Home

Saturday 25 March 2023

பறக்கவைக்கும் விசை

 

ஒரு கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு நான் ஒரே ஒரு அளவுகோலைத்தான் வைத்திருக்கிறேன். என் நெஞ்சில் ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது. அது எப்போதும் தன் விழிகளால் உயர்ந்தோங்கிய மரக்கிளைகளையும் வான்வெளியையும்  பார்த்தபடி இருக்கிறது. தரையிலிருந்து எம்பியெழுந்து சிறகுகளை விரித்து விண்ணை நோக்கிப் பறப்பதற்கான கணத்துக்குக் காத்திருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு புறவிசை வேண்டும். அந்த விசை மட்டும் கிடைத்துவிட்டால், அக்கணமே அது பறந்து விண்ணில் வட்டமிடத் தொடங்கிவிடும். எனக்குள் இருக்கும் பறவையை விண்ணை நோக்கிச் செலுத்தும் விசையாக நான் கவிதையைக் கருதுகிறேன். அதற்காகவே நான் கவிதைகளை நாடி வருகிறேன். நான் விரும்பும் விசையை வழங்குகிற கவிதையை  மிகவும் விரும்புகிறேன்.

 என் பறவைக்கு செல்லப்பெயரின் அழைப்புகளோ, கொஞ்சலோ, அரிசிமணிகளோ தேவையில்லை. பறக்கவைக்கும் விசையைத்தான் அது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கவிதைகளை என் விருப்பப்பட்டியலில் உடனடியாக இணைத்துக்கொள்கிறேன். 

அரைநூற்றாண்டுக்கும் மேலாக கவிதைத்துறையில் இயங்கிக்கொண்டிருப்பவர் கவிஞர் கல்யாண்ஜி. தனித்துவம் வாய்ந்த தம் கவிதைகள் வழியாக கவிதைத்துறையில் தன்னை ஒரு முன்னணி ஆளுமையாக நிறுவிக்கொண்டவர். முதல் தொகுதியான புலரி தொடங்கி  இப்போது வெளிவந்திருக்கும் வெயிலில் பறக்கும் வெயில் வரைக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் புதுப்புது எடுத்துரைப்புமுறைகளை முயற்சி செய்துகொண்டே இருப்பவர். இன்று அவருடைய மொத்தக் கவிதைகளையும் ஒருங்கே சேர்த்து படிக்கும்போது, திறமை வாய்ந்த ஒரு புகைப்படக்காரன் கருப்புவெள்ளை  படச்சுருள் வழியாக எடுத்த படங்களையும் வண்ணச்சுருள் வழியாக எடுத்த படங்களையும் டிஜிட்டல் தட்டு வழியாக எடுத்த படங்களையும் ஒருசேரத் தொகுத்து வைத்துக்கொண்டு பார்ப்பதுபோல உள்ளது. எல்லா வகையான எடுத்துரைப்பு முறைகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அழகான  சாதனைக்கவிதைகளை கல்யாண்ஜி எழுதியுள்ளார். அவருடைய கற்பனையும் கனவும் காட்சிச்சித்தரிப்பும் அவருடைய கவிதைகளுக்கு ஒருவித சிற்பத்தன்மையை வழங்கிவிடுகின்றன. சொற்களின் ஒருமையால் உருவாகி நிற்கிற சிற்பத்தைப் பார்க்கப்பார்க்க நமக்குள் பலநூறு சிற்பங்கள் உயிர்கொண்டு எழுகின்றன.

 

தான் ஒருமுறை குச்சி ஐஸைச்

சப்பிக்கொள்கிறார்

மடியில் இருக்கும் பேரனுக்கு

ருசிக்கக் கொடுக்கிறார்

பேரன் அதைத் தாத்தாவின் உதட்டுக்கு

நகர்த்துகிறான்

சிரிக்கிற தாத்தா வாய் அகலத் திறக்கிறது

இப்போது பேரன் மடியில்

தாத்தா இருக்கிறார்

 

சூரியோதயம், சூரிய அஸ்தமனம் போல பேரன் தன் மடியில் தாத்தாவைத் தாங்கியிருக்கும் காட்சியைப் பார்த்ததுமே மனம் பரவசத்தில் நிறைந்துவிடுகிறது. எந்த விளக்கமும் இக்கவிதைக்குத் தேவையில்லை. கவித்துவம் நிறைந்த இப்படிப்பட்ட கணங்களை அசைபோட்டபடி இருப்பதே பேரின்பம்.

