Home

Monday 11 October 2021

திருமலை : உலகத்தார் உள்ளத்துள் உள்ளவர்

 

கதரியக்க வளர்ச்சிக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் மேற்கொண்ட தென்னகப்பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் 04.10.1927 அன்று இராஜபாளையத்துக்கு வந்திருந்தார். அன்று அவர் மூன்று கூட்டங்களில் கலந்துகொண்டார். முதலில் மகளிர் மட்டுமே பங்கேற்ற கூட்டத்தில் பேசிவிட்டு அடுத்து, இராஜபாளையம் காதி வஸ்திராலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். மூன்றாவதாக பொதுமக்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

இராஜபாளையம் கதர் உற்பத்தியில் முன்னணியில் நின்ற நகரம். உற்பத்தி மையத்தில் இராட்டையில் நூல்நூற்கும் பெண்களுக்காகவே அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த  பெண்களில் பலர் அயல்நாட்டு உடைகளை அணிந்து வந்திருப்பதைப் பார்த்து காந்தியடிகள் பெரிதும் வருந்தினார். தன் வருத்தத்தை அந்த நிகழ்ச்சியிலேயே அவர் தெரிவித்தார். இராட்டையில் நூல் நூற்பதில் ஈடுபட்டிருக்கும் பெண்களே கதராடைகளை அணியவில்லை என்றால் பிற பெண்களை எப்படி கதராடைகளை நோக்கி ஈர்க்கமுடியும் என்று கேட்டார். நூல் நூற்பதை வருமானமீட்டும் தொழிலாகப் பார்க்காமல் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.  அனைவரும் கதராடைகளை அணியத் தொடங்குவதன் வழியாக நூல் நூற்பதில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழைப்பெண்களின் உணவுப் பிரச்சினை தீர ஒரு வழி பிறக்கும் என்று சொன்னார். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையில் கதர் ஒரு பாலமாக விளங்கமுடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக பல  எடுத்துக்காட்டுகள் வழியாக தெளிவுபடுத்தினார்.

நூல்நூற்பு மையத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தம் வருமானத்தில் ஒரு பகுதியை அன்பளிப்பாக மையத்துக்கு வழங்குவதையும் அவ்வகையில் திரட்டப்பட்ட தொகை வழியாக நூற்றுக்கணக்கான இராட்டைகளை வாங்கி புதிதாக நூல் நூற்க வரும் ஊழியர்களுக்கு இலவசமாக அளிப்பதையும் அறிந்து காந்தியடிகள் அவர்களை அந்த அரங்கிலேயே பாராட்டினார். இளம்வயதுப் பழக்கமாக தொடங்கும் தியாக உணர்வே எதிர்காலத்தில் பெருஞ்செயல்களை ஆற்றுவதற்கான உந்துதலை வழங்கும் என்றார். கதருக்கு வழங்கும் முக்கியத்துவத்துக்கு இணையாக தீண்டாமை ஒழிப்புக்கும் நாம் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதையும் அன்று அவர் வலியுறுத்தினார். தீண்டாமை என்பது மன்னிப்பே அற்ற பெரும்பாவச்செயல். மனிதகுல முன்னேற்றத்துக்கே அது ஒரு பெருந்தடை. சாதியின் அடிப்படையில் ஒருவனை உயர்ந்தவனென்றும் தாழ்ந்தவனென்றும் பிரிக்கும் பார்வையே இந்த உலகின்மீது நாம் நிகழ்த்தும் மிகப்பெரிய வன்முறை என்றும் அது உடனடியாக உதறப்படவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இராமானுஜரின் மறுஅவதாரமாகவே காந்தியடிகளை எண்ணி அவருடைய கொள்கைவழியை ஏற்று கதராடை உடுத்தி தீண்டாமையை உதறிய ஒருவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அப்போது வாழ்ந்துவந்தார். அவர் பெயர் தோத்தாத்திரி தெய்வநாயகம். அன்றைய பொதுக்கூட்டத்தில் காந்தியடிகளை நேருக்கு நேர் பார்த்து அவருடைய உரையைக் கேட்பதற்காகவே ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து இராஜபாளையத்துக்கு வந்திருந்தவர்களில் அவரும் ஒருவர். அந்த உத்தமரின் உரையை தன் ஆறுவயது மகனும் கேட்கவேண்டுமென நினைத்த அவர் அவனுக்கும் கதராடை உடுத்தி அன்றைய கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தார். சிறுவயதில் அவர் மனத்தில் ஆழமாகப் பதிந்த காந்திய விதை நாளடைவில் பெரிய மரமாக ஓங்கி வளர்ந்தது. அவர் திருமலை.

