Home

Monday, 24 August 2015

தாவாரமும் தேவாரமும்

எங்கள் பள்ளியில் ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு சிதம்பரம் ஜெயராமன் பாடல்கள் என்றால் உயிர்.  அவர் பாடும் பாடல்களைக் கேட்பதற்காகவே வாரத்துக்கு ஒருமுறை வரும் பொழுதுபோக்கு வகுப்புக்காகக் காத்திருப்போம்.  நாங்களும் பாடிப் பழக வேண்டும் என்பதற்காகவே அந்தப் பாட வேளை உருவாக்கப்பட்டது.  ஆனால் தொடக்கத்தில் எல்லாருமே வெட்கத்தில் தலை குனிந்திருப்போம்.  அதனால் எங்கள் தயக்கத்தையும் கூச்சத்தையும் போக்குவதற்காக வழக்கமாக அவரே முதல் இரண்டு பாடல்களைப் பாடுவார்.  ஒரு பெரிய கோட்டையின் கதவைக் காலாலேயே உதைத்துத் திறந்துவிடுவது போல அந்தப் பாடல்கள் எங்கள் தயக்கத்தை அகற்றிவிடும்.  உற்சாகம் பொங்க ஒவ்வொருவரும் ஐயா நான், ஐயா, நான் என்று வாய்ப்புக்குக் கை களை உயர்த்திக் காட்டுவார்கள்.  ஐயா ஒவ்வொரு வராகப் பாட அழைப்பார்.  மறுகணமே எங்கள் பாடல்கள் காற்றில் முழங்கத் தொடங்கும்.

“கா கா”, “காவியமா ஓவியமா”, “ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே”, கொடுத்தவனே எடுத்துக்கிட்டாண்டி” என எல்லாப் பாடல்களும் என் மனதில் இன்றளவும் பதிந்திருப்பதற்குக் காரணம் ராதாகிருஷ்ணன் ஐயாதான்.  வானொலியில் நேயர் விருப்பம் ஒலிபரப்பில் கேட்பது போல நாங்களே பாட்டின் வரியைச் சொல்லிப் பலமுறை பாடச் சொல்லிக் கேட்போம்.  ஒருநாள் வழக்கத்துக்கு மாறாகப் புதிய பாடலொன்றைப் பாடினார் ஐயா.  பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பாடுவது போல அமைந்த பாடல்.  அந்தக் கிண்டலையும் விரக்தியையும் கசப்பையும் ஐயாவின் குரல் துல்லியமாக வெளிப்படுத்தியது.  அந்தக் கசந்த குரல் என்னை என்னமோ செய்தது.  நான், ஐயாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  வெறு மையும் தவிப்பும் குடிகொண்டிருந்தன. “தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசின் முன் செல்லாதடி குதம்பாய் காசின்முன் செல்லாதடி” என்ற வரியை அப்படியே என் மனம் உள்வாங்கிக் கொண்டது. பட்டுப்பட்டு நொந்து நொந்து, தன் வாழ்க்கையையே தேர்வுக்களனாக்கி உலக ஞானத்தைக் கற்றுக் கொண்டவனின் கசப்பு படிந்த அந்தக் குரலை மறக்கவே முடியாது.  அந்த வரியை மீண்டும் மீண்டும் முணுமுணுத்தபடி இருந்தேன்.  வகுப்பு முடியும் வரை மற்றவர்கள் பாடிய எந்தப் பாட்டும் என் மனத்தில் பதியவில்லை.  குதம்பாய் பாட்டைத் திரும்பத்திரும்ப அசை போட்டபடி இருந்தேன்.  ராகம் படிந்து வரிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மனப்பாடமாக ஆன பிறகு ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருளை யோசித்தேன்.  எல்லாச் சொற்களும் பழகியவையாகவே இருக்க குதம்பாய் மட்டும் புதிய சொல்லாக இருந்தது. இறைவனைவிடப் பெரிது என்ற கண்டுபிடிப்பை முன்வைப்பதால் ஒருவேளை இறைவனைக் குறிக்கும் சொல்லாகவே இருக்கக்கூடும் என்று நினைத்தேன்.  வகுப்பு முடியும் வேளையில் அவரை நெருங்கித் தயக்கத்தோடு கேட்டேன்.
