மாபெரும் சமூக ஆளுமைகளைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை, அந்த ஆளுமை வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் படம்பிடித்து எழுதியிருக்கிறார்கள். எழுதாதவர்கள் சொற்களால் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதுவும் மதிப்புக்குரிய மகாத்மா காந்தியைப்பற்றி எழுதவும் சொல்லவும் அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரிடமும் ஏராளமான செய்திகள் இருக்கக்கூடும்.
காந்தியைப்பற்றி அரசியலாளர்களும்
சேவையாளர்களும் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை உண்டு. அவற்றில் எண்ணற்ற சம்பவங்கள் காணக் கிடைக்கின்றன. ஆயினும், ஒரு சிறுவனின் பார்வையில் காந்தியைப்பற்றி
எழுதப்பட்ட பதிவுகள் என்கிற வகையில் நாராயண் தேசாயின் புத்தகம் மிகமுக்கியமானது.
பாரதியாரின் வரலாற்றைத் தொகுத்துக்கொள்வதில் தன் பால்யகாலத்து நினைவுகளை மீட்டிமீட்டி எழுதியிருக்கும்
யதுகிரி அம்மாளின் பதிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு நாராயண் தேசாயின் பதிவுகளும் மிகமுக்கியமானவை.
நாராயண் தேசாய், காந்தியின் செயலாளராகத் தொண்டாற்றிய மகாதேவ தேசாயின் மகன். மகாதேவ தேசாயைத் தன் மகனைப்போலவே கருதி நடத்தினார் காந்தி. ஆசிரமத்தில் காந்தியின் குடிசைக்கு அருகிலேயே மகாதேவ தேசாயின் குடிசையும் இருந்தது. காந்தியின் சொந்தப் பேரக்குழந்தைகளுடனும் ஆசிரமத்துக் குழந்தைகளுடனும்
மற்றொரு குழந்தையாக வளர்ந்தவர் நாராயண் தேசாய். காந்தியால் ’பாப்லா’ என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்ட செல்லக்குழந்தை அவர். பிரார்த்தனைக்கு காந்தி அமரும் சமயத்தில் அவர் மடிமீது அமரும் வாய்ப்பையும் பெற்றவர். அவர் வளரும்வரைக்கும் அந்த இடத்தை அவர் நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, இன்னொரு சிறு குழந்தையையும் மடியில் அமரவைத்துக்கொள்ள
வேண்டிய நெருக்கடி உருவானபோது, இரண்டு குழந்தைகளையும் காந்தி தன் இரு தொடைகளின்மீது அமரவைத்துக் கொண்டார். காந்தியின் மடியில் அமர்ந்து மழலை பேசிச் சிரித்த பருவம் முதல் பதினேழு பதினெட்டு வயது இளைஞனாகும் வரைக்கும் நாராயண் தேசாய் காந்தியின் கண்ணெதிரில் வளர்ந்த பிள்ளையாகவே இருந்தார். காந்தியை ஒரு தலைவராக அவர் கண்டதைவிட, தன் விளையாட்டுத் தோழனாக, தனக்காகப் பரிந்து பேசக்கூடியவராக, நண்பராக, நடைப்பயிற்சியின்போது தன்னுடைய தோளைப்பற்றி நடக்கும் ஒருவராகவே நாராயண் தேசாய் காண்கிறார்.
ஒருபுறம் சுடுகாடு. இன்னொருபுறம் சிறைச்சாலை. இடையில் காந்தியின் சபர்மதி ஆசிரமம் இருந்தது. ஓய்வு அறை, விருந்தினர் கூடம், பிரார்த்தனைக்கூடம், சமையல் கூடம், நோயாளிக்கான தனிப்பகுதி, பிள்ளைகள் கல்வி கற்பதற்கான பகுதி என எல்லாமே அந்த ஆசிரமத்தில் இருந்தன. ஆனால் எல்லாமே தனித்தனிக் குடிசைகள். ஒவ்வொரு இடத்தையும் எப்போதும் தூய்மையாகப் பராமரிக்கவேண்டும்
என்பதில் காந்தி கண்டிப்பாக இருந்தார். பெருக்குதல், செடிகளைப் பராமரித்தல், கழிப்பறைகளைப் பராமரித்தல், தண்ணீர் சுமந்துவந்து ஊற்றுதல், கைத்தொழில் பழகுதல், நூல்நூற்றல் என எல்லா வேலைகளிலும் எல்லோரும் பங்கேற்கவேண்டும்.
இன்று ஒருவர், நாளை ஒருவர் என எல்லா வேலைகளிலும் முறைவைத்து எல்லோரும் செய்யவேண்டும்.
