மிகச் சிறந்த ஒரு பாடலை அல்லது படைப்பைப் படிக்கும்போது, வாசிப் பனுபவத்தின் பரவசத்தில் அது எப்படித்தான் எழுதப் பட்டிருக்குமோ என்றொரு கேள்வி தானாகவே பிறப்பது இயற்கை. இக்கேள்விக்கு விடை சொல்ல மிக விரிவான ஓர் ஆய்வையே நாம் நிகழ்த்தவேண்டும். பல தளங்களில் இந்த விடைக்கான தடயங்களைத் தேடித்தேடிச் சென்று, சேகரித்துத் தொகுத்து, பின்பு சில குறிப்பிட்ட அடிப்படைகளையொட்டிப் பகுத்து, அந்த ஆய்வு வழங்கக் கூடிய முடிவை அறிந்துகொள்ளலாம். அவ்வளவு நீண்ட கள ஆய்வை நிகழ்த்தி நிறுவ மிக நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் முடிவையறிய உதவக்கூடிய ஒரு தகவலோடு இந்த உரையைத் தொடங்குகிறேன்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால், பாரதி யாருடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில், நமக்கு உதவக்கூடிய அந்தத் தகவல் உள்ளது. பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்துவந்த சமயம் அது. ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் மனைவியோடும் மகளோடும் மகளைப் போன்ற யதுகிரியோடும் கடற்கரையில் அமர்ந்து பேசி, பொழுது போக்கி, வேடிக்கை பார்த்து, விளை யாட்டுக் கதைகளைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் முகம் தெரியாதபடி இருள் கவியத் தொடங்கிவிட்ட தருணத்தில் காற்றில் மிதந்து வந்த ஒரு பாட்டின் வரி பாரதியாரைக் கவர்ந்தது. சட்டென்று, அந்த வரியில் மனம் குவித்த பாரதியார் எல்லோரையும் ஒரு கணம் அமைதியாக இருக்கும் படி கைச்சைகை செய்துவிட்டு, அந்தப் பாட்டின் லயத்திலேயே தோய்ந்து போகிறார். வேகமாக எழுந்து, அந்தப் பாடல் வந்த திசையை நோக்கி நடந்து போகிறார். ஒரு கட்டுமரத்தையொட்டி, வலையைப் பிரித்தபடி மீனவர்கள் அந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். பாரதியார் அவர்கள் அருகில் சென்று அமர்கிறார். தொடர்ந்து பாடும் படி கைச்சைகை காட்டி உற்சாகப்படுத்துகிறார்.
அந்த வரிகளின் லயமும் தாளமும் ஏற்றமும் இறக்கமும் துள்ளலும் அவர் நெஞ்சில் அப்படியே படிந்துபோகின்றன. வேகமாக, தன் சட்டைப் பையில் இருந்து தாளையும் எழுதுகோலையும் எடுத்து, அந்த வரிகளை அப்படியே அடிபிறழாமல் எழுதி வைத்துக்கொள்கிறார். சிறிது நேரம் மனம் விட்டு அவர்களோடு பேசியிருந்துவிட்டு, பிள்ளை களிடம் திரும்பிவந்து, அந்தப் பாட்டை அப்படியே பாடிக் காட்டி மகிழ்ச்சியடைகிறார். அருகில் அமர்ந்து அதைக் கேட்கும் யதுகிரி, இந்தத் தாளம் மிகவும் சுவையாக இருக்கிறது. இப்போது சரஸ்வதி பூசைக் காலம். இந்த அமைப்பில் சரஸ்வதியைப் பற்றி ஒரு துதிப்பாடல் கட்டித் தருவீர்களா என்று கேட்கிறாள்.
உடனே சம்மதம் என்று தலையாட்டி மகிழ்கிறார் பாரதியார். மேலும் பேச்சின் வேகத்தில், தாம் வாழ்ந்த வடநாட்டுப் பகுதியில் சரஸ்வதி பூசை சமயத்தில் காளிதேவிக்கு மிக விரிவான அளவில் வழிபாடு நடைபெறும் என்றும், மீனவர் பாடிய பாட்டின் ராகத்தில் காளிதேவி வாழ்த்துப்பாட்டொன்றைத் தமக்காக இயற்றப் போவதாகச் சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் பாரதியார். பாரதியாரின் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் செல்லம்மா, சரஸ்வதி, காளி யெல்லாம் கிடக்கட்டும், லட்சுமியைப் பற்றிப் பாடினாலாவது, நம் குறைகள் தீர செல்வம் பெருகு மல்லவா என்று ஆதங்கத்தோடு சொல்கிறாள். அதற்கென்ன செல்லம்மா, லட்சுமி துதியையும் பாடி விடுகிறேன் என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார் பாரதியார். சரி போகலாம் வாருங்கள், இருட்டிவிட்டது. நாளை காலையில் எல்லோருக்கும் அவரவர்கள் விரும்பிய துதிப்பாடல் தயாராக இருக்கும் என்று எல்லோரோடும் வீட்டுக்குத் திரும்புகிறார்.
