கர்நாடகத்தின் வற்றாத முக்கியமான நதிகளில் ஒன்று ஷராவதி. மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள தீர்த்தஹள்ளிக்கு
அருகே உள்ள அம்புதீர்த்தத்தில் பிறந்து ஏறத்தாழ நு¡ற்றிஇருபத்தைந்து கிலோமிட்டர் தொலைவு ஷிமோகா, வடகன்னடப் பகுதிகளில் ஓடிப் பாய்ந்து ஹொன்னாவர் என்னும் இடத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையைப் பாதிக்கும் மேல் நிறைவேற்றி வைக்கிற மின்உற்பத்தி நிலையம் இந்த நதியின் குறுக்கில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் இன்றும் நினைத்துப் பெருமை பாராட்டுகிற பொறியியலாளரான விஸ்வேஸ்வரய்யாவின் மேற்பார்வையில் கட்டப்பட்ட லிங்கனமக்கி அணைக்கட்டும் இந்த நதியின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டது. (அவருடைய பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இன்னொரு அணைக்கட்டு காவிரியின் குறுக்கில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு.) இந்தியாவிலேயே மிக உயரமான ஜோக் அருவி ஷராவதி நதியின் கொடையாகும். ஏறத்தாழ எண்ணு¡று அடிகள் உயரத்திலிருந்து இந்த அருவி பொங்கி வழிவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஷராவதி பிறந்து ஓடிவருகிற மேற்குமலைக் காட்டுப்பகுதியில் ஜூன் மாத ஆரம்பத்தில் சிறுசிறு து¡றலுடன் தொடங்குகிற பருவமழை ஜூலையில் கடுமையான தொடர்மழையாகப் பெருகி வாரக்கணக்கில் பொழிந்து ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கில்
முடியும். ஷராவதி நிரம்பத் தொடங்கியதுமே ஜோக் அருவியில் நீர் வழிய ஆரம்பித்துவிடும். கருமை அடர்ந்த பாறைமுகட்டில் வெள்ளை வண்ணத்தால் இழுத்த ஒரு கோடுபோல முதலில் அருவி பொழியத் தொடங்கும். கொஞ்சம்கூட சத்தமில்லாமல் ஒழுகத் தொடங்குகிற அந்த நீர்க்கோடு மெல்லமெல்ல அழுத்தமடையும். பந்திப் பாயின் அகலத்தில் நீர்ப்பொழிவு வலுவடையும்போது
அதன் ஓசை சீரான புல்லாங்குழலின்
இசையைப்போல இருக்கும். கூர்மையாகச் செவிமடுத்தால்மட்டுமே கேட்கக்கூடிய இசை. அதை முழுக்க உள்வாங்கி கண்மூடி நிற்கும்போது நம் ஆழ்மனம் அதே இசையை இன்னொருமுறை மீட்டுவதை உணரலாம். அந்த இசை அருவியின் இசையா அல்லது நம் அந்தரங்கம் கட்டியெழுப்புகிற
இசையா என்பதைப் பிரித்தறிய இயலாத பித்துமனத்துடன் அந்த அருவியின்முன் நிற்பது பேரானந்தமான அனுபவம். அடுத்த ஒருசில நாட்களிலேயே அருவியின் அகலம் ஒரு வெள்ளைப் புடவையின் அகலத்துக்கு நீளமடையும். அதன் ஓசையும் சீறலாக மாறும். கண்ணைமூடிக் கொண்டால் சீறலோசையும் சலங்கையோசையுமாக
ஒரு பெண் நடனமிடுவதை உணரமுடியும். அந்த வேகம். அந்த எழுச்சி. அந்தத் துடிப்பு. அருவி நங்கையின் பொற்பாதங்கள் தொம்தொம் என நம் நெஞ்சில் அழுந்தி அழுந்தி உயரும். வெள்ளம் பெருக்கெடுத்ததும்
அருவியின் அகலம் மேலும் பெருக்கமடைந்து
ஏராளமான வெள்ளைப்புடவைகள்
ஒரே நேரத்தில் காற்றில் படபடப்பதைப்போல
காணப்படும். அதன் ஓசை கலவையான மத்தள முழக்கமாக மாறுதலடையும். நடனத்தின் உச்சக்கட்டம். ஆகஸ்டு முழுக்க அருவியின் ஆனந்த நடனம் அரங்கேறும் காலம்.