சாதி, மதம் தொடர்பான எந்த வித்தியாசமும் அங்கே இல்லை. அதை ஏற்றுக்கொள்பவர்களுக்குத்தான் அந்த ஆசிரமத்தில் இடம் வழங்கப்பட்டது.
நேரப்படி செயலாற்றுவது என்பதை ஒரு கண்டிப்பான விதியாகவே ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டு
வந்ததை ஒரு சம்பவத்தோடு நினைவுகூர்கிறார்
தேசாய். ஆசிரமத்தில் சாப்பாட்டுக்கு முன்பாக மூன்றுமுறை மணி அடிக்கும். சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் முதல் மணி. அந்த ஓசை எழுந்ததுமே, எல்லோரும் அமைதியாகச் சென்று வரிசையில் அமர்ந்துவிடவேண்டும். இரண்டாவது மணி அடிக்கும்போது சமையலறைக் கதவு மூடப்பட்டுவிடும்.
மூன்றாவது மணி அடிக்கும்போது சாப்பாட்டு மந்திரம் ஒலிக்கத் தொடங்கிவிடும். கதவு மூடப்பட்ட பிறகு யாரும் உள்ளே செல்லமுடியாது. ஒருமுறை சிறுவனான நாராயண் தேசாய் வெளியே இருக்க கதவு மூடப்பட்டு விடுகிறது. அதைத் தொடர்ந்து மந்திரம் சொல்லும் ஓசையும் பரிமாறும் ஓசையும் கேட்கிறது. பசிகொண்ட தேசாய், கதவுக்கு அருகில் சென்று ‘கருணைக்கடலே கதவைத் திறவுங்கள், மங்களகரமான கோவில் கதவைத் திறவுங்கள்’ என்று பாடத் தொடங்கிவிடுகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு விதிவிலக்காக கதவு திறக்கப்பட, தேசாய் உள்ளே நுழைந்துவிடுகிறார்.
தண்டி யாத்திரையை ஆசிரமத்திலிருந்து காந்தியும் தொண்டர்களும் தொடங்கிய கணத்தை நாராயண் தேசாய் குழந்தைமையுடன்
நினைவுகூர்வது படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்களைத் தவிர, இன்னும் பல பகுதிகளிலிருந்தும் பலர் புறப்பட்டு வந்து ஆசிரமத்துக்கு வெளியே இரவெல்லாம் காத்திருக்கிறார்கள். அதிகாலை பிரார்த்தனைக்குப்
பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 79 பேர்களுடன் யாத்திரை புறப்படுகிறது. அவருக்குப் பின்னால் ஆசிரமத்தைச் சூழ்ந்திருந்த அனைவரும் அஸலாலி என்னும் கிராமம் வரைக்கும் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
முழக்கமிட்டபடி அவர்கள் வெளியேறியதும், தேசாயின் வயதையொத்த சிறுவர்கள் அனைவரும் வரிசையாக கொடிபிடித்தபடி, காந்தி சென்ற திசைக்கு எதிர்த்திசையில், பெரியவர்கள் எழுப்பிய அதே முழக்கங்களை முழங்கியபடி சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு, யாத்திரை செய்துவிட்டதாக
நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறார்கள்.
ஒருமுறை சாந்திகுமார் என்பவர், தேசாய் விளையாடுவதற்காக பொம்மைகள் வாங்கி பார்சலில் அனுப்பியிருந்தார். அனைத்தும் வெளிநாட்டுப் பொம்மைகள். பார்சலைப் பிரித்த காந்தி, அவை வெளிநாட்டுப் பொம்மைகள் என்பதால் குழந்தைகளிடம் தராமல் அப்படியே சுருட்டி அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். குழந்தை தேசாய்க்கு அந்தச் செய்தி எப்படியோ தெரிந்துவிடுகிறது. தனக்கு வந்த பொருளை தன்னிடம் தராமல் இருப்பது அநியாயம் என நினைத்து, காந்தியுடன் மோதும் நோக்கத்துடன் அவரை நெருங்குகிறார். தனக்காக வாதாடுவதற்காக தன் வயதையொத்த சிறுவர்களை அணிதிரட்டிக்கொண்டு செல்கிறார். பொம்மைகள் வந்த செய்தியை அவர் தன்னிடம் மறைப்பார் என அவர் நினைத்துக்கொள்கிறார். ஆனால், காந்தி நேரிடையாக உண்மையையே சொல்கிறார். எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார். ‘அவற்றை எங்களிடம் முதலில் கொடுத்துவிடுங்கள்’ என்று தேசாய் விவாதிக்க முற்படும்போது, அவரை நிறுத்தி சுதேசிப்பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என தேசத்துக்கே போதிக்கிற ஆசிரமத்துக்குள்
வாழ்ந்துகொண்டு அயல்நாட்டுப் பொம்மைகளுடன் நாம் எப்படி விளையாட முடியும் என்று கேட்கிறார். நாம் என்னும் சொல்லைப் பயன்படுத்தி குழந்தைகள் அணியில் தன்னையும் சேர்த்துக்கொள்கிறார் காந்தி. அந்தக் கேள்வி சிறுவனைக் கரைத்ததோடு மட்டுமன்றி, சிறுவனின் மனத்தையும் பண்படுத்திவிடுகிறது.
