை கொஞ்சம் கொஞ்சமாக உதறினார். வழக்கமான தலைவர்களின் பாணியில் இல்லாத காந்தியடிகளின் உரைகள் அவரைக் கவர்ந்தன. ஒவ்வொரு மேடையிலும் அவர் குஜராத்தி மொழியிலேயே பேசியதும், ஆங்கிலத்தில் பேச முனைந்த பலரையும் குஜராத்தி மொழியிலேயே பேசுமாறு கேட்டுக்கொண்டதும் அவருக்குப் பிடித்திருந்தன.

எல்லாவற்றுக்கும் உச்சமாக அமைந்தது 03.11.1917 அன்று கோத்ரா நகரில் நடைபெற்ற குஜராத் அரசியல் மாநாடு. அந்த மாநாட்டில் உறுப்பினராக கலந்துகொள்வதற்கு ஒரு நிபந்தனையை விதித்திருந்தார் காந்தியடிகள். உறுப்பினராக விழையும் ஒவ்வொருவரும்பொதுமக்களை அதிகார வர்க்கத்திடம் சென்று பிச்சை ஏற்க ஊக்கப்படுத்தாமல் தம்முடைய உரிமையை கேட்டுப் பெறுகிறவர்களாக உருவாக்கப் பாடுபடுவேன்என்னும் உறுதிமொழியை எடுத்தல் வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அடிப்படை அளவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான முனைப்பு அந்த விதியில் பொதிந்திருப்பதாகக் கருதினார் படேல். காந்தியடிகளின் செயல்பாடுகளை அவர் மேலும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.

மாநாட்டில் சத்தியாக்கிரகம் தொடர்பான சுருக்கமான விளக்கத்தை  எடுத்துரைத்தார் காந்தியடிகள். ‘அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்கள், அந்த அதிகாரம் தரும் போதையின் விளைவாக பல தவறுகளைச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட தவறுகள் நிகழும்போது ஒரு சத்தியாக்கிரகி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. மாறாக தன்னையே வருத்திக்கொண்டு அதிகார அமைப்பு உருவாக்கியிருக்கும் சட்டங்களை மீறத் தொடங்குகிறார். அதற்காக அதிகார அமைப்பு வழங்கும் தண்டனைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார். சத்தியாகிரகியின் ஒத்துழையாமையின் முன்னால் அதிகாரம் பணிந்தே தீரவேண்டும். அவர் விரும்பாத ஒரு செயலை அதிகார அமைப்பு ஒருபோதும் செய்யவைக்க முடியாது. இதுவே சுயராஜ்ஜியம் என்னும் கருத்தாக்கத்தின் சாரம். இதுவே முழு விடுதலை. இதில் ஒரு சதவீதம் கூட மிகையில்லை. அல்ஜீப்ரா சமன்பாட்டைப்போன்ற முழு உண்மை இது. சத்தியாக்கிரகம் என்பது வலிமையின் ஊற்றுக்கண்ணாக விளங்கக்கூடிய சக்தியாகும்என்று உரைத்த காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லும் படேலின் மனத்தை அசைத்தது. இதற்கு முன் நடைபெற்று முடிந்த சாம்ப்ரான் சத்தியாகிரக நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவர் ஆற்றிய உரைக்கு சுயவிளக்கமாக தோற்றமளித்தன.

குஜராத்தைச் சேர்ந்த கேடா என்னும் மாவட்டத்தில் கடுமையான மழையின் காரணமாக ஒருமுறை விளைச்சல் பாதிக்கப்பட்டது. நான்கில் ஒரு பங்கை மட்டுமே அறுவடை செய்யமுடிந்தது. அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வரியை யாராலும் செலுத்த முடியவில்லை. அரசாங்கமோ, விளைச்சல் அதிகமாக இருந்ததாக பொய்க்கணக்கைக் காட்டி உரிய வரியை உடனடியாகச் செலுத்தும்படி நெருக்கடி கொடுத்தது. வேறு வழியின்றி விவசாயிகள் காந்தியடிகளை அணுகினர். காந்தியடிகள் படேலின் துணையுடன் கேடா மாவட்டப் பகுதிகளிலெங்கும் பயணம் செய்து உண்மையை அறிந்துகொண்டார்.

