உருளும் பாறைகளில்
பாசி பிடிப்பதில்லை என்பது பழமொழி. குளத்தோரத்திலோ அல்லது ஏரிக்கரையிலோ ஒரே இடத்தில்
விழுந்து கிடக்கிற பாறையைச் சுற்றி பாசி படர்ந்துவிடுகிறது. மனிதவாழ்விலும் இப்படி
நேர்வதுண்டு. பல ஊர்களைச் சுற்றி பல மனிதர்களைச் சந்தித்து பலவிதமான அனுபவங்களுக்கு
ஆளானவர்கள் நல்லதுகெட்டதுபற்றியும் வெற்றிதோல்விபற்றியும் பல விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பார்கள். வாழ்வின் மேடுபள்ளங்களைப்பற்றிய தௌiவை அவர்களுடைய
அனுபவங்கள் அவர்களுக்குக் கற்றுத்தந்திருக்கும். கல்வியறிவு இல்லையென்றாலும் அனுபவ
அறிவு அவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும். எது மன்னிக்கக்கூடிய தவறு, எது மன்னிப்புக்கு
அப்பாற்பட்ட தவறு என்பதை பின்னணிசார்ந்து ஆராய்ந்து அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள்.
உலக அனுபவமே இல்லாமல் பிறந்த இடத்திலேயே ஆண்டுக்கணக்காக வளர்ந்து, வாழ்ந்து, உழைத்து
மறைந்துபோகிறவர்களும் இருப்பார்கள். வாழ்க்கையில் இது ஒரு பெரிய தேக்கம். கல்வியறிவு
அல்லது கேட்டலறிவின் துணையாக, இத்தேக்கத்தை உடைத்து தன் மனத்தை விரிவாக்கிக்கொள்கிறவர்களும்
உண்டு. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கிறவர்களும் உண்டு.
ஒருவருடைய
ஆட்சியில் மக்களனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் அந்த ஆட்சிக்காலத்தை பொற்காலம்
என்று அழைப்பதுண்டு. அசோகர் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்று வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது.
ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தை தஞ்சைத் தரணியின் பொற்காலம் என்று சொல்வதுண்டு. தனிப்பட்ட
மனிதரொருவர் வாழ்வில் இளமைக்காலம் என்பதே பொற்காலமாகும். ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக
இருந்தாலும் இளமை நாட்களின் குதூகலத்தக்கு ஈடுஇணையாக எதையும் சொல்லவியலாது. அதனாலேயே
ஒருவருடைய இளமைநாட்கள் பொன்னான நாட்கள் என்று அழைக்கப்படுகின்றன. மகிழ்ச்சிக்குப் பதிலாக அலுப்பும் சலிப்பும் மிகுந்த
நாட்களை அழைக்க தனியாக ஒரு சொல்லில்லை. பொன்னுக்கு எதிர்ப்பதமாக பித்தளையைச் சொல்வதைப்போல,
பொன்னான நாட்களுக்கு எதிர்ப்பதமாக பித்தளை நாட்கள் என்றொரு புத்தம்புதிய சொல்லை உருவாக்கிச்
சொல்லலாம்.
மெல்லமெல்ல
நிறம் மங்கி, களிம்பேறி அழுக்குப்பிடித்து பார்ப்பவர்களுக்கு அருவருப்பூட்டுகிற பித்தளையைப்போல,
ஆனந்தத்தின் சுவடுகள் மங்கி, அலுப்பும் சலிப்பும் படர்ந்து, மனச்சுமையோடு ஒடுங்கி உட்காரவைத்துவிடும்
நாட்கள் பித்தளைநாட்களாகின்றன. உலகில் எல்லாருடைய வாழ்விலும் பொன்னான நாட்களும் உண்டு.
பித்தளை நாட்களும் உண்டு. விகித அடிப்படையில் வேண்டுமானால் மாற்றமிருக்கலாம். ஆனால்
இரண்டும் கலந்ததாகவே வாழ்க்கை இருக்கிறது. அதே சமயத்தில் பொன்னுக்கும் பித்தளைக்கும்
ஒரே வரையறை கிடையாது. ஒருவருக்கு பொன்னெனத் தோன்றுவது மற்றொருவருக்கு பித்தளையாகக்
காட்சியளிக்கலாம். ஒருவருடைய பார்வையைப்பொறுத்து அது மாறக்கூடும். இமயமலை வாசம் சிலருடைய
வாழ்வில் பொன்னான காலமாக இருக்கலாம். வேறு சிலருடைய வாழ்வில் விரைவில் கழித்துவிட்டுத்
திரும்பவேண்டிய வெறும் வேலை நாட்களாக இருக்கலாம். கிணற்றுத்தவளை வாழ்க்கை சிலருக்கு
பொன்னுலகமாக இருக்கலாம். வேறு சிலருக்கு அதுவே உள்ளிடற்ற வெறுமைபடிந்த உலகமாக இருக்கலாம்.
பொன்னை மண்ணாகவும் மண்ணைப் பொன்னாகவும் பார்க்கும் யோகியர்களும் இவ்வுலகில் உண்டு.