ஆசிரமத்திலேயே இருந்தாலும் காந்தியும் அங்கிருந்த சிறுவர்களும் கடிதத்தொடர்பு வைத்திருக்கிறார்கள். எல்லாத் தேவைகளையும் வெளிப்படையாக கடிதமெழுதி, காந்திக்குத் தெரியப்படுத்திவிடுவார்கள் சிறுவர்கள். காந்தி எல்லோருக்கும் ஒன்றிரண்டு சொற்களில் விடையும் எழுதிவிடுகிறார்.
ஒருவருக்கொருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் பயிற்சியாகவே இது தொடர்ந்து நடைபெறுகிறது. தம்முடைய நீண்ட கடிதங்களுக்கு காந்திஜி எழுதும் ஒற்றைவரிப் பதில்களைக் கண்டு சிறுவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். “பாபுஜி, நாங்கள் அனைவரும் பெரியபெரிய கேள்விகளைக் கேட்கிறோம். நீங்கள் அனைவருக்கும் துண்டுக் காகிதத்தில் ஒன்றிரண்டு சொற்களில் பதில் எழுதுகிறீர்கள்.
ஆசிரமத்தில் நாங்கள் மனப்பாடம் செய்யும் பகவத்கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் சிறு கேள்விகள் கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஒரு அத்தியாயமே பதிலாகச் சொல்கிறான். நீங்களோ ஏன் இத்தனை சிறிய பதில்களை எழுதுகிறீர்கள்?” என்று ஒருமுறை தேசாய் கேட்கிறார். “உன் கேள்வி நன்றாக இருக்கிறது” என்று பாராட்டும் காந்தி தொடர்ந்து “கிருஷ்ணனுக்கு ஒரே ஒரு அர்ஜுனன்தான் இருந்தான், என்னிடமோ உன்னைப்போல பல அர்ஜுனன்கள் இருக்கிறார்களே” என்று விடைகொடுத்தார்.
உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து மது எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்த காந்தி, அப்போராட்டத்தில் பெண்களே பெருமளவில் ஈடுபடும்படி செய்கிறார். பெண்கள் பங்கேற்காத போராட்டாங்களால்
சமூகத்தின் கவனத்தை ஈர்க்கமுடியாது என்பது அவர் எண்ணம். அதனால் ஆசிரமத்துப் பெண்களையெல்லாம் முதலில் எதிர்ப்புப்போரில் ஈடுபடவைக்கிறார்.
அதைக் கண்டு ஏனைய குடும்பப்பெண்களும் பங்கேற்கிறார்கள். பல சமயங்களில் போலீஸ்காரர்களின்
தடியடிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. ஆயினும் அவர்களைத் தொடர்ந்து போரிடும்வகையில் எழுச்சியூட்டியபடி
இருக்கிறார் காந்தி. ஆசிரமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரரும் கைது செய்யப்படுகிறார்கள். காந்தியும் கஸ்தூரிபாவும் கைதுசெய்யப்படுகிறார்கள். சிறுவர்கள் அனைவரும் அருகிலிருந்த விடுதிக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஆசிரமம் காலி செய்யப்பட்டுவிடுகிறது.
காந்திஜி சேவா சங்க ஆண்டுக்கூட்டம்
ஒருமுறை பூரிக்கு அருகில் இருந்த டேலாங்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. பூரியில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்த காலம் அது. ‘எதுவரை இந்தக் கோவில் ஹரிஜனங்களுடைய பிரவேசத்துக்கு
திறக்கப்படவில்லையோ அதுவரை இவர் உலகநாதராக இருக்கமுடியாது. ஆனால், கோவிலின் ஆதரவில் வயிறு வளர்க்கும் பண்டா-பூசாரிகளின் நாதராகத்தான் இருக்கமுடியும்’ என்று தெளிவான கருத்தைக் கொண்டிருக்கிறார்
காந்தி. காந்தியின் மனைவி கஸ்தூரிபா பூரிக்குச் செல்ல விரும்புகிறார். நாராயண் தேசாயின் தாயாருக்கும் பாட்டிக்கும் கூட அந்த விருப்பமிருக்கிறது. அவர்கள் கடலுக்குச் சென்று குளிக்க விரும்புவதாக நினைத்துக்கொண்டு
அனுமதி அளித்துவிடுகிறார்
காந்தி. மகாதேவ தேசாயைக் கூப்பிட்டு எல்லோரையும் அழைத்துச் செல்லும்படி சொல்லிவிடுகிறார்.
