Home

Sunday 20 October 2024

இதுவோ உலகத்தியற்கை?

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து விஜயா ஹரன் என்பவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். மைசூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் கருதுபவர் என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பைரப்பாவின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய ஆக்கங்களைப்பற்றிய கட்டுரைகளை பிறரிடமிருந்து எழுதி வாங்கித் தொகுத்து இரு பெருந்தொகுதிகளாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். அதற்குரிய கட்டுரைகளைத் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கன்னடச்சூழலில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த, இளைய எழுத்தாளர்களிடமும் தேர்ந்த வாசகர்களிடமும் பைரப்பாவின் படைப்புலகம் குறித்த கட்டுரைகளைப் பெற்று ஒரு தொகுதியையும்  பைரப்பாவின் நாவல்களை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களை அணுகி, அப்படைப்புகள் சார்ந்த அவர்களுடைய பார்வையை முன்வைக்கும் கட்டுரைகளைப் பெற்று இன்னொரு தொகுதியையும் உருவாக்கவேண்டும் என்பதுதான் அவர் கனவு. ஆறு மாத காலத்தில் இத்தொகுதிகளை உருவாக்கவேண்டும் என்பதில் அவர்  முனைப்பாக இருந்தார்.

கர்நாடகத்தில் மிகப்பெரிய எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா. அறுபதாண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இயங்கி வருபவர். இருபதுக்கும் மேற்பட்ட அவருடைய நாவல்கள் தமிழ், இந்தி, தெலுங்கு, கொங்கணி, அசாமி, ஒரியா, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, உருது என பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், சீனம், ருஷ்ய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும் அவருடைய படைப்புகளை ஐந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்திருப்பார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, பைரப்பாவை மொழிபெயர்த்தவர்கள் என குறைந்தபட்சமாக ஐம்பது மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களைப் பட்டியலிடமுடியும். அவர்களைத் தேடிக் கொண்டுபிடித்து, தொடர்பு கொண்டு கட்டுரைகளைக் கேட்டு வாங்குவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்று தோன்றியது. ஆனால் அச்செயலை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செய்துமுடிக்கும் ஆர்வத்தில் இருந்தார் அவர். தன் ஆதர்ச எழுத்தாளர் பைரப்பாவுக்காக தான் செய்துமுடிக்கவேண்டிய பணி என அவர் கருதினார்.

பைரப்பாவுடைய ‘பருவம்’ நாவலை மொழிபெயர்த்தவன் என்கிற முறையில் அந்நாவலைக் குறித்து ஒரு கட்டுரை அளிக்கவேண்டும் என்று என்னிடமும் கேட்டுக்கொண்டார். நான் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குறித்த காலத்துக்குள் கட்டுரையையும் எழுதி அனுப்பிவிட்டேன்.

அடுத்த வாரத்திலேயே அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. பைரப்பாவுடைய ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலை மொழிபெயர்த்த எச்.வி.பாலசுப்பிரமணியன் என்பவரின் தொடர்பு எண் விவரங்களைத் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் எப்படியாவது கண்டுபிடித்து உதவுமாறும் கேட்டுக்கொண்டார். நானும் ஒரு வேகத்தில் அந்த உதவியைச் செய்வதாகத் தெரிவித்துவிட்டேன்.

ஒரு குடும்பம் சிதைகிறது நாவல் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம்தான் முதலில் வெளியிட்டது. இன்றுவரைக்கும் அந்தப் புத்தகம் விற்பனையில் இருக்கிறது. அதனால், அந்த அலுவலகத்தில் கேட்டு விவரத்தைத் தெரிந்துகொள்ளலாம் என எளிதாக நினைத்துவிட்டேன்.