பம்பாய் மாகாண அரசுக்கு படேல் விளைச்சலின்மை தொடர்பான விரிவான அறிக்கையை ஒரு கடிதமாக எழுதி அனுப்பிவைத்தார் காந்தியடிகள். அந்த ஆண்டுக்குரிய வரியைத் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அவருடைய சொற்களுக்குச் செவி சாய்க்காத அரசு, முழு வரியையும் உடனடியாகச் செலுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. வரியையும் 23 விழுக்காடு உயர்த்தியது. வரி செலுத்தாதவர்களின் நிலங்கள் ஜப்தி செய்யப்பட்டன. அதனால் காந்தியடிகளின் தலைமையில் வரிகொடா போராட்டம் தொடங்கியது. படேல், நர்ஹரி பாரிக், மோகன்லால் பாண்டியா, ரவிசங்கர் வியாஸ் போன்றோர் விவசாயிகளை ஓரணியில் திரட்டி நிறுத்தினர். போராட்டம் முற்றியதும் மெல்லமெல்ல பக்கத்திலிருந்த மாவட்டங்களுக்கும் பரவியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களும் போராட்டத்தில் இறங்கினர். வேறு வழியில்லாமல் அரசாங்கம் பணிந்தது. அந்த ஆண்டுக்குரிய வரியை நீக்கி அரசாங்கம் உத்தரவிட்டது. வரி உயர்வையும் விலக்கிக்கொண்டது. ஜப்தி செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் உரியவரிடம் திருப்பியளிக்கப்பட்டன. படேல் ஒரு தலைவராக வளர்ச்சி பெற்றார். சத்தியாகிரகம் முடிந்ததும் படேலின் முனைப்பைப் பாராட்டிய காந்தியடிகள்முதன்முதலாக நான் படேலைச் சந்தித்தபோது, சண்டைக்காரரான இந்த மனிதர் யாரென்று நினைத்தேன். ஆனால் அவருடன் நெருங்கிப் பழகப்பழக அவர் தவிர்க்கமுடியாத ஒருவர் என்பதைப் புரிந்துகொண்டேன்என்று குறிப்பிட்டார்.

1919 ஆம் ஆண்டு ரெளலட் சட்டத்தின் காரணமாக நாடெங்கும் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டபோது படேலும் அதில் கலந்துகொண்டார். அகமதாபாத் நகராட்சியில் அவரும் ஓர் உறுப்பினர் என்கிற முறையில் அவர் அடிக்கடி அரசுடன் மோதினார். பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றி மக்களுக்கு எழுச்சியூட்டினார். ஆங்கிலக்கல்வியை அளிக்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மாணவர்கள் புறக்கணிக்கவேண்டும் என்று பேசப்பட்டபோது குஜராத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் படேலைச் சந்தித்துநாங்கள் கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டு குஜராத் வித்யாபீடத்துக்கு வந்தால், அங்கு எங்களுக்கு எத்தகைய கல்வி அளிக்கப்படும்?” என்று கேட்டனர். உடனே படேல்நீங்கள் குஜராத் கல்லூரியில் கற்ற பாடங்கள் அனைத்தும் மறந்துவிடும் அளவுக்கு குஜ்ராத் வித்யாபீடம் கல்வியை அளிக்கும்என்று பதில் சொன்னார்.

