Home

Thursday 13 July 2017

சொல் என்னும் சொல் - அபியின் "சொல்லாதிருத்தலும் எளிது"


நாட்டுப்புறக்கதைகளைக் கேட்பதிலும் சொல்வதிலும் எப்போதும் எனக்கு விருப்பமுண்டு.  ஒரே கதை பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் சொல்லப்படுவதைக் கேட்டு ஆச்சரியமாக இருக்கும். அந்த மாற்றத்துக்கும் அக்கதை வழங்கப்படுகிற வட்டாரத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை உணரமுடிந்திருக்கிறது. கதைகளின் மையத்தைவிட கதைகளின் வகைமைகள் ஆச்சரியமூட்டுபவை. ஒரு வீடு கதைசொல்வதையும் ஒரு மரம் கதைசொல்வதையும் ஒரு கட்டில் கதைசொல்வதையும் கேட்டு ஆச்சரியப்படாமல் எப்படி இருக்கமுடியும். உலகில் உள்ள அஃறிணைப்பொருட்களும் உயர்திணை உயிர்களும் கதைசொல்லிகளாக மாறிமாறி நாட்டுப்புறக்கதைகளில் இடம்பெறுகின்றன. ஒரு கதையே கதைசொல்லியாக இருப்பதை சமீபத்தில் ஒரு கதையில் கேட்டு என் ஆச்சரியம் பலமடங்காகப் பெருகியது.


கதை உருவாவதற்கு மூலகாரணம் ஒரு சங்கதியை பகிர்ந்துகொள்ளும் நோக்கமாகும். கதையைக் கேட்பவர் அக்கதையை இன்னொருவருக்குச் சொல்லி, அதை அவர் மற்றொருவருக்குச் சொல்லி, அப்படியே கதை ஆள்மாறி ஆள்மாறிப் படர்ந்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் செய்தி பரவமுடியும். உரையாடல்மட்டுமே ஊடகமாக இருந்த காலத்தில் பகிர்ந்துகொள்வது என்பது மிகமுக்கியமான விஷயம். தற்செயலாக ஒருவர் தான் கேட்ட கதையை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டுவிடுகிறார். அவர் நெஞ்சைவிட்டு வெளியேf செல்லமுடியாமல் கதை தத்தளிக்கிறது. இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்று அம்மனிதனை நினைத்து வியப்பும் தாவித்தாவிப் பறக்கமுடியாததை நினைத்து வேதனையும் கொள்கிறது கதை. பேசக்கூடவேண்டாம், அவன் வாயைத் திறந்தால்போதும், விழுந்து தப்பித்துவிடலாம் என்று திட்டமிடுகிறது. அதன் தந்திரத்தை அறிந்துகொண்டவன்போல அவன் வாயையே திறப்பதில்லை.  அவன் வாயைத் திறக்கவைப்பதற்கு அதுவும் தன்னால் முடிந்தவகைகளில் எல்லாம் முட்டிமோதுகிறது. எதுவும் பலிக்கவில்லை. நாள்கணக்கு  வாரக்கணக்காகி, வாரக்கணக்கு மாதக்கணக்காகி சிறைவைக்கப்பட்டதுபோல வேதனையில் நொந்துகிடக்கிறது கதை. தற்செயலாக தலைச்சுமையோடு நடந்துவந்த அவன் எதிர்பாராதவிதமாக ஒரு கல்லில் தடுக்கி விழுந்துவிடுகிறான். அப்போது, தன்னிச்சையாக அவன் வாய்திறந்து அம்மா என்று அலறிவிடுகிறான். அதுதான் தக்க சமயமென்று அவன் தொண்டையிலிருந்து கதை தாவி விழுந்து தப்பித்து ஓட்டமாக ஓடிவிடுகிறது. தப்பித்து வந்த கதை இன்னொரு கதையிடம் தன் சாகசப் புரணாத்தைச் சொல்வதுபோல இக்கதை சொல்லப்படுவதைக் கேட்டேன்.

