Home

Monday, 3 July 2017

அன்பென்னும் வளையம்- பழமலையின் "கிளியப்பட்டு ஆயி"


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று தொடங்குகிறது ஒரு திருக்குறள்.  தாழ்போட்டு அடைத்துப் பாதுகாக்கிற செல்வத்தைக் காட்டிலும் எந்தத் தாழாலும் பூட்டிவைக்கமுடியாத அன்பு மிக உயர்ந்தது. பௌதிகமான இருப்பில் காணத்தக்க பொருள் அல்ல அது.  ஆனால் காற்றுப்போல உணரத்தக்க ஓர் உன்னத உணர்வு.  நாம் அடக்க விரும்பினாலும் கடடுப்பாட்டை மீறி கண்ணீராகவும் கண்மலர்ச்சியாகவும் வெளிப்பட்டுவிடும் எளிய உணர்வு. ஒருபோதும் வற்றாத ஜீவநதியாக அது நெஞ்சில் சுரந்து பெருகிப் பாயக்கூடியது. தன் அன்புக்குரியவர்கள் தன்னைச் சுற்றியே எப்போதும் இருக்கவேண்டும் என்று எண்ணுவது மனிதமன இயல்பு. அன்பைப் பெறுவதிலும் அன்பை வழங்குவதிலும் இருக்கிற பேரானந்தம் உலகில் வேறெதற்கும் இல்லை. 


குழந்தை அறியும் முதல் உயிர் தாய். ஆரம்பத்தில் உடல் சூட்டாலும் வேளையறிந்து ஊட்டப்படும் அமுதாலும் தன்னோடு இருக்கும் தன் தாயின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கிறது குழந்தை. பிறகு, உடலின் மணமும் உடைகளின் மணமும் அதற்குப் பழகுகிறது. அதன்பிறகுதான் முகம் பழகுகிறது. அதுவரைக்கும் தாயைமட்டுமே அது நம்பியிருக்கிறது. முகங்கள் பழகப்பழக தந்தை, தாத்தாமார்கள், பாட்டிமார்கள், சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் என குழந்தையின் அன்புக்குரியவர்களின் வட்டம் சிறுகச்சிறுகப் பெரிதாகிறது. பள்ளி செல்கிறவரைக்கும் அந்த அன்புவட்டத்தின் பாசப்பிணைப்பில் ஆடி மகிழ்கிறது. பள்ளியில் அன்புமிக்க நட்புவட்டம் இன்னும் பெரிதாகிறது. கல்லூரியிலும், வேலை செய்யும் அலுவலகங்களிலும், பழகும் புற இடங்களிலும் புகுந்துவரத் தொடங்கும்போது நட்பின் வட்டம் இன்னும் விரிவானதாகிறது. திருமண வாழ்வு அன்பின் வட்டத்தை மேலும் அகலமுடையதாக மாற்றுகிறது. பிறப்புமுதல் இறப்புவரை ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகும் அன்புகொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அன்புகொண்டவர்களின் பட்டியல் மிகநீண்டதாக இருந்தாலும் நாம் எல்லாரையும் தேடிச் சென்று பார்ப்பதில்லை.  நம்மையும் எல்லாரும் தேடிவந்து பார்ப்பதில்லை.  வாழ்வின் ஏதோ ஒருசில நெருக்கடிகளின் காரணங்களால் நாம் நினைப்பதுபோல எல்லாமே நிகழ்ந்துவிடுவதில்லை.  பார்க்கவில்லை என்பதால் நெஞ்சில் சுரக்கிற அன்பு இல்லை என்றாவதில்லை. வாய்ப்பு கிட்டும்பொழுது பார்க்கிறோம். கிட்டாதபோது கடிதங்கள் எழுதிக்கொள்கிறோம்.  தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடி மகிழ்கிறோம். ஏதோ ஒரு வகையில் தொடர்பின் இழை அறுபட்டுவிடாதபடி அன்பைப் போற்றிப் பாதுகாக்கிறோம். நகர வாழ்வின் இறுக்கங்கள் அதிகமாகும் தருணங்களில் எல்லாம் "நாலு நாள் லீவு சொல்லிட்டு அக்கடான்னு ஊருல போயி சொந்தபந்தங்களோடு பேசி பொழுத போக்கிட்டு வரணும்டா, அப்பதாண்டா மாப்ள கொஞ்சமாச்சிம் எனர்ஜி ஏறும்" என்று சொல்லி ஆற்றிக்கொள்கிறோம். அன்பென்னும் வளையத்துக்குள் வருவது ஆலமர நிழலில் ஒதுங்குவதற்குச் சமம்.