காந்திய எண்ணங்களோடு வளர்ந்துவந்த திருமலை பதினான்கு வயது நிரம்பிய பருவத்தில் தன் சொந்த முயற்சியாலேயே சத்திய சோதனை நூலைப் படித்து காந்தியடிகளைப் பற்றி முழுமையாகவே தெரிந்துகொண்டார். அந்த வாசிப்பின் விளைவாகவும் அதற்குச் சில தினங்களுக்கு முன்பாக ஊருக்கு வந்திருந்த நேருவின் உரையைக் கேட்டதாலும் உருவான மன எழுச்சியால் காந்தி குல்லாய் அணிந்துகொண்டு மிடுக்காக பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார். ஒருநாள் அதைப் பார்த்துவிட்ட தலைமை ஆசிரியர் அவரை அழைத்து கண்டித்து நாலணா அபராதம் விதித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்தபிறகு திருநெல்வேலி இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பையும் முடித்த திருமலை அங்கேயே பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். பொதுமக்கள் அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணிக்கவேண்டும், வழக்கறிஞர்களும் அரசு ஊழியர்களும் அரசுக்கு ஒத்துழைக்காமல் புறக்கணிக்கவேண்டும்,  மாணவர்கள் கல்லூரிக்கல்வியைப் புறக்கணிக்கவேண்டும் என்ற காந்தியடிகளின் அறிவிப்பை அறிந்ததிலிருந்து காந்தியடிகளின் ஆணையை நிறவேற்றுவதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் குடும்பநிலையை உத்தேசித்தும் தன் தந்தையாரின் வேண்டுகோளுக்காகவும் அவர் முடிவெடுக்க தயங்கிக்கொண்டிருந்தார்.

1942இல் ஜூலை மாதத்தில் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான ஆயத்தத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 8 ஆம் தேதி மாநாட்டில் உரையாற்றிய காந்தி வெள்ளையர்கள் உடனடியாக இந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என அறிவித்தார். நாம் அனைவரும் கூடி இந்தியாவை விடுவிக்கலாம். அல்லது அந்த முயற்சியில் உயிரையும் துறக்கலாம். ஆனால் ஒருபோதும் அடிமைத்தனத்தின் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு வாழக்கூடாது.  சிறைவாசத்தைப்பற்றி கிஞ்சித்தும் கவலையுறக்கூடாது. ஒவ்வொருவரும் கடவுளையும் மனசாட்சியையும் சாட்சிகளாக நினைத்து சுதந்திரத்துக்காக உழைக்கவேண்டும் என்று கூட்டத்தில் முழங்கினார். அன்று நள்ளிரவிலேயே ஆசிரமத்தில் அவரை காவல்துறை கைது செய்து ஆகாகான் சிறையில் அடைத்துவைத்தது.  மறுநாள் முதல் தேசமெங்கும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டிக்கும் வகையில் தேசமெங்கும் ஊர்வலமாகச் சென்ற பொதுமக்களும் அங்கங்கே கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற தேசபக்தர்களின் கண்டன ஊர்வலத்தில் திருமலையும் கலந்துகொண்டார். உடனடியாக காவல்துறை அனைவரையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. திருமலையும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருடைய தந்தையார் தெய்வநாயகம் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி காவலர்களின் பிடியிலிருந்து அவரை விடுவித்து வீட்டுக்கு அழைத்துவந்து விட்டார். ஆயினும் எட்டு மாத காலம் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக வாழ்ந்து சுதந்திர வேட்கையை ஊட்டும் உணர்ச்சிமயமான துண்டுப்பிரசுரங்களை எழுதி இரவோடு இரவாக அச்சிட்டு பொதுமக்களிடையில் விநியோகித்தார். பட்டப்படிப்பை அவரால் முடிக்க முடியாமல் போனது.

