Home

Sunday 20 October 2024

ஆற்றாமையும் பொறாமையும்

 

என் நண்பர் பழமொழிகளின் நேசர். பழமொழிகளையெல்லாம் தேடித்தேடி படிப்பவர். நெருக்கமாகப் பழகுகிறவர்களிடம், அவர்களுக்குத் தெரிந்த பழமொழிகளைச் சொல்லும்படி கேட்டுக்கொள்வார். அவர்கள் சொல்வதை உடனடியாகத் தன் குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்வார். எபோதாவது என்னைச் சந்திக்க வரும்போது அதுவரை கேட்டறிந்த பழமொழிகளை முன்வைத்து உரையாடுவார். சிற்சில சமயங்களில் எங்கள் உரையாடல்கள் பழமொழிகளுக்குக் கூடுதலான விளக்கங்களைத் தேடிச் செல்லும் பயணமாகவும் அமைந்துவிடும்.

”நீங்கள் உ.வே.சா. காலத்திலோ அல்லது கி.வா.ஜ. காலத்திலோ வாழ்ந்திருக்கவேண்டிய ஆள். தவறுதலாக இந்தக் காலத்தில் பிறந்துவிட்டீர்கள்” என்று நான் அவரிடம் அடிக்கடி சொல்வேன். அவர்களுடைய காலம்தான் பழமொழிகளின் பொற்காலம். பழமொழியோடு தொடங்காத உரையாடலோ அல்லது முடிக்காத உரையாடலோ அந்தக் காலத்தில் இருந்ததில்லை. மக்கள் வாழ்க்கையில் அதற்கொரு தேவை இருந்தது. ஏடுகளில் எழுதப்பட்ட இலக்கியப்பிரதிகள் கொஞ்சம்கொஞ்சமாக புத்தகப்பிரதிகளாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடோடிப்பாடல்களையும் கதைகளையும் பழமொழிகளையும் அச்சுப் பிரதிகளாக மாற்ற வேண்டிய ஒரு தேவை இருந்தது. இன்று உரையாடல்களும் குறைந்துவிட்டன. பழமொழிகளும் மங்கிக்கொண்டு வருகின்றன.

ஒருநாள் எங்கள் சந்திப்பின்போது நண்பர் “ஊருலேர்ந்து வந்த எங்க மாமியார் நேத்து ராத்திரி புள்ளைங்களுக்கு கதை சொல்லும்போது புதுசா ஒரு பழமொழியை சொன்னாங்க. கேக்கறதுக்கு அற்புதமா இருந்தது” என்று ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார்.

”என்ன பழமொழி? அதைச் சொல்லுங்க முதல்ல” என்றேன். அவர் “அன்னாடன் சோத்துக்கு ஆத்தாமை எதுக்கு? தின்னாலும் கேடு. தின்னாட்டாலும் கேடு” என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார். எனக்கு ஒருபுறம் திகைப்பாகவும் மறுபுறம் பரவசமாகவும் இருந்தது. நான் அதுவரை அப்படி ஒரு பழமொழியைக் கேட்டதில்லை. படித்ததும் இல்லை. அதனால் சற்றே யோசனையில் மூழ்கினேன். ஒன்றும் பிடிபடவில்லை.

“மாமியார் சொன்ன கதையை ஒருமுறை திருப்பிச் சொன்னீங்கன்னா, அந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம்னு புரிஞ்சிக்கலாம்” என்று நண்பரிடம் சொன்னேன். நண்பர் உற்சாகத்தோடு மாமியார் சொன்ன நாட்டுப்புறக்கதையை சுருக்கமாகச் சொன்னார்.

“ஒரு ஊருல ஒரு பணக்காரரு இருந்தாராம். அவருக்கு உலகத்துல இருக்கிற எல்லா வியாதிகளும் இருந்துதாம். வீட்டுல அவருக்கு எதையெல்லாம் சாப்புடலாம், எதையெல்லாம் சாப்புடக்கூடாதுன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடாம். தெனமும் மூனு வேளையும் கேழ்வரகு அடை, கேழ்வரகுக்கூழ், கேழ்வரகுக்களி மாதிரியான சாப்பாடுதான் அவருக்குத் தருவாங்களாம்”

“சர்க்கரை வியாதியா?”