அடுத்த நாளே, பெங்களூரிலேயே இருக்கும் அவர்களுடைய அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தேன். அவர்கள் தம்மிடம் உள்ள கோப்புகளில் எச்.வி.பாலசுப்பிரமணியம் பற்றி ஒரு தகவல் கூட இல்லை என்று கைவிரித்துவிட்டனர். பிறகு, சாகித்திய அகாதெமி அலுவலகக் கிளையிலும் விசாரித்தேன். அவர்களிடமும் இல்லை. தில்லியில் இயங்கும் அந்நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் தொலைபேசி வழியாக விசாரித்துப் பார்த்துவிட்டேன். அவர்களும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இன்றும் விற்பனையில் இருக்கும் ஒரு புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரைப்பற்றிய தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பதை நினைத்து வருத்தமாக இருந்தது. அதை வெளியில் சொல்ல வெட்கமாகவும் இருந்தது.

என்னுடன் தொடர்பில் இருக்கும் பிற எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பேராசிரியர்கள், புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாசிரியர்கள், வாசகர்கள் என அனைவரிடமும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். தொடர்ச்சியாக நாலைந்து நாட்களில் அதைத் தவிர வேறெந்த வேலையையும் செய்யவில்லை. ஆயினும், என் முயற்சி எதிர்பார்த்த பயனை அளிக்கவில்லை  அடிப்படையில் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன படித்தார், என்ன வேலை செய்தார், கன்னட மொழியோடு அவருக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது, எப்படி மொழிபெயர்க்கத் தொடங்கினார் என்பதுபோன்ற அடிப்படைத் தகவலைக்கூட என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருவருடைய மொழியாக்கம் கண்முன்னால் இருக்கும்போது, அதை மொழிபெயர்த்தவரை உலகமே மறந்துபோய்விட்டது என்பதை நினைக்க நினைக்க வருத்தமாக இருந்தது. எல்லா மொழிகளிலும் இப்படித்தான் இருக்கிறார்களா, அல்லது நாம் மட்டும்தான் அப்படி இருக்கிறோமோ என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

அந்த எண்ணத்தின் தொடர்ச்சியாக, நான் அதுவரை அறிந்த பல மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களையும் அவர்கள் மொழிபெயர்த்த புத்தகங்களின் பெயர்களையும் வரிசையாக நினைவுபடுத்திக்கொண்டேன். மனத்திரையில் அடுத்தடுத்து பல பெயர்கள் தோன்றின. அவர்களில் சிலரைத்தான் நம் சூழல் இன்றும் நினைவில் வைத்திருக்கிறது. சிலர் அப்படியே உரமாகக் கரைந்துபோய்விட்டார்கள்.

எஸ்.சீதாதேவி என்னும் பெயரை உடனடியாக நினைத்துக்கொண்டேன். கன்னடச்சிறுகதைகள் என்னும் தலைப்பில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் முதல் நிரஞ்சனா வரையிலான முதல் மூன்று தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக பல வகைமைகளில் அமைந்திருக்கும் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தவர். சாகித்திய அகாதெமி நிறுவனம்தான் அந்த நூலை வெளியிட்டது. அப்போதெல்லாம் சாகித்திய அகாதெமி வெளியீடுகளில் மொழிபெயர்ப்பாளரைப்பற்றிய குறிப்பையோ, அவருடைய புகைப்படத்தையோ பின்னட்டையில் வெளியிடும் வழக்கம் இல்லாதிருந்தது. அந்தப் புத்தகமும் இன்னும் விற்பனையில் இருக்கும் புத்தகம்தான். ஆனால் சீதாதேவியைப்பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

சிவராம காரந்த்தை தமிழ்ச்சூழலில் அறிமுகப்படுத்தியவர் டி.பி.சித்தலிங்கையா என்னும் மொழிபெயர்ப்பாளர். அவருக்கு ஞானபீட விருதைப் பெற்றுத் தந்த பாட்டியின் நினைவுகள் என்னும் நாவலை அவர்தான் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த நாவலைத் தொடர்ந்து சிவராம காரந்த் எழுதிய மண்ணும் மனிதரும், அழிந்த பிறகு போன்ற நாவல்களையும் மொழிபெயர்த்தார். கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு தொண்ணூறுகளில் வெளிவந்த சுபமங்களா இதழில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணல் இடம்பெற்று வந்தது. ஒரு இதழில் ஒரு துணை நேர்காணலாக, டி.பி.சித்தலிங்கையாவின் நேர்காணல் வெளிவந்தது. அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தில்லி, மதுரை பல்கலைக்கழகங்களில் மொழித்துறையில் பணியாற்றியவர் என்பதையும் அந்த நேர்காணல் வழியாகத்தான் தெரிந்துகொண்டேன். அதைத் தவிர, வேறெந்த தகவலும் குறிப்பிடும்படியாக நம்மிடம் இல்லை.