மீனவர்கள் பாடிய பாடல் வரியின் தாளமும் வரியும் அவர் நெஞ்சில் மிதந்தபடியே இருக்கின்றன. எல்லோரும் உறங்கிவிட்ட வேளையில் அவர் எழுந்து, எழுத்து மேசையில் அமர்கிறார். ஒரே நீளமான பாட்டில் மூன்று வெவ்வேறு அமைப்புள்ள பகுதி களை எழுதி, ராகத்தின் அமைப்பிலும் அதை வேறுபடுத்திக் காட்டிக் குறிப்பெழுதி வைக்கிறார். காலையில் மனைவியின் முன்னிலையிலும் பிள்ளைகளின் முன்னிலையிலும் சரஸ்வதி, காளி, லட்சுமி துதிப்பாடல்களை உணர்வுபூர்வமாகப் பாடிக் காட்டுகிறார்.
மீனவர் பாட்டில் படிந்திருந்த அதே உணர்வெழுச்சி, அதே முறையீடு, அதே தொனி. அதே கோரிக்கை. அதே ராகம். ஆனால் வேறு விதமான துதிப்பாடல். மீனவர் பாட்டில் அடங்கியிருப்பதும் பாரதியார் பாட்டில் அடங்கி யிருப்பதும் ஒரே வகையான உணர்ச்சிதான். ஆனால் மீனவர் உணர்த்தும் உணர்ச்சி தம் வாழ்விலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டது. பாரதியார் உணர்த்தும் உணர்ச்சி, தன்னுடைய வாழ்விலிருந்து அவர் கண்டடைந்த ஒன்று.
மீனவர் பாட்டின் உணர்ச்சி, யாரோ ஓர் ஆதிமீனவருடைய பாட்டுணர்ச்சியின் தொடர்ச்சியாக இருக்கலாம். அந்தப் பாட்டுணர்ச்சியும் பழைய ஆதிமனிதனுடைய பாட்டுணர்ச்சியின் தொடர்ச்சியாக இருக்கலாம். எல்லாக் காலங்களிலும் எல்லாப் பாடல்களிலும் மைய உணர்ச்சி ஒன்றுதான். வெவ்வேறு தலைமுறை மனிதர்கள் வழியாக அது வெளிப்படும்போது, வெவ்வேறு விதமான வாழ்வியலோடு கலந்து கலந்து புதுப்புது கோலங்களில் வெளிப்படுகிறது. மூச்சுக்காற்று புல்லாங்குழல் வழியாக ஒருவிதமான இசையையும் நாகசுரத்தின் வழியாக வேறொரு இசையையும் அளிப்பதுபோல.
நாம் தொடக்கத்தில் கேட்டுக்கொண்ட கேள்விக்கான விடையை நம்மால் இப்போது சுருக்க மாகவும் தெளிவாகவும் சொல்லிவிட முடியும். மனம் தனக்குள் பொங்கிப் பெருக்கெடுக்கும் உணர்ச்சியையே ஒரு படைப்பாக வெளிப்படுத்து கிறது. அந்த உணர்ச்சி ஆனந்தம், கிளர்ச்சி, துயரம், வலி, சோகம், சீற்றம், ஆற்றாமை, பிரிவு, இழப்பு, வெறி, வேகம், கொண்டாட்டம், இரக்கம், கருணை, அழுகை, சிரிப்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்றாகப் பொருளை வகுக்கிறது நம் இலக்கணம். ஒரு பாட்டு அல்லது ஒரு படைப்பு தன்னை வெளிப் படுத்திக்கொள்ளும் தருணத்தில் இயற்கையாகவே இம்மூன்றும் இணைந்தே உருவாகின்றன. பழங்களுடன் இணைந்து வெளிப்படும் சுவையைப் போல, முதற்பொருள் என்பது இடமும் காலமும், கருப்பொருள் என்பதில் குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் மரம், செடி, கொடிகள், பறவைகள், நீர்நிலைகள், பொழுது என எல்லாம் அடங்கும். உரிப்பொருள் என்பது, அவ்விடத்துக்குரிய ஒழுக்க நெறி, இம்மூவகைப் பொருளின் சாயல்கள் இல்லாத ஆதிப்பாடல்களே இல்லை. இப்பாடல்களின் பெருமை, இம்மூவகைப் பொருள்களும் அவற்றில் அடங்கியுள்ளன என்பதால் இல்லை, இம்மூவகைப் பொருள்களாலேயே அந்தப் பாடல்களின் உடலும் உயிரும் உருவாக்கப்பட்டுள்ள காரணத்தாலேயே அதன் பெருமை குன்றாததாக இருக்கிறது.
எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாட்டைக் காணலாம். இது ஒரு பாலைத்திணைப்பாட்டு. பாடியவர் காவன்முல்லைப் பூதனார். தலைவன் பிரிந்து சென்றுவிடுகிறான். தலைவி அவன் பிரிவால் வாடுகிறாள். அதே நேரத்தில், தன் பயண வழியில் பிரிவால் கலங்குவனவற்றைக் காண நேர்கிற தலைவன் தன்னை நினைத்து ஒரு வேளை திரும்பி வந்து விடுவானோ என்று கூறி வருத்தப்படவும் செய் கிறாள். அவள் வருத்தத்தைப் போக்கும் விதமாக ஆறுதல் சொல்கிறாள் தோழி. தோழியின் கூற்றாக இப்பாடல் இடம் பெறுகிறது.
அஞ்சில் ஓதி ஆய்வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி - தோழி! எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை
வேனில் ஓர்இணர் தேனோடு ஊதி
ஆராது பெயரும் தும்பி
நீர்இல் வைப்பின் சுரன்இறந் தோரே.
பாலைத் திணைப் பாடல்கள் முழுக்க, ‘வருத்தம் வேண்டாம், வருத்தம் வேண்டாம்’ என ஆறுதல் சொல்லித் தேற்றும் வழக்கமான குரல் தான் இப்பாட்டிலும் இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த முல்லைப்பூதனார் தன் கண்கள் மட்டுமே பார்த்த ஒரு காட்சியை முன்னிலைப் படுத்துவதன் வழியாக தன்னுடைய குரலாக மாற்றுகிறார். கோப்பையில் நிறைந்த வண்ணக் குழம்பைத் தொட்டுத் தான் நினைத்த ஓவியத்தைத் தீட்டும் ஓவியனைப்போல.
‘தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி ஆராது பெயரும் தும்பி’ என்னும் காட்சியின் வழியாகத் தன் கவித்துவத்தை நிறுவுகிறார் முல்லைப்பூதனார். முற்றும் கரிந்து தீய்ந்துபோன மரம். ஓங்கியிருக்கிறது. ஆனால் வாடி வதங்கியிருக் கிறது. எல்லாக் கிளைகளும் கரிந்து இலைகளே இல்லாமல் மொட் டைக் கோலத்தோடு இருந்தபோதும் ஒரே ஒரு கிளையில் எப்போதோ வேனில் காலத்தில் பூத்துக்குலுங்கிய பூங்கொத்தொன்று உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
அப்பூவில் ஒரு துளியளவுமட்டுமே எஞ்சியிருக்கிறது தேன். பசியோடு அம்மலரை நெருங்கும் வண்டின் பசிக்கு அது போதிய உணவே அல்ல. ஆனாலும் அதைத் தேடி வரும் வண்டு துளியளவே ஆன தேனை உறிஞ்சிப் பருகிவிட்டுப் பசி தணியாமல், அங்கேயே சுற்றிச்சுற்றிப் பறந்தபடி இருக்கிறது. கரிந்த மரத்தில் உயிர்தரித்திருக்கும் ஒரே ஒரு கிளை. அதில் பூத்திருக்கும் ஒரே ஒரு மலர். அதில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சொட்டுத்தேன். அது நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு உயிர்ப் பாற்றலை வழங்கும் காதலின் அடையாளம் அல்லவா? துணையில்லாமல் துயரில் மூழ்கி, உருக்குலைந்து, உயிர்தரித்திருக்கும் பெண்ணின் வடிவமாக அல்லவா அந்தக் காட்சி கட்டி எழுப்பப்படுகிறது. முதற் பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் எவ்வளவு தன்னிச்சையாக இந்தப் பாட்டில் கூடி வந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
தோழியின் தேற்றும் குரலொலி ஒலிக்கும் இன்னொரு பாலைப்பாட்டையும் பார்க்கலாம். இது கூவன் மைந்தன் எழுதிய பாட்டில் பிரிந்து போன தலைவனை எண்ணி வாடி, உடலும் மனமும் சோர்ந்துபோய் அமர்ந்திருக்கும் தலைவியின் நிலையை எண்ணி அரற்றும் தோழியின் குரலாக இப்பாடல் ஒலிக்கிறது.
