Home

Wednesday 7 October 2020

கல்யாணராம ஐயர் - தியாகத்தின் இனிமை

 

1931ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாகாணத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய கார்லிக் என்னும் ஆங்கிலேயர் கொல்லப்பட்டார். மேலும் பம்பாயில் கவர்னராகப் பணிபுரிந்துவந்த ஆங்கிலேய அதிகாரியைக் கொல்லவும் முயற்சி நடைபெற்றது. இத்தகு அரசியல் கொலைகளைக் கண்டித்து 06.08.1931 அன்று பம்பாயில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டில் அத்தீர்மானங்களை முன்வைத்து அன்று காந்தியடிகள் உரையாற்றினார்.

காங்கிரஸ் ஒருபோதும் வன்முறையில் இறங்கக்கூடாது என்று தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்த காந்தியடிகள் வன்முறை எண்ணங்களை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அனைவரையும் காங்கிரஸ் கண்டிப்பதாக அறிவித்தார். வன்முறைச் செயல்பாடுகளின் விளைவுகளை பொதுமக்களிடையில் எடுத்துரைத்து அவர்கள் நெஞ்சில் அகிம்சையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் காங்கிரஸ் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தீவிரமான பிரச்சாரத்தைத் தொடங்கவேண்டும்  என்று தெரிவித்தார். அகிம்சைவழிப் போராட்டத்துக்கான உண்மையான ஆதரவை நம்மால் திரட்டமுடியாமல் போகுமென்றால், இந்த மாநாட்டிலே நாம் நிறைவேற்றும் தீர்மானங்கள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகவே இருக்கும் என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்துவன்முறைக்கு கிஞ்சித்தும் இடமற்ற அகிம்சை வழியில் பூரண சுயராஜ்ஜியம் பெறுவதற்காக உழைப்பதே காங்கிரஸ் இயக்கத்தின் நோக்கமாகும். இத்தருணத்தில் காங்கிரஸ் பின்பற்றும் அகிம்சைவழிப் போராட்டத்தைப்பற்றி நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைக்கும் கடமை நமக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள ஏழு லட்சம் கிராமங்களிலும் காங்கிரஸ் வேரூன்றவேண்டும். காங்கிரஸ் கொடி பறக்கவேண்டும். அவர்களை அகிம்சைவழியில் ஒன்றிணைத்து நிறுத்தவேண்டும்என்று காந்தியடிகள் உரையாற்றினார்.

காந்தியடிகளின் உரை நாடெங்கும் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளியானது. அப்போது ராணிப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி மாணவராக இருந்த இளைஞரொருவர் அச்செய்தியைப் படித்து மன எழுச்சி கொண்டார். அடுத்த நாளே அந்த இளைஞர் எண்ணற்ற தொண்டர்களோடு ஊர்வலமாகச் சென்று ராணிப்பேட்டை மைதானத்தில்  கொடியேற்றி வணங்கினார். பொது இடங்களில் கொடி ஏற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த காலம் அது. அதனால் காவல்துறை அனைவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தது. வயது குறைந்த இளைஞராக இருந்ததாலும் ஆசிரியர் பயிற்சி மாணவராக இருந்ததாலும் மீண்டும் இதைப்போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு அவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். அவர் பெயர் கல்யாணராம ஐயர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட அச்சமில்லாதவராக நாட்டு நிலைமைகளை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் கூட்டங்களை நடத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு முன்பாகவே கல்யாணராமனின் உள்ளத்தில் தேசப்பற்று ஊறியிருந்தது. 1928இல் இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக சைமன் குழு இந்தியாவுக்கு வந்தது. இந்தியர்கள் ஒருவரும் அக்குழுவில் இடம்பெறாததால் நாடெங்கும் எதிர்ப்பு எழுந்தது. வாலாஜா வட்டாரத்திலிருந்து ஆக்கூர் அனந்தாச்சாரி, ஜமதக்னி இருவரும் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றனர். ஓராண்டு தண்டனைக்குப் பிறகு அவர்கள் விடுதலை பெற்று ரயில் வழியாக ஊருக்குத் திரும்பிய தருணத்தில் வாலாஜா சாலை புகைவண்டி நிலையத்துக்கே சென்று அவர்கள் காலில் விழுந்து வரவேற்றார் கல்யாணராமன். அன்றுமுதல் ஆக்கூர் அனந்தாச்சாரியையே தன் அரசியல் வழிகாட்டியாக வரித்துக்கொண்டார் அவர்.