எதிர்பாராத பொருளாதார இழப்பால் திருமலையின் குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. 1944இல் தினமணியில் அவருக்குக் கிடைத்த துணையாசிரியர் வேலை அந்த வறுமையிலிருந்து மெல்ல மெல்ல மீளவும் உலக விவகாரங்களைத் தெரிந்துகொள்ளவும் உதவியாக இருந்தது. வறுமை வாட்டினாலும் வறுமையின் சாயல் சிறிதும் படியாத புன்னகைமுகம் கொண்டவர் திருமலை. வறுமையை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருக்க அவர் பழகியிருந்தார். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஏழைகள், செல்வந்தர்கள் என எவ்விதமான வேறுபாடுமின்றி திருமலை அனைவரிடமும் ஒரே மாதிரி பேசிப் பழகினார். துயரமான அந்தக் காலத்தைக் கடந்துவர அவருடைய நட்பும் நகைச்சுவைப்பேச்சுகளும்தாம் உதவியாக இருந்தன.

காந்தியடிகளின் எழுத்துகளை தேடித்தேடி படித்த திருமலை அவருடைய அகிம்சைக்கருத்துகளால் பெரிதும் கவரப்பட்டார். மனிதன் தனியாக இருந்து இனி வாழவோ, வளரவோ வழியில்லை. சமுதாய வாழ்வில்தான் அவனுடைய ஆளுமை வளரும். இச்சமுதாயத்தின் உறுப்பினர்களுடைய சுயநலம் எந்த அளவுக்குக் குறைகிறதோ அந்த அளவுக்கு அந்த உறுப்பினர் வாழும் சமுதாயமும் வளர்கிறது. அவருக்கும் உறுதுணையாக நின்று உதவுகிறது. ஒருவருடைய வளர்ச்சி தன் அகங்காரத்தை அறவே அழித்துக்கொள்வதில்தான் இருக்கிறது. எந்த அளவுக்கு உள்ளத்தில் பணிவு வளர்கிறதோ அந்த அளவுக்கு ஒருவரால் உயர்ந்துவிடமுடியும். ஒருவருக்கு தன் அன்பைச் செயல்படுத்த சமுதாயமே சிறந்த களமாக இருக்கிறது. பிறர் நலத்தில் தன்னலத்தைக் காண்பவனே சிறந்த மனிதன். தன்னலத்தை மறக்கும்போது மகிழ்ச்சி பிறக்கிறது. காந்தியச்சிந்தனை திருமலையில் நெஞ்சில் ஊறத் தொடங்கியது. தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் எண்ணம் அவருடைய நெஞ்சில் உதித்தது.

இதன் விளைவாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடு என்பவரின் தலைமையின் கீழ் காந்திய வழியில் திருமலை மக்களுக்குத் தொண்டாற்றினார். நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவரைத் தேடிவந்த போது, அதை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டு வென்றார். அந்த வெற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துணைத்தலைவராக ஆக்கியது. தன் எளிமையாலும் அன்பாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களுடைய தேவைகளை அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைக்க பாடுபட்டார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆங்கிலப் பேராசிரியர் .சீனிவாச ராகவனுக்குப் பிடித்த மாணவராக இருந்தார் திருமலை. பாளையங்கோட்டையில் நீதித்துறையில் பணியாற்றிய மகராஜனுக்கும் மனம்கவர்ந்த நண்பராக விளங்கினார். இவர்களுடைய நட்பும் உரையாடலும் திருமலைக்கு இலக்கியத்தின்பால் ஆர்வத்தை ஊட்டியது. மகராஜன் வழியாக ரசிகமணி டி.கே.சி. அவர்களுடைய தொடர்பும் கிட்டியது. இதன் விளைவாக ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கலைஇலக்கியக்கழகம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி மாதந்தோறும் பென்னிங்க்டன் நூலகத்தில் இலக்கியக்கூட்டங்கள் நடத்தினார்.

திருமலை இந்த மூன்று ஆளுமைகளோடும் தொடர்ச்சியாக உரையாடியதன் விளைவாக காந்தியடிகளின் கருத்துகளை மேலும் தெளிவாகப் புரிந்துகொண்டார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தினர் என்று சொல்வதைவிட இந்தியர்களே தம்மை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்துவிட்டதாகவே காந்தியடிகள் கருதினார்.  சுமத்தப்பட்ட அடிமைத்தனத்தைவிட தாமே வலிய ஏற்றுக்கொண்ட அடிமை வாழ்வு கொடுமையிலும் கொடியதாகும். அடிமைத்தனத்தில் மூழ்கியிருப்பதில் கிட்டும் சுகத்தில் திளைத்துவிட்ட மனங்கள் மட்டுமே விடுதலையை விரும்புவதில்லை. அடிமைத்தனத்தின் சுகத்தைவிட சுதந்திரம் பெரிது என நினைப்பவர்கள் அதை அடைவதற்கு எல்லா வகைகளிலும் முயற்சி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நாம் எல்லோரும் இந்திய மக்களே என்னும் உணர்வை எழுப்புவதற்குக் கூட இந்த மண்ணில் முட்டி மோதவேண்டியிருக்கிறது.