கவலையாத்த அவல நீள்இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே - கூவற்
குரால் ஆன் படுதுயர் இரவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே
குரால் ஆன் படுதுயர் இரவில் கண்ட உயர் திணை ஊமன் என்னும் காட்சியின் வழியாகத் தன் கவித்துவத்தை நிறுவுகிறார் கூவன் மைந்தன். ஒரு பசு கிணற்றில் தவறி விழுந்துவிடுகிறது. அதனால் கரையேற முடியவில்லை; தவிக்கிறது. இரவு வேளையில் அதைப் பார்க்கிறான் ஒருவன். ஆனால் வாய் பேச முடியாதவன் அவன். தானே முன்னின்று காப்பாற்றவும் தெரியாதவன். உதவிக்கு நாலு பேரை அழைத்துக் காப்பாற்றவைக்கும் சக்தியும் இல்லாதவன் அவன்.
ஆறுதல் சொல்ல முற்பட்ட தோழி, இறுதியில் ஆறுதல் சொல்லமுடியாத தன் நிலையைத்தான் சொல்லிவிட்டுச் செல்கிறாள். அவள் ஒரு கிணற்றையும் பசுவையும் சுட்டிக் காட்டுவதைக் கவனிக்கவேண்டும். இருளில் தன் இருப்பை மறைத்துவைத்திருக்கும் அக்கிணறு, நிலத்தடி நீரைத் தேக்கிவைத்திருக்கும் கிணற்றையா சுட்டிக்காட்டுகிறது? காதல் ஊறி ஊறிப் பெருக் கெடுத்து அந்த உணர்வையே தேக்கி வைத்திருக்கும் நெஞ்சக் கிணற்றையல்லவா சுட்டிக்காட்டுகிறது. வேட்கையைத் தணித்துக்கொள்ளச் சென்ற பசு, வேட்கையின் வேகத்தில் கிணற்றில் தவறி விழுந்ததைக் குற்றம் என்று சொல்லமுடியுமா?
இவ்விரண்டு பாடல்களும் பிரிவு என்னும் உணர்ச்சியையே பாடுகின்றன. முல்லைப்பூதனார் தன் கண்கள் கண்டெடுத்த காட்சியின் வாயிலாகப் பிரிவுணர்ச்சியை உணர்த்தும்போது, கூவன்மைந்தன் தன் கண்கள் கண்டெடுத்த காட்சியின் வழியாக அதே பிரிவுணர்ச்சியை வேறுவிதமாக உணர்த்த முயற்சி செய்கிறார். காலம் தோறும் பாடல்களில் கருக்கொள்ளும் உணர்ச்சி ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு கவிஞனும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றின் துணையோடு, அவ் வுணர்ச்சியைத் தனித்துவம் கொண்டதாக மாற்றி விடுகிறான். நம்மை மீண்டும் மீண்டும் கவிதைகளின் அருகில் அழைத்துச் செல்லும் ஒளிச்சுடர்களை மொழியின் வழியாக அக்கவிஞர்கள் ஏற்றி வைக் கிறார்கள். இது இலக்கியத்துக்கேயான ஒரு பொது இலக்கணம்.
சங்கப்பாடல்கள் வழியாக மட்டுமல்ல, இன்று எழுதப்படுகிற எல்லாவகையான இலக்கிய எழுத்துகள் வழியாகவும் இந்த உண்மையை அறிய லாம். முதற் பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என முப்பொருளாலான படைப்பின் சூத்திரம் ஒரு பொதுப் புள்ளியாக எல்லாக் காலங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சங்க காலத்தில் அது அகநானூற்றையும் புறநானூற்றையும் ஐங்கு றுநூற்றையும் பதிற்றுப்பத்தையும் குறுந் தொகை யையும் நற்றிணையையும் வழங்கின. பின்னர் அதுவே சிலப்பதிகாரத்தையும் மணிமேகலை யையும் கம்பராமாயணத்தையும் வழங்கின. அதற்குப் பிறகு பிரபந்தப் பாடல் களுக்கும் பெரிய புராணத்துக்கும் திருவாச கத்துக்கும் இவையே ஊற்றுக்கண்ணாக இருந்தன. பாடல்களின் காலம் மறைந்து உரை நடைகளின் காலம் உருவானபோதும் அந்தச் சூத்திரம் மாறிவிடவில்லை.
