Home

Sunday 6 October 2024

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு


உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது.ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா.அதில் குறிப்பிட்டிருக்கிறார்.அவற்றில்.ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது.அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு.அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.

தூத்துக்குடி கால்டுவெல் கல்லூரியில் குமாரசாமிப்பிள்ளை என்பவர் தமிழ்ப்பண்டிதராக இருந்தார்.சிந்தாமணி, பத்துப்பாட்டு போன்ற நூல்களின் ஏட்டுப்பிரதிகளுக்காகத் தேடையலைந்த காலத்தில் அவரும் உ.வே.சா.வுக்கு உதவியிருக்கிறார்.அவருடைய சொந்த ஊர் ஆறுமுகமங்கலம்.அந்த ஊரிலிருக்கும் அவருடைய சொந்த வீட்டுக்க்குச் சென்று தேடினால் இன்னும் சில ஓலைச்சுவடிகள் கிடைக்கலாம் என்று உ.வே.சா.வுக்குத் தோன்றியது.அதனால் விடுப்பெடுத்துக்கொண்டு உ.வே.சா.அந்த ஊருக்குச் சென்றார்.

அப்போது வீட்டில் குமாரசாமிப்பிள்ளையின் மருமகன் சுந்தரமூர்த்திப்பிள்ளை இருந்தார்.ஏடு தேடி வந்த செய்தியைச் சொன்னதும் அவர் தம் வீட்டில் இருந்த பழைய சுவடிகளையெல்லாம் கொண்டுவந்து ஐயரின் பார்வைக்கு வைத்தார்.அவை அகநானூறு, புறநானூறு தொடர்பான சுவடிகள்.அவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததில் பொழுதுபோனதே தெரியவில்லை.

மதிய உணவுவேளை நெருங்கிவிட்டது.அக்கிரகாரத்தில் வசித்துவந்த தன் நண்பரிடம் சொல்லி உ.வே.சா.வின் உணவுக்காக ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரமூர்த்திப்பிள்ளை. உணவுக்காக உ.வே.சா. அக்கிரகாரத்துக்குச் சென்றார்.அந்த வீட்டினரும் அவருக்கு நல்ல விருந்தளித்து உபசரித்தனர்.

விருந்து முடிந்ததும் உ.வே.சா.வுக்கு அந்த ஊர் தொடர்பாக வாய்வழக்கில் புழங்கிவந்த பழைய பாட்டும் கதையும்திடீரென நினைவுக்கு வந்தன.ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கதை அது.அப்போது ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் ஆண்டான் கவிராயர் என்னும் கவிஞர் வாழ்ந்து வந்தார்.கரிநாக்கு கவிஞர் என்று அனைவராலும் அடையாளப்படுத்தப்படுபவர்.வாயைத் திறந்தாலே வசைமாரி பொழியும் கவிஞர்.அவருடைய பாடல்வரிகளில் கசப்பும் சாபமும் இல்லாத வரியே கிடையாது.ஒருமுறை அவர் ஆறுமுகமங்கலத்துக்கு வந்தார்.அவரும் பிராமணர் என்பதால், சாப்பாட்டு வேளையில் உணவு வேண்டி அக்கிரகாரத்தைத் தேடி வந்தார்.ஆயிரத்தெட்டு பிராமணக்குடும்பங்கள் வசித்துவந்த அந்த அக்கிரகாரத்தில் ஒரு குடும்பத்தினர் கூட அவருக்கு உணவு கொடுக்கவில்லை. உடனே ஆத்திரம் தாங்காமல் அந்த ஊருக்கே சாபமிடும் வகையில் ”ஆறுமுகமங்கலத்துக்கு யாரொருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்” என்றொரு பாட்டைச் சொல்லிவிட்டு அந்த ஊரைவிட்டே வெளியேறிவிட்டார் கவிராயர்.

