Home

Wednesday 21 October 2020

உப்பு என்னும் ஆயுதம்

 

1930இல் நடைபெற்ற உப்புசத்தியாகிரகப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் மிகமிக முக்கியமானது. அதுவரை அரைகுறையாக எல்லோருடைய நெஞ்சங்களிலும் படர்ந்திருந்த அரசியல் உணர்வை இந்தப் போராட்டம் ஆழமாக வேரூன்றச் செய்து மரமாக வளர்த்தது. 12.03.1930 அன்று அதிகாலையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து இந்தப் போராட்டத்துக்கான  தண்டி யாத்திரை தொடங்கியது. 79 சத்தியாகிரகிகளுடன் காந்தியடிகள் 23 நாட்கள் நடந்து 240 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து  05.04.30 அன்று தண்டி கடற்கரையை அடைந்தார். மறுநாள் காலையில் பிரார்த்தனைக்குப் பிறகு கடலோரத்தில் ஒரு பிடி உப்பை கையிலெடுத்து உயர்த்திஇது ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைஎன்று அறிவித்தார். தண்டியில் இருந்தபடியே அவர் தாராசனா போராட்டத் திட்டத்தை வகுத்தார்.

தண்டி யாத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் 13.04.30 அன்று வேதாரண்யம் உப்புசத்தியாகிரம் தொடங்கியது. இராஜாஜியின் தலைமையில் வேதரத்தினம் பிள்ளையின் துணையோடு 98 தொண்டர்கள் ஒருங்கிணைந்து திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி நடந்து சென்றார்கள். 30.04.30 அன்று இராஜாஜி வேதாரண்யம் கடற்கரையில் உப்பு காய்ச்சினார். அதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். தாரசனா போராட்டம் தொடங்கும் முன்பாகவே 04.05.30 அன்று நள்ளிரவுக்குப் பிறகு 12.45 மணியளவில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.

உப்பு என்னும் சாதாரண பொருளின் பெயரை வைத்து நடத்தும் போராட்டமென அரசு முதல் அரசியல் தலைவர்கள் வரை காந்தியடிகளின் போராட்டத்தை  குறைத்து மதிப்பிட்டனர். ஆனால் அது முடிவடையும் கட்டத்தில்  யாருமே எதிர்பார்த்திராத ஒரு பேரெழுச்சியையும் அரசுக்கெதிரான பார்வையையும் உருவாக்கிவிட்டது. உப்பு ஓர் அரசியல் ஆயுதமாக மாறி நின்றதை இந்த உலகமே பார்த்தது.

சித்ரா பாலசுப்பிரமணியன் மண்ணில் உப்பானவர்கள் தொகுப்பில் அந்த மாற்றம் எப்படி நேர்ந்தது என்பதை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார். வெறும் எண்பது பேர்களை மட்டுமே கொண்ட நடைப்பயணம் எதைச் சாதிக்கப்போகிறது என்று அலட்சியமாக ஒதுக்கித் தள்ளியவர்களெல்லாம் வியப்போடு பார்க்கும் வகையில் உருமாறிய அரசியல் விசித்திரத்தை சித்ரா தன் நூல் வழியாக இன்றைய தலைமுறையைச் சேர்ந்த புதிய வாசகர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். காந்தி எதைச் சாதித்தார், எப்படிச் சாதித்தார் என்னும் கேள்விகளுக்கான விடைகளை சித்ராவின் சித்தரிப்புகள் வழங்குகின்றன. காந்தியடிகளின் நடைபயணத்தில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது, எங்கெங்கே தங்கினார்கள், என்னென்ன பேசினார்கள் என்பதையெல்லாம் அடுக்கடுக்காகச் சொல்லும் சித்ரா, தமிழகத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். சபர்மதியிலிருந்து புறப்பட்ட ஐம்பத்துமூன்றாவது நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். அந்த ஐம்பத்து மூன்று நாட்களின் நிகழ்ச்சிக்குறிப்புகள் சித்ராவின் மொழியில் இந்த நூலில் நிறைந்துள்ளன.

உப்பு என்னும் உணவுப்பொருளை அரசியல் ஆயுதமாக காந்தியடிகள் எப்படி மாற்றினார் என்னும் கோணத்தை ஒட்டி சில செய்திகளை மட்டும் இந்த முன்னுரையின் வழியாக முன்வைக்க விரும்புகிறேன். அது சித்ராவின் நூலை இன்னும் கூடுதலான அக்கறையோடு வாசகர்கள் அணுக உதவும் என்று நம்புகிறேன்.