அவர்கள் திரும்பிவந்த பிறகுதான், அனைவரும் கோவிலுக்குச் சென்றுவந்த செய்தியைப் புரிந்துகொள்கிறார் காந்தி. அது அவரை மிகவும் புண்படுத்திவிடுகிறது. தன் கொள்கைக்கு மாறான ஒரு செயல் தன் அனுமதியோடு நடந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். மகாதேவ தேசாய்மீது மிகவும் அதிருப்தி கொள்கிறார். தன் கொள்கை தன்னைச் சேர்ந்தவர்களாலேயே
சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பதை அவர் துயரமுடன் உணர்கிறார். அவர் காட்டிய கடுமையை மகாதேவ தேசாயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவெல்லாம் உறக்கமின்றி குடும்பமே அழுகிறது. அதிகாலையில் ஆசிரமத்தைவிட்டு வெளியேறும் முடிவை அவர்கள் எடுக்கும்போது, காந்தி தலையிட்டு, பிழையை உணர்ந்த கணத்திலேயே அது மன்னிக்கப்பட்டுவிடுகிறது என்று சொல்லி பிரச்சினையை முடித்துவைக்கிறார்.
காந்தியின் ரயில் பயணத்தின்போது, அவருடன் சேர்ந்து பயணம் செய்த அனுபவங்களை ஒரு அத்தியாயத்தில்
குறிப்பிடுகிறார் தேசாய். ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நின்றுநின்று செல்கிறது. ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம்
நூற்றுக்கணக்கில் மக்கள் சூழ்ந்துநின்று காந்தியைப் பார்க்கத் துடிக்கிறார்கள்.
ஓய்வும் உறக்கமும் இல்லாமல் எல்லா நிலையங்களிலும் அந்தச் சந்திப்பு தொடர்கிறது. மக்களிடம் ஹரிஜன சேவா நிதி திரட்டிச் சேர்க்கிறார் காந்தி. சில்லறைகளும் நோட்டுகளுமாகக் கிடைத்த தொகையை சிறுவனான தேசாய் எண்ணியெண்ணி கணக்குவைத்துக்கொள்கிறார். அந்தத் தொகை, அந்த நிலையத்தின் பெயரில் உடனேயே வரவு வைத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு நிலையத்தில் வசூலான தொகையை எண்ணிக் கணக்கிடுவதற்குள் அடுத்த நிலையம் வந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட ஒரு பயணத்தில்தான் காந்தியின் மூத்தமகன் ஹரிலால் தன் தாயைத் தேடிவந்து சந்தித்ததைப் பதிவு செய்கிறார் தேசாய். காந்தியை வாழ்த்தி முழக்கமெழுந்துகொண்டிருந்த நிலையத்தில் கஸ்தூரிபாவை வாழ்த்தி ஒற்றைக்குரலில் முழக்கமெழுப்பியபடி வந்த ஹரிலாலின் தோற்றத்தையும் அப்போது நடைபெற்ற உரையாடலையும் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
குஷ்டநோயால் பாதிக்கப்பட்ட பரசுரேசாஸ்திரி என்பவரை ஆசிரிமத்தில் தங்கவைத்து, பணிவிடை செய்து குணப்படுத்த காந்தி எடுத்த முயற்சிகள் பற்றியும் விரிவான பதிவை எழுதியிருக்கிறார்
தேசாய். ஒவ்வொரு நாளும் தனக்குக் கற்பிக்கப்படும் துளசிதாஸின் ராமாயணக்கதைகளை, அதே நாளின் மாலைப்பொழுதில்
கஸ்தூரிபாவுக்குச் சொன்ன அனுபவத்தையும் சாப்பாட்டு வேளைகளில் தனக்கு வேப்பிலையையும் பூண்டையும் சேர்த்து அரைத்த சட்னியை புன்னகையோடு காந்தி பரிமாறிய விதத்தையும் ஒரு கதையைச் சொல்வதுபோல சொல்கிறார் தேசாய்.
ஒருமுறை ஆசிரமத்துக்கு அருகில் அரசுக்கெதிராக வேறொரு காரணத்துக்காக போராட்டம் நடத்த வந்த குழுவொன்று ஆசிரமத்தில் தங்கிக்கொள்வதற்கு
காந்தியிடம் அனுமதி கேட்கிறது.