சம்பிரதாயமாக, தமிழ்ச் சிறுகதையுலகின் தோற்றத்தைக் குளத்தங்கரை அரசமரம் என்னும் சிறுகதையிலிருந்து கணக்கிட்டு வைத்திருக்கிறது நம் மரபு. அந்த முதல் சிறுகதையிலேயே படைப்பின் சூத்திரம் மௌனமாகச் செயல்படுவதை நுட்பமான வாசிப்புப் பயிற்சி கொண்ட ஒருவரால் கண்டடைந்து விடமுடியும். கதை எல்லோருக்கும் தெரிந்த காதல் தோல்வியையும் மரணத்தையும் முன்வைக்கிற கதைதான். அந்தக் கதையை நிகழ்த்திக்காட்ட
ஒரு படைப்பாளிக்கு ஏன் குளத்தங்கரை அரசமரம் தேவைப்பட்டது என்று ஒருகணம் நின்று யோசித்துப் பார்த்தால், அந்த இடத் தேர்வில் எவ்வளவு மகத்துவம் அடங்கியிருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும். தண்ணீர் நிரம்பித் தளும்பும் குளம். அதன் அருகில் தழையத் தழைய வானெங்கும் விரிந்த கிளைகளோடு பச்சைப்பசேலென நிற்கிற அரசமரம். அக்காட்சியை ஒரு கணம் மனத்துக்குள் தீட்டிப் பார்க்கலாம். மரத்தின் நிழல்மிதக்காமல் குளத்தைத் தீட்டிவிட முடியாது. குளம் என்பது மனம். குளத்தில் தெரியும் மரத்தின் நிழல் என்பது மனத்தில் ததும்பி வழியும் காதல். தனக்குள் படிந்து, நாள் முழுக்க மிதந்தபடி இருக்கும் நிழல். நிழல்தானே ஒழிய ஒருபோதும் உண்மையான மரமல்ல என்னும் உண்மையைக் குளம் ஒருவேளை உணர்ந்தால் என்ன நேரும்? நிறைவேறாத காதல் ஓர் உயிரையே பலிவாங்கிவிடுகிறது.
குளத்தங்கரை அரசமரம் நிறைவேறாத காதலின் அடையாளம். வெயிலில் கரிந்து தீய்ந்த மரத்தில் ஒட்டிக்கொண் டிருக்கும் ஒற்றை மலர்க்கொத்தை, காதலின் அடை யாளமாக முன்வைக்க எந்த உணர்வு குறுந்தொகையின் முல்லைப்பூதனாரைத் தூண்டியிருக்குமோ, அதே உணர்வுதான் வ.வெ.சு.ஐயருக்கும் குளத்தங்கரை அரசமரத்தைக் காதலின் அடையாளமாகக் கண்டறியத் தூண்டியிருக்கும். இந்த ஒற்றுமையில் நாம் உய்த்துணரவேண்டிய உண்மை, முல்லைப் பூதனாரின் தாக்கம், வ.வெ.சு.ஐயரிடம் இருந்தது என்பதல்ல, எவ்வளவு நீண்டகால இடைவெளி இருந்தபோதும், இருவரிடமும் வெளிப்பட்டிருப்பது காதல் என்னும் ஒரே விதமான உணர்ச்சி என்பதாகும். முல்லைப்பூதனார் அதை, தான் கண்ட ஒரு மரத்தின் வழியாக முன்வைக்கிறார். வ.வெ.சு.ஐயர் தான் கண்ட இன்னொரு மரத்தின் வழியாக முன்வைக் கிறார்.