ந.ஜயபாஸ்கரன்
தன் கவிதையில் ஒரு கடைத்தெருக்காட்சியைக் காட்டுகிறார். அதிலும் குறிப்பாக, ஒரு பாத்திரக்
கடைக்குள் கல்லாப்பெட்டிக்கும் தராசுக்கும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற ஒருவரைக்
காட்டுகிறார். இதுவரை தான் வாழ்ந்து வந்த நாட்களையெல்லாம் ஒரே கணத்தில் பித்தளை நாட்கள்
என்று பட்டப்பெயரிட்டு அழைத்து தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறது அப்பாத்திரம்.
திடீரென்று அப்படி ஒரு ஞானம் அப்பாத்திரத்துக்கு ஒருநாள் பிறக்கிறது. அதற்கு முதல்நாள்வரை
அப்படித் தோன்றவில்லை. கடை வணிகமும் வேடிக்கையும் பொன்னான நாட்களாகவே தோற்றம் தருகின்றன.
குறிப்பிட்ட நாளன்று அவன் கடைக்கு வந்து நீளமான குத்துவிளக்கு கேட்டுவிட்டு இல்லையென்ற
பதிலைப் பெற்றுக்கொண்டுபோகிறாள் ஒரு கிராமத்துப் பெண். அவள் முகஅடையாளத்தைப் பதித்துக்கொள்ளாத
அவன் மனம் அவள் முலைஅடையாளத்தைப் பதித்துவைத்துக்கொண்டு தவியாய்த் தவிக்கிறது. அங்குதான் பிரச்சனை வேர்கொள்கிறது. கனவிலும் மனஉலகிலும்
அதன் சித்திரம் எழுந்துஎழுந்து அவனை நிலைகுலையவைக்கிறது. அதனால் அவன் நினைவுகள் பிறழ்ச்சி
கொள்கின்றன. யார் என்ன கொடுக்கவேண்டும், யாருக்கு என்ன தரவேண்டும் என்பதுபோன்ற விவகாரங்கள்
எல்லாமே குழம்பி மாற்றமடைகின்றன. அவன் அவனாகவே இல்லாமல் தடுமாறுகின்றான். தன் கனவுச்சித்திரத்தை
மீட்டெடுத்துமீட்டெத்து தன் நாட்களை பொன்னான நாட்களாக மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடைத்தெருவில் சமீப காலத்தில் நடந்த ஒரு வாள்சம்பவமொன்று
நினைவிலெழுந்து அவன் கனவுச்சித்திரத்தைக் கிழித்துவிடுகிறது. எதார்த்த அச்சத்தைப் புறக்கணித்தால் நேரக்கூடிய
பின்விளைவுகளை நினைத்து தன் சித்திரத்தை வேகவேகமாகக் கலைத்துவிடுகிறது மனம். கனவோடும் இருக்கமுடியவில்லை. கனவில்லாமலும் இருக்கமுடியவில்லை. கசப்பும் சலிப்பும்
மிகுந்த அந்த நாளை பித்தளைநாள் என்று பெயர்சூட்டி ஒதுக்குகிறது.
இக்கவிதையில்
இடக்குறிப்புகளையும் மனக்குறிப்புகளையும் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் ஜெயபாஸ்கரன்.
பித்தளைநாட்கள் என்கிற சொல்லாட்சி கவிதையை மறக்கமுடியாத அனுபவமாக்குகிறது.
*
பித்தளை நாட்கள்
ந.ஜயபாஸ்கரன்
ஞாபகக் கண்ணிகள்
சிதைந்து வருகின்றன
சிறுகச்சிறுக
சமுத்திரம்
பாக்கி
இருபத்தாறு
ரூபாய் எண்பத்தாறு காசா
கட்கரை நாடார்
கடைந்து தரவேண்டிய
பானை எடை
நூற்றுப் பதினான்கு
கிலோவா
நூற்றுப் பதினாறு
கிலோவா
தெளிவாகவில்லை
சிட்டையின்
இருப்புப்புள்ளி
பிசகிவிடுகிறது
அடிக்கடி
நிலுவையாகாத
பற்றுவழிக்
கணக்கு எண்கள்
கலங்குகின்றன
கனவினுள்
லாங்காக
விளக்குக்
கேட்ட
பட்டிக்காட்டுப்
பெண்ணின்
முகம்மறந்து
முலை சிதறுகிறது
கனவில்
அங்கம் வெட்டுண்ட
பாணனாய்த்
துடிக்கிறது
பிறழ்ந்த பிரக்ஞை
கடைவீதியின்
மூச்சை
அவ்வப்போது
நிறுத்திய
வளர்ந்தான்
பாண்டியின் வாள்
துரு வளர்ந்து
கனவு கிழிக்கத்
தவிக்கிறது
களிம்பேறிய
பித்தளைநாட்களின்
கசப்புமட்டும்
இறங்குகிறது
*
அறுபதுகளில்
எழுதத் தொடங்கிய கவிஞர்களில் ஒருவர் ந.ஜயபாஸ்கரன். இவருடைய கவிதைகள் மூன்று தொகுதிகளாக
வெளிவந்துள்ளன. அர்த்தநாரி, அவன் , அவள் என்பவை தொகுதிகளின் பெயர்கள்.