உ.வே.சா.அந்தக் கதையைத்தான் அப்போது நினைத்துக்கொண்டார்.தன்னை மனமுவந்து உபசரித்த விதத்தையும் நினைத்துக்கொண்டார்.இந்த அளவுக்கு விருந்தோம்பல் மனமுள்ள மனிதர்களைப்பற்றி இவ்வளவு மரியாதைக்குறைவாக கவிராயர் ஏன் எழுதினார் என்று நினைத்துக் குழம்பினார்.கவிராயரின் வரி மீண்டும் மீண்டும் அவர் மனத்தைக் குடைந்துகொண்டே இருந்தது.

மறுகணமே தனக்கு விருந்தளித்த குடும்பத்தலைவரிடம் ஆண்டான் கவிராயர் கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு  அந்தப் பாட்டையும் சொல்லி, அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததுண்டா என்று தன் ஐயத்தைப் போக்கிக்கொள்வதற்காகக் கேட்டார். அதைக் கேட்டதும் அந்தப் பிராமணர் அந்தக் கதை உண்மைதான் என்றும் அந்த இழிவைப் போக்கிக்கொள்வதற்காகவே யார் வந்து அணுகி உணவு கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் உணவு படைக்கும் பழக்கம் கவிராயரின் பாட்டுக்குப் பிறகு ஊருக்குள் வேரூன்றிவிட்டதென்றும் எடுத்துரைத்தார்.

ஆண்டான் கவிராயர் பாடியதாக அந்த ஒரு வரியைத்தான் உ.வே.சா. குறிப்பிட்டிருந்தாரே தவிர, அவர் முழுப்பாட்டையும் குறிப்பிடவில்லை. கதையின் சுவாரசியம் காரணமாக, உ.வே.சா.வின் குறிப்பைப் படித்ததுமே ஆண்டான் கவிராயர் என்னும் பெயர் என் மனத்தில் பதிந்துவிட்டது.அவருடைய பிற பாடல்களைப் படிக்கும் ஆவல் எழுந்தது.அதற்குப் பிறகு நான் பழைய நூல்கள் ஏதேனும் படிக்கத் தொடங்கினாலும், அதில் கவிராயரின் பெயர் இருக்கிறதா என்று ஒருமுறை தேடிப் பார்த்துவிடுவேன். என்னால் ஒரு வரியைக் கூட கண்டுபிடிக்க முடிந்ததில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு நூலில் ஆண்டான் கவிராயர் பற்றிய குறிப்பை முதன்முறையாகக் கண்டேன்.அதற்குப் பிறகுதான் அந்தப் பெயரில் ஒரு கவிஞர் வாழ்ந்திருக்கிறார் என்பதை என் மனம் நம்பத் தொடங்கியது.

சிறுவயதில் கவிராயருக்கு படிப்பு வரவில்லை.குருகுலத்தில் அவர் படித்த காலத்தில் தம் ஆசிரியரிடம் பிரம்படி வாங்காத நாளே இல்லை.கவிராயரின் வீட்டில் அவருடைய அப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா என அனைவருமே மிகப்பெரிய பண்டிதர்களாக விளங்கினர்.ஆனால் அவருக்கு எழுத்துஞானமே ஏறவில்லை.

ஒருநாள் எதையோ பிழையாகப் படித்தார் என்னும் காரணத்துக்காக ஆசிரியர் அவரைப் பிரம்பாலேயே அடித்து துவைத்துவிட்டார்.பிரம்படி தாங்காத ஆண்டான் அக்கணமே குருகுலத்தைவிட்டு வெளியே ஓடிவிட்டார்.மாலை வரையில் ஊர்க்கோடியில் வயல்வெளியைச் சுற்றித் திரிந்து பொழுதுபோக்கினார்.பொழுது சாய்ந்ததும் அவருக்கு அச்சம் பிறந்துவிட்டது.வீட்டுக்கும் செல்லமுடியவில்லை, குருகுலத்துக்கும் செல்லமுடியவில்லையே என நினைத்து ஏங்கினார்.அப்போது வழியில் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலைப் பார்த்தார்.யாரும் தன்னைத் தேடி வந்துவிடக்கூடாது என்பதற்காக கோவிலுக்குள் சென்று கதவுகளை மூடித் தாழிட்டுக்கொண்டார்.