 

உவன் எருமைச் சாணத்தைக்

கடந்து வந்தேன் என்கிறான்

அவன் எருமையைக் கடந்துவந்தேன் என்கிறான்

இவன் எருமை முதுகுப்பறவையைக்

கடந்து வந்தேன் என்கிறான்

சொற்ப வித்தியாசம்தான்

ஆனால் பெரிய வித்தியாசம்

 

இது இன்னொரு கவிதை. இதற்கும் விளக்கமெதுவும் தேவையில்லை. ஆனால் படிக்கும் கணத்திலேயே புன்னகைக்கவைக்கிறது. நாம் இப்படி கவனித்ததில்லையே என்று கூச்சமெழுகிறது. மூவரும் ஒரே தருணத்தை அல்லது ஒரே அனுபவத்தைத்தான் சொல்லாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் விசித்திரமான வகையில் மூன்று வெவ்வேறு கூற்றுகள் முன்வைக்கப்படுகின்றன. வானவில் ஒற்றை ஒளிக்கதிரை ஏழுவண்ணக் கதிர்களின் தொகுப்பாக மாற்றிக் காட்டுவதுபோல ஒரு அனுபவம் பலவித கூற்றுகளின் தொகுப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

ஒருநாள் பூங்காவில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு ஒரு சிமெண்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என் கண் முன்னால் ஒருவர் வேகவேகமாக கைவீசி நடந்து போனார். அப்போதுதான் பூங்காவின் முகப்புக்கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த ஒருவர் ‘சிவக்குமார்’ என்று பெயரிட்டு குரலையுயர்த்தி அழைத்தார். அக்கம்பக்கத்தில் வேறு யாரும் இல்லாததால் நடைப்பயிற்சியில் இருப்பவரைத்தான் அவர் கூப்பிடுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் நடந்துகொண்டிருந்தவர் திரும்பிப் பார்க்கவில்லை.  எனினும் தன் முயற்சியில் பின்வாங்காத நண்பர் ‘ஜே.இ.சார்’ என்று சொல்லி அழைத்தபடி வேகமாக அடியெடுத்து வைத்து நடந்துகொண்டே இருந்தார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. உடனே அவர் ‘செக்ரட்டரி சார்’ என்று மற்றொரு விதமாக அழைத்தார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. நல்லவேளையாக, அதற்குள் வேகவேகமாக நடந்து சென்று அவருடைய தோளைத் தொட்டு நிறுத்திவிட்டார். மூன்றுவிதமான அழைப்பு முறைகளை அவர் பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் ஒருவரைக் குறித்த விளியே. ஏகனாகிய இறைவனை ஆயிரமாயிரம் விளிகளால் குறிப்பிடும் உலகில் இப்படிப்பட்ட அழைப்புகளில் விசித்திரமே இல்லை. ஆனால் ஒருவரைக் குறித்த பல்வேறு விளிகளை தன்னிச்சையாக உருவாக்கி வெளிப்படுத்துவது விசித்திரமானது. அப்படி ஒரு விசித்திரமான  சாத்தியத்துக்கு இடமளிக்கும் பொற்கணத்தை கல்யாண்ஜியின் கவிதை கண்டடைந்திருக்கிறது  .

 

காம்பில் இருந்த பூவைப் பறித்த சின்னப்பிள்ளை

திட்டிக்கொண்டே ஓடி வருபவருக்குப் பயந்து

எட்டின செடியின் இலைகளுக்குள்

போகிற அவசரத்தில் புகுத்திவைத்து ஓடியது

திரும்பிப் பாராமல்

இதுவரை காணாத அழகுடன்

இதுவரை பூக்காத ஒரு பூ

உண்டாக்கியிருந்தது

இதுவரை இல்லாத உலகத்தை

 

கல்யாண்ஜி கண்டெடுத்திருக்கும் இன்னொரு பொற்கணம் இக்கவிதை. ஒரு சூழலில் தற்செயலான நிகழும் ஒரு நிகழ்ச்சி, மந்திரத்தால் மாயத்தை நிகழ்த்துவதுபோல எதிர்பாராத ஒரு அழகியல்மாற்றத்தை உருவாக்கிவிடுகிறது.

