Home

Wednesday 7 October 2020

ஆனந்த தீர்த்தர் : உரிமைப்போரின் பெருமிதம்

 

இன்று காலை நேரத்தில் நான் தங்கியிருந்த இடத்தில் யாரோ யாரையோ அழைக்கும் கூக்குரலைக் கேட்டேன். வயல்வெளிகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் உழைப்பாளிகள் வழக்கமாக இப்படி உரத்த குரலில் ஒருவரை ஒருவர் அழைப்பதையும் உரையாடிக்கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் குரலையும் நான் அப்படித்தான் முதலில் நினைத்துக்கொண்டேன். ஆனால் என்னுடன் தங்கியிருந்த இராஜாஜி அது கேரளத்தில் மட்டுமே வாழக்கூடிய நாயாடிகள் என்னும் பிரிவினர் பிச்சை கேட்டு எழுப்பும் சத்தமென்று சொன்னார். நான் உடனே வெளியே வந்து பார்த்தேன். சாலையில் எந்தப் பக்கத்திலும் அந்த மனிதரைப் பார்க்கமுடியவில்லை. தேடியபோது, தொலைவில் சாலைக்கு அப்பாலிருந்த ஒரு புதருக்குப் பின்பக்கத்தில் அவர் நின்றிருப்பதைப் பார்த்தேன். உடனே அவரை அருகில் வரும்படி நான் அழைத்தேன். தெருவில் நடக்கும் உரிமை தனக்கில்லை என்று சொல்லி அவர் மறுத்தார்.”

இந்தத் தீண்டாமை எனக்கு ஆழ்ந்த துயரை அளித்தது. பிச்சையைக்கூட நேரிடையாக கையில் வாங்குவதற்கு தனக்கு உரிமையில்லை என்று அவர் சொன்னார். நம் சகோதரரைப்போன்ற அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என்னை ஆழமாகப் புண்படுத்தியது. ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சைப்போல தீண்டாமை என்னும் நஞ்சு நம் அமைப்பை சீர்குலைத்திருக்கிறது. எல்லா வடிவங்களிலும் நாம் பின்பற்றக்கூடிய தீண்டாமையை உதறிவிட்டு மனிதர்களாக எழுவது மிகமிக முக்கியம். இந்த அக்கினிப்பரீட்சையில் நாம் வென்று அனைவரோடும் நல்லிணக்கத்தோடு பழகத் தொடங்கினால் மட்டுமே நாம் நாகரிகமுள்ள மனிதர்களாக இந்த உலகத்தின் முன் நிற்கமுடியும். இந்தப் புள்ளியில் நாம் அடையக்கூடிய வெற்றி, இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இந்து முஸ்லிம் பிரச்சினையையும் பிராமணர் பிராமணரல்லாதோர் பிரச்சினையையும் வென்று கடந்துசெல்லும் ஆற்றலை வழங்கும்

15.10.1927 அன்று காந்தியடிகள் பாலக்காட்டில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது. அன்று அவர் அகதேத்தர என்னும் கிராமத்தில் உள்ள சபரி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். சாதி வேறுபாடுகளைக் கடந்து, எல்லா மாணவர்களும் ஒன்றாகத் தங்கிப் படிக்கவும் நூல்நூற்கவும் கைத்தொழில் பழகவும் உருவாக்கப்பட்ட ஆசிரமம் அது.  ஆசிரமத்து மாணவர்கள் அவருக்கு ஒரு கதராடையை அன்பளிப்பாக அளித்தனர். அதைப்பற்றியும் காந்தியடிகள் அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார். அவருடைய உரையைக் கூர்ந்து கேட்ட இளைஞர்களில் தாழ்த்தப்பட்டோர் கல்வியிலும் முன்னேற்றத்திலும் ஆர்வமுடன் உழைத்துவரும் பட்டதாரி இளைஞரொருவரும் இருந்தார். அவர் பெயர் ஆனந்த ஷெனாய்.  அன்று இரவு சபரி ஆசிரமத்திலேயே காந்தியடிகள் தங்கியபோது தீண்டாமையைப் பற்றி நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 

1923இல் பாலக்காட்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு டி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயரின் முயற்சியால் சபரி ஆசிரமம் உருவானது. காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளில் மிகமுக்கியமான தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு தொடர்பாக அவர்களை ஆதரிப்பதையும் அவர்கள் விரும்பும் கைத்தொழில்களில் பயிற்சி கொடுப்பதையும்  பிள்ளைகளுக்கு பள்ளிகளும் விடுதிகளும் நடத்துவதையும் சபரி ஆசிரமம் தனது அடிப்படை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. சாதி வேற்றுமையின்றி எல்லா சாதிகளையும் மதங்களையும் சார்ந்த பிள்ளைகளும் அந்த ஆசிரமத்தில் தங்கிப் படித்து வந்தனர்.