நவீன தமிழ்ச் சிறுகதையின் சிகரமான புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ தமிழின் சாதனைக் கதைகளில் ஒன்று. நீண்ட காலம் தன்னோடு வாழ்ந்த மனைவியை மரணம் தன்னிடமிருந்து பிரித்துச் செல்வதை, தடுக்கவியலாத கையறு நிலையில் நின்றபடி பார்க்கும் கணவனின் கதை என்ற பொதுவான தோற்றத்தை அக்கதை கொண் டிருந்தாலும் அடிச்சரடாக உயிருக்கும் மரணத் துக்கும் நிகழும் ஒரு மௌனப்போராட்டத்தையே அது முன்வைக்கிறது. எந்த இடத்திலும் அதைச் சொற்களால் சுட்டிக்காட்டாமல் காட்சியின் வழியாகவே உணர்த்தும் போக்கில்தான் புதுமைப் பித்தனின் மேதைமை வெளிப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிற அந்த வீடு இருள் நிறைந்ததாகவே காட்டப்படுகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மனைவி. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எழுந்துவரமுடியாதவள் அவள்.
அதனால், அவளைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியே செல்லும் கணவன் உள்ளிருந்து யாரோ தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டதுபோல ஓரு தந்திரம் செய்து பூட்டி விட்டுச் செல்கிறான். திரும்பி வந்ததும், இன்னொரு தந்திரத்தால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்கிறான். அந்த வீட்டில் நடமாட்டம் இருக்கும் போதும் சரி, இல்லாதபோதும் சரி, இருள் படிந்த ஒன்றாகவே காட்சியளிக்கிறது. எங்கெங்கும் அடர்த்தியான இருளின் ஆட்சி. அவ்வப்போது கணவனோ அல்லது மனைவியோ ஏற்றிவைக்கிற விளக்கின் சுடர் மிகமங்கலாக ஒளியை வழங்குகிறது. முற்றம், படுக்கையறை, சமையலறை, கூடம் எல்லா இடங்களிலும் இருளும் சுடரும் ஒன்றையொன்று விரட்டத்துடிப்பதுபோன்ற தோற்றம் மிதந்தபடி இருக்கிறது.
சமையலறைக்குள் நுழையும்போதும் சரி, மருத்துவரை வீட்டுக்குள் அழைத்துவரும் போதும் சரி, கணவனின் முன்னால் அந்த விளக்கு ‘மினுக்மினுக்’கென்று படபடத்தபடி எரிந்து கொண்டே இருக்கிறது. இறுதியில் கணவனின் பாசமும் சீராட்டலும் மருத்துவரின் மருந்தும் காப்பாற்றமுடியாத ஒரு கரிய தருணத்தில் செல்லம் மாளின் உயிர் பிரிந்துபோகிறது. இறந்துபோன மனைவியின் உடலை வெந்நீரில் குளிப்பாட்டி, அவள் ஆசைப்பட்ட புடவையை உடுத்திப் படுக்க வைக்கிறான் கணவன். மரணப் போராட்டத்தையும் விளக்குத் திரியின் படபடப்பையும் இணைக்கும் கவித்துமான புள்ளி, புதுமைப்பித்தன் கண்டறிந்த சத்தியம். இரக்கத்தையும் அன்பையும் குழிதோண்டிப் புதைத்துவிட்ட மகாமசானம் இந்த நகரம் என்று கண்டுசொன்ன அதே புதுமைப்பித்தன் முன் வைத் திருக்கும் மற்றொரு சத்தியம்.
தமிழ்ச் சிறுகதையின் மற்றொரு மேதை அசோகமித்திரன். ‘விமோசனம்’ அவருடைய முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. இதுவும் பற்றாக்குறையோடு வாழ்க்கையை நடத்துகிற ஒரு கணவன் மனைவியின் சிறுகதை. பொறுப்பில்லாத முரட்டுக் கணவன். பொறுமையோடு குடும்பத்தை நடத்திச் செல்கிற மனைவி. ஒரு சுவாமிஜி நடத்துகிற பூசையில் கலந்துகொண்டு இருவரும் ஒருநாள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இடுப்பில் குழந்தையோடும் கையில் பையோடும் நடந்துவரும் மனைவியால் எப்படி வேகமாக நடந்துவர முடியும் என்கிற எதார்த்த அறிவுகூட இல்லாமல், தனக்கு நிகராக வேகமாக ஓடிவந்து பேருந்துக்குள் ஏறத் தெரியாததை ஒரு குற்றமாகக் கண்டு, பொது இடம் என்று கூடப் பார்க்காமல் மனைவியை அடிக்கிறான் அவன்.