"ஒரு புஞ்சிரி" என்பது எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கிய மலையாளப்படம். முதியவர்களின் உலகத்தை உணர்த்தும் படம்.  படத்தில் அடிக்கடி காட்டப்படும் ஒரு வாழைத்தோப்பு வாழ்க்கையின் நிலையாமையைச் சொல்லாமல் சொன்னபடி இருக்கும். இளவாழைக்கன்று குருத்துவிடுவதும் வளர்ந்து அது குலைதள்ளுவதும் பின்பு முதுமையடைந்து சாய்வதும் சாய்ந்த இடத்தில் மற்றொரு குருத்து கிளைவிடுவதும் எவ்வளவு இயற்கையோ பிறப்பும் இறப்பும் அவ்வளவு இயற்கை என்பதை மௌனமாகவே உணர்த்தும் அக்கணங்களை படம் பார்க்கும் யாராலும் மறக்கமுடியாது. இப்படத்தில் முக்கியப் பாத்திரமான ஒரு முதியவரை இன்னொரு முதியவர் வந்து அடிக்கடி பார்ப்பார். தனக்கு நெருக்கமான பெயர்களின் பட்டியல் தன்னிடம் எப்போதும் உண்டு என்றும் பயணம் செய்து அப்பட்டியலில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து உரையாடி மகிழ்வது தன் பழக்கம் என்றும் அவர் சொல்வார். ஒவ்வொரு பயணத்தின்போதும் ஒவ்வொரு மரணச் செய்தியை அவர் எதிர்கொள்ள நேர்வதாக ஆதங்கத்துடன் சொல்வார்.  பட்டியலில் உள்ளவர்கள் அனைவரையும் சந்திக்க சில மாதங்கள் ஆகும்.  அதன் பிறகு இரண்டாவது சுற்று பயணத்தைத் தொடங்கிவிடுவார். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதில் அப்படி ஒரு ஆனந்தம் இருக்கிறது.  தன் மீது அன்புள்ளவர்களை நேரில் சென்று பார்த்து உரையாடும் கணத்தில் மனம் மானசிகமாக வாழ்வின் தொடக்கப்புள்ளியில் சென்று அமர்ந்து விடுகிறது. அதுவரை வாழ்ந்த வாழ்வை மறுபடியும் வாழ்ந்து ஒரு மாய இன்பத்தைத் துய்த்து மீள்கிறது. அன்பைப் பறிமாறிக்கொள்ளும்போது ஆனந்தம் பல மடங்காகிறது.  தன் பள்ளி வாழ்க்கையையும் தன் முதல் காதலையும் தான் முதன்முதலாக பெண்பார்க்கப் போன கதையையும் எத்தனைமுறை சொன்னாலும் அலுக்கவே அலுக்காத முதியவர்கள் எல்லாருடைய வீட்டிலும் இருப்பார்கள்.

பார்த்துப் பேசிவிட்டு ஆனந்தத்தோடு திரும்புகிற ஒரு பாட்டியின் சித்திரத்தை பழமலையின் கவிதையொன்றில் காணலாம். கவிதையின் பெயர் கிளியம்பட்டி ஆயி. கிளயம்பட்டி என்கிற ஊரில் இருந்து வருவதால் அவர் பெயர் கிளயம்பட்டி ஆயி. வீட்டுக்கு வந்ததுமே நடந்த களைப்பு நீங்கும்வகையில் தூணில் சாய்ந்து காலை நீட்டி அமர்கிறாள். அம்மா வரவேற்று கூழ் ஊற்றித் தருகிறாள். அப்பாவுக்காக என்று தன் கிராமத்திலிருந்து முருங்கைக்காய், மொச்சை, பயற்றங்காய், கீரைத்தண்டு என எடுத்துவந்ததைத் தருகிறாள் ஆயி. வேலையிலிருந்து திரும்பும் அப்பாவும் ஆயியை வரவேற்று பேச்சுக்கொடுக்கிறார். வெயில் தாழ்ந்ததும் கிளம்பிவிடுகிறாள் ஆயி. பிள்ளைகளின் முகம் தடவிப் பூரித்து வாழ்த்துகிறாள். பிறகு, எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிடுகிறாள்f. அவ்வளவுதான் கவிதை முன்வைக்கிற தகவல்கள்.

