சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் மக்கள்தொகையில் முப்பது விழுக்காட்டுக்கும்மேல் பாதையோரங்களில் வசிப்பவர்கள். யாருக்கும் முறையான தங்குமிடம் இல்லை. பலருக்கு உடல்மறைக்கும் துணிகள் இல்லை. பசிவேளைக்கு போதுமான உணவில்லை. கிடைக்கும்போது சாப்பிட்டு, கிடைக்கிற கிழிசலை அணிந்து, கிடைக்கிற இடத்தில் தூங்கி நாட்களை ஓட்டுகிறார்கள். கிடைக்கிற வேலைகளைச் செய்கிறார்கள். கிடைக்கிற பணத்தை விருப்பம்போல செலவு செய்கிறார்கள். யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத ஒரு வாழ்க்கைமுறை. யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதற்கும் வழியில்லாத வாழ்க்கைமுறை என்றும் சொல்லவேண்டும்.