எண்பதுகளின் ஒரு ஆகஸ்டு மாதத்தில்தான் முதன்முதலாக நான் ஜோக் அருவியைப் பார்த்தேன். அது மிகவும் தற்செயலாக நிகழ்ந்தது. ஷிமோகா, சாகர் பகுதிகள் அப்போது என் வேலைக்கான களமாக இருந்தன. வனப்பகுதிகள் என்பதால் அந்த நகரங்களுக்கான தொலைபேசித் தொடர்பை நுண்ணலை கோபுரங்கள் வழியாக உருவாக்கிக் கட்டமைக்க எங்கள் துறை முடிவெடுத்திருந்தது. முதற்கட்டமாக அந்தக் கோபுரங்களை வடிவமைப்பதற்கான
நிலத்தை நாங்கள் வனத்துறையிடமிருந்தே பெறவேண்டியிருந்தது. சுற்றிலும் ஏழெட்டு இடங்களில் நிலம் தேவைப்பட்டது. அந்த இடங்களின் புள்ளிவிவரங்களையும் விண்ணப்பங்களையும் சுமந்துகொண்டு வனத்துறையில் செயல்படும் தொடக்க நிலை அலுவலகத்தில் தொடங்கி உயர்நிலை அலுவலகம்வரை மாறிமாறி ஒப்புதலுக்காக அலைந்துகொண்டிருந்தேன். சாகர் அருகிலிருந்த ஓர் அலுவகத்துக்கு ஒருநாள் சென்றிருந்தேன். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதற்கான
அனுமதியை ஏற்கனவே தொலைபேசி வழியாக அந்த அதிகாரி எனக்கு வழங்கியிருந்தார்.
ஆனாலும் நான் சென்ற நேரத்தில் அவர் இல்லை. அவசர வேலையாக வனத்துக்குள் சென்றுவிட்டதாகவும் என்னை மாலையில் சந்திப்பதாகவும் சொல்லிவிட்டுச்
சென்றிருந்தார். அவருடைய உதவியாளர் வழியாக எனக்குத் தகவல் சொல்லப்பட்டது.
காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. வெளியே வந்து ஒரு மரநிழலில் அமர்ந்துகொண்டு
வருகிறவர்களையும் போகிறவர்களையும்
வேடிக்கை பார்த்தேன். இன்னொரு மூலையில் சந்தன மரக்கட்டைகள் குவியலாக அடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அதன் மணத்தைமட்டுமே வைத்து என்னால் உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. குழப்பமாக அவற்றையே பார்த்தபடி இருந்தேன். எதிர்பாராத விதமாக என் பக்கமாக வந்த ஒருவரிடம் கேட்டபோது எல்லாமே சந்தனக்கட்டைகள்தாம் எனவும் கள்ளத்தனமாக காட்டிலிருந்து வெட்டியெடுத்துச்
செல்லப்படும்போது கைப்பற்றப்பட்டவை
எனவும் சொன்னார் அவர். சிறிது நேரப் பேச்சுக்குள்ளாகவே
எங்களுக்குள் நல்ல உறவு உருவாகிவிட்டது.
அவர் வனத்துறையின் வாகனஓட்டி. அருகிலிருந்த தேநீர்க்கடையில் இருவரும் சேர்ந்து தேநீர் அருந்தினோம். சாரலுக்கு அந்தத் தேநீர்ச்சூடு இதமாக இருந்தது.
“ஜோக்ல தண்ணி விழ ஆரம்பிச்சிட்டாவே
இந்த சாரல் தொடங்கிடும் சார்" அனுபவித்தபடி சொன்னார் அவர்.
"இங்கேருந்து ஜோக் ரொம்ப பக்கமா?" நான் ஆச்சரியமாகக் கேட்டேன்.
"ஆமா, இருபத்தஞ்சி முப்பது கிலோமீட்டர்தான்
இருக்கும். நீங்க பாத்ததில்லையா?" நம்பாதவர்போல அவர் என்னை வியப்போடு பார்த்தார். ஒரு புன்னகையோடு நான் இல்லையென்று தலையசைத்தேன்.
"அதையெல்லாம் மனுஷனாப் பொறந்தவன் ஒருமுறையாச்சிம்
கண்டிப்பா பாக்கணும் சார். சிவன், விஷ்ணு, அம்பாள் மாதிரி அதுவும் ஒரு அவதாரம் சார்."