“ஒனக்கு எப்படி தோணுது?” ஐயா என்னிடமே கேள்வியைக் கேட்டார்.  “சாமி பேரா சார்?”என்று பதில் சொன்ன என்னைப் பார்த்து ஐயா மெதுவாகப் புன்னகைத்தார்.
“மாணிக்கம் ஒனக்குத் தெரியுமாடா?” எனக்குப் பக்கத்தில் இருந்த பையனிடம் கேட்டார் ஐயா.  அவன் தயக்கத்தோடு எழுந்து “குதம்னா தெரியும் ஐயா.  குதம்பாய்னா புரியலை ஐயா” என்று கைகட்டிக் கொண்டு சொன்னான்.  வகுப்பே சிரித்தது.  “ஒக்காருடா...” என்று ஐயாவும் சிரித்தார்.
“யாராச்சும் பொண்ணு பேரா இருக்குமா ஐயா?”
“பூ பேர்தான ஐயா?”
“சூரியனைக் குறிக்கிற சொல்லுங்க ஐயா”
“வாடா போடான்னு சொல்றாப்புல இருக்குது ஐயா”
ஆளாளுக்கு மனத்தில் தோன்றியதையெல்லாம் சொன்னார்கள்.  உற்சாகத்தில் ஐயாவின் முகம் பளபளத்தது.  “சிறுமின்னு சொல்றமே.  அந்த மாதிரி சின்ன வயசு பெண் பிள்ளங்களைக் குறிக்கிற சொல் தான் குதம்பாய்.”
அத்தோடு அன்றைய வகுப்பு முடிந்தது.  எனக்கு அந்தப் பதில் அவ்வளவாக நிறைவளிக்கவில்லை.  விசித்திரமாக ஒலிக்கும் அந்தச் சொல் ஒரு பெண்ணை அடையாளப்படுத்துகிற சொல்லாக எப்படி மாற முடியும் என்ற ஐயம் குடைந்தபடியே இருந்தது.  வகுப்பைவிட்டு வெளியேறி ஆசிரியர் அறையை நோக்கிச் செல்லும் ஐயாவின் பின்னாலேயே நானும் சென்றேன்.  அறையின் மூலையில் இருந்த குடத்திலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துப் பருகிவிட்டு தன் நாற்காலியில் வந்து உட்காரும் வரை கதவருகேயே காத்திருந்தேன்.
சிறிது நேரம் மேசையின் இழுப்பறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தவர் தற்செயலாகத் திரும்பிய போது தான் என்னைக் கவனித்தார்.  “என்னடா இங்கே நிக்கற?”என்று கேட்டார்.  “சிறுமிக்கும் குதம் பாய்க்கும் உள்ள சம்பந்தம் தெளிவாகலை ஐயா”என்றேன்.  ஐயா நாற்காலியிலிருந்து எழுந்து என்னை நோக்கி நடந்து வந்தார்.  தோளைத் தட்டி உள்ளே அழைத்துச் சென்றார்.  “நீ தான் இலக்கணப் புலியாச்சே, கண்டுபிடி” என்றார். நான் அவர் கண்களையே சில கணங்கள் பார்த்தேன்.  பிறகு ஐயா “வளைதொடீன்னா என்ன சொல் பாப்போம்” என்றபடி என் முகத்தைப் பார்த்தார்.
