Home

Saturday 14 July 2018

என் ஆசிரியர் தங்கப்பா - கட்டுரை



புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிதப்பிரிவில் (பட்டப்படிப்பு) நான் சேர்ந்தேன். கணிதப்பாடங்கள் தனிவகுப்பிலும் மொழிப்பாடங்கள் பொதுவகுப்பிலும் நடத்தப்பட்டன. கணிதப்பிரிவு மாணவர்களோடு விலங்கியல், தாவரவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் மொழிப்பாடவேளையில் இணைந்துகொள்வார்கள். முதல்நாள் காலைநேரத்துப் பாடவேளைகள் அனைத்தும் கணிதப்பாடங்களாகவே அமைந்தன. உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் பாடவேளையில் ஆங்கில ஆசிரியர் வந்துபோனார். அதற்குப் பிறகு தமிழ்ப்பாடவேளை. அப்போது எங்களுக்குப் பாடம் எடுக்க வந்தவர் மதனப்பாண்டியன் இலெனின் தங்கப்பா என்கிற .இலெ.தங்கப்பா. அன்றுதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன்.

தெளிவான அமைதி படர்ந்த முகம். வாரப்படாமலேயே பின்பக்கமாக படிந்து உயர்ந்த அடர்த்தியான தலைமுடி. அதனாலேயே அகன்றதாகத் தெரியும் நெற்றிமேடு. கூர்மையும் குறும்பும் படிந்த கண்கள். அன்று அரைக்கை வெள்ளைச்சட்டை அணிந்திருந்தார். கொண்டு வந்த பாடப்புத்தகத்தை மேசைமீது வைத்துவிட்டு முன்புறம் எங்களைப் பார்த்துப் பேசுவதற்கு வசதியாக நின்றுகொண்டார். ஒரு சிற்பம் நிற்பதுபோன்ற தோற்றம். பெரிய அளவில் கையசைத்தல்களோ, குறுநடையோ இல்லை. ஆனால் பேசத் தொடங்கியதும் ஒரே கணத்தில் அவர் முகம் உயிர்ப்பு மிகுந்ததாக மாறியது. ”இன்று முதல்நாள். பாடத்தை இன்றே தொடங்க வேண்டாம். அதை நாளைமுதல் வைத்துக்கொள்ளலாம். இன்று நாம் நம்மைப்பற்றிப் பேசுவோம்என்றார். மாணவர்களாகிய எங்களுக்கு அந்தச் சொற்கள் தேனாக இனித்தன. ஒவ்வொருவரும் எழுந்து தம்முடைய சொந்த ஊரைப்பற்றியும் அங்கு தனக்குப் பிடித்த எதையாவது ஒன்றைப்பற்றியும் சொல்லும்படியும் கேட்டுக்கொண்டார். அக்கணமே அன்றைய வகுப்பு கலகலப்பாக மாறிவிட்டது. இந்த நகரத்தைச் சுற்றித்தான் எத்தனை ஊர்கள், எவ்வளவு மக்கள் என்று நினைத்து வியந்தோம்.
நேரம் போவதே தெரியவில்லை. எல்லோரும் சொல்லிமுடித்த கணத்தில்உங்கள் ஊரில் உங்களுக்குப் பிடித்த இடத்தைப்பற்றி சுருக்கமாக ஒரு கட்டுரை எழுதுங்கள்என்றார். அதன்படி எல்லோரும் வேகவேகமாக எழுத்த் தொடங்கினார்கள். தொடக்கத்தில் குழப்பத்தோடும் வெட்கத்தோடும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்த மாணவிகள் கூட சட்டென ஒரு வேகத்தால் உந்தப்பெற்று எழுதிக்கொடுத்தார்கள். நானும் எங்கள் ஊர் ஏரிக்கரை பற்றி ஒரு கட்டுரையை எழுதிக்கொடுத்தேன்.
மறுநாள் அனைவருமே தமிழ்ப்பாடவேளைக்காகக் காத்திருந்தோம். குறித்த நேரத்தில் தங்கப்பா வகுப்புக்குள் வந்தார். அனைவரும் வணக்கம் சொன்னோம். அவர் புன்னகைத்தபடி மேசைக்கு முன்னால் வந்து நின்றுகொண்டார்.