1930இல் நடைபெற்ற உப்புசத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து காந்தியடிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது வைசிராயாக இருந்த இர்வினுக்கும் காந்தியடிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதான எல்லாத் தொண்டர்களும் விடுதலை செய்யப்பட்டனர். லண்டனில் 07.09.1931 அன்று தொடங்கவிருந்த  இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள காங்கிரஸ்  இசைவளித்தது. காங்கிரஸ் சார்பில் காந்தியடிகள் கலந்துகொண்டார். எனினும் அது தோல்வியில் முடிவடைந்தது. அத்தருணத்தில் இர்வினை அடுத்து வெலிங்க்டன் இந்தியாவுக்கு வந்து வைசிராயாகப் பதவியேற்றுக்கொண்டார். இர்வினுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி அவர் அடக்குமுறையைக் கையாண்டார். வரிகொடாக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரு, ஷெர்வானி, சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவையனைத்தும் காந்தியடிகள் லண்டனில் இருந்தபோது நடந்தேறின. காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பியதும் வைசிராயைச் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் காந்தியடிகள் 03.01.1932 அன்று சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். அதனால் உடனடியாக அவரும் அவருடன் இருந்த தொண்டர்களும் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டனர்.

அச்சமயத்தில் கல்யாணராமன் பயிற்சியை முடித்து ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். காந்தியடிகள் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்து பெரிதும் மனவேதனையுற்றார். அதனால் அரசு ஆசிரியர் வேலையை உடனடியாக உதறி சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்.  தாம் சென்ற இடங்களுக்கெல்லாம் சுதந்திர வேட்கையைத் தூண்டும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். நண்பர்களைத் திரட்டிக்கொண்டு கண்டன ஊர்வலங்கள் நடத்தினார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காந்தியடிகளை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் மேடைகளில் பேசினார். இதனால் காவல்துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஓராண்டு கடுங்காவல் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. இதுவே அவருடைய முதல் சிறைவாசம். அதைத் தொடர்ந்து எண்ணற்ற முறை அரசு விதித்த தடைகளை மீறியதற்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும் அவர் அடிக்கடி சிறைக்குச் செல்ல நேரிட்டது.

சிறைச்சாலையில் பிராமணக்கைதிகளுக்குத் தனியாகவும் பிராமணரல்லாத கைதிகளுக்குத் தனியாகவும் உணவு பரிமாறும் வழக்கம் அப்போது நடைமுறையிலிருந்தது. சிறையில் பின்பற்றப்பட்டு வந்த பேத உணர்வு அவரை திகைப்பில் ஆழ்த்தியது. எங்கு சென்றாலும் ஒட்டிக்கொண்டு வரும் சாதியடையாளத்தின் மீதான பற்றைக் கண்டு வருந்தினார். தனித்தனியாக உணவு வழங்கும் தீயமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை சிறைநிர்வாகத்துக்கு விடுத்த அண்ணல் தங்கோ என்று அழைக்கப்பட்ட குடியாத்தம் சாமிநாதன் என்னும் காங்கிரஸ்காரர்  அதற்காக காந்திய வழியிலேயே உண்ணாவிரதம் இருந்தார். அந்தக் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்த கல்யாணராமனும் அவருடன் சேர்ந்துகொண்டார். நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனித்தனியாக உணவு வழங்கும் முறை முடிவுக்கு வந்தது.

அரிசன சேவா சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் இணைந்து பணியாற்றிய கலயாணராமன் 1933இல் வட ஆற்காடு மாவட்டத் தலைவராகவும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். அவருடைய வீட்டின் கதவுகள் தாழ்த்தப்பட்டோருக்காக எப்போதும் திறந்தே இருந்தன. அவரைப்போலவே அவருடைய துணைவியாரும் பரந்த மனம் கொண்டவர். அனைவரையும் ஒன்றெனக் கருதும் பார்வையுடையவர். வீட்டில் இருக்கும் எளிய உணவை அனைவரோடும் பகிர்ந்துண்ணும் பண்பு இருவருக்குமே இயல்பாக இருந்தது.

