ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக பூனாவுக்குச் சென்றிருந்தேன். அசோக்குமார், காமராஜ், நான் மூவரும் அந்த நகரைச் சுற்றிப் பார்த்தோம். முதலில் சென்ற இடம் ஆகாகான் மாளிகை. ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தொடர்ந்து காந்தியடிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அந்த வளாகத்துக்குள் நடந்தோம். காந்தியடிகள் இருந்த அறைக்குள் அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கிருந்த ராட்டையின் முன்னால் காந்தியடிகள் அமர்ந்து நூல் நூற்பதைப்போல ஒருகணம் நினைத்துக்கொண்டேன். அவர் சுவாசித்த காற்றின் மிச்சத்தை நான் சுவாசிப்பதாக அக்கணம் தோன்றியது. என் உடல் சிலிர்த்தடங்கியது.