ஆங்கிலக்கல்வி முறையைப் புறக்கணிக்கவேண்டுமென்ற அழைப்போடு ஊர்வலமாகச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு நாகபுரியில் ஒரு பிரச்சினை உருவானது. தேசியக்கொடியை ஏந்திச் சென்றவர்களை நாகபுரி காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்தத் தடையை மீறிச் சென்ற சேட் ஜம்னாலால் பஜாஜ் காவலர்களால் கைது செய்யப்பட்டார். படேல் அதை எதிர்த்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். படேலுக்கு ஆதரவாக எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அணிஅணியாக வந்து கலந்துகொண்டார்கள். அதைக் கண்டு நாடு முழுதும் விழிப்புற்றது. தேசியக்கொடியை ஏந்தியபடி ஊர்வலம் செல்வதன் நோக்கம் அரசை அவமதிப்பதோ அல்லது யாரையும் தொல்லைக்கு ஆளாக்குவதோ அல்ல. மாறாக, இது பாரத மக்களின் அடிப்படை உரிமையைக் காத்துக்கொள்வதுபற்றிய பிரச்சினையாகும் என்று படேல் தெளிவாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். வேறு வழியில்லாமல் அரசு இறங்கி வந்து படேலுடன் சமரசம் செய்துகொண்டது. தேசியக்கொடியுடன் மக்கள் ஊர்வலம் செல்லலாம் என்று அறிவித்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து போர்சத் என்னுமிடத்தில் மற்றொரு போராட்டத்தைத் தொடங்கினார் படேல். கொள்ளையரிடமிருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக பிற பகுதிகளிலிருந்து நானூறுக்கும் மேற்பட்ட சிறப்புக்காவலர்கள் வரவழைப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையை மக்கள் வரியாகச் செலுத்தவேண்டும் என்று அரசு நெருக்கடி அளித்தது. அந்த வரியின் பெயர் தலைவரி. மக்கள் அந்தப் பிரச்சினையை படேலின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். அவர் உடனே எல்லாத் தகவல்களையும் திரட்டி உண்மையை அறிந்துகொண்டு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடுமையான நடவடிக்கையை எடுக்கத் துணிந்த அரசு நிலங்களைப் பறிமுதல் செய்ய ஒவ்வொரு முறையும் உத்தரவு பிறப்பித்தது.  ஆனால் உத்தரவுடன் அதிகாரிகள் ஊரை நெருங்கும் சமயத்தில் ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. செய்வதறியாமல் குழம்பினர் அதிகாரிகள். ஏறத்தாழ இரு மாத காலம் நீடித்த சத்தியாகிரகத்தைக் கண்டு அரசு கலவரமடைந்தது.

தனிப்பட்ட முயற்சியால் கொள்ளையில் ஈடுபடுகிறவர்களை அழைத்து அவர்களுடன் உரையாற்றினார் படேல். களவாடும் தொழிலை விட்டுவிடும்படியும் மக்களுக்குத் தொல்லை கொடுக்காமல் நாணயத்தோடு இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். படேலின் சொற்களைக் கேட்டு அவர்கள் மனம் திருந்தி கொள்ளைத் தொழிலையே கைவிட்டார்கள். ‘ஒரு கொள்ளைக்காரனைப் பிடிப்பதற்காக அரசாங்கம் நியமித்த காவலர்கள் கொள்ளைக்காரனைவிட மோசமான கொள்ளைகளை நிகழ்த்துகிறார்கள். அவர்களே கொலையையும் களவையும் புரிகிறார்கள். கொள்ளையர்களை உருவாக்கும் அரசாங்கம் ஒரு பாவமும் அறியாத ஏழை விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்து கொடுமைப்படுத்துகிறதுஎன்று அரசாங்கத்துக்கு எழுதினார் படேல். தலைமைச்செயலரே போர்சத்துக்கு வந்து நேரில் விசாரித்து பொதுமக்கள் மீது எநத்த் தவறுமில்லை என அரசுக்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அரசு உடனடியாக தலைவரியை விலக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் திருப்பித் தரப்பட்டன.

படேல் தலைமையேற்று நடத்திய பர்தோலி சத்தியாகிரகம் அவரை நாடறிந்த தலைவராக உயர்த்தியது. அதன் வெற்றியின் விளைவாகவே மக்கள் அவருக்கு சர்தார் என்னும் பட்டத்தைச் சூட்டினர். 1928ஆம் ஆண்டில் பர்தோலி பகுதியில் அரசு வழக்கமாக வசூலிக்கும் வரிப்பணத்தை திடீரென 22 விழுக்காடு உயர்த்தியது. மக்கள் அதை எதிர்த்தனர். மக்கள் பிரதிநிதிக்குழு அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியது. ஆனால் குழுவின் குரலுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. வரி பற்றிப் பேசவோ, அதில் தலையிடவோ யாருக்கும் உரிமையில்லை என்று அரசு அறிவித்துவிட்டது. இறுதியில் படேலைச் சந்தித்து நிலைமையைத் தெளிவாக முன்வைத்தனர் மக்கள். காந்தியடிகளுடன் கலந்து பேசிய பிறகு படேல் சத்தியாகிரகத்தை அறிவித்தார்.

