1998
ஆம் ஆண்டில் கன்னட நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கிரீஷ் கார்னாடுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதையொட்டி கர்நாடக அரசு அவரைக் கெளரவித்துப் பாராட்டும் வகையில் விழாவொன்றை ஏற்பாடு செய்ய விரும்பியது. ஆனால் கார்னாடுக்கு விழா நிகழ்ச்சிகளில் விருப்பமில்லை. அதனால் மறுத்துவிட்டார். பிறகு
விழா வேறு வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ச்சியாக மாலை வேளைகளில்
கார்னாடின் நாடகங்கள் வெவ்வேறு குழுவினரால் மேடையேற்றப்பட்டன. பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஏழாம் நாள் நாடகம் முடிந்ததும் கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று நடந்தது. பார்வையாளர்கள் கேள்விகளை ஒரு தாளில் எழுதி மேடைக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். ஏறத்தாழ ஒரு மணிநேரம் அனைவருடைய கேள்விகளுக்கும் விரிவான வகையில் கார்னாட் பொறுமையாக விடையளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் கைதட்டி தம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்கள்.