நேற்று உங்களை எழுதச் சொன்னதற்கு இரு காரணங்கள். உங்களுடைய மொழியாற்றல் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்துகொள்ள நினைத்தது ஒரு காரணம். கல்வியைக் கடந்து புற உலகைப்பற்றிய உங்கள் கவனம் எத்தகையது என்பதை அறிந்துகொள்வது இன்னொரு காரணம்.”
அவருடைய உரையைக் கேட்க உற்சாகமாக இருந்தது. மற்ற ஆசிரியர்களைப்போல பாடங்களின் கடினமான பகுதிகளைச் சுட்டிக்காட்டி மிரட்டாமல் புதுமையாகவும் மனத்தை ஈர்க்கும்படியுமாகவும் அமைந்த அவருடைய பேச்சை ஆர்வமாக நாங்கள் அனைவரும் கேட்டோம்.
வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரு சமூகத்தில் வாழும் அனைவருக்கும் ஒரு மாபெரும் கனவு. ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆயினும் முன்னேறும் வேகத்தில் நம் தோளிலிருந்தும் கைகளிலிருந்தும் எவை நழுவிவிழுகின்றன என்பதைக் கவனிப்பது முக்கியம். நான் ஏன் அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்கிறோம் என்று நமக்கு நாமே கேள்வி கேட்டு பதிலைத் தேடுவதும் முக்கியம். கடந்த காலத்தைவிட இன்று நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. நம் கல்வித்திட்டத்தால் நமக்குக் கிட்டியிருக்கும் மாபெரும் வெற்றி இது. ஆனால் நம் கல்வித்திட்டம் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவில்லை. ஏட்டுக்கல்வி மட்டுமே வழங்கப்பட்டதே தவிர வாழ்க்கைக்கல்வி வழங்கப்படவில்லை. முன்னேற்றத்தின் அளவும் விகிதமும் பெருகப்பெருக, வாழ்க்கைக்கல்வியிடமிருந்து நாம் வெகுதொலைவு விலகிவந்தபடி இருப்பதுதான் மிகப்பெரிய சோகம். நம் வாழ்க்கைக்கே அடிப்படையான இயற்கையிலிருந்து நாம் வெகுதொலைவு விலகிவந்துவிட்டோம். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய தீமையைக் கொண்டுவரும்
எச்சரிப்பதுபோல ஒலித்த தங்கப்பாவுடைய குரல் வகுப்பறை முழுதும் எதிரொலித்தது. நாங்கள் அவர் சொல்வதை கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தோம்.
நம்மைச் சுற்றி ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் என ஏராளமாக உள்ளன. அவையே நம் வாழ்க்கைக்குத் தேவையான நீராதாரங்கள். அவற்றோடு இணைந்ததுதான் நம் வாழ்க்கை. நம் பாடத்திட்டத்தில் அவற்றுக்கான இடமில்லை. அவற்றைப்பற்றிய பெரிய புரிதல் எதுவுமே இல்லாமல் நம் படிப்பு முடிந்துவிடுகிறது. அதனால் அவை சமூகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போகும்போது, புதிய தலைமுறையினருக்கு அந்த இழப்பைப்பற்றிய புரிதலே இருப்பதில்லை. ஒரு கிணறு எந்த அளவுக்கு நம் வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதை நாம் அறிந்துகொண்டால்தான், அதைக் காலந்தோறும் காப்பாற்றவேண்டும் என்னும் கடமையுணர்ச்சியும் வரும். அறியாமை என்பது கடமையை இல்லாமலாக்குவது. இயற்கைச்சூழலில் மூழ்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கை அன்போடு வாழும் வாழ்க்கையே நன்மை விளைவிக்கும். இயற்கையோடு நெருக்கமாக வாழ்வதே நம்மை மனநிறைவோடு வாழவைக்கும். உங்களுக்கும் இயற்கைக்கும் இருக்கும் நெருக்கத்தைத் தெரிந்துகொள்ளவே நேற்று உங்களை எழுதச் சொன்னேன்.”