கதையின் கதைசொல்லி உருவம்தான் இக்கதையின் வசீகரம். அபியின் சொல்லாதிருத்தலும் எளிது கவிதையிலும் அத்தகைய வசீகரம் முதல் வாசிப்பில் உருவாகிறது. கவிதையில் உருவமெடுப்பது ஒரு சொல் அல்லது சொல்வதற்கென்று உள்ள ஒரு செய்தி. அது சில சமயங்களில் மணம்கமழ்கிறது.  சில சமயங்களில் மனிதர்களின் குறுக்கே நின்று வழிமறிக்கிறது. ஒரு பைத்தியத்தைப்போல. அல்லது ஒரு விலங்கைப்போல.   ஒருசில தருணங்களில் தனிமையில் உறைந்திருக்கிறது. வேறு சில தருணங்களில் ஒரு கந்தல்துணியைப்போல அழுக்குத்துணிமூட்டையின் நடுவே விழுந்துகிடக்கிறது.  சொல்ல நினைத்ததை ஒழுங்காக முழுமையாகச் சொல்லத் தெரிவதில்லை. சொல்ல நினைத்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் எப்போதும் இடைவெளி இருக்கிறது. வேகமாகவும் சொல்லத் தெரிவதில்லை.  பிறகு, தனிமையில் தன் குறையை நினைத்து நொந்து புலம்புவதும் உண்டு. மனிதர்களைப்போல ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்கும். யாராவது உற்றுப் பார்த்தால் தப்பித்து ஓடிவிடும்.  அரைகுறையான விவரிப்பால் கேட்பவர்களைச் சிக்கலில் ஆழ்த்திவிட்டு தப்பித்துவிடும். ஒரு சொல் எப்படியெல்லாம் சொல்லப்படக்கூடாதோ அதற்கெல்லாம் அந்தச் சொல்லே சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு சொல்லைச் சொல்லாமலிருத்தலே நல்லது என்று நினைக்கிற அளவுக்கு அந்தச் சொல் மனிதனை ஆட்டிப்படைத்துவிடும்.

'சொல்லுதல் யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்' என்னும் குறள்வரியை இக்கணத்தில் நினைத்துக்கொள்ளலாம். செயல்வடிவத்தில் சாத்தியமானதைமட்டுமே யோசித்து ஒருவன் பேசவேண்டும் என்று நம்பிய காலம் அது. செயல்வீரர்கள் இல்லாமல்போய்விட்ட நவீன காலத்துக்குப் பொருந்துகிறவகையில் குறள்வரியை சற்றே மாற்றிப்போடுகிறார் அபி. அரிய செயல்களைச் செய்யும்வகையில் யாரையும் இன்று தூண்டமுடியாது. முடிந்தவரை எளியதைமட்டுமே முன்வைக்கலாம். அதை மனத்தில் வைத்துக்கொண்டு சொல்லுதல் யார்க்கும் எளிது, சொல்லாதிருத்தலும் எளிது என்று சுருக்கமாகச் சொல்கிறார். சொல் என்ற ஒன்றைச் சொல்லத்தொடங்கினால்தானே, அதன் பல்வேறு விகாரங்களையும் விளைவுகளையும் காணும் சூழல் உருவாகிறது. சொல்லாதிருக்கும் பண்பை வளர்த்துக்கொண்டால் விகாரத்துக்கும் இடமில்லை. விளைவுக்கும் இடமில்லை. அபியின் இறுதிவரியையொட்டி, கசப்பும் வேதனையும் நிறைந்த ஒரு சிரிப்பு ஓசையில்லாமல் ஒலிக்கிறது.  அதுவே அவர் கவித்துவம். 

*

சொல்லாதிருத்தலும் எளிது

அபி

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லும்போது கமழும்
சிலநாள் கழித்து
தெருவில் போவோரைப்
பரட்டையாய் வழிமறிக்கும்

சொல்லும்போது தனித்திருக்கும்
சிலநாள் கழித்து
அழுக்குக்கந்தல் மூட்டைகளுடன்
உட்கார்ந்திருக்கும்

சொல்லாதிருந்ததற்கும்
சொன்னதற்கும்
இடைவெளியில்
புல்வளர்ந்து
பூமியை மூடும்

தொடர்ச்சியாய் பேச வராது

ஆயினும்
பின்னிரவில்
ஏதோ உந்துதலில்
ஊர்நெடுகப் புலம்பி உறங்கும்

எப்பொழுதும்
எதன் ஓரத்திலும் நின்று
ஒட்டுக்கேட்கும்

கூர்ந்து விழும்
பார்வைகளை நழுவி
திடுக்கிட
இல்லாததாகும்

பேசப்படுவதில் சிக்காமல்
பின்னல்களைப்
போட்டுவிட்டுப் போகும்

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லுதல் யார்க்கும் எளிது
சொல்லாதிருத்தலும் எளிது

*


தனித்தன்மை மிகுந்த சொல்லாட்சிகளாலும் மௌனம் மிகுந்த இடைவெளிகளை கவிதைகளில் சாத்தியப்படுத்திய சிறப்பாலும் கவிதை வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அபி. அறுபதுகளின் இறுதிப்பகுதியில் கவிதைகள் எழுதத்தொடங்கியவர். 1974 ஆம் ஆண்டில் அன்னம் வெளியீடாக வெளிவந்த "மௌனத்தின் நாவுகள்" இவருடைய முதல் தொகுதி. இதற்குப் பின்னர் "அந்தர நடை", "என்ற ஒன்று" ஆகிய தொகுதிகள் வெளிவந்தன.  2003 ஆம் ஆண்டில் இவருடைய எல்லாக் கவிதைகளையும் அடங்கிய முழுத்தொகுதி "அபி கவிதைகள்" என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.