”அந்த மாதிரி என்னமோ ஒன்னுன்னு வச்சிக்குங்க. ஒருநாள் காலையில அவரு வீட்டுக்கு ஒரு விறகுவெட்டி வந்து தோட்டத்துல விறகு வெட்டினாராம். காலையிலிருந்து மதியம் வரைக்கும் சரியான வேலையாம். வெட்டிமுடிச்ச விறகுங்களையெல்லாம் கொண்டுபோய் ஓரமா அடுக்கிவச்சாராம். சாப்பாட்டு வேளை வந்ததும் கையை கால கழுவிகிட்டு அந்த விறகுவெட்டி சாப்புடறதுக்காக வைக்கோல் போர் பக்கமா ஒதுங்கி உக்காந்தாராம். பணக்காரரும் சாப்புடறதுக்காக வீட்டுக்குள்ள போனாராம்.”

“சரி”

“பணக்காரருக்கு சொம்பு நிறைய கேழ்வரகுக்கூழுதான் சாப்பாடு. ரெண்டே நிமிஷத்துல குடிச்சிட்டு போன வேகத்துல திரும்பி வந்துட்டாராம் அவரு. அப்ப தூக்கு வாளியை தெறந்து விறகுவெட்டி சாப்பிட்டிட்டிருந்தாராம். மீன்குழம்பு வாசனை அக்கம்பக்கம்லாம் அடிக்குதாம். கைக்கெட்டுற தூரத்துல நாலஞ்சி கிண்ணம்ங்க. எல்லாத்துலயும் வகைவகையா பொரியல். தயிரு. ரசம்னு இருந்துதாம். பணக்காரருக்கு  எல்லாத்தயும் பார்த்துப் பார்த்து மனசுல எரிச்சலா இருந்துதாம்.”

“அப்புறம்?”

“உடனே வீட்டுக்குள்ள திரும்பி வந்து எரிச்சலையும் கசப்பையும் மனைவிகிட்ட கொட்டனாராம். தினம் தினம் உழைச்சி சம்பாதிச்சாதான் சாப்பாடுங்கற நிலையில இருக்கறவன் அந்த விறகுவெட்டி. அவன்கூட எப்படியெல்லாம் விதவிதமா சாப்புடறான், வந்து பாரு. எல்லா வசதியும் இருக்குது எனக்கு. ஆனா என் சாப்பாடு இப்படித்தான்னு ஏன் விதிச்சிருக்கோன்னு அலுத்துக்கனாராம்.”

“பொண்டாட்டி என்ன சொன்னாங்களாம்?”

“அவுங்க அவருகிட்ட பக்குவமா பேசிப் பேசி அவரை அமைதிப்படுத்தனாங்களாம். அவரு சாப்புடறமாதிரியெல்லாம் நீங்களும் சாப்புட ஆரம்பிச்சாலும் சரி, வழக்கமா நீங்க சாப்புடற சாப்பாடு மேல கோபப்பட்டுகினு சாப்பிடாவிட்டாலும் சரி, நஷ்டம் உங்களுக்குத்தான். வேற யாருக்கும் இல்லை, அதைப் புரிஞ்சிக்குங்கன்னு  சொல்லிட்டு எழுந்துட்டு போயிட்டாங்களாம். அதான் கதை”

நான் அந்தக் கதையையும் அவர் முதலில் சொன்ன பழமொழியையும் ஒப்பிட்டு நினைத்துக்கொண்டேன். விறகுவெட்டி அன்றாடம் காய்ச்சி. அன்றன்று உழைத்துப் பொருளீட்டி, அந்தப் பொருளில் சாப்பிடும் வாழ்க்கையைக் கொண்டவன். ஒருநாள் சாப்பாடு இருக்கலாம். இன்னொருநாள் சாப்பாடு இல்லாமல் போகலாம்.  அவன் சாப்பிடுவதை நினைத்து பணக்காரர் ஆற்றாமை கொள்ளத் தேவையில்லை. உண்மையான நிலைமையை ஆழமாகப் புரிந்துகொண்டால் போதும். எதன் மீதும் வருத்தம்கொள்ள வேண்டிய தேவையே இல்லை. இப்படி ஏதேதோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லி நான் அவருக்கு அதை விளக்க முனைந்தேன். அப்போதும் அவருக்குள் ஏதோ ஒரு பகுதி ஐயத்திலேயே மூழ்கியிருந்தது. திடீரென “அந்தப் பணக்காரருக்கு இருந்தது ஆற்றாமையா, பொறாமையா?” என்று கேட்டார்.