எல்லைக்காவலுக்காக ஊருக்குள் சென்றிருந்த உலகாண்ட ஈஸ்வரி கோவிலுக்குத் திரும்பி வந்தாள்.கதவுகள் உட்பக்கமாகத் தாழிட்டு இருப்பதைப் பார்த்து ஒருகணம் திகைத்து நின்றாள். பிறகு கதவைத்  தட்டி உடனடியாக கதவைத் திறக்கும்படி கட்டளையிட்டாள். அச்சமுற்ற சிறுவன் ஆண்டான் “தாயே, நான் கதவைத் திறக்கவேண்டும் என்றால், நீங்கள் எனக்கு அருள் புரியவேண்டும்” என்று தட்டுத்தடுமாறிச் சொன்னான். ”என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள் அம்மன்.“அம்மா, எனக்கு படிப்பு வரவில்லை.முட்டாளாக இருக்கிறேன்.தினமும் ஆசிரியரிடம் பிரம்படி படுகிறேன். எனக்கு நல்ல அறிவையும் புலமையையும் அருளவேண்டும். அப்போதுதான் கதவைத் திறப்பேன்” என்றான் சிறுவன்.

உலகாண்ட ஈஸ்வரி சிறுவன் மீது இரக்கம் கொண்டாள். “சரி, அப்படியே  செய்கிறேன். அதற்குமுன் நீ உன் நாக்கைக் காட்டவேண்டும்.ஆனால் கதவைத் திறக்காமல் நாக்கை எப்படி நீட்டிக் காட்டுவாய்?” என்று கேட்டாள்.அந்தச் சிறுவன் “என்ன செய்வாயோ, எப்படிச் செய்வாயோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது.நீங்களாகவே ஒரு வழி கண்டுபிடித்து எழுதுங்கள்” என்று சொன்னான்.ஒரு கணம் தேவி யோசித்தாள்.சிறுவனுக்கு உதவவேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.அவனுடைய அறியாமையை நினைத்து சிரிப்பாகவும் இருந்தது.

கோவில் வாசலில் இருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு குச்சியை உடைத்து எடுத்துவந்தாள் தேவி.சந்நதிக்கதவு சாவித்துவாரம் வழியே அந்தக் குச்சியை நீட்டினாள்.“சிறுவனே, உன் நாக்கை இந்த சாவித்துளைக்கு அருகில் கொண்டு வா” என்றாள்.நீண்டுவரும் குச்சியைப் பார்த்ததும் சிறுவனுக்கு நம்பிக்கை வைத்தது.நாக்கை நீட்டிக் காட்டினான்.தேவியும் அவன் விரும்பியபடி எழுதினாள்.கதவைத் திறந்த சிறுவன் தேவியை வணங்கி எழுந்தான்.அடுத்த கணமே அவன் நெஞ்சில் பாடல்கள் அருவியெனப் பொங்கத் தொடங்கின.

முதல் கணம் அவருக்கு தன்னை அடித்துத் துரத்திய ஆசிரியரின் முகம் நினைவுக்கு வந்தது.உடனே வெறுப்புடன் ஒரு பாடலைப் பாடினார்.அதுதான் கசப்புப்பாடல் அல்லது வசைப்பாடல்.அந்தப் பாடலைப் பாடி முடித்ததுமே அந்த ஆசிரியர் இறந்துபோனார்.