ஒரு வேட்டைக்காரனின் நினைவலைகள் என்னும் தலைப்பில் கேதம்பாடி ஜத்தப்பா ரை என்னும் புத்தகத்தை மொழிபெயர்த்தவர் ஜெயசாந்தி. தன்வரலாற்றின் அமைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் கன்னட இலக்கியச்சூழலில் மிகுந்த இலக்கிய மதிப்பையுடையது.  ஆனால் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்து அளித்த ஜெயசாந்தியின் பெயர் வெளித்தெரியாத ஒன்றாகவே உள்ளது. கன்னட நாவலாசிரியரான சதுரங்க என்பவரின் மெளனஓலம் என்னும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் தண்.கி.வெங்கடாசலம் என்பவர். பெங்களூரில் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய முன்வரிசைத் தலைவர்களில் ஒருவர். பேராசிரியராகப் பணியாற்றியவர். தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பு நாவல்களை விரும்பிப் படிக்கும் வாசகர்கள்கூட அந்த நாவலையும் பெயரையும் கடந்துபோய்விட்டனர்.

‘சமீபத்திய மலையாளச்சிறுகதைகள்’ என்ற தலைப்பில் அந்தக் காலத்தில் ஒரு தொகுப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. எம்.முகுந்தன் தொகுப்பாசிரியராக செயல்பட்டு அன்றைய தலைமுறையினரின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். அத்தொகுதியை தமிழில் மொழிபெயர்த்தவர் ம.ராஜாராம் என்பவர். அதை அடுத்து சில நாடகங்களையும் அவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அவரைப்பற்றிய தகவலையும் என்னால் தேடிக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

பாலகும்மி பத்மராஜு என்னும் தெலுங்கு எழுத்தாளரின் கறுப்பு மண் என்னும் நாவலை பா.பாலசுப்பிரமணியன் என்பவரும் புச்சிபாபு என்னும் எழுத்தாளர் எழுதிய கடைசியில் இதுதான் மிச்சம் என்னும் நாவலை பி.வி.பாலசுப்பிரமணியன் என்பவரும் மொழிபெயர்த்திருந்தனர். அவர்களை இன்று எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழின் மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்கள் என்னும் பட்டியலையும் மிகச்சிறந்த நாவலாசிரியர்கள் என்னும் பட்டியலையும் தயாரிக்கும் எவராலும் தவிர்க்கமுடியாத ஒரு பெயர் கரிச்சான் குஞ்சு. அவருடைய கதைகளுக்கும் அவர் எழுதிய பசித்த மானுடம் நாவலுக்கும் எப்போதும் இடம் உண்டு. அவர் படைப்பாளியாக விளங்கிய அதே சமயத்தில் ‘இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ என்ற தலைப்பில் தேவிபிரசாத் சட்டோபாத்யாய எழுதிய பெரிய தத்துவ விவாத நூலை அவர் மொழிபெயர்த்தார். சையத் அப்துல் மலிக் என்னும் அசாமிய எழுத்தாளர் எழுதிய  சூரியகாந்திப்பூவின் கனவு என்னும் நாவலையும் அவரே மொழிபெயர்த்தார். கரிச்சான் குஞ்சுவின் நேரடிப்படைப்புகளைப்பற்றிக் குறிப்பிடும் பலர் அவர் மொழிபெயர்த்த படைப்புகளைப்பற்றி குறிப்பிடுவதில்லை.