தீண்டாமையை ஒழிக்கும் எண்ணத்துடன் காந்தியடிகளைப்போலவே அனைவரோடும் சமத்துவத்தோடு பழகினார் கல்யாணராமன். தீண்டாமையொழிப்பு தொடர்பான அவருடைய உரைகள் கேட்போரின் மனத்தைத் தொட்டு அசைக்கவல்லவை. இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறப்பாக  கருதப்படவேண்டியவர்கள். பிறப்பால் யாரும் உயர்வானவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல. அறிவில் மேம்பட்ட யாரும் அப்படிப்பட்ட பார்வையை மேலானது என்று சொல்லமாட்டார்கள். அவர்களை நாம் நமக்குச் சமமாக நடத்தாத வரையிலும், அவர்களுடைய வாழ்க்கைநிலை உயராத வரையிலும் நம் மண்ணில் சமத்துவம் நிலவுவதாக நாம் சொல்லமுடியாது. தீண்டாமை அழிந்த சமூகத்தில் மட்டுமே சமத்துவம் அரும்பமுடியும் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கினார். தம்மைச் சந்திக்கவரும் நண்பர்கள் அனைவரிடமும் அவர்கள் மனமொப்பும் வகையில் அச்செய்திகளை எடுத்துரைத்தார்.

வட ஆற்காடு மாவட்ட அரிஜன சேவா சங்கத்தின் சார்பாக  தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்துக்காக எண்ணற்ற துண்டு பிரசுரங்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் தீண்டாமை ஒழிப்பு சார்ந்து காந்தியடிகள், நேரு, இராஜாஜி போன்ற தலைவர்கள் சொன்ன கருத்துகளை இணைத்துக்கொண்டார்.  தக்கர்பாபா தமிழகத்துக்கு வந்தபோது அவருடன் இணைந்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகப் பாடுபட்டார்.

ஒருமுறை அவர் வாழ்ந்த பகுதிக்கு அருகில் இருந்த தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் தீப்பிடித்து பல குடிசைகள் தீக்கிரையாகிவிட்டன. உடனே அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் முனைப்புடன் செயல்பட்டார் கல்யாணராமன். வீடிழந்தவர்கள் தங்குவதற்கு ஏற்றவகையில் ஒரு முகாமை உருவாக்கி, பாதிக்கப்பட்டவர்களை அங்கு குடியேற்றினார். பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து, அவர்களுக்குத் தேவையான உணவுக்கும் உடைக்கும் ஏற்பாடு செய்தார். எரிந்து கரியான கூரையை அப்புறப்படுத்திவிட்டு, அனைத்தையும் சீர்ப்படுத்தி மீண்டும் அவர்களை அந்த வீடுகளில் குடிபுக வைத்தார்.

1934இல் தினமணி நாளிதழ் தொடங்கப்பட்டபோது, அதில் வட ஆற்காடு மாவட்ட நிரூபராக கல்யாணராமன் பணியாற்றினார். அதில் கிட்டிய சிறுவருமானமே அவர் குடும்பச்செலவைச் சமாளிக்க உதவியது. தினமணிக்காக அவ்வப்போது சில கட்டுரைகளையும் பிரசுரங்களையும் அவர் எழுதியளித்தார்.

01.09.1939இல் ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் இணைந்து போலந்து நாட்டின் மீது தாக்குதல் நிகழ்த்தின. அதைத் தொடர்ந்து பிரான்சும் பிரிட்டனும் இணைந்து ஜெர்மனியைத் தாக்கின. உலக நாடுகள் அனைத்தும் அச்சுநாடுகள், நேசநாடுகள் என இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதும் அது இரண்டாம் உலகப்போராக வடிவெடுத்தது. இந்தப் போரில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஈடுபடுத்தியது. போருக்குப் பிறகாவது இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்படும் என்ற திட்டவட்டமான வாக்குறுதியை அரசு அளிக்க மறுத்ததால் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவைப் பங்கெடுக்க வைக்கக்கூடாது என்று காங்கிரஸ் தெரிவித்தது. அதைப் பொருட்படுத்தாத அரசு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீர்ரகளை போரில் ஈடுபடுத்தியது. போர்ச்செலவுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டவும் முனைந்தது. அரசுக்கு போர்நிதி வழங்கக்கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பிரச்சாரம் செய்தது. மாகாணங்களில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் தம் பதவிகளைத் துறந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த கல்யாணராமன் ஆற்காட்டில் சத்தியாகிரகிகளுக்கான ஒரு பயிற்சி முகாமை உருவாக்கி நடத்திவந்தார். ஓய்வு நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருந்த ஊர்களுக்குச் சென்று காங்கிரஸின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மேடையில் உரையாற்றினார். இதனால் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதச் சிறைத்தண்டனையும் ரூ.250 அபராதமும் விதிக்கப்பட்டார்.

தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெற்ற சில மாதங்களிலேயே திருப்பத்தூர் பூஞ்சோலை மைதானத்தில் தேசிய பொதுஜன சேவை சங்கத்தின் சார்பாக நடந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை அரசாங்கத்துக்கு எதிரானதாக குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்பில் அக்கறையோடு செயல்பட்டதைப்போலவே மது ஒழிப்பு பிரச்சாரத்திலும் ஈடுபாட்டோடு செயல்பட்டார் கல்யாணராமன். ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இதனால் இராஜாஜிக்கும் அவருக்கும் இடையில் நெருக்கம் வளர்ந்தது. மதுப்பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைக்கும் வகையில் பல துண்டுப் பிரசுரங்களை அவரே எழுதி வெளியிட்டார். 1940இல் வட ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் குழுவின் செயலாளராக இருந்த சமயத்தில்மதுவிலக்கின் மாண்புகள்என்னும் தலைப்பில் ஒரு சிறு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்நூலுக்கு முன்னுரை எழுதியவர் காமராஜர். அதைத் தொடர்ந்து அவர்மதுபானம் ஒழிகஎன்ற தலைப்பில் மேலுமொரு நூலை எழுதினார். அதை தினமணி வெளியிட்டது.

ஜூலை 1942இல் வார்தா ஆசிரமத்தில் கூடிய காங்கிரஸ் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியது. அதையடுத்து ஆகஸ்டு எட்டாம் நாள் பம்பாய் மாநாட்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவித்தார் காந்தியடிகள். அம்முழக்கத்தையே ஒரு தீர்மானமாக அன்றைய காங்கிரஸ் நிர்வாகக் குழு நிறைவேற்றியது. மறுநாள் காலையிலேயே தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த காமராஜர் மாநாட்டின் தீர்மான நகல்களோடு பம்பாயிலிருந்து உடனடியாக தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.

அடக்குமுறைப் போக்கைப் பின்பற்றிய அரசு நாடெங்கும் எல்லாத் தலைவர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. காமராஜரைக் கைது செய்ய எல்லா ரயில்நிலையங்களிலும் காவலர்கள் காத்திருந்தார்கள். ஆனால் அரக்கோணம் நிலையத்தில் இறங்கிய காமராஜர் நிலைமையைக் கவனித்ததும் எச்சரிக்கையாக விவசாயிபோல முண்டாசு கட்டிக்கொண்டு நிலையத்திலிருந்து வெளியேறினார். மாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருந்த கல்யாணராமனை அன்றிரவு சந்தித்து தீர்மான நகல்களை ஒப்படைத்தார். அவர் காமராஜரை தன் நண்பரின் வீட்டில் மறைவாகத் தங்கவைத்தார். பொழுது விடிந்ததும் வாடகை காரில் அவரோடு கணியம்பாடிக்குச் சென்று, அங்கிருந்து இருவரும் ரயிலில் தஞ்சாவூருக்குச் சென்றனர்.