அவருடைய பேச்சு என் ஆவலைப் பலமடங்காகப் பெருக்கியது. சற்றே வெட்கத்தோடு அவரையே பார்த்தேன். வரஇருக்கிற ஏதாவது ஒரு ஞாயிறு அன்று மனைவியோடு சென்று பார்த்துவரவேண்டும் என்னும் விதமாக மனத்துக்குள் ஒரு திட்டம் ஓடியது.
"உங்களுக்கு சாயங்காலம்தானே
இனிமே வேலை. அதுவரைக்கும் என்ன செய்யப்போறிங்க? வரீங்களா, நான் அந்தப் பக்கமாதான் போறேன். ஒரு சின்ன வேலை. வண்டியிலயே போயி வண்டியிலயே வந்துருலாம். நீங்களும் ஜோக் பாத்தமாதிரி இருக்கும். எனக்கும் பேச்சுத்தொணயா இருக்கும். என்ன சொல்றீங்க?"
"சரி" எந்தத் தயக்கமும் இல்லாமல் தலையாட்டினேன். எதிர்பாராமல் கிடைத்த அந்த வாய்ப்பு என் மகிழ்ச்சியைப் பலமடங்காக்கியது.
அடுத்த நிமிடம் எங்கள் பயணம் தொடங்கியது. வழிநெடுக உற்சாகத்தோடு அவர் பல தகவல்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். என் குடும்ப விவரங்களைக் கேட்டார். காடுபற்றியும் காட்டுவிலங்குகள் பற்றியும் பல நுட்பமான விஷயங்களைச் சொன்னார். அவருடைய பணியார்வம், குடும்பம் பற்றிய தகவல்களை நானும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
உரையாடலும் வேடிக்கையுமாக அந்தப் பயணம் கழிந்தது. சிறிது நேரத்தில் எங்கள் வாகனம் ஜோக் அருவியை நெருங்கியது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வழியெங்கும் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு திருவிழாவைக் காண்பதற்கு கூடியவர்களைப்போல
மக்கள் திரளாகச் சேர்ந்திருந்தார்கள். அரசு வாகனம் என்பதால் கிட்டிய சலுகையைப் பயன்படுத்தி அருவிக்கு மிகவும் நெருக்கமாகச் சென்றுவிட்டோம். அருவியை முழு அளவிலும் பார்ப்பதற்கு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து
என்னை அழைத்துச் சென்றார் அவர்.
பார்த்த கணத்திலேயே ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் உறைந்துபோய் நின்றேன் நான். உடல்முழுக்க பன்னீர் தெளித்ததைப்போல ஓர் உணர்வு. கண்முன்னால் நம்பமுடியாத ஆழத்துக்குப் பெரிய பள்ளம். பள்ளத்தின் ஒரு விளிம்பில்தான் நாங்கள் நின்றிருந்தோம். மறுவிளிம்பில் அருவியின் நடனம் நிகழ்ந்துகொண்டிருந்தது. சாரல்புகை அருவியின் முழுஅழகைக் காணும் ஆவலைத் து¡ண்டியது. வாய்பிளந்தபடி அந்த அதிசயத்தைக் கண்கொட்டாமல் பார்த்தேன். புகை சற்றே மங்கிய ஒரு கணத்தில் மறுவிளிம்பில் அருவி நான்கு பிரிவுகளாக பொங்கி வழிவதைப் பார்த்தேன். நான்கு பேர்களின் நடனக்காட்சி ஒரே மேடையில் அரங்கேறுவதைப்போல இருந்தது. என் கண்கள் காண்பது உண்மைதானா என்பது ஒருகணம் எனக்கே ஐயமாக இருந்தது. அருகில் நின்றிருந்த நண்பரிடம் கேட்டேன்.