இருபதுகளின் இறுதியில் இந்தியாவில் நிலவிய மத ஒற்றுமையின்மையை ஆங்கிலேய அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. 1929இல் டிசம்பர் மாத இறுதியில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, பூரண சுதந்திரத்தை அடைய போராட்டத்தில் பங்கெடுக்கும்படி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்தப் போராட்டம் சட்டமறுப்பு இயக்கமாக நடைபெறும் என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்து 16.02.1930 சபர்மதி ஆசிரமத்தில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவின் சார்பில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தின் முதல் நடவடிக்கையாக வரிகொடா இயக்கத்தைக் குறிப்பிட்டார். சத்தியாகிரக வழியில் ஒவ்வொரு இந்தியனும் இப்போராட்டத்தில் ஈடுபட்டால் அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்துவிடும் என்று அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்..அன்சாரி போராட்ட அறிவிப்புக்கு அது உகந்த நேரமல்ல என்று காந்தியடிகளுக்கு எழுதினார். குறிப்பாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் நிலவிய கசப்பு மண்டிய சூழலிலும் அகிம்சையின் மீதான நம்பிக்கை குறைந்து வன்முறையின் மீதான நம்பிக்கை மெல்ல மெல்ல வளர்ந்து வரும் சூழலிலும்  ஒன்றிணைந்த போராட்டம் சாத்தியமில்லை என்று அவர் கருதினார். ஆனாலும் தன் போராட்ட வழிமுறைகள் மீதும் மக்கள் மீதும் தனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதாக அறிவித்த காந்தியடிகள் சட்டமறுப்புப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

எல்லோரும் போராட்ட அறிவிப்புக்காக காத்திருந்த வேளையில் காந்தியடிகள் அரசாங்கத்தின் கவனத்துக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் முழு மதுவிலக்கு, நிலவரியை பாதியாகக் குறைப்பது, உப்புவரியை முழுவதுமாக நீக்குவது, உயர்பதவி வகிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் குறைப்பது, அந்நியத் துணிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையைக் குறைப்பது உள்ளிட்ட பதினோரு கோரிக்கைகளைப் பட்டியலிட்டிருந்தார். அந்தப் பதினோரு அம்சங்களையும் அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றினால் சட்டமறுப்புப் போராட்டத்தைக் கைவிட தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அந்த அறிவிப்பைக் கண்டதும் காங்கிரஸைச் சேர்ந்த மற்ற தலைவர்கள் திகைத்துக் குழம்பினர். வருமானத்துக்கான வழிகளைச் சுருக்கிக்கொள்ளவும் நிறுத்திக்கொள்ளவும் எந்த அரசும் முன்வராது என்னும் உண்மை காந்தியடிகளுக்குத் தெரியாததல்ல. போராட்டத்தைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகளும் கால அவகாசமும் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டபோதும், அதைப் பொருட்படுத்தாத அலட்சியத்தால் போராட்டத்தில் இறங்கவேண்டிய சூழலுக்கு மக்களை அரசே தள்ளிவிட்டது என்று ஒவ்வொருவரும் சுட்டிக் காட்டும் நிலையை இந்த அறிவிப்பின் வழியாக காந்தியடிகள் உருவாக்கினார்.

சத்தியாகிரகப் போராட்டத்தின் சட்டதிட்டங்கள் பற்றியும் போராட்டத்தில் ஈடுபடும் சத்தியாகிரகிகள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் பற்றியும் நீண்ட அறிவிப்புகளை காந்தியடிகள் யங் இந்தியா இதழில் எழுதி வெளியிட்டார். ஒருவேளை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைக்குச் செல்ல நேரும் சூழலில் சிறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். போராட்ட விதிகளையும் சிறை விதிகளையும் வகுத்தளித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் போராட்டச் சூழலில் வகுப்புக்கலவரமோ இனக்கலவரமோ தற்செயலாக வெடிக்கக்கூடிய தருணங்களில் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விதிகளை வகுத்தளித்தார். பிறகு, முதல் கட்டமாக சபர்மதி ஆசிரமத்திலேயே வசிக்கும் இளைஞர்களுக்கு சத்தியாகிரகப் பயிற்சிகளை அவரே வழங்கினார். 1920இல் அகிம்சையில் தொடங்கி வன்முறையில் முடிவடைந்த ஒத்துழையாமை இயக்கத்தைப் போல ஒருபோதும் மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் காந்தியடிகள் மிகவும் கவனமாக இருந்தார்.