அன்றைய தனிச்சந்திப்பில் ஷெனாய் சபரி ஆசிரமத்தில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கத்தை காந்தியடிகளுக்குச் சுட்டிக்காட்டினார். அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து படிப்பதிலும் விளையாடுவதிலும், தங்கியிருப்பதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றாலும் உணவு பரிமாறும்போது மட்டும் பிராமணச் சாதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தனிவரிசையில் உணவு வழங்கப்படுவது வேதனையாக இருக்கிறதென்றும்   எடுத்துரைத்தார். அதைக் கேட்டு காந்தியடிகள் அதிர்ச்சியடைந்தார். உடனே ஆசிரமத்தை நடத்தி வரும் கிருஷ்ணசாமி ஐயரை அழைத்து நேரடியாகவே விசாரித்தார். ஷெனாய் சொன்ன விவரம் உண்மையே என்று அறிந்ததும் மிகுந்த வேதனைக்கு ஆளானார். அக்கணமே ஆசிரமத்தின் பொறுப்பை ஷெனாயிடம் ஒப்படைத்துவிட்டு கிருஷ்ணசாமி ஐயர் விலகிக்கொண்டார்.

ஆனந்த ஷெனாய். சாரஸ்வத பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றபோதும் அவருக்கு குழந்தைப்பருவத்திலிருந்தே பிராமண வகுப்புக்கு வெளியே மற்ற சாதியைச் சேர்ந்த பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடி நட்பு கொண்டாடும் வழக்கம் இருந்தது. புலையர் வகுப்பைச் சேர்ந்த சிறுவர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்துவருவதும் அதைப் பார்த்து அவருடைய அம்மா சங்கடத்தில் ஆழ்ந்துவிடுவதும் வழக்கமாக நடைபெறும் செயல்கள். தாயின் கண்டனங்களையும் வசைகளையும் அவர் ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் வாக்குவாதம் வளர்ந்தபடி இருந்தது. ஒருமுறை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரு நண்பர்களை அழைத்துவந்து அவர்களுக்கு உணவு கொடுக்கும்படி அம்மாவிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அம்மா உணவு கொடுக்க மறுத்தார். எனினும் இறுதியில் மகனுடைய மன்றாட்டுக்கு இசைந்து அவர்களுக்கு உணவு படைத்தார். மகனுடைய நடவடிக்கைகளால் முதலில் மனம் கசந்தாலும் பிறகு நண்பர்களை உயிருக்குயிராக நேசிக்கும் அவருடைய பண்பையும் அர்ப்பணிப்புணர்வையும் பார்த்த பிறகு, தீண்டாமை சார்ந்த எண்ணங்களைத் தன் மனத்திலிருந்தே விலக்கிவிட்டார். அவருடைய இல்லம் அனைவருக்குமான இல்லமாக மாறியது. ஆர்யசமாஜத்தைச் சேர்ந்த கணவனால் ஏற்படுத்த முடியாத மனமாற்றத்தை மகனுடைய அன்பும் செயலும் உருவாக்கின. சிறுவயதில் சமாஜத்துடன் தொடர்புடைய பல துறவிகள் அடிக்கடி வீட்டுக்கு வந்து தந்தையுடன் நிகழ்த்தும் உரையாடல்களை கேட்டுக் கேட்டு இயற்கையிலேயே சமத்துவம் சார்ந்த எண்ணம் அவர் மனத்தில் குடியேறிவிட்டது.  

பள்ளியிறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நண்பர்கள் வழியாக அவருக்கு யங் இந்தியா பத்திரிகை அறிமுகமானது. அதில் வெளிவரும் கட்டுரைகளைப் படித்து அவர் தன் சிந்தனையை வளர்த்துக்கொண்டார். அந்த வாசிப்பின் வழியாக தேசமெங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளைப்பற்றியும் காந்தியடிகளைப்பற்றியும் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றார். அவருடைய வகுப்புத் தோழர்கள் அனைவரும் ஐரோப்பிய பாணியில் உடையளித்திருந்த போது, அவர் மட்டும் கதராடைகளை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றார்.

ஒருநாள் வரலாறு பாடம் நடத்த வந்த ஆசிரியர் ராபர்ட் கிளைவ் அடைந்த வெற்றிகளை விதந்தோதிச் சொன்னபடி பாடம் நடத்தினார். அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்து நின்ற ஷெனாய் ஒரு வேகத்துடன் அவர் வீரரல்ல, ஒரு கொள்ளைக்காரர்என்று சொன்னார். பின்னர், பாட வேளைக்கு நடுவில் இடையூறு அளித்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அந்த அளவுக்கு இளமையிலேயே தேசப்பற்றும் அறிவாற்றலும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவராக இருந்தார்.

பள்ளிப்படிப்பையும் இண்டர்மீடியட் படிப்பையும் தலைச்சேரியில் முடித்த பிறகு 1923இல் பட்டப்படிப்பு படிப்பதற்காக சென்னைக்குச் சென்று பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். கல்லூரி வளாகத்திலேயே ஊக்கமுடன் அரசியல் செயல்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது.  கல்லூரியில் படித்தபோது விவேகானந்தர், காந்தியடிகள், ரமண மகரிஷி ஆகியோர் எழுதிய நூல்களை ஆர்வமுடன் படித்து சமூகசேவையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார். கேரளத்தை மனநலம் குன்றியவர்களின் விடுதி என்று குறிப்பிடும் விவேகானந்தரின் சொற்கள் அவரை ஆழமாக யோசிக்கத் தூண்டின. குழந்தைப்பருவம் முதல் தன் சொந்த ஊரில் தான் நேரிடையாகவே கண்ட சாதி அவல நிகழ்ச்சிகள் அவர் மனத்தில் விரிந்தன. தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபடச் சொல்லி தூண்டும் காந்தியடிகளின் சொற்களையும் அவர் நினைத்துக்கொண்டார். தொடக்கத்தில் அவர் ராமகிருஷ்ண மிஷன் அமைப்புடன் இணைந்து தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என திட்டமிட்டார். ஆனால் அவர்களுடைய மென்மையான அணுகுமுறை அவருக்கு நிறைவளிக்கவில்லை. அடுத்து கிறித்துவ மதத்துக்கு மாறி தீண்டாமைக்கு எதிராக செயலாறவேண்டும் என்றும் யோசித்தார். ஆனால் அவர்கள்  தொடுத்த கேள்விகளையும் முன்வைத்த வழிமுறைகளையும்  கேட்டு அவர் மனம் சலித்தார்.

ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்ஒரு மனிதனுக்குப் போதும் என்றும் சாதியைக் கேட்காதே சொல்லாதே, நினைத்துக்கூடப் பார்க்காதேஎன்றும் முன்வைத்த நாராயண குருவின் வாக்கியங்கள் அவரை ஈர்த்தன. காந்தியடிகளின் நிர்மாணப்பணித் திட்டங்களும் நாராயண குருவின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் அவருடைய எண்ணங்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கின. சாதிப்பிரிவினை மானுடத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்றும் சாதியே மக்கள் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் சவால் என்று அவர் மனம் நினைத்தது. அக்கணமே  அவர் மனம் தான் செயலாற்றவேண்டிய களம் பற்றிய முடிவை எடுத்து விட்டது.

பட்டப்படிப்பு முடிந்ததும் 1926இல் கல்லூரியை விட்டு வெளியே வந்த ஆனந்த ஷெனாய் சபரி ஆசிரமத்தில் தொண்டராக இணைந்துகொண்டார். அப்போது கல்பாத்தி என்னும் இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தெருவில் இறங்கி நடப்பதற்கான உரிமையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஷெனாய் அப்போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். உயர்சாதி இந்துக்கள் அவரையும் மற்றவர்களையும் இரக்கமின்றி கடுமையாகத் தாக்கி வீழ்த்தினர்.  ஆயினும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் எதிர்த்தாக்குதலில் ஈடுபடாமல் அகிம்சை வழியில் வெற்றி கிட்டும் வரையில் தன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இறுதியில் சாதி வேறுபாடின்றி தெருவில் அனைவரும் நடக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. ஷெனாய்க்கு தான் பங்கெடுத்துக்கொண்ட முதல் போராட்டத்திலேயே வெற்றி கிடைத்தது.

ஒருமுறை சில பொருட்களை வாங்குவதற்காக கோயில் நகரமான குருவாயூருக்குச் சென்றிருந்தார் ஷெனாய். அந்தக் கடைக்காரர் பொருட்களைக் கட்டி கொடுப்பதற்கு முன்பாக அவருடைய சாதி விவரங்களைக் கேட்கத் தொடங்கினார். ஆனந்த ஷெனாய் தன் சாதி விவரத்தைப் பற்றி சொல்ல மறுத்துவிட்டார். திய்யா எனப்படும் சாதியைச் சேர்ந்தவர்கள் குருவாயூர் நகரத்தின் கடைத்தெருப்பகுதிகளில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சாதி தெரியாமல் பொருளைக் கொடுக்கமுடியாது என்று கடைக்காரர் சொன்னதும் வேகமாக அங்கிருந்து திரும்பிவிட்டார்.

அங்கிருந்து அவர் கோவில் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். அங்கிருந்தவர்களும் அவரிடம் சாதிவிவரத்தைச் சொல்லும்படி கேட்டனர். ஆனால் ஆனந்த ஷெனாய் அதைச் சொல்ல மறுத்தார். அதனால் சீற்றம் கொண்ட காவலர்கள்  அவரை அடித்து கோவில் நிர்வாக அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்த நிர்வாகி அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் சம்பவம் மேலும் சிக்கலாகாமல் அத்துடன் முடிவுற்றது. ஆனாலும் அச்சம்பவங்கள் அவர் மன ஆழத்தில் தங்கிவிட்டன. அந்தச் சமூகத்தடையை முறியடிக்கும் வழிமுறைகளைப்பற்றி மனத்துக்குள்ளேயே யோசிக்கத் தொடங்கினார்.

பாலக்காட்டில் உள்ள கல்லேகுலங்கார பகவதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருவிழா மிகவும் பிரபலமானது. தொடக்கத்தில் இந்தக் கோவிலில் நுழைய தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி கிடையாது. 1927இல் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஷெனாய் சபரி ஆசிரமத்துப் பிள்ளைகளை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் ஊர்வலத்தில் பங்கேற்றிருப்பதைப் பார்த்ததும் உயர்சாதி இந்துக்கள் அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி, ஷெனாயையும் பிள்ளைகளையும் கடுமையாகத் தாக்கி வீழ்த்தினர்.

