நாட்டுப்புறக்கதைகளைக்
கேட்பதிலும் சொல்வதிலும் எப்போதும் எனக்கு விருப்பமுண்டு. ஒரே கதை பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில்
சொல்லப்படுவதைக் கேட்டு ஆச்சரியமாக இருக்கும். அந்த மாற்றத்துக்கும் அக்கதை வழங்கப்படுகிற
வட்டாரத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை உணரமுடிந்திருக்கிறது. கதைகளின் மையத்தைவிட
கதைகளின் வகைமைகள் ஆச்சரியமூட்டுபவை. ஒரு வீடு கதைசொல்வதையும் ஒரு மரம் கதைசொல்வதையும்
ஒரு கட்டில் கதைசொல்வதையும் கேட்டு ஆச்சரியப்படாமல் எப்படி இருக்கமுடியும். உலகில்
உள்ள அஃறிணைப்பொருட்களும் உயர்திணை உயிர்களும் கதைசொல்லிகளாக மாறிமாறி நாட்டுப்புறக்கதைகளில்
இடம்பெறுகின்றன. ஒரு கதையே கதைசொல்லியாக இருப்பதை சமீபத்தில் ஒரு கதையில் கேட்டு என்
ஆச்சரியம் பலமடங்காகப் பெருகியது.