அவர் தினமணி நாளேட்டுக்காக நிரூபராக பணியாற்றியவர் என்பதால், பத்திரிகை முகவர்கள் அனைவரோடும் அவருக்கு நேரிடையான அறிமுகம் இருந்தது. அதனால் வண்டி நின்ற ஸ்டேஷன்களில் சந்திக்க நேர்ந்த செய்தித்தாள் முகவர்களோடு உடனுக்குடன் தொடர்புகொள்ள முடிந்தது. அவர்கள் வழியாக தீர்மான நகல்களை அந்தந்த ஊரைச் சேர்ந்த காங்கிரஸ் அமைப்பாளர்களிடம் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்தபடியே காவலர்களின் கண்களிலிருந்து தப்பி பயணம் செய்து தஞ்சையை அடைந்தார்கள். அங்கும் நகல்களை விநியோகித்த பிறகு திருச்சி, அரியலூர், மதுரை நகரங்களுக்கும் சென்று அங்குள்ள அமைப்பாளர்களைச் சந்தித்து நகல்களை அளித்தனர். மதுரையிலிருந்து காமராஜர் பிரிந்துசெல்ல, அங்கிருந்து தூத்துக்குடி சென்றுவிட்டு இராணிப்பேட்டைக்குத் திரும்பினார் கல்யாணராமன். அவர் வீட்டுக்குள் நுழையும் முன்பு கைது ஆணையுடன் காத்திருந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் அடைத்தது. வேலூர் சிறைச்சாலையிலும் தஞ்சாவூர் சிறைச்சாலையிலுமாக பதினெட்டரை மாத தண்டனைக்காலத்தை அவர் சிறையில் கழித்தார்.

1944இல் சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தன் தாயையும் மனைவியையும்  குழந்தைகளையும் காண்பதற்காக ஆவலோடு வீட்டுக்குச் சென்றார். அனைவரும் சோகமே உருவாக காட்சியளித்தனர். வீட்டின் நிலையும் மோசமாக இருந்தது. அதைக் கண்டு துயரத்தில் மூழ்கினார் கல்யாணராமன். மாதக்கணக்கில் அனைவரும் கந்தல் உடையுடன் உணவின்றி வாடியதை அறிந்து அவர் கண்களில் நீர் பெருகியது. உடனே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாராட்டுப்பத்திரங்களையும் நினைவுப்பரிசுகளையும் ஒரு துணியில் வைத்துச் சுருட்டி கட்டி எடுத்துச் சென்று கடைவீதியில் விற்றுவிட்டு தன் அன்னைக்கும் மனைவிக்கும் இரண்டு புடவைகள் வாங்கிவந்து கொடுத்தார்.

காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு காந்தியடிகளின் கொள்கைகளை மக்களிடையில் பரப்பும் நோக்கத்துடன் ஒரு பத்திரிகையைத் தொடங்க நினைத்தார் கல்யாணராமன். 1951இல் ஜெய்பாரத் என்னும் பெயரில் ஒரு வாரப்பத்திரிகையைத் தொடங்கினார். ஒவ்வொரு பத்திரிகையிலும் தேசிய புனரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களும் தேசியத் தலைவர்களின் வேண்டுகோள்களும் இடம்பெற்றன. சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் பொதுமக்களின் கடமைகள் பற்றிய விரிவான கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. 1951-52 காலகட்டத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய தருணத்தில் மாநிலமெங்கும் வாழ்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய பசி பசி பசி என்னும் கட்டுரை அந்தக் காலத்தில் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.

காந்தியடிகளின் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் நோக்கத்துடன் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த நிர்மலானந்தா பிக்கு 1931இல்காந்தியக் கொள்கைப்பரப்புச் சங்கம்என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினார். 1952இல் இச்சங்கத்தின் கிளையொன்றை கல்யாணராமன் இராணிப்பேட்டையில் தொடங்கினார். காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதோடு மட்டுமன்றி, அவருடைய சங்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டது. வட ஆற்காடு மாவட்டப்பகுதிகளில் கடுமையாக பஞ்சம் நிலவிய 1951-53 காலகட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் வள்ளிக்கிழங்கு, கற்றாழை, காராமணி, பிண்ணாக்கு என கிடைத்ததை எல்லாம் உண்டு உயிர்வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எண்ணற்றோர் வாழ்வைத் தேடி வேறு நகரங்களைநோக்கி இடம்பெயர்ந்தார்கள். அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த பல நல்ல உள்ளங்களை அணுகி நன்கொடை வசூலித்து ஊருக்குள் மையமான இடத்தில் ஒரு கஞ்சித்தொட்டியை நிறுவி, அனைவருக்கும் தினந்தோறும் உணவு கிடைக்கும் வகையில் வழிசெய்தார் கல்யாணராமன். அதற்காக தம் பழைய நண்பரான காமராஜரை அணுகி தேவையான உதவிகளைப் பெற்றார். வெளியிடங்களிலிருந்தும் உதவிகள் பெற்று அதைக்கொண்டு பாலும் உணவுப்பொட்டலங்களும் வழங்க ஏற்பாடு செய்தார். காந்தியக் கொள்கைப்பரப்புச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மக்களிடையில் நல்ல வரவேற்பு இருந்தது.