 ஆட்சியாளர்களைப் பற்றியோ அடிமைத்தனத்தைப்பற்றியோ எவ்விதமான விழிப்புணவும் அற்று அறியாமையிலும் மடமையிலும் குருட்டுத்தனத்திலும் ஆழ்ந்து இருள் சூழ்ந்திருக்கும் நாட்டில் தம் அகிம்சைவழிப் போராட்டத்தால் ஒளியூட்ட வந்தவர் காந்தியடிகள். இந்தியர்களின் உள்ளத்தில் ஆழத்தில் உறைந்திருக்கும் நற்குணத்தைத் தட்டியெழுப்பி அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டி உரையாடும் வழியை அவரே கண்டறிந்தார்.  மெல்ல மெல்ல இந்த நாட்டை விடுதலைப்பாதையில் வழிநடத்திச் செல்லும் ஆற்றலுள்ளவர்களை உருவாக்கினார். அறம் வெல்லும் என்பதையும் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் என்பதையும் அவரே இந்த உலகத்துக்கு உணர்த்தினார்.

காந்தியக்கொள்கைகளை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் புத்தகாலயம் என்னும் பெயரில் ஒரு புத்தகக்கடையைத் தொடங்கி நடத்தினார். அந்தப் புத்தகக்கடை அவருடைய நட்புவட்டத்தை மேலும் விரிவாக்கியது. வாசிப்பு அவருடைய சிந்தனையை விரிவாக்கியது. ஒத்த சிந்தனையுள்ளவர்கள் பலர் ஒன்றாக இணைந்தனர். தினந்தோறும் இந்தியச் சுதந்திரப் போராட்டம் கடந்துவந்த பாதையைப்பற்றியும் தம் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்களைப்பற்றியுமான செய்திகளை ஒவ்வொரு நாளும் பகிர்ந்துகொண்டார்.

ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வர, 15.08.1947 அன்று நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு விடுதலையடைந்தது. உண்மையான மதம் என்பது கேள்வி கேட்காமலேயே நம்பவேண்டிய ஒரு அமைப்பல்ல என்றும் உண்மையின் மீதும் அகிம்சையின் மீதும் எதிர்காலத்தின் மீதும் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயர்தான் மதம் என்றும் காலமெல்லாம் எடுத்துரைத்து வந்தவரின் முன்னிலையிலேயே மதக்கலவரங்கள் வெடித்தன.  இறுதியில் அவர் கொல்லப்பட்டு உயிரிழந்தார்.

காந்தியடிகள் மறைந்தபோதும் நாட்டு மக்கள் தம்மிடையில் நிலவும் வேறுபாடுகளைக் களைந்து ஒத்த எண்ணமுடையவர்களாக சகோதர உணர்வோடும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையோடும் வாழ காந்தியடிகளின் சிந்தனைகள் மட்டுமே உதவும் என உறுதியாக நம்பிய ஆளுமைகள் தேசமெங்கும் இருந்தார்கள். எதிர்கால வளத்துக்காக அவர்கள் அங்கங்கே காந்தியச் சிந்தனைகளை மக்களிடையில் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.  தமிழகத்தில் அத்தகு முயற்சியில் ஈடுபட்டவர்களில் தலையாயவர் திருமலை.

காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு முன்னெடுத்துச் செல்லவேண்டிய செயல்களைப்பற்றி விரிவாகப் பேசுவதற்காக சேவாகிராமில் நேரு, இராஜேந்திர பிரசாத், ஜே.சி.குமரப்பா, வினோபா போன்றோர் கூடினார்கள். வழக்கமாக அனைவரும் நிறுவும் நினைவாலயம்போல எதையும் திட்டமிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். கட்டடம், சட்டதிட்டங்கள், நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என எதுவுமே இல்லாத ஓர் அமைப்பை ஏற்படுத்தவேண்டும் எனத் திட்டமிட்டனர். அப்போது வினோபாவின் எண்ணத்தில் உதித்த திட்டம்தான் சர்வோதயம்.

