Home

Monday, 24 July 2017

இயற்கை என்னும் பேராசான்- க.நா.சு.வின் "கஞ்சிங் ஜங்கா"


தொடக்கப்பள்ளியில் நான் படித்த காலத்தில் எங்கள் பள்ளி ஆசிரியை ஒவ்வொரு நாளும் ஒரு கதையைச் சொல்வார். கதைநேரம் என்கிற பெயரில் ஒரு பாடப்பிரிவு அப்போது இருந்தது. எல்லாக் கதைகளையும் எங்கள் ஆசிரியை எப்போதும் ஒரு நீதிவாக்கியத்தில் கொண்டுவந்துதான் முடிப்பார். குறைவான நீருள்ள குடத்துக்குள் சின்னச்சின்ன கூழாங்கற்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டு நீர்மட்டம் உயர்ந்துவந்ததும் தண்ணீர் அருந்தி தன் வேட்கையைத் தணித்துக்கொண்ட காக்கையின் கதையை விரிவாகச் சொல்லிமுடிக்கும்போது முயற்சியால் முடியாதது ஒன்றும் இல்லை என்றொரு வாக்கியத்தையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார்.

இந்த உலகில் பிறந்திருக்கிற ஒவ்வொரு  உயிரின் வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளனமான விஷயங்கள் உண்டு என்பதைத் திருப்பித்திருப்பிச் சொல்வார். எறும்புகளிடமிருந்து சுறுசுறுப்பையும் மானிடமிருந்து வேகத்தையும் நாயிடமிருந்து நன்றியுணர்ச்சியையும் பசுக்களிடமிருந்து அன்பையும் கற்றுக்கொள்ளலாம் என்று அடுக்கிக்கொண்டே போவார். நிலத்தைப் பார்த்து பொறுமையையும் மலையைப் பார்த்து கம்பீரத்தையும் தெரிந்துகொள்ளுமாறு தூண்டுவார். கண்திறந்து பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் ஆர்வமும் மனமும் இருந்தால் மட்டும் போதும்.  ஏராளமான விஷயங்களை நாம் அறிந்துகொள்ள முடியும் என்பதை வெவ்வேறு சொற்கள்வழியாக, வெவ்வேறு எடுத்துக்காட்டுக் கதைகளை முன்வைத்துச் சொல்வது அவர் வழக்கமாக இருந்தது. பிள்ளைகளான நாங்களும் அன்றுமுதல் கண்ணில் படுகிற தும்பி, கோழி, மரம், செடி, பூ, இலை, சருகு ஒவ்வொன்றும் எதை உணர்த்துகிறது என்று எங்களுக்குள்ளேயே கேட்டுப் பதில்களைப் பரிமாறிக்கொள்வோம்.  ஒரு விடுகதையைப்போல நீள்கிற அந்த உரையாடல்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு  நடந்துவரும் அலுப்பை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடும்.


ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துவருவதற்காக ஒரு முறை சென்றிருந்தேன். வகுப்புகள் முடிவடைவதற்கு இன்னும் நேரமிருந்ததால் அவர்கள் வகுப்பருகே ஒரு கல்மீது அமர்ந்து காத்திருந்தேன்.  உள்ளே பாடம் நடத்திய ஆசிரியையின் குரல் கேட்டது. என்ன பாடம் என்று அறியும் ஆவலில் காதுகொடுத்துக் கேட்ட சில கணங்களில் என் மனம் ஆச்சரியத்தில் மூழ்கியது. என் பள்ளி வாழ்வில் எங்கள் ஆசிரியை சொன்ன அதே கதை. இந்த உலகில் பிறந்திருக்கிற ஒவ்வொரு  உயிரின் வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள ஏராளனமான விஷயங்கள் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொன்ன அதே கதை. எறும்பு, காக்கை, நாய், மான், மலை, பூ என எடுத்துக்காட்டுகளும் அப்படியே இருந்தன. தமிழ்நாட்டில் எனக்குச் சொல்லித் தந்த ஆசிரியைக்கும் கர்நாடகத்தில் என் மகனுக்குச் சொல்லித் தந்த ஆசிரியைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனாலும் ஒரே விதமான உண்மையை உணர்த்த விழையும் விருப்பத்திலும் அதற்காக கையாளும் உத்திவகைகளிலும் அவர்களிடையே இருந்த ஒற்றுமை ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலும் இந்த உலகில் மொழி, இனம், மதம், நாடு என்கிற எல்லைகளை மீறி எல்லா ஆசிரியைகளும் தம் மாணவர்களுக்கு இதையே கற்பிக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றியது.  இந்த உலகமும் உலகில் நிறைந்துள்ள உயிரினங்களும் அசையும் பொருட்களும் அசையாப் பொருட்களும் என அனைத்துமே மானுடகுலம் வழிபடக்கூடிய மாபெரும் ஆசான் என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