 

கூலி  கொடுத்துகுறைநாள்படிக்கும்முன்னம்
ஆலிபோல்சீறிஅடித்தார்பிரம்பாலே
வாலிபத்தில்எங்கள்வாத்தியார்பெண்ஜாதி
தாலியறுக்கவரம்தந்தருள்வாய்உலகாய் "

 

அவருடைய ஆழ்மனத்தில் படிந்திருந்த கசப்பெல்லாம் சொற்களாக மாறி இந்தப் பாட்டில் நிறைந்துவிட்டன என்று தோன்றியது.இந்த முதல் பாடலுக்குப் பிறகு அவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஒருவித வெறுப்பிலும் கசப்பிலும் எழுதியவயாகவே அமைந்துவிட்டன.

இந்தப் பாட்டைப் படித்த பிறகு, அந்தக் கவிராயர் எழுதிய பிற பாடல்களைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது.ஆனால் எங்கு தேடினாலும் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.எப்போது நூலகங்களுக்குப் போனாலும் சிறிது நேரம் ஒதுக்கி, புத்தகத் தாங்கிகளுக்கிடையில் புகுந்து கண்ணில் தென்படும் தனிப்பாடல் தொகுதிகளிலும் பழம்பாடல் தொகுதிகளிலும் புரட்டிப் பார்ப்பேன். எங்கும் கிடைத்ததில்லை.

வசைப்பாடல்கள் என்பதாலோ என்னமோ, அவற்றை ஒருவரும் தொகுக்கவில்லை. எல்லாப் பாடல்களும் ஒருவித எரிச்சலிலும் தீராக்கசப்பிலும் சொல்லப்பட்டவை என்பதால், அவரே அப்பாடல்களை ஏட்டில் எழுதிவைக்க விரும்பாமல் விட்டுவிட்டாரோ என்றும் தோன்றியது.  பாடல் உருவான சூழலில் இருந்தவர்களே வாய்வழியாக அப்பாடல்களைச் சொல்லிச்சொல்லி அதற்கொரு நிலைத்த தன்மையை உருவாக்கியிருக்கவேண்டும் என்றெல்லாம் என்னென்னமோ தோன்றியது.

ஒருநாள் இணையநூலகத்தில் வேறொரு குறிப்புக்காக ஒவ்வொரு புத்தகமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ஆண்டான் கவிராயர் என்னும் பெயரைப் பார்த்து பெரும்புதையலையே கண்டெடுத்ததுபோல நினைத்து மகிழ்ந்தேன். 1994இல் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் அந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.ஆய்வு செய்து எழுதியவர் ஆ.தசரதன்.

கவிராயரைப்பற்றிய புத்தகத்தைப் படித்தபோது ஏற்கனவே என் மனத்திலிருந்த எண்ணம் சரி என உறுதிப்பட்டது.தசரதனும் பிறர் மனப்பாடமாகச் சொன்ன வரிகளையே பல இடங்களில் மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தி புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.இப்படி செவிவழியாகக் கிடைத்த பாடல் வரிகள் மிகக்குறைவு.கவிராயர் தொடர்பாக செவிவழியாகக் கேட்டறிந்த சில நிகழ்ச்சிகளைச் சொல்வதைக் கேட்டும் எழுதப்பட்ட பதிவுகளும் இந்நூலில் உள்ளன.ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்குப் பின்புலமான பாடல்கள் அவர்களுடைய நினைவில் இல்லை.அவற்றை வைத்து கவிராயரைப்பற்றி கூறப்படும் நிகழ்ச்சிகளை வெறும் கட்டுக்கதைகள் என்று ஒதுக்கிவிட்டுச் செல்லவே பலருக்குத் தோன்றும்.ஆனால் அவற்றையெல்லாம் அப்படி தள்ளிவிடமுடியாத அளவுக்கு புலவர் புராணத்தில் கவிராயரைப்பற்றி மிகநீண்ட பாடல்கள் உள்ளன. யாரோ, அவரையும் வரலாற்றுக்குள் கணக்கெடுத்து அவரைப்பற்றிய செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். பேதம் பார்த்து விலக்கிவைக்கவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.தசரதன் அக்குறிப்புகளையும் தன் புத்தகத்தில் கொடுத்திருக்கிறார்.எல்லாவற்றுக்கும் மேலாக அபிதான சிந்தாமணி  நிகண்டிலும் கவிராயரைப்பற்றிய குறிப்பு இருக்கிறது. அவருடைய நேரடிப் பாடல்கள் இல்லாத குறைக்கு, கிடைக்கும் இத்தகவல்கள் ஆறுதலளிக்கின்றன.