சபரி ஆசிரமத்தில் பணியாற்றிய சமயத்தில் பாலக்காட்டைச் சுற்றி வாழ்ந்துவந்த நாயாடி சமூகத்தினருடன் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. பாலக்காட்டுக்கு அருகில் குழல்மண்டம் என்னும் இடத்தில் நாயாடிகள் அதிக அளவில் வாழ்ந்தார்கள். அவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று நினைத்த காலம் அது. அவர்களுடன் உரையாடி, அவர்களுடைய பிள்ளைகளை  ஆசிரமத்துக்கு அழைத்து வந்து, அங்கு தங்கி கல்வி கற்க வழி செய்தார். ஆனால் அவர்கள் நீண்ட காலம் ஆசிரமத்தில் தங்கவில்லை. அவர்களாகவே யாருக்கும் சொல்லாமல் ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். நாயாடிகளுக்கு அக்காலத்தில் பொதுச்சாலைகளில் நடப்பதற்கு உரிமையில்லாததாலும் எந்த நடமாட்டமும் இல்லாமல் ஒரே இடத்தில் அடைந்துகிடப்பது சிறுவர்களுக்கு முடியாத ஒன்றாக இருந்ததாலும் அவர்கள் வெளியேறிவிட்டனர். வெளியேற்றத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட ஷெனாய் உடனடியாக மலபார் துணை ஆட்சியரைச் சந்தித்து நாயாடிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கும்படி கேட்டுக்கொண்டார். விசாரணைக்குப் பிறகு துணை ஆட்சியராக இருந்த டாக்டர்.கார்ல்ஸ்டோன் தடையை விலக்கி நாயாடிகளுக்கு பொதுத்தெருவில் அனைவருக்கும் இணையாக நடந்து செல்லும் உரிமையை வழங்கினார்.

1927இல் செப்டம்பர் மாதத்தில் ஆசிரம வேலையாக ஷெனாய் கோவைக்குச் சென்றிருந்தார். வேறொரு வேலை நிமித்தமாக வந்து நண்பர் வீட்டில் தங்கியிருந்த நாராயண குருவைச் சந்தித்து உரையாடினார். அப்போது நாயாடி பிள்ளைகளின் உரிமைக்காக பாடுபடும் ஷெனாயை மனமாரப் பாராட்டினார்  நாராயண குரு.

1928இல் பிப்ரவரி மாதம் ஷெனாய் காந்தியடிகள் தங்கியிருக்கும் சபர்மதி ஆசிரமத்துக்கு கேரளத்திலிருந்து நடந்தே சென்றார். வழியில் பல ஊர்களில் சாதித்தடைகளின் கொடுமையான முகத்தைப் பார்த்தபடி சென்றார். மகாராஷ்டிரத்தில் ரத்னகிரி என்னும் இடத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருடைய வீட்டுக்கு முன்னால் நின்று பருகுவதற்கு தண்ணீர் வேண்டுமென்று கேட்டார். உயர்சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு தண்ணீர் கொடுப்பதால் தமக்கு  மிகப்பெரிய பாவம் வந்து சேரும் என்று சொல்லி, அவர்கள் தண்ணீர் அளிக்க மறுத்துவிட்டனர். அவர் மேலும் சிறிது தொலைவு நடந்து சென்ற பிறகு, உயர்சாதிக்காரர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்று தண்ணீர் வேண்டுமென்று கேட்டார். அவர்கள் தாழ்த்தப்பட்டவர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றுவிட்டு தம் வீட்டுக்கு வந்திருக்கும் ஒருவருக்கு தம்மால் தண்ணீர் அளிக்கமுடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். தாகத்தால் தவித்த ஷெனாய் இறுதியில் இஸ்லாமியர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்று தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

ஷெனாய் தீண்டாமையின் கொடுமையை எண்ணி மனத்துக்குள் நொந்துகொண்டார். நடைப்பயணத்தில் அவர் கழித்த நான்கு மாதங்களிலும் அவருக்கு இப்படி ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன. இறுதியில் ஆசிரமத்துக்குச் சென்று ஏறத்தாழ ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து அவருடன் உரையாடி தம்முடைய ஐயங்களைப் போக்கிக்கொண்டார். திரும்பும்போது ரயிலில் பயணம் செய்து ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். இரு மாத இடைவெளியில் நாராயண குருவைச் சந்திக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தபோது ஷெனாய் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாராயண குரு அவருக்கு காவியாடையைக் கொடுத்து உடனடியாக சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனந்த ஷெனாய் என்னும் பெயரை ஆனந்த தீர்த்தர் என்று மாற்றினார். அவர் துறவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்றும் அவருடைய விருப்பத்தின்படி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தும் பாதையிலேயே தொடர்ந்து செயல்படவேண்டுமென்றும் ஆசி வழங்கி அனுப்பிவைத்தார்.