"நாலு போக்கா தெரிவது உண்மைதான் சார். ஒவ்வொன்னுக்கும்
ஒரு பேர் கூட இருக்குது. அந்தக் கடைசியில விழுது பாருங்க. அதுக்குப் பேர் ராஜா. ராஜநடைபோல அந்த அருவிக்கும் ஒரு கம்பீரம் உண்டு. எப்பவும் மெதுவா நிதானமா இருக்கும். மத்த பிரிவுகளோட அதிகம் ஒட்டுதல் இருக்காது. அடுத்து இன்னும் கொஞ்சம் தள்ளி விழுகிற போக்குக்கு ரோரர்னு பேரு. அதுக்கு எப்பவும் வேகம் அதிகம். சத்தமும் அதிகம். தண்ணீர்ப்போக்கும் அதிகம். எல்லாமே ஒருபடி கூடுதல்னு வச்சிக்குங்க. பெரிய வாயாடிபோல. அதுக்குப் பக்கத்துல விழுகிற போக்குக்கு ராக்கெட்னு பேரு. ராஜாவும் இதுவும் பாக்கறதுக்கு ஒன்னுபோலத்தான்
இருக்கும். ரெண்டுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு. ராஜாவுக்கு மேற்பகுதியிலிருந்தே ஒரே சீரான அகலம். ஆனால் ராக்கெட் மேற்பகுதி அகலம் குறைவு. ஆனா தண்ணீர்ப்போக்குடைய அகலம் அதிகம். விழவிழ அந்த அகலம் விரிவடைஞ்சிகிட்டே
போகும். வானத்துல ஒரு ராக்கெட் பாஞ்சிபோகும்போது எப்படி இருக்கும்? புகையுடைய கோடு தொடக்கத்தில சின்னதாவும் போகப்போக பெரிசாவும் இருக்குமில்லையா? அதுபோலத்தான் இதுவும். இன்னும் கொஞ்சம் தள்ளி விழுவது ராணி. அது விழறதே ஒரு நாட்டியம்போல. அசைஞ்சி அசைஞ்சி ஏதோ ஒரு தாளத்துக்கு ஆடுறமாதிரி ஆடுது பாருங்க. அது சுழல்றதையும் திரும்பறதையும் பாருங்க. அப்படியே அச்சு அசல் நடனம்தான். எந்த ரசிகன் எந்தக் காலத்துல வச்ச பேருங்களோ, இன்னைய தேதிவரைக்கும் அப்படியே தொடர்ந்து நிலையா நின்னுடுச்சி."
வைத்தகண் வாங்காமல் பார்த்தபடியே நின்றிருந்தேன்.
சாரல்புகை மெல்லமெல்ல வலுத்தபடி இருந்தது. பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பைத் தேடி நீண்டு அலைகிற கைகளைப்போல அந்தப் புகை பள்ளத்தாக்கு முழுதும் அலைந்தது. மறுவிளிம்பைத் தொட்ட புகை ஆனந்தமாகக் கிளம்பி ஒரு வண்ணத்துப்பூச்சியைப்போல கண்கண்ட திசைகளிலெல்லாம் நகர்ந்தது. புறப்பட்ட இடத்தைநோக்கி மறுபடியும் கிளம்பியதைப்போல
அப்புகையில் ஒரு சுழற்சி. அதே கணத்தில் இன்னொரு வட்டமடித்து வேறொரு திசையில் திரும்பியது. சரிவெங்கும் ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களிலும் கட்டடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களிலும் தொட்டுத்தொட்டு
அலைந்தது. நிதானமாகவும் அழுத்தமாகவும் கழுத்துப்பகுதியில் வந்து படிந்து குறுகுறுப்பைத் தந்தது. ஒரு வார்த்தைகூட பேச மனமில்லாமல் என் மனத்தை முழுக்கப் பறிகொடுத்துவிட்டு
நின்றேன்.