சர்வோதயம் என்பதற்கு அனைவருடைய நன்மைக்காகவும் உழைத்தல் என்பது பொருளாகும். தென்னாப்பிரிக்காவில் ஒரு ரயில்பயணத்தில் தனக்குப் படிப்பதற்குக் கிடைத்த ஒரு புத்தகத்தால் காந்தியடிகள் அகத்தூண்டுதல் பெற்றதையும்  கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் அந்தப் புத்தகத்தை அவரே குஜராத்தியில் சர்வோதயம் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்ததையும் நினைவுகூர்ந்த வினோபா புதிய அமைப்புக்கு அந்தப் பெயரையே சூட்டினார். அமைப்பில்லாத அந்த அமைப்பில் அவர்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவது என்றும் ஆண்டுக்கொரு முறை சந்தித்து தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது என்றும் முடிவெடுத்தார்கள்.

1951ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐதராபாத் நகருக்கு அருகில் சிவராம்பள்ளி என்னும் இடத்தில் மூன்றாவது சர்வோதய சம்மேளனத்தில் கலந்துகொள்வதற்காக தன் ஆசிரமத்திலிருந்து நடைப்பயணமாகவே வந்து சேர்ந்தார் வினோபா. அப்போது தெலுங்கானா பகுதி கலவரப்பகுதியாக இருந்தது. சம்மேளனம் முடிந்ததும் தெலுங்கானா பகுதியில் அமைதியைக் கொண்டுவரப் பாடுபடப்போவதாக அறிவித்துவிட்டு வினோபா தெலுங்கானாவை நோக்கி நடந்தார். போச்சம்பள்ளி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்கு வந்தார். அவர்கள் தம் துயரக்கதைகளை அவரிடம் பகிர்ந்துகொண்டார்கள். தமக்கு நிலம் சொந்தமாக இருந்தால் உழைத்து வாழ துணையாக இருக்கும் என்று சொல்லி கண்ணீர் விட்டார்கள். அவர்களுடைய கண்ணீர் அவரை வேதனையில் ஆழ்த்தியது. அன்றைய பிரார்த்தனைக்கூட்டத்தில் அவர் அந்த ஏழைகளின் கோரிக்கையை முன்வைத்தார். அப்போது ஒருவர் தன்னிச்சையாக அவர்களுக்கு நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாக அளிப்பதாகக் கூறினார். அப்படித்தான் நிலமிருப்பவர்களிடமிருந்து நிலங்களைப்பெற்று நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கும் பூமிதானத்திட்டம் உருவானது.

ஐந்தாண்டுகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாகப் பெற்ற நிலையில் 13.05.1956 அன்று தமிழகத்துக்கு வினோபா வருகை புரிந்தார். வினோபாவை காந்தியடிகளின் மறுவடிவமாகவே பார்த்த பலரும் அவருடன் சேர்ந்து உழைத்தனர். கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன், கெய்த்தான் போன்ற காந்தியர்கள் பலரும் அவருடன் தமிழகமெங்கும் நடைப்பயணம் சென்றனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்தபோது, அக்குழுவுடன் திருமலையும் இணைந்துகொண்டார். அந்த நடைப்பயணம் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள திருமலைக்கு பெரிதும் துணையாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சர்வோதய சம்மேளனத்திலும் திருமலை கலந்துகொண்டார். தமிழகப்பயணத்தில் வினோபாவுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட கிராமதானங்கள் கிடைத்தன.

ஓராண்டு கால நடைப்பயண அனுபவத்துக்குப் பிறகு மதுரையில் காந்தி நினைவு நிதி அமைப்பில் காந்தியத்தத்துவங்களை பொதுமக்களிடையில் பரப்புகிறவராக இணைந்தார். இளம்பருவத்திலேயே மாணவமாணவிகளுக்கு நல்வழிகளைப்பற்றிய தெளிவு இருந்தால் அவர்கள் இச்சமுதாயத்துக்கு நல்ல பங்களிப்பை வழங்கமுடியும் என்ற எண்ணத்தால் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று காந்தியத் தத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கத் தொடங்கினார். ஒவ்வொரு கல்லூரியையும் அணுகி காந்தியச் சிந்தனை வட்டத்தை உருவாக்கி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பல அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்து காந்தியக்கொள்கைகளையொட்டி உரைநிகழ்த்த வழிவகுத்தார். காந்திய நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இடையில் அவர் ஒரு பாலமாகச் செயல்பட்டார்.