1929இல் அவர் ஒருமுறை வடகராவுக்கு அருகிலிருக்கும் பையோலி என்னும் கிராமத்தில் கேளப்பன் என்பவர் நடத்திவந்த சிரத்தானந்தா வித்யாலத்துக்குச் சென்றிருந்தார். அப்போது ஒருநாள் மாலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுவனோடு ஆசிரமத்துக்குப் பக்கத்தில் இருந்த சாலியர் தெருவுக்குச் சென்றார். தாழ்த்தப்பட்ட சிறுவனுடன் தெருவுக்குள் நுழைந்ததால் அத்தெருவில் வசித்து வந்த சாலியர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி கடுமையாக அடித்து உதைத்து அனுப்பிவைத்தனர். அச்சம்பவத்தைக் கண்டித்து கேளப்பன் அன்றைய கேரள நாளிதழான மாத்ருபூமியில் ஒரு கட்டுரையை எழுதினார்

1930இல் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியபோது திருச்சியில் இருந்து வேதாரண்யத்தை நோக்கிச் செல்லும் சத்தியாகிரகக் குழுவில் இணைந்துகொள்ளுமாறு ஆனந்த தீர்த்தரை அனுப்பிவைத்தார் கேசவன் நாயர். ஒவ்வொரு நாளும் சத்தியாக்கிரகக் குழு தங்கிச் செல்லும் கிராமங்களில் கூட்டடங்கள் நடைபெற்றன. கிராமங்களில் உள்ள பொதுக்குளங்களில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்று குளிப்பதும் அதனால் மோதல் எழுவதும் அடிக்கடி நிகழ்ந்தன. இறுதியில் வேதாரண்யத்தை அடைந்ததும் ஆனந்த தீர்த்தர் மற்ற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற அனைவரும் 1931இல் காந்திஇர்வின் ஒப்பந்தப்படி விடுதலை பெற்றனர். அந்த ஒப்பந்தப்படி உப்புக் காய்ச்சவும் துணிக்கடைகளின் வாசலிலும் கள்ளுக்கடைகளின் வாசலிலும் நின்று மறியல் செய்யவும் இந்தியர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டது. சிறையிலிருந்து தலைச்சேரிக்குத் திரும்பிய ஆனந்த தீர்த்தர் கள்ளுக்கடை மறியலிலும் அந்நியத்துணி எதிர்ப்பு மறியலிலும் சேர்ந்து பணியாற்றத் தகுதியான சத்தியாகிரகிகளைத் திரட்டுவதில் மூழ்கினார். சி.கே.கோவிந்தன் நாயர், எல்.எஸ்.பிரபு போன்றோர் அவருக்கு உதவியாக இருந்தனர். இதே காலகட்டத்தில்தான் குருவாயூர் கோவில் நுழைவுப்போராட்டம் தொடங்கியது. ஆனந்ததீர்த்தர் தான் பயிற்சியளித்த பதினாறு சத்தியாகிரகிகளோடு கண்ணூரிலிருந்து குருவாயூருக்குப் புறப்பட்டுச் சென்றார். டி.சுப்பிரமணியன் என்பவர் குருவாயூரில் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய சூழலில் அந்த ஊர்வலம் மிகப்பெரிய மீறல்.

21.11.1931 அன்று பையனூரில் கிருஷ்ணமேனன் என்னும் பொறியாளருக்குச் சொந்தமான ஒரு கட்டடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். அதற்கு அவர் ஸ்ரீநாராயணகுரு வித்யாலயம் என்று பெயரிட்டார். மாணவர்கள் எண்ணிக்கை பெருகியதால் காங்கிரஸ் தலைவராக இருந்த சி.எச்.கோவிந்தன் நம்பியார் என்பவருக்குச் சொந்தமான வீட்டுக்கு பள்ளிக்கூடம் இடம் மாற்றப்பட்டது. சொந்தமாக ஓர் இடத்தை வாங்கி பள்ளியை அதில் நிறுவவேண்டும் என்பது ஆனந்த தீர்த்தரின் விருப்பமாக இருந்தது. ஆனால் அவருக்கு இடத்தை விற்க யாரும் முன்வரவில்லை. இறுதியாக அப்துல் காதர் என்னும் இஸ்லாமியர் தன் பெயரில் இருந்த இடத்தை ஆனந்த தீர்த்தருக்கு விற்பனை செய்தார். ஆனந்த தீர்த்தர் அந்த இடத்தில் பள்ளிக் கட்டடத்தையும் மாணவர்கள் தங்குவதற்கான விடுதியையும் கட்டிமுடித்தார். தன்னுடைய பரம்பரைச் சொத்து பாகப்பிரிவினையில் அவர் பங்குக்குக் கிடைத்த பணம் முழுவதையும் இக்கட்டட வேலைக்காகச் செலவு செய்தார். இதைத் தவிர வடமலபார் பகுதியைச் சேர்ந்த பழயங்காடி, கண்ணூர், தலைச்சேரி, கலைச்சேரி ஆகிய இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளைக் கட்டி மாணவர்கள் கல்வி கற்க துணையாக நின்றார். இவையனைத்தும் ஸ்ரீநாராயணகுரு வித்தியாலத்தின் கிளைகளாகச் செயல்பட்டன.