நான்குவித ஓசைகள் என்றாலும் ஏதோ ஒரு கணத்தில் அவை ஒன்றோடு ஒன்றாக கலந்துவடுவதை என் ஆழ்மனம் மெல்ல உள்வாங்கியது. மனத்தின் ஒவ்வொரு அறையும் நிரம்பி வழிந்தது. நாடிநரம்புகள் குளிர்ந்து அடங்குவதை உணரமுடிந்தது. ஒரு படகுபோல அந்த இசை அசைந்துஅசைந்து
நகரும் பயணத்தையும் உணரமுடிந்தது. எதிர்பாராத தருணத்தில் இன்பமூட்டும் ஒரு ராகமாக அந்த இசை மாறியது. அழகான ஒரு சிறுமியைப்போல நடனமிடத் தொடங்கியது. நெளிந்தும் வளைந்தும் குழைந்தும் நிமர்ந்தும் நிகழும் அந்த நடனம் இன்னும் இன்னும் என வேகத்தைக் கூட்டியபடியே தொடர்ந்தது. வேகம் அதிகரிக்கஅதிகரிக்க சிறுமியின் வசீகரம் பெருகியபடியே இருந்தது. மெல்லமெல்ல உடலே நீரால் நிரம்பியதைப்போல மாறிவிட்டது. ஒரேஒரு கணம், காலை தரையில் உந்தி எழுந்தால்போதும், அந்தப் புகையோடு புகையாக நானும் மாறி நகரத் தொடங்கிவிடுவேன்போல இருந்தது. என் கைகள் தாமாக வணங்குவதைப்போல்
குவிவதையும் கண்களில் நீர் நிரம்பித் தளும்புவதையும் பார்த்து நண்பர் சற்றே அஞ்சிவிட்டார். பதறிப்போய் "சார் சார்" என்று என் தோள்களைப் பிடித்து உலுக்கினார். மெளனமான என் சிரிப்பைப் பார்த்து அவர் மேலும் பதற்றமுடன் "என்னாச்சி சார்?" என்றார். "ஒன்னுமில்லிங்க, ரொம்ப ஆனந்தமா இருக்குது" என்றேன். அதற்கப்புறம்தான்
அவர் முகம் நிம்மதியில் நிறைந்தது.
"வாங்க சார், வேற ஒரு இடம் காட்டறேன். அங்கேயிருந்து பாத்தா இன்னும் நல்லா இருக்கும்."
அவர் அழைத்துச்சென்ற
திசையில் ஒரு சிறுவனைப்போல பின்தொடர்ந்தேன். சில திருப்பங்களையும் மரங்களையும் கடந்து ஒரு சின்னக் குன்றின்மீது ஏறினோம். சில நிமிடங்களில் ஆளரவமற்ற பகுதிக்கு வந்துவிட்டோம்.
அருகில் ஒரு மிகப்பெரிய கட்டடமொன்று இருந்தது.
"அந்தக் காலத்துல இங்கிலீஷ்காரனுங்க கட்டனது சார். சீசன் சமயத்துல குடும்பத்தோட வந்து தங்கி அருவியைப் பாக்கறதுக்காகவே
கட்டி வச்சிருக்கானுங்க.
இந்த இடம்தான் சார் அந்தக் காலத்துல எல்லைக்கோடா இருந்திருக்குது. அந்தப் பக்கம் வரைக்கும் மைசூர் சமஸ்தானத்துக்குச்
சொந்தமானது. இதெல்லாம் பம்பாய் ராஜதானிக்கு சொந்தமானது. எப்படியெல்லாம்
கட்டி வச்சி இயற்கையை எப்படியெல்லாம்
பாத்து அனுபவிச்சிருக்கானுங்க பாருங்க சார் அவனுங்க. உங்களப் பாத்தா அவனுங்களப்போல அனுபவிச்சிப் பார்க்கற ஆளுமாதிரி இருக்குது. நீங்க இங்கேருந்து பாக்கறதுதான் சரி. அதான் இந்தப் பக்கமா அழச்சிட்டு வந்தேன்."
நான் தலையசைத்தபடி அருவியின்மீது மறுபடியும் கவனத்தைக் குவிக்கத் தொடங்கினேன். அருவியின் இசையும் சாரலின் வருடலும் அந்த இடத்திலும் தொடர்ந்தன.
"நீங்க இங்கயே உக்காந்திருக்கிங்களா? நான் என் வேலைய முடிச்சிட்டு வந்துடறேன். ஒரு அரைமணிநேரம்தான்.
ஒன்னா திரும்பிப் போகலாம்."
இப்படிச் சொல்லிவிட்டு நம்பாதவரைப்போல அவர் என் கண்களைப் பார்த்தார். என்னைப்பற்றி ஏதோ ஒரு எண்ணத்தை அவர் உருவாக்கிவைத்துக் கொண்டதை அவர் முகம் உணர்த்தியது. அமைதியாக அவர் சொன்னதற்குத் தலையசைத்தேன் நான்.