கிடைக்கும் குறிப்புகளின் அடிப்படையில் கட்டபொம்மன் காலத்தில்  வாழ்ந்தவர் இக்கவிராயர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை அவர் வாழ்ந்த பகுதியில் பஞ்சம் சூழந்தது.அதனால், மற்ற புலவர்களைப்போல கவிராயரும் வசதி படைத்தோரை அணுகி பொருள் பெற முயன்றார்.அவர் வாயிலிருந்து வருபவை அனைத்தும் வசைப்பாடல்களே என்பதால், அவர் பாடத் தொடங்குவதற்கு முன்பேயே அனைவரும் அவருக்கு பொருள் கொடுத்து அனுப்பிவைத்தனர்.இதனால் அவரிடம் ஏராளமான செல்வம் சேர்ந்தது.மேலும் பொருள் சேர்க்கும் ஆசையால் கவிராயர் தமிழ்நாட்டு எல்லையைக் கடந்து மலையாளநாட்டின் பக்கம் சென்றார். அங்கும் அவருடைய பெயரும் புகழும் பரவியிருந்ததால், எல்லையிலேயே அவருக்குத் தேவையான பொருளைக் கொடுத்து அனுப்பிவைக்கும்படி தன் அமைச்சரையே அனுப்பிவைத்தார் அந்தப் பகுதியை அரசாட்சி செய்துகொண்டிருந்த மன்னர். எந்த இடத்திலும் பாடாமலேயே பொருளீட்டி வந்தவர் என்னும் அடைமொழியோடு அவரைப்பற்றிய இப்பாடல் பழம்பாடல் தொகுதியில் காணப்படுகிறது.

எந்த இடத்திலும் பாடாமலேயே பொருளீட்டி ஊருக்குத் திரும்பி வந்த கவிராயர், அப்பொருளைத் தாமே வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ந்தார்.அப்போது அவருடைய தந்தையார் எல்லோரை விடவும் தனக்கு அதிகப்பங்கு வேண்டும் என்று அடம்பிடித்தார்.அவருடைய நச்சரிப்பைத் தாங்கமுடியாமல் வெறுப்புற்ற கவிராயர் தன் இயல்பின் காரணமாக, தந்தையையே தலைவெடித்துச் சாகும்படி சபித்து ஒரு பாடலைச் சொன்னார்.அவரும் அவ்வாறே இறந்தார்.அந்த நேரடிப்பாடல் கிடைக்கவில்லை என்றபோதும் அந்த நிகழ்ச்சி புலவர் புராணத்தில் உள்ளது.

ஒட்டப்பிடாரத்துக்கு மேற்குப்பகுதியில் கயத்தாறு என்னுமிடத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருட உற்சவத்தைக் காண்பதற்காக கவிராயர் சென்றார்.பகலெல்லாம் அலைந்து திரிந்த களைப்பில் கோவில் திண்ணையில் முன்னிரவுப்பொழுதிலேயே படுத்து உறங்கிவிட்டார்.அதே திண்ணையில் பல்லக்கு சுமப்பவர்களும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர்.பல்லக்கு தயாரானதும் கோவில் அதிகாரிகள் வந்து பல்லக்கு சுமப்பவர்களை எழுப்பி அழைத்துக்கொண்டு சென்றனர்.கூட்டத்தோடு கூட்டமாக எழுப்பப்பட்ட கவிராயரும் அவர்களோடு சென்று பல்லக்கு சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.பசியின் களைப்பினாலும் உறக்கக்களைப்பினாலும் தோள்வலியாலும் கால்வலியாலும் எரிச்சல் கொண்ட கவிராயர் கோபமுற்றார்.உடனே தன் இயல்பின் காரணமாக கோவிலையும் தெய்வத்தையும் சபித்து ஒரு பாடலைப் பாடினார்.