 பள்ளிக்கூடம் செயல்படத் தொடங்கினாலும் போதிய அளவுக்கு மாணவர்கள் சேராதது ஆனந்த தீர்த்தருக்கு அதிர்ச்சியளித்தது. நிலைமையை நேரிடையாகவே கேட்டு அறிந்துகொள்வதற்காக அந்த வட்டாரத்தில் உள்ள புலையர்கள், பணியர்கள், சக்கிலியர்கள், மாவிலர் தெருக்களில் சென்று அனைவரையும் சந்தித்து பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர்களிடம் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஆர்வம் மிகவும் குறைவாகவே இருப்பதை அவரால் உணர முடிந்தது. குடும்ப உறுப்பினர்கள்  பசியின்றி வாழ, இளஞ்சிறார்களும் ஏதேனும் வேலை செய்து பொருளீட்டி அளிக்கவேண்டிய தேவை இருப்பதாக அப்பெற்றோர்கள் அவரிடம் உரைத்தனர். அதனால் பள்ளிக்கு அனுப்பமுடியாது என்று தெரிவித்தனர். அதைக் கேட்டு மனம் வாடிய ஆனந்த தீர்த்தர் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புவதால் ஏற்படும் வருமான இழப்பை தான் தன் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து ஈடுகட்டுவதாகவும் தெரிவித்துவிட்டு அழைத்துச் சென்றார்.

1937இல் சென்னை மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பேற்றதும் ஸ்ரீநாராயணகுரு வித்தியாலயத்துக்கு அரசு நிதியுதவி கிடைக்கத் தொடங்கியது. தரமான கல்வி, நல்லொழுக்கம், தூய்மையான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் ஆனந்த தீர்த்தர் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். வித்தியாலத்தில் அதிகாலை நான்கு மணியளவில் அனைவரும் எழுந்துவிட வேண்டும் என்பது விதியாக இருந்தது. அறைகளையும் சுற்றுப்புறத்தையும் பாத்திரங்களையும் குளியலறைகளையும் கழிப்பறைகளையும் முறைவைத்து தூய்மைப்படுத்துவதே முதல் பணி. அதற்குப் பிறகு ஆடைகளைத் துவைத்து உலர்த்திவிட்டு குளிக்கவேண்டும். பிறகு பிரார்த்தனை. கீதை, பைபிள், குரான் கருத்துகளை மையமாகக் கொண்டு நாராயண குரு இயற்றிய பாடல்களை பாடவேண்டும். பிறகு கல்வி கற்கும் நேரம். நான்கு பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நாளில் சமையலறை வேலைகளில் உதவி செய்யவேண்டும். ஒன்பது மணிக்கு பள்ளி வகுப்புகள் தொடங்கும். மாலையில் பள்ளியிலிருந்து திரும்பியதும் மாணவர்கள் ஏழுமணி வரை விளையாடவேண்டும். பிறகு பிரார்த்தனை. அதைத் தொடர்ந்து இரவுணவு வழங்கப்படும். பிறகு பத்து மணி வரை பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு உறங்கச் செல்லவேண்டும்.

தோட்டவேலை, ராட்டையில் நூல் நூற்றல், தச்சுவேலை போன்றவற்றிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நல்லொழுக்க போதனை வகுப்பில் அகிம்சை பற்றியும் சத்தியாகிரகம் பற்றியும் ஆனந்த தீர்த்தரே விரிவாக எடுத்துரைத்தார்.

பள்ளிக்கூடம், பாடம், பிரார்த்தனை என ஒருபக்கம் செயல்பட்ட போதும் ஆனந்ததீர்த்தர் தாழ்த்தப்பட்டோர் மற்றவர்களால் இழிவாக நடத்தப்படும் இடங்களிலெல்லாம் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பைத் தெரிவிக்க ஒருபோதும் தயங்கியதில்லை. அதனால் பல இடங்களில் நேரிடையாகவே அவர் தாக்கப்பட்டார். ஆனாலும் தன் எதிர்ப்பைத் தெரிவிப்பதில் ஒருபோதும் மனம் சோர்ந்ததில்லை. பல சமயங்களில் சட்டம் அனுமதித்த வழிகளில் போராடி வெற்றி பெற்ற சம்பவங்களும் உண்டு.

ஒருமுறை பையனூரில் இயங்கிய BASEL EVANGELICAL MISSION L.P.SCHOOL என்னும் பள்ளிக்கூடம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள மறுத்தது. ஆனந்த தீர்த்தர் தன் விடுதியில் தங்கிப் படிக்கிற பிரபாகரன் என்னும் மாணவனைச் சேர்ப்பதற்காகச் சென்றபோது, அவர் திருப்பியனுப்பப்பட்டார். மதம் மாறிய புலையர் ஒருவரே அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக அப்போது பணிபுரிந்து வந்தார். ஆயினும் உயர்சாதி வகுப்பினரின் சீற்றத்துக்கு அஞ்சி அவர் அம்மாணவனைச் சேர்த்துக்கொள்ள மறுத்தார். உடனே ஆனந்த தீர்த்தர் தலைச்சேரி துணை ஆட்சியரான கார்ல்ஸ்டோனைச் சந்தித்து புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு ஆட்சியர் அம்மாணவனைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என பள்ளிநிர்வாகத்துக்குக் கட்டளையிட்டார். அதன்பிறகே பிரபாகரன் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டான். எதிர்காலத்தில் அவன் சிறந்த மாணவனாகப் படித்துத் தேறி பல தேசிய விருதுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தான்.