நான் சிறிதுநேர யோசனைக்குப் பிறகு “எல்லாத்துக்கும் வாய்ப்பிருக்குது.   அந்த நேரம் அப்படிப்பட்ட நேரம். பசியில பத்தும் பறந்துபோகும்னு சொல்வாங்க, இல்லையா? அந்த மாதிரியான நேரம் அது. ஒருவேளை, அந்தப் பணக்காரர் தன்னைக் கட்டுப்படுத்திக்கற மனப்போக்கு இல்லாத ஆளா இருந்தா, அவருக்கு வரக்கூடியது பொறாமையாத்தான் இருக்கும். அப்படி இல்லாம, தன்னைக் கட்டுப்படுத்திக்கிற ஆளா இருந்தா, அவருக்கு வரக்கூடியது ஆற்றாமையா இருக்கும்” என்றேன்.

ஒரு கணத்துக்குப் பிறகு “இந்த ரெண்டத் தவிர, வேற எந்தவிதமான எண்ணமும் வருவதற்கான வாய்ப்பு இல்லையா?” என்று கேட்டார் நண்பர். நானும் சில கணங்கள் யோசனையில் மூழ்கினேன். “பார்த்தும் பார்க்காததுபோல கடந்துபோகிற ஒரு பெருந்தன்மைக்கும் இடம் இருக்குது. அது அவன் வழி, இது என் வழின்னு நடக்கக்கூடிய போக்கும் நல்லவனையும் கெட்டவனையு ஒன்னா நெனைச்சி பார்க்கிற மனமும் இருக்கிறவங்களுக்கு அது சாத்தியம்” என்றேன்.

“ஆற்றாமை, பொறாமை மாதிரி அதுக்கு எதுவும் பேரு இல்லையா?”

“இருக்கலாம். கொஞ்சம் யோசிக்கணும். தற்சமயத்துக்கு பெருந்தன்மைன்னு வச்சிக்கலாம்”   

“நல்ல பேருதான்” என்று புன்னகைத்தார் நண்பர். “முப்பட்டைக்கண்ணாடியின் மூனு பக்கங்கள் மாதிரி மூனு பேர சொல்லிட்டீங்க. ஆனா எனக்கு எல்லாமே ஒன்னுமாதிரிதான் தோணுது. இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னால் பிரிச்சி புரிஞ்சிக்க வசதியா இருக்கும்” என்றார்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு “சரி, இந்தப் பிரச்சினையே ஒரு கதையிலதான ஆரம்பிச்சது. அதனால நம்ம கதைகளை ஆதாரமா வச்சே இந்தப் பிரச்சினையைப் பத்தி பேசலாம். இந்த மூனு விதமான பார்வைகளுக்கும் மூனு விதமான சிறுகதைகள் இருக்குது. அதை ஒன்னொன்னா சொல்றேன். அப்ப புரிஞ்சிக்க வாய்ப்பிருக்குது” என்றேன். கதைகள் என்றதும் “சொல்லுங்க, சொல்லுங்க” என்று  ஆர்வத்தோடு என் பக்கம் திரும்பினார் நண்பர்.

“அந்தக் காலத்துல ஆற்றாமைங்கற தலைப்புலயே எழுத்தாளர் கு.ப.ரா. ஒரு சிறுகதை எழுதியிருக்காரு. சாவித்திரின்னு ஒரு பொண்ணு. கல்யாணம் ஆனவள்தான். புருஷன் மிலிட்டரி சர்வீஸ்ல இருக்கறவன்.  சாந்திமுகூர்த்தம் முடிஞ்ச கையோடு கெளம்பிப் போனவன், ரெண்டு வருஷமா ஊர்ப்பக்கம் வரவே இல்லை. சாவித்திரியும் அம்மா வீட்டோடு முடங்கியிருக்கா. புருஷன் நெனப்புலயே கற்பனையில மிதந்துகிட்டிருக்கா. ஒரு மாதிரி  சுயபச்சாதாபத்துலயும் எரிச்சல்லயும்  புழுங்கிட்டிருக்கா”

