கர்நாடகத்தின் வற்றாத முக்கியமான நதிகளில் ஒன்று ஷராவதி. மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள தீர்த்தஹள்ளிக்கு அருகே உள்ள அம்புதீர்த்தத்தில் பிறந்து ஏறத்தாழ நு¡ற்றிஇருபத்தைந்து கிலோமிட்டர் தொலைவு ஷிமோகா, வடகன்னடப் பகுதிகளில் ஓடிப் பாய்ந்து ஹொன்னாவர் என்னும் இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பாதிக்கும் மேல் நிறைவேற்றி வைக்கிற மின்உற்பத்தி நிலையம் இந்த நதியின் குறுக்கில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் இன்றும் நினைத்துப் பெருமை பாராட்டுகிற பொறியியலாளரான விஸ்வேஸ்வரய்யாவின் மேற்பார்வையில் கட்டப்பட்ட லிங்கனமக்கி அணைக்கட்டும் இந்த நதியின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டது. (அவருடைய பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இன்னொரு அணைக்கட்டு காவிரியின் குறுக்கில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு.) இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் அருவி ஷராவதி நதியின் கொடையாகும். ஏறத்தாழ எண்ணு¡று அடிகள் உயரத்திலிருந்து இந்த அருவி பொங்கி வழிவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.