 

பாளைமணம் கமழுகின்ற கயத்தாற்றுப் பெருமாளே

பாவி பழிகாரா கேள்

வேளையென்றால் இவ்வேளை, பதினாறு நாழிகைக்கு

மேலாயிற்று என்

தோளை முறித்ததுமன்றி உன் நம்பியானையையும் கூட

சுமக்கச் செய்தாய்

நாளையுனை யார்சுமப்பார் எந்நாளும் உன்கோவில்

நாசம் நாசம்தானே

 

இப்படி ஒரு பாடலை கவிராயர் பாடி முடித்ததும், சப்பரம் முறிந்து விழுந்தது.தெய்வச்சிலை கீழே விழுந்தது.நாளடைவில் கயத்தாற்றுப் பெருமாள் கோவிலே நசிந்துபோனது.அங்கிருந்த கருவறைத்தெய்வம் அருகிலிருந்த எட்டயபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கோவிலில் நிறுவப்பட்டது.

தாமிரபரணி ஆற்றங்கரையை அடுத்து இருந்த ஊரின் பெயர் சொக்கப்பழங்கரை.இங்கு விவசாயமேமுக்கியமான தொழில்.கார், பிசானம் என இரு போகம் விளையும் இடம்.ஒருமுறை கவிராயர் பொருள்வேண்டி அந்த ஊருக்குச் சென்றார்.துரதிருஷ்டவசமாக, அந்த ஊரில் ஒருவரும் அவருக்கு உதவவில்லை.அதனால் வெகுண்ட கவிராயர் அவ்வூரைவிட்டு வெளியேறும் முன்பு அந்த ஊரைப்பற்றி ஒரு வசைப்பாடலைப் பாடினார்.

 

காருக்குத் தீய்ந்துவிடும், கார்போய் பிசானம்வரில்

ஊருக்குள் வெள்ளமெடுத் தோடுமே – பாருக்குள்

ஆற்றுக்கு அடுத்த ஊர், அக்கரையின் நின்ற ஊர்

சோற்றுக் கலைந்தவூர் சொக்கப்பழங்கரையே

 

அதைத் தொடர்ந்து ஆற்றுக்குப் பக்கத்திலேயே இருக்கும் ஊர் என்றபோதும் விவசாயமே செய்ய இயலாதபடி ஊரே அழிந்துபோனது.

தாமிரபரணியின் போக்கில் மருதூர் என்னுமிடத்தில் அப்பகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த ஒரு சிற்றரசர் ஓர் அணையைக் கட்டிக்கொண்டிருந்தார்.ஏராளமான ஆட்கள் பல மாதங்களாக வேலை செய்தபோதும் அணைகட்டும் வேலை முடிந்த பாடில்லை.தற்செயலாக அந்த ஊருக்கு வந்த கவிராயர் அந்தக் கட்டுமான வேலையைத் தன் பாட்டாலேயே கட்டிமுடித்துவிட முடியும் என்று அரசரிடம் சொன்னார்.அதைக் கேட்டு அரசருக்கு வியப்பு ஏற்பட்டது.கவிராயர் பாட்டாலேயே அணைவேலையை முடித்துவிட்டால், தன் இரு பெண்களையும் மணம் முடித்துத் தருவதாகச் சொன்னார்.