 

மகராசி போல இருந்தாள்

கண்ணாடிப் பெட்டிக்குள்

கடைசி வரி வரை

அடித்தல் திருத்தல் அற்று எழுதிய

புன்னகை முகத்தில்

நிறையப் பள்ளத்தாக்குகளில்

சிகரங்களில்

இறங்கி ஏறியிருந்தன

புறங்கை தோலடி நரம்புகள்

தலைமாட்டில் ஏற்றியிருந்த

நெடுவிளக்குச் சுடருக்கு யாரோ

நெய்வார்த்து நிமிர்ந்தார்கள்

நான் பார்த்தேன்

நிறை நாழி நெல்கூம்பில்

ஒரே ஒரு தானியத்தில்

அவள் முளைவிட்டிருந்ததை

 

மரணமடைந்தவரின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு வீட்டு முற்றத்தை அப்படியே கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது கல்யாண்ஜியின் கவிதை. ஒரு புகைப்படக்காரர் தன் கருவியை தொலைவுக்காட்சி நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அருகாமைக்காட்சியாக மாற்றி ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உறையவைத்து நிறுத்துவதுபோல, கல்யாண்ஜி தன் சொல்லாற்றலால் இறந்துபோனவரின் தலைமாட்டில் காட்சியை முதலில் நிறுத்துகிறார். பிறகு, இன்னும் துல்லியமாக அங்கே நாழியில் நிறைத்துவைக்கப்பட்ட நெல்மணிகளின் பக்கம் நகர்ந்து,  முளைவிட்ட ஏதோ ஒரு தானியத்தைக் காட்டிவிட்டு நின்றுவிடுகிறது. அது வெறும் முளை அல்ல, இறந்துபோன மகராசி ஈண்டும் உயிர்பெற்று வீற்றிருக்கும் இடம் என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். பின்தொடர்ந்து வரும் ஒரு வாசகனை சிலிர்க்கவைக்கும் தருணம் அது.

நம்மோடு வாழ்ந்து இறந்தவர்கள் நம்மைவிட்டு எங்கும் சென்றுவிடுவதில்லை. வேறொரு வடிவத்தில் நம்மைச் சுற்றியே நிறைந்திருப்பார்கள் என்பது தொன்றுதொட்டு நம்மிடையில் நிலவும் ஒரு நம்பிக்கை. இறந்துவிட்ட தன் சகோதரியின் உடல் புதைத்த இடத்தில் வளர்ந்து நின்றிருக்கும் மரத்தடியில் காதலனைப் பார்க்க நின்றிருக்கும் ஒரு பெண் தன் சகோதரி பார்க்கிறாள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவசரமாக விலகி அவனோடு தனியிடம் நாடிச் செல்லும் காட்சியொன்று சங்ககாலப் பாட்டில் இடம்பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தானியத்தில் முளைவிட்டிருக்கும் மகராசியை கல்யாண்ஜி சித்தரித்திருக்கிறார்.

 

கூழாங்கல்லைக் குனிந்து எடுத்தேன்

ஒரு சீரான உருளைக்கிழங்கு போல

ஒரு பழுப்புநிற முட்டை போன்றது.

மிகச் சற்று நேரம்

ஒரு பறவைக்கூட்டில்

ஒரு உருளைக்கிழங்கு வயலில் இருந்தேன்

எடுத்த இடத்தில் கூழாங்கல்லை வைத்தேன்

ஆறு மறுபடியும் ஓடத் துவங்கியிருந்தது

 

கணநேரத்துக் காட்சிமயக்கம் உருவாக்கும் சிலிர்ப்பை இக்கவிதையில் உணரமுடியும். எப்போதோ ஓர் அபூர்வக்கணத்தில் முகில்வெளியில் பாய்ந்துசெல்லும் ஒளிக்கதிர் வானவில்லாக தோற்றம் காட்டுவதுபோல ஒரு புள்ளியில் கூழாங்கல், வயல், ஆறு மூன்றையும் இணைத்து அபூர்வமானதொரு வானவில்லைக் காட்டுகிறார் கல்யாண்ஜி.

 

மிகப்பழைய படம் அது

மூன்று பேரில் ஒருவனாக நிற்கிறேன்

பின்னணியில் மறுபடியும் ஒருபோதும் வாய்க்காத

ஒரு சுற்றுலா அருவி

எனக்கு நரைத்துவிட்டது

மற்ற இருவரையும் சமீபத்தில் பார்க்கவே இல்லை

அவர்களை வயதானவர்களாக

வரைந்துகொள்ள முடிகிறது

அருவி மட்டும் அப்படியே விழுந்தபடி இருக்கிறது

முப்பது வருடங்களுக்கு முந்திய

உயரத்தில் இருந்து

 