”புராணத்துல வரக்கூடிய சாவித்திரி புருஷனை உயிரோடு மீட்டுவர்ரதுக்காக எமனோடு போராடினவள். இந்தக் கதையில வரக்கூடிய சாவித்திரி புருஷனுக்காகக் காத்திட்டிருக்கவள். நல்லாதான் இருக்குது. மேல சொல்லுங்க”

“சாவித்திரி வீட்டுக்குப் பக்கத்துலயே இன்னொரு போர்ஷன்ல கமலா, ராகவன்னு ஒரு புதுமணத்தம்பதி புதுசா குடுத்தனம் வந்திருக்காங்க. அந்தக் கமலா பொண்ணு சாவித்திரியோடு அக்கா அக்கான்னு அழகா பேசி பாசமா இருக்கா. அவளால அந்தப் பாசத்தை முழுசா ஏத்துக்க முடியலை. எதிர்வினையும் செய்யமுடியலை. அதுக்குப் பதிலா புது புருஷனோடு தனக்குக் கிடைக்காத வாய்ப்புகள்லாம் அவளுக்கு வாய்க்குதேங்கற மாதிரியான ஆதங்கம்தான் இருக்குது. அவளால அதை உதறவே முடியலை.”

“த்ச்.த்ச். அவ நிலைமை ரொம்ப பாவம்தான்”

“ஒருநாள் ராத்திரி நேரம். புதுமணத்தம்பதிகள் ரெண்டு பேரும் கதவைச் சாத்திட்டு வீட்டுக்குள இருக்காங்க. அவுங்க கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கிற சத்தம்லாம் கேக்குது. அதைக் கேட்கக்கேட்க சாவித்திரிக்கு மனசு தாங்கலை. அந்த நேரம் பார்த்து சீனுன்னு ஒரு நண்பர் ராகவனைத் தேடி வராரு. போய் கதவைத் தட்டி பேர் சொல்லி கூப்புடுங்கன்னு சொல்லி மெய்ன் கதவை திறந்து விடறா சாவித்திரி. அந்த ஆளும் கதவைத் தட்டறான்.  ராகவன்தான்  கதவைத் திறக்கிறான். திறந்த கதவு வழியா  உடை விலகிய கோலத்தோடு கமலா கட்டிலைவிட்டு இறங்கி சுவர் பக்கமா போறது சாவித்திரிக்கும் தெரியுது. புதுசா வந்த சீனுவுக்கும் தெரியுது. சத்தமில்லாம கதவைத் தெறந்து உள்ள போயி மூடிக்கிறா. அந்த நேரத்துல சுரீர்னு ஒரு குற்ற உணர்ச்சி அவளைச் சுடுது. ஐயோ என்ன காரியம் செய்துட்டேன்னு நெனச்சி ஒரு பதற்றத்துல மூழ்கிடறா. ஒரு நொடி தன்னுடைய எண்ண ஓட்டத்தை அடக்கிக்க தெரியாம போயிடுச்சேன்னு தன்னைத்தானே அவள் நொந்துக்கறா. ஆற்றாமையில அவள் மனசு வெடிக்குது. இன்னொரு பக்கம் தேடி வந்த நண்பனை தெரு பக்கமா அழைச்சிட்டு போய் பேசி அனுப்பி வச்சிட்டு வந்த புருஷன்கிட்ட கமலாவும் கடுமையா நடந்துக்கிறா. புருஷன்காரன் இப்படி பண்ணிட்டானேனு நெனச்சி நெனச்சி அவளுக்கும் ஆற்றாமையா இருக்குது.”

“ரெண்டு பெண்களுக்கும் ரெண்டு விதமான ஆற்றாமை”