புகையின் நடனமும் அருவியின் இசையும் தீராத ஆச்சரியங்களாக எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தன. உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கியதுமே அவை நெஞ்சில் இடம்பிடித்துக்கொண்டன. கீழ்ஸ்தாயியில் இனிமையான ஓர் ஒலி எழுந்தது. மெல்லமெல்ல அது நகர்ந்தது . காற்று அதைச் சுமந்துசென்று எல்லா இடங்களிலும் மோதியது. அருவி, பள்ளம், மேடு, மரங்கள், காடு, கட்டடங்கள், இலைகள், வானம், மேகங்கள் எல்லாவற்றையும்
ஏதோ ஒரு கோடு இழுத்து இணைத்துவிட்டதைப்போல இருந்தது. எதிர்பாராத ஒரு கணத்தில் வேறொரு இசை வந்து அத்துடன் கலந்துகொண்டது.
விசித்திரமான அந்த முயக்கத்தில் இசை மேலும் இனிமையுடையதாக மாறியது. உலகே நாதமண்டலமாக உருமாறியது. அந்த மயக்கத்தில் கண்மூடித் திளைத்திருந்தேன்.
"என்ன சார், இயற்கையில ரொம்ப ஆழ்ந்துட்டீங்க போல."
நண்பர் வந்து தோளைத் தொட்டு அசைத்தபிறகுதான் ஏறத்தாழ ஒருமணிநேரத்துக்கும் மேலாக தனிமையில் கழித்திருப்பதை
உணர்ந்தேன்.
"கெளம்பலாமா சார்?"
தலையசைத்தபடி அவர் பின்னாலேயே நடந்தேன்.
சாகர் திரும்புகிறவரைக்கும் என்னால் ஒரு சொல்கூட பேச இயலவில்லை. என் மனநிலையைப் புரிந்துகொண்டவரைப்போல நண்பரும் அமைதியாக வாகனத்தை ஓட்டிவந்தார். வழியெங்கும் காணப்பட்ட மரங்கள், ஒற்றையடிப்பாதைகள், குடிசைகள், பாறைகள், புதர்கள், வானம், மேகங்கள் என எதைப்பார்த்தாலும் எனக்கு அருவியைப் பார்ப்பதைப்போலவே
தோன்றியது. மேனியை வருடிச் சென்ற மென்காற் று இதமாக இருந்தது. நகரை நெருங்கியதும் தேநீர் அருந்துவதற்காக
ஒரு கடையின்முன் நின்றபிறகுதான் என் மனம் இயல்புநிலைக்குத்
திரும்பியது.
"என்ன சார், ரொம்ப ஆழ்ந்துட்டீங்க
போல" மென்மையான குரலில் கேட்டார் நண்பர். மனத்தில் படர்ந்த பரவசத்தை எனக்கு மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. நிமிர்ந்து அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
சிறிது இடைவெளிவிட்டு, மெதுவாகச் சொன்னேன்.
"கும்பலோடு கும்பலா நின்னு அருவியுடைய இசையைக் கேக்கறதுக்கு பதிலா தன்னந்தனியா, இரவு நேரத்துல நின்னு கேட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சி பாத்தேன்."
நண்பர் தலையசைத்துக்கொண்டார்.
அன்று மாலை வெகுநேரம் காத்திருந்தும்
அதிகாரி வரவில்லை. ஏமாற்றத்துடன்தான் வீட்டுக்குத் திரும்பவேண்டியிருந்தது.
அருவியைக் கண்ட அனுபவத்தை என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டேன்.