அக்காலத்தில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கோவிலை ஒட்டிய பகுதிகளில் இருந்தன. கோவிலை ஒட்டிய தெருக்களில் நடமாட தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உரிமை இல்லாத காலம் அது. அதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாத நெருக்கடி உருவானது. தடையை மீறி ஆனந்த தீர்த்தர் தன் விடுதிப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்றபோது, உயர்சாதி இந்துக்களால் அனைவரும் தாக்கப்பட்டனர். ஆனந்த தீர்த்தர் மீண்டும் துணை ஆட்சியரின் உதவியை நாடினார். அவர் சாலையில் தாழ்த்தப்பட்டோர் நடமாடுவதற்கு இருந்த தடையை விலக்கும் உத்தரவை வழங்கினார். இப்படிப்பட்ட தடைகள் நிலவி வந்த ஒவ்வொரு ஊருக்கும் சென்று, தனிப்பட்ட புகார் வழியாக ஆட்சியர் மூலம் தடைவிலக்கு உத்தரவைப் பெற்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்க பாடுபட்டார் ஆனந்த தீர்த்தர். இது தாழ்த்தப்பட்டோரிடையே ஒருவித விழிப்புணர்ச்சியை உருவாக்கியது. அவர்கள்  தம் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு அனுப்பி கல்வி கற்க வைத்தனர். 1933இல் கண்ணூரில் கேளப்பன் சாதிநாசனசபா என்னும் அமைப்பைத் தொடங்கியபோது ஆனந்ததீர்த்தர் அதன் செயலாளராக பொறுப்பேற்று பணிபுரிந்தார். ’சாதிநாசனம் நவயுகதர்மம்என்னும் தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட பிரசுரம் மக்களிடையில் பிரபலமானது.

சாதிப் பழக்கவழக்கங்களை வீட்டிலும் பொது இடங்களிலும் பின்பற்ற வேண்டாம் என்றும் சாதி பற்றிய விவரங்களை ஒருவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாமென்றும் ஆனந்த தீர்த்தர் கேட்டுக்கொண்டார். மேலும் ஒரே சாதியில் திருமணம் செய்துகொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுரை சொன்னார். தன் வேண்டுகோளை துண்டுப் பிரசுரமாக அச்சடித்து அனைவருக்கும் வழங்கினார்.

அச்சமயத்தில் 10.01.1934 அன்று காந்தியடிகள் பாலக்காட்டுக்கு வந்து தீண்டாமையை ஒழிக்கவேண்டிய அவசியம் பற்றி உரையாற்றினார். பிறகு குழல்மண்ணம், குருவாயூர், பட்டாம்பி வழியாக தலைச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு ஹரிஜன நல மேம்பாட்டுக்காக நிதி வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட காந்தியடிகள் அனைவருக்கும் நன்றியுரைத்துவிட்டு உங்கள் இதயத்திலிருந்து தீண்டாமை என்னும் விலங்கை விரட்டியடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே இங்கு நான் வந்திருக்கிறேன். அதை வேறு யாரோ ஒருவர் வந்து நமக்காக விரட்டியடிப்பார் என்று நாம் கருதக்கூடாது. அச்செயலை நாமே முயற்சியெடுத்துச் செய்யவேண்டும். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தீண்டாமை விலங்கை விரட்டியடித்துவிட்ட இடமாக தம் இதயத்தை வைத்துக்கொள்ளவேண்டும். மேல்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் மட்டும் தீண்டாமை நிலவிக்கொண்டிருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்ளக் கூடாது. மேல்சாதியினரில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இடையில் தீண்டாமை நிலவுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினரில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இடையில் தீண்டாமை நிலவுகிறது. சமீபத்தில் கேரளத்தில் புலையர்களுக்கும் திய்யாக்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களைப்பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனைப்பட்டேன். மாற்று வகுப்பினருடன் இணக்கமுடன் பழக அனுமதிக்காத அளவுக்கு தீண்டாமை என்னும் நஞ்சு நம் நெஞ்சில் ஆழமாக ஊறியிருக்கிறது. அதுதான் மிகப்பெரிய துயரம். நம்முடைய அறிவார்ந்த உழைப்பின் வழியாக நம் மனத்திலிருக்கும் தீண்டாமைப்பேயை விரட்டி வெற்றி பெறுவோம் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லைஎன்று உரைத்தார்.

தலைச்சேரிக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்த ஆனந்த தீர்த்தர் அவரை பையனூர் வித்தியாலயத்துக்கு அழைத்துவந்தார். அவருடைய பயணத்திட்டத்தில் பையனூர் சேர்க்கப்படவில்லை என்றபோதும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்காக நடத்தப்படும் வித்தியாலயத்தைப் பார்வையிட அவர் ஆனந்ததீர்த்தருடன் புறப்பட்டு வந்தார். அங்கிருந்த பிள்ளைகளுடன் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்தார். அவர் வருகை புரிந்ததன் அடையாளமாக ஆசிரமத்தின் தோட்டத்தில் அவர் அன்று ஒரு மாங்கன்றை நட்டார். பிறகு ஆனந்த தீர்த்தரை வாழ்த்திவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

இந்தியா விடுதலை பெறும் வரை போராட்டங்களிலேயே ஆனந்த தீர்த்தரின் வாழ்க்கை கழிந்தது. பாதை, ஆலயம், கடைகள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் மற்ற சாதியினருக்கு இணையாக தாழ்த்தப்பட்டவரும் உரிமை பெறுவதற்கான போராட்டங்களை அவர் தொடர்ந்து மேற்கொண்டார்.   தமிழ் மாகாணத்தில் அனைத்துச் சாதியினரும்  ஆலயங்களில் சென்று வழிபடும் சட்டம் நிறைவேறியிருந்தபோதிலும் பையனூருக்கு அருகில் இருந்த ராமவில்யம் கழகம் என்னும் ஊரில் இருந்த ஆலயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மறுத்தனர். ஆலய நுழைவு உரிமைக்காக சில இளைஞர்களுடன் அங்கு சென்ற ஆனந்த தீர்த்தர் உண்ணாவிரதம் இருந்தார். மூன்றுநாள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெற்றியில் முடிவடைந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் ஆலயத்துக்குள் செல்லும் உரிமை அடைந்தனர்.