வாழ்க்கை ஒரு நாடகம், கங்கைப்பருந்தின் சிறகுகள், துளியும் கடலும், வெண்குருதி போன்ற முக்கியமான பல நாவல்களை எழுபதுகளில் மொழிபெயர்த்து தமிழுக்கு வளம் சேர்த்தவர் துளசி ஜெயராமன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்நாவல்கள் தமிழ்வாசகர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய புத்தகங்களாக உள்ளன. ஆனால் இவற்றை மொழிபெயர்த்த துளசி ஜெயராமன் பெயரளவில் அனைவருக்கும் தெரிந்தவராக இருக்கிறாரே தவிர, அவரைப்பற்றிய கூடுதலான தகவல்கள் ஒருவருக்கும் தெரியவில்லை.

அவரைப்போலவே இன்னொரு முக்கிய ஆளுமை ரா.வீழிநாதன். இந்தியிலிருந்தும் இந்தி வழியாக பிற வட இந்திய மொழிகளிலிருந்தும் முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பஞ்சாபிக்கதைகள், உர்தூக்கதைகள், சித்ரலேகா, மண்பொம்மை, கல்லும் கனியும், சுதந்திரக்கோவில் போன்றவை குறிப்பிடத்தக்க சில படைப்புகள். அவரே ஓர் எழுத்தாளராகவும் விளங்கினார். கல்கி இதழில் உதவி ஆசிரியராகவும் இருந்தார். அவர் எழுதிய காசி யாத்திரை என்னும் பயணநூல் இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது.  சொந்த வாசிப்பு முயற்சியால் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு அவர் அந்தக் காலத்தில் உருவாக்கிய வாணி ஹிந்தி போதினி மிகவும் உதவியாக இருந்தது. அதனாலேயே அவருடைய பெயர் அனைவருக்கும் தெரிந்திருக்கிறதே தவிர, அவர் மொழிபெயர்ப்புக்காக ஆற்றிய பங்களிப்பைப்பற்றித் தெரிந்தவர்கள் யாருமில்லை. 

எமர்சன் எழுதிய ‘விதியும் தன்னம்பிக்கையும்’ என்னும் புத்தகத்தை அந்தக் காலத்தில் தமிழில் படித்த நினைவிருக்கிறது. அதை மொழிபெயர்த்தவர் வி.ஆர்.எம்.லட்சுமணன் என்பவர். அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இருப்பதாகக்கூடத் தெரியவில்லை. வி.ஆர்.எம்.லட்சுமணனின் தொடர்மொழிபெயர்ப்புப் பங்களிப்பு என்ன என்பதைப்பற்றியும் தெரியவில்லை. 

எமர்சன் எழுதிய ’தன்னுணர்வு’ என்னும் நூலை மொழிபெயர்த்தவர் பெருஞ்சித்திரனார். அவர் மிகப்பெரிய மரபுப்பாவலர் என்பதையும் தனித்தமிழ் இயக்கத்தூண்களில் ஒருவர் என்பதையும் தெரிந்த அளவுக்குக்கூட தமிழ்ச்சூழலில் அவர் ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார் என்னும் உண்மை பரவவில்லை.  அந்த நூலும் இப்போது அச்சில் இல்லை.

என் இளமைக்காலத்தில் நான் விரும்பி வாசித்த புத்தகங்களில் ஒன்று சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் டிவிஸ்ட். கி.மா.பக்தவத்சலன் என்பவருடைய மொழிபெயர்ப்பு. அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் பெயரை நினைவூட்டும் விதத்தில் இருந்ததால் அந்தப் பெயர் அப்படியே என் நினைவில் நீடிக்கிறது. அதற்குப் பிறகு அதே நாவலை சுருக்க வடிவத்தில் வீரராகவன், பரமசிவன். வீரசிம்மன் என பலரும் மொழிபெயர்த்ததையும் பார்த்திருக்கிறேன். அப்போது பிரிட்டனைச் சேர்ந்த பல முக்கிய எழுத்தாளர்களின் ஏராளமான ஆக்கங்கள் சுருக்கமாகவோ, விரிவாகவோ மொழிபெயர்க்கப்பட்டு நூலகத்தாங்கிகளில் நிறைந்திருந்ததைப் பார்த்த நினைவிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் முக்கியமான நாடகங்கள் அனைத்தும் தமிழ்ப்பிரதிகளாக படிக்கக் கிடைத்தன. இம்மொழிபெயர்ப்புக்காக அர்ப்பணிப்புணர்வோடு உழைத்தவர்கள் பலர் இருக்கக்கூடும். அந்த மொழிபெயர்ப்பாளர் வரிசை அப்படியே காணாமல் போய்விட்டது.

