குளித்து முடித்ததும் இருள் விலகாத கிழக்குத் திசையைப் பார்த்து “நாராயணா” என்று கணநேரம் கண்களை மூடி வணங்கிய பின்னர் குளத்திலிருந்து கரையேறினார் பெரியாழ்வார். பனி கவிழ்ந்திருந்தது. எனினும் உடல் முழுக்க வெப்பம் பரவியிருப்பதை உணர்ந்தார் அவர். கரையோரத்தில் பூச்செடிகள் அசைவற்று நின்றிருந்தன. ஒரு பக்கம் பனிமுத்துக்களைச் சுமந்த பூக்கள் மௌனமாகத் தலைகவிழ்ந்திருந்தன. “பல்லாண்டு பல்லாண்டு...” என்று முனகலுடன் முதல் பூவைக் கொய்து குடலையில் போட்டார். விரலிலும் மனத்திலும் வழக்கமான மலர்ச்சி எழாதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.