தன்னோடு போராட்டத்தில் கலந்துகொள்ளவும் தேவைப்பட்டால் சிறைபுகவும் உயிரைத் தியாகம் செய்யவும் வசதியாக நான்கு வீரர்களை அவர் அந்த ஊரிலிருந்தே தேர்ந்தெடுத்து தம்முடன் வைத்துக்கொண்டார். முதல் நடவடிக்கையாக அரசுடன் ஒருமுறை கலந்து பேசினார். அது உரிய பலனளிக்கவில்லை என்றதும்நிலவரி தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும் வரை ஒரு காசு கூட வரியாக யாரும் அரசுக்குச் செலுத்தக்கூடாது என்றும் ஒருவேளை அரசே  முன்வந்து நிலங்களைப் பறிமுதல் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளவேண்டுமே ஒழிய எதிர்வினை செய்யக்கூடாது. என்றும் மக்களிடம் தெரிவித்துவிட்டு அமைதிவழியில் போராட்டத்தில் இறங்கினார்.

அரசு பலவிதமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. சில வீடுகள் தீக்கிரையாகின. சில வீடுகள் ஏலத்துக்கு விடப்பட்டன. ஆயினும் மக்கள் மன உறுதி குன்றாதிருந்தனர். உடனே அரசு கைது நடவடிக்கையில் இறங்கியது. மக்களை மட்டுமல்ல, அவர்கள் வளர்த்துவந்த கால்நடைகளைக் கூட அழைத்துச் சென்று அடைத்துவைத்தது. போராட்டமும் வலுவடைந்துகொண்டே சென்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக ஏனைய தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கினர். இறுதியாக அரசு இறங்கிவந்து காந்தியடிகளுடனும் படேலுடனும் பேச்சுவார்த்தை நடத்த ஒரு மத்தியஸ்தரை நியமித்தது. இருவருடனும் பேசியபிறகு அவர் ஓர் அறிக்கையை அரசுக்கு வழங்கினார். இரு தரப்பினரிடையே ஓர் ஒப்பந்தம் உருவானது. பறிமுதல் செய்யப்பட்ட எல்லா நிலங்களும் திரும்பவும் உரியவரிடமே ஒப்படைக்கப்பட்டன. சத்தியாகிரகக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மாவட்டமெங்கும் புதிய வரி வசூல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அனைவருக்கும் அந்த ஆண்டுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டது. வரிவிகித உயர்வு இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ’பர்தோலியின் சர்தார்என்று காந்தியடிகள் படேலைப் பாராட்டி கெளரவித்தார். அன்றுமுதல் அவர் சர்தார் வல்லபாய் படேல் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1928 ஆம் ஆண்டில் நாட்டினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சைமன் குழு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. இந்தியாவில் ஃபெடரல் அரசியல் முறையை நடைமுறைப்படுத்த அவர் ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் 11 நிபந்தனைகளை அரசிடம் வெளியிட்டார். ஆனால் அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. உப்பு வரியை நீக்குவது அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும். 1930 ஆம் ஆண்டில் நாடு தழுவிய ஒரு பெரும்போராட்டத்தைத் திட்டமிட்ட காந்தியடிகள், அந்த நிபந்தனையை மட்டும் முன்வைத்து உப்புசத்தியாகிரகத்தைத் தொடங்கினார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கி 23 நாட்கள் நடந்து 240 மைல்களுக்கு அப்பால் கடற்கரையோரமாக உள்ள தண்டி என்னுமிடத்தை அடைந்து சட்டத்தை மீறி  உப்புக்காய்ச்ச அவர் திட்டமிட்டிருந்தார். மார்ச் 12 அன்று தொடங்கி ஏப்ரல் 6 அன்று முடிவடையும்படி தண்டி யாத்திரை திட்டமிடப்பட்டிருந்தது. பயணப்பாதையையும் பயணத்தின்போது தங்குவதற்கான திட்டங்களையும் காந்தியடிகளுக்கு வகுத்துக்கொடுத்தவர் படேல்.