சொல்லச்சொல்ல இன்னும் சொல்லாதது ஏதோ ஒன்று விடுபட்டிருப்பதைப்போலவே எனக்குத் தோன்றியது. என் மகன் அப்போது பத்துமாதக் கைக்குழந்தை. அவனைத் தூக்கிக்கொண்டு
பயணமெதுவும் செய்யவேண்டாம் என்றுதான் அதுவரை நினைத்திருந்தோம். முதன்முறையாக அந்தக் கட்டுப்பாட்டை ஜோக் அருவிக்காக நாங்களாகவே தளர்த்திக்கொண்டோம். அடுத்துவந்த ஞாயிறு அன்றே பேருந்தில் கிளம்பிச் சென்றோம். எங்கள் பேருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மாறிமாறிக் குழந்தையைத் து¡க்கிக்கொண்டு அருவியைநோக்கி நடந்தோம். எங்களுக்கு முன்னும் பின்னுமாக கூட்டம்கூட்டமாக
பலர் நடந்தார்கள். சாரல் குளிர் இதமாக இருந்தது. அரைமணிநேர நடைக்குப் பிறகு அருவி மேடையை அடைந்தோம். நேருக்குநேராக அருவி எதையும் பார்த்திராத என் மனைவிக்கு ஜோக் அருவியின் தோற்றம், முதல் பார்வையிலேயே பரவசத்தை ஊட்டியது. அதன்முன் மலைத்து வெகுநேரம் நின்றுவிட்டாள். ஊஊ என்று எதுவும் புரியாமல் விரல்களை நீட்டி நீட்டி எதையோ பிதற்றினான் குழந்தை. எனக்கு என் நண்பர் காட்டிய ஆங்கிலேயர் மாளிகைக்கு அருகே அவளையும் அழைத்துச் சென்று காட்டினோம். அந்தக் கோணத்தில் அருவியின் தோற்றம் ஒரு வாழ்த்தட்டைக் காட்சியைப்போல இருந்தது.
வாரம்தோறும் சாகர் சென்று திரும்பினாலும்
என் வேலை நடக்கவில்லை. ஒரேஒரு முறை கோபுரத்துக்காகத்
தேர்ந்தெடுத்திருக்கிற இடங்களைப் பார்ப்பதற்காக அதிகாரியை அழைத்துச் சென்றேன். அந்த அளவுமட்டுமே என்னால் முன்னேறமுடிந்தது.
மீண்டும் ஐயங்கள், பதில்கள் என கோப்பு பந்தாடப்பட்டது.
இடையில் எனக்கும் வாகனஒட்டி நண்பருக்குமான உறவுமட்டும் வளர்ந்தபடியே இருந்தது. என்னைப் பொருத்தவரைக்கும் அவர் காணக்கிடைக்காத அபூர்வமான ஒரு காட்சியைக் காட்டித் தந்தவராகவே தெரிந்தார்.
ஒருமுறை இடம் பரிசீலனை தொடர்பாக என்னையும் அழைத்தார் அதிகாரி. அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு நான் ஷிமோகாவிலிருந்து
கிளம்பி வருவது சாத்தியமில்லை என்பதால் நகருக்குள்ளேயே விடுதியொன்றில்
அறையெடுத்துத் தங்கிக்கொண்டேன்.
அதிகாலையில் கிளம்புவதாகத் திட்டம். ஆறு மாதங்களுக்கும் மேலாக இழுபட்டுக்கொண்டிருக்கும் வேலை எப்படியாவது முடிந்தால் போதும் என்றிருந்தது எனக்கு.
நள்ளிரவு கடந்த வேளையில் என் அறைக்கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு விழிப்பு வந்தது. எழுந்துபோய் திறந்தபோது நண்பர் நின்றிருந்தார். தலையில் கம்பளியைச் சுற்றிக்கொண்டு
கையில் முழநீளத்துக்கு
டார்ச் விளக்கோடு நின்றிருந்தார். ஒருகணம் எதுவும் புரியாமல் விழித்தேன்.
"என்னங்க சார், நல்ல து¡க்கமா? சரிசரி கெளம்புங்க. ராத்திரி நேரத்துல அருவிய தன்னந்தனியா பாக்கணும்னு ஆசைப்பட்டீங்களே, வாங்க போய் பாத்துட்டு வந்துடலாம்" அவர் உண்மையாகவே என்னை அழைத்தார். அவர் கண்களிலும் பரவசம் தொற்றியிருப்பதைப்
பார்த்தேன்.
"இப்பவா?"
'ஆமாம். வண்டி கொண்டாந்திருக்கேன். வாங்க இப்ப போனா மூணு நாலு மணிக்குள்ள வந்துரலாம்."
எங்கிருந்தோ ஒரு வேகம் கிளம்பி எனக்குள் நிறைந்தது. வேகவேகமாக உடைமாற்றிக்கொண்டு
கம்பளித்துணியைப் போர்த்தியபடி கதவைச் சாத்திவிட்டு இறங்கினேன். அடுத்த சில நிமிடங்களில் எங்கள் வாகனம் ஜோக் அருவியைநோக்கிப்
பாய்ந்தது.