வீட்டுச் சாவியைக் கண்டுபிடித்து எடுத்துத் திறப்பதில் உருவான தாமதத்தைக்கூடப் பொறுத்துக் கொள்ளாமல் வசைபாடுகிறான். நள்ளிரவில் எழுந்து அழுகிற குழந்தையை அடக்கத் தெரியாதவள் என்கிற கோபத்தில் நேரம் காலம் தெரியாமல் அடித்துத் துன்பப்படுத்துகிறான். கதவுவரை அடித்து இழுத்து வந்து வெளியே போ என்று தள்ளிவிடப் பார்க்கிறான். எதார்த்தத்தை கொஞ்சம்கூடப் பொறுத்துக் கொள்ளாத அவனுடைய மடமையை அதுவரை சகித்துக்கொண்டிருந்தவள் அக்கணத்தில் சீற்றம் கொள்கிறாள். சட்டென்று தன்னிச்சையாக எதிர்ப்பைக் காட்டி ‘ம்’ என்று உறுமுகிறாள். ‘ஜாக்கிரதை!’ என்று எச்சரிக்கிறாள். அவ்வளவு தான். அந்த உறுமலும் வார்த்தையும் அவனை அப்படியே அடக்கிவிடுகின்றன. அவன் வீட்டை விட்டே வெளியேறி விடுகிறான். சுவாமிஜியை மீண்டுமொருமுறை பார்த்தால் இருண்டுபோன தன் வாழ்வுக்கும் விமோசனம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவள் மிகவும் சிரமப்பட்டு, அந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரைச் சந்திக்கிறாள்.
போனமுறை வந்தபோது, தொலைத்துவிட்ட பால்புட்டி அவளுக்கு அங்கே கிடைக்கிறது. ஆனால் தொலைந்துபோன கணவன் திரும்பிவரவே இல்லை. இந்த முரண் வழியாகவும் இச்சிறுகதையைப் பார்க்கலாம். அவலம் தொனிக்கும் முரண்! அன்று வானத்தில் சுடர்விட்டபடி இருந்த அதே நிலவு தான் இன்றும் சுடர்விட்டபடி இருக்கிறது. ஆனால் அன்று எங்கள் வசம் இருந்த குன்றும் எங்கள் தந்தையும் இன்று எங்கள்வசம் இல்லை என்று பாரிமகளிரின் குரலாக ஒலிக்கும் பாட்டின் அவலத்துக்கு நிகரானது இந்த அவலம். ஆனால் கதைக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அவனோடு வாழ்ந்த வாழ்வே, அவள் மீது படிந்த சாபம். அவன் விலகிச் சென்றதே அவளுக்குக் கிட்டிய சாபவிமோசனம். உள்ளூர விமோசனமில்லாத வாழ்வில் அவள் மூழ்கிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் தொனித்தாலும், அது வெறும் மாயை, அவளுக்குக் கிட்டியிருப்பது மிகப்பெரிய விமோசனம்.
வண்ணதாசன் சிறுகதைகள் நுட்பங்களையே உடலாகக் கொண்டவை. தூரிகையைக் கையாளும் ஓவியனின் லாவகத்தோடும் கச்சிதத்தோடும் அவர் மொழியைக் கையாள்கிறார். ‘போய்க்கொண் டிருப்பவள்’ அவருடைய முக்கியமான சிறுகதை களில் ஒன்று. வாழ்க்கையே நரகமாகிப்போன ஒருத்தி அன்னம் ஜூடி. பிரியமில்லாத கணவனால் குலைந்துபோய்விட்டது அவள் வாழ்க்கை. ஏழெட்டு ஆண்டுகள் கழித்து அவள் இருப்பிடத் தகவல் தெரிந்து தேடிச் செல்கிறான் ஒருவன். அவன்தான் ஜூடியின் கதையை நமக்குச் சொல்கிறவன். ஜூடியின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சொல்வதற்கு முன்னால் வழியில் பார்க்க நேர்ந்த ஒரு சாக்கடையைப்பற்றிச் சொல்கிறான் அவன்.