குஜராத் முழுதும் பயணம் செய்து உப்பு சத்தியாகிரகத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் ஆங்கில ஆட்சி தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும் தொடர்பிரச்சாரத்தில் ஈடுபட்டார் படேல். படேலின் வீறுகொண்ட சொற்பொழிவு மக்களை ஆட்கொண்டது. அதைக் கண்டு அஞ்சிய அரசு அவரை மார்ச் 7 அன்றே கைது செய்து மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதித்து சிறையிலடைத்தது. அதன் மூலம் அவரைக் கட்டுப்படுத்திவிடலாம் என அரசு நினைத்தது. அவர் விடுதலை பெற்று வெளியே வந்த சமயத்தில் தேசத்தலைவர்கள் அனைவரும் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைதாகி சிறைப்பட்டிருந்தனர். தன்னந்தனியாக விடுதலைப் போராட்டப்பணிகளில் அவர் முனைப்போடு இயங்கினார். எண்ணற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசு மறுபடியும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

படேலை சிறையிலிருந்து விடுதலை செய்வதும் உடனடியாக ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு கைது செய்து சிறையில் வைப்பதும் அரசாங்கத்துக்கு வாடிக்கையாகிவிட்டது.  ஒருமுறை 04.01.1932 அன்று காந்தியடிகள், படேல் இருவரையும் இணைத்து கைது செய்து  16 மாத தண்டனை வழங்கி சிறையிலடைத்தது. அச்சிறைவாசத்தை நினைவுகூர்ந்து பேசியபோது காந்தியடிகள், படேலுடன் நெருங்கிப் பழகவும் புரிந்துகொள்ளவும் அச்சிறைவாசம் மிகவும் உறுதுணையாக இருந்ததென்றும் தன்னை ஒரு தாயைப்போல அன்புடன் அவர் கவனித்துக்கொண்டார் என்றும் குறிப்பிட்டார். இச்சிறைவாசத்தின்போது படேலின் தாயார் மறைந்துவிட்டார். தந்தைக்கு இணையாக அவரைக் கவனித்துக்கொண்ட அவருடைய மூத்த சகோதரரும் மறைந்துவிட்டார். அரசு சலுகை பெற்று வெளியே செல்ல அவருக்கு விருப்பமில்லாததால் படேல் அவர்களுடைய இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ளவில்லை. தன் துக்கத்தை நெஞ்சின் ஆழத்தில் மறைத்துக்கொண்டு சிறைவாசத்தைக் கழித்தார்.

படேல் விடுதலையடைந்து வெளியே வந்த தருணத்தில் தேசமெங்கும் பிளேக் நோய் பரவி மக்கள் அனைவரும் உயிர் அச்சத்தில் மூழ்கியிருந்தனர். போர்சத் பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு தொண்டர்களுடன் முகாமிட்ட படேல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி மக்களைக் காப்பாற்றினார்.

தேசிய காங்கிரஸ் செயல்படத் தொடங்கி ஐம்பதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நாடெங்கும் பொன்விழா நடைபெற்றது. அச்சமயத்தில் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எல்லா மாநிலங்களிலும் போட்டியிட்டு களத்தில் இறங்கியது . தேர்தல் வெற்றிக்காக படேல் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். அத்தேர்தலில் பதினோரு மாகாணங்களில் எட்டு மாகாணங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் புதிய சட்டமுறைப்படி மந்திரி பதவிகளை ஏற்று ஆட்சி செலுத்தலாமா வேண்டாமா என்னும் பிரச்சினையில் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் திண்டாடியது. ஒரு முடிவை எட்டுவதற்காகவே தில்லியில் காங்கிரஸ் மகாசபையின் கூட்டம் நடைபெற்றது. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல விவாதங்கள் எழுந்தன. உரையாடல் நீண்டுகொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் எழுந்து நின்ற படேல் கூட்டத்தினரைப் பார்த்து உறுதியான குரலில் மந்திரிசபையை ஏற்று ஆட்சி புரியும் வாய்ப்பை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது என்று எடுத்துரைத்தார். இறுதியில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் மந்திரிசபைகள் அமைக்கப்பட்டன. பார்லிமெண்ட் போர்டின் தலைவராகப் பணியேற்றுக்கொண்டிருந்தார் படேல்.

