Home

Monday, 3 July 2017

குழந்தைமையும் ஆனந்தமும் - சத்யனின் "மறுபடியும் நான்"


சொற்களை அறியத் தொடங்கிய குழந்தைப்பருவத்தில் வீட்டுக்கு வெளியே என் மகன் பார்த்த முதல்  உயிர் காக்கை. அப்போது ஒரு மாடியறையில் வாடகைக்குக் குடியிருந்தோம்.  பக்கத்திலேயே இருந்த தோப்பிலிருந்து நீளும் மரக்கிளைகள் எங்கள் வீடுவரைக்கும் நீண்டு திரும்பிச் செல்லும்.  எல்லா நேரங்களிலும் அதன்மீது ஒன்றிரண்டு காக்கைகள் காணப்படும்.  அதைப் பார்த்ததுமே ஏதோ அதிசயத்தைப் பார்த்ததுபோல குதித்தோடி வந்து அழைத்துச் சென்று காட்டினான். அதன் பெயர் காக்கை என்று சொல்லிக் கொடுத்தோம்.  அன்றிலிருந்து காக்கை கண்ணில் பட்ட கணத்திலிருந்தே காகா என்று அவன் குதிக்கத் தொடங்கிவிடுவான். 


அவன் பார்த்த காக்கையை உடனே யாரையாவது பார்க்கவைத்தால்தான் அவன் மனம் நிம்மதியடையும்.  "மா.. மா.. கா.. கா..", "பா.. பா.. கா.. கா.." என்று இடைவிடாமல் சொன்னபடி ஓடிவருவான்.  கையைப் பற்றி இழுத்துச் சென்று பார்க்கச் சொல்வான். பார்த்தால் மட்டும் போதாது, அவனையும் அதையும் தொடர்புப்படுத்தி நாலைந்து வார்த்தைகள் சொல்லிக் கொஞ்சியபிறகுதான் நகரமுடியும்.  அப்படி ஒரு ஆட்டம் போடுவான்.  காக்கை என்கிற சொல் எளிதாகப் பழகிய அளவுக்கு மற்ற சொற்கள் பதியவில்லை.  ஆனால் காக்கையைத் தொடர்ந்து குருவி, கிளி, கோழி என பல பறவையினங்களையும் அவன் பார்த்தான்.  ஆனால் எல்லாவற்றக்கும் ஒரே பெயரைவைத்து அவன் சமாளித்த விதம் ஆச்சரியமாக இருந்தது.  கு காகா என்றால் குருவி. சி காகா என்றால் கிளி. பெ காகா என்றால் கோழி.  அவன் கண்ணில் படும் ஒவ்வொன்றையும் முதன்முதலாக அறிமுகப்படுத்துவதுபோல எல்லாரையும் அழைத்துக் காட்டினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும்.

ஓர் இளம் தந்தையாக என் மனம் உணர்ந்த பரவசத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது அவர்களும் அதை உணர்ந்து கடந்தவர்களாக இருந்தார்கள்.  ஒவ்வொருவரிடமும் குழந்தை சார்ந்து பகிர்ந்துகொள்ள பல நூறு அனுபவங்கள் இருந்தன.  காலையிலும் மாலையிலும் தம் மகளை முதுகில் அமரவைத்து யானை சவாரி செய்தால்தான் மற்ற வேலைகளை அமைதியாகப் பார்க்க அனுமதிப்பாள் என்றார் ஒருவர்.  தன் குழந்தைக்கு சிற்றுண்டியும் சோறும் ஊட்டுகிற சாகசத்தையும் அவள் ஒருவாய் உணவை வாங்கிக்கொள்ள அவளுக்குமுன்னால் போடும் பலவகையான வேஷங்களையும் சொன்னார் ஒரு தோழி. மாலைநடையின்போது தன் மகளைத் தோள்மீது அமரவைத்து அழைத்துச் செல்லும்போது அவள் அடையக்கூடிய ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொன்னார் வேறொருவர். 

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்று எழுதிய திருவள்ளுவர் நாக்கில் சர்க்கரையைத்தான் தடவவேண்டும். குழந்தைகள் நமக்கு மறுபடியும் புதிய பிறப்பை அளiக்கிறார்கள்.  குழந்தைகள் நம்மைப் பெரியவர்களாகக் கருதுவதில்லை.  நீ, நீங்கள் என்கிற மரியாதையை எல்லாம் நாம்தான் அதன் மனத்தில் பதியவைக்கிறோம்.  அதன் உலகில் எல்லாருமே குழந்தைகள். அது நம்மையும் குழந்தையாகவே பார்க்கிறது.  அதனால்தான் தான் பார்ப்பதையெல்லாம் நம்மையும் அழைத்து சுட்டிக் காட்டுகிறது.  தான்  கைத்தட்டி சிரிக்கும்போது நம்மையும் கைதட்டிச் சிரிக்கவைக்கிறது.  அந்த ஆனந்தம் அபூர்வமானது.  அதில் திளைப்பது மிகப்பெரிய பேறு.  காசோ, பணமோ வசதியோ எதைக்கொண்டும் அந்த ஆனந்தத்துக்கு ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் புன்னகையை நினைக்கும்போது தானாகவே நம் உதடுகளில் புன்னகை அரும்பத் தொடங்கிவிடுகிறது.