ஆசிரமத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளமாம்
என்றும் சுற்றிப் பார்த்துவிட்டு எந்த இடம் வேண்டும் எனச் சொல்லும்படியும்
கேட்டுக்கொள்கிறார். ஆசிரமம் முழுதும் சுற்றிப் பார்த்த அந்தக் குழுவினர், கஸ்தூரிபாவின் குடிசையில் தங்கிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். அது சற்றே அதிர்ச்சியான செய்தியாக இருந்தாலும், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார் காந்தி. கஸ்தூரிபாவிடம்
கருத்து கேட்கப்படுகிறது.
கஸ்தூரிபா ஏற்றுக்கொள்கிறார்.
போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியுடன்
அந்தக் குடிசையிலேயே தங்கிக்கொள்கிறார்கள். சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சி
இல்லாத காரணத்தால், அவர்கள் அந்தக் குடிசையை ஒழுங்கில்லாமல்
வைத்திருக்கிறார்கள். ஒருமுறை தன் புதல்வர்களாக ஏற்றுக்கொண்ட பிறகு, எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் புதல்வர்களாகவே எண்ணி அன்புடன் பணிசெய்வதே தன் கடமை என்ற எண்ணத்துடன் ஒரு கணத்திலும் கசப்பை வெளிப்படுத்தாமல்
வாழ்கிறார் பா.
மொழியின் இணைப்புச்சக்தியில் காந்தி ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். கடைசி சிறைவாசத்துக்குப்
பிறகு, அவர் உடல்நிலை மிகவும் தளர்ச்சியடைந்துவிடுகிறது. ஒருமுறை அவர் பஞ்சகனியில் தங்கியிருக்கிறார். அவர் நூல் நூற்கும் சமயங்களில் ஒரு மணி நேரம் பத்திரிகை படித்து செய்திகளைச் சொல்லும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் தேசாய். அப்போது காந்தியைச் சந்திக்க வந்த ராதாகிருஷ்ணன், காசி பல்கலைக்கழகத்தில்
தன்னிடம் சேர்ந்து படிக்க வரும்படி தேசாயை அழைக்கிறார். சுயராஜ்ஜியம் கிடைக்கும்வரைக்கும் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ந்து படிப்பதில்லை என்று உறுதியெடுத்திருப்பதாகச் சொல்கிறார் தேசாய். அதைத் தொடர்ந்து காந்தியுடனும் ராதாகிருஷ்ணன் இதைப்பற்றி பேசியிருக்கிறார். மறுநாள் பத்திரிகை படிக்க வந்தபோது, பத்திரிகை படிக்கவேண்டாம், முதலில் உன் எதிர்காலத்தைப்பற்றிப் பேசலாம் என்று தேசாயிடம் சொல்கிறார் காந்தி. ‘இதற்கு ஒரு மணி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும்.
அதைப்பற்றிப் பேச ஐந்து நிமிடம் போதும், முதலில் பத்திரிகைகளைப் படித்துவிடுகிறேன்’ என்று சொன்ன தேசாய் 55 நிமிடம் வரைக்கும் செய்திகளைப் படிக்கிறார். பிறகு உறுதியான குரலில் காந்தியிடம், “வருங்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை நான் முடிவு செய்துவிட்டேன். உங்களுடன் இருப்பவர்களில் பலர் அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பலர் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவ்விருவரிடையேயும் நான் இணைப்புப்பாலமாக வேலை செய்ய விரும்புகிறேன்’ என்று சொல்கிறார். அவர் எடுத்திருக்கும்
தீர்மானத்தை காந்தி மனதாரப் பாராட்டுகிறார்.
அந்தத் தீர்மானம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட
வேண்டுமானால் இரு வேலைகளைச் செய்யவேண்டும் என்று சொல்கிறார் காந்தி. கதரின் கலையை நுட்பமாகக் கற்பது ஒரு வேலை. பாரதத்தின் எல்லா மொழிகளையும் கற்றுத் தேர்வது இன்னொரு வேலை. பாரதத்தைப் புரிந்துகொள்ள இவை அவசியம் என்ற கருத்து அவருக்கு இருந்ததையே இச்சம்பவம் உணர்த்துகிறது.
இரண்டாவது உலகப்போர் அறிவிக்கப்பட்டவுடன், இந்தியரைக் கலந்தாலோசிக்காமலேயே, இந்தியா நேச நாடுகளுடன் இணைந்திருக்கும் என்று அரசு தன்னிச்சையாக அறிவிக்கிறது. நாட்டின் பதினொரு ராஜ்ஜிய மந்திரிசபைகளில் எட்டு ராஜ்ஜியங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்பாட்டில்
இருந்த நேரம் அது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் உரையாடாமல் வெளியிடப்பட்ட அறிவிப்பு, அனைவரையும் கொதித்தெழச் செய்கிறது. காங்கிரஸ் மந்திரிசபைகள் உடனே பதவியை விட்டு விலகிவிடுகிறார்கள். அரசு பலவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. காந்தி தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கிவைக்கிறார்.