கன்னங்கரேலென்ற சாக்கடை. அருவருப்பான சாக்கடை. சிறுசிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போலத் தோன்றுகிற சாக்கடை. முட்டை ஓடுகள் மிதக்கும் அந்தச் சாக்கடைக் கருப்பில் வதங்கிய பூச்சரமொன்று சுருண்டுகிடக்கிறது. ஜூடியின் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்புகளும் அவமானங்களும் வருத்தங்களும் பத்துப் பக்கங்களுக்கும் மேலாகக் கதைநெடுக இடம்பெற்றிருக்கின்றன. சாக்கடையும் பூச்சரமும் அதன் படிமமாக மாறிவிடுகின்றன. அது வண்ணதாசன் என்னும் கலைஞன் கண்டறிந்த ஒரு முக்கியமான படிமம். தோரணமாகக் கட்டப் பட்ட பூச்சரத்தின் அசைவை வரவேண்டாம் வர வேண்டாம் என நகரத்துக்குள் காலெடுத்து வைக்கும் தம்பதியினரைத் தடுப்பதுபோல உருவகித்துப் பாடிய இளங்கோவடிகளை நினைத்துக்கொள்ளலாம். அதுவும் ஒரு பூச்சரம்!
இவை ஒருசில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. காலத்தால் நிரந்தரமானவை. கலைச் சிற்பங்கள் வாழ்கிற கோவில்களைப் போல. ஓவியங்கள் மிளிரும் குகைகள் போல. வாசிப்பின் சுவையில் திளைக்கவிரும்பும் வாசகர்கள் தேடித்தேடிப் படிப்பதன்மூலம் காலத்தில் நிரந்தரமாகிவிட்ட அவற்றை அறிந்துகொள்ளலாம். மௌனி, பிச்ச மூர்த்தி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், தி.ஜானகி ராமன், கி.ராஜ நாராயணன், பிரபஞ்சன், இராஜேந்திர சோழன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன் என எண்ணற்ற ஆளுமைகளை அறிந்துகொள்ளலாம்.
படைப்பின் அடிப்படை இயல்பு உணர்ச்சி. ஒட்டுமொத்த மானுட வாழ்வின் உணர்ச்சி அது. ஒரு காட்சியை நம்பகத் தன்மையோடு உருவாக்கி, அதன் பின்னணியில் அந்த உணர்ச்சியைப் படிய வைக்கிறார்கள் படைப்பாளிகள். கிட்டத்தட்ட, ஒரு கிணற்றைத் தோண்டி, அதில் ஊற்றைச் சுரக்க வைப்பது போல. பொருத்தமான ஒரு படிமத்துக்காக வேட்கை கொண்ட விலங்குபோல அவர்கள் மனம் அலைந்தபடியே இருக்கிறது. உணர்ச்சிகளின் அடையாளங்களாகவும் படிமங்களாகவும் படைப் பாளிகள் கண்டறியும் காட்சிகளும் பொருட்களும் எதார்த்தத்தில் நம் பார்வையில் தினம் தினமும் பட்டு நகர்கிறவையாகவே இருக்கக்கூடும். படைப் பாளிகள் அவற்றைத் தனித்தன்மை மிக்கவையாக ஒரே கணத்தில் மாற்றிவிடுகிறார்கள், கல்லிலிருந்து சிற்பத்தைச் செதுக்கி எடுப்பது போல.
மானுட வாழ்க்கை என்பது மிகப்பெரிய குன்று. அது நேற்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது; நாளையும் இருக்கும். காலந்தோறும் அந்தக் குன்றின் மீதேறி நடந்துகொண்டே இருக்கிறார்கள் மனிதர்கள். அதைச் சுற்றிச் சுற்றி வலம் வருகிறார்கள், மழை மேகங்களைப் போல. அதன் பச்சை, அதன் பூக்கள், அதன் செறிவு அனைத்திலும் மனம் பறிகொடுத்து அழகைச் சுவைத்தவாறு போய்க்கொண்டே இருக் கிறார்கள். களைப்பாக உணரும்போது அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். புத்துணர்ச்சி பெற்றதும் மீண்டும் பயணத்தைத் தொடர்கிறார்கள். ஆயுள் முடிந்ததும் மறைந்துபோகிறார்கள். அப்போது வேறொரு புள்ளியிலிருந்து பயணத்தைத் தொடர்ந்த வர்கள் அங்கே வந்தடைந்துவிடுகிறார்கள். குன்றின் தோளிலேறியும் உச்சியைத் தொட்டும் விளையாடிக் களிக்கும் மேகங்கள் சட்டென ஒரு தருணத்தில் மழையெனப் பொழிகிறது. இலக்கியமே அம் மேகங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய மேகங்கள்! புதிய புதிய மழை!
(புதுவைப் பல்கலைகக்கழகத்தில் 10-2-2012 அன்று ‘நவீன இலக்கியங்களில் செவ்வியல் இலக்கியத் தாக்கம் - என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறுகதைப் பிரிவில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்)