“ஆமாம். இது வெறும் ஆற்றாமை மட்டும்தான். பொறாமை கிடையாது. வீட்டுக்குள்ள திரும்பி வந்த சாவித்திரி குற்ற உணர்ச்சியோடு இப்ப திருப்திதான பேயேன்னு தன் மனச பார்த்து தானே கேட்டுக்கறா. அதுதான் ரொம்ப முக்கியமான கட்டம். அந்தப் பேய்க்கு இடம் கொடுத்தது தப்புன்னு அவளுக்குத் தெரிஞ்சிடுது. எல்லாருடைய மனசுக்குள்ளயும் ஒரு பேய் உட்கார்ந்திருக்கறது தெரியாம காலை மடக்கி உட்கார்ந்திருக்கறதுங்கற உண்மையை நோக்கி இந்தக் கதை நம்மை அழைச்சிட்டு போவுது.  ஒரு நல்ல பிறவி ஒரு அற்பப்பிறவியா மாறி பிறகு மறுபடியும் நல்ல பிறவியா மாறுகிற பயணம் இந்தக் கதையில இருக்குது. தம் மனசுக்குள்ள நிகழ்ந்த மாற்றங்கள் தப்புன்னு சாவித்திரிக்கு அடுத்த கணமே புரிஞ்சிடுது. அதனாலதான் எரிச்சலோடு அந்தப் பேயை நினைச்சி திட்டறா. ஆற்றாமைங்கற எல்லையோடு கதை நிக்கறதுக்கும் அதுதான் காரணம். ஒருவேளை, நெஞ்சில குடிபுகுந்த பேய சாவித்திரி ஒரு குழந்தை மாதிரி சீராட்டி பாராட்டி வளர்க்க ஆரம்பிச்சிருந்தா, அந்த ஆற்றாமை பொறாமையா மாறியிருக்கும்”

“ஆற்றாமைக்கும் பொறாமைக்கும் இடையில ஒரு சின்ன கோடுதான். சாவித்திரி மாதிரி தாண்டிவரக்கூடியவங்கதான் வாழ்க்கையை வாழமுடியும். தாண்டமுடியாதவங்களுக்கு வாழ்க்கையே நரகம்தான். இந்த விளக்கம் என் மனசுல ரொம்பநாள் தாங்கும்”

“இருங்க, இருங்க. இன்னும் விளக்கமா சொல்றேன். அப்ப இன்னும் ஆழமா இந்த வேறுபாட்டை நீங்க புரிஞ்சிக்கமுடியும்.”

“சரி, சரி, சொல்லுங்க”

“கு.ப.ரா.வைத் தொடர்ந்து வந்த தலைமுறையில விட்டல்ராவ்னு ஒரு எழுத்தாளர் இருக்கறாரு. அவர் சொர்க்கத்துக்கு ஒரு 21 துப்பாக்கி மரியாதைன்னு ஒரு கதை எழுதியிருக்காரு. அந்தக் காலத்துல பரிசு வாங்கிய கதை அது. பொறாமைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு அந்தக் கதை”

“அப்படியா? அது என்ன கதை?”

“கதையை சொல்றதுக்கு முன்னால இருபத்தோரு துப்பாக்கி மரியாதைன்னா என்ன, சொர்க்கம்னா என்னங்கறதுக்கு ஒரு விளக்கம் சொல்லிடறேன்.”

“சரி, சொல்லுங்க”

“இருபத்தோரு துப்பாக்கி மரியாதைங்கறது ஒரு ராணுவச்சடங்கு. ஒரு முக்கியமான ஆளுமையை வரவேற்பதற்கோ, விடைகொடுத்து அனுப்பி வைப்பதற்கோ இருபத்தோருமுறை துப்பாக்கியால வானத்தை நோக்கி சுட்டு அனுப்பிவைப்பாங்க. அப்படி ஒரு பழக்கம் அந்தக் காலத்துலேர்ந்து இருக்குது.”

“விட்டல்ராவ் கதையில எது வருது? வரவேற்பா, விடைகொடுப்பதா?”

“ரெண்டுக்குமே இடமிருக்குது. அவசரப்படாதீங்க, சொல்றேன்.”

“சரி”

“அடுத்து சொர்க்கம்னா மகாபாரதத்துல பாண்டவர்கள் தேடிகிட்டு போகிற சொர்க்கம் கிடையாது. வாழ்க்கையில அனுபவிக்கக்கூடிய இன்பமான கணங்கள் எல்லாமே சொர்க்கம்தான். ரெண்டு இளவயதுக்கூட்டாளிகள் பழகக்கூடிய விதத்துல, இல்லறவாழ்க்கையில கணவனும் மனைவியும் பழகக்கூடிய விதத்துல அமையக்கூடிய நல்ல கணங்கள் எல்லாமே சொர்க்கம்தான். அதுதான் உண்மையான சொர்க்கம்.”