ஆயியின் பயணத்துக்கு அன்பை வழங்குவதையும் பெற்று மகிழ்வதையும் தவிர வேறெந்த பெரிய நோக்கமும் இல்லை. கிளியம்பட்டியிலிருந்து நடைச்சிரமத்தையும் பாராமல் அவளை உந்தித்தள்ளி அழைத்துவந்தது அன்புமட்டுமே. தன் அன்புக்குரியவளைக் காண்பதற்காக இரவென்றும் பகலென்றும் பாராமல் வழிச்சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஆபத்துகளைப்பற்றி சிறிதுகூட கவலை கொள்ளாமல் வேகவேகமாக வந்துபோகிற காதலர்களின் பயணங்களைப்பற்றி சங்கக்கவிதைகளின் சித்திரங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. நல்லா இருக்கிங்களாப்பா என்று வந்ததும் நலம் விசாரித்துவிட்டு, நல்லா மகராசனா இருங்க என்று கிளம்பும்போது வாழ்த்திவிட்டு செல்கிற ஒரு மூதாட்டியின் அன்புப்பயணத்தை பழமலையின் நவீன கவிதைச்சித்திரம் நமக்கு வழங்குகிறது. அன்பு வளையத்தை உருவாக்குவதில் தொடங்குகிறது மானுட வாழ்க்கை, அதை விரிவாக்கிவிரிவாக்கி வளர்த்துச் சென்று, இறுதியில் அன்பு வளையத்தின் மையத்தை நாடி திரும்புகிறது.

*

கிளியப்பட்டு ஆயி

பழமலய்

கிளியப்பட்டு ஆயி வந்தால்
தூணில் சாய்ந்து
காலை நீட்டிக்கொள்வாள்
வழிநடந்த அயர்வு
பேச்சில் தெரியும்

வாங்க அத்த
அம்மா
கூழோ சோறோ கொண்டுவந்து வைப்பாள்
ஆயி
எங்கள் ஆயியைப்பற்றித்தான் பேசுவாள்
குழம்பைப்பற்றிய புகழ்ச்சிகள் இருக்கும்

நன்றி அறியச் சிலருக்குத்தான் தெரிகிறது
அப்பாவைத் தேடுவாள்
திம்பான் என்று சொல்லி
முருங்கைக்காய் கொடுப்பாள்
மொச்சை, பயற்றங்காய்
கீரைத்தண்டு என்று வரும்
ஆயியே, ஆயந்தோ அரிந்தோ தருவாள்

அப்பா வந்ததும் வா ஆயி என்பார்

வெயில் தாழ ஆயி
வீடு திரும்புவாள்
எங்கள் முகம் தடவி
செவுளில் கைந்நெரிப்பாள்

வள்ளி கொணத்துக்கு நல்லா இருப்பிங்க
கேட்கையில், அப்பா
அழப்போகிறார் என்று தோன்றும்
ஆயியைப்பற்றி
எனக்கும் பெருமையாக இருக்கும்

*

மனிதர்களைப்பற்றிய உயிரோட்டம் மிகுந்த கச்சிதமான சொற்சித்திரங்களை வடித்து வரலாறாக்கியதில் பழமலையின் கவிதைகளுக்கு மிகப்பெரிய பங்குண்டு.  வாழ்வின் மகத்தான தருணங்களையும் வட்டார உரையாடல் மொழியையும் இணைத்து அவர உருவாக்கிய கவிதையின் வடிவம் மிகவும் வசீகரமானது. எளிமையும் கவிதைக்கணங்களையும் கொண்ட அக்கவிதைகள் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. எண்பதுகளில் வெளிவந்த இவருடைய "சனங்களின் கதை" முக்கியமான ஒரு தொகுப்பு.