"காலையில உங்க சைட் இன்ஸ்பெக்ஷன் இருக்குதில்லயா? அஞ்சரைக்கெல்லாம்
வீட்டுக்கு வந்துருங்கன்னு
சொன்னாரு பாஸ். அதுக்காக வண்டிய எங்க வீட்டுக்கே எடுத்தும்போயிட்டேன். சாப்பாடு முடிஞ்சி நல்லா தூங்கிட்டேன். திடீர்னு ஒங்க நெனப்பு. கும்பலோடு கும்பலா நின்னு அருவியுடைய இசையைக் கேக்கறதுக்கு பதிலா தன்னந்தனியா, இரவு நேரத்துல நின்னு கேட்டா எப்படி இருக்கும்னு சொன்னது ஞாபகம் வந்துச்சி. இதான் சரியான சமயம்னு உடனே எழுந்து ஓடியாந்துட்டேன். போக ஒருமணிநேரம், வர ஒருமணிநேரம். அருவிகிட்ட ஒருமணிநேரம். இப்ப போனா மூணு நாலு மணிக்குள்ள திரும்பிரலாமில்லையா?" சாலையைப் பார்த்தபடியே அவர் பேசினார்.
என் மனம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எப்போதோ நான் வெளிப்படுத்திய
என் ஆசையை சிரத்தையோடு நிறைவேற்றுவதற்காக
நள்ளிரவில் கிளம்பி வந்திருக்கும் அவருக்கு நன்றி சொல்லும் விதம் புரியாமல் தவித்தது என் மனம். சற்றே நகர்ந்து பிரியத்தோடு அவர் தோளை சில கணங்கள் பற்றியிருந்தேன். அடர்ந்த இருளைக் கிழித்துக்கொண்டு
சென்றது வாகனம். குளிரில் உலகமே உறைந்திருந்தது. வானத்தில் நட்சத்திரங்களும் நிலவும் கண்சிமிட்டாமல் உலகையே பார்த்துக்கொண்டிருந்தன.
அருவிக்கு நெருக்கமாக வாகனம் நின்றது. நிலவின் பொழிவில் அதன் தோற்றம் பலமடங்கு அழகு கூடியதாக இருந்தது. அதை ஒரு அருவியென்று சொல்லக்கூடாது, எழிலும் நளினமும் இணைந்த இளம்நங்கை என்றே சொல்லவேண்டும்.
பள்ளத்தாக்கின் அடிவாரத்தைநோக்கி
அவள் சமுத்திரத்தைப்போலப் பொங்கிப் பாய்ந்தாள். காற்றைப்போல வானத்தைநோக்கித்
தாவினாள். கண்ணுக்குத் தெரியும் எதையும் தொட்டுத் தழுவினாள். ஒவ்வொன்றுக்கும் உயிர்த்தன்மையை
வழங்கினாள். அவள் ஒரு மாபெரும் சக்தி. இந்த உலகத்துக்கு இறவா வரத்தைத் தந்து காப்பாற்றுகிறவள்.
சக்தியின் காலடியில் நிற்பவனைப்போல உணர்ந்தது என் மனம். மானசிகமாக என் நெஞ்சிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்து அவள் காலடியில் வைத்தேன். அந்த இசை நேராக உடலைக் கிழித்துக்கொண்டு
ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்தது. இசையின் ஒவ்வொரு துணுக்கிலும் அளவற்ற மென்மை. இதமான இனிமை. பரவசமான சுகம். அப்படியே என் இடுப்பைச் சுற்றி வளைத்துத் து¡க்கிக்கொண்டு பறப்பதுபோல இருந்தது. என்னையறியாமல் கண்களில் நீர் கட்டியது.
சரியாக ஒருமணிநேரம். தோளைத் தொட்டு "கிளம்பலாமா?" என்று கேட்டார் நண்பர். நான் வாய்பேசாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு
வாகனத்தில் ஏறி உட்கார்ந்தேன். திட்டப்படி அறைக்குத் திரும்பினோம்.
எதுவுமே நடவாததைப்போல மறுநாள் அதிகாலை நிகழ்ந்த இடப்பரிசீலனை தோல்வியிலேயே முடிந்தது. ஆயினும் இரவில் கண்ட அருவியின் வழியாக என் மனம் உணர்ந்த உத்வேகம் மாபெரும் வெற்றி அனுபவமாக நெஞ்சில் இடம்பெற்றுவிட்டது.