அடுத்தநாள் காலையில் ஆற்றில் குளித்துவிட்டு காளியை மனத்தில் தியானித்த கவிராயர் காளியைத் துதித்துப் பாடினார்.ஒவ்வொரு சொல்லும் ஒரு மந்திரமாக மாறி கட்டுமான வேலைகள் மின்னல்வேகத்தில் நடந்துமுடிந்தன.அணை வேலை நிறைவு பெற்றது.கவிராயர் தன் சொல்லக் காப்பாற்றியதுபோல அரசரும் தன் சொல்லைக் காப்பாற்ற முடிவுசெய்தார்.தன் மகள்களை அழைத்து விவரத்தைச் சொன்னார்.ஆனால் அரசரின் முடிவில் பெண்களுக்கு உடன்பாடில்லை. ஊரூராகப் பாடி இரந்துண்ணும் கவிராயனை மணப்பதைவிட மரணமே மேலென  நினைத்து நிரம்பியிருந்த அணைக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.  வழக்கமான வசைத்தொனி இப்பாடலில் இல்லையென்றபோதும், அப்பாடலின் விளைவாக நேர்ந்த அழிவும் துயரமும் ஆழமானவை.

குரும்பூர் – திருச்செந்தூர் சாலையில் திருமலைபுரம் என்னும் ஊர் இருக்கிறது.நீர்ப்பாசனத்துக்குக் குறைவில்லாத ஊர்.அங்கிருந்த விவசாயிகள் நெல், வாழை போன்ற பயிர்களையும் கோடையில் தானியங்களையும் பயிரிடுவார்கள்.வீடுகளுக்கு அருகிலுள்ள தோட்டங்களில் கீரைத்தோட்டங்கள் வைத்திருப்பார்கள்.கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் கீரைக்கு நீர்ப்பாசனம் நடைபெறும். ஒருமுறை அந்த ஊருக்குச் சென்ற கவிராயர், பச்சைப்பசேலன ஓங்கி வளர்ந்து நின்றிருக்கும் கீரைச்செடிகளைப் பார்த்து மனம் பறிகொடுத்து, ஏற்றத்தில் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ஒரு விவசாயியிடம் தனக்கு கீரை கொடுக்கும்படி கேட்டார். அந்த விவசாயியோ ஒருவித செருக்குடன் “அது என்ன கிள்ளுக்கீரையா, கொடுப்பதற்கு?” என்று கேட்டு விரட்டியடித்தார்.அவன் சொற்களை அவமதிப்பாக உணர்ந்த கவிராயர் அக்கணமே கீரைத்தோட்டம் கருகிப் போகும்படி வசைப்பாடலைப் பாடினார்.அவ்விதமாகவே, கீரைத்தோட்டம் கருகி நாசமானது.

 

மாறிமாறிப் பேசும் மாரிமுத்து பலவேசம்

கீரை தழைக்காமல் கிருபை செய் ஆறுமுகனே

 

என்பதுதான் அந்தப் பாடல்.

 

திருச்செந்தூர் கோவிலில் ஒருகாலத்தில் தென்பாண்டிப் பகுதியில் முக்கியப்புள்ளிகளாக இருந்த மூவர் உரிமை பெற்றிருந்தனர்.ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்.இன்னொருவர் அரசூர் அருணாசலத்தேவர்.மற்றொருவர் காயல்பட்ட்னம் ராமஜெயம் பிள்ளை.திருவிழா சமயங்களில் இம்மூவரும் வந்த பிறகுதான் முக்கியப் பூசைகள் நடைபெற வேண்டும் என்பது அக்காலத்தின் நடைமுறையாக இருந்து வந்தது.ஒரு திருவிழா சமயத்தில் கவிராயர் அந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.திருச்செந்தூர் பிரசாதம் வாங்கிச் சாப்பிடவேண்டும் என்பது அவருடைய விருப்பம்.பூசை முடிந்த பிறகுதான் பிரசாதம் விநியோகிக்கவேண்டும் என்பது விதி.முக்கியஸ்தர்கள் மூவரும் வராததால் பூசையைத் தொடங்கமுடியவில்லை.மூவரும் மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தி வந்ததே தவிர, ஆட்கள் யாரும் வரவில்லை.மிக நீண்ட நேரம் காத்திருந்தும் பயனில்லை.பூசை நேரமும் கடந்துபோய்விட்டது.ஆயினும் விதிக்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் காத்திருந்தனர்.ஆனால் கவிராயர் அப்படி கட்டுப்பட்டு இருக்க விரும்பவில்லை.அவரை உள்ளிருந்து உடற்றும் பசி இருக்கவிடவில்லை.ஆத்திரத்தில் வசைகளையே பாடலாகப் பாடி சபித்துவிட்டார்.

