தொடக்கப்பள்ளியில் நான் படித்த காலத்தில் எங்கள் பள்ளி ஆசிரியை ஒவ்வொரு நாளும்
ஒரு கதையைச் சொல்வார். கதைநேரம் என்கிற பெயரில் ஒரு பாடப்பிரிவு அப்போது இருந்தது.
எல்லாக் கதைகளையும் எங்கள் ஆசிரியை எப்போதும் ஒரு நீதிவாக்கியத்தில் கொண்டுவந்துதான்
முடிப்பார். குறைவான நீருள்ள குடத்துக்குள் சின்னச்சின்ன கூழாங்கற்களைக் கொண்டுவந்து
போட்டுவிட்டு நீர்மட்டம் உயர்ந்துவந்ததும் தண்ணீர் அருந்தி தன் வேட்கையைத் தணித்துக்கொண்ட
காக்கையின் கதையை விரிவாகச் சொல்லிமுடிக்கும்போது முயற்சியால் முடியாதது ஒன்றும் இல்லை
என்றொரு வாக்கியத்தையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார்.