மதுரைக்கு வெளியே மகராஜபுரம், பாண்டிச்சேரி, மதுராந்தகம் போன்ற நகரங்களிலும் மாணவர்களுக்காக பல கோடை முகாம்களை நடத்தி காந்தியடிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள வழிவகுத்தார். காந்தி நிறுவனத்துக்கும் கல்லூரிகளுக்கும் இடையில் நல்ல புரிதல் உருவானதைத் தொடர்ந்து, அந்த இணைப்பு வளையத்துக்குள் சேவை நிறுவனங்களையும் பள்ளிகளையும் கொண்டுவந்தார் திருமலை. பள்ளி மாணவர்கள் எளிமையாக காந்தியடிகளைப் பற்றிப் புரிந்துகொள்ளும் வகையில் திருமலையே நூல்களையும் கையேடுகளையும் எழுதி வழங்கினார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக காந்தி நூல்களை பாடத்திட்டமாக வகுத்து தேர்வுகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தன் மனத்துக்குப் பிடித்தவகையில் நிகழ்ச்சிகளை அமைப்பதற்குத் தேவையான செலவுக்காக பணம் தேடி அலைவது திருமலையின் வழக்கம். நன்கொடை இல்லாமல் எந்த நிகழ்ச்ச்சியையும் நடத்த முடியாது. ஆனால் எந்த நன்கொடையையும் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது. சிலர் பலமுறை அலையவைத்துவிட்டுக் கொடுப்பார்கள். சிலர் நாளை நாளை என்று நாள்கடத்திக்கொண்டே இருப்பார்களே தவிர பணம் கொடுக்கமாட்டார்கள். சிலர் வேண்டுமென்றே சிறுமை செய்து அனுப்பிவிடுவார்கள். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத திருமலை உற்சாகத்துடன் செயல்படுவார். ஒருமுறை ஒரு வழக்கறிஞரிடம் நன்கொடை கேட்டுச் சென்றார். முதலில் அவரிடம் முகம்கொடுத்துப் பேசவே தயங்கிய வழக்கறிஞர் அவரைச் சந்திப்பதையே தவிர்த்துவந்தார். அந்தத் தடையையெல்லாம் எப்படியோ கடந்து ஒருநாள் சந்தித்தபோதுஎன்ன விஷயம்?” என்று வேகமாகக் கேட்டார். ”காந்தி....” என்று திருமலை தொடங்கியதுமேகாந்தி கீந்தி எல்லாம் எனக்குப் பிடிக்காது, கிளம்புங்கள்என்று முகத்தில் அடித்ததுபோலச் சொல்லிவிட்டார். அப்போதும் புன்னகை மாறாத திருமலைஅப்படியென்றால் உங்களிடம்தான் எனக்கு நிறைய வேலை இருக்கிறதுஎன்று அவருக்கு அருகில் உட்கார்ந்து கனிவான குரலில் பேசத் தொடங்கிவிட்டார். அதைக் கண்டு நாணம் கொண்ட வழக்கறிஞர் மனம் மாறி நூறு ரூபாய் நன்கொடை கொடுத்து அனுப்பிவைத்தார்.

டி.கே.சி.யைச் சூழ்ந்திருந்த வட்டத்தொட்டியைப்போல மதுரையில் திருமலையைச் சுற்றியும் இளம் நண்பர்களாலான வட்டத்தொட்டியொன்று யாரும் திட்டமிடாமலேயே தானாகவே உருவாகி வளர்ந்தது. காந்தியத்தாலும் சர்வோதயத்தாலும் ஈர்க்கப்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஊழியர்கள், அரசியல்வாதிகள் என பலவகையினரும் திருமலையோடு எப்போதும் எதைப்பற்றியாவது விவாதித்தபடி காணப்பட்டார்கள். வெறுப்போடும் பகைமையோடும் அவரை நெருங்குகிறவர்களைக் கூட சிறிதுநேரம் உரையாடல் வழியாக மனம் மாறவைக்கும் ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்தது. அவருடைய புன்னகையும் கருணை தோய்ந்த கண்களும் எதிரில் இருப்பவர்களை வசப்படுத்தும் வலிமையுள்ளவை. அவரிடம் பழமையின் மீது பிடிவாதமான பற்றும் இருந்ததில்லை. புதுமையின் மீது தேவையற்ற வெறுப்பும் இருந்ததில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் ஒருபோதும் தன் சமநிலை குலைய அவர் இடமளித்ததில்லை.