இருப்பதற்கு குடிசைகள் இருந்தாலும் உயிர்வாழ்வதற்கான வழிகளே இல்லாமல் ஏழைகள் தவித்த அந்தப் பஞ்சகாலத்தில் ஆதரவில்லாத அனாதைகளின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. ஆக்கூர் அனந்தாச்சாரி, ஜமதக்னி ஆகியோரின் ஒத்துழைப்போடு ஆதரவற்றவரின் மறுவாழ்க்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்த கல்யாணராமன் அவர்களுடைய குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியதை தன் முக்கியமான கடைமையாகக் கருதினார். நிர்மலானந்தா பிக்கு வழங்கிய தாராளமான பொருளுதவி அவருக்கு ஊக்கமளித்தது.  உடனடியாக ராணிப்பேட்டைக்கு அருகில் நவல்பூர் என்னும் இடத்தில் குழந்தைகள் காப்பகமொன்றை உருவாக்கினார். பிறகு அக்கம்பக்கத்தில் இருந்த கிராமங்களுக்குச் சென்று பெற்றோரின்றி வாடும் 24 அனாதைக்குழந்தைகளை அழைத்துவந்து காப்பகத்தில் சேர்த்துக்கொண்டார்.  அது காந்தியக் கொள்கைப்பரப்புச் சங்கத்தின் உதவியோடு நிறுவப்பட்ட காப்பகம் என்பதால், அதற்கு காந்திய கொள்கைப் பரப்பாளர்களின் பாலர் வித்தியாலயம் என்று பெயர் சூட்டினார். 02.12.1952 அன்றுமுதல் அந்த வித்தியாலயம் செயல்படத் தொடங்கியது.

ஆதரவில்லாத ஏழைக்குழந்தைகளை மட்டுமின்றி தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளும் தங்கி கல்வி பயிலும் வகையில் பாலர் வித்தியாலயத்தைவிட பெரியதொரு நிலையத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்பினார் கல்யாணராமன். தற்செயலாக வாலாஜாபேட்டையில் எட்டரை ஏக்கர் அளவுள்ள ஒரு பழைய சத்திரம் பெரிய அளவில் எந்தப் பயன்பாட்டிலும் இல்லாமல் பாழடைந்து கிடக்கும் செய்தி அவருக்குக் கிடைத்தது. உடனே தன் நண்பரான ஆக்கூர் அனந்தாச்சாரியோடு சென்று கந்தபொடி என்று அழைக்கப்பட்ட அந்தச் சத்திரத்தைப் பார்த்துவந்தார். அவர் மனத்துக்குள் திட்டமிட்டிருந்த இல்லத்தை உருவாக்க அந்த இடமே பொருத்தமான இடமென்று முடிவெடுத்தார். உடனே அச்சத்திரத்தை நிர்வகித்து வருபவரிடம் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தப்பத்திரம் எழுதி வாங்கினார். பிறகு சத்திரம் சீரமைக்கப்பட்டு, பாலர் வித்தியாலயத்தை அங்கு இடத்துக்கு மாற்றினார் கல்யாணராமன். 02.03.1953 முதல் செயல்படத் தொடங்கிய அந்த ஆசிரமத்துக்கு இருவரும் தீனபந்து ஆசிரமம் என்று பெயர் சூட்டினர். தொடக்கத்தில் பித்துக்குளி முருகதாஸ் ஆசிரமத்தின் தலைவராகவும் கல்யாணராமன் நிரந்தரச் செயலாளர்களாகவும் ஆக்கூர் அனந்தாச்சாரி, ஜமதக்னி, இராமானுஜம், கனகவல்லி, கோவிந்த முதலியார் ஆகியோர் உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தாகூரின் சாந்திநிகேதனுக்கு இணையான அமைப்பாக தன் ஆசிரமத்தை உருவாக்கவேண்டும் என கல்யாணராமன் விருப்பம் கொண்டிருந்தார். அந்த ஆசிரமத்தில் தக்க ஆசிரியர்களைக் கொண்டு இயற்கையோடு இயைந்த சூழலில் கல்வி கற்பிக்கப்பட்டது. தேசபக்தி, தெய்வபக்தி, நல்லொழுக்கம், சமதர்மம், சகோதரத்துவம் போன்ற கொள்கைகள் மாணவ மாணவியர் மனத்தில் பதியவைக்கும் முறையில் பாடங்கள் போதிக்கப்பட்டன. கல்யாணராமனின் இடைவிடாத முயற்சியால் மாநில அரிசன நலத்துறை உதவியும் மாவட்ட சமூக நலநிதியும் அந்த ஆசிரமத்துக்குக் கிடைத்தன. சிறந்த பாடகரும் தேசபக்தருமான எஸ்.ஜி.கிட்டப்பா ஆசிரம வளாகத்தில் ஒரு நூலகக்கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்தார். மற்றொரு கட்டடத்தை பித்துக்குளி முருகதாஸ் கட்டிக்கொடுத்தார்.