முதல் சத்தியாக்கிரகியாக
விநோபாவைத் தேர்ந்தெடுக்கிரார் காந்தி. யுத்த விரோதப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை எதிர்த்ததற்காக அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். சிறைக்குள் தள்ளப்பட்ட காந்தியவாதிகளில் பெரும்பாலானோர்
தன் ஆர்வத்துக்குத்
தகுந்தபடி படிப்பதிலும் எழுதுவதிலும் நூல்களை மொழிபெயர்ப்பதிலும் தம் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சர்வாதிகாரியாக இருந்த இட்லருக்கு மனம் திறந்த ஒரு கடிதத்தை காந்தி ஒருமுறை எழுதுகிறார். வடமேற்கு எல்லைப்புற அபோடாபாதியின் இருந்தபோது அக்கடிதத்தை எழுத நேர்ந்தது என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் தேசாய். அக்கடிதத்தின் வாசகங்களை காந்தி சொல்லச்சொல்ல, அதைக் குறிப்பு எடுத்துக்கொள்ளும் மகாதேவ தேசாய், தன் மகன் நாராயண் தேசாயிடம் கொடுத்து தட்டச்சு செய்யச் சொல்கிறார். இட்லர் அக்காலத்தில் ஹிம்சைச்சக்தியின்
எடுத்துக்காட்டு. காந்தியோ கலப்பில்லாத அஹிம்சையை ஆராதிப்பவர். அசுரனுக்கு ஒப்பாகக் கருதப்படும் மனிதனின் உள்ளத்திலும் சிறிது மனிதத்தன்மை படிந்திருக்கும். அந்தப் பகுதி வரைக்கும் சென்று அவனை நம்மால் மாற்றமுடியும் என்று நினைக்கிறார் காந்தி. உலகத்தில் உள்ள எந்த மனிதனும் திருத்தப்பட முடியாதவனல்ல என்பது அவருடைய ஆழ்ந்த நம்பிக்கை. அதற்குச் சாட்சியாக விளங்குகிறது இக்கடிதம். அக்கடிதம் இப்படிப்பட்ட சூழலில் தட்டச்சு செய்யப்பட்டது என்பதற்கு தேசாயின் வரிகள் சாட்சியாக இருக்கின்றன.
ஆசிரமத்துக்கு வந்து செல்லும் ஏராளமான தியாகிகளை நேருக்குநேர் பார்த்த நினைவுகளை நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் தேசாய். ஜம்னாலாலைப் பற்றிய பதிவு மிகவும் முக்கியமானது. முப்பது வயதுள்ள இளைஞனாக காந்தியின் முன்னால் வந்து நின்று அவருக்காக தன்னையே ஒப்படைத்துவிட்ட ஆளுமை அவர். ’தங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வந்திருக்கிறேன்’ என்றுதான் அவர் பேசத் தொடங்குகிறார். உற்சாகமடைந்த காந்தியும் அவரிடம் என்ன வேண்டுமெனக் கேட்கிறார். இளைஞன் ‘நீங்கள் என்னை உங்களுடைய சொந்த மகனாகக் கருதி நடத்த வேண்டும்’ என்று கைகுவிக்கிறார்.
காந்தியும் நெகிழ்ச்சியுடன்
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். ‘இதில் நீ அடைவதென்ன, நான் அல்லவோ அடைந்தவன்’ என்று சொன்னபடி தோளில் தட்டியபடி நடந்துபோய் விடுகிறார் காந்தி. அன்றுமுதல் தன் இறுதிமுச்சு அடங்கும்வரைக்கும் ஆசிரமத்துப் பணிகளிலேயே ஈடுபட்டிருந்துவிட்டு, மறைந்துவிடுகிறார். இப்படி தியாக வாழ்வு வாழ்ந்து மறைந்த ப்யாரேலால், கிஷோரிலால் மஷ்ருவாலா, கிருஷ்ணதாஸ் ஜாஜானா போன்ற பலரைப்பற்றிய சின்னச்சின்ன சித்திரங்கள் தேசாயின் நினைவுத்தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.