1973இல் காந்தி அமைதி நிலையத்தில் பணிபுரிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார் திருமலை. மயிலாப்பூர் லஸ்சர்ச் அருகில் கிருஷ்ணசாமி ஐயர் சாலையில் அந்த அலுவலகம் இருந்தது. காந்திய நெறிகளைப் பரப்புவதற்காகவும்ம் கிராமப்பொருளாதாரம், அகிம்சை, மதநல்லிணக்கம், ஒற்றுமை பற்றி எடுத்துரைக்கவும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அவர் தொடர்ந்து சென்றபடி இருந்தார். தலைமையாசிரியர்கள் அவ்வளவு எளிதில் அவருக்கு உரைநிகழ்த்த அனுமதி கொடுப்பதில்லை. பெரும்பாலானோர் அவரைச் சிறுமைப்படுத்தி வெளியேற்றுவதிலேயே குறியாய் இருப்பது வழக்கம். ஆயினும் அந்த எதிர்ப்புக்குரல்களால் மனம் சோர்ந்துவிடாத அளவுக்கு உறுதியுள்ளவராக இருந்தார் திருமலை.  குறைந்தபட்சம் அரைமணி நேரம் கொடுத்தால் போதும்  என்று வாதாடி வெற்றிபெற்று மாணவர்களிடம் பேசிவிட்டே அவர் திரும்பி வருவார்.

அலுவலகம் இயங்கிவந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் எதிர்பாராத விதமாக காலி செய்யச் சொன்னபோது, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஒருகணம் குழம்பிவிட்டார். நல்ல வேளையாக, தக்கர்பாபா நிலயத்தின் பொறுப்பாளர் தன் வளாகத்திலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தார். காந்தி அமைதி நிலையம் அங்கே இடம்பெயர்ந்து மீண்டும்  ஊக்கத்துடன் இயங்கத் தொடங்கியது.

சமூகத்தில் எங்கெங்கும் பரவிவரும் சுரண்டலையும் பொறுப்பற்ற தன்மையையும் கண்டு திருமலை வருத்தத்தில் ஆழ்ந்தார். சமுதாய மேன்மை என்பது சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒழுங்கும் கட்டுப்பாடும் பொதுநல நாட்டமும் மாற்றாருக்கு உதவும் மனப்பான்மையும் நிறைந்தவனாக இருக்கும்போது மட்டுமே சாத்தியம் என்பது அவர் முடிவு. அக்குணங்களை இளம்பருவத்திலிருந்தே ஊட்டி வளர்த்தால் நல்லதொரு தலைமுறை தானாகவே உருவாகி நிலைக்கும் என அவர் கருதினார். பள்ளி மாணவர்களுக்கிடையில் காந்தியக் கருத்துகளைப் பரப்பினால் அது விரைவில் சாத்தியமாகும் என்று அவர் நம்பினார். அதனால் காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன் அஞ்சல் வழியாகவே ஒரு கல்வித்திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கினார். தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அத்திட்டத்தில் இணைந்தனர். ஆண்டுதோறும் அவர்களுக்குத் தேர்வு நடத்தி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

மாணவர் உலகத்துக்கு அப்பால் பொதுமக்களும் காந்தியடிகளின் கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் உலக இதய ஒலி,  காந்திஜியின் செய்தி ஆகிய பத்திரிகைகளை அவ்வப்போது தொடங்கி நடத்தினார். அவ்வப்போதான இடைவெளிகளுடன் இருபதாண்டு காலம் இதயஒலி வெளிவந்தது. பத்திரிகைகள் விற்றுப் பணமாகித் திரும்பி வருவது அரிது. பெரும்பாலும் நண்பர்கள் அளிக்கும் நன்கொடையே அப்பத்திரிகைகளுக்கான மூலதனம். இதய ஒலி இதழின் தலையங்கக் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவை மட்டுமே தொகுக்கப்பட்டு, பிற்காலத்தில் அமுத கலசம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. வினோபா பற்றியும் காந்தியடிகள் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்கள் முக்கியமானவை.