கப்பலோட்டிய தமிழன் என்றும் செக்கிழுத்த செம்மல் என்றும் அனைவராலும் பாராட்டப்படுகிற சுதந்திரப்போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் தமிழுக்குப் பங்காற்றியிருக்கிறார். ஜேம்ஸ் ஆலன் என்பவர் எழுதிய முக்கியமான நான்கு நூல்களை மனம்போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் ஆகிய தலைப்புகளில் மொழிபெயர்த்தார் வ.உ.சி..

டி.எஸ்.சொக்கலிங்கம் என்னும் பெயரை நாம் அனைவரும் அறிந்திருப்போம். தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியராக  பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து தினசரி என்னும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தியவர். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர். காந்தியடிகள், பாரதியார் போன்ற ஆளுமைகளை தேசப்பற்று கொண்ட ஓர் இளைஞனாகச் சந்தித்து உரையாடிய அனுபவங்களை முன்வைத்து அவர் எழுதிய முதல் சந்திப்பு என்னும் புத்தகம் மிகமுக்கியமான ஆவணம். அவர்தான் லியோ டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் என்னும் நாவலின் மூன்று பாகங்களையும் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தார். அவரைப்பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதே போரும் அமைதியும் நாவலை அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு விடுதலைப்போராட்ட வீரர் மீண்டும் மொழிபெயர்த்தார். அவர் பெயர் திரிகூடன். அதைத் தவிர வேறு சில நூல்களையும் அவர் மொழிபெயர்த்தார். சொந்த ஆக்கங்களாகவும் மொழிபெயர்ப்பு நூல்களாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதினார். திரிகூட ராசப்பக் கவிராயரின் பெயர் தெரிந்த அளவுக்கு மொழிபெயர்ப்பாளர் திரிகூடனின் பெயர் வெளியுலகத்துக்குத் தெரியாமலேயே போய்விட்டது.

இந்திய நாவல் வரிசையில் பெரியதொரு சாதனை  என்று சொல்லத்தக்க படைப்பு அக்னிநதி. அதை எழுதியவர் குர் ஆதுலின் ஹைதர். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் செளரி. சொந்த முயற்சியில் இந்தி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். அக்னி நதி இன்றும் தமிழ்வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படும் நாவல்களில் ஒன்றாகும். பிரேம்சந்த் எழுதிய சிறுகதைகளை மட்டுமே கொண்ட ஒரு தொகுதியையும் அவர் மொழிபெயர்த்தார். ஆயினும் செளரியின் பெயர் பலருடைய நினைவிலிருந்து விலகிவிட்டது.

பாறப்புறத்து என்னும் மலையாள நாவலாசிரியர் எழுதிய அரைநாழிகை நேரம் நாவலும் இன்றளவும் அனைவரும் விரும்பிப் படிக்கும் நாவலாகும். அந்த நாவலை மொழிபெயர்த்த வெ.நாராயணன் என்பவரைப்பற்றிய விவரங்களைத் தெரிந்திருப்பவர்கள் மிகக் குறைவாகும்.

தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய கயிறு நாவல் மூன்று பெரும்பாகங்களைக் கொண்டது. அவற்றை தமிழில் அளித்தவர் சி.ஏ.பாலன். தகழியின் ஏணிப்படிகள் நாவலையும் அவரே தமிழில் மொழிபெயர்த்தார்.  ஞானபீடப் பரிசு வென்ற பொற்றெக்காடு அவர்களின் ஒரு கிராமத்தின் கதை நாவலும் அவருடைய மொழிபெயர்ப்பு வழியாக நமக்குப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெட்டூர் ராமன் நாயரின் வாழ மறந்தவன் நாவலும் அவருடைய மொழிபெயர்ப்புப்பட்டியலில் அடக்கம். தன்னுடைய சிறைவாசத்தைப்பற்றி அவரே எழுதிய தூக்குமர நிழலில் என்னும் புத்தகம் தமிழ்ச்சூழலில் ஒரு சாட்சியாக இருக்கும் நிலையில்கூட, அவருடைய மொழிபெயர்ப்புப்பங்களிப்பு பற்றிய ஒரு சிறு உரையாடல் கூட தமிழில் நிகழவில்லை.

இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்துக்கு ஆதாரமான நாவலை எழுதிய எழுத்தாளர் உமா சந்திரன் என்பவர். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். அவருடைய உண்மையான பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய பூரணம் விஸ்வநாதனின் சகோதரர் அவர். அவரை நாவலாசிரியராகவே அறிந்து வைத்திருக்கும் தமிழ்ச்சூழலில் பலருக்கும் அவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார் என்பது தெரியாத விஷயம். மராத்தி மொழியில் ஆர்.வெங்கடேஷ் மாட்கூல்கர் எழுதிய பன்கர்வாடி நாவலை தமிழில் அவர்தான் இந்தி வழியாக மொழிபெயர்த்தார்.  

பூர்ணம் விஸ்வநாதனின் இன்னொரு சகோதரரான பூ.சோமசுந்தரமும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். ரஷ்ய மொழியிலிருந்து நேரிடையாக பல நாவல்களை மொழிபெயர்த்தவர் அவர். இவான் துர்கனேவின் தந்தையரும் தனயரும் நாவல், சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலா, முதல் ஆசிரியர், அன்னை வயல் ஆகிய நாவல்கள், புஷ்கின் எழுதிய கேப்டன் மகள் நாவல், கான்ஸ்தான்தீன் ஸிமனவ் எழுதிய போர் இல்லாத இருபது நாட்கள் நாவல் என ஏராளமான படைப்புகளை தமிழுக்குக் கொண்டு வந்தவர். அவர் மொழிபெயர்த்த நாவல்கள் பரவிய அளவுக்கு அவருடைய பெயர் தமிழ்ச்சூழலில் பரவி நிலைக்கவில்லை.

தி.சா.ராஜு என்பவர் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். வடநாட்டில் வாழ்ந்த அனுபவங்களை முன்வைத்து பல்வேறு ஊர்களைப்பற்றியும் ஆலயங்களைப்பற்றியும் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதினார். இராணுவ அனுபவங்களை முன்வைத்து ஏராளமான சிறுகதைகளையும் சில நாவல்களையும் எழுதினார். சொந்த முயற்சியில் பஞ்சாபி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். பஞ்சாபில் வாழ்ந்த மேஜர் ஆலுவாலியா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மன்னும் இமயமலை என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தார். வாசகர் வட்ட வெளியீடாக அந்தக் காலத்தில் அது வெளிவந்தது. குர்தயாள் சிங் என்னும் பஞ்சாபி எழுத்தாளர் எழுதிய நாவலை மங்கியதோர் நிலவினிலே என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்.

அந்தக் காலத்தில் சொந்த முயற்சியால் சமஸ்கிருதம் கற்று சாகுந்தலம், குமாரசம்பவம், மேகசந்தேஷம் போன்ற நாடகங்களை மொழிபெயர்த்தவர் விடுதலைப்போராட்ட வீரரான ஜமதக்னி. கார்ல் மார்க்ஸின் மூலதனம் மூன்று தொகுதிகளையும் அவரே மொழிபெயர்த்தார். மு.கு.ஜகந்நாதராஜா தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, இந்தி, துளு என பல இந்திய மொழிகளை அறிந்தவர். அனைவராலும் பன்மொழிப்புலவர் என்று பாராட்டப்பட்டவர். கிருஷ்ணதேவராயர் எழுதிய ஆமுக்தமால்யதா காவியத்தை ஜகந்நாதராஜா தமிழில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து, பிராகிருத மொழியிலிருந்து கதாசப்தபதி, வஜ்ஜாலக்கம், தீகநிகாயம், கற்பூரமஞ்சரி போன்ற நூல்களை மொழிபெயர்த்தார். கலாபூரணோதயம் என்னும் தெலுங்கு காவியத்தையும் பம்ப்ப பாரதம் என்னும் கன்னடக் காவியத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். திருக்குறள், பாரதியார் பாடல்கள், முத்தொள்ளாயிரம், புறநானூறு போன்றவற்றை தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்தார். அவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று பரவிய அளவுக்கு, அவர் மொழிபெயர்த்த படைப்புகள் விரிவான அளவில் தமிழ்ச்சூழலில் சென்று சேராதது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட வினோபா அடிகளை ஆங்கிலேய அரசாங்கம் துலியா என்னும் நகரத்தில் உள்ள சிறையில் அடைத்துவைத்திருந்தது. நூற்றுக்கணக்கான விடுதலைப்போராட்ட வீரர்களும் அப்போது அவரோடு சிறையில் இருந்தனர். வேலை செய்த நேரத்தைத் தவிர, கிட்டிய ஓய்வு நேரத்தில் அனைவரும் பயன்படும் விதமாக கீதை தொடர்பான உரையை வினோபா பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நிகழ்த்தினார். அந்த உரைகளின் அருமையைக் கருதி, அங்கிருந்த நண்பர்கள் அவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு பின்னர் நூல்வடிவில் விரித்தெழுதி மராத்தியில் வெளியிட்டனர். கீதா பிரவசனே என்னும் தலைப்பில் வெளியான அந்த நூல் இந்தியாவின் பிற மொழிகளிலும் அடுத்தடுத்து வெளியானது.  நல்வாய்ப்பாக, கீதைப் பேருரைகள் என்னும் தலைப்பில் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக பிரசுரமானது. காந்திய இலக்கியச்சங்கம் வழியாக இன்று அந்த நூல் பரவலாக பலரையும் சென்றடைந்திருக்கிறது. ஆயினும் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அவருடைய பெயரே இந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலும் இல்லை. ஒருவேளை, அந்த நூலின் ஆரம்பகாலப் பதிப்பில் இருந்ததோ என்னமோ, இன்று விற்பனையில் இருக்கும் புத்தகத்தில் மொழிபெயர்ப்பாளரின் பெயர் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புத்தகக்கண்காட்சியில் இன்றும்  அதிக அளவில் விற்பனையாகும் புத்தகம் காந்தியடிகளின் தன்வரலாறான சத்தியசோதனை ஆகும். குஜராத்தியிலிருந்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் மகாதேவ தேசாய். ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்த்தவர் ரா.வேங்கடராஜுலு. காந்தியடிகளின் இந்திய சுயராஜ்ஜியம் புத்தகத்தையும் அவரே மொழிபெயர்த்தார்.  காந்தியின் மணிமொழிகளைத் தொகுத்து கிருஷ்ண கிருபளானி என்பவர் உருவாக்கிய தொகுதியை யாவரும் சோதரர் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவரும் அவரே. அவருடைய பெயரைத் தவிர, அவரைப்பற்றிய குறிப்புகளையோ, அவருடைய ஒரு புகைப்படத்தையோ கூட எங்கும் பார்க்க இயலவில்லை. மகாத்மா காந்தி என்னும் தலைப்பிலேயே அவரைப்பற்றி வின்சென்ட் ஷீன் என்பவர் எழுதிய புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் சிவசாமி என்பவர். அவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பையும் கூட எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காந்தியடிகளின் நூல்களைத் தொடர்ந்து நேருவின் நூல்களும் நினைவுக்கு வருகின்றன. ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அவருடைய உலக சரித்திரம் புத்தகத்தை தமிழர்கள் வாசிக்கும் வகையில் மொழிபெயர்த்துக் கொடுத்தவர் ஓ.வி.அழகேசன். சுதந்திரப்போராட்ட வீரர். பல முறை சிறைக்குச் சென்றவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். அரசியல் பணிகளைக் கடந்து அவர் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டிருந்தார். ஒரு வேகவாசிப்பில் உலக சரித்திரத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் புரிந்துகொள்ள உதவும் அந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்தவரின் பெயரைச் சொல்பவர்கள் மிகவும் குறைவு.