 

மூவர் பல்லக்கு மூலையிலே சாத்த

முருகன் பூசை முக்காலமும் எக்காலமும் நடக்க

 

என்று சீற்றத்தோடு பாடிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.எதிர்பாராத விதமாக, கோவிலை நோக்கி வந்துகொண்டிருந்த முக்கியஸ்தர்களின் பல்லக்குகள் கோவிலை நெருங்கமுடியாமல் எண்ணற்ற துன்பங்களில் சிக்கிவிட்டன.நாளடைவில் அவர்கள் மூவருமே செல்வாக்கிழந்து, கோவில் மீது அவர்கள் கொண்டிருந்த உரிமையை இழந்தனர்.அவர்களுடைய பல்லக்கு பரிவாரங்கள் எல்லாம் வீட்டு மூலையில் நிறுத்தப்பட்டுவிட்டன.எந்த முக்கியஸ்தரின் வரவுக்காகவும் காத்திருக்காமல் முருகன் வழிபாடு தொடர்ந்து நடைபெறத் தொடங்கியது.

இப்படி ஏராளமான பாடல் தருணங்களை இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் தசரதன்.

ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலேயே அழிவான் என்பதுபோல வசைப்பாடலின் நாயகனாக விளங்கிய கவிராயர் மறைவும் அவரே பாடிய ஒரு பாடலின் விளைவாக அமைந்துவிட்டது.

சுய கட்டுப்பாடில்லாமல் பல தருணங்களில் தானாகவே பீறிட்டெழும் வசைப்பாடல்களால் பலருடைய சாபங்கள் தன்னைச் சூழ்ந்திருக்கும் என்று அஞ்சினார் கவிராயர்.முதுமைக்காலத்தில் அந்த அச்சம் அவரை வாட்டியது.அப்பாவங்களிலிருந்து மீட்சியடைய சேதுவுக்குச் சென்று கடலில் மூழ்கி தெய்வத்தை வழிபட்டுவிட்டு வரவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.உடனே அப்பயணத்துக்காகத் திட்டமிட்டார்.செல்வதற்கு முன்பாக வீட்டில் தனித்திருக்கும் தன் மனைவிக்குத் துணையாக யாரையாவது விட்டுச் செல்லவேண்டும் என்று அவர் எண்ணினார்.மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாத அவர், மாடனையும் வைரவனையும் அழைத்து தன் மனைவிக்குக் காவலாக இருக்கும்படி சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

 

"சேதுக்குப்போய்த்திரும்பி வரும் அளவும்
மாதுக்குக்காவல்
  மாடனும் வைரவனும் "

 

என்பது அவருடைய பாடல் வரிகள்.அத்து மீறி அந்த இடத்துக்கு வருபவர்களை அடித்துக் கொல்வதுதான் அவர்கள் வேலை.

வீட்டைவிட்டுப் புறப்பட்ட கவிராயர் சிறிது தொலைவிலேயே ஏதோ ஒரு பொருளை வீட்டிலிருந்து எடுத்துவரவில்லை என்பது நினைவுக்கு வந்தது.உடனே அதை எடுக்கும் பொருட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்தார்.வழக்கமான சாலை.வழக்கமான வீடு.வேகமாக வீட்டை நோக்கி நடந்த அவரை தொலைவிலிருந்து கவனித்த மாடனும் இருளனும் யாரோ அயலான் என எண்ணி தனக்கிடப்பட்ட கட்டளைக்கிணங்க, அவரை அடித்துக் கொன்றுவிட்டன.அங்கேயே ரத்தம் கக்கி கவிராயர் இறந்துவிட்டார்.

 

(அம்ருதா – அக்டோபர் 2024)