மாணவர்களுக்கான அஞ்சல்வழிக் கல்விக்காக தமிழில் காந்தியின் வாழ்வும் வாக்கும் என்னும் பத்திரிகையையும் ஆங்கிலத்தில் Joy of Living என்னும் பத்திரிகையையும் தொடங்கி நடத்தி வந்தார்.  நான்கு அல்லது  எட்டு பக்கங்கள் மட்டுமே கொண்டதாக இப்பத்திரிகைகள் அமைந்திருந்தன. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தொடர்பான பல கட்டுரைகள் இந்த இதழில் வெளிவந்தன. வாழ்க்கை என்பது இறைவன் மனிதர்களுக்கு அருளிய மிகப்பெரிய கொடை என்று கருதினார் திருமலை. அந்தக் கொடை மனிதர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடியது. மகிழ்ச்சியான வாழ்க்கையே இயற்கையான வாழ்க்கை. மகிழ்ச்சி என்பது அடையத்தக்க இலக்கல்ல. அது மலர்போல, காற்றுபோல, வெளிச்சம்போல இயற்கையாகவே அரும்பி மலரும் உணர்வு. அதற்குத் தோல்வி என்பதே கிடையாது. மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம்.

மனிதர்களுடைய மகிழ்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இறைவன் படைத்திருக்கிறான். அப்படிப்பட்ட சூழலில் மகிழ்ச்சியிலிருந்து விலகும்போது மனிதன் இறைவனிடமிருந்து விலகிவிடுகிறான். இந்த உலகில் அன்பு செய்யவும் பிறரை மன்னிக்கவும் தன்னலமற்றிருக்கவும் மக்களுக்கு சேவையாற்றவும் தீமைகளை எதிர்த்துப் போராடவும் மகிழ்ச்சியாக வாழ்பவர்களால் மட்டுமே முடியும். இப்படி, நவீன மனிதர்களுக்கு ஏற்ற தத்துவத்தை ஒவ்வொரு இதழிலும் திருமலை கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். தியாகத்தை வலியுறுத்தும் காந்தியடிகளின் பார்வையையே வேறு கோணத்தில் திருமலை தம் பத்திரிகைகளில் விரிவாகப் பேசினார் என்று சொல்லலாம். உண்மையோடும் அன்போடும் வாழ்பவர்களுக்கு வசப்படக்கூடிய மகிழ்ச்சியையே அவர் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டினார். அவர் கட்டுரைகள் வளரும் இந்திய இளம்தலைமுறையினருக்கு வழிகாட்டக்கூடிய நவீன மதிப்பீடுகளை உருவாக்கியளித்தன. பிற்காலத்தில் மதுரை பல்கலைக்கழகம், காந்தியச்சிந்தனை என்னும் புதிய துறையை உருவாக்கி அஞ்சல்வழிக்கல்வியைத் தொடங்குவதற்கு முன்னால் நிகழ்ந்த முக்கியமான முன்னோடி முயற்சியென திருமலையின் முயற்சிகளைக் குறிப்பிடலாம்.

காந்தியடிகளின் அகிம்சை வழி மட்டுமே மனிதகுல வாழ்க்கைக்கு உயர்வைத் தரும் என்பதில் திருமலை  அசைக்கமுடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தார்.  சொந்தத் துயரங்களையும் இழப்புகளையும் பொருட்படுத்தாமல், காந்தியச் சிந்தனைகளைப் பரப்புவதையே தன் வாழ்வின் ஒரே நோக்கமாகக் கருதி வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். மலர்ந்த முகத்தோடும் ஆழ்ந்த நம்பிக்கையோடும் அவர் தம் கடமையை ஆற்றினார். ஒவ்வொரு நாளும் அவர் ஓய்வின்றி தம் உரைகளாலும் விவாதங்களாலும் தொடர்ச்சியாக  ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அகத்தூண்டுதலை அளித்தபடி இருந்தார்.  அவருடைய அர்ப்பணிப்புணர்வு வணக்கத்துக்குரியது.

 

(சர்வோதயம் மலர்கிறது – அக்டோபர் 2021 இதழில் வெளிவந்தது.)