ஆனால் இயற்கையை ஆசானாக நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்பது முக்கியமான கேள்வி.  இளம்பருவத்தில் கேட்டுக்கேட்டு வளர்ந்த ஒரு உண்மையை வசதியாக மறந்துவிடுகிறோம். உண்மையைவிட நம் தன்னலம் நமக்குப் பெரிதாகப் போய்விடுகிறது. தனக்குச் சிறிதளவுகூட சொந்தமே இல்லாத, நூறு இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்த  மரங்களைக்கூட பணம் வாங்கிக்கொண்டு வெட்டி எடுத்துச் செல்ல அனுமதிக்கிற கயமை மனத்தில் நிரம்பத் தொடங்கிவிடுகிறது. கொடைக்கானலுக்கு நிகராகச் சொல்லப்பட்ட ஏற்காடு இன்று அலங்கோலத்துக்குள்ளாலகி நிற்கிற கோலம் ஒன்றே போதும். மனிதர்களின் சுயநலத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம். கோடை காலத்தில் குளிர்க்காற்று வீசவேண்டிய இடத்தில் குளிர்காலத்தில்கூட வேர்வை வழிகிற வெப்பமலையாக மாறிவிட்டது. சுயநலம்தான் நம்முடைய உண்மையான முகமென்றால், சிறுவயதுமுதல் நம் ஆசிரியைகள் பசுமரத்தாணியைப்போல பதியவைத்த உணர்வுகள் எல்லாம் எங்கே போயின? நம் ஆசை, நம் சுயநலம், நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய அதிகாரம், கூட்டமாக இருப்பதால் கிடைக்கக்கூடிய செல்வாக்கு என எல்லாம் சேர்ந்து இயற்கையைவிட நம்மை வலிமை நிறைந்தவர்களாகவும், பெரியவர்களாகவும் நினைக்கத் தூண்டிவிடுகின்றன. மரங்கள் நம் கைகளால் வெட்டுப்படுகின்றன என்பது உண்மைதான். அதன் பொருள் மரங்களைவிட நாம் பெரியவர்கள் என்பதல்ல.

எல்லா நேரங்களிலும் மனிதர்கள் இப்படி இருந்துவிடுவதில்லை.  ஏதேனும் ஒரு கணத்தில் நம் அகவிழி திறக்கிறது. நம் சிறுமையையும் இயற்கையின் பெருந்தன்மையையும் நம்மை உணர்ந்துகொள்ளவைக்கிறது. நாணம் பரவ இயற்கையின்முன் அசட்டுச் சிரிப்போடு நின்றுவிட்டுத் திரும்புகிறோம். மலைச்சிகரத்தின் முன்னிலையிலும், விரிந்த கடற்பரப்பின் முன்னிலையிலும் கண்கள் பனிக்க பல நிமிடங்கள் அசைவின்றி உறைந்துநின்றுவிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உறுதி என நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு கோட்டை அக்கணத்தில் உள்ளூர நொறுங்கி தரைமட்டமாக சரிவதை உணர்ந்திருக்கிறேன்.

டார்ஜிலிங் மலையின் அழகான சிகரம் பனி மூடிய கஞ்சிங் ஜங்கா. பதினாறு வயதிருக்கும்போது பார்த்தது முதல் அனுபவம்.  ஐம்பது ஆண்டுகள் கழித்துப் பார்ப்பது  இரண்டாவது அனுபவம். முதல் அனுபவம் வாழ்வின் தொடக்கப்புள்ளியில் நிகழ்வதாக எடுத்துக்கொண்டால் இரண்டாவது அனுபவம் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் நிகழ்வதாக எடுத்துக்கொள்ளலாம். முதல் அனுபவத்தின்போது பளிச்சென்றிருந்த பார்வை இரண்டாவது அனுபவத்தின்போது மங்கிவிட்டிருக்கிறது. சிகரம் அப்படியே இருக்கிறது. பார்த்துப் பரவசமடைகிற வாய்ப்புதான் குறைவாக இருக்கிறது. இரண்டு அனுபவங்களுக்கிடையே ஒருவனுடைய வாழ்வே அடங்கிவிடுகிறது. இதற்கு முன்பாக ஒரு நூறு கோடி கண்கள் அச்சிகரத்தைப் பார்த்துப் பரவசமடைந்திருக்கலாம்.  இதற்குப் பின்னரும் இன்னொரு நூறுகோடி கண்கள் பார்த்துப் பரவசமடையக்கூடும். அதற்குத்தான் எவ்வளவு நீண்ட ஆயுள். ஆனாலும் அப்படிப்பட்ட எந்தப் பெருமையையும் தலைமீது கட்டிச் சுமக்காது, அமைதியாக, இயல்பாக, புத்தம்புதுசாக நின்றுகொண்டிருக்கிறது சிகரம். சிகரம் ஒரு பேராசான். தலைவணங்கி அதனிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமான பாடங்கள் உண்டு.  அந்த உண்மையை கவிதையில் க.நா.சு. நேரிடையாக பகிர்ந்துகொள்ளவில்லை. மாறாக, ஒரு சின்ன புன்னகையோடு கண் மங்கிவிட்ட செய்தியைச் சொல்லி, அப்புன்னகையின் வெளிச்சத்தில் சிகரம் என்னும் ஆசானைத் தரிசனம் செய்யவைக்கிறார். அதுவே அவருடைய கவித்துவம்.


*

கஞ்சிங் ஜங்கா

க.நா.சு.


எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது
டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்று
கஞ்சிங் ஜங்கா மலை மேலே பனி மூடியிருப்பதைப்
பார்த்திருக்கிறேன்.  ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது பார்க்கிறேன்.  வித்தியாசம் ஒன்றும்
தெரியவில்லை. என் கண்தான்
சற்று மங்கிவிட்டது.

*           

புதுக்கவிதை வடிவம் தமிழில் நிலைபெறுவதற்கான தொடக்கக்கால முயற்சிகளில் க.நா.சு.வின் ஆக்கங்களும் அடங்கும். க.நா.சு. என்கிற பெயரில் ஏற்கனவே கதைகளும் கட்டுரைகளும் நாவல்களும் எழுதிவந்ததால் கவிதைகளை மயன் என்கிற புதியதொரு பெயரில் எழுதினார். புழங்குதளத்தைச் சேர்ந்த எளிய சொற்களைமட்டுமே மிக இயல்பான வகையில் பயன்படுத்தி, எதிர்பாராத கணத்தில் சட்டென ஒரு தரிசனத்தை உணரவைக்கும் ஆற்றலுள்ளவை இவருடைய கவிதைகள்.
*