காங்கிரஸின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இட்லரின் தலைமையில் ஜெர்மனி ஐரோப்பாவில் உள்ள சின்னச்சின்ன நாடுகளையெல்லாம் வசப்படுத்திவிட்டது. எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் இதைக்கண்டு அச்சம் கொண்டன. இங்கிலாந்தும் பிரான்சும் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக போர்முழக்கம் செய்தது. இந்தப் போரில் இந்தியாவையும் தன்னிச்சையாக ஈடுபடுத்த நினைத்தது. போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு முழு சுதந்திரம் அளிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தது காங்கிரஸ். அதை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இல்லை. அதனால் ஆட்சியை நீடிக்க விரும்பாத காங்கிரஸ் பதவியிலிருந்து தாமாகவே விலகிவிட்டது. ஜப்பான் படையெடுக்குமோ என்ற அச்சத்தால் இங்கிலாந்து வெளிநாட்டுப்படைகளை இந்தியாவுக்கு அனுப்பத் தொடங்கியது. அவர்களைக் குடியேற்றுவதற்காக பல கிராமங்கள் இந்தியாவில் அழிக்கப்பட்டன. அதை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கத் தொடங்கியபோது அரசின் போர்முயற்சிக்கு இடையூறு விளைவிப்பதாகக் குற்றம் சாட்டி அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

15.06.1945 அன்று படேலும் மற்ற தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஆங்கில அரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் விளைவாக, இதற்குமுன்பு காங்கிரஸ் ஆட்சி செய்த இடங்களில் மீண்டும் தம் ஆட்சியைத் தொடர வாய்ப்பு உருவானது. இதனால் 02.09.1946 அன்று தலைநகரில் இடைக்கால அரசு அமைந்தது. பிரதமர் பொறுப்பை நேருவும் உள்துறை அமைச்சர் பொறுப்பை படேலும் ஏற்றுக்கொண்டனர். முதலில் இந்த அமைச்சரவையில் சேராமலிருந்த முஸ்லிம் லீக் சேர்ந்தபொழுது உள்துறை அமைச்சகப்பொறுப்பு தமக்கு வேண்டுமென கோரி அழுத்தம் கொடுத்தது. ஆனால் நாடெங்கும் மதப்பூசல் மிகுந்திருந்த தருணத்தில் அது பொருத்தமாக இருக்காது என்பதால்  படேல் அதற்கு இசையவில்லை. இதனால் முஸ்லிம் லீக் பொருளாதாரத்துறையை ஏற்றுக்கொண்டது.

நாடு முழுதும் மதக்கலவரங்கள் வெடித்தபடி இருந்தன. பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை வலுப்பெற்றபடி இருந்தது. நாற்புறமும் வெறியும் கலவரமும் தாண்டவமாடின. செயல்பட முடியாத நிலையில் தடுமாறியது அரசு. பெண்கள், குழந்தைகள் முதலியோர் உயிர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் போனது. சொத்துகள் சூறையாடப்பட்டன.  எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். ஒரு கட்டத்தில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு இரு நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தது அரசு. காந்தியடிகள் நாட்டுப்பிரிவினையின் அடிப்படையில் சுதந்திரம் பெறுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடெங்கும் குழப்பம் நிலவிய சூழலில் 14.06.1947 அன்று இத்திட்டத்தைப்பற்றி ஆலோசனை செய்ய டில்லியில் காங்கிரஸ் பொதுச்சபையின் கூட்டம் நடைபெற்றது. அனைவருடைய உள்ளங்களிலும் சோர்வும் துயரமும் படர்ந்திருந்தன. அக்கூட்டத்தில் தன் நிலையையும் காங்கிரஸ் நிலையையும் எடுத்துரைக்கும் விதமாக உரையாற்றினார் படேல். ”நான் வாழ்நாள் முழுதும் இந்தியாவின் ஒற்றுமைக்காகவும் விடுதலைக்காகவும் பாடுபட்டவன். பிரிவினைத் திட்டத்தால்  உங்களைப்போலவே நானும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறேன். ஆனால் இத்தருணத்தில் இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணமே எனக்குள் எழுகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக நாட்டின் ஆட்சி நம் கையில் இருந்தது.  நமக்குத் துன்பத்தை அளிக்கும் பல நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடந்துவிட்டன. இந்தப் பிரிவினைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த ஒன்பது மாதங்களில் நடந்ததுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற விட்டோமெனில் நம் நாடு அழிவுப்பாதையில் இறங்கிவிடும். அதனால் பிரிவினைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அந்த அழிவிலிருந்து மீண்டெழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றுவதும் நம் கடமையாகும். எனவே, அழுது கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களை இந்தக் கசப்புமருந்தை அருந்தும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்என்பது அவர் அன்று ஆற்றிய உரையின் சுருக்கம். காந்தியடிகளுக்கு இதில் உடன்பாடு இல்லையென்றபோதும் சுதந்திரத்துக்காக அந்தக் கசப்புமருந்தை அனைவரும் வேறு வழியில்லாமல் அருந்தவேண்டியிருந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேருவும் துணைப்பிரதமராக படேலும் பதவியேற்றுக்கொண்டனர். உள்துறை அமைச்சகமும் சமஸ்தானங்களைச் சேர்ந்த அமைச்சகமும் படேலிடம் ஒப்படைக்கப்பட்டன. நாடு விடுதலையடையும்போது நாட்டிலிருந்த அறுநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களும் விடுதலை பெற்றன. இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ விருப்பப்பட்ட நாட்டுடன் சேர்ந்துகொள்ளலாம் என்ற உரிமையை அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள். அந்த அறிக்கையில் இணைப்பைக் கட்டாயப்படுத்தும் வாசகம் எதுவுமில்லை என்றும் இரண்டு பாராளுமன்றங்களில் எதிலுமே சேராமல் தங்களுக்கெ தனிப்பட்ட பாதையை வகுத்துக்கொள்ளக்கூடாதுஎன அந்த அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு சமஸ்தானமும் தம் விருப்பம்போல சுதந்திரமாக இருக்கலாம் என கனவு கண்டது. இப்படிப்பட்ட நிலையில் சமஸ்தான்ங்களுடைய பேராசையைக் கட்டுப்படுத்தி, அவர்களை இந்திய நாட்டோடு இணைக்கும் மாபெரும் சவாலான பணியை அர்ப்பணிப்புணர்வோடு செயல்பட்டு நிறைவேற்றினார் படேல்.