ஏறத்தாழ இருபதாண்டு காலம் ஆசிரமத்தின் செயலாளராக இருந்து சமூகத்தில் அதை உறுதியான அமைப்பாக நிலைபெறச் செய்தார். ஆசிரமத்தில் கல்வி கற்கும் எல்லாக் குழந்தைகளையும் அவர் சொந்தப் பிள்ளைகளாகவே நடத்தினார். குழந்தைகளும் அவரைப் பாசத்துடன் அப்பா என்றே அழைத்துப் பழகினர். போதிய விசையுடன் செயல்பட முடியாத முதுமைப்பருவத்தில்தான் கல்யாணராமன் தம்மிடம் இருந்த ஆசிரமத்தின் பொறுப்புகளை சம்பத் நரசிம்மன் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகினார். பொறுப்பிலிருந்து விலகினாலும் ஆசிரமப்பிள்ளைகள் காந்தியக்கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் விதமாக எளிமையான முறையில் அவர்களுக்கு எடுத்துரைப்பதை தன் தலையாய கடமையாகவே நினைத்து செயலாற்றினார் கல்யாணராமன். 1984இல் அவர் மறையும்வரை அவர் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருந்தார்.

தியாகத்தின் விளக்கமாக வாழ்ந்தவர் கல்யாணராமன். காந்தியமும் கருணையும் அவருடைய நெஞ்சில் ஊறியிருந்தன. அவர் கடைபிடித்த காந்திய வழி வாழ்நாள் முழுதும் அவருக்குக் கைவிளக்காக இருந்தது. அவர் வாழ்நாள் முழுதும் வறுமையிலேயே வாழ்ந்தார். துன்பத்தில் உழன்றார். ஆனால் அவற்றால் அவருடைய மன அமைப்பு ஒருநாளும் மாறியதில்லை. அது என்றென்றும் குன்றாத விசையுடன் சேவையாற்றும் செயல்திட்டத்துடன் இயங்கியது. தியாகத்துக்கு எப்போதும் அவர் பின்வாங்கியதில்லை.  தன் தியாகத்தின் காரணமாக விளையும் துன்பத்தைக்கூட அமைதியானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இனிமையானதாகவும் மாற்றிக்கொள்ளும் அதிசய ஆற்றல் அவரிடம் நிறைந்திருந்தது. கல்யாணராமன் தியாகத்தின் இனிமையில் திளைத்த மாமனிதர் என்றே  குறிப்பிடவேண்டும். சாமானியர்களின் கண்ணுக்குப் புலப்படாத எதிர்காலம் என்னும் வெளியில் நின்றுகொண்டு,  தன்னிடம் வளரும் குழந்தைகளின் உயர்வையும் பெருமையையும் பார்த்து ஆனந்தத்தால் நிறையும் கண்கள் கல்யாணராமனுக்கு இயற்கையாகவே அமைந்திருந்தன.

(சர்வோதயம் பேசுகிறது - அக்டோபர் 2020 இதழில் வெளிவந்த கட்டுரை )