’இந்தியாவைவிட்டு
வெளியேறு’ என்னும் தீர்மானத்தையொட்டி 1942 ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி அன்று காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் உறுதியாகப் பேசுகிறார் காந்தி. அதையொட்டி அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் எழுகிறது. வழக்கமாக நள்ளிரவில் வந்து கைது செய்யும் காவல்துறை, அன்று அதிகாலையில் எழுப்பி கைது ஆணையைக் காட்டுகிறது. அந்த ஆணையில் காந்தியுடன் மீராபென்னும் மகாதேவ தேசாயும் இன்ஸ்பெக்டருடன்
செல்லவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கஸ்தூரி பாவும் ப்யாரேலாலும் விருப்பமிருந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம் என்றும் விருப்பமில்லையென்றால் விட்டுவிடலாம் என்றொரு குறிப்பும் காணப்படுகிறது. இது கடைசி சிறைவாசம் என்கிற எண்ணம் எல்லோருடைய ஆழ்மனத்திலும் படர்கிறது. தன் மனைவியின் கருத்தை அறிவதற்காக ’என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்கிறார் காந்தி. அவர் ‘நீங்களே சொல்லுங்கள்’ என்று சொல்லிவிடுகிறார். ‘என்னோடு வருவதற்குப் பதிலாக, நான் பங்கேற்றுப் பேசுவதற்காக இன்று மாலை சிவாஜி பார்க்கில் ஏற்பாடாகியிருக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, எனக்குப் பதிலாகப் பேச வேண்டும். அதையொட்டி கைது செய்யப்பட்டால், அந்தக் கைதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நீயே யோசித்து முடிவு செய்.’ என்று சொல்கிறார். கடுமையான மனநெருக்கடிக்கு ஆளாகி நிற்கிறார் பா. இன்னொருமுறை காந்தியைப் பார்க்கமுடியுமா என்ற தவிப்பு ஒருபுறம். அவருடைய தனிவிருப்பத்தை
நிறைவேற்றவேண்டுமே என்கிற எண்ணம் மறுபுறம். இறுதியில் சிவாஜி பார்க் கூட்டத்தில் கலந்துகொண்டு தனிப்பட்ட முறையில் கைதாகிறார்.
காந்தியுடன் கைதாகி சிறைக்குச் செல்லவிருக்கிற
தன் தந்தையின் துணிமணிகளை மூட்டையாகக் கட்டுவதில் ஈடுபட்டிருக்கும்
தேசாயைத் தடுக்கிறார் மகாதேவ தேசாய். நீண்ட காலமாக செய்ய நினைத்துச் செய்யாமலேயே இருக்கும் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பை முடித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறான் மகன். தந்தையோ புன்னகையோடு, அது இந்த முறையும் சாத்தியமல்ல என்று சொல்கிறார். அப்போது, காந்தியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சிறையிலும் ஒருவேளை அவர் உண்ணாநோன்பைத் தொடர்ந்துவிட்டால் அவரைப் பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளும் கடமையுடன் இருக்கும்போது மனத்தை இலக்கியத்தின்பால்
செலுத்தவியலாது என்று சொல்கிறார். காவலரின் வாகனத்தில் ஏறி அமரும்போது ‘இனி நாம் சுதந்திர பாரதத்தில் சந்திப்போம்’ என உற்சாகமுடன் சொன்ன மகனை அணைத்து முத்தமிடுகிறார்
தந்தை. அந்தச் சந்திப்பே கடைசிச் சந்திப்பு. அதுவே கடைசி முத்தம். துரதிருஷ்டவசமான அத்தருணத்தை கச்சிதமாகவும் உருக்கமாகவும் எழுதியுள்ளார் தேசாய்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆகாகான் மாளிகைக்குள் சிறைவைக்கப்படுகிறார்கள். துப்பாக்கி ஏந்திய 76 காவலர்கள் இரவும் பகலும் நின்றபடி அந்த மாளிகைச்சிறையைக்
காவல் காக்கிறார்கள்.
மாளிகையின் சுற்றுச்சுவருக்கு
அருகில் யாரும் வந்துவிடாதபடி பதினோரு அடி உயரத்துக்கு வேலி எழுப்பப்படுகிறது.
சிறைக்குச் சென்ற ஆறு நாட்களிலேயே மகாதேவ தேசாய் மரணமடைந்துவிடுகிறார். தன் மகனைப்போன்ற அவருடைய மரணத்தைக் கண்டு காந்தி மனமுடைந்துவிடுகிறார். மாளிகைத் தோட்ட வளாகத்திலேயே ஓரிடத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது.
ஆங்கில அரசு, அந்த மரணச்செய்தியை அவருடைய குடும்பத்துக்குக்கூடத் தெரிவிக்கவில்லை. தனிப்பட்ட வகையில் காந்தி அவர்களுக்குக் கொடுத்த தந்தியைக்கூட மூன்று மாத தாமதத்துக்குப்
பிறகு கொடுக்கிறார்கள்.