ஒவ்வொரு சமஸ்தானத்தோடும் பல கட்டங்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்து திவான் இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.  திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாகவே இயங்கும் என அவர் அறிவித்தார். அதனால் மக்களிடையில்  கிளர்ச்சி வெடித்தது. தன் படையைக் கொண்டு அக்கிளர்ச்சியை நசுக்க முயற்சி செய்தார் திவான். மோதலில் எண்ணற்றோர் மரணமடைந்தனர். அமைதியின்மைக்கு வழிவகுத்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதால் அதுவரை திவானாக இருந்த ராமசாமி ஐயருக்குப் பதிலாக உன்னித்தான் என்பவர் திவானாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு மகாராஜா இந்தியாவுடன் சேர்ந்துகொள்ள இசைவு தெரிவிக்க, திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. 

காஷ்மீர் சமஸ்தானமும் இராணுவமோதலுக்குப் பிறகே இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பகுதியை ஆண்டுவந்த ஹரிசிங் மகாராஜா ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் இறுதிவரை தடுமாறியபடி இருந்தார். ஒருபக்கம் பாகிஸ்தானுடனான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். மறுபக்கம் இந்தியாவுடன் கையெழுத்திடவும் விருப்பம் தெரிவித்தார். அதே சமயத்தில் காஷ்மீர் சுதந்திரமான பகுதியாக நீடிக்கும் என்றும் அறிவித்தார். இதற்கு தேசிய கான்ஃபிரன்ஸ் கட்சித்தலைவரான ஷேக் அப்துல்லா எதிர்ப்பைத் தெரிவித்தார். இதற்கிடையில் ஹரிசிங் மீது மனவருத்தம் கொண்ட பாகிஸ்தான் காஷ்மீரை இணைத்துக்கொள்வதற்காக பண்டப்பரிமாற்றங்களுக்கான பாதைகளைத் துண்டித்தது. எதிர்பாராத விதமாக எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்த பழங்குடியினரான பதான் மக்கள் எல்லையைக் கடந்து காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கினர். வேறு வழியின்றி ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். ராணுவமோதலுக்குப் பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