“இந்த விளக்கம் நல்லா இருக்குதே”

“மனித வாழ்க்கையில ஒரு சொர்க்கத்துலேர்ந்து இன்னொரு சொர்க்கம், அதுலேர்ந்து மற்றொரு சொர்க்கம்னு தாவித்தாவி போயிட்டே இருக்கணும்.  ட்ரபீஸ் சீக்குவன்ஸ் மாதிரின்னு வச்சிக்குங்க. எங்கயாவது ஒரு ஊஞ்சல் பிடிமானம் கிடைக்காம கைநழுவிப் போனா, எல்லாமே போயிடும். மறுபடியும் முதல்லேர்ந்துதான் ஆரம்பிக்கணும். சர்க்கஸ்ல அப்படி ஆரம்பிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கலாம். ஆனா வாழ்க்கையில அப்படி ஒரு ரீஸ்டார்ட்ங்கற வார்த்தைக்கே இடம் கிடையாது”

“நீங்க சொல்றது முற்றிலும் உண்மைதான். அப்படி கண்ணு முன்னால இருந்த சொர்க்கத்தை தொலைச்சிட்டு நிம்மதியில்லாம நிர்க்கதியா நின்ன பல பேர நான் பார்த்திருக்கேன்”

“பொறாமையினால உள்ளங்கையில இருந்த சொர்க்கத்தை தொலைச்சிட்டு நிம்மதியில்லாம மனம் கொதிச்சிட்டிருக்கிற ஒருவனுடைய கதையைத்தான் விட்டல்ராவ் எழுதியிருக்காரு. அதுதான் சொர்க்கத்துக்கு ஒரு இருபத்தொரு துப்பாக்கி மரியாதை”

“இந்த விளக்கத்துலயே அந்தக் கதை எந்தத் திசையில போகப் போவுதுங்கறத புரிஞ்சிக்க முடியுது”

”ஒரு பள்ளிக்கூடத்துல ஒரே வகுப்புல ரெண்டு பசங்க படிக்கிறானுங்க. நல்லா படிக்கிற பையன் ஸ்கூல் ஃபைனல் முடிச்சிட்டு மேல படிச்சி நல்ல அரசாங்க வேலைக்குப் போறான். படிப்பு வராத பையன் ரெண்டுமூனு தரம் ஃபைனல் எக்சாம் எழுதியும் தேற முடியலை. அதனால உடல் தகுதியை வச்சிகிட்டு ராணுவத்துல சேர்ந்துடறான். ரெண்டு நண்பர்களும் ரொம்ப நெருக்கமானவங்க. ஒவ்வொரு சந்திப்பையும் சொர்க்கமா நினைச்சி கொண்டாடக்கூடிய ஆளுங்க. மிலிட்டரிகாரன் முதல்ல குன்னூர்ல வேலையில இருக்கறான். அப்பறமா மாற்றல்ல வடநாட்டுப்பக்கமா போயிடறான். அதுக்கப்புறம் பல வருஷங்கள் ரெண்டு பேருக்கும் நடுவுல எந்தத் தொடர்பும் இல்லாம போயிடுது. அரசாங்க வேலைக்குப் போனவன் ஒரு கல்யாணம் செஞ்சிக்கறான். ரெண்டு பிள்ளைங்க பொறந்து வளர்ந்து பெரிசாவறாங்க.”

“ரெண்டு பேருடைய வாழ்க்கையும் ரெண்டு திசையில போயிடுது”

“ஆமாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரெண்டு பேரும் சென்னையில சந்திச்சிக்கிறாங்க. நண்பன சந்திச்ச மகிழ்ச்சியில அவன வீட்டுக்கு விருந்தாளியா அழைச்சிட்டு வரான். அந்த மிலிட்டரிக்காரன்தான் பிள்ளைகளுக்கு பேட்டரியால இயங்கக்கூடிய ஒரு துப்பாக்கிய வாங்கி வந்து  பரிசா குடுக்கறான். அது அவனுக்குப் புடிச்சிருக்குது. ஆனா, தன் மனைவிகிட்ட அவன் பேசக்கூடிய விதம், பேர் சொல்லி வா போன்னு சொல்ற விதம், மனைவி முன்னால பச்சை பச்சையா பழைய விஷயங்களை முன்வைச்சி பேசறது, தொட்டுப் பேசறதுமாதிரி கிட்டகிட்ட போறது எதுவுமே அவனுக்குப் புடிக்கலை. அவன் வீட்டுல இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்குது. அவன் கெளம்பிப் போன பிறகு அப்பாடான்னு நிம்மதியா இருக்குது. நாலைஞ்சி நாள்லயே அவன் இல்லாத நேரத்துல அவன் மறுபடியும் வந்துட்டு போனாங்ன்கற செய்தியை கேட்டு அவனால தாங்கவே முடியலை. டிரான்ஸ்பர் கிடைச்சிருக்குது, ஊர விட்டு போறேனு சொல்லிட்டு போகறதுக்காகத்தான் வந்தாருன்னு மனைவி சொல்றத அவனால நம்பவே முடியலை. வேற என்ன சொன்னான், வேற என்ன சொன்னான்னு மனைவிகிட்ட துளைச்சிதுளைச்சி கேட்டு நச்சரிக்கிறான். பொறாமை கொஞ்சம் கொஞ்சமா அவன் கண்ணை மறைக்குது. அந்த நேரத்துல அவனுடைய பொண்ணு நண்பன் வாங்கிக் கொடுத்த துப்பாக்கியால இருபத்தொரு முறை சுட்டு விளையாடற சத்தம் கேக்குது. அந்த இடத்துல  கதையை முடிச்சிக்கறாரு விட்டல்ராவ்.”

“இதுவும் நல்ல கதைதான்”

“ஒரு ஆணால ஒரு பொறாமையிலேருந்து வெளியேறவே முடியலைங்கறது சோகமான உண்மை.  துப்பாக்கி வெடிச்சத்தத்தை  வழியனுப்பி வைக்கும் ஒரு அடையாளமா எடுத்துக்கிட்டா, அவன் தன் நட்புக்கே விடைகொடுக்கிற மாதிரி அந்த சந்தர்ப்பம் அமைஞ்சி போவுது. அப்படித்தான் பெரும்பாலான பேருக்குத் தோணும். ஆனா, குடும்பத்துல அதுவரை நிலவி வந்த அமைதி, இன்பம்ங்கற சொர்க்கத்தை வழியனுப்பி வைக்கிற சத்தம்தான் அதுன்னு நெனைக்கறதுக்கான ஒரு வாய்ப்பும் இருக்குது. நாம எதை எடுத்துக்கறோம்ங்கற புதிர்தான் அந்தக் கதையின் வெற்றி.”

”பெருந்தன்மைக்கு என்ன கதையை சொல்லப் போறீங்க?”

“ஹேமி கிருஷ் என்கிற எழுத்தாளர் எழுதிய பற்றென்ப என்கிற சிறுகதை”

“அது என்ன கதை?”

“ஒரு கணவன், மனைவிக்கு இடையில நடக்கக்கூடிய ஒரு சின்ன பிரச்சினைதான் கதை மையம். ஆனா பத்தாண்டு கால இல்லற வாழ்க்கையையே அது கலகலக்க வைச்சிடுது.”

“என்ன பிரச்சினை, எப்படி வெடிக்குது? விளக்கமா சொல்லுங்க”

“காயத்ரி, சந்திரன்னு ஒரு தம்பதி. பத்து வருஷ வாழ்க்கையில ரெண்டு குழந்தைங்க. எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்குது. ஒருநாள் காயத்ரி தற்செயலா ஒரு புடவைக்கடையில மயில்பச்சை நிறத்தில் ஒரு பருத்திப்பட்டுப் புடவையைப் பார்க்கிறா. அந்த நிறம் பிடிச்சிருந்ததால உடனே வாங்கிடறா. அதுக்குப் பொருத்தமா ஒரு ரவிக்கையையும் எடுத்துத் தைச்சிக்கிறா. அது கைக்குக் கிடைச்சதும் அந்தப் புடவையை கட்டிகிட்டு கண்ணாடி முன்னால நின்னு அழகு பார்த்துக்கறா.”