மானுடன் தன் வடிவழகும் ஆற்றலும் குறைந்துவரும் தோறும் அவன் எண்ணங்களில் இயற்கையின் அழிவின்மையும் இளமையும் தானாகவே தோன்றி  அதிசயமாக உணரவைக்கின்றன. இளங்கோவடிகள் இன்றில்லை. ஆனால் இளங்கோ தன் சிலப்பதிகாரத்தில் தீட்டி வைத்த காவிரி நதியும் காவிரிக்கரையோரமும் இன்றும் அப்படியே உள்ளது. காலவெள்ளத்தில் நிலைத்திருப்பதையும் மறைவதையும் ஏதோ ஒரு கோணத்தில் கவிதைகள்  காலமெல்லாம் உணர்த்தியபடியேதான் இருக்கின்றன. அந்தத் தொடர்ச்சியின் ஒரு சங்கிலிக்கண்ணியை கல்யாண்ஜியின் கவிதையில் பார்க்கமுடிகிறது. எத்தனைதான் எழுதி எழுதி நிறைத்தாலும், எழுதித் தீராத வியப்பாகவே இருக்கிறது இயற்கையின் இளமை.

 

வெயிலில் தட்டான்கள் பறக்கின்றன

என்பது முதல் வரி

தட்டான்போல் வெயில் பறக்கிறது என்று

அடுத்த வரியை எழுதலாம்

கொஞ்சம் பழைய பாணி

வெயிலில் வெயில் பறக்கிறது

என்று முடித்தாயிற்று

 

கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு காட்சிக்குள் இன்னொரு காட்சியைப் பார்த்துவிடும் கண்கள் கவிஞர்களுக்கு மட்டுமே உண்டு. தொடர்ச்சியாக கவிதைகளின் கூட்டுக்குள்ளேயே மயங்கிக் கிடக்கும் வாசகனுக்கும் அந்த வரம் கிடைத்துவிடுகிறது. கோடை வெயில். கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு வெயில் பிரகாசமானதாக இருக்கிறது. அந்த வெயிலில் எங்கிருந்தோ ஒரு தட்டான் பறந்து வருகிறது. சின்னஞ்சிறு கண்ணாடித் துண்டு போல இருக்கும் தட்டானின் உடல் மீது வெயில் பட்டு மின்னுகிறது. அக்கணத்தில் அது ஒரு ஒளித்துண்டு போல காட்சியளிக்கிறது. அந்த ஒளித்துண்டின் காரணமாக அது ஒரு வெயில் கீற்றாக தோற்றமளிக்கிறது. ஒரு கோணத்தில் வெயில் வெயிலில் பறப்பதுபோல அந்தக் காட்சி அமைந்துவிடுகிறது.

குட்டி இளவரசன் நாவலில் முதல் காட்சி நினைவுக்கு வருகிறது. பாலைவனத்தில் சிக்கிக்கொள்ளும் விமான ஓட்டி அக்காட்சியில் தன் சிறுவயது அனுபவத்தை அசைபோடுகிறான். தொடக்கத்தில் அவன் ஓவியம் தீட்டுவதில்தான் விருப்பமுள்ளவனாகவே இருந்தான். ஆனால் அவன் வரைந்த ஓவியத்தில் அவன் உத்தேசித்த உருவத்தை அவர்களால் பார்க்கமுடியவில்லை. அதனால் அவனுக்கு ஓவியம் வராது என அவர்களாகவே முடிவு கட்டிவிடுகிறார்கள். அறிவியல் படி, நிலவியல் படி என்று வேறு திசைகளில் திருப்பிவிடுகிறார்கள். பாலைவனத்தில் அவன் சந்திக்கும் குட்டி இளவரசன் விமான ஓட்டி வரைந்து காட்டிய ஓவியங்களைப் பார்த்தமாத்திரத்திலேயே, அந்த உருவங்களைச் சரியாகப் புரிந்துகொள்கிறான். கண்ணால் பார்ப்பவர்களைவிட இதயத்தால் பார்ப்பவன் எளிதாக ஒன்றைக் கண்டடைகிறான். 

ஓவியம், சிற்பம், இசை, கவிதை போன்ற கலை சார்ந்த ஆக்கங்களை அணுகுவதற்கு இதயத்தால் பார்க்கும் ஆற்றல் அவசியமாகிறது.  அத்தகு பார்வை கொண்டவர்களுக்கு கல்யாண்ஜியின் கவிதைகள் விருந்தாக அமையும்.

 

(வெயிலில் பறக்கும் வெயில். கவிதைகள். கல்யாண்ஜி. சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை -600083. விலை.ரூ.75)

(புக் டே – இணையதளம் – 21.03.2023)