ஐதராபாத், போபால், ஜோத்பூர், ஜைஸல்மீர், ஜூனாகட், மாக்ரோல், மாணவேதர் போன்ற பல சமஸ்தானங்களைச் சேர்ந்தவர்களும் முதல் கட்டத்தில் ஒத்துழைக்க மறுத்தனர்.  ஜூனாகட் நவாப் பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். ஆனால் அங்கே எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக இந்துக்களும் சமணர்களும் வாழ்ந்து வந்தார்கள். நவாபின் பிடிவாதத்தைக் கண்டு மக்கள் கிளர்ச்சி செய்தனர். அதனால் நவாப் தன்னிடமிருந்த வைரங்களோடும் நகைகளோடும் பாகிஸ்தானுக்குத் தப்பித்துச் சென்றுவிட, ஒரு சிறு படைமோதலுக்குப் பிறகு ஜுனாகட் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

சமஸ்தானத்து இணைப்புகள் மிகக்குறுகிய காலத்தில் நடைபெற்று முடிவதற்கு விவேகம் பொருந்திய படேலின் நடவடிக்கைகளே முக்கியமான காரணம். அவர் அப்போது காட்டிய உறுதிக்காகவே அவர்இரும்பு மனிதர்என்னும் பட்டத்துடன் என்றென்றும் நினைவுகூரப்படுகிறார்.

ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்கிற அமுல் நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் நினைக்கப்பட வேண்டியவர்களில் ஒருவர் படேல். கடந்த நூற்றாண்டின் முப்பதுகளும் நாற்பதுகளும் பாலுக்காக கால்நடை வளர்ப்பதை கிராமத்தில் முக்கியமான தொழிலாகக் கொண்டிருந்த காலம். தம் ஊரிலும் அக்கம்பக்கத்தைச் சேர்ந்த ஊர்களிலும் விற்றதுபோக எஞ்சியிருந்த பாலை என்ன செய்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் தவித்துக்கொண்டிருந்தார்கள். ஒருமுறை வல்லபாய் படேல் தற்செயலாக அக்கிராமத்துக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்த கால்நடை வளர்ப்பவர்கள் தம் பிரச்சினையை முறையிட்டனர். அவர்களுடைய நல்வாழ்க்கையின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட படேல், தன் சீடரான திரிபுவன் தாஸ் படேலிடம் அந்தப் பிரச்சினையைப் பகிர்ந்துகொண்டு, “இவர்களுக்குப் பயன்படும்படி ஏதாவது செய்துகொடுஎன்று சொன்னார்.  திரிபுவன் தாஸ் படேல் அதைத் தன் கடமையாக எடுத்துக்கொண்டார். உடனே கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தினார். அவர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து மும்பைக்கு அனுப்ப வழி கண்டுபிடித்தார். தற்செயலாக அக்கிராமத்துக்கு அருகில் அரசாங்க பால் க்ரீம் நிலையத்தில் தங்கியிருந்த மலையாள இளைஞரான குரியனைச் சந்தித்ததன் விளைவாக கூட்டுறவுப்பால்பண்ணை மேலும் வளர்ந்தது. ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் மெல்ல மெல்ல சுருங்கி புகழ்பெற்ற அமுல் நிறுவனமானது.

காந்தியடிகள் பல தருணங்களில் துறவுமனப்பான்மையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் துறவு என்பது குடும்பத்தையோ உறவையோ உதறிவிட்டு காட்டுக்குச் செல்லும் துறவல்ல. ஒரு செயலை ஆற்றிய பின்பு, அச்செயலால் விளையும் பலன்களில் ஒட்டாமல் விலகி நிற்கிற துறவு. மனித குணங்களிலேயே மேன்மையான குணம் இந்தத் துறவு. ஒருவர் அறிவும் தெளிவும் கொண்டவராகவும் அர்ப்பணிப்புணர்வு மிகுந்தவராக மட்டும் இருந்தால் போதாது. அவரிடம் துறவுமனப்பான்மையும் குடியிருத்தல் வேண்டும். அத்தகையோர் ஈடுபடும் பொதுவாழ்க்கை உலகத்தவருக்கே வழிகாட்டிநூலாக விளங்கும். முப்பது வயதில் மனைவியை இழந்து இரு குழந்தைகளோடு தனித்து வாழ்ந்த நிலையிலும் ஒரு துறவியைப்போல குன்றாத ஊக்கத்துடன்  செயலாற்றிய வல்லபாய் படேலின் வாழ்க்கை மானுடகுலத்துக்கே வழிகாட்டும் வாழ்க்கை.