தங்கப்பா மெதுவாக எங்களை நோக்கிப் புன்னகைத்தார். அதன் வழியாக மாணவமாணவிகள் அனைவருக்கும் நெருக்கமானவராக மாறிவிட்டார். தன்னிச்சையாக எழுந்து வகுப்பை நிறைத்த கைத்தட்டல் ஒலி அந்த நெருக்கத்தை அனைவருக்கும் உணர்த்தியது.
தங்கப்பா, தன்னிடமிருந்த கோப்பிலிருந்த காகிதக்கற்றையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து, எழுதப்பட்ட கட்டுரையைப்பற்றிய தன் எண்ணங்களைச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட மாணவரிடம் கொடுக்கத் தொடங்கினார். ஒவ்வொரு தாளாகப் பிரித்து அவர் கொடுக்கக்கொடுக்க, அடுத்த தாள் என்னுடையதாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் அவர் முகத்தையே பார்ப்பதும் பிறகு ஏமாற்றம் கொள்வதுமாக இருந்தேன்.
இறுதியாகத்தான் தங்கப்பா என்னுடைய தாளை எடுத்துப் பிரித்தார். என் கையெழுத்தை தொலைவிலிருந்தே அடையாளம் கண்டுபிடித்துவிட்டேன். “இது ஓர் ஏரிக்கரையைப்பற்றிய கட்டுரை. எழுதப்பட்டவற்றில் சிறப்பான கட்டுரைஎன்று தனியாக எடுத்துக்காட்டிவிட்டு என்னுடைய பெயரைச் சொன்னார்.
எனக்குப் பேச்சே எழவில்லை. முகம் சிவந்துவிட்டது. வேகமாக எழுந்து மேசைக்கு அருகில் சென்று நின்றேன். அவர் கட்டுரைத்தாளை என்னிடம் கொடுக்கும்போது மாணவர்களிடமிருந்து எழுந்த கைத்தட்டல் என்னைக் கூச்சத்தில் ஆழ்த்தியது. தங்கப்பா என்னிடம் ஊர்விவரம் கேட்டார். நான் சொன்னதுமேதிருக்குறள் கழகம் ராஜாராமனைத் தெரியுமா?” என்று கேட்டார். நான் தெரியும் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தேன். அன்றைய வகுப்பு அத்துடன் முடிந்தது. அவர் வெளியேறினார்.
**
தங்கப்பாவை நான் மீண்டும்மீண்டும் சந்தித்தேன். உணவு இடைவேளையின்போது தமிழ்த்துறைக்குச் சென்று உரையாடினேன். பக்கத்துக்கு மூன்று மேசைகள் போடப்பட்டிருந்த பெரிய கூடமே அன்று தமிழ்த்துறையாக இருந்தது. தங்கப்பாவின் மேசை ஜன்னலோரமாக இருந்தது. மேசையில் ஏராளமான புத்தகங்கள். தாள்கட்டுகள். எழுதுகோல்கள். இதழ்கள். வட்டமான மரக்கட்டைகளின் எடையால் பறந்துபோகாமல் தடுக்கப்பட்ட தாள்கள். நான் அப்போது மரபுக்கவிதைகள் எழுதும் கவிஞனாக உருவாகிவிட்டிருந்தேன். தினமும் புதிதுபுதிதாக எழுதும் கவிதைகளை அவரிடம்தான் முதலில் படிக்கக் கொடுப்பேன். அவர் படிக்கவேண்டும், சுவைக்கவேண்டும், நல்லவிதமாக ஒன்றிரண்டு சொற்கள் சொல்லவேண்டும் என்பது என்னுடைய ஆழ்மன விருப்பமாக இருந்தது. உண்மையில் அவர் சொற்களுக்காக நான் ஏங்கிக்கொண்டிருந்தேன்.
வெறும் கருத்துகளாக அடைத்துக்கொண்டிருக்கும் கவிதைகளை அவர் விரும்புவதில்லை. அனுபவத்தின் சாரம் இறங்கிய வரிகளையே அவர் பெரிதும் விரும்பினார். அதை நான் தொடக்கத்திலேயே கண்டுகொண்டேன். என் இளமைவேகத்தால் என் நெஞ்சத்தைக் கருத்துக்களஞ்சியமாக நிறைத்துவைத்திருந்தேன். அவற்றைத்தான் வெவ்வேறு சொற்களாக மாற்றி கவிதைகளிலும் அடுக்கிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை ஒரு சீர்திருத்தம் தொடர்பான என் கவிதையைப் படித்துவிட்டுஇது உன்னுடைய கருத்தா?” என்று கேட்டார். நான் இல்லையென தலையசைத்தேன். “பெட்டி மட்டுமே உன்னுடையது. பெட்டிக்குள் இருக்கும் பணம் உன்னுடையதல்ல, அப்படித்தானே?” என்றார். அந்த உவமை இன்னும் என் நெஞ்சில் பசுமையாகப் பதிந்துள்ளது. அக்கணம் என்னை யாரோ சம்மட்டியால் இரண்டாக உடைத்ததுபோல இருந்தது. இதற்குமேல் எனக்கு எந்தச் சொற்களும் தேவைப்படவில்லை. என் திசை என்ன, நான் என்ன செய்யவேண்டும் என்பதெல்லாமே புரிந்துவிட்டது. நான் அவரைப் பார்த்து கூச்சத்தோடு புன்னகைத்தேன். “நாலே நாலு வரி சொந்தமாக எழுதினாலும் அது உன் சொந்த அனுபவத்தின் வழியாக பீறிட்டு வந்ததாக இருக்கவேண்டும். அதுவே உண்மையான கவிதைஎன்று சொன்னார் தங்கப்பா.
விடுப்பில் ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் திருக்குறள் கழகம் இராஜாராமனைப் பார்த்து தங்கப்பாவைப்பற்றியும் அவர் விசாரித்ததைப் பற்றியும் சொன்னேன். அதைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியுற்றார் இராஜாராமன்.   மாபெரும் கவிஞர் அவர். நம்மிடையில் வாழும் மரபுக்கவிஞர்களில் முக்கியமானவர் அவர். தென்மொழி இதழ் தொடங்கப்பட்ட காலத்தில் அதன் ஆசிரியர் குழுவில் அவர் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, பல தமிழ்ப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்என்றார். எனக்கு அதைக்கேட்டு வியப்பாக இருந்தது. “அவர் ஒருமுறை கூட அதைப்பற்றிச் சொன்னதில்லையேஎன்றபோது இராஜாராமன் அண்ணன்அவர் எப்போதுமே அப்படித்தான். தன்னடக்கத்தின் சிகரம்என்று புன்னகைத்தார்.
கல்லூரிக்குத் திரும்பியதும் அவரைச் சந்தித்து இராஜாராமன் அண்ணன் வழியாகக் கேள்விப்பட்டதையெல்லாம் சொன்னேன். அவர் எனக்கு எந்தப் பதிலையும் சொல்லவில்லை. புன்னகைத்தார். பிறகு மெதுவாகஅதெல்லாம் ஒரு கட்டு இருக்குது. என்னைக்காவது வீட்டுக்கு வா. எடுத்தும்போயி படிச்சிட்டு கொடுஎன்றார். அன்று மாலையே நான் அவரோடு வீட்டுக்குச் சென்றேன். ஐம்பது அறுபது தென்மொழி இதழ்கள் இருக்கும். ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொடுத்தார். அவ்வளவு புத்தகங்களோடு நான் வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டில் இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பினார்கள். அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிடாதபடி பொறுமையாக எடுத்துச்சொல்லி புரியவைத்தேன்.
பொதுவாக தனித்தமிழைக் கையாள்வோரிடம் காணப்படும் சொற்கடுமையை தங்கப்பாவிடம் ஒருபோதும் நான் கண்டதில்லை. உரைநடை, பாடல்கள், மொழிபெயர்ப்பு என எதுவாக இருந்தாலும் அவருடைய சொற்கள் மனத்துக்கு நெருக்கமானதாகவும் படிக்க பழகிய சொற்களாகவும் மட்டுமே இருக்கும். ஒரு விழுக்காடு கூட சலிப்பூட்டியதில்லை. எண்சீர் விருத்தங்களில் எதுகையழகோடு விழுந்திருக்கும் சொற்சேர்க்கை மிகமிக இசைவானதாகவும் புதுமையழகு நிறைந்ததாகவும் இருக்கும்.
தங்கப்பாவுக்கு நான்கு பிள்ளைகள். என்னைவிட இளையவர்கள். அதனால் அவர்கள் என்னை அண்ணன் என்றே அழைத்தார்கள். இனிமையானவர்கள். தங்கப்பா அவர்களுக்காக எழுதிய பாடல்கள் துண்டு துண்டு தாள்களில் எழுதப்பட்டு அங்கங்கே இறைந்திருக்கும். பார்க்கும் இடங்களிலெல்லாம் ஒன்றிரண்டு கோப்புகள் அல்லது தடிமனான புத்தகங்கள் இருக்கும். அதற்குள் பாடல்கள் எழுதப்பட்ட தாள்கள் அடுக்கப்பட்டிருக்கும். தங்கப்பாவின் துணைவியார் அவற்றை ஒவ்வொரு நாளும் எடுத்து அடுக்கிவைப்பார். ஆனால் மறுநாளே அவை கலைந்துபோய்விடும்.
அந்தப் பாடல்களில் ஒன்றிரண்டை பிரதியெடுத்து வந்து என் வகுப்புத் தோழர்களிடம் படித்துக் காட்டுவேன்.  ஆர்வமுள்ள நண்பர்கள் அப்பாடல்களைத் தம் நோட்டுகளில் எழுதிவைத்துக்கொள்வார்கள்.  தங்கப்பா தனது வகுப்பில் பாடத்தை முடித்ததும் எப்போதும் பத்து நிமிடங்கள் எஞ்சியிருக்கும்படி பார்த்துக்கொள்வார். அது மாணவர்களுடன் உரையாடும் நேரம். அவரோடு பேசிப் பழகுவதில் எங்களுக்கு ஏராளமான சுதந்திரம் இருந்தது. யாராவது ஒருவர் சொல்லக்கூடிய ஒரு செய்தியை, மிக எளிதாக தன் கருத்தின் மூலம் அவரால் அடக்கி கடந்துபோய்விட முடியும். ஆனால் தங்கப்பா ஒருபோதும் அதைச் செய்ததில்லை. மாணவர்களுடனான உரையாடலை, அவர்கள் மேலும் மேலும் யோசிக்கத் தூண்டுவதாகவும் பேசத் தூண்டுவதாகவுமே அமைத்துச் செல்வார். மாணவர்கள் தம்மைக் கண்டு நகையாடுவதாகவோ புண்படுத்துவதாகவோ அவர் ஒருநாளும் குறையாக எடுத்துக்கொண்டதில்லை. அவர்கள் விளங்கிக்கொள்ளும்படி எளிமையான எடுத்துக்காட்டுகளை முன்வைக்க மட்டுமே முனைந்தபடி இருப்பார். எங்கள் வயது, எங்களுடைய குறைவுபட்ட அறிவு, அனுபவம் ஆகியவற்றை முன்வைத்து எங்களை சொற்களால் விளாசித் தள்ளிவிட்டு அவரால் எளிதாகச் சென்றிருக்க முடியும். ஆனால் ஒருபோதும் அவர் அப்படிச் செய்ததில்லை. எங்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக செலவு செய்யும் நேரத்தைப்பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகள். எத்தனை எத்தனை கதைகள். அவர் ஒருபோதும் எங்களிடம் சலித்துக்கொண்டதே இல்லை.
எங்களை அவர் தன் சொந்தப் பிள்ளைகளைப்போலவே நடத்தினார். பல சமயங்களில் அவர்களைவிட எங்களுக்கு அவர்மீது அதிக உரிமைகள் இருப்பதுபோன்ற தோன்றும்படி கூட நடந்துகொண்டதுண்டு. வயது, சாதி, மதம் எதைப்பற்றியும் அவர் ஒருகணமும் பொருட்படுத்தியதில்லை.  எந்த நேரத்திலும் அவருடைய வீட்டில் சமையலறை வரைக்கும் சென்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். அந்த உரிமையை அவர் அனைவருக்கும் வழங்கியிருந்தார். பசிக்கும் நேரத்தில் மிக எளிதாகவும் விரைவாகவும் சமைக்கிற கஞ்சியைப்பற்றி அவர் கொடுத்த செயல்விளக்கத்தை இன்னும் நான் மறக்கவில்லை. இன்றளவும் அதை நான் கடைபிடித்து வருகிறேன். எல்லோரும் மானுடரே எனக் கருதும் பண்பு அவரிடம் மிக இயற்கையாகவே அமைந்திருந்தது.
அவர் மிகச்சிறந்த படைப்பாளி. ஆனால் படைப்பின் வழியாக ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள அவர் ஒருநாளும் முனைந்ததில்லை. அவர் மிகச்சிறந்த மொழியறிவு உள்ளவர். ஆனால் ஒருபோதும் தன் அறிவை பிறர்மீது சுமத்தியதில்லை. ஆணவத்தை உடைத்துப் பண்படுத்தி, அதில் அன்பென்னும் விதையை ஊன்றி செடியாக மலர்ந்து நின்ற தலைசிறந்த பண்பாளர் தங்கப்பா. அருமையிலும் அருமையானவர்.
**
தங்கப்பா மிதிவண்டி ஓட்டுவதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். அவர் தினமும் அவ்வை நகரில் இருந்த அவர் வீட்டிலிருந்து லாஸ்பேட்டையில் இருந்த கல்லூரிக்கு மிதிவண்டியில்தான் வருவார். பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை வேறுவிதமான இருசக்கர வாகனம் எதையும் அவர் பயன்படுத்தியதில்லை.
லாஸ்பேட்டை என்பது முழுக்கமுழுக்க மேட்டில் அமைந்த நகரம். படிப்படியாக உயர்ந்து மேல்நோக்கிச் சென்றபடியிருக்கும் பாதை. ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு. பாதைக்கு இருபுறமும் முந்திரித்தோப்புகள். கல்லூரிக்கட்டடம் மட்டுமே உயர்ந்து காணப்படும். உயர்ந்து நீளும் பாதையில் மிதிவண்டியில் மிதித்துக்கொண்டே செல்வது ஒரு பெரிய சாதனை. பெரும்பாலான மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களும் லாஸ்பேட்டை திருப்பம் வந்ததுமே இறங்கி பேசியபடி நடந்துசெல்லவே முனைவார்கள். ஆனால், தங்கப்பா அச்சாலையில் இறங்காமலேயே மிதிவண்டியை மிதித்துக்கொண்டு தனிமைப்பயணியாகச் செல்வார். நடந்துசெல்லும் எங்களைப் பார்த்துஏறு ஏறு, மிதி மிதிஎன்று தூண்டித்தூண்டி எங்களுக்கும் மிதித்துச் செல்லும் பழக்கத்தை ஊட்டிவிடுவார். இறைக்க இறைக்க மிதிக்கும் அந்தப் பயணத்தில் கூட தங்கப்பா எங்களிடம் பகிர்ந்துகொள்ள ஏதேனும் ஒரு கதை வைத்திருப்பார்.
மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறையோ அவர் திட்டமிட்ட மிதிவண்டிப்பயணங்களை ஒருபோதும் மறக்கமுடியாது. மாணவர்கள் கூட்டத்தோடு அவருடைய ஆறேழு பயணங்களில் பங்கேற்றிருக்கிறேன். வீடூர், செஞ்சி, திருக்கனூர், சிதம்பரம் என பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். செஞ்சிக்கும் திருக்கனூருக்கும் பலமுறை சென்றிருக்கிறோம். திருக்கனூரில் பல ஆயிரம் ஆண்டு பழமை மிக்க கல்லாக மாறிக் கிடக்கும் மரங்களைக் கண்டுவருவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரும் நானும் காசி வில்லவன் என்னும் நண்பரும் மட்டுமே சேர்ந்து ஒருமுறை புதுவையிலிருந்து பூம்புகார் வரைக்கும் மிதிவண்டியிலேயே சென்று கடலாடிவிட்டு திரும்பினோம்.
இப்போது யோசித்துப் பார்த்தால் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இளமைப் பருவத்தில் தன்னை நோக்கி வரும் மாணவர்களுக்கு  இயற்கையை நேசிக்கும் அல்லது பார்த்துத் தரிசிக்கும் எல்லாவிதமான வாசல்களையும் வழிகளையும் அடையாளம் காட்டுவதை ஒரு கடமையாகவே தங்கப்பா நினைத்தார். அதை பணியில் இருக்கும் வரையிலும் அதற்குப் பின்பும் அவர் கடைபிடிக்கவே செய்தார்.
அவரோடு பயணம் செய்வது ஒரு மகத்தான அனுபவம். சாலையில் மிதிவண்டியில் செல்லும்போது பொறுமையாகவே செல்வோம். எங்காவது அபூர்வமானதொரு காட்சியைக் கண்டுவிட்டால் போதும், அவர் மிதிவண்டியை விட்டு இறங்கிவிடுவார். எங்காவது வசதியாக அமர்ந்துகொண்டு அக்காட்சியை வேடிக்கை பார்ப்போம். அக்காட்சியை முன்னிட்டு அவர் தன் நினைவின் ஆழத்திலிருந்து ஏதேனும் ஒரு சங்கப்பாடலை அல்லது நாட்டுப்புறக்கதையை நினைவுக்குக் கொண்டுவந்து விரிவாக அதைப்பற்றி எங்களுக்கு எடுத்துரைப்பார். எங்களுடைய நினைவில் மிதந்துவரும் இணைக்கதைகளைச் சொல்லும்படி தூண்டுவார். ஓய்வெடுப்பதற்காக அமரும் இடத்தில் ஏற்கனவே அமர்ந்திருக்கும் கடலைக்காய் விற்கும் பெண்மணி, இளநீர் வியாபாரி ஆகியோரிடம் சட்டென உரையாடலைத் தொடங்கிவிடுவார். அவர்கள் சொல்லும் கதைகளை ஆர்வத்துடன் காதுகொடுத்துக் கேட்பார். எங்கும் அவசரம் என்கிற எண்ணத்துக்கோ நேரமாகிவிட்டது என்னும் பேச்சுக்கோ இடமே இல்லை. அப்போதெல்லாம் அவருடைய முகம் கனிந்துவிடும்.
**
தங்கப்பாவின் சாதனைகளை இன்று நம்மால் தொகுத்துக்கொள்ள இயலும். வாழ்க்கைக்கல்வியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாக ஏற்றுக்கொண்டு இறுதிக்காலம்வரைக்கும் செயற்படுத்திய  மாபெரும் ஆளுமை தங்கப்பா. அது அவர் முதல் சாதனை. ஒரு படைப்பாக்கத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைவிட அதிக அளவிலான முக்கியத்துவத்தை வாழ்க்கைக்கல்விக்கு அவர் அளித்தார். இயற்கையை நேசித்தல், பேதமற்று பழகுதல், இணைந்து செயல்படுதல், அன்பில் திளைத்தல் என பல தளங்களையும் ஒன்றிணைக்கும் களமாகவே அவர் வாழ்க்கைக்கல்வி என்னும் சொல்லால் உருவகப்படுத்தினார். நம் தமிழ்ச்சூழலில் ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்த மரபுப்பாடல் பரம்பரையின் கடைசிக்கண்ணியாக விளங்கியவர் தங்கப்பா. அபூர்வமான சொல்லிணைவுகள், ஒருவித பித்துநிலையில் ஒரு மையத்தைச் சுற்றி அணியணியாக வந்துவிழும்  சொற்கள், விதவிதமான சந்தத்தில் கூடிக் காணப்படும் எதுகைகள், மோனைகள் ஆகிய அம்சங்களே மரபுப்பாடலின் சாதனை. தங்கப்பாவின் பாடல்கள் மிக இயல்பான விதத்தில் இச்சாதனைப்புள்ளியைத் தொட்டு நிற்பவை. தங்கப்பாவின் நெடும்பாடல்களான பாடுகின்றேன், தேடுகின்றேன் இரண்டும் என்றென்றும் அவர் பெயர் சொன்னபடி நிற்கும் ஆற்றலுள்ளவை. அது அவருடைய இரண்டாவது சாதனை. மொழிபெயர்ப்பு தொடர்பாக அவர் மனம் செயல்பட்ட விதம் மிகமுக்கியமானது. ஆழ்ந்த சங்கப்பாடல் பயிற்சியும் மிக உன்னதமானவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்கும் சுவையுணர்வும் ஆங்கில மொழியறிவும் அவருக்குத் துணையிருந்தன. ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவர் இடைவிடாது இப்பணியில் ஈடுபட்டு வந்தார். மொழியில் ஆழ்ந்து மொழியோடு வாழ்கிற மனமுடையவர்களுக்கு மட்டுமே இத்தகைய வேலைகள் சாத்தியப்படும். எழுபதுகளில் HUES AND HARMONIES FROM AN ANCIENT LAND என்னும் சிறுதொகுதியாக வெளிவந்த அவர் தொடக்ககால முயற்சி மேலும்மேலும் வளர்ந்து முதிர்ந்து இரண்டாயிரத்துக்குப் பிறகு LOVE STANDS ALONE என்னும் பெருந்தொகுதி வெளிவர உந்துதலாக இருந்தது.  இதில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பாடல்கள் அனைத்தும் கவித்துவம் மிக்கவை. எண்ணும்தோறும் பொருள்விரியும் தன்மை கொண்டவை. கலிங்கத்துப்பரணியின் ஆங்கில மொழியாக்கம் RED LILLIES AND FFRIGHTENED BIRDS என்னும் தலைப்பில் வெளிவந்தது. ஆங்கிலம் வழியாக பண்டைய தமிழிலக்கியத்தை நோக்கி வரும் அயல்மொழிக்காரர்களுக்கு இந்த நூல்கள் மிகச்சிறந்த கையேடு என்பதில் ஐயமில்லை. அது அவருடைய மூன்றாவது சாதனை. தங்கப்பா தொடக்க காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான பாடல்களை இடைவிடாமல் எழுதிவந்திருக்கிறார். அவை பெரிய அளவில் எந்த இதழிலும் வெளிவந்ததில்லை. சிறுசிறு தொகுதிகளாக அவற்றை அவரே நேரிடையாக வெளியிட்டார். குழந்தைகள் குரலை ஒரு விளையாட்டாக, வியப்பை வெளிப்படுத்தும் அழகாக, கட்டளையாக, அழைப்புக்குரலாக, கோரிக்கையாக, புகார் வரிகளாக என பல விதங்களில் புதுப்புது தாளக்கட்டுகளில் அவர் ஒலிக்கவைப்பதை நாம் அப்பாடல்களில் வாசிக்கும்தோறும் உணரலாம். அது அவர் தன் மேதமையால் நிகழ்த்திய சாதனை.
ஆனால் இந்த சாதனைகளின் உயரத்தை தமிழ்ச்சூழல்  சரியான விதத்தில் உள்வாங்கிக்கொள்ளவில்லை. அவருடைய பார்வையும் அக்கறைகளும் போதிய அளவிலான தீவிரத்துடன் கவனிக்கப்படவில்லை. அவருடைய நூல்களை அவரே முதலிட்டு வெளியிடும் சூழலே இறுதிக்கணம் வரைக்கும் இருந்தது. விதிவிலக்காக தமிழினி பதிப்பகம் மட்டுமே அவருடைய பாடல்களை மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே தொகுதியாகஉயிர்ப்பின் அதிர்வுகள்என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டது. அவர் படைப்புகளுக்கு மிக இயல்பாக உருவாகியிருக்கவேண்டிய அளவுக்கு வாசகப்பரப்பு உருவாகவில்லை. அவருடைய தொடர்ச்சியாக நின்றிருக்கும் எனக்கு இந்த நிலை எப்போதும்  துயரமளிப்பதாகவே இருந்தது. அவரை மரணம் அள்ளிக்கொண்டு சென்றுவிட்ட இன்று, இக்கணம் அந்தத் துயரம் பல மடங்காகப் பெருகி மனத்தை அழுத்துகிறது.
 (காலச்சுவடு - ஜூலை 2018 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை)