கவிதை என்பது கருத்துகளைத் திரட்டிப் பாதுகாத்துவைக்கும் பேழையென ஒரு தரப்பும் அழகியல் கூறுகளால் அணிசெய்து காட்சிக்கு வைக்கும் சிலையென இன்னொரு தரப்பும் முன்வைத்த வாதங்கள் ஓங்கியொலித்தபடி இருந்த ஓர் இக்கட்டான தருணத்தில் அழகியல் கூறுகளையும் உருவகமாக மாற்றப்பட்ட கருத்துகளையும் சரியான விகித அளவில் இணைத்து மரபுப்பாடல்களைப் புனைந்து கவன ஈர்ப்பை உருவாக்கிய முக்கியமான பாவலர் ம.இலெ.தங்கப்பா. தாளக்கட்டும் கற்பனைநயமும் அழகான சொல்லாட்சியும் அமையாத பாடல்கள் எல்லாமே சோளக்கொல்லை பொம்மைகள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு நிகரானவை என்பதே அவர் எண்ணமாக இருந்தது.