Home

Saturday 14 July 2018

சுவரொட்டி - சிறுகதை



எங்கள் ஊரில் பார்க்கும் இடங்களிலெல்லாம் தென்பட்ட சின்னச்சின்ன வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளைப் படித்தபோது, என் இளம்மனத்தில் உருவான உத்வேகம்தான் என்னைக் கவிஞனாக்கியது. அந்த வாசகங்களை புயல்வேகத்தில் எழுதியவர் ஓர் ஆலைத்தொழிலாளி. அவர் நெஞ்சில் ஒரு மகாகவியே குடியிருந்தான். சுவரொட்டி சொக்கலிங்கம் என்பது அவர் பெயர். ஆனால் ஊர்க்காரர்கள் எல்லோரும் செல்லமாக அவரைப் பெரியப்பா என்று அழைப்பதுபோல நானும் பெரியப்பா என்றுதான் அழைத்துவந்தேன்…..”

விழுப்புரத்தில் அன்று மாலை நிகழவிருந்த கூட்டத்தில் பேசுவதற்காக என் உரையை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் முத்துசாமி கைப்பேசியில் அவசரமாக அழைத்தான். “ என்னடா?” என்றேன். கிட்டத்தட்ட அலறும் குரலில், “மச்சான்,  சீக்கிரமா வாடா, பெரியப்பா போயிட்டாருடாஎன்று உடைந்து அழுதான். ஒருகணம் எதுவும் புரியவில்லை. “என்னடா சொல்ற?” என்று அதிர்ச்சியில் நானும் சத்தமிட்டேன். “பெரியப்பா போயிட்டாருடா  என்று மீண்டும் அழுதான். அந்த வார்த்தையைத் தவிர வேறு எதையும் அவனால் சொல்லமுடியவில்லை. போட்டது போட்டபடி சுலோசனாவிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு அவர் வீடு இருந்த ஐயனார் கோயில் தெருவுக்கு ஓடினேன்.
வடக்குத்திசையைப் பார்த்தமாதிரி போட்டிருந்த பெஞ்சில் சொக்கலிங்கம் பெரியப்பாவின் உடல்மீது போர்த்தப்பட்டிருந்த துணி காற்றில் படபடத்தது. அது பறந்துவிடாதபடி அவர் காலருகில் இருந்த மாலையை இழுத்துவிட்டான் முத்துசாமி. என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதான். “பாருடா நம்ம பெரியப்பாவ, பாருடா
அந்த பெஞ்சில் உட்கார்ந்துதான் பெரியப்பா செய்தித்தாள் படிப்பார். வண்ணங்கள் குழைப்பார். சுவரொட்டிகள் எழுதுவார். சாப்பிடுவார். பேசுவார். தூங்குவார். கடைசியில் அவர் மரணமும் அந்தப் பெஞ்சிலேயே நிகழ்ந்துவிட்டது. அசைவற்றிருந்த அவர் உடலைப் பார்க்கப்பார்க்க என் உடல் நடுங்கிச் சிலிர்த்தது.
அவர் மரணத்தை நம்ப மறுத்தது மனம். நேற்று இரவு நெடுநேரம் வரைக்கும் அரசியல் பேசியபிறகு, “சரி போய் படுக்கற வேலய பாருங்கப்பா. நான்தான் ஒத்தக்கட்ட. கேப்பாரும் கெடயாது மேய்ப்பாரும் கெடயாது. நீங்கள்ளாம் அப்படியா? என்னைக்காச்சிம் ஒருநாள் ஒங்க பொண்டாட்டிங்க வந்து இங்க வந்து நின்னு கண்ண கசக்கறாப்புல வச்சிக்கக்கூடாதுஎன்று சிரிப்பும் கேலியுமாகச் சொல்லி வழியனுப்பி வைத்தவர் காலையில் இந்த உலகத்திலேயே இல்லாமல் போய்விட்டார்.
ஆறுமுகம், ஏழுமலை, சின்னத்தம்பி, தணிகாசலம் எல்லோரும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தார்கள். அழுகையையும் அதிர்ச்சியையும் தடுக்கவே முடியவில்லை.
காலயில மொடக்கத்தான் கீர பறிச்சிவந்து குடுன்னு ராத்திரி கேட்டாரில்லயா?. வாக்கிங் போன எடத்துல ஏரிப்பக்கத்துல பாத்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்பனா கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ்கட்டியாட்டம் சில்லுன்னு இருந்திச்சி. ஓடி போயி ஒரு டாக்டர கூட்டியாந்து காட்டனேன். பாத்துட்டு ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சின்னு சொன்னாரு.” கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டான் முத்துசாமி.
அவருக்குக் குடும்பம் இல்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே குடும்பம் இவரைவிட்டுப் பிரிந்து போய்விட்டது. அரசியல்வாதிகளின் நியாயமற்ற நடவடிக்கைகளை கிண்டல் செய்தும் கேள்விக்குட்படுத்தியும் அவர் எழுதிய சுவரொட்டி வாக்கியங்கள் அவரை காவல்நிலையம், சிறைச்சாலை, நீதிமன்றம் ஆகியவற்றின் படியேறவைத்ததை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் விரும்பியபடி சகித்துக்கொண்டு வாழும் வாழ்க்கையை அவரால் வாழமுடியவில்லை. தினம்தினமும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வந்து விசாரிப்பதும் முகம்தெரியாத ஆட்கள் எல்லோரும் மிரட்டிவிட்டுச் செல்வதும் அவமானமாக இருந்தது அவர்களுக்கு. பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் கண்மறைவான ஊருக்கு அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.
அடக்கத்துக்கான வேலைகளை நாங்களாகவே எடுத்துக்கட்டிச் செய்யத் தொடங்கினோம். வெயில் ஏறுவதற்கு முன்னால் துணிக்கூரைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆறுமுகமும் ஏழுமலையும் அந்த வேலைக்காகப் போனார்கள்.
எங்க தெருவுல சந்தனப்பொட்டுக்காரர்னு ஒருத்தர் இருக்காருடா. இந்த வேலையில பெரிய எக்ஸ்பெர்ட். எல்லாத்தயும் ஒத்த ஆளா நின்னு பாத்துக்குவாரு. அவர புடிச்சிரலாம். அதான் நமக்கு வசதி  தணிகாசலம் சொன்ன ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டோம். இரண்டுசக்கர வாகனத்தில் சென்று அவனே அவரை அழைத்துவந்தான். ”நாளைக்கி காலைல சாம்பல் வாங்கறவரிக்கும் என் பொறுப்பு. எதுக்கும் கவலபடாதிங்கஎன்றார் அவர். அவர் நெருங்கிவந்து பேசும்போது வெற்றிலை வாசம் வீசியது. வங்கியிலிருந்து பணம் எடுத்துவந்து அவரிடம் தந்தான் முததுசாமி. மின்தகனம். மாலைகள். பறை. வண்டி. பூ அலங்காரம். பாடை. எல்லாவற்றையும் அவர் பம்பரமாகச் சுழன்று கவனித்தார். கண்ணீர் அஞ்சலி வாசகத்தை எழுதிக்கொடுக்கும்படி என்னைக் கேட்டான் முத்துசாமி. எழுதிக் கொடுத்ததும் அதை எடுத்துக்கொண்டு அவனும் சின்னத்தம்பியும் அச்சகத்துக்குப் போனார்கள்.  
நம்ம போக்குல எடுத்துகட்டி செய்யறமே, அவுரு குடும்பத்துக்கு சொல்லவேணாமாடா?” தணிகாசலம் தயங்கித்தயங்கிக் கேட்டான். ”எந்த ஊரு, எந்த எடம்னு எதுவும் தெரியாம எப்பிடிடா சொல்றது?” என்று பதில் சொன்னாலும்கூட அளவுக்குமீறிச் செய்கிறோமோ என்று எனக்கும் ஒருகணம் தோன்றத்தான் செய்தது.
சில கணங்கள் பேச்சில்லை. தெருவில் இருப்பவர்கள் ஒன்றிரண்டு பேர்களாக வந்து பார்த்துவிட்டு மதிலோரமாக ஒதுங்கி நின்று சிறிதுநேரம் தமக்குள் பேசிகொண்டார்கள். பெரிய கூட்டமே திரண்டுவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. வெயில் உச்சியைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
மாலைபோட்டு வணங்கிவிட்டு மெளனமாக சில கணங்கள் நின்றார் ஒரு பெரியவர். அப்புறம் அவராகவேநாங்கள்ளாம் அந்த காலத்துல சுதேசி மில்லுல ஒன்னா வேல பாத்தவங்க. எண்பத்தொன்னுல ஸ்டிரைக் வந்து ஆலய மூடறவரிக்கும் ஒன்னாதான் இருந்தம். அவன் எழுதற தட்டிய ஆல ஜனங்களெல்லாம் சினிமா பாக்கறாப்புல அந்த காலத்துல கூடிகூடி பாக்கும்என்று சொல்லிக்கொண்டார்.
நேரம் கடக்கக்கடக்க எந்த எண்ணமும் புரளாதபடி மனம் உறைந்துபோய்விட்டதாகத் தோன்றியது. பாடையின்மீது மலர் அலங்காரம் செய்யத் தோதாக மூங்கில்பட்டைகளை அறுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் சின்னச்சின்ன நாய்க்குட்டிகள் சுருண்டு படுத்திருப்பதைப்போல சணல்உருண்டைகள் கிடந்தன. அவற்றையொட்டி பத்து பன்னிரண்டு பூக்குடைகள். டயர் வண்டியை இழுத்துவந்தவர்கள் ஓரமாக நிறுத்திவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து பீடி பற்றவைத்தார்கள். தேநீர் வாங்கிவந்து எல்லோருக்கும் கொடுத்தார் ஒருவர்.
தயிர்க்கூடையோடு தெருமுனையில் திரும்பிய அம்மா, குடிசை இருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு அப்படியே உறைந்து ஒருகணம் நிற்பதைப் பார்த்தேன். அருகிலிருந்த வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் அவள் விசாரிப்பது தெரிந்தது. பிறகு புடவைமுந்தானையால் வாய்மறைத்தபடி சிறிது நேரம் அங்கிருந்தே பார்த்தாள். அப்புறம் தயிர்க்கூடையோடு பெரியப்பாவின் அருகில்  வந்து நின்றாள். கண்கலங்க தன் கூடையிலிருந்து சுவரோரமாக கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த பித்தளைச்செம்பு நிறைய மோர் ஊற்றிவைத்துவிட்டு கைகுவித்து வணங்கிவிட்டுச் சென்றாள்.
மனம் பொங்கியபடி இருந்தது. “என் கூட இருக்கறதயே அவமானமா நெனச்சி எல்லோரும் போயிட்டாங்க. சாப்பாட்டுக்காகத்தான ஒரு குடும்பத்த நாம அண்டி கெடக்கணும். சரி, அந்த சாப்பாட்டயே உட்டுரலாம்னு முடிவெடுத்து உட்டுட்டேன். வெளயாட்டா இதோ இருபது இருபத்தஞ்சி வருஷம் பறந்தேபோச்சி. வெறும் மோர், டீ, காப்பி, தண்ணி, பழங்கள்னு பழகிகிட்டேன். இன்னைக்குவரைக்கும் நம்ம வண்டி சிக்கலில்லாம ஓடுது.” கடற்கரையிலிருந்து நடந்துவரும்போது பெரியப்பா ஒருமுறை சொன்ன வார்த்தைகள் நினைவில் படர்ந்தன. அது கடற்கரைமுழுதும் பாலிதீன் பைகள் குப்பையாக இறைபடுவதைக் கண்டித்து, உடல்முழுக்க ஆடையோடு சின்னச்சின்ன சுவரொட்டிகளை குண்டூசிகளால் குத்திக்கொண்டு காந்தி சிலையிலிருந்து டியூப்ளே சிலைவரைக்கும் மாறிமாறி அவர் நடந்த நாள்.
பாலித்தீன் பைகள் மரணத்தின் வலைகள்’ ’பாலித்தீன் கழிவு உலகுக்கே அழிவு’ ’மட்காத குப்பை பாலித்தீன் மண்ணுக்குக் கேடு பாலித்தீன்’ ‘அமுதம் என்று நஞ்சை எடுக்காதே. சுலபம் என்று பாலித்தீன் பை கொடுக்காதேஅவர் உடல்முழுதும் அந்த வாசகங்கள். முதல் இரண்டுநாட்கள் அவரைப் பார்த்தவர்கள் எல்லோரும் கேலிப்பொருளாக நினைத்துச் சிரித்து கிண்டல் செய்தார்கள். மூன்றாவது நாள் அவரை எதிர்கொண்டவர்கள் அசாதரணமான அமைதியோடு கடந்துபோனார்கள். நான்காவது நாள் அது பத்திரிகையில் பெட்டிச் செய்தியாக வெளிவந்தது. ஐந்தாவது நாள், கடற்கரையோர விற்பனையாளர்கள் அவரை கரையோரம் நடக்க அனுமதிக்கவில்லை. அடித்து விரட்டினார்கள். அதுவும் செய்தியானது. அடுத்த நாள் அவர் அடிபடும்போது தற்செயலாகப் பார்த்துவிட்ட கல்லூரிமாணவர்கள் குறுக்கிட்டுத் தடுத்தார்கள். அந்த வார இறுதியில் கடற்கரையில் யாரும் எதையும் பாலித்தீன் பைகளில் விற்கவும் கூடாது வாங்கவும் கூடாது என்றொரு உத்தரவை அரசு பிறப்பித்தது.
சரியா வந்துருக்கா பாருடா…” வண்டியை பூவரசமரத்தோரம் நிறுத்திவிட்டு வந்த முத்துசாமி சுவரொட்டியைப் பிரித்துக் காட்டினான்.
கண்ணீர் அஞ்சலி. முள்முள்ளாய் பரவிப் போன பிரச்சினையின் ஆழம் எல்லாம் கல்வெட்டாய் நெஞ்சில் தைக்க சுவரொட்டி வைத்த மைந்தன் மண்ணைவிட்டு மறைந்து போனான் மனசைவிட்டு மறையவில்லை. தோற்றம் 02.10.1948. மறைவு 30.01.2013. நண்பர்கள் குழு.”
தளும்பிய கண்ணீர்த்துளிகளை விரலால் வழித்து உதறியபடிசரியா இருக்குடா. ஒட்டறதுக்கு ஆள புடிச்சி அனுப்பிவச்சிடுஎன்றேன்.
இடைவிடாத பறையொலியின் முழக்கம்.  அடிவயிறு அதிர்ந்து சுருங்கியது.
சடங்கு ஏதாச்சிம் செய்யணுங்களா தம்பி?” சந்தனப் பொட்டுக்காரர் வந்து கேட்டார். “அதெல்லாம் வேணாம்என்றேன். “அப்ப கொள்ளி?” என்று உடனே அடுத்த கேள்வியைக் கேட்டார். கொஞ்சம்கூட யோசிக்காமல் நானே வைக்கறேன்என்று சொன்னேன். என் பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. மெளனமாக சில கணங்கள் என்னையே பார்த்தார். பிறகுசரி, புதுவேட்டி வாங்கியாறேன். கெளம்பும்போது கட்டிக்கணும்என்று சொல்லிவிட்டு பறை முழங்கிக்கொண்டிருந்த கம்பத்தைநோக்கி நடந்தார். பறையைக் காய்ச்சுவதற்காகக் குவித்து எரிக்கப்பட்ட எருமுட்டைச் சாம்பல் புகைந்துகொண்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பேச்சோடு பேச்சாக, “இவ்ளோ அழகா வாசகங்கள் எழுதறிங்களே, நீங்க ஏன் கவிதை பக்கம் போகலை?” என்று கேட்டபோது மர்மமான ஒரு புன்னகை அவர் உதடுகளில் நெளிந்ததை நினைத்துக்கொண்டேன். “என் நாட்டம் கவிதயில இல்ல. சமூகவிழிப்புதான் நம்ம உலகம்என்று மெதுவாகச் சொன்னார். அவர் காதோர நரைமுடி வெள்ளிக்கம்பிகளாகப் பறந்துகொண்டிருந்தன. வெளுத்த புருவம். உருண்ட விழிகள். அழுத்தமான மூக்கு. ”ஆனா நீ எழுதணும். ஒனக்கு கவித வரும். சீக்கிரமா நீ ஒரு தொகுப்பு போடு. அதுக்கு நான் ஒரு முன்னுரை எழுதறேன்என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
இருபது வயதில் சுதேசி மில்லில் வேலைக்காக சேர்ந்தார் அவர். தொழிற்சங்கத்துக்காக வகைவகையான சொல் அடுக்குகளோடு அவர் உருவாக்கிய சுவரொட்டி வாசகங்கள் அவர்மீது மற்றவர்களின் கவனம் குவியக் காரணமாக இருந்தன.  ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வேலைநிறுத்தங்கள் எல்லாவற்றிலும் அவருடைய சுவரொட்டிகள் முக்கியத்துவம் பெற்றன. கவித்துவம் நிரம்பிய சொற்சேர்க்கைகளை அவர் மனம் தன்னிச்சையாக உருவாக்கின.
பொய்க்காரணம் காட்டி ஒரு தொழிலாளி வேலையைவிட்டு நீக்கப்பட்டதையொட்டி நிகழ்ந்த போராட்டத்தின்போது ஆலைவாசலில் திரும்பிய பக்கமெல்லாம் வண்ணவண்ண மைகளில் அவர் எழுதிய நூறு சுவரொட்டிகளைத் தாங்கிய தட்டிகள் வைக்கப்பட்டிருந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு பழைய நினைவுகளில் சிறிதுநேரம் மூழ்குவது பெரியப்பாவின் வழக்கம். ’நிர்வாகத்தின் தந்திரத்தால் நீதிதேவதை கண்ணிழந்தாள்’ ’வேலையைப் பறித்தது நிர்வாகம் நேர்மை இழந்தது பரிதாபம்’ ’பொய்மையில் வெற்றி முளைக்காது போலியின் நாடகம் நிலைக்காதுகண்மூடிய கோலத்தில் அந்தப் பழைய வாசகங்களை அவர் மனப்பாடமாகச் சொல்லும்போது ஆச்சரியத்துடன் கேட்டபடி பல சமயங்களில் உறைந்துபோய் நின்றிருக்கிறேன். அந்தப் போராட்டம்தான் ஆலையில் அவர் முக்கியப்புள்ளியாக மாறியதற்கு வழிவகுத்த திருப்புமுனை. அந்தப் போராட்டத்தின் காரணமாக வேலையைத் திரும்பப் பெற்ற இளைஞன் சில மாதங்களுக்குப் பிறகு நிர்வாகத்தின் கையாளாக மாறி, அவருக்கு எதிராக சாட்சி சொல்லி, வழக்குகளைச் சந்தித்து மீண்டதைப்போல பல கதைகளை எவ்விதமான புகார் தொனியும் இல்லாமல் சொல்வது அவருக்கு மட்டுமே சாத்தியான குணம்.
ஆலைக்கு வெளியே பொதுவாழ்விலும் தன் சுவரொட்டிவேலையை அவர் தொடங்கியபோது கடுமையான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் அவர் சந்திக்கவேண்டி வந்தது. சாலையோர மதுக்கடையை அகற்றுவதை ஒட்டி அவர் எழுதியொட்டிய சுவரொட்டிகள், தொடக்கப்பள்ளி எதிரில் வாகனப்போக்குவரத்து ஒழுங்கை வலியுறுத்தி எழுதப்பட்ட சுவரொட்டிகள் எல்லாமே நியாயத்தின் குரலாக அமைந்தவை. இறால்பண்ணையை எதிர்த்து, நிறுத்தாமல் போகிற பேருந்துகளைக் கண்டித்து, புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை எதிர்த்து, பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான நிலத்தை வளைத்து மதில் எழுப்பிக்கொண்ட அரசியல்வாதியை அம்பலப்படுத்தி……. அவர் எழுதிய சுவரொட்டிகள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இரவும் பகலுமாக ஒருபக்க வெள்ளைத்தாள்களில் எழுதுவார். மை உலரும்வகையில் வாசலில் அடுக்கி வெயில்படும்படி வைப்பார். பிறகு வாளியில் பசையோடு தெருத்தெருவாய் நடந்து அவரே சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு வருவார். ஒட்டுவதை யாராவது தடுத்தால் அட்டைகளில் ஒட்டி மரக்கிளைகளில் தொங்கவிடுவார். விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையங்களுக்கு அவர் அழைக்கப்படுவதும் அடிபடுவதும் வாடிக்கையாக நடைபெறும் விஷயங்களாகிவிட்டன.
பெரியப்பாவின்  முகத்தில் வந்து உட்கார்ந்த ஈக்களை விரட்ட நெருங்கிச் சென்றபோது, காதோரமாக கன்னத்தில் ஒட்டிக்கொண்ட அட்டைபோலத் தெரிந்த கரிய தையல் தழும்பின்மீது பார்வை பதிந்தது. ஸ்டேஷனில் ஒருமுறை இடுப்பு நிக்கரோடு நிற்கவைத்து அடித்த இன்ஸ்பெக்டர் அறைந்ததில் தடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தபோது, அருகிலிருந்த அலமாரி கைப்பிடியில் மோதிக் கிழிபட்டதில் உருவான காயம். இன்னும் மார்பில், முதுகில், தொடையில், தோளில் பல தழும்புகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு கசப்பான பின்னணி இருந்தது. பற்றற்ற குரலில் அவற்றை அவர் சொன்னதெல்லாம் நினைவில் பொங்கி அலைமோதின. ”இந்த நாட்டுல கெட்ட வார்த்தைங்கள பேசறதுல ஒரு போட்டி வச்சா, போலீஸ்காரங்களுக்குதான் மொதல் மெடல் கெடைக்கும்என்று விரக்தியான சிரிப்போடு சொன்ன வார்த்தைகள் காதருகில் மீண்டுமொருமுறை ஒலிப்பதுபோல இருந்தன.
ஆற்றுமணல் கொள்ளையை அம்பலப்படுத்தி அவர் எழுதி ஒட்டிய சுவரொட்டிகளால் சமீபகாலமாக அதிகாரத்தரப்பின் எதிர்ப்புகளும் ஆத்திரமும் ஒட்டுமொத்தமாக அவர்மீது குவிந்தன. ஆனால் அவரை யாருமே பொருட்படுத்தவில்லை. வழக்கமாக ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி நடைபெறும் விசாரணைகூட நடைபெறவில்லை. பத்துநாள் கழித்து, காலைநடைக்காக ஏரிக்கரைப்பக்கம் போனவரை அறிமுகம் இல்லாத ஆட்கள் அவரை அடித்துத் தள்ளிவிட்டுப் போய்விட்டார்கள். மயங்கிக் கிடந்த தகவலை, அந்தப் பக்கமாக ஆடு ஏற்றிக்கொண்டு சைக்கிளில் போன சாயபு ஒருவர் சொன்னபிறகுதான் ஊர்க்காரர்களுக்குத் தெரிய வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் மருத்துவமனையில் சேர்த்து, மருத்துவம் பார்த்த பிறகுதான் அவர் பிழைத்துவந்தார். நடமாடும் நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் பிடித்தன. “ஒரு  ஆள கூடவா அடயாளம் தெரியல? நல்லா யோசிச்சி சொல்லுங்க பெரியப்பாஎன்று பல முறை விசாரித்துவிட்டோம். அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட பதிலாகக் கிடைக்கவில்லை.
எடுத்துரலாமா?”
சந்தனப்பொட்டுக்காரர் நெருங்கிவந்து அடங்கிய குரலில் கேட்டார். குடிசையின் பக்கவாட்டுச் சுவரையொட்டியபடி சாக்குத்திரை மறைவில் இரண்டு குடங்களில் தண்ணீர் இருந்தது. ஒரு பானைத் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டேன். தலையைத் துவட்டிக்கொள்ள முத்துசாமி துண்டைக் கொண்டுவந்து கொடுத்தான், கட்டிக்கொள்ள புதுவேட்டியைக் கொடுத்தார் சந்தனப்பொட்டுக்காரர்.
நாங்கள் ஆறுபேர். தெருக்காரர்கள் ஆறுபேர். அவ்வளவுதான் கூட்டம். மனபாரத்தால் எங்களால் அழக்கூட முடியவில்லை. பெஞ்சிலிருந்த அவரை ஒரு சிலையைப்போலத் தூக்கிவந்து பூ அலங்காரத்துக்கு நடுவிலிருந்த பாடையில் கிடத்தி, பூப்பல்லக்கைத் தூக்கி வண்டிமீது வைத்தோம். கயிற்று உறியில் வைக்கப்பட்ட கொள்ளிச்சட்டியைக் கொண்டுவந்து என் கையில் கொடுத்துவிட்டுச் சென்றார் சந்தனப் பொட்டுக்காரர்.
பறையொலி அதிர்ந்தது. வண்டி நகர்ந்தது. வாசலில் நின்று வேடிக்கை பார்த்தார்கள் மக்கள்.
பத்து வருஷங்களுக்குமுன்னால் என் கவிதையைப் பாராட்டி அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் திடீரென்று துல்லியமாக நினைவில் மோதின. அன்றுமுதல் ஒவ்வொரு கவிதைக்கும் என்னை அவர் பாராட்டிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தைகள். அந்த உணர்ச்சிகள். அருவிபோல நினைவுகளில் பொங்கிவழிந்தபடி இருந்தன.
தகனமையத்தில் இறக்கி வைத்ததும் இரும்புத் தண்டுகளால் இணைக்கப்பட்ட மின் பலகைக்கு பெரியப்பாவின் உடலை மாற்றிவைத்தார்கள். பதிவுவேலைகளை வேகவேகமாக முடித்துவிட்டு ரசீது வாங்கிவந்தான் முத்துச்சாமி. சம்பிரதாயமாக கொள்ளிச்சட்டியை பெரியப்பாவின் காலருகில் வைத்துவிட்டு சுற்றிவரச் சொன்னார் சந்தனப்பொட்டுக்காரர். மூன்றுசுற்று முடிந்ததும் காலைத் தொட்டு வணங்கச் சொன்னார். பிறகு மாலைகள் அகற்றப்பட்டன.
கடசியா ஒரு தரம் பாத்துக்குங்க
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மின்னல் வேகத்தில் அந்த முகத்தைத் துணியால் மூடிவிட்டு சந்தனப்பொட்டுக்காரர் விலகிக்கொள்ள, அருகில் நின்றிருந்த தகனப்பணியாளர் தண்டவாள அமைப்பின்மீது பலகையைப் பொருத்தி விசையை அழுத்தினார். சத்தத்தோடு உயர்ந்த உலைக்கதவின் இடைவெளிக்குள் பலகை முன்னகர்ந்து, பெரியப்பாவின் உடலைக் கிடத்திவிட்டு போன வேகத்தில் வெளியே வந்ததும் உலைக்கதவு மூடிக்கொண்டது.
வெறுமையான பலகையைக் கண்டதும் இதயம் உச்சவேகத்தில் துடித்தது. ஆறுமுகமும் ஏழுமலையும் சத்தம் போட்டு அழுதார்கள்.
காலயில வந்து ரசீத காட்டி சாம்பல வாங்கிக்கலாம்
பணியாளர் சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார். கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்து எல்லோரையும் அனுப்பிவிட்டுத் திரும்பினான் முத்துசாமி. வெளியே வந்து தகனமையத்தின் மதிலையொட்டி அரசமரத்தடியில் காணப்பட்ட சிமெண்ட் பெஞ்சுகளில் உட்கார்ந்ததும் அவன் வெடித்து அழ ஆரம்பித்தான். சில நிமிடங்கள் பைத்தியம் பிடித்துக் குழம்பிவிட்டதுபோல மனம் மரத்துப்போயிருந்தது. ”காலையில ஆறுமணிக்குலாம் நான் வந்து சாம்பல வாங்கி வைக்கறேன். ஏதாச்சிம் வண்டியோட வந்திங்கன்னா திருக்காஞ்சிக்கு போயி கரச்சிட்டு வந்துரலாம்என்று சொல்லிவிட்டுப் போனார் சந்தனப்பொட்டுக்காரர்.
பெரியப்பாவை நினைத்தபோது பொங்கிய வருத்தத்துக்கு அளவே இல்லை. அவருடைய உண்மையான மரணம் பல ஆண்டுகளுக்குமுன்னாலேயே நிகழ்ந்துவிட்டது. இன்று நிகழ்ந்தது வெறும் உடல்மரணம். அப்படி ஓர் எண்ணம் ஓடியபோது உடலே நடுங்கியது. ஆங்கிலப்பள்ளி வாகனங்கள் சாலையில் வரிசையாகக் கடந்து செல்வது தெரிந்தது. வெயிலின் கடுமை வெகுவாகக் குறைந்திருந்தது.
வீட்டைநோக்கி மெளனமாக நடக்கத் தொடங்கினோம்.
ஒரு திருப்பத்தில் பாரம் சுமந்த பெரிய சரக்குலாரியொன்று வழியை அடைத்தபடி நின்றிருந்தது.  அதன் ஒரு சக்கரம் பிசகாக சாலையை ஒட்டியிருந்த பள்ளத்தில் இறங்கிவிட்டது. மீட்டெடுக்கும் வழி புலப்படாமல் கூட்டமே மாறிமாறி ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருந்தது. கலங்கிய மனத்தோடு நாங்கள் அதைக் கடந்து நடந்தோம்.
ஒரு சின்ன தரைப்பாலம். தேர்தல் சின்னம் எழுதப்பட்டிருந்த அந்தச் சுவரில் எங்கள் கண்ணீர் அஞ்சலி சுவரோட்டி தெரிந்தது. அடுத்தடுத்து திரைப்படச் சுவரொட்டிகள். சுவர்விளிம்பில் சின்னதாக மூன்று சுவரொட்டிகள் தெரிந்தன. சுய உணர்வே இல்லாமல் நடந்துகொண்டிருந்த என் தோளை அழுத்தி அவற்றைப் பார்க்கும்படி கண்ணாலேயே சொன்னான் ஆறுமுகம். அந்த வாசகங்களைப் பார்த்ததுமே என் மனம் பொங்கியது. ’ஆற்றுமணலை அள்ளாதே அன்னை இயற்கையைக் கொல்லாதே’ ’திரண்ட மணல் எமது செல்வமடா, திருட நினைப்பது பாவமடா’ ’அன்னமிட்ட வீட்டில் கன்னம் வைக்காதே ஆற்றுமணலை அள்ள திட்டமிடாதே’. ஒவ்வொரு எழுத்திலும் பெரியப்பாவின் முகம் நிறைந்திருப்பதுபோலத் தோன்றியது.
ஒவ்வொரு வாசகத்திலும் பெரியப்பா வெளிப்படுத்தும் உணர்வுகளில்தான் எத்தனை எத்தனை வகை. ஆலோசனை. கோரிக்கை. எச்சரிக்கை. எல்லாமே யார்யாரோ எந்தெந்தக் காலத்திலோ சொன்னவைதான். நம் காலத்தில் அதை முன்வைத்தவர் பெரியப்பா என்பதால் அதில் அவர் குரல் கேட்டது. ஒவ்வொரு சொல்லிலும் ஆழம் காணமுடியாத அர்த்தம் பொதிந்திருப்பதாகத் தோன்றியது. பெரியப்பா என்று மனம் விம்மியது.
கொலகார பசங்களுக்கு அந்த தெய்வம்தான் கூலி குடுக்கணும்டாவெடிப்பதுபோலச் சொன்னான் ஏழுமலை.
அவனை அமைதிப்படுத்தும் விதமாக அவன் கையைப் பற்றி அழுத்தியபடி நடையைத் தொடரத் தூண்டினேன். எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடியாதபடி வேதனையில் கொந்தளித்தபடியே இருந்தது மனம். அடுப்பில் வைத்த கூழ்ப்பானைபோல. நடக்கநடக்கத்தான் அது அடங்கும் என்று தோன்றியது.
வழிநெடுக, தரைப்பாலங்கள், வீட்டுச்சுவர்கள், வாகனங்கள், மரங்கள், குப்பைத்தொட்டிகள் என விட்டுவிட்டு கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் தெரிந்த சுவரொட்டிகளில் பெரியப்பாவின் முகம் தோன்றியபடி இருந்தது, பிரகாசமாக.