நினைக்க நினைக்க மனம் ஒருவித துயரத்தில் மூழ்கியது. ஒரு காட்டில் செடியும் மரமும் முளைத்தெழுந்து வளர்ந்து நிற்பதுபோல, ஒரு மொழி புழங்கும் சூழலில் மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகி வளர்ந்து நிற்கிறார்கள். காற்றாலோ, நெருப்பாலோ, பெருக்கெடுத்தோடி வரும் வெள்ளத்தாலோ இயற்கையின் சீற்றத்தாலோ, சிற்சில சமயங்களில் மூப்பின் காரணத்தாலோ ஒரு வரிசை மரங்கள் வீழ்ந்து சரிய, அதன் சாரத்தை உறிஞ்சி உரம்பெற்று இன்னொரு புதிய வரிசை மரங்கள் முளைத்து வெட்டவெளியை நிரப்புகின்றன.  அதுபோல, ஒரு தலைமுறையில் ஒருசில மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றுகிறார்கள். தம் மொழிக்கு வளம் சேர்க்கும் எனக் கருதும் படைப்புகளைத் தேடித்தேடி மொழிபெயர்த்து தம் கொடையென அளித்துவிட்டுச் செல்கிறார்கள். சில படைப்புகள் நிரந்தரமாக இம்மண்ணில் நீடித்திருக்கின்றன. சில தோன்றிய வேகத்தில் மறைந்து போகின்றன. இதற்கெல்லாம், இதுதான் காரணம் என எதையும் திட்டவட்டமாக வகுத்துவிட முடியாது. இதுதான் உலகத்தியற்கை என நினைத்து, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதுதான் நல்லது.

ஒரு செய்தியை மட்டும் குறிப்பிடவேண்டும். சமீபத்தில் புதுவையைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் எழுதிய இசைத்தமிழ்க்கலைஞர்கள் என்னும் தொகுதியைப் படித்தேன். இசைத்தமிழுக்கு இதுவரை உழைத்த ஆர்வலர்களின் பெயர்களை நீண்ட நெடுங்கால முயற்சியின் விளைவாகத் தேடி அவர்களுடைய பெயர் விவரங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். ஏறத்தாழ ஆறாயிரம் கலைஞர்களின் பெயர்கள் அப்பட்டியலில் உள்ளன. தமக்கு முன்னோடியாக ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய கருணாமிர்த சாகரம் நூலைக் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோவன். தொல்லிசையும் கல்லிசையும் என்னும் நூலை எழுதிய பிறகு எழுந்த ஆர்வத்தின் விளைவாகத்தான் இந்தப் பட்டியலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இளங்கோவனைப் போன்ற ஓர் ஆர்வலர் நம் சூழலில் உருவாகி, நம்  தமிழுக்கு இலக்கியம் சார்ந்து மட்டுமன்றி, பிற துறைகள் சார்ந்தும் பிறமொழிச் செல்வங்களைக் கொண்டுவந்து சேர்த்த மூத்தோரின் பெயர்ப் பட்டியலையும் அவர்களுடைய ஆக்கங்களின் பட்டியலையும் தொகுக்கவேண்டும் என்பது என் கனவு.

 

(பேசும் புதியசக்தி – அக்டோபர் 2024)