சிறைச்சந்திப்புக்கு எழுதிக் கொடுக்கும் விண்ணப்பங்களைத்
தொடர்ந்து நிராகரிக்கிறது
அரசு. இறுதியாக ஆறு மாதங்களுக்குப்
பிறகு தேசாய்க்கும் அவருடைய தாயாருக்கும் சிறைக்குச் சென்று பார்க்க அனுமதி கிடைக்கிறது. அதுவும் கைதிகளாகச் சென்று மட்டுமே பார்க்கமுடியும்
என்கிற நிபந்தனையின் கீழ் அந்த அனுமதியை வழங்குகிறது. 21 நாள் கைதிகளாக அவர்கள் சிறைக்குள் செல்கிறார்கள்.
காந்தியைச் சந்தித்ததும் அவர்கள் அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்குகிறார்கள். காந்தி எதையோ பேச நினைத்து மகாதேவ் என்று தொடங்கி சொற்கள் திரண்டெழாமல் விம்முகிறார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. காந்திஜி கண்ணீர் விட்டதை அன்றுதான் முதன்முதலில் பார்த்ததாக எழுதுகிறார் தேசாய். அழுகை அடங்கியதும் பாதுகாப்பாக வைத்திருந்த மகாதேவ தேசாயின் சாம்பலை அக்குடும்பத்தினரிடம் கொடுக்கிறார் காந்தி. அந்தச் சாம்பலையே திருநீறாக பல நாட்கள் காந்தி பூசி வந்த செய்தியை அறிந்து அவர்கள் மிகவும் நெகிழ்ந்துபோகிறார்கள்.
சிறையில் இருந்த தருணத்தில் விக்டர் ஹியூகோவின் ‘லே மெஸரபிள்’ நாவலின் மொழிபெயர்ப்பைப் படித்து முடிக்கிறார் தேசாய். அதைக் கேட்டு ஆச்சரியமுறுகிறார் காந்தி. நம்பமுடியாதபடி அவரையே உற்றுப் பார்க்கிறார். பிரார்த்தனை மண்டபத்தில் தன் மடியில் வந்து அமர்ந்துகொண்ட சிறுவனா இவன் என்பதுபோல இருக்கிறது அந்தப் பார்வை. அவர் நெஞ்சில் தேசாயைப்பற்றிய சித்திரம் அன்புக்குரிய பேரக்குழந்தையின்
சித்திரமாகவே நிலைத்துவிடுகிறது.
அருகில் வரும்படி தேசாயை அழைத்து, அணைத்து ஆசி வழங்குகிறார். பிறகு அகிம்சையின் பொருளைச் சுருக்கமான சொற்களில் சொல்லி விளங்கவைக்க முயற்சி செய்கிறார். இம்சைச்செயல் புரிபவன், தன்னால் இம்சைக்கு ஆளானவனை நெருங்கி வந்து மனதார மன்னிப்பு கேட்கும் அளவுக்கு மனப்பக்குவம் அடைவதே உண்மையான அகிம்சையின் இலக்கணம் என்று சொல்கிறார்.
குழந்தைப்பருவம் முதல் இளம்பருவம் வரைக்கும் காந்தியின் பிரியத்துக்குரிய
பாப்லாவாக, அருகிலேயே வாழ்ந்து பெற்ற அனுபவங்களை அசைபோடும் இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுதியில் இருக்கின்றன. காந்தியைப்பற்றிய நினைவுகளாக மட்டுமன்றி, தேச விடுதலைப் போராட்ட வரலாறாகவும் இந்நினைவுகள் இருபரிமாணங்கள் கொண்டு விளங்குகின்றன. ஜன்மபூமி என்னும் குஜராத்தி இதழில் அறுபதுகளின் நடுப்பகுதியில் நாராயண் தேசாய் இவற்றை ஒரு தொடராக எழுதினார். புத்தகவடிவம் கொண்ட கட்டுரைகளை தொண்ணூறுகளில் நேரிடையாகவே குஜராத்தியிலிருந்து ஹரிஹரி சர்மா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காந்தியுடன் பழகிய, பார்த்த அனுபவங்களை தி.சோ.செள.ராஜன் முதல் திரு.வி.க. வரை ஏராளமானவர்கள் தமிழில் எழுதியுள்ளார்கள். அவ்வரிசையில் ஒரு சிறுகுழந்தையின்
பார்வையில் விரிவடையும் நாராயண் தேசாயின் நூலுக்கு முக்கியமான இடமொன்று எப்போதும் இருக்கும். அவருடைய எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஹரிஹரி சர்மா நம் மனமார்ந்த நன்றிக்குரியவர்.
(மகாத்மாவுக்குத் தொண்டு. நாராயண் தேசாய். தமிழாக்கம்: ஹரிஹரி சர்மா. காந்திய இலக்கியச் சங்கம். மதுரை.)