சட்டமறுப்பு இயக்கத்தை நோக்கி பெருவாரியாக மக்களை எப்படி ஈர்ப்பது என்னும் கேள்வியை அவர் ஒவ்வொரு நாளும் அசைபோட்டபடியே இருந்தார். விடை காணமுடியாத தவிப்பில் ஒருநாள் ஆழ்ந்த யோசனையுடன் தனக்கு கைக்கெட்டும் தொலைவில் வைத்திருந்த பதினோரு அம்சக் கோரிக்கை அறிவிப்பை நோக்கிக்கொண்டிருந்த போது அவர் பார்வை தற்செயலாக நான்காவது கோரிக்கையின் மீது பதிந்தது. மீண்டும் மீண்டும் அந்த வரியையே படித்தபோது சட்டென அவருக்குள் மின்னலடித்ததுபோல ஒரு திட்டம் உதித்தது. உடனே அவர் முகம் ஒளிர்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக லண்டனிலிருந்து வெளிவந்தவெஜிடேரியன் மெசஞ்சர்என்னும் இதழில் உப்பின் முக்கியத்துவம் பற்றி அவரே எழுதிய கட்டுரையை அப்போது அவர் நினைவுபடுத்திக்கொண்டார். ’இந்தியாவில் ஒருவேளை மட்டுமே உணவுண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். உப்பு தடவிய சாதாரண ரொட்டித் துண்டுகளே அவர்களுடைய உணவு. அந்த உப்பின் மீது கூட ஆங்கிலேய அரசு வரி விதித்து கொடுமை புரிகிறதுஎன்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை நினைத்துக்கொண்டார்.

1885இல் ஆங்கில அரசால் நிறுவப்பட்ட கமிஷன், இந்தியர் காய்ச்சும் உப்புக்கு வரி விதிக்கும் சட்டத்தை முதன்முறையாகப் பரிந்துரைத்தது. இந்திய வணிகர்கள் பிரிட்டன் உப்பை மட்டுமே விற்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 1885இல் தொடங்கிய இந்திய தேசிய காங்கிரஸ் 1888இல் கூட்டிய முதல் மாநாட்டிலேயே உப்பு வரியைக் குறைக்கவேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியது. கோகலே அதை நாடு தழுவிய ஒரு போராட்டமாகவே நடத்தினார். பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற அவருடைய போராட்டத்தின் விளைவாக கர்சன் என்பவர் வைசிராயாக இருந்த காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் வரி குறைக்கப்பட்டது. அடுத்து பதவிக்கு வந்த அதிகாரி அந்த வரிக்குறைப்புச் சலுகையை ரத்து செய்துவிட்டார். அரசின் மொத்த வருமானத்தில் ஏறத்தாழ பத்தில் ஒரு பங்கு உப்புவரி வழியாக மட்டுமே கிடைத்துவந்த சூழலில் அதை இழக்க, அந்த அதிகாரிக்கு மனமில்லை. உப்பின் மீது விதிக்கப்படும் வரி, அதன் உற்பத்திச் செலவைவிட அதிகமானது.

தன் மனத்தில் ஓடிய எண்ணங்களையெல்லாம் தொகுத்து அன்றைய வைசிராயான இர்வின் என்பவருக்கு 02.03.1930 அன்று நீண்டதொரு கடிதம் எழுதினார். அன்புள்ள நண்பருக்கு என்று தொடங்கும் அக்கடிதத்தில் தாம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கும் பதினோரு அம்சங்களைப்பற்றியும் விரிவாக எழுதிய காந்தியடிகள் உப்பு வரியை நீக்கும் அம்சத்துக்கு அழுத்தம் கொடுத்து எழுதினார். சட்டமறுப்பு இயக்கத்தின் முதல் கட்டப் போராட்டமாக அந்த வரியை எதிர்க்கும் போராட்டத்தைத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். சத்தியாகிரக வழியில் அகிம்சையை முன்னிறுத்தி அந்தப் போராட்டத்தில் தன் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாவும் குறிப்பிட்டார். தன் கடிதம் அரசின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி உப்பு வரியை விலக்கிக்கொள்ளத் தூண்டும் என்ற தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஒருவேளை அது நிகழவில்லையென்றால் தன்னுடைய போராட்டம் 12.03.30 அன்று காலை முதல் தொடங்கும் என்றும் தெரிவித்தார். தன்னோடு ஆசிரமத்தில் தங்கிப் பயிற்சி பெறுபவர்களோடு நடைப்பயணம் மேற்கொண்டு சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சவிருக்கும் திட்டத்தையும் அந்த மடலிலேயே அவர் தெரிவித்தார்.