கேரளத்திலும் கர்நாடக எல்லைப்பகுதிகளிலும் இடைவிடாமல் பணியாற்றிய ஆனந்த தீர்த்தர், காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அரிஜன சேவா சங்கத்தின் தென்மண்டல செயலாளராக 1952இல் நியமிக்கப்பட்டார். அதையொட்டி அவர் தமிழகப் பகுதிகளிலும் தொண்டாற்ற வேண்டிய சூழல் உருவானது.

தமிழ்நாட்டின் பணிச்சூழல் அவருக்கு அவ்வளவு உவப்பானதாக அமையவில்லை. கேரளத்தில் செயலாற்றியதுபோலவே பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்தல், பொதுப்பாதையில் நடமாடுதல், உணவு விடுதிகளில் அனைவருக்கும் சமமாக அமர்ந்து உணவுண்ணுதல் போன்ற உரிமைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்களுடன் இணைந்து அவர் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் அந்தப் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு முறையும் உயர்சாதியைச் சேர்ந்தவர்களின் தாக்குதலுக்கு அவர் ஆளானார். மாங்குளத்தில் மேல்சாதியினரின் தாக்குதலால் அவருடைய கால் முறிந்தது. ஊரில் நிலவிய அமைதியைச் சீரழித்தவர் என குற்றம் சாட்டப்பட்டு முதல்முறையாக அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

சூரக்குடி என்னும் கிராமத்தில் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காக தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்த்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றார் ஆனந்த தீர்த்தர். அவர்கள் அங்குள்ள மேல்சாதிக்காரர்களின் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்தவர்கள். இச்சம்பவத்துக்குப் பிறகு மேல்சாதிக்காரர்கள் குத்தகையை ரத்து செய்துவிட்டு, நிலங்களைத் திரும்பி எடுத்துக்கொண்டனர். அதைக் கண்டு மனம் தளராத ஆனந்த தீர்த்தர் அரசிடமிருந்து பதினெட்டு ஏக்கர் நிலத்தைப் பெற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கி அதில் விவசாயம் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார். ஆனால் அந்த நிலத்தில் பயிர் விளைந்து நின்ற சமயத்தில் மேல்சாதியைச் சேர்ந்த பண்ணையார்கள் அந்த நிலத்தை அழித்தனர். ஆனந்த தீர்த்தர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அவர் சொல் எங்கும் எடுபடவில்லை.  

கிராமத்துப் பஞ்சாயத்துகளில் தாழ்த்தப்பட்டோருக்கு கொடூரமான தண்டனைகள் விதிக்கப்படுவதை அவர் கண்கூடாகக் கண்டு மனம் கொதித்தார். பொருளாதாரத்தடை விதித்தல், ஊரைவிட்டுத் தள்ளிவைத்தல், சொத்துகளை அபகரித்தல், கடுமையான அபராதம் விதித்தல் என மனம்போன போக்கில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கும் எவ்விதமான பயனையும் அளிக்கவில்லை.  

ஒரு கட்டத்தில் அரிஜன சேவா சங்கமே அவருடைய செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. மேலும் காரணமில்லாமலேயே மேலூரிலிருந்து அவர் மதுரைக்கு மாற்றப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக தான் நினைத்த அளவுக்கு செயலாற்ற வழியில்லாத சூழலில் தொடர்ந்து அப்பொறுப்பில் இருக்க மனமின்றி 1958இல் பொறுப்பிலிருந்து விலகி கேரளத்துக்கே திரும்பிச் சென்றுவிட்டார்.

அந்நேரத்தில் கேரளத்திலும் நிலைமை மாறிவிட்டிருந்தது. அதிகாரப் போட்டியில் ஈடுபடும் அமைப்பாளர்கள் சேவையுணர்வை இழந்திருப்பதைக் கண்டார். அதனால் அவர் ஸ்ரீநாராயண தர்ம சங்கத்திலிருந்தும் வெளியேறும் சூழல் உருவானது.

மனிதர்களிடயில் நிலவும் மனிதாபிமானத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் சாதி சிதைத்துவிடுவதையும் விலங்குகளைவிட மோசமாக நடக்கத் தூண்டுவதையும் ஆனந்ததீர்த்தர் உணர்ந்தார். மனிதர்களிடமிருந்து சாதியுணர்வு விலகும் வரை மானுடனுக்கு மீட்சியில்லை என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கருதிய அவர் தீண்டாமையைக் கடைபிடிப்பவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களும் மானுடகுலத்துக்கே எதிரிகள் என்று நம்பினார்.

(கிராம ராஜ்ஜியம் - செப்டம்பர் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )