Home

Saturday 21 July 2018

விடுபட்டவர்களின் வரலாறு - நாவல் அறிமுகம்




அறுபதுகளில் நம்மைச்சுற்றி என்னென்ன நடந்தன என்பதை ஒரு சுருக்கமான பட்டியலாக எழுதினால் எப்படி இருக்கும்? முதலாவதாக, ஏறத்தாழ 450 ஆண்டுகளாக போர்த்துகீசிய இந்தியப்பகுதியாக அறியப்பட்ட கோவா அறுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. பிறகு, சீன அதிகாரத்தை ஏற்க மறுத்து தலாய்லாமா சீனாவை விட்டு வெளியேறியபோது அடைக்கலம் கொடுத்ததற்காகவும் எல்லைச்சிக்கல் காரணமாகவும் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையே போர் மூண்டது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. அதையொட்டி தேசிய அளவில் இயங்கிவந்த அஞ்சல் தொலைபேசி ஊழியர் சங்கமும் இரண்டாகப் பிரிந்தது. அறுபதுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பஞ்சமேற்பட்டது. மக்கள் உணவுப்பொருட்களுக்காகத் திண்டாடினார்கள். இந்தித்திணிப்பை எதிர்த்து மாபெரும் போராட்டம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அண்ணா என மக்களால் பேரன்போடு அழைக்கப்பட்ட அண்ணாதுரையின் தலைமையிலான கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. நீண்ட காலம் அவரால் முதல்வராக நீடிக்கமுடியாதபடி அவர் மறைந்துபோனார். இவை அனைத்தும் அரசியல் களத்தில் நிகழ்ந்தவை. அதனாலேயே இன்றும் சமூகமனத்தில் அழியாமல் நிற்பவை. வரலாற்றில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இச்சம்பவங்கள்.

இதே அறுபதுகளில் எளியவர்களாகப் பிறந்து எளியவர்களாகவே வாழ்ந்து மறைந்துபோனவர்களும் உண்டு. அவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை. எப்போதும் தண்ணீரில் உப்பென கரைந்துபோகிறவர்கள் அவர்கள். அவர்கள் பிறந்ததற்கும் சுவடிருப்பதில்லை. வாழ்ந்ததற்கும் சுவடிருப்பதில்லை.
விட்டல்ராவ் எழுதியிருக்கும் புதிய நாவலைப் படித்ததுமே இந்த எண்ணம்தான் முதலில் எழுந்தது. விட்டல்ராவ் இந்த நாவலில் ஒரு புதுமையைச் செய்து பார்த்திருக்கிறார். வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச்சித்திரம்போல ஒன்றிரண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம் ஒளிமறைவுப் பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள்மீது வெளிச்சம் விழும்படியாக ஒரு நாவலை எழுதிப் பார்த்திருக்கிறார். தெருக்கள், வீடுகள், கடைகள், திரையரங்குகள், உணவுவிடுதிகள், குதிரைப்பந்தயம் என சென்னை வாழ்க்கையைப்பற்றி அவர் அளிக்கும் பல நுண்தகவல்கள் வாசிப்பின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன. அறுபதுகளின் வாழ்க்கை நம் கண்முன்னால் எழுத்தில் ரத்தமும் சதையுமாக விரிகிறது.
தேவ், அவன் அம்மா, டாக்டர் ஹமீது, ஹெல்ட், சலோமி, பாவ்லின், கிறிஸ்டி, பில்லி, மர்லின், லான்சி, சிந்தியா, புஷ்பநாதன், கமலம், பூபாலன், சிங்காரம், செல்லம்மா, கொண்டப்பன், ஜார்ஜ், அம்பி, வேணுகோபால் என எண்ணற்ற மனிதர்கள் நாவலில் நிறைந்திருக்கிறார்கள். தனித்துவம் நிறைந்த தம் செயலாலும் பேச்சாலும் நினைவில் நின்றுவிடுகிறார்கள்.
ஹமீது ஒரு யுனானி மருத்துவர். தன் நண்பனின் மகன் என்னும் காரணத்தால் தேவ் மீது பாசமுள்ளவர். அவன் வளர்ச்சிமீது அக்கறை காட்டுகிறார். அப்பா இல்லாத பிள்ளைக்கு அப்பாவின் இடத்தில் இருந்து செய்யவேண்டியவற்றைச் செய்கிறார். பள்ளிப்படிப்பை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றவனுக்கு வழிகாட்டுகிறார். எக்ஸ்ரே படிப்புக்கும் பயிற்சிக்கும் அவனை சென்னைக்கு அனுப்பிவைக்கிறார். அவன் சென்னையில் தங்குவதற்கு ஏதுவாக தன்னுடைய இன்னொரு நண்பனின் வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொடுக்கிறார். செலவுக்கு பணம் அனுப்பிவைக்கிறார். எக்ஸ்ரே வேலைக்கு எதிர்பாத்த எதிர்காலம் இல்லை என்பதை கண்கூடாக உணர்ந்துகொள்ளும் தேவ் தொலைபேசித்துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதை ஒட்டி அவருக்கு சற்றே வருத்தம் இருந்தாலும் வாழ்த்தி அனுப்பிவைக்கிறார். எவ்வளவு உயர்ந்த உள்ளம்.
ஹமீது சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டு இளைஞன் தேவுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஹெல்ட் தம்பதியினரின் குடும்பத்தை அன்பின் உறைவிடம் என்றே சொல்லவேண்டும் போர்த்துகீசியர் தெருவில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் அவர்கள். நான்கு பெண்பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்கும் ஹெல்ட் தன் வீட்டு மாடியறையில் தேவ் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறார். ஒரு காலத்தில் பல ரிக்ஷாக்களுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் அவர். ஒவ்வொன்றாக விற்று செலவு செய்கிறார். அவருடைய முக்கியமான பொழுதுபோக்கு குதிரைப்பந்தயம். அதில் அவர் பெரிய வெற்றிகள் எதையும் ஈட்டவில்லை. மாறாக தான் ஈட்டிய செல்வத்தையெல்லாம் அதில் தொலைக்கிறார். ஆயினும் அதன் கவர்ச்சியிலிருந்து அவரால் விடுபடமுடியவில்லை. ஆங்கிலோ இந்திய சமூகம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்து இல்லாமலாகிக்கொண்டிருந்த காலம் அது. பலர் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு ஆஸ்திரேலியா, பிரான்சு, இங்கிலாந்து என பறந்துபோகிறார்கள். சிலர் மாற்று இனத்தவரைத் திருமணம் செய்துகொண்டு இடம் மாறிச் செல்கிறார்கள். எந்த வித்தியாசமும் பாராட்டாமல் தன் உணவுமேசையில் உட்காரவைத்து தேவுக்கு உணவு வழங்கும் மிஸஸ் ஹெல்ட் தாய்மை நிறைந்த பாத்திரம்.
எக்ஸ்ரே படிப்பைத் தொடர்ந்து எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டவில்லை என்னும் சூழலில் அஞ்சல் தொலைபேசித்துறையில் இயக்குநர் வேலைக்கு ஆளெடுக்கும் தகவலை தேவுக்குத் தெரியப்படுத்தும் சிந்தியா முக்கியமானதொரு பாத்திரம். தொலைபேசித்துறை வேலை தேவ் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை. அதற்கு முழுமுதற்காரணம் சிந்தியா.
பல செய்திகளை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து வெகுவேகமாக உருவாக்கப்படும் சித்திரங்கள் நாவலுக்கு உயிரோட்டமளிக்கின்றன. செளராஷ்டிர நகரில் புஷ்பநாதனுடன் ஆறு பேரோடு ஒருவனாக குடியிருக்க தேவ் சென்றதைப்பற்றிய சித்தரிப்பு சென்னை வாடகைவீட்டின் அவலத்தை முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு. அரைநூற்றாண்டுக்குப் பிறகும் இந்தச் சூழ்நிலையில் எந்த மாற்றமுமில்லை. ’பேபி டாக்சிஎன்னும் வாடகை வாகனத்தைப்பற்றிய குறிப்பு சுவாரசியமானது. மாரிஸ் மைனர் எனப்படும் பழையவகை கார் அது. இருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யும்பொருட்டு உருவான வாகனம். ‘ஜூக் பாக்ஸ்இன்னொரு சுவாரசியமான குறிப்பு. உணவு விடுதிகளில் பாடல் கேட்கும் வசதி அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் அது இன்றுபோல எல்லோரும் பொதுவில் கேட்கும் வசதியல்ல. ஜுக்பாக்ஸ் என்பது ஒரு பாட்டைத் தேர்ந்தெடுத்துக் கேட்கும் முறை.  ஒரு பாட்டைத் தேர்ந்தெடுத்து, அதைக் கேட்பதற்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, அந்தப் பாட்டை ஒலிக்கச் செய்து கேட்கும் முறை.  தொலைபேசி நிலையத்தில் சம்பளம் வழங்கும்போது, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக குடும்பக்கட்டுப்பாடு சாதனங்களைக் கொண்ட பாக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறது அரசு. திருமணமானவர்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படவேண்டும் என்னும் விதி கறாராக கடைபிடிக்கப்படுகிறது. துணிக்கடைகளிலும் பாத்திரக்கடைகளிலும் அரசு ஊழியர்களுக்கு முதன்முதலாக தவணைமுறைகளில் பொருட்களை வாங்கும் சலுகை கிடைக்கிறது.  எல்ஃபின்ஸ்டன் என்னும் திரையரங்கு இடிக்கப்படுகிறது. சஃபையர் திரையரங்கம் திறக்கப்படுகிறது. முதல்வர் அண்ணாதுரை  இறந்ததையொட்டி துக்கத்தை உணர்த்தும் விதமாக அனைவரும் கருப்புத்துணிப்பட்டையை சட்டையில் குத்திக்கொள்கிறார்கள். கருப்புத்துணியே எங்கும் கிட்டாதபோது, ஒரு நண்பர் தன் மனைவியின் கருப்புநிறப் புடவையைக் கிழித்து எடுத்துவந்து கொடுக்கிறார். இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இத்தகு பல செய்திகள் ஊடும்பாவுமாக நாவலெங்கும் இடம்பெற்றிருக்கின்றன.
நாவலில் பல இடங்களில் இடம்பெறும் தொலைபேசி நிலையக் காட்சிகள் மிகமுக்கியமானவை. இப்படிப்பட்ட நிலையங்களே இன்றில்லை. எப்படி ஆங்கிலோ இந்தியன் வாழ்க்கை இன்று எந்த இடத்திலும்  கண்ணில் படாமல் மறைந்துவிட்டதோ, அதேபோல இந்தத் தொலைபேசிநிலையக் காட்சிகளும் மறைந்துவிட்டன. இப்பகுதிகளை வாசிக்கும்போது, கனவில் வந்த ஒரு காட்சியை, கனவிலிருந்து சட்டென விழித்தெழுந்து உட்கார்ந்து அசைபோடுவதுபோல உள்ளது
நாவலின் மையப்பாத்திரம் தேவ் என்கிற தேவேந்திர ஐதாள. இளைஞன். பூர்விகத்தால் கன்னடமொழி பேசும் கன்னடியன். ஆனால் அவன் பிறந்ததும் கல்விகற்றதும் வாழ்ந்ததும் தமிழ்நாட்டில்தான். எல்லா வகையிலும் அவன் தமிழனே. ஆனால் அவன் வீட்டுமொழி வேறாக இருப்பதாலும் அவன் விழிகளில் ஏறிய வெண்ணிறத்தாலும் அவனை யார் நீ? யார் நீ?’ என்னும் குரல் பால்யகாலம் முதல் துரத்திக்கொண்டே இருக்கிறது. பள்ளியில் அவனோடு படித்த தோழர்கள் வழியாகக் கேட்கப்படுவதும் அதே கேள்வி. வேலை செய்ய வந்த இடத்தில் சக ஊழியர்கள் கேட்பதும் அதே கேள்வி. தற்செயலாக கர்நாடகத்தலைநகருக்குள் வந்தபோது அவனை மடக்கி விசாரிக்கும் கலவரக்காரர்கள் கேட்பதும் அதே கேள்வி. கன்னடியர் நடுவில் அவன் கன்னடியனாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தமிழர் நடுவில் அவன் தமிழனாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வடதுருவத்திலும் இல்லாமல் தென்துருவத்திலும் இல்லாமல் நடுவில் நிற்கும் நிலநடுக்கோடாக அவன் அந்தரத்தில் நிற்கிறான். அவனுடைய சொந்த அடையாளம் பற்றிய துயரம் அவனைக் கணந்தோறும் ஆட்டிப் படைத்தபடி இருக்கிறது.
அவனிடமிருந்து சலுகைகளை எதிர்பார்க்கும் பல நண்பர்களும் உறவினர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம்நீ என்ன, தனி ஆள்தானே? உனக்கென்ன, சாதிசனம் இருக்கிறதா? உற்றார் உறவினர்கள் இருக்கிறார்களா? ஊர் இருக்கிறதா? நிலம் இருக்கிறதா? வீடு இருக்கிறதா?” என்று கேள்விகளால் தைத்துக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்களின் இத்தகு சின்னத்தனமான கேள்விகளையும் பார்வைகளையும் பொருட்படுத்தாதவனாக, அனைத்தையும் கடந்து சென்றுகொண்டே இருக்கிறான் தேவ்.
தன் வாழ்க்கையை தானே செதுக்கிக்கொள்ளும் பாத்திரம் தேவ். எவ்வித வேறுபாடுமின்றி எல்லோருடனும் ஒரே விதமான அன்போடு பழகுகிறான் அவன். அன்பை வழங்குபவனுக்கு சுற்றி இருப்பவர்களும் அன்பையே வழங்குகிறார்கள். சென்னை வாழ்க்கை அவனுக்கு அளிக்கும் மிகப்பெரிய கொடை கமலாவின் காதல். சாத்தாணிப்பூந்தோட்டத்தில்  வாழும் தாசில்தார் வீட்டுப் பெண் அவள். தாசில்தாருக்கு தேவ்மீது துளியும் நம்பிக்கையோ அன்போ இல்லை. அத்திருமணமே அவருக்குத் தெரியாமல் அவனுடைய நண்பர்கள் உதவியால் நடைபெறுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ரத்தம் தேவைப்படும் நிலையில் தேவ் ரத்ததானம் செய்கிறான். அவன் குணத்தையும் மனத்தையும் அவர் மெல்ல மெல்லப் புரிந்துகொள்கிறார். அதற்குப் பிறகுதான் அவர்களிடையே உறவு சீரடைகிறது.
நாவலில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவகையில் முக்கியமானவர்களாகப் படைத்திருக்கிறார் விட்டல்ராவ். லூயி என்றொரு இளைஞன். அவன் தில்லியில் இருக்கும் பெண்ணொருத்தியைக் காதலிக்கிறான். அவளுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். அவள் லூயிக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதுகிறாள். லூயி அதற்கு ஒரு பதில் எழுத விரும்புகிறான். அதை கவித்துவமான ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்பதால் தேவின் உதவியை நாடுகிறான். தேவும் எழுதிக் கொடுக்கிறான். ஒன்றல்ல, இரண்டல்ல, பலமுறை கடிதம் வரும்போதெல்லாம் அதற்குப் பொருத்தமாக பதில் கடிதம் எழுதிக் கொடுக்கிறான். காதல் கனிந்து திருமணமும் நடக்கிறது. ஆனால் சில மாதங்களுக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு அவன் இறந்துவிடுகிறான். தொழிற்சங்கம் அந்த இளம்விதவைக்கு அலுவலகத்திலேயே ஒரு வேலை வாங்கிக் கொடுக்கிறது.
செல்லம்மா என்றொரு பெண்பாத்திரம். தாசில்தார் வீட்டில் வேலை செய்பவர். கமலம்தேவ் இருவருடைய காதலுக்கும் பாலமாக இருப்பவர். சொந்த வாழ்வில் பிடிக்காத கணவனை விலக்கிவிட்டு அதே வட்டாரத்தைச் சேர்ந்த இன்னொருவனுடன் துணிச்சலாகச் சேர்ந்து வாழ்கிறார். தேவின் தங்கை கணவன் இன்னொரு விசித்திரமான பாத்திரம். குளியலறையில் விழுந்து இடுப்பு முரிந்த தேவின் அம்மாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுஉங்க அம்மாவை நீங்கதான் பார்த்துக்கணும்என்று மனத்தில் ஈரமே இல்லாமல் சொல்லிவிட்டுச் செல்கிறான். மாதக்கணக்கில் வயதான பெண்மணி வாங்கிக்கொண்டிருந்த பென்ஷன் ஊதியத்தைக் கூச்சமே இல்லாமல் பெற்றுச் செலவழித்தவன் செலவு என்று வந்ததும்  தப்பித்து ஓடுகிறான். மருத்துவம் பலனளிக்காமல் அவன் தாய் இறந்துபோகிறார். “ஏன் கல்யாணத்துக்கு வரலை?” என்று அன்போடு கோபித்துக்கொள்ளும் கொண்டப்பன், தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டை , சொந்த பணநெருக்கடிக்காக வாடகை விடும் வேணுகோபால், எப்படியோ அந்தச் செய்திதியை மோப்பம் பிடித்துவந்து அதை அம்பலப்படுத்துவதற்காக பொருத்தமான நேரத்துக்குக் காத்திருக்கும் தாண்டுகன் என நாவல் நெடுக மனிதர்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள்.
மேடம் ஹெல்டை முதியோர் இல்லத்தில் தேவ் சென்று பார்க்கும் இடம் நாவலில் முக்கியமான இடம். கணவர் இறந்துபோகிறார். பெற்ற பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுகிறார்கள். அங்கிருந்தபடியே பணமனுப்பி வயதான தாயை ஓர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறார்கள். ஆவலோடு அவரைச் சென்று பார்க்கும் தேவைக் கண்டு அவர் புன்னகைக்கிறார். ஆனால் சில கணங்களிலேயே அச்சிரிப்பு வெற்றுச்சுவரைப் பார்த்து உதிர்ந்த சிரிப்பு என்பதை அவன் புரிந்துகொள்கிறான். வயிறு பெருத்து உடல்சதைகள் தொங்க விகாரத் தோற்றத்தோடு காணப்பட்ட அவரை அவனால் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. கண்ணீரோடு அவர் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, உச்சியில் முத்தமிட்டுவிட்டு வெளியேறுகிறான். நாவலுக்குள் ஒன்றரைப் பக்கம் மட்டுமே நீளும் இக்காட்சி கவித்துவம் மிகுந்ததாக அமைந்துள்ளது.
அடையாளப் பிரச்சினையால் தேவ் அடைந்த வருத்தத்தையும் எதிர்கொண்ட சிக்கல்களையும் இன்றைய சூழலில் புரிந்துகொள்வது சற்றே சிரமமானது. சாதியடையாளங்களை வெளிப்படையாக பேசுவதும் சாதியடையாளம் பார்த்துப் பழகுவதும் நட்பு பாராட்டுவதும்  இயற்கைக்குணங்களாக முக்கியத்துவம் பெற்றிருந்த அறுபதுகளின் பின்னணியோடு இணைத்துப் பார்த்துக்கொள்ளும்போதுதான் தேவின் மனத்தழும்புகளை நாம் புரிந்துகொள்ள முடியும்.
நாவல் பிரதியை இரண்டுமுறை வாசித்தேன். முதல் பக்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை தொடர்ச்சியாக ஒருமுறை படித்தேன். பிரதியின் இடையில் விருப்பப்பட்ட இடத்தில் தொடங்கி சில பக்கங்கள் என்பதுபோல விட்டுவிட்டு இன்னொருமுறையும் படித்தேன். தேவைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அல்லது மனிதர்கள் நடுவில் அவன் இருக்கிறான். ஒரு காட்சியில் கூட அவன் தனிமை கொண்டவனாக காட்டப்படவில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று யோசித்தபோது ஓர் உண்மை புரிந்தது. அவன் காலமெல்லாம் சுமந்தலைந்த வருத்தம் இன்னொரு வகையில் காலம் அவனுக்கு வழங்கிய வரம் என்றே சொல்லவேண்டும். சமூகத்தில் மற்றவர்கள் அனைவரும் தன் அடையாளங்களென்னும் சின்னச்சின்ன வட்டங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எந்த வட்டத்திலும் அடங்காதவன் என்பதாலேயே தேவ் எல்லா வட்டங்களையும் மிக எளிதாகத் தொட்டுக் கடந்து வருகிறான். வானமே அவனுக்கு எல்லையாக இருக்கிறது. அந்த எளிமையும் சகஜகுணமும் எப்போதும் அவனுக்கு மனிதர்கள் சூழந்த வாழ்க்கையை அளிக்கின்றன. அவன் நிலநடுக்கோடாக இருக்கலாம். அதே சமயத்தில் அவன் அனைத்தையும் தன்னைநோக்கி ஈர்த்துக்கொள்ளும் காந்தக்கோடாகவும் இருக்கிறான். அதில் ஐயமே இல்லை. விட்டல்ராவுக்கு வாழ்த்துகள்.

(பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வரவிருக்கும் விட்டல்ராவின் ‘நிலநடுக்கோடு’ நாவலுக்காக எழுதப்பட்ட முன்னுரை)