“வளையலை அணிந்திருப்பவளேன்னு பொருள் ஐயா”
ஐயா புன்னகைத்தார்.  “சிங்கம்டா நீ.  அதே பொருள்தான்டா இதுக்கும்.  குதம்பையை அணிந் திருப்பவள் குதம்பாய்.  அவ்வளவுதான்.  அங்கே வளையல்.  இங்கே குதம்பை” என் மனத்தில் சட்டென்று ஒரு சுடர் பற்றியெரிந்தது.  “வளையல்னா தெரியும் ஐயா. பார்த்திருக்கிறோம்.  குதம்பைன்னா தெரியலையே ஐயா.  அது என்ன?” என்று மீண்டும் கேட்டேன்.  “அந்தக் காலத்துல போட்டுகிட்ட காதுவளையத்துக்குத்தான்டா குதம்பைன்னு பேரு.  இப்ப வழக்கத்துல இல்ல” என்று மறுபடியும் பொறுமையாகப் பதில் சொன்னார் ஐயா.  ஒரே கணத்தில் எல்லாம் விளங்கிவிட்டது.  நான் நிறைவோடு சிரித்தேன்.
“ஓடி விளையாடு பாப்பான்னு பாரதியார் பாப்பா பாட்டு பாடினாரே, அந்த மாதிரி அந்த காலத்துல ஒரு சித்தர் குழந்தைகளுக்காக சில கருத்துக்கள பாடி வச்சார்.  அந்த பாட்டால குதம்பைச் சித்தர்னு அவருக்கு பேரே வந்திடுச்சி”
நான் கேட்காமலேயே ஐயா சொல்லத் தொடங்கினார்.
“இட்டார் பெரியார், இடாதோர் இழிகுலத் தார்னு ஒளவையார் வேகமா பாடறாங்களே.  அந்த மாதிரி குதம்பைச் சித்தரும் ரொம்ப வேகமா சில கருத்துக்கள சொல்லியிருக்காரு. “ஆண்சாதி பெண்சாதி ஆகும் இரு சாதி, வீண்சாதி மற்ற வெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம்”னு ஒரு வாக்கியம்.  இந்தச் சமூகத்தின் தலையில அடிக்கற மாதிரி பாடறாரு.  சாதியில ஏற்றத்தாழ்வு இருக்கவே கூடாதுங்கறதுதான் அவருடைய எண்ணம். “பற்பல சாதியாய் பாரிற் பகுத்தது கற்பனை ஆகுமடி குதம்பாய் கற்பனை ஆகுமடி”ன்னு சொல்றாரு.  அந்தக் காலத்துல இதுலாம் பெரிய புரட்சிகரமான கருத்துங்க”
ஐயா சொல்லச் சொல்ல நான் அந்த வரிகளை யெல்லாம் சிதம்பரம் ஜெயராமன் குரலில் மாற்றி ஒலிக்க வைத்துக் கொண்டிருந்தேன்.  நேரிடையாக அந்தக் கருத்துகள் நெஞ்சில் அப்படியே பதிந்தன.  சில கணங்கள்வரை ஐயா பேச்சே இல்லாமல் உறைந் திருந்தார். பிறகு மெதுவான குரலில் “சித்தருங்க தான் உண்மையிலேயே பெரிய புரட்சிக்காரர்கள்.  நீ பெரியவனானதும் சித்தருங்க பாடல்களை யெல்லாம் படி.  உனக்குத் தானாகவே புரியும்.”என்றார்.  நெருங்கி வந்து என் தலைமீது தன் விரல் களால் செல்லமாக ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு கன்னத்தில் தட்டினார்.  நான் ஐயாவின் முகத்தை அண்ணாந்து பார்த்து“ஐயா, இன்னும் ஒரே ஒரு கேள்வி.  நீங்க இன்னிக்கு பாடன பாட்டுல பணம் தான் ஞானத்தவிட பெரிசுன்னு சொல்றாப்புல வரிங்கள்ளாம் வருதே, அது உண்மையா ஐயா?அப்படியா சித்தர் சொல்றாங்க?” என்று கேட்டேன்.  “அது சித்தருங்க பாட்டு இல்லடா.  அந்த சாயல்ல சினிமாக்காரங்க பாட்டு.  அவுங்களுக்குத் தகுந்த மாதிரி மாத்திகிட்டாங்க. உண்மையில் ஞானம் தான்டா இந்த உலகத்துலயே எல்லாத்தவிடவும் பெரிசு” என்று செல்லமாகக் கன்னத்தில் தட்டி அனுப்பி வைத்தார்.
பள்ளி நாட்களில் அன்று என் நெஞ்சில் நுழைந்த குதம்பைச் சித்தரின் பெயர் அழுத்தமான இடத்தைப் பெற்றுக் கொண்டது.  வளர்ந்து பெரிய வனான பிறகு, இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டிருந்த சமயங்களில் சித்தர் பாடல்களைத் தேடிப் பார்த்தேன்.  குதம்பைச் சித்தரின் பெயர் ஏற்கனவே விதையாக விழுந்து மரமாக வளர்ந்து நின்றிருந்ததால் அவர் பாடல்கள் மீது என் கவனம் உடனடியாகத் திரும்பியது.  குதம்பாய் என்னும் சொல்லுக்கான பொருளைத் தேட வேண்டிய தேவை இப்போது இல்லை.
அன்னாய், குழந்தாய் ஆகியவை போலக் குதம்பாயும் ஒரு விளிச்சொல் என்பது இயற்கை யாகவே புரிந்தது.  கடவுள் வாழ்த்தாக இடம் பெற்றிருக்கும் “பூரணம் கண்டோர் இப்பூமியிலே வரக் காரணம் இல்லையடி - குதம்பாய் - காரணம் இல்லையடி” என்னும் முதல் பாட்டைப் படிக்கும் போதே அதன் சொல்லழகுக்கு என் மனம் பணிந்தது.  ஒரு புறம் வாழ்வின் போலித்தன்மையைச் சீற்றத் தோடு சுட்டிக்காட்டும் போக்கு.  இன்னொருபுறம் ஆணி அடிப்பதுபோல நெஞ்சில் பதியும்படி உண் மையை எடுத்துரைத்து நிறுவும் வேகம். இவ் விரண்டு இழைகளாலும் பின்னப்பட்டவையே குதம்பைச் சித்தரின் பாடல்கள் என நானாகவே வகுத்துக் கொண்டேன்.
வாசிப்பு வசதிக்காக குதம்பைச் சித்தரின் பாடல்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து உடலைப் பழித்தல், மாதரைப் பழித்தல் என்றெல்லாம் தலைப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன.  இந்தத் தலைப்புகள் பாடல்களைப் படிக்கத் தொடங்கும் முன்பேயே படிப்பவர்களின் மனநிலையைத் தகவமைக்கும்படி உள்ளன என்பதை உணர்ந்தேன்.  அந்தத் தலைப்புகளுக்கும் பாடல்களின் மெய்ப் பொருளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உடலைப் பழிக்கும் பாடல்கள், எதுவுமே நேராக உடலைப் பழிப்பவை அல்ல.  கன்றை விடாது பின்தொடர்ந்து செல்லும் கற்றாவைப்போல நமக்கும் ஒரு கடமை இருக்கிறது. நாம் பின் தொடர்ந்து செல்லவேண்டியது வாழ்வின் மேன்மையைத் தேடி.  பேதமெதுவும் இல்லாமல் மானுடக் கூட்டத்தினர் அனைவரும் இணைந்து வாழும் வாழ்க்கையைத் தேடி.
இந்த உடலும் உயிரும் அறிவும் செல்வதும் அந்த ஒரு பயணத்துக்காகவே.  அப்போதுதான் பூரணம் அடையமுடியும்.  பூரணம் அடைந்தவர்கள் மட்டுமே பிறவாநிலையை அடைய முடியும்.  அதுவே முக்தி.  அதுவே சரண்.  பூரணத்தை அடைய முடியாமல் முக்திப் புள்ளியைத் தொட முடியாது.  பூரணம் எய்துவதோடு மட்டுமின்றி அறத்தின் வழியில் நிற்க வேண்டும்.  உடல், மனம், சொல் அனைத்தாலும் அறத்தின் பாதையில் நடக்க வேண்டும். இதுவே சித்தர் காட்டும் நெறி.  அறத்தின் பாதையில் நடக்காத உடலையோ மனத்தையோ சொல்லையோ காணும் போது சித்தரின் குணம் சீற்றம் கொள்கிறது.
வேகமாகச் சொற்களைக் கொட்டும்படி நேர்கிறது.  ஒரு சாபம் போல.  “பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு வாசனை ஏதுக்கடி” என்ற கேள்வியின் பொருள் உடலைப் பழித்தல் என்னும் ஒற்றை நோக்கம் உள்ளதாகக் குறுக்கிப் பார்ப்பது பிழை.  இந்த மானுட உடல் பெரிய வரம்.  இதை ஈடுபடுத்த வேண்டிய துறைகள் ஏராளம்.  இதற்கு உரிய கடமைகள் ஏராளம்.  அவற்றில் ஈடுபடுத்த வேண்டிய இந்த உடலை, இப்படி வாசனைத் தைலம் பூசி வருடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதால் உருவாகும் கசப்புதான் சித்தரை இப்படிப் பேச வைக்கிறது.
“சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும் மேலை மினுக்காமடி” என்ற வரிகளில் கசியும் ஏளனமும், சேலை கட்டுவதிலும் தங்க நகை களிலும் நமக்கிருக்கின்ற நாட்டத்தைவிட மனத்தையும் எண்ணத்தையும் பளிங்கு போலக் களங்க மின்றி வைத்துக் கொள்வதில் நாட்டமுடையவர் களாக நாம் இருக்கவேண்டும் என்பதற்காகவே என்றுதான் தோன்றுகிறது.  “மஞ்சு போலாகி வளர்ந்திருக்கும் கூந்தலும் பஞ்சு போலாகிவிடும்” என்றும்“பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள் பின்னாலே ஒட்டிவிடும்” என்றும் ஆதங்கத்தோடு சொல்லும் வரிகள் மாதரைப் பழிப்பவை அல்ல.  வாழும் காலம் சிறிதாகவும் கடமைகள் அதிகமாகவும் உள்ள வாழ்க்கையில் கவனம் கொள்ள வேண்டிய திசையில் போதிய கவனமில்லாமல் அலைபாய்வதைக் கண்டித்து நெறிப்படுத்துவதற்காக எழுந்த குரல். “கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல் நல்ல விரதமடி” என்றொரு வரி மின்னலடித்தது போலக் கண்ணில் பட்டது.  அழிபசியை நாம் அறிந்திருக்கிறோம். உறு பசியையும் அறிந்திருக்கிறோம்.
கொடும்பசியையும் தெரிந்து வைத்திருக்கிறோம்.  குளிர்பசி இதுவரை நாம் அறியாத சொல்.  நடுங்க வைக்கிற குளிர் போலப் பசியும் நடுங்க வைக்கிறது.  மனத்தில் சட்டென்று ஒட்டிக் கொள்கிற சொல் லாட்சி.  பூரணன் என்ற சொல்லுக்கு அவர் மீண்டும் மீண்டும் வரையறைகள் வழங்கியபடியே செல் கிறார்.  எவ்வுயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பதும் இரக்கத்தோடு உயிர்களின் பசிப் பிணியை நீக்குவதும் பூரணத்தை நோக்கி நகரும் வழிகளில் ஒன்று.  நெஞ்சில் நிரம்பும் அன்பும் கனிவும் அல்லவா இக்குணங்களுக்கு அடிப்படைகள்.  சித்தர் இதையே மீண்டும் மீண்டும் எல்லாப் பாடல்களிலும் வெவ்வேறு கோணங்களிலிருந்து வலியுறுத்துகிறார் என்று தோன்றுகிறது.
சித்தர் பாடல்களால் என் மனம் நிரம்பிக் கொண்டிருந்த நேரத்தில் நண்பரொருவர் பார்க்க வந்திருக்கிறார்.  அவரிடம் என் மனத்தில் தோன்றி யதை எடுத்துச் சொன்னேன்.  அவருக்கு அதில் உடன்பாடில்லை.  சித்தர் பாடல்களின் மையம் நாத்திகவாதமும் வாழ்க்கை மறுப்பும் என்று வேகமாக வாதாடினார்.  அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.
“நாத்திக வாதம் கடவுளை மறுக்கிறது.  அதாவது கடவுளைக் கொண்டாடாதே. வாழ்க்கையைக் கொண்டாடு என்று சொல்கிறது.  வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிற ஒருவர் எப்படி வாழ்க்கையை மறுத்துப் பேச முடியும்? இது முரணாகப் படவில்லையா உங்களுக்கு?”
அவர் சட்டென்று ஒரு கணம் தடுமாறினார்.  “கடவுளையும் கொண்டாட வேண்டாம்.  வாழ்க் கையையும் கொண்டாட வேண்டாம்.  கொண்டாட்டம் என்கிற திளைப்போ வேண்டாம். அறவழியில் நடந்தால் போதும் என்று உணர்த்துவதாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?”தயங்கித் தயங்கிக் கேட்டார்.
“அறவழி என்பது என்ன? அன்பையும் கனிவையும் நிராகரிக்கின்ற அறவழி என ஒன்றிருக்கிறதா நண்பரே?” நான் அவர் கண்களைப் பார்த்தேன்.  “எதைப் பேசினாலும் அதை உங்கள் வாதத்தை நோக்கிக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்” என்று முணுமுணுத்தபடி புன்னகைத்தார் அவர்.
“தாவாரம் இல்லை.  தனக்கொரு வீடில்லை.  தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்.  தேவாரம் ஏதுக்கடி என்றொரு பாட்டு இருக்கிறதல்லவா? அதில் வெளிப்படுவது நாத்திகப் பார்வை அல்லவா?” அவர் குரலில் ஒரு புதுவேகம் தொனித்தது.
“இல்லை நண்பரே.  அது நாத்திகப் பார்வை அல்ல.  மனிதாபிமானப் பார்வைதான்” நான் அமைதியாகவே சொன்னேன்.”
“எப்படி?”
“தாழ்வாரமும் வீடும் இல்லாதவனுக்கு தேவாரமோ பூசையோ தெய்வமோ தேவையில்லை என்பது போல உங்களுக்குத் தோன்றுகிறதா?”
“அது உண்மைதானே?”
“இல்லை நண்பரே.  அது ஒரு மாயத் தோற்றம்.  அவ்வளவுதான்.  தா என்பதற்குத் துன்பம் என்பது ஒரு பொருள்.  வாரம் என்பதற்குப் பங்கு என்பது ஒரு பொருள்.  நிலத்தை வாரத்துக்கு விட்டிருக்கிறேன் என்பது இன்னும்கூட கிராமத்தில் கையாளப்படும் வழக்கு. அதாவது விளைச்சலில் பங்குக்கு என்பது தான் அச்சொல்லின் பொருள்.  வீடு என்பதற்கும் விடுதலை என்பது பொருள்.  இப்போது பாட்டின் பொருளை யோசித்துப் பாருங்கள்.  மற்ற உயிர்கள் படுகிற துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்கிற எண்ண மில்லை.
எல்லாவற்றையும் தனக்கு தனக்கு என்று அலைந்தலைந்து சேகரித்துக் கொள்கிற எண்ணத்தில் இருந்தும் பேராசையிலிருந்தும் விடுதலை இல்லை.  இப்படிப்பட்டவன் தேவாரத்தின் வரிகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? தெய்வப் பாடல்களைப் பாடுகிறவன் மனம் கனிந்து பாட வேண்டும்.  செக்கு சத்தம் போடுவது போல,தவளை இரைச்சலிடுவதைப் போல தேவாரப் பாட்டை எந்திரத் தன்மையோடு பாடிக் கொண்டு இருப்பதால் மட்டும் ஏதேனும் மாற்றம் வந்து விடுமா என்ன? பிற உயிர்களின் துன்பத்தைத் தனது துன்பமாக நினைத்து மனசாரச் சொரியும் அருட்கண்ணீரே இறைவனுக்குச் செய்யப்படும் நீராட்டு.  தனக்கென இல்லாமல் பிறருக்குச் செய்யப் படும் உதவிகளே சிறந்த வழிபாடு.  இவற்றை யெல்லாம் கடைப்பிடிப்பவன் நெஞ்சுருகப் பாடும் போதுதான் தேவாரப் பாட்டுக்கே ஒரு எழுச்சி கிடைக்கும்.  பெருமையும் கிடைக்கும். இல்லை யென்றால் தெருப்பாட்டுக்கு இருக்கிற பயன்கூட தேவாரப்பாட்டால் நேராது.”
“அப்படியா சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது.  இதுவரை இப்படி யாரும் சொன்னதில்லை.”
“தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிற பாடல்கள் இப்படி ஏராளமாக உள்ளன நண்பரே.  யாரோ ஒருவர் ஆவேசமாக ஒரு கருத்தைச் சொல்கிறார்.  பிறகு ஊரில் இருக்கிறவர்கள் எல்லாரும் அதையே மறுயோசனையின்றி மீண்டும் மீண்டும் சொல் கிறார்கள்.  பிறகு அதுவே உண்மை போல நிலைத்து விடுகிறது.  என்ன செய்ய?”
நம்பிக்கையில்லாமல் என்னையே அவர் பார்த்தபடி இருந்தார்.
“இன்னொரு பாட்டைச் சொல்கிறேன்.  கேளுங்கள்.  கண்டாரை நோக்கி கருத்தோடு இருப் பார்க்கு கொண்டாட்டம் ஏதுக்கடி, குதம்பாய் கொண்டாட்டம் ஏதுக்கடி என்றொரு பாட்டைப் பார்த்திருப்பீர்கள்.  கண்டாரை நோக்கி என்ற சொல், மேல் தோற்றத்துக்குக் கண்ட கண்ட பெண் களைப் பார்த்து என்று பொருள் சொல்கிறார்கள் இப்போது.  அது ஒரு தோற்றம். அவ்வளவுதான்.
ஆனால் உண்மை அது அல்ல. கண் தாரை நோக்கி என்று அதைப் பிரித்துப் படிக்க வேண்டும். கண்ணில் இருந்து பொங்கி வழியும் அவலக் கண்ணீரைக் கண்டு மனம் உருகித் தன் கனிவான உதவிகளால் அவர்களை மீட்டெடுக்கும் செயல்களில் ஈடுபடுவதே சிறப்பான பூசை.  அருட்பெருக்காகிய இந்தக் கொண்டாட்டமே இறைவன் விரும்பும் கொண் டாட்டம்.  ‘நடமாடக் கோயில் நம்பற்கொன்றீயில் படமாடக் கோயில் பகவற்கதாமே’ என்று திரு மூலர் சொல்வதுண்டு அல்லவா? இந்தக் கொண் டாட்டமே போதும்.  வேறு கொண்டாட்டம் வேண்டாம்.  இதை விடுத்து மற்றவர்களைப் பார்த்து வஞ்சிக்கும் வழிகளில் ஈடுபடுகிறவர் களின் கொண்டாட்டத்தை இறைவன் ஒருபோதும் விரும்புவதில்லை.”
“அப்படியா சொல்கிறீர்கள்?” ஆச்சரியத்தோடு கேட்டார் நண்பர்.
“கொண்டாட்டத்தை மட்டுமா வேண்டாம் என்கிறார்.  மந்திர நூல்களையும் தந்திர நூல் களையும் கூட வேண்டாம் என்கிறார்.  இலையும் மலரும் தூவுதலும் தேங்காய் பழம் படைத்து வழிபடுவதும் வேண்டாம் என்கிறார்.  சிவிகையும் ஊர்தியும் வேண்டாம் என்கிறார்.  தனித்திருத்தலோ சாவா உடல் தேடலோ கூடத் தேவையில்லை என்கிறார்.”
“எதுவுமே வேண்டாமா?”
“இப்படியெல்லாம் நாம் கேட்டுக் குழம்பிக் கொள்வோம் என்று சித்தர்களுக்கும் தெரியும் போலும்.  இப்படிப்பட்ட கேள்விக்குப் பதில்கூட வேண்டாம் என்கிறார்கள்.  பத்தாவும் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி என்றொரு பாட்டைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா?”
“ஆமாம், கேட்டிருக்கிறேன்” நண்பர் கிட்டத் தட்ட எழுந்து நின்று விட்டார்.
“பத்தா  என்பவன் இறைவன்.  இறைவனும் தானும் ஒன்றே என்கிற நிலையில் இருப்பவரிடம் கேள்விக்கும் இடமில்லை.  பதிலுக்கும் இடமில்லை.  இறைவன் எல்லாருக்கும் அடைக்கலமானவன்.  கருணைமயமானவன்.  அன்பின் உருவம்.  வாழ்க் கையை கருணைமயமானதாகவும் அன்புமயமான தாகவும் வாழ்ந்து எளியவர்கள்மீது மாறாத இரக்கத் தோடு இருக்கும்போது மானுட நிலை கனிந்து மெல்ல மெல்ல கடவுள் நிலை வசப்படும்.  வாழ்வின் நோக்கமே மானுட நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்வதுதான்.  அந்தப் பாதையைத் தன் பாதை என மனசார நம்பி நடக்கத் தொடங்கியவனுக்குக் கேள்வியும் தேவையில்லை.  பதிலும் தேவையில்லை.  தன் வாழ்க்கையையே திறந்த புத்தகமாக வைத் திருப்பவர்கள் அவர்கள்.  கிட்டத்தட்ட காந்தி போல.  கேள்வியும் பதிலும் நமக்குத்தானே தவிர அவர்களுக்கல்ல”
நண்பரின் முகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கனிவும் நெகிழ்ச்சியும் கொண்டதாக மாறி மலர்ந்தது.  அந்த முகம் சட்டென எங்கள் பள்ளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஐயாவை நினைவூட்டியது.  சிதம்பரம் ஜெயராமன் குரலில் குதம்பாய்ப் பாட்டைப் பாடிய அவர் முகம் மனத்தின் ஆழத்திலிருந்து மிதந்து வந்தது.  “அட்டாங்க யோகம் அறிந்த மெய்ஞ்ஞானிக்கு முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய், முட்டாங்கம் ஏதுக்கடி”ஒருமுறை ஜெயராமன் குரலில் சித்தரின் வரிகளை மனத்துக்குள் நான் முணுமுணுத்துக் கொண்டேன்.
“இன்னும் ஒரே ஒரு கேள்வி” என்றபடி நண்பர் என் முகத்தைப் பார்த்தார்.  வயதில் பெரியவர்களே புரிந்துகொள்ள சிரமமான விஷயங்களை சித்தர் ஏன் சிறுமியிடம் சொல்ல வேண்டும்? அது பொருந்தவில்லையே?”
“இல்லை நண்பரே.  பெரியவர்கள் மனம் ஏதோ ஒருவகையில் சில முன் முடிவுகளால் நிரம்பியிருக் கிறது.  புதியவற்றை ஏற்றுக்கொள்வதில் அவர் களுக்குச் சிரமமிருக்கும். ஆனால் குழந்தைகள் மனம் பண்படுத்தப்பட்டு விதைப்புக்குத் தயாராக உள்ள நிலம் போல அல்லவா? நல்ல கருத்துகளை நெஞ்சில் விதைப்பதற்கு இதுவே சரியான பருவம். பாரதியார் பாப்பாவிடம் பாடியது போலச் சித்தரும் சிறுமியிடம் பாடுகிறார்.”
“நண்பர் என் கைகளை வாங்கி அழுத்திய போது சற்றே கூச்சமாக இருந்தது.  “இப்படி ஒவ்வொரு பாட்டயும் யாராச்சும் பிரிச்சிபிரிச்சி சொன்னா நல்லா புரியும் போல” என்று புன்ன கைத்தார்.

 (உங்கள் நூலகம் இதழுக்காக 2011 ஆம் ஆண்டில் எழுதி வெளிவந்த கட்டுரை)