ஒரு மலரையும் நெருப்புச்சுடரையும் ஒன்றுபோலவே பார்க்கிறது குழந்தை. அதுதான் குழந்தைமை. அதன் கண்களiல் பேதம் என்பது துளியுமில்லை.  பேதமில்லாமல்  பிச்சைக்காரர்களைப் பார்த்துக்கூட சிரிப்பதற்குக் குழந்தைகளால் முடிகிறது.  குழந்தை வளர்ச்சி என்பது குழந்தைமையின் வளர்ச்சியுமாக அல்லவா இருக்கவேண்டும்.  மாறாக, எதார்த்தத்தில் குழந்தைகள் வளரவளர குழந்தைமை உதிர்ந்து மக்கி மண்ணாகிவிடுகிறது.  முழு வளர்ச்சியடைந்த வயதான மனிதர்கள் கல்விமான்களாக இருக்கிறார்கள்.  தொழில்நுட்பத் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.  முதலாளிகளாக மாறுகிறார்கள்.  நடிகநடிகையர்களாக மாறுகிறார்கள்.  வியாபாரிகளாக வளர்ச்சியடைகிறார்கள்.  உருமாறும் ஒவ்வொரு கட்டத்திலும் பலியாவது குழந்தைமை. நூற்றுக்கு நூறு விழுக்காடும் குழந்தைமையைப் பறிக்கொடுத்துத்தான் இன்றைய நவீன மனிதன் உருவாகிறான்.  மிகப்பெரிய துரதிருஷ்டம் இது.

தன் குழந்தையின் அன்பு மழையில் நனைந்திருக்கும் தருணத்தில் எங்கோ மறைந்து மாயமாகிப் போயிருந்த குழந்தைமையை மறுகண்டுபிடிப்பு செய்து  மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கவிதை சத்யனின்  மறுபடியும் நான் . மறுகண்டுபிடிப்பை அக்குழந்தை எப்படி நிகழ்த்துகிறது என்பதுதான் கவிதையின் சுவாரசியம்.  குழந்தை வீட்டுக்கிணற்றைக் காட்டுகிறது.  கிணற்றில் உட்சுவரில் கூடுகட்டிய குருவியைக் காட்டுகிறது. அணிலைக் காட்டுகிறது.  ஊர்ந்து செல்லும் மரவட்டையைப் பார்க்கச் சொல்கிறது.  மல்லிகைப் பூவையும் வானவில்லையும் கவனிக்கவைக்கிறது.  பட்டாம்பூச்சிகளைய,ம் பூனைகளையும் சுட்டிக் காட்டுகிறது.  இப்படி, கண்ணில் தென்படுகிற எல்லாவற்றையும் பார்க்கத் தூண்டுகிறது.  காந்த அலைகளை ஏற்றதும் ஒட்டிக்கொள்கிற இரும்புத் துண்டுபோல குழந்தையின் அழைப்பையேற்று ஒவ்வொன்றையும் குழந்தையின் கண்களோடு பார்க்கத் தொடங்கிய கணத்தில் தந்தைக்குள் உறைந்திருக்கும் குழந்தைமை மறுகண்டுபிடிப்புக்கு ஆளாகிறது.  அப்படியென்றால் குழந்தை என்றால் என்ன? விந்தை நிரம்பிய விழிகளால் எவ்வித பேதமும் அற்று உலகில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு உயிரையும் பொருளையும் ஆர்வத்தோடு அறிவது குழந்தைமை.  ஆனந்தமாகத் துள்ளித் திரிவதும் குழந்தைமை. பாடிச் சிரிப்பது குழந்தைமை. ஓடி மகிழ்வது குழந்தைமை. அறிவின் ஆளுமையை ஓர் ஓரமாக இறக்கிவைத்துவிட்டு இயற்கையில் திளைப்பது குழந்தைமை.  சத்யன் முன்வைக்கும் மறுகண்டுபிடிப்பு அவருக்காக மட்டுமல்ல, நம்மை நாமே மீட்டெடுத்துக்கொள்ளும் முயற்சியில் உடனடியாக இறங்குவதற்கான ஓர் அழைப்பாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

*

மறுபடியும் நான்

சத்யன்

வீட்டுக் கிணற்றில் உட்சுவரில்
கூடுகட்டிய குருவியை
முன்னங்கால்களில் வாதுமைகளை
குவித்து கொறிக்கும் அணிலை
நிதானமாய் ஊர்ந்து செல்லும்
கருப்பு சவிப்பு மரவட்டையை
காலையில் மலர்ந்திருக்கும் மல்லிகையை
அதிசயமான வானவில்லை
பூக்களுடன் ரகசியம் பேசும்
பட்டாம்பூச்சிகளின் பொருத்தமாண நிறக்கலவைகளை
வாலைத் தொங்கவிட்டு
மரக்கிளையில் படுத்துறங்கும் பூனையை
இலைகளை மாயமாக்கும்
வெட்டுக்கிளி கூட்டத்தை
சுமையுடன் நகரும் லாரியிலிருந்து
கரும்பு ஒடிக்கும் விடலைகளை
விரல்சுட்டி எனக்குக் காண்பிக்கிறாய்
இன்றைக்கு போர் அடிக்கிறது
நாளை வரவேண்டுமென்று
காலண்டர் தாள் கிழிக்கிறாய்
படுப்பதற்கு முன் நிலா வேண்டும் நீ
கனவு என்னகண்டாய் என
கேட்கிறாய் காலையில்
வாழ்க்கையின் பல வாசல்களில்
புகுந்து வெளியேறி
நான் தொலைத்த
களங்கமில்லா குழந்தைத்தனத்தை
மீட்டுத் தருகிறாய் நீ

*

பிரம்மராஜனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மீட்சி என்னும் கவிதையிதழ் வழியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட கவிஞர் சத்யன்.  இவருடைய "கைப்பிரதியில் சில திருத்தங்கள்" என்னும் கவிதைத்தொகுதி மீட்சி வெளியீடாகவே வந்தது.