“சரி”

“அந்த நேரத்துல அங்கே வருகிற சந்திரனுக்கு அந்தப் புடவையின் நிறம் பிடிக்கலை. அடர்பச்சையை அவன் கருப்பு நிறம்னு பழிக்கிறான். அவனோடு வாதாட அவளுக்கு விருப்பமில்லை. புடவையை கழற்றி மடிச்சி வச்சிட்டு போயிடறா. நாலஞ்சி மாதம் கழிச்சி தீபாவளி  வருது. அந்த சந்தர்ப்பத்துல அந்தப் புடவையை எடுத்து கட்டலாம்னு போறா காயத்ரி. அப்பவும் சந்திரன் அது வேணாம் வேற கட்டிக்கோனு சொல்லிடறான். காயத்ரியும் நல்ல நாள் அதுவுமா எதுக்கு மோதல்னு விட்டுடறா.  மறுபடியும் ரொம்ப நாள் கழிச்சி ஏதோ ஒரு மஞ்சள் நீர் சடங்கு வருது. அந்த சுப காரியத்துக்கு கட்டலாம்னு அந்தப் புடவையை எடுக்கிறா. அப்பவும் அது வேணாம்னு அவன் தடுத்துடறான். அப்பவும் அவளால அந்தப் புடவையை கட்டிக்கமுடியலை.”

“ஒரு புடவையைக் கட்டிக்க இப்படி அடுத்தடுத்து பிரச்சினையா?”

“ஆமாம். திடீர்னு ஒருநாள் சந்திரன் மாரடைப்பு வந்து செத்துடறான். மரணத்துக்கான சடங்கு எல்லாம் ஒன்னொன்னா முடிஞ்சி, வீடு மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்பி வருது. குளிச்சி முடிச்சிட்டு வந்த காய்த்ரி ரொம்ப காலமா கட்டாமயே வச்சிருந்த மயில்பச்சைப் புட்வையை எடுத்துக் கட்டிக்கறா. மனசுக்குள்ள அவளுக்கு சந்தோஷமா இருக்குது”

“இதுல வரக்கூடியது ஆற்றாமையா, பொறாமையா?”

“பத்து வருஷமா தான் எடுத்துக் கொடுத்த புடவையை மட்டுமே கட்டிட்டிருந்த மனைவி, திடீர்னு அவளா கடைக்குப் போய், அவளா ஒரு புடவையை எடுத்துட்டு வந்து கட்டிக்கறத அவனால தாங்கிக்க முடியலை. உள்ளூர அதுதான் அவனுடைய பிரச்சினை. அதைத்தான் அவன் வேற வேற விதமா காட்டறான். அடிப்படையில அவன் நல்லவன்தான். ஆனாலும் இப்படி ஒரு சின்ன கோளாறு இருக்குது அவன்கிட்ட. காயத்ரி நெனச்சிருந்தா அவளும் அவனோடு நேருக்கு நேரா மோதியிருக்கலாம். தன்னுடைய உரிமை இதுன்னு வாதாடியிருக்கலாம். ஆனா அவள் செய்யலை. இந்தக் கோளாறுங்கற அவனுடைய குணத்துல கால் பங்குதான். மத்தபடி முக்கால் பங்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதவன். குடும்பத்துக்கும் நல்லவனா இருக்கான். அந்த யோசனை அவளை அமைதிகாக்க வச்சிருக்குது”

“சந்திரனுக்கு இருந்த குணத்தை பொறாமைன்னோ, ஆற்றாமைன்னோ வச்சிக்கிட்டோம்னா, அவள் காட்டிய பண்புக்கு என்ன பேர் வைக்கிறது?”

“பெருந்தன்மைன்னு சொல்லலாம்”

அவர் எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடான்னு ஒரு பழைய பாட்டு கேட்டிருப்பீங்க. முத்துமண்டபம்ங்கற படத்துல வரக்கூடிய பாட்டு. அதுல  கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா கொத்திவிட்டு புத்தனைப்போல சத்தியமாய் வாழுதடான்னு ஒரு வரி வரும். ஒரே நேரத்துல பாம்பாவும் புத்தனாவும் இருக்கிற கணவனை என்ன செய்யமுடியும். நீங்களே சொல்லுங்க? பெருந்தன்மையோடு சகிச்சிகிட்டாதான் வாழ்க்கையை நடத்த முடியும், இல்லையா?”

சில கணங்கள் யோசனையில் மூழ்கிய பிறகு “நீங்க சொல்றது சரிதான்” என்றார். பிறகு பெருமூச்சோடு “இந்த உலகத்துல விதவிதமான மனிதர்கள். விதவிதமான அனுபவங்கள். கணக்கே இல்லை” என்று சொன்னார்.

(சங்கு – அக்டோபர் 2024)