காந்தியடிகளின் கடிதத்துக்கு இர்வின் செவிசாய்க்கவில்லை. 12.03.30 அன்று அதிகாலை திட்டமிட்டபடியே தண்டி யாத்திரை தொடங்கியது. அவர் பெரிய பாதைகளைத் தவிர்த்து கிராமங்கள் வழியே செல்லும் பாதைகள் வழியாகவே நடந்து சென்றார். கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் இல்லங்களில் தங்கினார். அவர்களுடன் உரையாடினார். நூல் நூற்றல், கதர் அணிதல், மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுற்றுப்புறத் தூய்மை என பல பொதுச் செய்திகளை வலியுறுத்திப் பேசினார்.   இத்தகு பயணம் அரசுக்கு எந்த விதமான நெருக்கடிகளைக் கொடுக்கும் என்பதை அரசால் ஊகிக்க முடியவில்லை. விடுதலைக்கு இது எப்படி வழியாகும் என்பதை மற்றவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இறுதியாக, தண்டிக்கு அருகில் ஆட் கடற்கரையில் உப்பை எடுத்த கையை உயர்த்திய காந்தியடிகள்ஒரு சத்தியாகிரகியின் கையில் இருக்கிற உப்பு இந்தத் தேசத்தின் கெளரவம். நம் உயிரே போனாலும் நம் கை தாழ்ந்துவிடக் கூடாதுஎன்று அறிவித்தார். உணர்ச்சிமயமான அந்த அறிவிப்புதான் அந்தப் போராட்டத்தின் தன்மையை ஒரே நாளில் மாற்றியது. ஒரு பிடி உப்பை கையில் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் இந்தத் தேசத்தின் கெளரவத்தை கையில் வைத்திருக்கிறார் என்னும் குறிப்பின் வழியாக, அதுவரை உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நாட்டு மக்களின் பொறுப்புணர்வைத் தட்டியெழுப்பி மேலோங்கச் செய்தார். சாதி, மத வேறுபாடின்றி  அனைவரும் உப்பின் வழியாக ஒன்றிணைந்தார்கள். அக்கணத்தில் உப்பு போராட்டத்தின்  ஆயுதமாக மாறிவிட்டது. அதுவரை வாளாவிருந்த அரசு விழிப்புற்று அவசரம் அவசரமாக 04.05.30 நள்ளிரவைக் கடந்து 12.45 மணியளவில் காந்தியடிகளைக் கைது செய்தது. அப்போது காந்தியடிகள் தாரசானா போராட்டத்தின் நடைமுறை பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு கடிதத்தை அன்புள்ள நண்பரேஎன்று தொடங்கி வைசிராய்க்கு எழுதிக்கொண்டிருந்தார். அக்கடிதம் முற்றுப் பெறாத நிலையிலேயே அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனால் தேசிய உணர்ச்சி மேலோங்கியதே தவிர குறையவில்லை. குறைக்கவும் முடியவில்லை. இந்தியாவின் மீதான ஆங்கிலேயர்களின் பிடி அன்றுமுதல் தளர்ந்தது. அதன் பயனாக இந்தியாவுக்கு உடனடியாகவே விடுதலை கிடைத்திருக்கவேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக அது நிகழவில்லை. எண்ணற்ற பிரிவினைப் பேச்சுகளால் நாம் மேலும் பதினேழு ஆண்டுகள் காத்திருந்தே நம் விடுதலையைப் பெறமுடிந்தது.

சோர்வும் மன உளைச்சலும் அனைவரையும் இரையாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கொரானா காலகட்டத்தில் சித்ராவின் இச்சிறுநூலை வாசிக்க மிகவும் உற்சாகமளிக்கிறது. சித்ரா எப்போதும் உற்சாகமானவர். புன்னகை படர்ந்த முகத்துக்கும் உறுதியும் தெளிவும் மிக்க சொல்லுக்கும் சொந்தக்காரர். வானத்தில் வட்டமிடும் ஒரு பறவையின் வேகம் அவருக்குள் எப்போதும் இருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் எழுத்துகளை வாசித்து நானும் உற்சாகமடைகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய நெருக்கடிகளைப் புறந்தள்ளி தொடர்ந்து தம் செயல்களால் தம்மை அடையாளப்படுத்தி ஓங்கி வளர்ந்துகொண்டிருக்கும் தன்னறம் பதிப்பக நட்பு நெஞ்சங்களுக்கும் என் வாழ்த்துகள்.

 

(சித்ரா பாலசுப்பிரமணியன் எழுதி தன்னறம் வெளியீடாக வந்துள்ள ’மண்ணில் உப்பானவர்கள்’ நூலுக்காக எழுதிய முன்னுரை)